மேனகா 1/006-022
2-வது அதிகாரம்
இராகு, கேது, சனீசுவரன்
சென்னை, திருவல்லிக்கேணித் தொனசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஒரு சிறிய இல்லத்தின் கூடத்தில் ஊஞ்சல் பலகையின் மீது குதூகலமாக ஒரு யெளவன விதவை உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றேறக் குறைய பதினெட்டு வயதிருக்கலாம். அவளுடைய சிரத்தின் உரோமமும், ஆபரணங்களும் விலக்கப்படாமலிருந்தன. அவளுடைய கண்களும், கன்னங்களும் குழிந்திருந்தமையாலும், மனத்தின் வனப்பும், மஞ்சளின் வனப்பும் இல்லாமையாலும் அவள் பேய்க்கொண்டவளைப் போல காணப்பட்டாள். தசைப் பற்றுத் துரும்பு போலிருந்த அவளுடைய மேனி, அவள் சூனியக்காரியோ வென்னும் ஐயத்தை உண்டாக்கியது. மண்வெட்டியின் இலையைப்போலிருந்த அவளுடைய பற்களைத் திறந்து அவள் அப்போதைக்கப்போது நகைத்தபோது, இளைக்காதிருந்த பற்களும், சுருங்கிப் போயிருந்த முகமும் முரணி விவகாரத் தோற்றத்தை யுண்டாக்கின. அவள் சிவப்புத் தோலும், வஞ்சக நெஞ்சமும், பொறாமைச் சொற்களும், அற்ப புத்தியும் பெற்றவள். விசனமும், மகிழ்வும், அழுகையும், நகைப்பும், கோபமும், அன்பும், பகைமையும், பட்சமும் அவளுக்கு நினைத்தா லுண்டாகும்; நினைத்தால், மறையும்.
அவளுக்கெதிர்ச்சுவரின் ஓரத்தில் உட்கார்ந்து இன்னொரு விதவை அப்பளம் செய்து கொண்டிருந்தாள். வஞ்சனையின்றி வளர்ந்த ஒதியங்கட்டையைப்போலக் காணப்பட்ட அவள், மொட்டையடித்து முக்காடிட்டிருந்தாள் ஆயினும் முப்பது வருஷங்களையே கண்டவளாயிருந்தாள். யானை இடுப்பும், பானை வயிறும், குறுகிய தலையும், பெருகிய காதும், கிளியின் மூக்கும், ஒளியில்லா பல்லும், உருண்ட கன்னமும், திரண்ட உதடும், குறும்பைத் தலையும், திரும்பாக் கழுத்தும் பெற்ற அந்த அம்மாள் தனது குட்டைக் கைகளும், மொட்டைதலையும் குலுங்கக் குலுங்க அதிவிரைவாக அப்பளம் செய்த காட்சி அற்புதமாயிருந்தது. அவளும் மகிழ்வே வடிவமாய்க் கூச்சலிட்டு நகைத்து ஊஞ்சலிலிருந்த தன் தங்கை கோமளத்தோடு உரையாடிக் கொண்டிருந்தாள்.
கோமளம்:- ஏனடி அக்காள்! வரவர உன் கை தேறி விட்டதே! இப்போது செய்துவைத்த அப்பளம் நம்முடைய வராகசாமியினுடைய சாந்தி முகூர்த்தத்தில் டிப்டி கலெக்டர் அகத்தில் (வீட்டில்) பொறித்த அப்பளத்தைப் போலிருக்கிறதே! - என்று கூறி நகைத்துப் பரிகாசம் செய்தாள். அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள், “நன்றாயிருக்கிறது! அந்த பிணங்களுக்கு மானம் வெட்கம் ஒன்றுமில்லை; பணம் ஒன்றுதான் பிரதானம்; அந்தச் சபிண்டிக்கு டிப்டி கலெக்டர் உத்யோகம் என்ன வேண்டியிருக்கிறது! ஆண், பெண் அடங்கலும் நித்திய தரித்திரம். அவர்களுடைய முகத்தில் விழித்தாலும், அவர்களுடைய தரித்திரம் ஒட்டிக்கொள்ளும்” என்றாள்.
கோமளம்:- ஏனடி அக்காள்! அப்படிச் சொல்லுகிறாய்? அவனுடைய அகமுடையாள் தங்கம்மாள். தாயார் கனகம்மாள்(கனகம் என்றால் தங்கம்) இரண்டு தங்க மலைகளிருக்க, டிப்டி கலெக்டரை தரித்திர மென்கிறாயே! - என்றாள்.
பெருந்தேவி:- (நகைத்து) ஆமாம். குடிக்கக்கூழில்லாதவள் சம்பூரண லட்சுமி யம்மாளென்று பெயர் வைத்திருப்பதைப் போலிருக்கிறது. நம்முடைய வராகசாமிக்கு சோபன முகூர்த்தத்தின் போது டிப்டி கலெக்டர் இரண்டாயிரம் ரூபா கொடுத்தானே; அதற்குப் பதிலாக தங்கத்தையாவது; கனகத்தையாவது சீராக அழைத்து வந்திருக்கலாமே. டிப்டி கலெக்டரும் இரண்டாயிரம் ரூபா லாபமாவதை நினைத்து இருவரில் ஒருத்தியை சந்தோஷமாக அனுப்பி யிருப்பானே.
கோமளம்:- நம்முடைய வராகசாமியா ஏமாறுகிறவன். அவன் தங்கம்மாளைத்தான் கேட்டிருப்பான் - என்று கைகொட்டி நகைத்து ஊஞ்சலை விசையாக ஆட்டினாள்.
பெருந்தேவி சிறிது வெறுப்போடு, “ஆமாம்; சின்ன பீடை வந்து குடும்பம் நடத்தித்தான் குப்பை கொட்டி விட்டாளே. பெரிய பீடை வந்துவிட்டால் அக்காள் வாசந்தான். வீட்டுக்கு மூதேவி பெத்தம்மாள் வேறு தேவையில்லை” என்றாள்.
கோமளம்:- இந்தப் பெண்ணை வாலையும், தலையையும் கிள்ளிவிட்டு எப்படித்தான் வளர்த்தார்களோ! சுத்த மந்தியா யிருக்குமோ! பெண்ணாய்ப் பிறந்தவள் பாம்பைப்போலப் பரபரப்பாய்க் காரியங்களைச் செய்து கொண்டு எள்ளென்பதற்குள் எண்ணெயாய் நின்றாலல்லவா சந்தோஷமா யிருக்கும்! சோம்பேறிப் பிணம்; நன்றாக ஒன்றரைப்படி யரிசிப் பிண்டத்தை ஒரே வாயி லடித்துக்கொண்டு, ஒரு கவளி வெற்றிலையைப் போட்டுக்கொண்டு, மெத்தையை விட்டுக் கீழே இறங்காமற் சாய்ந்து ஹார்மோனியம் வாசித்துக் கொண்டு ஒயாமல் அவனோடு தனியாக விளையாடிக் கொண்டிருந்தால் அது போதாதோ? பெரிய மனிதர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவ்வளவு தான் தெரியும்; அந்த துப்பட்டிக் கலையக்கட்டரும் அதைத்தான் கற்றுக் கொடுத்திருப்பான்.
பெருந்தேவி:- அந்த மொட்டச்சி வளர்த்த முண்டை என்னடி செய்வாள்! தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டிற் பார்க்க வேண்டுவதில்லை. வீட்டிலிருக்கிற தாய் பாட்டி முதலியோரின் நடத்தை எப்படி இருக்கிறது? தங்கத்தின் யோக்கியதையை நான் பார்க்கவில்லையோ? சாந்தி முகூர்த்தத்தின் போது அவ்வளவு கூட்டத்திலே, அகமுடையான் வந்து காலடியில் நிற்கும் போது, காலை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்த தடிச் சிறுக்கிதானே அவள். அந்த குட்டையில் ஊறிய மட்டை எப்படி இருக்கும்!-என்றாள்.
அப்போது வாசற் கதவை யாரோ இடித்து, “பெருந்தேவி பெருந்தேவி!” என்று அழைத்த ஓசை உண்டாயிற்று. சந்தோஷத்தால் முக மலர்ச்சி பெற்ற பெருந்தேவி, “அடி! சாமா வந்திருக்கிறான்; கதவைத் திற” என்றாள். உடனே கோமளம் எழுந்து குதித்துக்கொண்டோடி வாயிற் கதவைத் திறந்து விட, அடுத்த வீட்டுச் சாமா ஐயர்ஆடியசைந்து ஆடம்பரமாக உள்ளே நுழைந்தார். முதுகிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும் வாசனை சந்தனத்தை ஏராளமாய்ப் பூசிக் கொண்டு, வாயில் தாம்பூலம், புகையிலை முதலியவற்றின் அழகு வழியப் புன்முறுவல் செய்தவராய்க் கூடத்திற்கு வந்தார். வாயிற் கதவைத் தாளிடாமற் சாத்திவிட்டுக் கோமளமும் அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தாள். அவர் இருபத்தாறு அன்றி இருபத்தேழு வயதடைந்தவர். அவர் நிலவளமுள்ள இடத்தில் உண்டான உருளைக் கிழங்கைப்போல உருண்டு திரண்ட சிவந்த மேனியைக் கொண்டிருந்தார். அவருடைய சுருட்டைத் தலை மயிரின் ஷோக்கு முடிச்சு ஒரு தேங்காயளவிருந்தது. அவர் மிக்க வசீகரமான தோற்றத்தையும் எப்போதும் நகைப்பை யன்றி வேறொன்றையும் அறியாத வதனத்தையும் கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் தங்கக்கொடியும், தங்க முகப்பு வைத்த ஒற்றை உருத்திராட்சமும், காதில் வெள்ளைக் கடுக்கனும் இருந்தன. இடையில் துல்லியமான மல் துணியும், கழுத்திற் புதுச் சேரிப் பட்டு உருமாலையும் அணிந்திருந்தார். அவர் பெருந்தேவியம்மாளைப் பார்த்து புன்னகை புரிந்த வண்ணம் தோன்றி ஊஞ்சற் பலகையில் அமர்ந்தார்.
பின்னால் வந்த கோமளம், “அடி அக்காள்! இதோ சாமாவைப் பாரடி, ஊரிலே கலியாணம், மார்பிலே சந்தனம்” என்று கூறிய வண்ணம் சற்று தூரத்தில் தரையில் உட்கார்ந்தாள்.
தாம்பூலம் நிறைந்த வாயை நன்றாகத் திறந்து பேச மாட்டாமல் சாமாவையர் வாயை மூடியவாறே, “அழி! பெருந்தேவி! நல்ல வழன் வந்திழுக்கிழது; ஒழே பெண்; ழெண்டு லெட்சம் ழுபாய்க்கிச் சொத்திழுக்கிழது, நல்ல சுயமாசாழிகள், கலியாணம் செய்கிழாயா?” என்று வார்த்தைகளை வழவழ கொழகொழவென்று வெண்டைக் காய்ப் பச்சடியாக்கிப் பெருந்தேவிக்குப் பரிமாறினார். வாயைத் திறக்க மாட்டாமையால், “அடி” யென்பது “அழி” யாயிற்று. மற்றச்சொற்களிலுள்ள “ர”கரங்களெல்லாம் “ழ”கரங்களாயின. அது சரியான தமிழில், “அடி பெருந்தேவி! நல்ல வரன் வந்திருக்கிறது; ஒரே பெண்; இரண்டு லெட்சம் ரூபாய்க்குச் சொத்திருக்கிறது. நல்ல சுயம் ஆசாரிகள்; கலியாணம் செய்கிறாயா?” என்று ஆனது.
அதைக் கேட்ட கோமளம் குதித்தெழுந்து, “ஏனடா சாமா! பெண் சிவப்போ, கருப்போ? என்ன வயசு? அகத்துக் காரிய மெல்லாம் செய்யுமா? பெண்ணுக்குத் தாயார் சண்டைக் காரியா?” என்றாள்.
சாமா:- பெண் மாநிறந்தான். வயது பன்னிரெண்டாகிறது. மூக்கும் முழியும் பலே சொகுசா யிருக்கிறது. வீட்டிற்கு வந்து ஆறு மாசத்திற் பிள்ளையைப் பெற்று விடும். அவர்கள் தங்கமான மனிதர்கள்.
கோமளம் :- அடே சாமா! நீ எப்போதும் உன் குறும்பை விடுறதில்லையே! நாளைக்கு உன் தம்பிக்கு பொண்டாட்டி வரும்போது, கையில் குழந்தையோடேயே வரப்போகிறாள் போலிருக்கிறது.
பெருந்தேவி:- (சிறிது) அடே சாமா! இது இருக்கட்டும் அவர்கள் எந்த ஊரடா?
சாமா:- அவர்கள் கும்பகோணத்துக் கடுத்த கோடாலிக் கருப்பூர்; பி.எல். பரிட்சை தேறிய பிள்ளைக்குத் தான் பெண்ணைக் கொடுப்பார்களாம். கையில் ரொக்கமாகப் பதினாயிரம் ரூபா கொடுக்கப் போகிறார்கள். அதற்கு மேல் சீர் சிறப்புகள் எப்படி இருக்குமோ நீயே பார்த்துக்கொள். நம்முடைய வராகசாமிக்கு இந்தப் பெண் அகப்பட்டு விட்டால், நம்முடைய கலி நீங்கிப் போகும், குட்டுப் பட்டாலும் மோதிரக் கையாற் குட்டுப்பட வேண்டும். இது வல்லவா சம்பந்தம்! பெண்ணின் தகப்பனார் அந்த ஊருக்கே அதிபதி, கோடீசுவரர்; ஒரே பெண்- என்றார்.
பெண்டிர் இருவரும் வியப்படைந்து வாயைப் பிளந்தனர்.
கோமளம்:- (பெருமகிழ்ச்சி காட்டி) பெண்ணின் பெயரென்னடா-என்றாள்.
சாமா:- பங்கஜவல்லியாம்.
பெருந்தேவி :- (சந்தோசத்தோடு) நல்ல அழகான பெயர். மேனகாவாம் மேனகா! பீனிகாதான். தொடைப்பக்கட்டை! பீடை நம்மைவிட்டு ஒழிந்து போனது நல்லதுதான். இதையே முடித்து விடுவோம்; இந்த ஊருக்கு இப்போது அவர்களில் யாராயினும் வந்திருக்கிறார்களா?
சாமா:- பெண்ணுக்கு அம்மான் வந்திருக்கிறார். அவரை இங்கே இன்று ராத்திரி அழைத்து வருகிறேன். அதற்குள் உன் தம்பி வராகசாமியும் கச்சேரியிலிருந்து வரட்டும்; அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்போம்.
பெருந்தேவி:- அவன் என்ன சொல்லப் போகிறான்? நாம் பார்த்து எவளைக் கலியாணம் செய்து வைத்தாலும் அது அவனுக்குத் திருப்திதான். இப்போது முதலில் பதினாயிரம் ரூபா வருகிறது. ஒரே பெண்; பின்பு ஆஸ்தி முழுவதும் வந்து சேர்ந்து விடும். இந்த சம்பந்தம் கசக்குமோ! அவன் என்ன ஆட்சேபனை சொல்லப் போகிறான். நீ எதைப் பற்றியும் யோசனை செய்ய வேண்டாம்; இதையே முடித்துவிடப்பா. இந்த ஆனி மாசத்துக்குள் முகூர்த்தம் வைத்து விடு.
சாமா:- ஆகா! எவ்வளவு சுருக்கு! கலியாண மென்றால் உங்கள் வீட்டுக் கிள்ளுக்கீரைபோலிருக்கிறது. இதில் பல இடைஞ்சல்கள் இருக்கின்றன. பெண்ணுக்கு அம்மான் என்னைக் கேட்ட முதற் கேள்வி என்ன தெரியுமா? 'உங்களுக்குச் சொந்தத்தில் வீடிருக்கிறதா' வென்று கேட்டார்.
பெருந்தேவி:- (ஆவலோடு) இருக்கிறதென்று சொல்லுகிறதுதானே.
சாமா:- ஆம்; அப்படித்தான் சொன்னேன். சொல்லுவது மாத்திரம் போதுமா? வீடு வேண்டாமா? நாம் அவர்களுக்கு எல்லா விஷயத்திலும் சரிசமானமாக இல்லாமற் போனாலும் ஒரு வீடாவது நமக்கு அவசியம் இருக்கத்தான் வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம்; வராகசாமிக்கு முன்னொரு கலியானம் ஆயிருக்கிற தென்பதும், அந்தப் பெண் உயிரோடு இருக்கிறாள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் பெண்ணைக் கொடுக்கமாட்டார்களே; அதற்கு என்ன யோசனை சொல்லுகிறாய்?
கோமளம்:- அது இவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கேள்வியுண்டானால் இல்லையென்று சொல்லி விட்டாற் போகிறது.
சாமா:- (கலகலவென்று சிரித்து) கோமளத்தின் புத்தி உலக்கைக் கொழுந்துதான். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? அதெல்லாம் பலியாது; கலியாணம் முடிவானபின் இரகசியம் வெளியானாற் கவலையில்லை; அதற்குமுன் வெளியானாற் குடி கெட்டுப் போகும். கலியாணம் நின்று போய்விடும்.
பெருந்தேவி:- ஊருக்கெல்லாம் வாந்திபேதி வருகிறது; இந்தப் பீடைக்கு வரமாட்டே னென்கிறதே. இங்கே இருந்து போய் ஒரு வருஷமாய்விட்டது. நானாயிருந்தால் இந்தமாதிரி அவமானப்பட நேர்ந்தால், உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விட்டிருப்பேன். புருஷன் தள்ளி விட்டானென்று ஊர் முழுவதும் ஏளனஞ் செய்வதைக் கேட்டு எந்த மானங்கெட்ட நாய்தான் உயிரை வைத்திருக்கும்.
சாமா:- அவளைத் தொலைப்பதற்கு வழி முதலிலேயே சொன்னேன். நீங்கள் கவனிக்கவில்லை. தப்பித்துக் கொண்டு போய்விட்டாள். இப்போது என்ன செய்கிறது?
பெருந்தேவி:- ஆமடா சாமா! அது நல்ல யோசனைதான். அதைச் செய்திருந்தால் இப்போது காரியம் நன்றா யிருக்கும்.
கோமளம்:- என்ன யோசனை? எனக்குச் சொல்லவில்லையே; விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுகிறதோ?
சாமா:- சேச்சே இல்லை இல்லை. அதெல்லாம் வம்பாய் முடியும். நம்முடைய தலைக்கு வந்து சேரும்.
பெருந்தேவி:- கோமளம் அது உனக்குத் தெரியாது. சாமாவுக்கும் எனக்குந்தான் தெரியும்.
கோமளம்:- (முகத்தைச் சுளித்துக் கொண்டு) எனக்குச் சொல்லப் படாதோ ? சாமா மாத்திரந்தான் உனக்கு உறவாக்கும்?
பெருந்தேவி:- அது வராகசாமிக்குத் தெரிந்தால் குடி கெட்டுப் போகும்; மண்டையை உடைத்து விடுவான். நீ குழந்தை புத்தியினால் அவனிடம் சொல்லி விடுவாயோ வென்று பயந்து சொல்லாமலிருந்தோம். வேறொன்று மில்லை; நம்முடைய சாமாவின் முதலாளி நைனா முகம்மது மரக்காய னிருக்கிறானே; அவன் தன்தம்பியை இங்கே வேலை பார்க்க வைத்துவிட்டு சிங்கப்பூரிலுள்ள தன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறானாம். அவன் மாமிசம் சாப்பிடுவதில்லையாம். மரக்கறி போஜனமே செய்பவனாம். அவனுக்குப் பிராமணருடைய போஜனத்தில் மிகவும் ஆசையாம். ஆகையால், சமையலுக்காக அவனுக்கொரு பிராமண ஸ்திரீ வேண்டுமாம். நல்ல அழகான சிறு பெண்ணாயிருந்தால் ரூபா. 5,000 ரொக்கமாகத் தருகிறே னென்று சாமா விடத்தில் தெரிவித்தானாம்; நம்முடைய மேனகாவை ரகசியமாய்க் கொண்டு போய்த் தள்ளிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டால் அந்தச்சனியனும் நம்மைவிட்டுத் தொலைந்து போகும்; அதனால் பெருத்த சொத்தும் கிடைத்துவிடும்; இதைத்தான் சாமா என்னிடம் சொன்னான். ஆனால் எனக்கு மனமில்லை; இப்படி வேறொருவனிடம் கொண்டு போய்த் தள்ளுவதைவிட விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடுவது நல்லதென்று நான் சொல்லி விட்டேன்.
கோமளம் :- அவள் துலுக்கனுக்கு நன்றாய்ப் பொங்கிப் போடுவாளே! ஒருநாளும் அவள் அதற்கு இணங்கமாட்டாள்.
சாமா:- நிஜந்தான். அவள் எங்கேயாவது கிணற்றிலோ கடலிலோ விழுந்து உயிரையாவது விட்டு விடுவாளேயன்றி அவனுக்கு ஒருநாளும் சமைத்துப் போடமாட்டாள். அந்தக் கல்லை நமக்கெதற்கு? மரக்காயனிடம் நாம் பணத்தைக் கறந்து கொண்டு வந்து விடுவோம். அவள் அவனிடத்தில் உயிரை விட்டுவிடட்டுமே! நாம் அவளைக் கொன்றோமென்பது இல்லாமல் போகுமல்லவா?
பெருந்தேவி:- ஆமடா சாமா! நீ சொல்வது நல்ல யோசனைதான். அவளை நாம் கொல்லுவதேன்? பாவம்! துலுக்கனிடத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவள் தானே உயிரை மாய்த்துக்கொள்ளுகிறாள்; அப்படியே முடித்து விடப்பா!
கோமளம்:- அவன் ஒரு வருஷத்திற்கு முன் சொல்லியிருக்கிறான் போலிருக்கிறது. இப்போது வேறு யாரையாவது ஏற்பாடு செய்து விட்டானோ என்னவோ?
சாமா:- இல்லை இல்லை, நேற்றுகூட அவன் சொன்னான்.
பெருந்தேவி:- டிப்டி கலெக்டர்கூடப் பெண்ணை அழைத்துக் கொள்ளும் படி, தஞ்சாவூருக்கு போன ரெங்காசாரியார் மூலமாயும், சடகோபாசாரியார் மூலமாயும் சொல்லி யனுப்பினானே. நாம் இராஜி யாவதைப்போல பாசாங்கு செய்து பெண்ணை அழைத்து வந்து ஏழெட்டு நாட்கள் வைத்திருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தந்திரமாக அவளைத் தொலைத்துவிட்டு ஒன்றையும் அறியாதவரைப் போலிருந்து விடுவோமே. இது இரண்டாங் கலியாணத்துக்கு நிரம்பவும் அநுகூலமாயும் போகுமல்லவா?
கோமளம்:- மரக்காயன் சிங்கப்பூருக்குப் போகுமுன் அவள் அவனிடம் இருப்பதை யாராவது கண்டுவிட்டால் என்ன செய்கிறது?
சாமா:- அவனுடைய வீடு பெருத்த அரண்மனையைப் போலிருக்கிறது. அதற்குள் போய்விட்டால், பிறகு வெளியில் வழியே தெரியாது. கோஷாக்கள் இருப்பதால் உட்புறத்தில் எவரும் போகக்கூடாது; அந்த மாளிகைக்குள் எத்தனையோ மறைவான இடங்களும், ரகசியமான வழிகளும் இருக்கின்றன. அதற்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அவன் ஒருவன் அறிவானேயன்றி, மற்றவருக்கு ஒன்றுமே தெரியாது. அதைப்பற்றிக் கவலையில்லை.
பெருந்தேவி:- வராகசாமிக்கு அவள் மேலிருக்கும் வெறுப்பை மாற்றி, அவளைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அவன் இணங்கும்படிச் செய்யவேண்டும். அதுவரையிற் கறுப்பூர் சங்கதியை நாம் சொல்லக்கூடாது. பெண்ணின் அம்மானிடம் நாங்கள் இன்னம் பதினைந்து நாட்களில் கறுப்பூருக்கே வருவதாய்ச் சொல்லி அனுப்பிவை- என்றாள்.
அப்போது எவனோ வாசற்கதவை இடித்து, “போஸ்டு போஸ்டு” என்று உரக்கக் கூவினான். கோமளம் குதித்துக் கொண்டோடி ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தாள். அது வராகசாமி ஐயங்காருக்கு எழுதப்பட்டிருந்தது. அதன் உறையை மெதுவாக திறந்து கொண்டே வந்த கோமளம், “அடி! மேனகா தன் அகமுடையானுக்கு எழுதியிருக்காளடி! ஒரு வருஷமாயில்லாமல் இப்போது புருஷனுக்கு என்ன எழுதியிருப்பாள்?” என்றாள். உடனே பெருந்தேவி தன் வேலையை நிறுத்திவிட்டு, “அடி! சீக்கிரம் வாசி, வராகசாமி வந்து விடுவான்” என்று துரிதப்படுத்த, கோமளம் உடனே கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.