முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/10. தண்டாப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.
2. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்.
3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.
4. நிற்றல் வேண்டுவோன் தவம்செயல் தண்டான்.
5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.
6. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்.
7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.
8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.
9. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்.
10. காமம் வேண்டுவோன் குறிப்புச்செயல் தண்டான்.
- கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுக்குள், தான் ஓங்கி உயர்வு பெற விரும்புபவன், உயர்ந்த மொழிகளை - பிறரைப் பற்றி உயர்வான புகழுரைகளைக் கூறத் தவற மாட்டான் (தண்டான்).
- தான் பெருமையில் பெருக விரும்புபவன், பல புகழ்ச் செயல்களைச் செய்யத் தவிரான்.
- கல்வி கற்க விரும்புபவன், ஆசிரியரை வணங்குவதில் பின் வாங்க மாட்டான்.
- உலகில் புகழுடன் நிலைத்து நிற்க விரும்புபவன் உயர்ந்த தவம் இயற்றுதலைத் தவிர்க்க மாட்டான்.
- தான் நன்முறையில் வாழ வேண்டுபவன், பெரியோருடன் சூழ்ந்து (ஆலோசித்து) வாழும் வழியறிதலைத் தவிரான்.
- தான் மேன்மேலும் வளர விரும்புபவன், முயற்சியுடன் உழைப்பதை விடமாட்டான்.
- இன்பம் பெற விழைபவன், அதைப் பெறும் முயற்சியினிடையே ஏற்படும் இன்னல்களைக் கண்டு சோர மாட்டான்.
- பின்னால் துன்பப்பட இருப்பவன், முன்னால் தேவையில்லாத சிற்றின்பங்களை விடாது நுகர்வான்.
- குடிமக்களின் நன்மையை விரும்பும் அரசன், செங்கோல் முறை தவறாமல் ஆளுதலைக் கைவிட மாட்டான்.
- இன்பம் விரும்புபவன், பெரியோரின் குறிப்பறிந்து செயலாற்றுதலினின்றும் நீங்கான்.