முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/9. நல்கூர்ந்த பத்து


9. நல்கூர்ந்த பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   முறைஇல் அரசன்நாடு நல்கூர்ந் தன்று.

2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.

3. செற்றுஉடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று.

4. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.

5. தன் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.

6. முதிர்வுடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.

7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.

8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று.

9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று.

10. நட்பு இல்வழிச் சேரல் நல்கூர்ந்தன்று.

9. நல்கூர்தலாகக் (வறியதாகக்) கூறும் பத்துக் கருத்துகள்

  1. கடல் சூழ்ந்த உலகில், மக்களை ஆளும் அரசன் செங்கோல் முறை தவறின், அவன் ஆளும் நாடு நல்கூர்ந்ததாகும் - வறுமை உடையதாகும்.
  2. மிகவும் அகவை (வயது) முதிர்ந்தவன் காமத்தை விரும்புதல் - அதாவது மேலும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புதல் பயனற்றதாகும்.
  3. உடன் இருந்து கொண்டே உள்ளத்தில் பகை கொண்டு செயலாற்றுபவனுடன் சேர்ந்திருத்தல் வறிதானதே - வீணானதே.
  4. பெரிய பிணியாளி பெறுகின்ற இன்பம் என்பது, உண்மையான பயன் உடையதாகாது.
  5. தன்னைப் பொருட்படுத்தாது புறக்கணிப்பவரிடத்தில் சினம் கொள்வது செல்லாது - பயனற்றது.
  6. மிகவும் அகவை முதிர்ந்த மூத்தோன் தன்னை ஆடையணிகலன்களால் ஒப்பனை (அலங்காரம்) செய்து கொள்வது அவ்வளவாக எடுபடாது.
  7. தனது பேச்சு எடுபடாத இடத்தில் பேசுதல் என்பது பயனற்ற வீண் செயலாகும்.
  8. உள்ளத்தில் குளிர்ச்சியின்றி வறட்சியுற்றிருப்பவனோடு - அதாவது - உள்ளன்பு இல்லாதவனோடு சேர்ந்திருத்தல் பயன் தராததாகும்.
  9. தமது பெருமையைக் கண்டு அஞ்சி மதிப்புக் கொடாத இடத்தில் சினம் காட்டுதலால் பயனில்லை.
  10. உண்மையான நட்பு இல்லாதவரிடத்தில் இன் சொல்லையோ - ஓர் உதவியையோ பெற உள்ளத்தில் விரும்பிச் செல்லுதலால் ஒரு பயனும் இராது.