முதற் குலோத்துங்க சோழன்/அரசியல் தலைவர்கள்

பதினொன்றாம் அதிகாரம்

குலோத்துங்கனுடைய அரசியல் தலைவர்கள்


குலோத்துங்கனது ஆளுகையில் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் திருமந்திர ஓலைநாயகமாகவும் திருமந்திர ஓலையாகவும் திருவாய்க் கேள்வியாகவும் புரவுவரித்திணைக்களத்தினராகவும் அமர்ந்து அரசாங்கத்தை இனிது நடத்திய அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் ஆவர். அவர்களுட் சிலருடைய பெயர்கள் மாத்திரம் கல்வெட்டுக்களால் தெரிகின்றன. அன்னோருள் மூவரது வரலாற்றைச் சிறிது விளக்குதற் குரிய கருவிகள் கிடைத்துள்ளமையின் அவர்களைப் பற்றிய செய்திகளும் ஈண்டுச் சுருக்கமாக எழுதப்படுகின்றன.

1. கருணாகரத்தொண்டைமான் :- இவனது வரலாற்றைக் கலிங்கத்துப்பரணி ஒன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் ஒன்றிலதேல் தமிழகத்தில் அக் காலத்தே பெருவீரனாய்ப் பெரும்புகழ் படைத்து விளங்கிய இக்குறுநில மன்னனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்துகொள்ளாதவாறு மறைந்தொழிந்திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு சிற்றரசன். இவன், நுண்ணறிவிலும் கல்வி கேள்விகளிலும் சிறந்தவனாயிருந்தமையின் நம் குலோத்துங்கனது அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக முதலில் அமர்த்தப்பட்டான். பின்னர், தன் சீரிய ஆற்றலாற் படிப்படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் வேந்தனது அமைச்சர் தலைவனாகவும் படைத்தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினான். இவனே, வடகலிங்கப் போர்க்குத் தலைமைப் படைத்தலைவனாகச் சென்று, போர்நடத்தித் தன் அரசனாகிய குலோத்துங்க சோழற்கு வாகைமாலை சூட்டியவன். குலோத்துங்கன் எய்திய பெரும்புகழுக்குச் சிறந்த காரணமாயிருந்தோருள் இவன் முதன்மையானவன் என்று சிறிதும் ஐயமின்றிக் கூறலாம். கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரும் இவனை 'வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி-உலகுபுகழ் கருணாகரன்[1] எனவும், 'கலிங்கப் பரணி' நம் காவலனைச் சூட்டிய தோன்றல்[2] எனவும் புகழ்ந்துள்ளார். இவனது அரிய அரசியல் ஊழியத்தைப் பெரிதும் பாராட்டி அதற்குரிய அறிகுறியாக வேள்' ‘தொண்டைமான்' ஆகிய பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன் இத்தகைய சிறப்பினை எய்திக் குலோத்துங்கனது அரசியலைப் பெருமையுறச் செய்தது இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலேயாகும். இவன், குலோத்துங்கனது மகனாகிய விக்கிரம சோழனது ஆளுகையிலும் இருந்துள்ளான் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படுகின்றது.[3]. இவன் வாழ்ந்த ஊர் வண்டை என்பர் ஆசிரியர் சயங்கொண்டார். அவ்வூர், சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழவள நாட்டைச்சார்ந்த திருநறையூர் நாட்டிலுள்ள வண்டாழஞ்சேரியாகும் என்று ஒருகல்வெட்டு உணர்த்துகின்றது.[4] அஃது இப்போது வண்டுவாஞ்சேரி என்ற பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலூகாவிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெருவழியிலுள்ளது. வண்டாழஞ்சேரி என்பது வண்டுவாஞ்சேரி என்று பிற்காலத்தில் மருவி வழங்கிவருகின்றது.

இவன், சிவபெருமானிடத்தில் அளப்பரிய பேரன் புடையவனாய்த் திருவாரூரில் அரிய திருப்பணிகள் செய்துள்ளனன். இவன் இறுதியில் திருவாரூரில் தியாகேசரது திருவடிகளிற் கலந்தனன் என்றும் தியாகேசரது திருப்பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்று என்றும் திருவாரூர் உலாக் கூறுகின்றது. இதனால், இவன் அப்பெருமானிடத்துக் கொண்டிருந்த அன்பின் முதிர்ச்சி ஒருவாறு விளங்கும்.

2. அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன் :- இவன் சோழமண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரின் தலைவன் ; குலோத் துங்கசோழனது படைத்தலைவர்களுள் ஒருவன். அரசனால் கொடுக்கப்பெற்ற குலோத்துங்க சோழகேரளராசன் என்ற பட்டம் எய்தியவன் ; குலோத்துங்கன் சேரர் களோடு நடத்திய போர்க்குப் படைத்தலைமை வகித்துச் சென்று அதில் வெற்றிபெற்றவன் ; இவ்வேந்தனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப்பெற்ற நிலைப் படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கிய நாட்களில் அங்கு ' இராசேந்திர சோழேச்சுரம்' என்ற கோயில் எடுப்பித்துள்ளான்.[5] அதற்கு நிபந்தங் களுக்காகத் தேவதான இறையிலியும் குலோத்துங்க சோழனால் விடப்பட்டுள்ளது. இதனால், இவன் சிவ பெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் இருந்தனன் என்பது நன்கு விளங்குகின்றது.

3. மணவிற் கூத்தனை காலிங்கராயன் :- இவன் தொண்டைமண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன் ; குலோத்துங்கனது ஆட்சியின் பிற்பகுதியில் படைத்தலைவனாயமர்ந்து பெரும் புகழ் எய்தியவன் ; குலோத்துங்கன் வேனாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத்தலைமை வகித்து வெற்றியுற்று, அதனால் தன் அரசனுக்கு என்றும் நிலைபெறத்தக்க புகழையுண்டுபண்ணியவன்.[6] இவனது போர்வன்மையையும் பெருமையையும் நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக் ' காலிங்கராயன்' என்ற பட்டம் அளித்தான்.

இவன், தில்லையம்பலத்தில் கடம்புரியும் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டொழுகி, ஆண்டு இயற்றியதிருப்பணிகள் பல ; அவற்றுள் தில்லையம்பலம் பொன் வேய்ந்தமையும், அங்கு நூற்றுக்கால்மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுதற்குரிய மண்டபம், சிவகாமகோட்டம் முதலியவற்றைக் கட்டுவித்தமையும் சிறந்தனவாம். அன்றியும், இவன் தியாகவல்லி முதலான ஊர்களைப் பொன்னம்பலவாணருக்குத் தேவதான இறையிலியாகவிட்டிருக்கின்றனன். சமயகுரவருள் ஒரு வராகிய திருநாவுக்சரசு அடிகளை ஆட்கொண்டருளிய திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் இவன் செய்துள்ள அருந்தொண்டுகள் பலவாகும். அங்குக் காம கோட்டம் எடுப்பித்தும், பொன்வேய்ந்தும், ஆடரங்கும் வேள்விச்சாலையும் அமைப்பித்தும், தேவதான இறையிலிவிடுத்தும் செய்த அருந்தொண்டுகள் அளவிறந்தன என்பர். இவற்றால் இவனது சிவபத்தியின் மாட்சி இத் தகையதென்று நன்கு புலப்படுகின்றதன்றோ? இனி, இவன் சைவசமயத்திற்குப் புரிந்துள்ள அரும்பணிகளுட் சிறந்தது மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப் பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியிற் சேமித்து வைத்தமையேயாகும்.[7]' இவன் இவ்வாறு ஆற்றிய அரும் பெருந்தொண்டுகளை விளக்கக்கூடிய பல வெண்பாக்கள் தில்லையம்பதியிலும் திருவதிகையிலும் உள்ள கோயில்களில் வரையப்பட்டுள்ளன.[8]

இவன், விக்கிரம சோழன் ஆட்சியிலும் இத்தகைய உயர் நிலையிலே இருந்தனன் என்பது விக்கிரம சோழன் உலாவடிகளால் புலனாகின்றது.[9]



  1. 1. க. பரணி - தா. 430.
  2. 2. ஷை 522.
  3. 3. விக்கிரமசோழனுலா-நண்ணி - 69.
  4. ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று. ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத் திரு நறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான கருணாகரனாரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.' (S. I. I. Vol. IV. No. 862).
  5. 5.S. I. I. Vol. III. No. 73.
  6. 6. S. I. I. Vol. IV No. 225.
  7. 7. S. I. I. Vol VI. No. 225 [தொகுதி 23
  8. 8. Ins. No. 369 of 1921; M. E. R. 1922; செந்தமிழ்த்
  9. 9.விக்கிரமசோழனுலா- கண்ணிகள் 78, 79.