முதற் குலோத்துங்க சோழன்/முடிவுரை

பதினான்காம் அதிகாரம்

முடிவுரை

துகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சோழமண்டலத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து நம் தமிழகத்தையும் இதற்கப்பாலுள்ள பிறநாடுகளையும் ஆட்சி புரிந்த முடிமன்னனாகிய முதற் குலோத்துங்கசோழனது வர லாற்றை ஒருவாறு நன்குணரலாம். அன்றியும் சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நம் தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இவ்வரலாற்று நூல் இயன்ற வரை இனிது விளக்காநிற்கும். நல்வினை முதிர்ச்சியால் அறிவு திருவாற்றல்களுடன் நிலவிய நம் வேந்தர்பெரு மான் கடைச்சங்கநாளில் சிறப்புடன் விளங்கிய சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலான முடிமன்னர் களோடு ஒருங்குவைத்து எண்ணத்தக்க பெருமையும் புகழும் உடையவன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய பெருவீரன் அரசுவீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடைநகரம் கங்கைகொண்டசோழபுரம் ஆகும். நம் குலோத்துங்கனது தாய்ப்பாட்டனாகிய கங்கைகொண்டசோழனால் அமைக்கப்பெற்ற இப்பெருநகரம் அவ்வேந்தன் காலத்திலேயே சோழமண்டலத்திற்குத் தலைநகராகும் பெருமை எய்திற்று. அவனுக்குப் பின்னர், சோழர்களது ஆட்சியின் இறுதிவரை இந்நகரமே எல்லாச் சோழமன்னர்களுக்கும் தலைநகராக இருந்தது. எனவே, இது தஞ்சையினும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும். இந்நகர், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் விக்கிரம சோழனுலாவிலும், கங்கைமாநகர் என்று வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரம் என்று தண்டியலங்காரமேற்கோள் பாடலிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த இந்நகரம் இதுபோது தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து திருப்பனந்தாளுக்கு வடக்கில் கொள்ளிடத் திற்குக் கட்டப்பெற்றுள்ள லோயர் அணையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் ஒரு சிற்றூராக உள்ளது. ஆயினும் இவ்வூரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் சோழச்சக்கரவர்த்திகளின் பெருமையையுணர் தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலைபெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவாலயமேயாகும். இந்நகரில் நம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வீற்றிருந்து ஆட்சி புரிந்தோர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்போர். இவர்கள் எல்லோரும் புகழாலும் வீரத்தாலும் நம் குலோத்துங்கனது பெருமையைப் பின்பற்றியவர்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். சோழமன்னர்களுள் இறுதியானவன் மேற்கூறிய மூன்றாம் இராசேந்திரனே ஆவன். அவனுக்குப் பின்னர், சோழநாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. சோழர்களும் பாண்டியர்க்குத் திறைசெலுத்தும் குறுநிலமன்னர்களாயினர். இவர்களது தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரமும் பகையரசர்களால் முற்றிலும் அழிக்கப்பெற்றுச் சிறுமை எய்திற்று. படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டுவந்த தமிழ் வேந்தர்களான சோழர்கள் தங்கள் ஆட்சியும் வீரமும் இழந்து தாழ்வுற்றனரெனினும் அவர்களது ஆதரவினால் வெளிவந்த தமிழ் நூல்களும், அவர்களால் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களும், வெட்டப்பெற்ற பேராறுகளும், கட்டப்பெற்ற அணைகளும் இன்றும் நிலைபேறுடையனவாய் அன்னோரது பெருமையனைத்தும் நம்மனோர்க்குணர்த்தும் கலங்கரை விளக்கமென நின்று நிலவுதல் ஒருவகையால் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது திண்ணம்.

முற்றும்
------