முதற் குலோத்துங்க சோழன்/அரசியல்

பதின்மூன்றாம் அதிகாரம்

குலோத்துங்கனது அரசியல்


ம் குலோத்துங்கனது அரசியல் முறைகளை இனி விளக்குவாம். பொதுவாக நோக்குமிடத்துப் பழைய தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படும் அரசாங்க முறைகள் எல்லாம் நம் மன்னர் பெருமானாகிய குலோத்துங்கனுக்கும் உரியவையென்றே கூறலாம். அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஒன்றையும் விடாது எழுதப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியும் என்பது திண்ணம். ஆதலால், அவ்வரசியல் முறைகளை மிகச் சுருக்கமாக எழுதி விளங்க வைத்தலே எமது நோக்கமாகும்.

1. இராச்சியத்தின் உட்பிரிவுகள் :-- நமது வேந்தர் பெருமானது ஆணையின் கீழ் அடங்கியிருந்த சோழ இராச்சியம் அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள், சோழமண்டலம், சயங் கொண்ட சோழமண்டலம், இராசராசப் பாண்டிமண் டலம், மும்முடி சோழமண்டலம், வேங்கைமண்டலம், மலைமண்டலம், அதிராசராசமண்டலம் என்பன சிறந்தவை. இவற்றுள், சோழமண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென்னார்க்காடு ஜில்லாவின் தென்பகுதியையும் தன்னகத்துக்கொண்டுள்ள நிலப்பரப்பாகும் ; சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும்பகுதியையும் செங்கற்பட்டு, வடவார்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக்கொண்டது ; இராசராசப் பாண்டி மண் டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக்கொண்டது : மும்முடி சோழமண்டலம் என்பது ஈழமாகிய இலங்கையாகும் ; வேங்கைமண்டலம் என்பது கீழைச்சளுக்கிய நாடாகும்; மலைமண்டலம் என்பது சேர நாடாகும் ; இது திருவாங் கூர் இராச்சியத்தையும் மலையாளம் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது ; அதிராசராசமண்டலம் என்பது கொங்கு நாடாகும் ; இது கோயம்புத்தூர் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது.

இனி, ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் இராசராச சோழன் காலத் தில் சோழ்மண்டலம், இராசேந்திர சிங்கவளநாடு, இராசாசிரயவளநாடு, நித்தவிநோதவளநாடு, கூத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, அருமொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்னும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[1] பெரும்பான்மையாக நோக்குமிடத்து, ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். உதாரணமாக, உய்யக்கொண்டார் வளநாட்டை எடுத்துக்கொள்வோம். அஃது அரிசிலாந் றுக்கும் காவிரியாற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு ஆகும் என்பது தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்திற காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.[2] இங்குக் குறிக்கப்பெற்றுள்ள வளநாடுகளின் பெயர்கள் எல்லாம் முதல் இராசராசசோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். நம் குலோத்துங்க சோழன் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வளநாடுகளுக்குரிய பெயர்களை நீக்கிவிட்டுத் தன் பெயர்களை அவற்றிற்கு இட்டனன். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்கசோழ வளநாடு என்னும் பெயருடையதாயிற்று. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது ; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும் கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப்பட்டன. உலகுய்யவந்தான், விருதராசபயங்கரன் என் பன நம் குலோத்துங்கசோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது சலிங்கத்துப்பரணியால் அறியப்படுஞ் செய்திபாகும்[3]. பிற மண்டலங்களும் இங்ஙனமே பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டைமண்டலமாகிய சயங்கொண்ட சோழமண்டலம் மாத்திரம் முன்போலவே இருபத்துநான்கு கோட்டங்களாகப்பிரிக்கப்பட்டிருந்தது.

இனி, ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. வளநாட்டின் உட்பகுதிகளாகிய நாடுகளுள் சில, கூற்றங்கள் எனவும் வழங்கிவந்தன. ஒவ் வொரு நாடும் சில தனியூர்களாகவும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று.

2. அரசனும் இளவரசனும் :- இங்ஙனம் வகுக்கப்பட்டிருந்த சோழ இராச்சியத்திற்குச் சோழ அரசனே தலைவன் ஆவன். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடையவனாய் நீதி தவறாது ஆட்சிபுரியும் கடமை இவ்வேந்தனுக்கேயுரியதாகும். சோழமன்னர் கள் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டம் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் நன்கு பழக்கிவருவது வழக்கம். இதற்கேற்ப, நம் குலோத்துங்கன் தனது மூத்தமகனாகிய விக்கிரம சோழனுக்குத் தன் ஆட்சிக்காலத்தில் இளவரசுப்பட்டம் கட்டி அரசியல் நுட்பங்களையுணர்ந்து வன்மையெய்துமாறு செய்தான். இவ்விக்கிரம சோழனே குலோத்துங்கனுக்குப் பின்னர் முடிசூடியவன் என்பது முன்னரேயுணர்த்தப்பட்டது.

3. உடன் கூட்டம் ;- அரசன், தான் விரும்பிய வாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவனெனினும் பல அதிகாரிகளுடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம்.[4] இவ்வதிகாரிகளை 'உடன்கூட்டத்ததிகாரிகள்' என்று கல்வெட்டுக்களும் செப்பேடு களும் கூறுகின்றன. இவர்கள் அரசனால் அளிக்கப் பெற்ற பலவகைச் சிறப்புக்களையும் எய்திப் பெருமையுற்றவர்கள்.

4. அரசியல் அதிகாரிகளும் அவர்கள் கடமைகளும் :--நம் குலோத்துங்கனது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர்களாக அமர்ந்து அவனது ஆட்சி நன்கு நடைபெறச் செய்தோர், அமைச்சர் படைத் தலைவர், நாட்டதிகாரிகள், நாட்டையளப்போர், நாடு காவலதிகாரி புரவுவரித்திணைக்களம் வரிப்புத்தகம், பட்டோலைப் பெருமான், விடையிலதிகாரி, திருவாய்க் கேள்வி, திருமந்திர ஓலை, திருமந்திர ஓலைநாயகம் என்ற அரசியல் அதிகாரிகள் ஆவர்.[5]

இவர்களுள், படைத்தலைவர் அரசனது காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை இவற்றிற்குத் தலைமைவகித்துப் போர் நிகழுங்கால் அதனை வெற்றியுற நடத்துவோர். நாட்டதிகாரிகள் ஒவ்வொரு உள்நாட்டிற்கும் தலைவர்களாய் விளங்குவோர் ; இவர்கள் தம்தம் நாட்டைச் சுற்றிப்பார்த்துக் குடிகளின் நலங்கள், அற நிலையங்கள், நியாயம் வழங்குமுறை முதலானவற்றைக் கண்காணித்து வருவது வழக்கம். நாட்டையளட்போர் ஒவ்வொரு நாட்டையும் கூறுபட அளவிடுவோர். நாடு காவலதிகாரி என்போன் நாட்டிலுள்ள ஊர்களில் களவு, கலகம் முதலான தீச்செயல்கள் நிகழாமல் காத்து வந்த ஒரு தலைவன் ஆவன். புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்தமுடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக்கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வரிப்புத்தகம் என்போர் அரசனுக்கு ஒவ்வோர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப்பட்டனவுமாகிய அரசிறைக்குக் கணக்குவைப்போர். பட்டோலைப் பெருமான் நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக்குறிப்பில் எழுதிவைப்போன். விடையிலதிகாரி என்போர், கிராமசபைகளினின்றும் பிற அதிகாரிகளிடத் திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப்பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடையெழுதியனுப்புவோர் ; அன்றியும் அரசனது ஆணைத்திருமுகத்தை ஊர்ச்சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணிமக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களேயாவர். திருவாய்க் கேள்வி என்போர் அரசன் திருவாய் மலர்ந்தருளிய வற்றைக் கேட்டுவந்து திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர். திருமந்திர ஓலை என்போர் அரசனது ஆணையை எழுதுவோர். இவர்களுக்குத் தலைவராயிருப்போர் திருமந் திரவோலை நாயகம் எனப்படுவார்.

இனி, இவர்களேயன்றி அரச காரியங்களை முட்டின்றி நடத்தும் கரும மாராயம் என்போரும் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்தும் அறங்கூறவையத்தாரும் அந்நாளில் இருந்தனர்.

ஆங்கிலேயராட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்களது ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, 'ராவ்பகதூர் ' 'திவான்பகதூர்' 'சர்' 'C. I. E. ' முதலான பட்டங்கள் அளித்து அரசாங்கத்தார் அவர்களை மகிழ்வித்ததுபோல, பதினொன்றாம் நூற்றாண்டில் நம் தமிழ்கத்தில் முடிமன்னனாக வீற்றிருந்து செங்கோல் ஓச்சிய நம் குலோத்துங்கனும் தன் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளான் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அரசனால் அளிக்கப்பெற்ற பட்டங்கள், மூவேந்தவேளான், கேரளராசன், காலிங்க ராயன், தொண்டைமான், வாணகோவரையன், பல்லவ ராயன், இளங்கோவேள், காடவராயன், கச்சிாரயன், சேதிராயன், விழுப்பரையன் முதலியனவாகும். இப்பட்டங்களை அரசன் பெரும்பாலும் தன் பெயர்களோடு இணைத்தே வழங்குவது வழக்கம்.

இதன் உண்மையைக் குலோத்துங்கசோழ கேரள ராசன், இராசேந்திர சோழ மூவேந்தவேளான், விருத ராசபயங்கர வாணகோவரையன், வீரசோழப் பல்லவ ராயன், சனநாதக் கச்சிராயன் என்று வழங்கப்பெற்றுள்ள பட்டங்களால் நன்குணரலாம். அன்றியும் பெருந்தரம், சிறுதரம் என்ற இரண்டு பட்டங்கள் இருத் தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். இவை அதிகாரி களது உயர்வு தாழ்வுகளாகிய வேறுபாடுகள் குறித்து இக்காலத்தில் வழங்கப்பெறும் Gazetted and Non Gazetted officer's போன்ற இருபிரிவுகளாகும்.

5. அரசிறை :-அக்காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்திவந்த நிலவரி காணிக்கடன் என்று வழங்கப்பெற்றுள்ளது. இக் காணிக்கடன் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும்காசுமாக வாதல் செலுத்தப்பெறுவது வழக்கம்.[6] இக்காணிக் கடனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டு தோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கக் கருவூலத்திற்கு அனுப்புவர். மூன்றாம் ஆண்டு தொடங்கியும் கடந்த ஈராண்டிற்கும் நிலவரி கொடாத வர் நிலங்கள் ஊர்ச்சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம். அங்ஙனம் விற்றமையால் கிடைத்தபொருள் அரசாங்கத்தில் சேர்ப்பிக்கப் பெறும்.

இனி, நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம் இடைப்பாட்டம், (இடைப்பூட்சி) ஓடக்கூலி, செக்கிறை,[7] வண்ணாரப்பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு ஈழம்பூட்சி முதலான பலவகை வரிகளும் இருந்துள்ளன.[8]

எனவே, அந்நாளில் பற்பல தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருத்தல் அறியத்தக்கது. வரிகளின் பெயர்கள் மிகுந்துள்ளமைபற்றி அரசாங்கவரிகள் அக்காலத்தில் மிகுந்திருந்தன என்று கருதற்கு இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் குறிக்கப் பெற்றிருத்தலின் வரிப்பெயர்கள் மிகுந்து காணப்படு கின்றனவேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப்பெயரால் எல்லாத் தொழிலாளரிடத்தும் வரி வாங்கப்படுகின்றது. ஆகவே, இற்றைநாள் தொழில் வரி ஒன்றே எல்லாத் தொழில்களுக்குமுரிய பல்வகைத் தொழில் வரிகளையும் தன்னகத்து அடக்கிக்கொண்டு நிற்றல் காணலாம்.

கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளையுணர்த்தும் மொழிகளாம். கண்ணாலக்காணம் என்பது கல்யாணவரி என்றும் அது திருமண நாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக்கால் பணமேயாம் என்றும் ஈரோட்டி லுள்ள முதற் பராந்தக சோழன் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது.[9]நாடுகாவல் என்னும்வரி பாடி காவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனிவரியாகும். உல்கு என்பது சுங்க வரியாகும். ஈழம்பூட்சி என்பது கள் இறக்குதற்குச் செலுத்தவேண்டிய வரியாகும்.

6. நில அளவு :- ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர் களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரி பாகிய காணிக்கடன் குடிகளிடத்திலிருந்து அரசாங்கத் திற்கு எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்பட மாட்டா. ஆதலால், சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒரு முறையும், முதற் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது.[10] இவை முறையே கி. பி. 1001, கி. பி. 1086, கி. பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவையாகும்.

நிலம் அளந்தகோலை 'உலகளந்தகோல்' என்று வழங்குவர். இக்கோல் பதினாறுசாண் நீளமுடையது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர் நிலம் கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நிலங்கள் நூறுகுழிகொண்டது ஒருமா ஆகவும் இருபதுமா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன. வேலி ஒன்றுக்கு நூற்றுக்கல விளைவுள்ளதும் அதற்குக் கீழ்ப்பட்டதுமென நிலங்கள் இருதரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறுபகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப்பெற்றுள்ளது என்பது - 'இறையிலி நீங்கு நிலம் முக்காலை இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன்' என்பதனால் நன்கு விளங்கும். நிலத்தையளந்து எல்லையறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம் என்பதும் பல கல்வெட் டுக்களால் அறியப்படுகின்றது.

7. இறையிலி :--நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் வரி விதிக்கப்பெறாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்கள் யாவை என்பது முன்னரே விளக்கப்பட்டது. சைவ வைணவ திருக்கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பெற்றவை பள்ளிச் சந்தம் எனவும் பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரம தேயம், பட்டவிருத்தி எனவும் அறநிலையங்கட்கு விடப்பெற்றவை சாலாபோகம் எனவும் வழங்கப் பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும்.

8. நாணயங்கள்:- நம் குலோத்துங்கன் காலத்தில் பொன்னாலுஞ் செம்பாலுஞ் செய்யப்பெற்ற காசுகள் வழங்கிவந்தன. இக்காசுகளுள் சில இக்காலத்தும் சிற் சில விடங்களிற் கிடைக்கின்றன. அக்காலத்துச் சோழ மன்னர்களது நாணயங்கள் எல்லாம் ஒரே எடையுள்ளனவாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று பழைய நாணயங்களை ஆராய்ந்து அரிய நூல் ஒன்று எழுதியுள்ள டாக்டர் கன்னிங்காம் என்ற துரைமகனார் வரைந்துள்னர். காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன் றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப்பெற்ற துளைப் பொன்னும் அந்நாளில் வழங்கிற்று.[11]

9. அளவைகள் :- அக்காலத்தில் எண்ணல்,எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் வழக்கில் இருந்தன. இவற்றுள் எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள், கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறைகல்லாலும், செம்பு, பித்தளை, வெண்கலம், தரா முதலான தாழ்ந்த பொருள்கள் பலம் கஃசு என்னும் நிறைகல்லாலும் நிறுக்கப்பட்டுவந்தன. அரசாங்க முத்திரையிடப்பெற்ற நிறைகல் குடிஞைக்கல் எனப்படும். பொன்னின் மாற்றறிதற்குரிய ஆணியும் அப்போது இருந்தது என்பது ஈண்டு உணர்தற்குரியதாகும்.

இனி, செம்பு, பித்தளை முதலியவற்றால் செய்யப் பெற்றவை, இரண்டாயிரம் பலம், மூவாயிரம் பலம் என்று நிறுக்கப்பட்டுள்ள செய்தி, கல்வெட்டுக்களால் வெளியாகின்றது.[12]ஆகவே, அந்நாளில், சேர், வீசை, தூக்கு, மணங்கு ஆகியவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை நன்கு புலப்படுகின்றது.

நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர் முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன.[13]சர்க்கரை, மிளகு, கடுகு, புளி முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. அரசாங்கமுத்திரை இடப் பெற்ற மரக்காலும் இருந்தது. தோரை, விரல், சாண், முழம் என்பவற்றால் நீட்டல் அளவை நடைபெற்றது.

எடுத்தல் அளவை :–

2 குன்றி = 1 மஞ்சாடி

20 மஞ்சாடி = 1 கழஞ்சு

முகத்தல் அளவை :-

5 செவிடு = 1 ஆழாக்கு

2 ஆழாக்கு = 1 உழக்கு

2 உழக்கு = 1 உரி

2 உரி = 1 நாழி

8 நாழி = 1 குறுணி

2 குறுணி = 1 பதக்கு

4 குறுணி = 1 தூணி.

12 குறுணி = 1 கலம்.

10. கிராமசபை :- நம் குலோத்துங்கன் காலத்தில் ஊர்கள் தோறும் சபைகள் இருந்தன. இச்சபை பின்ரே அங்கு நடைபெறவேண்டிய எல்லாவற்றையும் நிறைவேற்றிவந்தனர். சுருங்கச்சொல்லுமிடத்து அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால்தான் நடத்தப்பெற்று வந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் கிராமத்திலுள்ள பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர் ஆவர். அக்காலத்தில் தனியூர்களும் பல சிற்றூர்களடங்கிய சதுர்வேதி மங்கலங்களும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியையும் குடும்பு (Ward) என்று வழங்கினர். ஒவ்வொரு குடும்பிற்கும் பிரதிநிதியாக ஒவ்வோர் உறுப்பினரே தேர்ந்தெடுக்கப்பெற்றனர். செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூர் முப்பது குடும்புகளையுடையதாகவும் தஞ்சாவூர் ஜில்லாவில் செந்தலை என்று தற்காலத்து வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம் சற்றேறக்குறைய அறுபது குடும்புகளையுடையதாகவும் இருந்தன. எனவே, உத்தரமேரூரிலிருந்தசபை முப்பது உறுப்பினரையுடையதாயிருந்தது என்பதும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலத்திருந்தசபை அறுபது உறுப்பினர்களையுடையதாயிருந்தது என்பதும் நன்கு விளங்குகின்றன. ஆகவே சபையின் உறுப்பினரது எண் அவ்வவ்வூரின் பெருமை சிறுமைக்கு ஏற்றவாறு குறிக்கப்பெறும் எனத் தெரிகிறது.

இனி, சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறும் உரிமையுடையோர் காணிக்கடன் செலுத்தற்கேற்ற கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராகவும் சிறந்த நூல்களைக்கற்ற அறிஞராகவும் காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவராகவும் அறநெறியில் ஈட்டிய பொருளைக்கொண்டு தூயவாழ்க்கை நடத்துவோராகவும் முப்பத்தைந்துக்குமேல் எழுபத் தைந்துக்குட்பட்ட வயதினராகவும் மூன்று ஆண்டுகட்கு உள்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத்திலும் உறுப்பினராக இருந்திராதவராகவும் இருத்தல்வேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

இனி, எந்தச் சபையிலாவது உறுப்பினராகவிருந்து கணக்குக்காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும்பாகங்கள் புரிந்தோரும், கிராம குற்றப்பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், பிறர்பொருளைக் கவர்ந்தோரும், கையெழுத்திடலாகிய கூடலேகை (Forgery) செய்தோரும், குற்றங்காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் (Brille) கொண்டோரும் கிராமத் துரோகி என்று கருதப்பட் டோரும் இங்குக் குறிக்கப்பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராமசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெறுதற்குத் தகுதியற்றவராவர்.[14]

பொதுமக்கள், கிராம சபையின் உறுப்பினரை ஆண்டுதோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். தேர்ந்தெடுத்தற்குக் குறிக்கப்பெற்ற நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுதற்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகையில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரையும் கூட்டுவர். அக்கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்பெறும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடததை எடுத்து அதனுள் ஒன்றும் இல்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழேவைப்பர். உடனே, அவ்வூரில் ஒவ்வொரு குடும்பிலுள்ளாரும் தமக்குத் தகுதியுடையார் என்று தோன்றுவோர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்குசேர்த்து, அவை எக்குடும்பிற்குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப்பெற்ற வாயோலையொன்றைச் சேர்த்துக்கட்டி அக்குடத்தில் இடுவர். இங்ஙனமே எல்லாக்குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், அம்முதியார் அங்கு நடை பெறுவதையுணராத ஓர் இளைஞனைக்கொண்டு அக்குடத்தினின்றும் ஓர் ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறு ஒரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனைக்கொண்டு எடுக்கச் செய்து, அதனைத் தாம் பெற்று, அங்குள்ள கரணத்தான் (கணக்கன்) கையிற்கொடுப்பார். அவன் தன் ஐந்து விரல்களையும் விரித்து உள்ளங்கையில் அதனை வாங்கி, அவ்வோலையில் எழுதப்பெற்றுள்ள பெயரை அங்குள்ளோர் யாவரும் உணருமாறு படிப்பான். பின்னர் அங்குள்ள நம்பிமார் எல்லோரும் அதனை வாசிப்பர். அதன் பிறகு, அப்பெயர் ஓர் ஓலையின் கண் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலையிற் குறிக்கப்பெற்ற பெயருடையவரே அக்குடும்பிற்குரிய கிராமசபை உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர். [15]

இங்ஙனமே மற்றைக் குடும்புகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபின்னர், அவர்களுள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் முதிர்ந்தோர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றையோருள் சிலர் தோட்டவாரியராகவும், சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்சவாரவாரியராகவும் ஏற்படுத்தப்படுவர். எனவே, கிராமசபை, சம்வத் சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன்வாரியம், பஞ்சவாரவாரியம் என்ற ஐந்து உட்கழகங் களைத் தன்னகத்துக்கொண்டு விளங்கிற்று. சபையின் உறுப்பினர் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப் பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாது தம் வேலைகளை நடத்துவதற்கு உரிமைபூண்டவராவர். இவர்களை ஆளுங்கணத்தார் எனவும் பெருமக்கள் எனவும் கூறுவர். இவர்கள் கூடுதற்கு ஊர்தோறும் மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்களுள் நியாய விசாரணை செய்வதும் அறநிலையங்கள் நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்த்துக்கொள்வதும் சம்வத்சரவாரியரது கடமையாகும். ஏரி குளம் ஊருணி முதலிய நீர்நிலைகளைப் பாதுகாத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமை யாகும். நிலத்தைப்பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்டவாரியரது கடமையாகும். பல் வகையாலும் வாங்கப்பட்ட பொற்காசு செப்புக்காசுகளை ஆராய்வது பொன்வாரியரது கடமையாகும். விளைவில் ஆறிலொரு கடமை அரசனுக்காகவும் ஏனை ஐந்து கூறு நிலமுடையார்க்காகவும் பிரித்துக் கொடுப்போர் பஞ்சவாரவாரியராவர். இச்சபையார் பணித்தவற்றைச் செய்பவன் கரணத்தான் எனப்படுவான். இவனை மத்தியஸ்தன் எனவும் கூறுவதுண்டு. நல்வழியில் ஈட்டிய பொருளும் நல்லொழுக்கமும் உடையவனையே கரணத்தானாக அமைப்பர். இவன் கணக்கு எழுதல்வேண்டும். எழுதிய கணக்கைச் சபையார் விரும்பியபோது, தானே நேரில் காட்டவேண்டும். இவன் சபையாரது நன்கு மதிப்பைப் பெறாவிடின் அடுத்த ஆண்டில் இவனுக்கு அவ்வேலை கொடுக்கப்படமாட்டாது. ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும் ஓராண்டிற்கு ஏழுகஞ்சு பொன்னும் இரண்டு கூறையும் கணக்கனுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படுவது வழக்கம். கணக்கன் தான் எழுதிய கணக்கைச் சபையாரிடம் ஆராய்ந்து பார்த்தற்குக் கொடுக்கும் போது கையில் காய்ச்சிய மழுவை (Red Hot Tor:) ஏந்தி உறுதிமொழி கூறிக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுக்குங்கால் கையில் ஊறுபாடு நேராதாயின் கணக்கனுக்கு எழுகழஞ்சிற்குமேல் காற்பங்கு பொன் சேர்த்துக் கொடுக்கப்படும். ஊறுபாடு நேருமாயின் பத்துக்கழஞ்சு பொன் தண்டமும் வேறு தண்டமும் சபையாரால் விதிக்கப்படும். [16]

இனி, நியாய விசாரணை நடத்தும் சம்வத்சரவாரியர் கொலை செய்தவனுக்குக் கொலைத் தண்டம் விதித்தலும், பிறவற்றிற்குச் சிறையிடுதலும், தளையிடுதலும், பொன் தண்டம் விதித்தலும் வழக்கம். அறியாமையால் தற்செயலாக நேர்ந்த சாவிற்கெல்லாம் அவ்வவற்றிற்கு ஏற்றவாறு திருக்கோயில்களில் விளக்கிடுவதற்குக் குற்றவாளிகள் பொன் கொடுக்குமாறு சபையார் தீர்ப்புக் கூறுவர். வேட்டைக்குச் சென்றோன் ஒருவன் எய்த அம்பு குறி தவறி ஓர் உழவன் மேற்பட்டு அவன் இறந்ததற்கும், ஒருவன், தன் மனைவியைத்தள்ள, அவள் விழுந்து இறந்தமைக்கும், ஒருத்தி, தன் மகள் மீது எறிந்த கோல்பட்டு அண்மையில் நின்ற வேறொருபெண் மாண்டதற்கும் திருக்கோயில்களில் விளக்கிடுமாறு தீர்ப்புக் கூறினரேயன்றி அன்னோர்க்குக் கொலைத்தண்டம் விதித்திலர். ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்றா தொழிந்தவர்களுக்குப் பொன் தண்டம் விதித்தல் வழக்கம் என்பதும் அவர்கள் அதனைக் கொடாது ஓடிவிட்டால் அன்னோரது வீடு, காணி முதலியவற்றை அரசனது ஆணையின்படி விற்று ஊர்ச்சபையார் ஒழுங்கு செய்தல் வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன.

11. ஆவணக்களரி :- அந்நாளில் ஊர்கள் தோறும் எழுதப்படும் ஆவணங்களைக் (பத்திரங்கள்) காப்பிட ஆவணக்களரியும் (Registration Office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச்சென்று நிலத்தின் விலையையும் நான் கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதி மொழி கூறி ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடியதாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற்சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம்.

12. படை :- நம் குலோத்துங்கன்பால் யானைப்படையும் குதிரைப்படையும் காலாட்படையும் மிகுதியாக இருந்தன. இவன் காலத்தில் தேர்ப்படை ஒரு தனிப்படையாகக் கருதப்படவில்லை. வில், வேல், வாள், அம்பு, தடி முதலியன அக்காலத்தில் வழங்கிய படைக்கலங்கள் ஆகும். குலோத்துங்கனும் அவனது முன்னோர்களும் நிலத்திலும் கடலிலுஞ் சென்று போர்புரிவதில் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. எனவே, நம் குலோத்துங்கனிடத்துப் பல கப்பற்படைகளும் இருந்திருத்தல் வேண்டும். 'இரு முடி சோழன் தெரிந்த வில்லிகள்' என்பதனால் ஒவ்வொரு படைக்கும் வெவ்வேறு பெயரிடும் வழக்கம் உண்டு என்ற செய்தி புலனாகின்றது. படைஞர் போர் நிகழாத காலங்களில் உழுது பயிரிட்டுக்கொண்டு இருப்பது வழக்கம். வென்று கொண்ட நாடுகளில் நிலைப்படை அமைத்தலும் உண்டு. குலோத்துங்கன் சேர மண்டலத்தை வென்றபோது அங்குள்ள கோட்டாற்றில் ஒருநிலைப்படை ஒரு படைத்தலைவன்கீழ் நிறுவப்பெற்றது என்பது முன்னரே விளக்கப்பட்டது.

13. கோயில்கள் :- அந்நாளில் நம் தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தன. செங்கற்கோயில்களாகவிருந்த இவற்றைக் கற்றளிகளாக அமைப்பித்தவர்கள் சோழமன்னர்களும் அன்னோரது அதிகாரிகளுமேயாவர். பல புதிய கோயில்களும் இவர்களால் கட்டுவிக்கப்பெற்றன. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள நீடூர், திருவைகாவூர்[17] முதலான தலங்களிலுள்ள கோயில்கள் நம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கற்றளிகளாக்கப்பட்டன. சூரியனார் கோவில் என்ற ஊரிலுள்ள சூரியனது ஆலயமும், மன்னார் குடியிலுள்ள குலோத்துங்க சோழவிண்ணகரமும் மேலப்பழுவூரிலுள்ள குலோத்துங்கசோழேச்சுரமும் இவ்வேந்தன் காலத்தில் கட்டப்பெற்றனவேயாம். கோயில்கள் எல்லாம் அரசர்களாலும் பிற அன்பர்களாலும் அளிக்கப்பெற்ற பெரும் பொருளும் நிலமும் உடையனவாய் அக்காலத்தில் விளங்கின. திங்கள் தோறும் பூரணையில் கோயில்களுக்கு விழா நடைபெற்றது. உச்சியம் போதில் கோயில்களில் மாகேச்சுரர்க்கு நாள் தோறும் அன்னம் இடுவது வழக்கம். தேவாரப் பதிகங்கள் நாள்தோறும் திருமுன்னர் விண்ணப்பஞ் செய்தற்கு நிபந்தங்கள்விடப்பட்டிருந்தன.[18] கோயிற் காரியங்களை எல்லாம் அவ்வூரிலுள்ள ஒரு சபையார் நன்கு நடத்தி வந்தனர். அரசனும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டைச் சுற்றிப்பார்த்து வருங்கால் கோயில்கள் திட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றனவா என்று ஆராய்ந்து வருவது வழக்கம்.[19] கோயிற்குரிய செலவு போக எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்குச் செலவிட்டு வந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.[20] ஒரு பகுதி மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப்பட்டது என்பது செங்கற்பட்டு ஜில்லாவி லுள்ள திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால் அறியப்படுகின்றது.[21]



  1. 1. S. I. I. Vol. II. Introduction pages from 1 to 27 மு. கு. 6
  2. 2. அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக்கொண்டார் வள நாட்டுத் திரைமூர்நாட்டுப்பள்ளிச்சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம்'-5. I. I. Vol. I. Ins. No. 4 ; கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவிலுள்ள நிலப்பரப்பு, விருதராசபயங்க ரவளநாடு என்று வழங்கிற்று என்பது மாயூரந்தாலூகா இலுப்பைப்பட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.
  3. 3. 4. பரணி - தா , 134, 243, 582.
  4. 4. சோழவ மிச சரித்திரச் சருக்கம். பக். 43, 44.
  5. 5. The Historical Sketches of Ancient Dekhar pages 371, 372, 373 374.
  6. 6. S. I. I. Vol. II. Ins. No. 4 & 5.
  7. 7. S. I. I. Vol. III Ins. No. 9.
  8. 8. S. I. I. Vol. II. Nos. 98 & 99
  9. 9. The Historical Sketches of Ancient Page 348. Dekhan,
  10. 10. Do. pages 357 & 358.
  11. 11. (a) - I. I. Vol. III. No. 96. (b) 1)0. page 229 Foot -note:
  12. S. I. I. Vol. II. Ins. Nos. 36, 41, 85.
  13. S. I. I. Vol. II. Ins. Nos. 35, 51, 84.
  14. சோழவ மிச சரித்திரச் சுருக்கம் பக். 53, 55.
  15. 15. சோழவமிச் சரித்திரச் சருக்கம் பக், 54.
  16. 16. Annual Report on Epigraphy of the Southern Circle for the year ending 31st March 1916, pages 115 & 116. மு. கு. 7
  17. 17. திருவைகாவூரிலிருந்து எடுக்கப்பெற்றதும் அவ்வூரிலுள்ள திருக்கோயில் முதற்குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் கற்றளியாக அமைக்கப் பெற்ற செய்தியை யுணர்த்துவதும் ஆகிய ஒரு கல்வெட்டு இப்புத்தகத்தின் இறுதியில் சேர்க்கப்பெற்றுளது.
  18. 18. {a) S. I. I. Vol. III. Ins. 139, 51-A (6) DO. Vol. II. Ins. No. 65.
  19. 19. S. I. I. Vol. III. Ins. Nos. 49, 57 & 66.
  20. 20. Ins. 333, 335 & 343 of 1918 (Madras Epigraphical Report.)
  21. 21. The Historical sketches of Ancient Dekhan page 336,