முதற் குலோத்துங்க சோழன்/குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்

சேர்க்கை - 1

முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்
[முதல் மெய்க்கீர்த்தி]


1.திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன்
தோளும் வாளுந் துணையெனக் கேளலர்
வஞ்சனை கடந்து வயிரா கரத்துக்
குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில்
சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத்
திக்கு நிகழத் திறைகொண் டருளி
அருக்க னுதயத் தாசையி லிருக்குங்
கமல மனைய நிலமக டன்னை
முந்நீர்க் குளித்த வந்நா ளாதிக்
கேழ லாகி யெடுத்த திருமால்
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழற்கீழின்புற விருத்தித்
திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப்
புகழுந் தருமமும் புவிதொறு நிறுத்தி
வீரமுந் தியாகமும் மானமுங் கருணையும்
உரிமைச் சுற்ற மாகப் பிரியாத்
தலநிகழ் சயமுந் தானும்வீற் றிருந்து
குலமணி மகுட முறைமையிற் சூடித்
தன்கழல் தராதிபர் சூடச் செங்கோல்
நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராசகேசரி
வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு

[இரண்டாவது மெய்க்கீர்த்தி]

2. புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற்
பொன்னேமி யளவுந் தன்னேமி நடப்ப
விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச்
சக்கரக் கோட்டத்து விக்ரமத் தொழிலாற்
புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம்
வயிரா கரத்து வாரி யயிர்முனைக்
கொந்தள வரசர் தந்தள மிரிய
வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப்
போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி
வடதிசை வாகை சூடித் தென்றிசை
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவையின்
தனிமையுந் தவிரப் புனிதத் திருமணி
மகுட முரிமையிற் சூடித்
தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
தொன்னில வேந்தர் சூட முன்னை
மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை
இருநில வளாக மெங்கணுந் தனாது
திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி
மேருவிற் புலிவிளை யாட வார்கடற்
றீவாந் தரத்துப் பூபாலர் திறைவிடு
கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய
தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன்
பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்தாட்
பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ்
சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை

வில்லது கோடா வேள்குலத் தரசர்
அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும்
பட்டவெம் பரியும் விட்டதன் மானமும்
கூறின வீரமும் கிடப்ப வேறின
மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த
நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த
கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத்
தந்நா ளுகந்து தானும் தானையும்
பன்னா ளிட்ட பலபல முதுகும்
பயத்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும்
பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும்
வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும்
மீளாது கொடுத்த வெங்கரி நிரையும்
கங்கமண் டலமும் சிங்கண மென்னும்
பாணி யிரண்டு மொருவிசைக் கைக்கொண்
டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங்
கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம்
வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும்
தந்திர வாரியு முடைத்தாய் வந்து
வடகடல் தென்கடல் படர்வது போலத்
தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
வெரிநளித் தோடி யரணெனப் புக்க
காடறத் துடைத்து நாட்டிப் படுத்து
மற்றவர் தம்மை வனசரர் திரியும்
பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற
விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி
முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு



மத்தவெங் கரிபடு மய்யச் சையமும்
கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட்
டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள
சாவே றெல்லாந் தனிவிசும் பேற
மாவே றியதன் வரூதினித் தலைவரைக்
குறுகலர் குலையக் கோட்டா றுட்பட
நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்
வீரசிம் மாசனந் திரியவிட் டருளி
வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்
கலிங்க மேழுங் கனலெரி பரப்ப
விலங்கல் போல விலங்கிய வேந்தர்
விட்டவெங் களிற்றோடு பட்டு முன் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர
வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட
எங்க ராய னிகலவ ரேச்சணன்
மாப் பிறளா மதகரி யிராசணன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி எ
ன்றிவ ரனைவரும்
வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப வுயர்த்துக்
கருங்கட லடையத் தராதலந் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல்
ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல
வீரமுந் தியாகமும் விளங்கப் பார்தொழச்
சிவனிடத் துமையெனத் தியாக வல்லி

உலக முடையா ளிருப்ப வவளுடன்
கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலதம்
ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள்
வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந்
திருமா லாகத்துப் பிரியா தென்றும்
திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து
வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு

[மூன்றாம் மெய்க்கீர்த்தி]


3. கழ்மாது விளங்கச் செயமாது விரும்ப
நிலமக ணிலவ மலர்மகள் புணர
உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர
ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர
விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத்
திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி
விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப்
புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
கோவி ராசகேசரி வன்மரான சக்கரவர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு