முதற் குலோத்துங்க சோழன்/மனைவியரும் மக்களும்
குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும்
குலோத்துங்கனது பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவளே இவ்வேந்தனது முதல் மனைவி. இவளுக்குத் தீனசிந்தாமணி என்ற பெயரும் உண்டு. இவ்வரசி இவனது அம்மானாகிய இரண்டாம் ராசேந்திர சோழனது மகள். இவனுக்கு வேறு இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற இருவருமேயாவர். பட்டத்தரசியாகிய மதுராந்தகி என்பாள் குலோத்துங்கனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டில் இறந்துவிட்டனள். பின்னர், இவனது மறொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளே இவ்வரசனது ஆட்சியின் பிற்பகுதி முழுமையும் பட்டத்தரசியாக விருந்து வாழும் பேற்றை எய்தியவள்.
'பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறியுடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச்- சென்னி யாணையுடனாணையை நடத்துமுரிமை தியாகவல்லி நிறைசெல்வியுடன் சேர்ந்துவரவே '[1]என்னுங் கலிங்கத்துப்பரணிப் பாடலால் பட்டத்தரசியாகிய தியாக வல்லியின் பெருமையும் அரசன் அவள்பால் வைத் திருந்த மதிப்பும் நன்கு விளங்கும். இவள் ' சிவனிடத் துமையெனத் தியாகவல்லி-உலக முழுதுடையாள் ' என்று நம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியிலும் புகழப்பட்டுள்ளாள்.
இனி, ஏழிசைவல்லபியை 'ஏழிசை வளர்க்க வுரியாள்"[2]என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலால் இவள் ஏழிசையிலும் புலமையெய்தி அவற்றை இனிது வளர்த்துவந்தனள் என்பது நன்கு புலப்படுகின்றது.
நம் குலோத்துங்கனது மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவளைப் புவனமுழுதுடையாள் அல்லது அவனி முழுதுடையாள் என்றும், மற்றையோரை ஏழுலகுமுடையாள், திரிபுவனமுடையாள், உலகுடையாள் என்றும் அக்காலத்தில் வழங்கிவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவர்களது இயற்பெயர்களோடு இப்பெயர்களையும் சேர்த்துச் சிறப்பிப்பது அந்நாளில் பெருவழக்கா யிருந்தது. இவ்வுண் மையை அக்காலத்துக் கல்வெட்டுக்களைக்கொண்டறியலாம்.[3]
மதுராந்தகி என்பவள் பட்டத்தரசியாக நிலவிய நாட்களில் புவனிமுழுதுடையாள் என்றும் அவனி முழுதுடையாள் என்றும் வழங்கப்பட்டனள். அப் போது, ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற மற்ற மனைவியர் இருவரும் ஏழுலகுமுடையாள் உலகுடை யாள் என்னும் சிறப்புப் பெயர்களை எய்தி வாழ்ந்தனர். மதுராந்தகி வானுலகடைந்தபின்னர்த் தியாகவல்லி பட்டத்தரசியாயினள் என்று முன்னரே கூறியுள்ளோம். அவள் அந்நிலையை எய்தியவுடன் அக்கால வழக்கம் போல் புவனி முழுதுடையாள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனள்.
நம் குலோத்துங்கனது முதல் மனைவியாகிய மதுராந்தகிக்கு மக்கள் எழுவர் இருந்தனர். அவர்களுள் முதல் மகன் விக்கிரம சோழன் எனப்படுவான். இரண்டாம் மகன் இராசராசன் என்னும் பெயரினன். மூன்றாம் மகன் வீரசோழன் என்பான். மற்றைப் புதல்வர்களது பெயர்கள் இக்காலத்துப் புலப்படவில்லை. அன்றியும், அம்மங்கைதேவி என்ற ஒரு மகளும் இருந்தனள். இவர்களுள் முதல்வனாகிய விக்கிரமசோழன் கி. பி. 1108-ஆம் ஆண்டில் சோழமண்டலத்திற்கு இளவரசுப் பட்டங்கட்டப்பெற்றுத் தன் தந்தையிடம் அரசியல் நுட்பங்களைக் கற்றுவந்தான். இவன், தென் கலிங்க மன்னனாகிய தெலுங்கவீமன்மேல் ஒரு முறை படையெடுத்துச் சென்று அவனைப் போரிற்புறங்கண்டு வெற்றித்திருவுடன் திரும்பினான்[4] கி. பி. 1120-ல் நம் குலோத்துங்கன் விண்ணுல கெய்தியபின்னர் அரியணை யேறிச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டு ஆட்சி புரிந்தவன் இவ்விக்கிரம சோழனேயாவன். இவனுக்குக் தியாக சமுத்திரம் அகளங்கன் முதலான வேறு பெயர்களும் உண்டு[5] புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வேந்தன்மீது ‘ விக்கிரமசோழனுலா' என்ற ஓர் உலாப் பாடியுள்ளனர். இம் மன்னன் இப்புலவர் பெருந்தகையைப் பெரிதும் பாராட்டி ஆதரித்துவந் தான்.
இரண்டாம் மகனாகிய இரண்டாம் இராசராசன் என்பான் கி. பி. 1077 முதல் 1078 வரை ஓராண்டு, வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயமர்ந்து அதனை அரசாண்டனன் ; பின்னர், தன் தந்தையிடத்தமர்ந்து அணுக்கத் தொண்டுகள் புரிதல்வேண்டுமெனச் சோழ மண்டலத்திற்குத் திரும்பிவந்துவிட்டான்.[6]
மூன்றாம் மகனாகிய வீரசோழன் என்பவன் தன் தமையனாகிய இரண்டாம் இராசராசனுக்குப் பின்னர் வேங்கி நாட்டிற்கு அரசப்பிரதிநிதியாக அமர்ந்தான்.[7]
அங்கு அவனது ஆட்சி பல ஆண்டுகள் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.
குலோத்துங்கனது மற்றை மக்களைப்பற்றிய வரலாறு இப்போது புலப்படவில்லை.
1. தந்தையைப்பெற்ற பாட்டன் ... விமலாதித்தன்.
2. தந்தையைப்பெற்ற பாட்டி ... குந்தவ்வை II.
3. தந்தை ... கீழைச்சளுக்கியனாகிய இராசராச நரேந்திரன்.
4. தாய் ... அம்மங்கைதேவி I.
5. உடன் பிறந்தாள் ... குந்தவ்வை III. 6. மனைவியர் ....மதுராந்தகி, ஏழிசைவல்லபி, தியாகவல்லி.
7. மக்கள் ...விக்கிரம சோழன், இராசராசன் வீரசோழன், அம்மங்கைதேவி II.
8. சிறிய தாதை ...விசயாதித்தன் VII.
9. தாயைப்பெற்ற பாட்டன் ...கங்கைகொண்ட சோழன் என்னும் இராசேந்திரசோழன் I.
10. அம்மான்மார் ...இராசாதிராசன் I. இரண்டாம் ராசேந்திரசோழன், மும்முடிச் சோழன், வீரராசேந்திரசோழன்.
11. அம்மான்சேய் ...அதிராசேந்திரன்.
12. முதல் மனைவியின் தந்தை ...இரண்டாம் ராசேந்திரன்.
- ↑ 1. க. பரணி- தா. 273. மு. கு. 5
- ↑ 2. க. பரணி - தா. 272.
- ↑ 3. S. I. I. Vol. III page 177.
- ↑ -" போர்த்தொழிலால் ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமேவிக்கிரமசோழனுலா- கண்ணி -
- ↑ 5. விக்கிரமசோழனுலா--கண்ணிகள் 59, 152, 152, 209, 216 (256, 284.
- ↑ S. I. I. Vol. No. 39-A Grant of Virachoda. Do.
- ↑ Do Do.