மூவர் தோத்திரம்

மூவர் தோத்திரம்

தொகு

திருஞான சம்பந்தப் பிள்ளையார்

தொகு
(அறுசீர் விருத்தம்)
கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பின்
பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம். (1)
பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனஞ் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளுங் கவுணியர் தங்குல தீபத்தை
விரவியெமை யாளுடைய வென்றிமழ விளங்களிற்றை விரும்பி வாழ்வாம். (2)


திருநாவுக்கரசு சுவாமிகள்

தொகு
(அறுசீர் விருத்தம்)
அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம். (1)
இடையறாப் பேரன்பு மழைவாரு மிணைவிழியு முழவா ரத்திண்
படையறாத் திருக்கரமுஞ் சிவபெருமான் றிருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல்
தொடையறாச் செவ்வாயுஞ் சிவவேடப் பொலிவழகுந் துதித்து வாழ்வாம். (2)


சுந்தரமூர்த்தி சுவாமிகள்

தொகு
(அறுசீர் விருத்தம்)
அரவக லல்குலார் பாலா சைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் றூதுகொண்டோ னிணையடி முடிமேல் வைப்பாம். (1)
ஒருமனத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட் டாட்கொண்ட வுவனைக் கொண்டே
இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட வல்லாள னெல்லா முய்யப்
பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகைவிரித்த பேரருளின் பெருமா ளென்றும்
திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமா ளெமதுகுல தெய்வ மாமால். (2)


முற்றும்.


பார்க்க
அகத்தியர் தேவாரத்திரட்டு
மூவர் வரலாறு
மூவர்புராண சாரம்
மூவர் சிறப்பு
நால்வர் சிறப்பு
தேவார மகிமை
"https://ta.wikisource.org/w/index.php?title=மூவர்_தோத்திரம்&oldid=29355" இலிருந்து மீள்விக்கப்பட்டது