3-வது அதிகாரம்

பழைய குருடி! கதவைத் திற(வ)டி!


கு
ழந்தை ஒரு வருஷமாக அநாதையைப் போலக் கிடப்பது, கண்ணில் பட்டால் தானே. தன் கச்சேரிப் பெருமையும், தான் தீர்மானம் எழுதுகிற பெருமையும், எஜமானியம்மாளோடு சர்க்கியூட் (சுற்றுப் பிரயாணம்) போகிற பெருமையும், தான் அலங்காரம் செய்து கொள்ளும் பெருமையும், தன் பைசைகிளின் பெருமையுமே பெருமை; குழந்தை செத்தாலென்ன! வாழ்ந்தாலென்ன! இது பூலோகமோ கைலாசமோ என்றிருக்கிறது. இவ்விதமான கடின மனசுக் காரருக்கெல்லாம் பெண் ஏன் வந்து பிறக்கிறது? அவள் வயசுக் காலத்திலே நல்லதைப் பொல்லாததை அநுபவித்து புருஷனோடு சுகமா யிருக்கவேண்டு மென்னும் நினைவே இராதோ? நெஞ்சிற் கொஞ்சமும் இரக்கமற்ற பாவிகளப்பா! முகத்தில் விழித்தாலும் பாவம் வந்து சேரும்” என்று டிப்டி கலெக்டருடைய செவியிற்படும் வண்ணம் கனகம்மாள் தனக்குத் தானே மொழிந்து கொண்டாள்.

ஒரு வருஷத்திற்கு முன் மேனகா சென்னையிலிருந்து வந்த போது, அவள் புக்ககத்தில் பட்ட பாடுகளையெல்லாம் சொல்லக் கேட்டதனால் கனகம்மாள் பெரிதும் ஆத்திரமும், அச்சமும், வெறுப்பும் அடைந்தவளாய் அவளை இனிக் கணவன் வீட்டிற்கு அனுப்பக் கூடாதென்னும் உறுதியைக் கொண்டாள். அவளைக் கீழே விடாமல் அவளுக்குத் தேவையானவற்றைத் தானே செய்து கண்ணை இமைகள் காப்பதைப் போல அவளை மேன் மாடியிலேயே வைத்துப் பாதுகாக்கத் தொடங்கினாள்; அவள் இன்ன விடத்திலிருக்க வேண்டும், இன்ன படுக்கையில் சயனிக்க வேண்டும், இன்ன பாத்திரத்தில் பருக வேண்டும், இன்ன புஸ்தகங்களைப் படிக்க வேண்டும், இன்ன காரியஞ் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்து விட்டாள். ஆனால் அவளைக் கண்ணால் காணும்போதெல்லாம் கனகம்மாளுக்கு விசனம் வந்துவிடும்; கண்ணீர் விட்டழுதவளாய், “என்னடியம்மா செய்கிறது! பாவிகளாகிய எங்கள் வயிற்றில் நீ வந்து பிறந்தாய். நாங்கள் நல்ல பூஜை செய்ய வில்லை. உன்னோடு பிறந்தவர்க ளெல்லாம் குண்டுகுண்டாய்க் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு புருஷன் வீட்டில் வாழ்ந்து எவ்வளவோ சீராக இருந்து அதிகாரங்கள் செய்து வரவில்லை? எங்கெங்கோ கிடந்தவர்களெல்லாம் இப்போது எப்படியோ தலை கால் தெரியாமல் பெருமை யடித்துக் கொள்கிறார்கள். உன் தலை யெழுத்து இப்படியா யிருக்க வேண்டும் உன்னை நல்ல நிலைமையில் பார்க்க இந்தக் கண்கள் கொடுத்து வைக்க வில்லை” என்பாள். குடிகாரன் மனதில் அவன் குடிக்கும் போது எந்த நினைவுண்டாகிறதோ அதே நினைவே அன்று முழுதும் இருப்பது போலக் கனகம்மாளுக்கு மேனகாவின் நினைவே ஒயா நினைவா இருந்தது. மேனகா அழுதால் கனகம்மாள் அவளைக் காட்டிலும் அதிகமாக அழுவாள். முன்னவள் நகைத்தால் பின்னவளும் அப்படியே செய்வாள். இவ்வாறு கனகம்மாள் மேனகா விஷயத்தில் அசலுக்குச் சரியான நகலாகயிருந்தாள்.

டிப்டி கலெக்டரோ தம்முடைய புத்திரி விதவையாய்ப் போய்விட்டதாக மதித்து அவளுக்குத் தேவையான புண்ணிய சரிதங்களை ஏராளமாக வாங்கி அவளுடைய அறையில் நிறைத்து அதனால் சுவர்க்கத்திற்குப் போகும் வழியை அவளுக்குக் காட்டிவிட்டதாயும் அவளை இவ்வுலக விஷயங்களிலிருந்து மாற்றி அந்த வழியில் திருப்பி விட்டதாயும் நினைத்துக் கொண்டார். மேனகாவின் உபயோகத்திற்காக இரண்டு நார்மடிப் புடவைகளை உடனே அனுப்பும்படி அவர் அம்மாபேட்டை கிராம முன்சீப்புக்குத் தாக்கீது அனுப்பிவிட்டார்; அவள் ஜெபம் செய்யத்துளசிமணி மாலை ஒன்று வாங்கினார்; அவள் மடியாகப் படுத்துக்கொள்ள வேண்டு மென்னும் கருத்துத்தோடு, இரண்டு மான் தோல்கள் வேண்டு மென்று மருங்காபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலை முழுங்கி மகாதேவ ஐயருக்குச் செய்தி அனுப்பி விட்டார்; அவளுடைய பலகாரத்திற்குத் தேவையான புழுங்கலரிசி, பச்சைப் பயறு, வெல்லம் முதலியவைகளில் அவ்வாறு மூட்டைகள் அனுப்பும் படி தலைகாஞ்சபட்டி ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தாண்டவராய பிள்ளையிடம் ஆளை அனுப்பினார்; இவைகளால் எவ்விதக் குறைவு மின்றி நல்ல நிலையில் தமது புத்திரியைத் தாம் வைத்துத் தம்முடைய கடைமையை முற்றிலும் நிறைவேற்றிவிட்டதாகவும், தமது புத்திரி சந்துஷ்டியான பதவியிலிருக்கிறாள் என்றும் நினைத்துக்கொண்டார்; அப்போதே தம்முடைய சிரமீதிருந்த பளுவான மூட்டையைக் கீழே போட்டவரைப் போல இன்புற்றார்; இனி தமது உத்தியோகத்தை வீட்டின் கவலையின்றிப் பார்க்கலா மென்று நினைத்துத் தமது புத்திசாலித் தனத்தைப் பற்றித் தாமே பெருமை பாராட்டிக் கொண்டார்; இனி, தமது மனையாட்டியும் தாமும் எத்தகைய இடையூறு மின்றிக் கொஞ்சிக் குலாவி யிருக்கலா மென்றெண்ணி அளவளாவினார்; இனிப் பெண்ணின் நிமித்தம் சீமந்தம், பிள்ளைப்பேறு, மருமகப்பிள்ளையை வணங்குதல் முதலிய அநாவசியமான உபத்திரவங்களுக்கு ஆளாகாமல் தாம் தப்பித்து விட்டதாய் நினைத்து மகிழ்ந்தார். பொல்லாக் குணமுடைய மருமகப்பிள்ளையைப் பெற்று, விடுபடும் வழியறியாமல் கண் கலங்க வருந்தும் பெற்றோருக்கு நமது டிப்டி கலெக்டர் எத்தகைய குறுக்கு வழியைக் காண்பித்தார்! மருமகப்பிள்ளை ஏதாவது துன்பம் கொடுத்தால் உடனே அவரைக் கொன்று விடுதலே காரிய மென்று காட்டுகிறார். எப்படி கொல்லுகிறது? தமது புத்திரியை விதவையாக்கி வீட்டில் வைத்துக்கொள்ளுதலே அவளுடைய கணவனைக் கொன்றுதலைப் போலாகுமல்லவா? ஆனால் இந்தத் தந்திரம் இவருடைய மூளையைத் தவிர, வேறு எவருடைய மூளைக்கும் தோன்றியதே பெருத்த விந்தை.

இவ்வாறு சில மாதங்கள் கழிந்தன. டிப்டி கலெக்டருடைய காரியங்க ளெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவருடைய பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும், ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனுக் கூப்பிடுவதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாகோட்டை ஜெமீன்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டிக் காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தாறுகளை அனுப்புவதும், கெங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம், சட்டைநாதபிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தொட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள், “எண்ணிக்கொள்” என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காய்ப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளைமூக்குச் சுப்பனுக்கு உபநயனம் நடத்துவதும், சப்பைக்கால் கந்தனுக்கு சாந்தி கலியாணம் நடத்துவதும், உளருவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.

ஆனால் கணவன் உயிருடன் இருக்கையிலேயே, விதவையாக்கப்பட்ட பூங்கொடியான மேனகா தன்னுடைய நாயகனை விடுத்து வந்த பிறகு பைத்தியங் கொண்டவளைப் போலக் காணப்பட்டாள். உண்பதை விடுத்தாள்; துயில்வதை ஒழித்தாள்; நல்லுடைகளை வெறுத்தாள்; நகைகளை அகற்றினாள்; அழகே வடிவாகக் காணப்பட்ட தனது அளகபாரத்திற்கு எண்ணெயு மிடாமல் சடையாய்ச் செய்து விட்டாள்; நகையற்ற முகத்தையும், மகிழ்வற்ற மனதையும் கொண்டவளாய்த் தன் சிந்தையை ஓயாமல் வேறிடத்தில் வைத்தவளாய் வாடி வதங்கித்துரும்பாய் மெலிந்தாள்.

“துயிலெனக்கண்க ளிமைத்தலு முகிழ்த்தலுந் துறந்தாள்
வெயிலிடைத்தந்த விளக்கென வொளியிலா மெய்யாள்
மயிலிற்குயின் மழலையாண் மானிளம் பேடை
அயிலெயிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்.”

என்றபடி துவண்டு இரண்டொரு மாதத்தில் எழுந்திருக்கும் திறனற்றவளாய் அயர்ந்து தள்ளாடினாள். அவளுடைய எண்சாண் உடம்பும் ஒரு சானாய்க் குன்றியது. ஹார்மோனியம் முதலிய வாத்தியங்களின் இன்னொலி அண்டை வீடுகளிலிருந்து தோன்றி அவளுடைய செவியில் மோதினால், ஆயிரம் தேள்கள் அவளது தேகத்தில் ஒரே காலத்தில் கொட்டுதலைப்போல வதைப்பட்டாள். மஞ்சள், மலர்கள் முதலிய மங்கலச் சின்னங்களை அறவே ஒழித்தாள். தனது உடம்பை ஒரு சிறிதும் கவனிக்காமலும், பிறர் மொழிவதற்கு மறுமொழி கூறாமலும்,

“விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல்
எழுத லேங்குத லிங்குத லினியனை யெண்ணித்
தொழுதல் சோருத லுறங்குத றுயருழந் துயிர்த்தல்
அழுத லன்றிமற் றயலொன்று செய்குவ தறியாள்.”

என்ற வண்ணம் ஓயாமல் அழுதலையே அலுவலாய்ச் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய சொந்த இடமாகிய தண்ணீரை விடுத்து வெளியேற்றப்பட்ட மீன் குஞ்சு தரையில் கிடந்து அசைவற்று செயலற்று உயிரை அணுவணுவாய்ப் போக்கி அழிவதைப் போலத் தன் கணவனுடைய இடத்தை விடுத்துவந்த பிறகு அவளுக்கு உலகமே உயிரற்றுப் பாழ்த்து இருளடைந்து போனதாய்த் தோன்றியது. பெண்மக்களுக்குக் கணவனைப் பகைமை காரணமாக விடுத்துப் பிரிதலைக் காட்டிலும் கொடிய விபத்தும், துயரும் வேறு உண்டோ? கூரிய புத்தியையும் கவரிமானினும் அதிகரித்த மானத்தையும் கொண்ட அன்னப் பேடாகிய மேனகா வேடன் அம்பால் அடிபட்டுக் கிடக்கும் பறவைகளைப்போலப் புண்பெற்ற மனத்தோடு சோர்ந்து கிடந்தாள்.

ஆரம்பத்தில் அந்த நிலைமையை நோக்கிய கனகம்மாள், மேனகா தன் கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த துன்பங்களை யெண்ணி அவ்வாறு வருந்துகிறாள் என நினைத்தாள். ஆனால் சொற்ப காலத்தில் அவ்வெண்ணம் தவறென உறுதியாயிற்று. அவள் தனது நாதன் மீது கொண்ட ஆசையாலும்; அவனது பிரிவாற்றாமையாலும் அவ்வாறு அலமருகின்றாள் என்பதைக் கண்டாள். அத்தகைய நிலைமையில் அவளைத் தமது வீட்டிலேயே எவ்வாறு வைத்துக் கொள்வதென்பதைப் பற்றிப் பன்னாட்கள் யோசனை செய்தாள்; அவளைத் தன்னால் இயன்றவரை தேற்றி, அவளுக்குரிய தேவைகளைச் செய்து அவளைக் களிப்பிக்க முயன்றாள். அவள் அவற்றைச் சிறிதும் கவனித்தாளன்று. இரவுகளிற் பாட்டியின் அண்டையில் படுத்திருக்கும் மேனகா தனது துயிலில் கணவனைப் பற்றிப் பிதற்றியதையும், திடுக்கிட் டெழுந்து அவனை நினைத்து அழுததையுங் கண்ட கனகம்மாளுக்கு அப்போதே உண்மை நிச்சயமானது. கனகம்மாளினது மனதும் உடனே மாறியது. வராகசாமியின் மீது அவள் அது வரையில் கொண்டிருந்த வெறுப்பு விலக, அவன் மாத்திரம் நற்குணமுடையவனாய் அவளுடைய அகக்கண்ணிற்குத் தோன்றினான். எப்பாடு பட்டாயினும் அவளைக் கணவனிடம் கொண்டு போய் விடுதலே ஒழுங்கென அவள் நினைத்தாள்; சாம்பசிவ ஐயங்காரிடம் உண்மையைத் தெரிவித்தாள். அவருடைய உத்தியோக மகோத்சவத்தில் அந்த மொழி அவருடைய செவியில் ஏறவில்லை. அம்மாள் வேளைக்கு வேளை மத்தளம் தாளத்தோடு அதே பாட்டாய் பாடி அவருடைய செவிகளைத் துளைக்க ஆரம்பித்தாள். அவள் தம்மை எவ்வளவு கொத்தினாலும், தம் மருமகப் பிள்ளையிடம் பெற்ற மரியாதை அவருக்கல்லவோ தெரியும்! அவர் அதை அவ்வளவாக சட்டை செய்யாமல் இருந்தார். அவளுடைய உபத்திரவங்கள் ஒன்றுக்குப் பத்தாய்ப் பெருகின. அவள் ஈட்டி, சூலம், அம்பு, தோமரம், முதலிய ஆயுதங்களை துரத்திலிருந்தே எறிந்து முதலில் யுத்தம் செய்தாள். பிறகு வாயுவாஸ்திரம், அக்கினி யாஸ்திரம், வருணாஸ்திரம் முதலியவற்றைக் கொண்டு போர் செய்தாள்; கடைசியாக அருகில் நெருங்கி முஸ்டியுத்தம் புரியத்தொடங்கினாள். அவர் என்ன செய்வார்? சென்னை யிலிருந்து வந்த சில மனிதரிடம், மத்தியஸ்தம் செய்யும்படி அவர் அரைமனதோடு தெரிவிக்க, அவர்கள் அதற்கு இணங்கிச் சென்றனர். பிறகு சென்னையிலிருந்து இரண்டொரு கடிதங்கள் வந்தன; அதனால் பயனுண்டாகாததைக் கண்ட கனகம்மாள் இந்த அதிகாரத் தொடக்கத்தில் கூறியவிதம் கடுஞ் சொற்களை உபயோகித்தாள். “ஒரு நாளா? இரண்டு நாளா? குழந்தை வந்து ஒரு வருஷமாகிவிட்டது. இதெல்லாம் என்கண் செய்த பாவம்! இதை யெல்லாம் பார்க்கும்படி அந்தப் பாழுந் தெய்வம் செய்துவிட்டதே! யாருக்கு யார் என்ன விருக்கிறது? பிள்ளையாம் பிள்ளை! அணிப்பிள்ளை தென்னம்பிள்ளை!” என்று மூச்சு விடாமலும், முற்றுப் புள்ளி வைக்காமலும் கனகம்மாள் பக்கம் பக்கமாய்ப் பேசிக் கொண்டே இருந்தாள். வழக்கத்திற்கு மாறாகச் சிறிது கோபம் கொண்ட புத்திர சிகாமணி, “நான் என்ன செய்வேன்? அந்தப் பைத்தியத்தின் காலைப் பிடித்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ? நானும் பல மனிதர் மூலமாய்ச் சொல்லி அனுப்பினேன். அந்த பிரபு அதை காதில் வாங்கினாலென்றோ? என்னுடைய சேவகன் அவனை அன்னியருக்கு எதிரில் பிடித்துக் கொண்டானாம். அதனால் மோசம் வந்துவிட்டதாம்” என்றார்.

கனகம்:- அவன் உன்னை அடிக்க வந்தபோது சேவகன் அவனைப் பிடித்துக் கொள்ளவில்லையாமே, நீ பெண்ணை அழைத்தபோது வராகசாமி குறுக்கில் வந்து மறித்தானாம்; அப்போதே சேவகன்பிடித்துக் கொண்டானாம். அப்படி யல்லவோ அவன் சொல்லுகிறான்.

சாம்ப :- அதெல்லாம் முழுப்புளுகு.

கனகம்:- என்ன இருந்தாலும் அவன் நம்முடைய குழந்தையின் புருஷன். அவனைச் சேவகன் பிடித்துக் கொள்ளுவதென்றால், அது அவமானமாகத்தானே இருக்கும். அதைப்பற்றி நம்முடைய மேனகாவே வருத்தப் படுகிறாளே. அவனுக்கு எப்படி இராது! போனது போகட்டும்; அவன்தான் வீண் பிடிவாதம் செய்கிறான்; நாமும் அப்படியே செய்தால் யாருக்கு நஷ்டம்? வாழையாடினாலும், வாழைக்குச் சேதம், முள்ளாடினாலும் வாழைக்குச் சேதம். இதனால் நமக்குத்தான் துன்பமெல்லாம். அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய்ப் பெண்ணை நாம் எத்தனை நாளைக்கு வைத்திருக்க முடியும்? ஏதாவது அவமானம் வந்துவிட்டால் பிறகு நமக்குத்தானே தலைகுனிவு.

சாம்ப:- அதற்காக என்ன செய்யச் சொல்லுகிறாய்? என்னால் ஒன்றும் ஆகாது.

கனகம்:-நன்றாயிருக்கிறது! நாம் எப்படியாவது நயந்து தான் போகவேண்டும். நாம் பெண்ணைக் கொடுத்தவர்கள்; அவனுடைய கை மேலதான்; நமது கை ஒருபடி இறக்கந்தான். இன்னம் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடகு வைத்த நகைகளையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்; ஒரு நகைகூட இல்லாமல் பெண் மரம்போல இருக்கிறாளே; என்ன செய்கிறது?

சாம்ப:- அந்த துஷ்ட முண்டைகளிடம் இவள் போனால் துன்பந்தான் சம்பவிக்கும். இனி சுகமாய் வாழப்போகிற தில்லை. முறிந்து போன பால் நல்ல பாலாகுமோ? ஒரு நாளுமில்லை. 

கனகம்:- (ஆத்திரத்தோடு) சரிதான்; வாழமாட்டாள் வாழமாட்டா ளென்று மங்களம் பாடிக்கொண்டே இரு; அதுதான் உங்களுடைய ஆசை போலிருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் சுகமா யிருங்கள். அது மூத்த தாரத்தின் குழந்தை! அது எப்படியாவது அழிந்து நாறிப் போகட்டும். உனக்குப் பணச் செலவு செய்வதென்றால் ஒன்றும் தேவையில்லை. நீ ஒன்றிற்கும் உன் கையை அறுத்துக் கொள்ள வேண்டுவதில்லை. என்னுடைய மஞ்சற்காணியை இன்றைக்கு விற்றாகிலும் ஐயாயிரம் ரூபா கிடைக்கும். அதை விற்றுப் பெண்ணை அனுப்பிவிடு. இல்லாவிட்டால், அவள் இம்மாதிரி கஷ்டப்பட நான் இனி ஒரு க்ஷணமும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். பேசாமல் எங்கேயாவது தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போய்விடுகிறேன். எனக்கு பிள்ளையுமில்லை, குட்டியுமில்லை யென்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன் - என்றாள். அழுகை மேலிட்டு அவளுடைய நெஞ்சை அடைத்தது. உதடு முதலியவை படபடவென்று துடித்தன. கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் யாவற்றையும் துறந்து வீட்டை விடுத்து அப்போதே போவதற்குத் தயாரா யிருப்பவளாகத் தோன்றினாள். தம் அன்னை அதற்கு முன் அவ்வளவு வருந்தியதைப் பார்த்தறியாத சாம்பசிவையங்கார் ஒருவாறு பணிவை அடைந்தார்.

சாம்ப:- அம்மா! அந்த எருமை மாட்டினிடம் நான் இனி போக மாட்டேன். நீதான் போக வேண்டும். அவன் கேட்கிற பணத்தைத் தொலைத்து விடுகிறேன். நீயே கொடுத்து விடு - என்றார்.

கனகம்:- எல்லாவற்றிற்கும் அந்த அடுத்த வீட்டு சாமா இருக்கானே, அவனுக்கு ஒரு கடுதாசி எழுதியனுப்பு; என்ன சொல்லுகிறான் பார்க்கலாம். ரூ.2000ம் கொடுப்பதாயும், அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்டுத் தருவதாயும், இனி பெண்ணை அன்போடு நடத்த வேண்டு மென்றும் எழுது.

சாம்ப:- சரி; நான் சம்பாதிக்கிறது அவனுக்குக் கொடுக்கத்தான் சரியாப் போகும். பெண்ணை அடித்தாற் பணம் வந்து விடும் என்று கண்டவன், பணத் தேவை உண்டான போதெல்லாம் அடித்துக் கொண்டுதான் இருப்பான்; நானும் பணத்தைச் செலுத்தி கொண்டேதான் இருக்க வேண்டும். பெண்ணை அடிப்பதில் அவர்களுக்கு இயற்கையிலேயே சந்தோஷம் அதிகம்; இன்னம் அது கஜானாவில் ‘செக்’ மாற்றுவதைப் போலானால் பிறகு அடிப்பதுதான் வக்கீல் உத்தியோகமாகச் செய்வான். சரி! அப்படியே ஆகட்டும். கடிதம் எழுதுகிறேன்-என்று காகிதத்தையும், இறகையும் கையில் எடுத்தார்.


❊ ❊ ❊ ❊ ❊

"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/007-022&oldid=1252317" இலிருந்து மீள்விக்கப்பட்டது