முதற் குலோத்துங்க சோழன்/முன்னோரும் பிறப்பும்
இரண்டாம் அதிகாரம்
குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும்
கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், தென்மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத் திறுதிக் காலத்தில் நிலவிய சில சோழமன்னருடைய பெயர்கள் அச்சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள பாடல்களாலும் நூல்களாலும் தெரிகின்றன. அவர்களுள் சோழன் கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, செங்கணான் முதலானோர் சிறந்தவராவர்.
இன்னோருள் சோழன் கரிகாலன் என்பான் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறந்த துறைமுகப்பட்டினமாகக் கட்டி, அதனை வாணிபத்திற்கேற்ற வளநகராக்கியவன் ; காவிரியாற்றின் இருமருங்கும் கரையெடுப்பித்துச் சோணாட்டை வளப்படுத்திச் 'சோறுடைத்து' என்று அறிஞர்கள் புகழுமாறு செய்தவன்.[1] இது பற்றியே இவ் வேந்தர் பெருமானைக் கரிகாற்பெருவளத்தான் என்றும் திருமாவளவன் என்றும் மக்கள் பாராட்டிக் கூறுவாராயினர். பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப் படையும், பட்டினப்பாலையும் இம்மன்னன்மீது பாடப்பெற்ற நூல்களேயாம். இவற்றுள் பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு இவ்வேந்தன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அந்நூலைக்கொண்டான் என்று கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் கூறியுள்ளார்.[2] இதனால் இவன் நல்லிசைப்புலவர்பால் கொண்டிருந்த பெருமதிப்பு நன்கு விளங்கும். இம்மன்னன் இமயமுதல் குமரிவரையில் தன் வெற்றியையும் புகழையும் பரப்பிய பெருவீரன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாம்.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்; புலவர்க்கும், இரவலர்க்கும் வேண்டியாங்களித்த பெருங்கொடை வள்ளல்; தமிழகத்தில் தன் வெற்றியைப் பரப்பி வீரனாய் விளங்கியவன்.
பெருநற்கிள்ளி என்பான் உறையூரிலிருந்து சோழ வளநாட்டை ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் நாளில், புகார் நகரத்து வணிகனாகிய கோவலனது மனைவி கண்ணகிக்கு உறையூரின்கண் பத்தினிக்கோட்டம் எடுப்பித்து விழா நிகழ்த்தினன்.
பொய்கையார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப் பெற்ற களவழி நாற்பது[3] என்னும் நூல்கொண்டவன் சோழன் செங்கணான் ஆவன்.[4] இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த சோழரது நிலையும் கி. பி. நான்காம் நூற்றாண்டில் தளர்வுற்றது. அக்காலத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர் தமிழ்நாட்டில் புகுந்து தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் கைப்பற்றிக் காஞ்சிமா நகரையும் மாமல்லபுரத்தையும் தலைநகரங்களாகக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். இவர்களது ஆளுகையும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் சோழ மண்டலத்தில் நிலைபெற்றிருந்தது.
பல்லவரது ஆட்சிக்காலத்தில் சோழரின் வழியினர் குறுநில மன்னராகி அன்னோர்க்குத் திறை செலுத்தி வந்தனர். கி. பி. 819-ல் விசயாலயன் என்ற சோழ மன்னன் ஒருவன் பல்லவர்களோடு போர்புரிந்த சோழ மண்டலத்தின் ஒரு பகுதியைப்பற்றிக்கொண்டு தஞ்சாவூரில் வீற்றிருந்து முடிமன்னனாக அதனை அரசாளத் தொடங்கினான்.[5] இவனையே தொண்ணூற்றாறு புண்கள் மார்பிலே கொண்ட வீரன் என்று தமிழ் நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன என்பர். இவன் காலத்தேதான் தஞ்சாவூர் சோழமண்டலத்திற்குத் தலைமை நகரமாயிற்று. இவனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழன் எனப்படுவான். இவன் தன் நண்பனாகிய பல்லவ மன்னனைத் துணையாகக்கொண்டு பாண்டியனோடு பலவிடங்களில் பெரும்போர்கள் புரிந்தனன். இறுதியில் கி. பி. 880-ஆம் ஆண்டிற் கணித்தாகத் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்தபோரில் பாண்டியன் முற்றிலும் தோல்வியுறவே ஆதித்தன் வெற்றியெய்தினன். இப்போரின் பயனாகச் சோழமண்டலம் முழு வதும் ஆதித்தனுக்கு உரித்தாயிற்று. பிறகு தொண்டை மண்டலமும் அவனது ஆட்சிக்குள்ளாயிற்று. பல்லவரும் குறுநிலமன்னராய்ச் சோழமன்னர்கட்குத் திறை செலுத்தும் நிலையை அடைந்தனர். ஆதித்தனும் 27 ஆண்டுகள் அரசாண்டு கி. பி. 907-ல் இறந்தான்.
இவ்வாதித்தனது புதல்வன் முதலாம் பராந்தக சோழன் என்பான். இவன் காலத்தில் சோழரது ஆட்சி உயர்நிலையை யடைந்தது. இவன் பாண்டிய நாட்டையும் ஈழநாட்டையும் வென்று தன்னடிப்படுத்தியவன்; இவனை 'மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.[6] இவன் தில்லையம்பலத்தில் பொன்வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கிய செய்தியொன்றே இவனது அளப்பரிய சிவபத்தியை நன்கு விளக்குகின்றது. [7]இவன் கி. பி. 907-முதல் கி. பி. 953-வரை அரசாண்டனன்..
இவ்வேந்தனுக்குப் பின்னர் இவனது புதல்வராகிய கண்டராதித்தசோழர் கி. பி. 957-வரை ஆட்சிபுரிந்தனர். இவரது ஆளுகையில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையாயினும் இவரது சிவபத்தியின் மாண்பும் செந்தமிழ்ப் புலமையும் பெரிதும் போற்றற்குரியனவாம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் தில்லைச் சிற்றம்பலத்தெம்பெருமான்மீது இவர் பாடியருளிய திருப்பதிகம் ஒன்றுளது. எனவே, ஒன்பதாந் திருமுறையினை யருளிச் செய்த நாயன்மார் ஒன்பதின்மருள் இவ்வரசர் பெருமானும் ஒருவர் ஆவர்.[8] கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமழபாடி என்னுந் தலத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற நகரம் இவர் அமைத்ததே யாகும். இவரது மனைவியாராகிய செம்பியன்மாதேவியாரது சிவபத்தியும் அளவிட்டுரைக்கும் தரத்ததன்று. இவ்வம்மையார் திருப்பணி புரிந்து நிபந்தங்கள் அமைத்துள்ள சிவன் கோயில்கள் நம் தமிழகத்தில் பல உள்ளன.[9] கண்டராதித்த சோழரது படிமம். இவரது மனைவியாரால் கட்டுவிக்கப்பெற்ற கோனேரி ராசபுரம் சிவன்கோயிலில் இன்றும் உளது.
இவ்வரசருக்குப் பின்னர் இவரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பான் சில மாதங்கள் ஆண்டனன். பிறகு இவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தகன் கி. பி. 957-முதல் கி. பி. 970-வரை அரசு செலுத்தினான். இவனைச் சுந்தரசோழன் என்றும் வழங்குவர். அன்றியும், இவனைப் 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்' என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவனது மனைவி வானவன் மாதேவி என்பாள்.[10]இவ்வரசனுடைய படிமமும் இவன் பட்டத்தரசி வானவன் மாதேவி படிமமும் தஞ்சாவூரிலுள்ள இராசராசேச்சுரத்தில் இவனது மகளாகிய குந்தவையால் எழுந்தருளுவிக்கப்பெற்றுப் பூசனைக்கு நிபந்தங்களும் விடப்பட்டுள்ளன.[11] இவ்வேந்தனது ஆட்சிக்காலத்திறுதியில் இவன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் இளவரசுப்பட்டங் கட்டப்பெற்றான். இவன் பெருவீரன்; பாண்டியனைப் போரில் வென்றமை பற்றி 'வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப் பாராட்டப்பெற்றனன். சில ஆண்டுகளுக்குள் இவன் பகைவரது சூழ்ச்சியாற் கொல்லப்பட்டனன்.
பின்னர், கண்டராதித்தரது திருமகனாகிய உத்தம சோழன் கி. பி. 970-ல் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 985-ல் உத்தம சோழன் இறக்கவே, இரண்டாம் பராந்தகசோழனது இரண்டாவது மகனாகிய முதலாம் இராசராசசோழன் அரியணை ஏறினான்.
சோழமன்னருள் பல்வகையானும் பெருமையுற்றுப் பெருவீரனாய் விளங்கியவன் இவ்வேந்தனே என்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது. இவனது ஆளுகையில் சோழமண்டலம் மிக உயரிய நிலைமை! எய்திற்று. திருநாரையூரில் வாழ்ந்த ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியாரைக் கொண்டு சைவ சமய குரவர்களது திருப்பதிகங்களைத் திருமுறைளாகத் தொகுப்பித்தவன் இம்மன்னனே யென்பர். இவனுக்கு அக்காலத்தில் இட்டு வழங்கிய சிவபாதசேகரன் என்ற பெயரொன்றே இவன் சைவ சமயத்தில் எத்துணை ஈடுபாடுடையவனா யிருந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றது. ஆயினும் இவன் பிறமதத்தினரை என்றும் துன்புறுத்தியவனல்லன்; அன்னோருக்கு மிக்க ஆதரவுகாட்டி யொழுகிவந்தனன் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் உள.
சோழமன்னர்களது பெருமைக்கும், புகழுக்கும் அக் காலத்திய சிற்ப நுட்பத்திற்கும் ஓர் அறிகுறியாய் இப்போது தஞ்சைமாநகரின் கண் விளங்குகின்ற 'இராசராசேச்சுரம்' என்ற பெரிய கோயிலை எடுப்பித்தவன் இம் மன்னர்பெருமானே யாவன் என்பது ஈண்டு அறியத்தக்கது. இவ்வேந்தன், வேங்கி, கங்கபாடி, நுளம்பபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்டபாடி முதலான நாடுகளை வென்று தன்னடிப்படுத்திப் புகழெய்தியவன். இவற்றுள் வேங்கி என்பது கிருஷ்ணை கோதாவரி என்ற இருபேராறுகளுக்கு மிடையில் கீழ் கடலைச் சார்ந்துள்ளதொரு நாடு என்பதை முன்னரே கூறியுள்ளோம். இது கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டது. கி. பி. 972- முதல் 989-வரை இஃது உள் நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. முதலாம் இராசராசசோழன் அச்சமயமே அந்நாட்டைக் கைப்பற்றுதற்குத் தக்கதெனக் கருதிப் பெரும்படையுடன் அவன் மகனாகிய முதலாம் இராசேந்திரசோழனை அவ்வேங்கிநாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்றதோடு. அமையாமல் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனையும் சிறைபிடித்துக்கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சைமா நகரில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான்.
பிறகு, முதலாம் இராசராசசோழன் தன் மகள் குந்தவையை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்ததோடு வேங்கி நாட்டை யாட்சிபுரியும் உரிமையும் அளித்து அந்நாட்டிற்கு அவனைத் திரும்ப அனுப்பினான்.[12] விமலாதித்தனும் அந்நாட்டைக் கி. பி. 1015-முதல் 1022-வரை அரசாண்டான். அவனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இருமக்கள் இருந்தனர். அவர்களுள் இராசராசரேந்திரன் என்பவனே விமலாதித்தன் இறந்த பின்னர்க் கி. பி. 1022-ல் முடிசூட்டப் பெற்றான். முதலாம் இராசராசசோழனது மகனாகிய முதலாம். இராசேந்திரசோழன் தன் மகள் அம்மங்கைதேவியைத் தன் உடன் பிறந்தாளது மகனும் வேங்கிநாட்டு வேந்தனுமாகிய இராசராச நரேந்திரனுக்கு மணம்புரிவித்தான். மணமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்துவந்தனர்.
அந்நாளில் பட்டத்தரசியாகிய அம்மங்கைதேவி கருப்ப முற்றுத் தன் பிறந்தகமாகிய கங்கைகொண்ட சோழபுரஞ் சென்று அங்குக் கி. பி. 1044-ஆம் ஆண்டில் பூசநாளில் ஒரு தவப்புதல்வனைப் பெற்றாள்.[13] திருமகன் பிறந்த நாளிலே நன்னிமித்தங்கள் காணப்பட்டன. அவற்றைக் கண்ட நகரமாந்தர் எல்லோரும் இறும்பூதுற்று, முன்னாளில் இலங்கையை யழித்துப் பின்னாளில் பாரதப்போர் முடித்த திருமாலே இப்புவியின் கண் மறம் நீங்க அறம் வளருமாறு இந்நாளில் அம்மங்கைதேவியின் ஆலிலை போன்ற திருவயிற்றில் தோன்றியுள்ளார் என்று கூறிப் பெருமகிழ்வுற்றனர். முதலாம் இராசேந்திர சோழனது பட்டத்தரசியும் இவற்றையெல்லாம் கண்டு களிப்பெய்தித் தன் காதற்பேரனைக் கைகளில் ஏந்திப் பாராட்டியபோது சில திங்களுக்குமுன் காலஞ்சென்ற தன் நாயகனுடைய அடையாளங்கள் பல அக்குழந்தையின்பாலிருத்தல்கண்டு 'இவன் எமக்கு அருமகனாகி எங்கள் இரவிகுலத்தைத் தளராது தாங்குவானாக' என்றுரைத்து அம்மகவிற்கு 'இராசேந்திர சோழன்'[14] என்று பெயரிட்டாள்.[15] இவ்வரசிளங்குமாரனும் அங்கேயே வளர்ந்து வந்தான். இராசேந்திரனும், இளமையில் கல்வி கற்றுப் பல கலைகளிலும் தேர்ச்சியுற்று அறிஞர் யாவரும் 'கற்றுத் துறைபோய நற்றவக் குரிசில்' என்று புகழ்ந்து பேசுமாறு கல்வியில் உயர்நிலையையடைந்தான். பிறகு இவ்வரசிளங் குமரன், உலகங் காக்கும் கடமை பூண்ட தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியும் பெற்று, யானையேற்றம் குதிரை யேற்றங்களும் பயின்று, தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனன். இவனது அம்மான் மார்களாகிய இராசாதிராசசோழன், இரண்டாம் ராசேந்திர சோழன், வீரராசேந்திரசோழன் முதலானோர் இவனிடத்து மிக்க அன்புடையவர்களாக நடந்துவந்தனர். இவனது ஆற்றலையுணர்ந்த சான்றோர் தந்தையின் சந்திர குலத்தையும் தாயின் சூரிய குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்து, அவற்றைப் புகழுக்கு நிலைக்களமாக்க வந்த உபயகுலோத்தமன் என்று இவனைப் பெரிதும் பாராட்டிப் பேசுவாராயினர்.
- ↑ கலிங்கத்துபரணி தா. 184
- ↑ 2. 'தத்து நீர்வராற் குருமி வென்றதுந் தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும். - க. பரணி - தா. 185.
- ↑ 3. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
- ↑ 4. கலிங்கத்துப்பரணி - தா. 182.
- ↑ 5. The Tiruvalangadu Plates of Rajentlra Chola I Soutll Indian Inscriptions Vol. III No. 205; Kanyakumari Inscription of Vira Rajendra Deva. Epigraphia Indica Vol. XVIII No. 4.
- ↑ 6. Ins, 331 of 1927.
- ↑
7. 'கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும்'--விக்கிரமசோழனுலா - கண்ணி 16.
- ↑ 8. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகிய இவ்வரசர் பெருமானது வரலாற்றைச் 'செந்தமிழில்' யான் எழுதியுள்ள 'முதற் கண்டராதித்த சோழதேவர்' என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
- ↑ 9. திருவாரூர் அரனெறி, செம்பியன் மாதேவி (நாகபட்டினம் தாலூகா), தென்குரங்காடுதுறை (S. I. I. Vol. III. No.144.) திருநல்லம் (கோனேரிராஜபுரம் S. I. I. Vol. III. No.146, 147 and 151); திருமணஞ்சேரி; விருத்தாசலம்.
- ↑ 0. சுந்தர சோழனது பட்டத்தரசியாகிய வானவன் மாதேவி தன் நாயகன் இறந்தபோது உடன்கட்டை ஏறினாள் என்றும் அதுபோது அவ்வம்மைக்கு ஓர் இளங்குழந்தை யிருந்ததென்றும் திருக்கோவலூரிலுள்ள முதல் இராச ராசன் கல்வெட்டு உணர்த்துகின்றது. (செந்தமிழ் - தொகுதி 4 பக். 232.)
- ↑ 11. South Indian Inscrptions Vol. II No. 6.
- ↑ 12. Mysore Gazetteer Vol. II page 947.
- ↑ 13. S. I. I. Vol. VI No. 167.
- ↑ 14. இந்த இராசேந்திர சோழனே நம் வரலாற்றுத் தலைவனாகிய முதலாம் குலோத்துங்க சோழன். இப்பெயர் இவனுக்கு அபிடேகப் பெயராக வழங்கத்தொடங்கிற்று.
- ↑ 15. க, பரணி - தா. 223, 224, 225.