10-வது அதிகாரம்

வேடச்சிறான்கை மாடப்புறா


செ
ன்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் மேனகா இருந்த அறைக்குள் நுழைந்த மகம்மதியனுடைய வயது சற்றேறக்குறைய இருபத்தேழு இருக்கலாம். சிவப்பு நிறத்தைக் கொண்ட நீண்டு மெலிந்த சரீரத்தை உடையவன். அவன் முகத்தில் சிறிதளவு மீசைமாத்திரம் வளர்த்திருந்தான். தலையின் மயிரை ஒரு சாணளவு வெட்டி விட்டிருந்தான். ஆதலின் அது நாய் வாலைப்போல முனை மடங்கி அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பரவி முகத்திற்கு அழகு செய்தது. கருமையாய்ச் செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த இரண்டு புருவங்களும் இடைவெளியின்றி இயற்கையிலேயே ஒன்றாய்ச் சேர்ந்திருந்தமையாலும், கண்களில் மை தீட்டப்பட்டிருந்தமையாலும் அவனுடைய முகம் பெண்மையையும் ஆண்மையையும் ஒருங்குகூட்டி மிக்க வசீகரமாய்த் தோன்றியது. வாயில் வெற்றிலை அணிந்திருந்தான். உடம்பிலும் உடைகளிலும் பரிமளகந்தம் கமழ்ந்து நெடுந்துரம் பரவியது. அவனுடைய இடையில் பட்டுக் கைலியும், உடம்பில் பவுன் பொத்தான்களைக் கொண்ட மஸ்லின் சட்டையும், தோளில் ஜரிகை உருமாலையும் அணிந்திருந்தான். கையிற் பல விரல்களில் வைரம், கெம்பு, பச்சை முதலியவை பதிக்கப்பெற்ற மோதிரங்கள் மின்னின.

அவ்வித அலங்காரத்தோடு தோன்றிய நைனாமுகம்மது மரக்காயன், மேனகாவுடன் நெடுங்காலமாய் நட்புக் கொண்டவனைப்போல அவளை நோக்கி மகிழ்வும் புன்முறுவலுங் காட்டி, “மேனகா! இன்னமும் உட்காராமலா நிற்கிறாய்? இவ்வளவு நேரம் நின்றால் உன் கால் நோகாதா? பாவம் எவ்வளவு நேரமாய் நிற்பாய் அந்த சோபாவில் உட்கார். இது யாருடைய வீடோ என்று யோசனை செய்யாதே. இது உன்னுடைய வீடு. எஜமாட்டி நிற்கலாமா? எவனோ முகமறியாதவன் என்று நினைக்காதே. உன்னுடைய உயிருக்கு உயிரான நண்பனாக என்னை மதித்துக்கொள்” என்றான்.

அவன் தனது பெயரைச்சொல்லி அழைத்ததும், ஆழ்ந்த அன்பைக் காட்டியதும், அவனுடைய மற்றச் சொற்களும், அவனது காமாதுரத் தோற்றமும் அவளுக்குக் கனவில் நிகழ்வனபோலத் தோன்றின. அது இந்திர ஜாலத்தோற்றமோ அன்றி நாடகத்தில் நடைபெறும் ஏதாயின் காட்சியோ என்னும் சந்தேகத்தையும் மனக் குழப்பத்தையும் கொண்டு தத்தளித்து, அசைவற்றுச் சொல்லற்றுக் கற்சிலைப்போல நின்றாள். நாணமும் அச்சமும் அவளுடைய மனதை வதைத்து, அவளது . உடம்பைக் குன்றச் செய்தன. அன்றலர்ந்த தாமரை மலர் காம்பொடி பட்டதைப்போல முகம் வாடிக் கீழே கவிழ்ந்தது. வேறொரு திக்கை நோக்கித் திரும்பி மெளனியாய் நின்றாள். சிரம் சுழன்றது. வலைக்குள் அகப்பட்ட மாடப்புறா, தன்னை எடுக்க வேடன் வலைக்குள் கையை நீட்டுவதைக் கண்டு உடல் நடுக்கமும் பேரச்சமும் கொண்டு விழிப்பதைப்போல, அவள் புகலற்று நின்றாள். அந்த யெளவனப் புருஷன் மேலும் தன்னிடம் நெருங்கி வந்ததைக் கடைக்கண்ணால் கண்டாள். நெஞ்சம் பதறியது. அங்கம் துடித்தது. அருகிற் கிடந்த கட்டிலிற்கு அப்பால் திடீரென்று விரைந்து சென்று நின்றாள். பெருங் கூச்சல் புரியலாமோ வென்று நினைத்தாள். அச்சத்தினால் வாயைத் திறக்கக் கூடாமல் போயிற்று. அதற்குள் அந்தச் சிங்காரப் புருஷன் கட்டிலிற்கு எதிர்புறத்திலிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து, “மேனகா! நீ ஏன் மூடப் பெண்களைப்போல இப்படிப் பிணங்குகிறாய்? உன்னுடைய உயர்ந்த புத்தியென்ன! அருமையான குணமென்ன! மேலான படிப்பென்ன! நீ இப்படிச்செய்வது ஆச்சரியமாக இருக்கிறது! நானும் ஒரு மனிதன் தானே! பேயல்ல; பிசாசல்ல; உன்னை விழுங்கிவிட மாட்டேன். அஞ்சாதே! அப்படி அந்தக் கட்டிலின் மேல் உட்கார்ந்துகொள். உன் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து இங்கே நிரம்ப நாழிகையாய் நின்றதனால் களைத்துப் போயிருக்கிறாய்! அதோ மேஜையின் மேல் தின் பண்டங்களும், பழங்களும் ஏராளமாய் நிறைந்திருக்கின்றன. வேண்டியவற்றை எடுத்துச் சாப்பிட்டுக் களைப்பாற்றிக்கொள். சந்தோஷமாக என்னுடன் பேசு. நீ இப்படி வருந்தி நிற்பதைக் காண என் மனம் துடிக்கிறது. கவலைப்படாதே. விரோதியின் கையில் நீ அகப்பட்டுக்கொள்ளவில்லை. உன்னைத் தன் உயிரினும் மேலாக மதித்து, தன் இருதயமாகிய மாளிகையில் வைத்து தினம் தினம் தொழுது ஆண்டவனைப்போல வணங்கும் குணமுடைய மனிதனாகிய என்னிடம் நீ வந்த பிறகு உன்னுடைய கலியே நீங்கிவிட்டது. நீ எங்கு சென்றால் உனக்குப் பொருத்தமான சுகத்தையும் இன்பத்தையும் நீ அடைவாயோ அங்கு உன்னை ஆண்டவன் கொணர்ந்து சேர்த்துவிட்டான். நீ உன் வீட்டில் அடைவதைவிட இங்கு ஆயிரம் பங்கு அதிகரித்த செல்வாக்கை அடையலாம். உனக்கு புலிப்பால் தேவையா? வாய் திறந்து சொல்; உடனே உனக்கெதிரில் வந்து நிற்கும்; ஆகா! உன் முகத்தில் வியர்வை ஒழுகுகிறதே! கைக்குட்டையால் துடைக்கட்டுமா? அல்லது விசிறிகொண்டு வீசட்டுமா?” என்றான். அதைக் கேட்ட மேனகாவின் உயிர் துடித்தது. கோபமும், ஆத்திரமும் காட்டாற்று வெள்ளமென வரம்பின்றிப் பொங்கி யெழுந்தன. தான் ஏதோ மோசத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நன்றாக உணர்ந்தாள். இன்னமும் தான் நாணத்தினால் மெளனங் கொண்டிருந்தால், தன் கற்பிற்கே விபத்து நேர்ந்து விடும் என நினைத்தாள். பிறர் உதவியின்றி தனிமையில் விபத்தில் இருக் கையில் பெண்டீர் நாணமொன்றையே கருதின், மானமும், கற்பும் நில்லாவென எண்ணினாள். புலியின் வீரத்தையும், துணிவையும், வலுவையும் கொண்டாள். தனது சிரத்தை உயர்த்தி, “ஐயா! இது எந்த இடம்? என்னை அழைத்துவந்த மனிதர் எங்கு போயினர்? நீர் யார்? என்னை இவ்விடத்தில் தனிமைப் படுத்தியதின் காரணம் என்ன? தயவு செய்து இவற்றைத் தெரிவித்தால், நீர் இப்போது செய்த உபசரணைகளைக் காட்டிலும் அது பதின்மடங்கு மேலான உதவியாகும்” என்றாள்.

நைனா முகம்மது முன்னிலும் அதிகரித்த மகிழ்ச்சி கொண்டு, “பலே! இவ்வளவு அழகாய்ப் பேசுகிறாய்! உனக்கு வீணை வாசிக்கத்தெரியும் என்று நான் கேள்விப்பட்டேன். நீ பேசுவதே வீணை வாசிப்பதைப் போலிருக்கிறதே! இன்னம் வீணை வாசித்துப் பாடினால் எப்படி இருக்குமோ! மூடப்பெண்களைக் கலியாணம் செய்து, பிணத்தைக் கட்டி அழுதலைப்போல ஆயிரம் வருஷம் உயிர் வாழ்வதைவிட மகா புத்திசாலியான உன்னிடம் ஒரு நாழிகை பேசியிருந்தாலும் போதுமே! இந்தச் சுகத்துக்கு வேறு எந்தச் சுகமும் ஈடாகுமோ! மேனகா! நீ கேட்கும் கேள்வி ஆச்சரியமாயிருக்கிறது; இப்போது இங்கு வந்த உன்னுடைய தாயும், அண்ணனும் உன்னை ரூபா பதினாயிரத்துக்கு என்னிடம் விற்றுவிட்டது உனக்குத் தெரியாதா? அவர்கள் உங்களுடைய வீட்டிற்குப் போய்விட்டார்களே! அவர்கள் உண்மையை உன்னிடம் சொல்லியிருந்தும் நீ ஒன்றையும் அறியாதவளைப் போலப் பேசுகிறாயே! பெண்களுக்குரிய நாணத்தினால் அப்படி பேசுகிறா யென்பது தெரிகிறது. நீ பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது! பாவம் இன்னமும் நிற்கிறாயே! முதலில் உட்கார்ந்துகொள். பிறகு பேசலாம். நிற்பதனால் உன் உடம்பு தள்ளாடுவதைக் காண, என் உயிரே தள்ளாடுகிறது. அந்த மெத்தையின் மீது உட்கார் என் பொருட்டு இது வரையில் நின்று வருந்திய உன் அருமையான கால்களை வருடி இன்பங் கொடுக்கட்டுமா? அதோ மேஜைமீது காப்பி, ஷர்பத், குல்கந்து, மல்கோவா, செவ்வாழை, ஆப்பிள், ஹல்வா, போர்ட்டு ஒயின், குழம்புப்பால் முதலியவை ஏராளமாய் இருக்கின்றன. நான் எடுத்து வாயில் ஊட்டட்டுமா! என் ராஜாத்தி! பிணங்காதே; எங்கே இப்படி வா! உனக்கு வெட்கமாயிருந்தால், நான் என் கண்ணை மூடிக்கொள்கிறேன்; ஓடிவந்து ஒரு முத்தங்கொடு. அல்லது நீ கண்ணை மூடிக்கொள்; நான் வருகிறேன்” என்றான். அவனுடைய மொழிகள், அவள் பொறுக்கக்கூடிய வரம்பைக் கடந்துவிட்டன. ஒவ்வொரு சொல்லும் அவளுடைய செவியையும், மனத்தையும் தீய்த்தது. இரு செவிகளையும் இறுக மூடிக்கொண்டாள்; கோபமும், ஆத்திரமும் அணை பெயர்க்கப்பட்ட ஆற்று வெள்ளமெனப் பொங்கி யெழுந்தன; தேகம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. கோபமூட்டப்பெற்ற சிறு பூனையும் புலியின் மூர்க்கத்தையும் வலுவையும் கொள்ளுமென்பதற்கு இணங்க அவள் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, அவனுடைய தலையை உடலினின்று ஒரே திருகாய்த் திருகி யெறிந்து அவன் அதற்கு மேல் பேசாமல் செய்துவிட நினைத்தாள். அவன் கூறிய சல்லாப மொழிகளைக் கேட்டதனால் அவளுடைய மனதில் உண்டான பெருஞ்சீற்றம் அவளது இருதயத்தையும், தேகத்தையும், அவனையும், அந்த மாளிகையையும் இரண்டாகப் பிளந்தெறிந்து விடக்கூடிய உரத்தோடு பொங்கியெழுந்தது. உருட்டி விழித்து ஒரே பார்வையால் அவனை எரித்துச் சாம்பலாக்கித் தான் சாம்பசிவத்தின் புதல்வி யென்பதைக் காட்ட எண்ணினாள். அவன் உபயோகித்த கன்ன கடூரமான சொற்களைக் காட்டினும், பெருந்தேவியம்மாளும், சாமாவையரும் தன்னை விற்றுவிட்டார்கள் என்னும் சங்கதியே பெருத்த வியப்பையும், திகைப்பையும் உண்டாக்கியது. அவள் பைத்தியங்கொள்ளும் நிலைமையை அடைந்தாள். என்றாலும், அபலையான தான், அன்னியன் வீட்டில் அவனுடைய வலுவை அறியாமல் தேகபலத்தினால் மாத்திரம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தல் தவறென மதித்தாள். மேலும், என்ன நடக்கிற தென்று அறிய நினைத்து தனது கோபத்தை ஒரு சிறிது அடக்கிக்கொண்டாள். தன் கணவனையும் தன் குடும்பத் தெய்வமான ஸ்ரீநிவாசப் பெருமாளையும் நினைத்து மனதிற்குள் ஸ்தோத்திரம் செய்தாள். இனித் தன் கணவனுக்கும் தனக்கும் உறவு ஒழிந்தது நிச்சயமென்று மதித்தாள். அந்தப் பிறப்பில் தான் கணவனுடன் வாழ்க்கை செய்தது அத்துடன் அற்றுப்போய் விட்டது நிச்சயமென்று எண்ணினாள். எப்பாடு பட்டாயினும் தன் உயிரினும் அரிய கற்பை மாத்திரம் காத்து அவ்விடத்தை விடுத்து வெளியிற் போய்க் கிணற்றில் வீழ்ந்து உயிர் துறந்துவிடத் தீர்மானித்தாள். அவனிடம் முதலில் நயமான சொற்களைக் கூறி அவன் மனதை மாற்ற நினைத்து, “ஐயா! நீர் படிப்பையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் பெருமைப் படுத்துவதிலிருந்தே, நீரும் படித்த புத்திமான் என்று தோன்றுகிறது. நான் அன்னிய புருஷனுடைய மனைவி. நானென்ன உப்பா புளியா? என்னை விற்கவும் வாங்கவும் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்னை விற்க என்னுடைய புருஷனுக்குக் கூட அதிகாரமில்லையே! அப்படி இருக்க, நீர் வஞ்சகமாக என்னைக் கொணர்வதும், என்னால் சந்தோஷ மடைய நினைப்பதும் ஒழுங்கல்ல. நீர் நல்ல ஐசுவரிய வந்தனாய்த் தோன்றுகிறீர். உங்களுடைய ஜாதியில் புருஷர் பல பெண்களை உலகம் அறிய மணக்கலாம். என்னைப் பார்க்கிலும் எவ்வளவோ அழகான பெண்கள் அகப்படுவார்கள். அவர்களை மணந்து உம்முடைய பொருளாக்கிக் கொண்டால் உமது இச்சைப் படி அவர்கள் நடப்பார்கள். கல்வி, வீணை முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தல் அரிய காரியமல்ல. பணத்தைச் செலவிட்டால், இரண்டு மூன்று வருஷங்களில் அவற்றைக் கற்றுக் கொடுத்துவிடலாம். பிறகு நிரந்தரமாய் நீர் சுகப்படலாம். இந்த அற்பக் காரியத்திற்காகப் பிறன்மனைவியை வஞ்சகமாய்க் கொணர்ந்து சிறைச்சாலைக்குப் போகும் குற்றம் செய்யலாமா? இது புத்திசாலித்தனம் ஆகுமா? இப்போதும் உமக்கு மனைவிமார் இருக்கலாம். அவர்கள் இருக்க வேண்டிய இடமல்லவா இது? போனது போகட்டும். நீர் சிறுவயதின் அறியாமையால் செய்த இந்தக் காரியத்தை நான் மன்னித்து விடுகிறேன். இதைப்பற்றி நான் வேறு எவரிடத்திலும் சொல்லமாட்டேன்; நிச்சயம். தயவு செய்து என்னை உடனே வெளியில் அனுப்பிவிடும். உலகத்தில் எல்லாப் பொருளிலும் பெண்களே மலிவான பொருள். மற்ற பொருட்களைப் பணம் கொடுத்தே கொள்ளவேண்டும். பெண்களைப் பணம் கொடாமலும் பெறலாம். பெண்களைக் கொள்வதற்காகப் பணமும் பெறலாம் ஆகையால், நீர் உலகறியப் பெண்களை மணந்து கொள்ளலாம். அதில் விருப்பம் இல்லையாயின், வேசையரைத் தேடி வைத்துக் கொள்ளலாம். அவர்களும் உம்மீது ஆசை காட்டுவார்கள். நான் அன்னிய புருஷனுடைய மனைவி. சொந்தக் கணவனையன்றி மற்றவரை நான் விஷமென வெறுப்பவள். என்னிடம் நீர் ஆசையையும், அன்பையும், இன்பத்தையும் பெற நினைத்தல், நெருப்பினிடம் குளிர்ச்சியை எதிர்பார்ப்பதைப் போன்றது தான். உம்முடைய நினைவு என்னிடம் ஒரு நாளும் பலியாது. என்னை அனுப்பிவிடும். உமக்குப் புண்ணியமுண்டு” என்று நயமும் பயமும் கலந்து மொழிந்தாள்.

நைனா முகம்மது புன்னகை செய்து, “உன்னைக் கொஞ்சும் கிளிப்பிள்ளை யென்றாலும் தகும். நீ கோபித்துக் கடிந்து கொள்வதும் காதிற்கு இனிமையாய் இருக்கிறது. நான் எத்தனையோ பெண்களைப் பார்த்தாய்விட்டது. எல்லோரும் முதலில் இப்படித்தான் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் எப்படி மாறினார்கள் தெரியுமா? நான் அவர்களை விட்டு ஒரு நிமிஷம் பிரிவதாயினும் அப்போதே அவர்கள் உயிரை விட்டுவிடுவார்கள். அத்தகைய கண்மணிகளாயினர். அப்படியே நீயும் செய்யப்போகிறாய். பெண்களென்றால் இப்படித்தான் முதலில் பிணங்கவேண்டும் போலிருக்கிறது. எனக்கு உன்மீது ஆழ்ந்த காதல் இருக்கின்றதா என்று பார்த்தது போதும். நான் அல்லா ஹுத்தாலா மீது சத்தியம் செய்கிறேன். இனி நீயே என் உயிர். நீயே என் நாயகி. நீயே என் செல்வம். நீயே நான் தொழும் ஆண்டவன். இந்த உடல் அழிந்தாலும் நான் உன்னையன்றி வேறு பெண்களைக் கண்ணால் பார்ப்பதில்லை; உன் மீது எனக்குள்ள ஆசையை நான் எப்படி விரித்துச் சொல்லப்போகிறேன்! நாம் நூறு வருஷம், ஆயிரம் வருஷம், கோடி வருஷம், இந்த உலகம் அழியும் வரையிலும், ஒன்றாய்க் கூடியிருந்து இன்பம் அநுபவித்தாலும் அது தெவிட்டுமோ? என் ஆசை குறையுமோ? நான் இறந்தாலும் “மேனகா” என்றால் என் பிணம் எழுந்து உட்காரும், என் உடம்பு மண்ணோடு மண்ணாக மாறினும், மேனகா வருகிறாள் என்றால், அவளுடைய பாதம் நோகுமோ என்று அந்த மண் நெகிழ்ந்து தாமரை இதழின் மென்மையைத் தரும்” என்றான்.

மேனகா:- பாத்திரமறிந்து பிச்சையிடவேண்டுமையா; இவ்விடத்தில் உதவியின்றி அகப்பட்டுக்கொண்டேன் ஆகையால், உம்மை நான் ஒரு மனிதனாய் மதித்து மரியாதை செய்து மறுமொழி தருகிறேன். இத்தகைய அடாத காரியத்தைச் செய்த நீர், எனக்கு உதவி கிடைக்கும் வேறிடத்தில் இருந்தீரானால் உம்மை நான் மனிதனாகவே மதித்திரேன். கேவலம் நாயிலும் கடையாய் மதித்து தக்க மரியாதை செய்தனுப்பி யிருப்பேன். அவ்வாறு உம்மை அவமதிக்கும் என்னிடம் நீர் ஆசை கொள்வதனால் பயனென்ன! உலகத்தில் என்னுடைய கணவன் ஒருவனே என் கண்ணிற்குப் புருஷனன்றி மற்றவர் அழகில்லாதவர், குணமில்லாதவர், ஆண்மை யில்லாதவர், ஒன்றுமற்ற பதர்கள். உம்மைக் கொடிய பகைவனாக மதித்து வெறுக்கும் என்னை வெளியில் அனுப்புதலே உமது கெளரவத்துக்கு அழகன்றி, என்னை நீர் இனி கண்ணெடுத்துப் பார்ப்பதும் பேடித்தனம்.

நைனா:- (புன்னகை செய்து) என் ஆசை நாயகி, யல்லவா நீ! நீ எவ்வளவு கோபித்தாலும் எனக்கு உன் மீது கோபம் உண்டாகும் என்று சிறிதும் நினைக்காதே. ஒரு நிமிஷத்தில் நீ என்னுடைய உயிரையும், மனதையும், ஆசையையும் கொள்ளை கொண்டுவிட்டாய். உன் புருஷன் உன்னை எவ்வளவு வைது அடித்துச் சுட்டுத் துன்புறுத்தினாலும் நீ அவனையே விரும்புகிறாயே. அப்படி நீ என்னை இழிவாய்ப் பேசுவதும், கடிந்து வெறுப்பதும் எனக்கு இன்பத்தைத் தருகின்றனவன்றி துன்பமாகத் தோன்றவில்லை. வீணில் பிடிவாதம் செய்யாதே; நீ எவ்வளவு தந்திரமாகப் பேசினாலும், அல்லது வெறுத்துப் பேசினாலும் நான் உன்னை விடப்போகிறதில்லை. என் படுக்கைக்கு அருகில் வந்த பெண்மயிலை நான் விடு வேனாயின் என்னைக் காட்டிலும் பதர் எவனும் இருக்க மாட்டான். நீ எப்படியும் என்னுடைய ஆலிங்கனத்திற்கு வந்தே தீர வேண்டும். அதை நீ வெறுப்போடு செய்வதைவிட விருப்போடு செய்வதே உனக்கும் நன்மையானது; எனக்கும் நன்மையானது. உங்களுக்கு ஒரே புருஷன் மீதுதான் விருப்பம் என்பதென்ன? எங்களிடம் வெறுப்பென்ன? அந்த ஆசை என் மீதும் உண்டாகும் என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதே. மாற்றமில்லாத தங்கமல்லவா நீ! இவ்வளவு பாடுபட்டுக் கொணர்ந்த உன்னை விட்டுவிட என் மனம் சகிக்குமா? இன்றைக்கு நான் உனக்கருகிலும் வருவதில்லை. நீ ஏதாயினும் ஆகாரம் செய்துவிட்டு சுகமாய்ப் படுத்துக்கொள். இரண்டொரு நாளில் நீயே என்னை விரும்புவாய்.

மேனகா:- (கோபத்தோடு) உமக்கேன் அவ்வளவு வீண் பிரயாசை இருப்பதை மாற்றவும் இல்லாததை உண்டாக் கவும் உம்மால் ஆகுமா? நாயின் வால் ஏன் கோணலாய் இருக்கிறதென்று நீர் கேட்க முடியுமா? அல்லது அதை நிமிர்க்க உம்மால் ஆகுமா ? மனிதன் சோற்றில் கல்லிருக்கிறதென்று அதை நீக்கிவிட்டு ஏராளமாகப் போர் போராய் அகப்படுகிறதென்று வைக்கோலைத் தின்பதுண்டா? என் புருஷன் என்னைக் கொடுமையாய் நடத்துகிறார். நீர்கொள்ளை கொள்ளையாய் ஆசை வைக்கிறீர். அதனால் என்னுடைய உயிருக்குயிரான நாதனை நான் விலக்க முடியுமா? அது ஒரு நாளும் பலிக்கக் கூடிய காரியமல்ல . நீர் என்னை இப்படி வருத்துதல் சரியல்ல; விட்டுவிடும். உம்முடைய கோஷா மனைவியை வேறு ஒருவன் அபகரித்துப்போய்த் தனக்கு வைப்பாட்டியாயிருக்க வற்புறுத்தினால் அது உமக்கு எப்படி இருக்கும்? இது ஒழுங்கல்ல, வேண்டாம்; விட்டு விடும். இதுகாறும் நீர் உம்முடைய மனைவியிடத்தில் அநுபவிக்காத எவ்விதமான புதிய சுகத்தை நீர் அயலான் மனைவியிடம் அடையப் போகிறீர்? இந்த வீணான பைத்தியத்தை விடும்.

நைனா:- (புன்சிரிப்போடு) நீ வக்கீலின் பெண்டாட்டி யல்லவா! வக்கீல்கள் இரண்டு கட்சியிலும் பேசுவார்களே. நீ இது வரையில் உன் புருவுன் கட்சியைத் தாக்கிப்பேசினாயே. இப்போது என் கட்சியைக் கொஞ்சம் பேசு. நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் ரூபாய் பீஸ் (கூலி) தருகிறேன். நான் உன் புருஷன் கட்சியைப் பேசுகிறேன். நீ என்னிடம் வந்துவிட்டபடியால் உன் புருஷன் பெண்சாதி இல்லாமையால் வருந்துவான். உனக்குப் பதிலாக என்னுடைய மனைவியை அனுப்பி விடுகிறேன். கவலைப்படாதே. நீ இங்கே இருந்துவிடு; எவ்வளவோ படித்த நீ உங்கள் புராணத்தை படிக்கவில்லையா! முன் காலத்தில் திரெளபதி ஐந்து புருஷரை மணந்து திருப்தி அடையாமல் ஆறாவது புருஷன் வேண்டும் என்று ஆசைப்பட்டாளே. அவளை பதி விரதைகளில் ஒருத்தியாகத் தானே நீங்கள் நினைக்கிறீர்கள். என்னைத் தவிர நீ இன்னம் நான்கு புருஷர் வரையில் அடையலாம். அதற்கு அப்புறமே நீ பதிவிரதத்தை இழந்தவளாவாய்; அதுவரையில் நீ பதிவிரதைதான். கவலைப்படாதே. உன்னுடைய கணவன் அறியவே நீ இதைச் செய்யலாம். கோபிக்காதே. நான் அருகில் வந்து உபசாரம் செய்யவில்லை என்று வருத்தம் போலிருக்கிறது! அப்படி நான் கெளரதை பாராட்டுகிறவன் அன்று; இதோ வருகிறேன்; நான் உனக்கு இன்று முதல் சேவகன். இதோ வந்து விட்டேன். என்ன செய்ய வேண்டும் சொல்; முத்தங்கொடுக்கட்டுமா? உன் கணவன் கொடுக்கும் முத்தத்தைப் போல இருந்தால் வைத்துக்கொள். கசப்பா இருந்தால் அதைத் திருப்பிக் கொடுத்து விடு” என்று மகிழ்ச்சியை அன்றிக் கோபத்தைச் சிறிதும் காட்டாமல் வேடிக்கையாகப் பேசிய வண்ணம் எழுந்து அவளைப் பலாத்காரம் செய்யும் எண்ணத்துடன் காமவிகாரங்கொண்டவனாய் அவளை நோக்கி நடந்தான். அவனது நோக்கத்தைக் கண்ட மேனகாவின் உடம்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கிடுகிடென்று ஆடியது. உடம்பெல்லாம் வியர்த்தது. உரோமம் சிலிர்த்தது. மயிர்க்கா லெல்லாம் நெருப்பாக எரிந்தது. கடைசியான விபத்துக் காலம் நெருங்கிவிட்டதாக நினைத்தாள். அந்தத் துர்த்தனது கையில் அகப்படாமல் எப்படித் தப்புவதென்பதை அறியாமல் கலங்கினாள். அவன் தனக்கு அருகில் வருமுன் தனது உயிரைப் போக்கிக் கொள்ள வழியிருந்தால், அந்நேரம் அவள் பிணமாய் விழுந்திருப்பாள். ஆனால், என்ன செய்தாள்? பெண்டுகளின் ஆயுதமாகிய கூக்குரல் செய்தலைத் தொடங்கினாள். “ஐயோ! ஐயோ! இந்த இடத்தில் யாருமில்லையா! இந்த அக்கிரமத்தைத் தடுப்பார் இல்லையா! ஐயோ! ஐயோ! வாருங்கள் வாருங்கள், கொலை விழுகிறது” என்று பெரும் கூச்சலிட்டவளாய் பதைபதைத்து அப்பால் நகர்ந்தாள். நைனா முகம்மது அலட்சியமாக நகைத்து, “இந்த இடம் பெட்டியைப் போல அமைக்கப்பட்டது. நீ எவ்வளவு கூச்சலிட்டாலும், ஒசை வெளியில் கேட்காது. ஏன் வீண்பாடு படுகிறாய்? குயிலோசையைப் போல இருக்கும் உன் குரலால் பாடி எனக்கு இன்பம் கொடுப்பதை விட்டு ஏன் குரலை இப்படி விகாரப்படுத்திக் கொள்கிறாய்! பேசாமல் அப்புறம் திரும்பி நில்; உனக்குத் தெரியாமல் நான் பின்னால் வந்து கட்டிக் கொள்கிறேன்” என்று கூறிய வண்ணம், கட்டிலுக்கு அப்பால் இருந்த மேனகாவை நோக்கி வேகமாய் நடந்தான். அவள் பெரிதும் சிற்றமும் ஆத்திரமும் கொண்டு அவனை வைதுகொண்டே கட்டிலைச்சுற்றிவரத் தொடங்கினாள். “ஆண் பிள்ளையாய்ப் பிறந்து, எவனும் இப்படிக் கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை ஒன்றும் இல்லாமலிருக்க மாட்டான். எல்லாம் துறந்த மிருகம்! அருகில் வா! ஒரு கை பார்க்கலாம். நான் உதவியற்ற பெண்ணென்று நினைத் தாயோ! நாவைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை விட்டாலும் விடுவேனன்றி, என் உணர்வு இருக்கும்வரையில் இந்த உடம்பு உன் வசப்படாது” என்று பலவாறு தூற்றி பெளரஷம் கூறி மேனகா முன்னால் ஒட, மரக்காயனும் விரைவாகப் பெட்டைக் கோழியைத் துரத்தும் சேவலைப்போலக் கட்டிலைச் சுற்றிச் சுற்றிப் பிரதட்சணம் செய்யத் தொடங்கினான். மேனகா அவன் சிறுவனென்று அலட்சியமாக மதித்து, அவனை அவ்வாறே அன்றிரவு முற்றிலும் ஏமாற்றி, அவனுடைய விருப்பம் நிறைவேறா விதம் செய்ய நினைத்தாள். உண்மையில் அவன் ஆண் சிங்கம் என்பதை அவள் அறியவில்லை; அவளுடைய அற்புதமான அழகில் ஈடுபட்டு நைந்திளகி அவளிடம் கோபத்தையுங் காட்ட மனமற்றவனாய் அவன் அது காறும் அன்பான மொழிகளையே சொல்லி வந்தான். அவள் நெடு நேரமாக ஒரே பிடிவாதமாய்ப் பேசித் தன்னை அலட்சியம் செய்ததைக் காண, கடைசியில் அவனுடைய பொறுமையும் விலகியது. ஒரு பெண்பிள்ளைக்கு இவ்வளவு பிடிவாதமா! இதோ ஒரு நிமிஷத்தில் இவளை என் வசப்படுத்துகிறேன் என்று தனக்குள் நினைத்து உறுதி செய்துகொண்டு, “மேனகா! உன் மனது கோணக்கூடாதென்று நான் இதுவரையில் தாட்சணியம் பார்த்தேன். உன்னைப் பிடிக்கமுடியாதென்று நினைத்தாயா? இதோ பார்; அடுத்த நிமிஷம் உன் மார்பும் என் மார்பும் ஒன்றாய் சேரப்போகின்றன” என்றான். குறுக்கு வழியாய்க் கட்டிலின் மீதேறி அவளைப் பிடிக்கப் பாய்ந்தான். அவள் அப்போதே தன்னுயிர் போய்விட்டதாக மதித்தாள். கடைசி முயற்சியாக கட்டிலைவிட்டு, அதற்கப்பால் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த மேஜைக்கப்புறம் விரைந்தோடினாள். அப்போது தற்செயலாய் அவளுடைய கூரிய விழிகள் மேஜையின் மீதிருந்த பொருட்களை நோக்கின. மாம்பழங்களை நறுக்குவதற்காக அதில் ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டாள். அது ஒன்றரைச் சாணளவு நீண்டு, பளப்பளப்பாய்க் கூர்மையாய்க் காணப்பட்டது; கண்ணிமைப் பொழுதில் அவள் அந்தக் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு சுவரை அடைந்து, முதுகைச் சுவரில் சார்த்தி, அவனிருந்த பக்கம் திரும்பி நின்று தனக்குள், “ஈசுவரனில்லாமலா பொழுது விடிகிறது! நல்ல சமயத்தில் இந்தக் கத்தியைக் கொடுத்தான். அவன் அனாதை ரட்சகனல்லவா. மனிதருக்கு அவனுடைய பாதுகாப்பே காப்பன்றி, அரசனும் சட்டமும் இந்த அக்கிரமத்தைத் தடுத்தல் கூடுமோ? ஒருகாலுமே இல்லை” என்று நினைத்து, “ஐயா! நீர் இனி வரலாம். நல்ல சமயத்தில் இந்தக் கத்தி எனக்கு உதவிசெய்ய வந்தது. நீர் என்னைத் தீண்டுமுன் இந்தக்கத்தியின் முழுப்பாகமும், என் மார்பில் புதைந்துபோம். பிறகு என் பிணத்தை நீர் உமது இச்சைப்படி செய்யும்” என்றாள்; கத்தியின் பிடியை வலதுகையில் இறுகப்பிடித்துத் தனது மார்பிற்கு நேராக விரைந்து உயர்த்திக் கையின் முழு நீளத்தையும் நீட்டினாள். அந்த விபரீதச் சம்பவத்தைக் கண்ட நைனா முகம்மது பேரச்சம் கொண்டவனாய் உடனே நயமான உரத்த குரலில் கூவி, “வேண்டாம், அப்படிச் செய்யாதே, நிறுத்து, நான் வெளியில் போய்விடுகிறேன். இனி உன்னைத் துன்புறுத்துவதில்லை. உன்னை உடனே கொண்டு போய் உன் வீட்டில் விட்டுவிடுகிறேன். கவலைப்படாதே” என்ற வண்ணம் அவளை விடுத்து நெடுந்துரத்திற்கு அப்பாற்போய் நின்று, “பெண்மணி! நான் உன்னை சாதாரணப் பெண்ணாக மதித்து, அறிவில்லாதவனாய் இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துக் கொள். உன்னைப் பதிவிரதைகளுக்கெல்லாம் ரத்தினமாக மதிக்கவேண்டும். இப்படிப்பட்ட மனைவியை அடைந்த வனுடைய பாக்கியமே பாக்கியம்! என் பணம்போனாலும் போகிறது. நீ சுகமாய் உன் கணவரிடம் போய்ச் சேர். இதோ சாமாவையரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி ஒரு கதவைத் திறந்து கொண்டு அப்பாற் போய்க் கதவைத் திரும்பவும் மூடித் தாளிட்டுச் சென்றான். மேனகாவுக்கு அப்போதே மூச்சு ஒழுங்காய் வரத் தொடங்கியது. பேயாடி ஒய்ந்து நிற்பவளைப்போல அவள் அப்படியே சுவரின் மீது சாய்ந்தாள். அவன் கடைசியாய்க் சொன்ன சொல்லை நிறைவேற்றுவானோ அன்றி அது வஞ்சகமோ வென்று ஐயமுற்றாள். தனக்கு திரும்பவும் என்ன ஆபத்து நேருமோவென்று நினைத்து மேலும் எச்சரிக் கையாகவே இருக்க வேண்டுமென்று உறுதிகொண்டாள். உயிரையும் விலக்க நினைத்தவள் அந்தக் கத்தியைத் தன் கையிலிருந்து விலக்குவாளா? கத்தி முதலியவை கொடிய ஆயுதங்களென்று இழிவாய் மதிக்கப்படுகின்றவை அன்றோ அது அப்போது அகப்படாதிருந்தால், அவளுடைய கதி எப்படி முடிந்திருக்கும் பதிவிரதா சிரோ மணியான அம்மடமங்கையின் கற்போ, அல்லது உயிரோ, இல்லது இரண்டுமோ அழிந்திருக்கும் என்பது நிச்சயம். இதனால், ஒரு துஷ்டனை அடக்கும் பொருட்டே கடவுள் இன்னொரு பெரியதுஷ்டனைப் படைக்கிறார் என்பது நன்கு விளங்கியது. கடவுளின் படைப்பு வெளித் தோற்றத்திற்கு அரைகுறையாய்க் காணப்படினும், அது எவ்விதக் குற்றமற்ற அற்புதக் களஞ்சியமாய் இருப்பதை நினைத்த மேனகா கடவுளின் பெருமையைக் கொண்டாடினாள். என்றாலும், அவ்வளவு நுட்பமான அறிவைக் கொண்ட அப்பெண்மணி சாமாவையரை அவன் அனுப்புவான் என்று அப்போதும் மடமையால் நினைத்தவளாய் ஒவ்வொரு கதவிலும் தன் விழியை வைத்து நோக்கிய வண்ணம் இருந்தாள். அந்தக் கொடிய காமதுரனது வீட்டைவிட்டு வெளியில் எப்போது போவோம் என்று பெரிதும் ஆவல் கொண்டு வதைபட்டாள். சாமாவையர் முகத்தில் இனி விழிப்பதும் பாவ மென்று நினைத்தாள். சாமாவையர், என்னும் பெயர் அவளது காதிற் படும் படும்போதெல்லாம், நெருப்பு அவள் உடம்பைச் சுடுதலை போலத் தோன்றியது. அந்த மகம்மதியனிலும் அவனே மகா பாவமென மதித்தாள். சாமாவையன் மாமவையனாவனோ என்று வியப்புற்றாள். என்றாலும் முள்ளை முள்ளால் விலக்குதல் போலச் சிறிய வஞ்சகன் வீட்டிலிருந்து வெளிப்படப் பெரிய வஞ்சகனது உதவியைத் தேடுதல் தவறல்ல என்று நினைத்தாள். அவ்வாறு நெடுநேரம் சென்றது. காத்துக்காத்துக் கண்கள் பூத்தன. மகம்மதியனும் வரவில்லை. மாமாவையனும் வரவில்லை. எதிர்ச்சுவரில் மாட்டப் பட்டிருந்த கடியாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டாய் இருந்தது. அவ்வளவு நேரமாயிற்றா வென்று வியப்புற்றாள். கடியாரம் போகாமல் நிற்கிறதோ வென்று அதை உற்று நோக்கினாள். அதில் ‘டிக்டக் டிக்டக்’ கென்ற ஒசை வந்து கொண்டிருந்தது. மகம்மதியன் சொன்னது பொய்யென்று நினைத்தாள். அவன் தன்னை வெளியில் அனுப்பமாட்டான் என்றும், திரும்பவும் அவன் வந்து தன்னை வற்புறுத்துவான் என்றும் அவள் உறுதியாக நினைத்தாள். இனி தான் அவன் முகத்தில் விழித்தால் தன்னிலும் கேவலமான இழிபரத்தை ஒருத்தியும் இருக்க மாடடாள் என்று மதித்தாள். அன்றிரவு கழியுமுன் தான் அவ்விடத்தைவிட்டு வெளியிற் போய்விட வேண்டும் இல்லையாயின், அந்த வாளால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விட்டுவிட வேண்டும்; என்று ஒரே முடிவாகத் தீர்மானம் செய்து கொண்டாள். வெளியிற் செல்வதற்கு ஏதாயினும் வழி இருக்கிறதோவென்று அவ்வறை முழுதையும் ஆராயத் தொடங்கினாள். கதவுகளை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். யாவும் வெளியில் தாளிடப்பட்டோ பூட்டப்பட்டோ இருந்தன. வெளியிற் செல்வதற்கு எத்தகைய வழியும் காணப்படவில்லை. என்ன செய்வாள் அப்பேதை? ஓரிடத்தில் கற்சிலை போல நின்றாள். தன் நினைவையும் விழிகளையும் ஒரு நிலையில் நிறுத்தி எண்ணமிடலானாள். “நான் வெளியில் போனால், எவ்விடத்திற்குப் போகிறது? நான் கணவனிடம் போகாவிடில் எனக்கு வெளியில் எவ்வித அலுவலுமில்லை. கணவனிடம் போய்ச் சேர்ந்தால், நிகழ்ந்தவற்றை மறையாமல் அவரிடம் சொல்லவேண்டும். ஸ்திரீகளுடைய கற்பின் விஷயத்தில் புருஷருக்குப் பொறாமையும், சந்தேகமும் அதிகம் ஆகையால் அவர் ஏற்றுக்கொள்வாரோ அன்றி தூற்றி விலக்குவாரோ? நான் என் இருதயத்தை அறுத்து உள்ளிருக்கும் உண்மையைக் காட்டினாலும் அது ஜெகஜால வித்தையோ வென்று அவர் சந்தேகிப்பார். நான் ஒரு சிறிதும் மாசற்றவளாய் இருப்பினும், அவர் என் மீது தம் மனதிற்குள்ளாயினும் வெறுப்பையும் ஐயத்தையும் கொள்வார். அந்தரங்கமான அன்பும் மனமார்ந்த தொடர்பும் இல்லாமற்போனபின், வேண்டா வெறுப்பாய் வாழ்க்கை செய்வதைவிட, நான் உயிரை விடுதலே மேலானது. பாவியாகிய என்னால் பெற்றோருக்கும் பழிப்பு. கணவனுக்கும் தலைகுனிவோடு ஒயாச் சந்தேகம்; ஒழியா வேதனை. எனக்கும் மானக்கேடு. மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே என்றனர் நம் மூத்தோர். இத்தனை தீமைக்கும் நான் உயிரை விடுதலே மருந்து. நான் காணாமல் போனதைப்பற்றி அவர்கள் இப்போது துன்புறுதல் நிச்சயம். நான் திரும்பாமல் போய்விட்டால், அவர்களுடைய துன்பம் ஒரே துன்பமாய்ச் சிறிது காலத்தில் ஒழிந்துபோம்; என்னுடைய களங்கத்தோடு நான் திரும்பிச்சென்றால், அவர்கள் யாவருக்கும் அது மீளா வேதனையாய் முடியும்” என்று பலவாறு யோசனை செய்தாள். தான் மகம்மதியன் வீட்டை விட்டு வெளியிற் போனாலும் இறக்க வேண்டியதே முடிவு. வெளியிற் செல்ல வழியில்லாதலின் அந்தக் காமதுர மகம்மதியன் முகத்தில் இன்னொரு தரம் விழிப்பதிலும் பெரிதும் துணிவைக் கொண்டு அந்தக் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் விடுதலே தீர்மானமாய்க் கொண்டாள். நிர்ம்பவும் ஆண்மை வாய்ந்த மகா வீரனைப்போல மனோ உறுதியும் அஞ்சா நெஞ்சமும் விரக்தியும் கொண்டாள். பளபளப்பாய் மின்னிய வாளைக் கையிலெடுத்தாள். போரில் தோற்ற சுத்த வீரன் தனது பகைவன் கையில் அகப்பட்டு மானம் இழக்காமை கருதி இறக்க நினைத்துப் பகைவரின் குண்டு வரும்போது அதற்கெதிரில் தனது மார்பை விரித்து நின்று அதை ஏற்பவன் எத்தகைய மனோதிடத்தைக் கொள்வானோ அத்தகைய துணிவைக் கொண்டாள். இது விந்தையான செயலோ ? உண்மையைக் காக்கும் பொருட்டு அரசியல், செல்வம், நாடு முதலிய வற்றையும் நாயகன், புதல்வன் முதலியோரையும் போக்கிய மங்கையர்க்கரசியான சந்திரமதி, இறுதியில் அதன் பொருட்டு தமது சிரத்தை நீட்டினாரன்றோ. அத்தகைய உத்தம மகளிர் திருவவதரிக்க உதவிய புனிதவதியான நம் பூமகளின் வயிறு மலடாய் போனதோ? அல்லது இனி போகுமோ? ஒருக்காலும் இல்லை. எத்தனையோ சீதைகள், சாவித்திரிகள், சந்திரமதிகள், மண்டோதரிகள், தமயந்திகள், கண்ணகியர் தினந்தினம் இப்பூமாதேவின் மணி வயிற்றில் தோன்றிக் குப்பையிற் பூத்த தாமரை மலரைப்போல ஏழ்மையிலும் தாழ்மையிலும் இருந்து தம் புகழ் வெளிப்படாவகையில் அத் திருவயிற்றிற்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களின் சரிதத்தைப் பாடுவதற்கு வான்மீகிகளும், கம்பர்களும், புகழேந்திகளும் போதிய அளவில் எங்கிருந்து கிடைக்கப் போகின்றனர்! பதிவிரதா தருமத்திற்கே இருப்பிடமான இப்புண்ணிய உருவும், கற்பின் திரளுமாய்த் தோன்றும். இருபத்தொரு தலைமுறையில் அவர்களுடைய முன்னோர் இயற்றிய மகா பாத்திரங்களெல்லாம் தொலைய அவர்கள் புனிதம் எய்துவர் என்பது முக்காலும் திண்ணம்.

அத்தகைய புகழை நமது நாட்டிற்கு உதவும் பெண் மணிகளில் ஒருத்தியான மேனகா என்ன செய்தாள்? வாளைக் கையில் எடுத்தாள். வெட்டுவோன் வெட்டப்படுவோன் என்னும் இருவரின் காரியத்தையும் ஒருங்கே அவளே செய்வதான அரிதினும் அரிய வீரச்செயலை முடிக்க ஆயத்தமானாள். கத்தியை நோக்கினாள். அதனிடம் ஒருவகை ஆதரவும் நன்றியறிவும் அவள் மனதிற் சுரந்தன. “ஆ! என் அருமைக் கத்தியே! என் ஆருயிர் நண்பனே! நீ நல்ல சமயத்தில் செய்த பேருதவியை நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறப்பேனா? என் உயிர்த்தனமாகிய கற்பைக் கொள்ளை கொள்ளவந்த கொடிய கள்வனை வெருட்டி ஒடிய மகா உபகாரி யல்லவா நீ! இந்த ஆபத்தில் என்னை காக்க என் கணவனில்லாததை அறிந்து, திடீரென்று தோன்றி உதவி புரிந்த உத்தமனாகிய உன்னை நான் கணவனிலும் மேலாக மதித்துக் கடைசிக் காலத்தில் என் மார்பை நீ தீண்ட விடுகிறேன். நீ என் மார்பின் வெளிப்புறத்தை மாத்திரம் தீண்டுதல் போதாது. அதன் உட்புறத்திலும் நுழைந்து அதற்குள்ளிருக்கும் என் இருத யத்தையும் இரண்டாகப் பிளந்து அதற்குள் நிறைந்திருப்பது என்னவென்று பார். அங்கு நிறைந்திருக்கும் என் கணவன் உருவை மாத்திரம் ஒரு சிறிதும் வருத்தாதே, வாளே! ஏன் தயங்குகிறாய்? உன் மானத்தைக் காப்பாற்றியது, உன்னைக் கொல்வதற்குத்தானோ என்று கேட்கிறர்யோ? அன்றி, “என் இருதயத்தைப் பிளந்து விட்டால், பிறகு என் கணவன் வடிவத்திற்கு இருப்பிடம் இல்லாமல் போகிறதே என்று நினைக்கிறாயோ?” என்று பலவாறு கத்தியோடு மொழிந்தாள். அப்போது அவளுடைய கணவனது வடிவம் அகக் கண்ணிற்குத் தோன்றியது, நெஞ்சு இளகி நைந்தது. இருப்பினும் எஃகினும் வலியதாய்த் தோன்றிய அவளுடைய மனதின் உறுதி தளர் வடைந்து, அவன் மீது வைத்த காதலும் வாஞ்சையும் திரும்பின. கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்வாள்? “ஆ! என் பிராணநாதா! என் மனதிற்குகந்த மனோகர வடிவே! இணையற்ற இன்பம் பாய்ந்த என் மன்மத துரையே! உங்களிடம் இந்த ஐந்து நாட்களாய் நான் அநுபவித்த சுவர்க்கபோகமாகிய பேரானந்த சுகம் ஈசுவரனுக்குக் கூடச் சம்மதி இல்லை போலிருக்கிறது. நான் இந்த உயிரெடுத்து இவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு இந்த ஐந்து நாட்களே நல்ல நாட்கள். இவைகளே பயன் பட்ட சுபதினங்கள். மற்ற நாட்கள் யாவும் சாம்பலில் வார்த்த நெய்போல, அவமாக்கப்பட்ட நாட்கள் தாம். இனி நான் உங்களை எங்கு காணப்போகிறேன்? சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போன்ற உங்களுடைய சொல்லமுதை இனி என் செவி எப்போது அள்ளிப் பருகப்போகிறது? அதனால் என் உடம்பு இனி ஒரு தரமாயினும் பூரித்துப் புளகாங்கிதம் அடையப் போகிறதோ? இந்த சுகம் நீடித்து நிற்கும் என்றல்லவோ பாவியாகிய நான் நினைத்தேன்! தெய்வம் என் வாயில் நன்றாக மண்ணைப் போட்டுவிட்டதே! நான் தஞ்சையிலிருந்த ஒரு வருஷத்தில் இறந்து போயிருக்கக் கூடாதா? அப்போது உங்களுக்காயின் வருத்தமில்லாமற் போயிருக்குமே. இப்போது உங்களுக்கு நீடித்த விசனம் வைத்துவிட்டேன். ஆனால், எனக்கு உண்டான இம்மானக் கேட்டை நீங்கள் கேட்டு மீளாவேதனைக் கடலில் ஆழ்தலினும், சாதாரணமாக என்னை இழப்பதன் துயரம் நீடித்து நில்லாமல் விரைவில் தணிந்து போம். தஞ்சையிலேயே உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த நான் உங்களை விடுத்துச் செல்ல மனமற்றுத் தவித்தேனே! இப்போது உங்களிடம் வந்து எவருக்கும் கிடைக்காத பெரும்பேறான உங்களுடைய அந்தரங்கமான வாத்சல்யத்தையும், உண்மையான காதலையும் பெற்றபின் உங்களை விடுத்துப் பிரிந்து போவதற்கு என் மனம் இணங்குமோ? என் நாதா! என் நிதியே! என் உலகமே! என் பாக்கியமே! என் சுகமே! என் உயிரே! என்! தெய்வமே! உம்மை விடுத்துப் பிரிய மனம் வருமோ? நான் வாளால் என் கழுத்தை அறுத்துக் கொண்டாலும் உங்களிடம் சுகம்பெற்ற இவ்வுடம்பை விட்டு என் உயிர்போகுமோ? என்கட்டை தான் வேகுமோ? என் மனந்தான் சாகுமோ? என் செல்வமே ! உங்களை விட்டு எப்படி பிரிவேன்? உங்களுடைய பொருளாகிய கற்பைப் பறிகொடுக்க மனமற்று என் உயிரையே கொடுக்க இணங்கிவிட்டேன். இனி சாகாமல் தப்புவது எப்படி? நாம் இருவரும் ஒன்றாயிருக்கக் கொடுத்து வைத்தது இவ்வளவே. நீங்கள் என் பொருட்டு வருந்தாமல் செளக்கியமாக இனிவேறொரு மங்கையை மணந்து இன்புற்று வாழுங்கள். அதைப்பற்றி நான் வருந்தவில்லை துரையே! போகிறேன். போகிறேன். பட்சம் மறக்க வேண்டாம். அன்பைத்துறக்க வேண்டாம். நான் பெண்டீர் யாவரிலும் ஏழை. கணவன் சுகத்தை நீடித்து அடையப் பாக்கியம் பெறாத பரம ஏழை. முன் ஜென்மத்தில் எத்தனையோ பிழைகளைச் செய்து ஈசுவரனுடைய கோபத்திற்குப் பாத்திரமான மகா பாதகி! நான் என் மடமையாலும் பெண்மையாலும், உங்கள் விஷயத்திலும் எத்தனையோ பிழைகளைச் செய்திருப்பபேன்.

“கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழை நினையாப் பிழையு நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையுந் தொழாப்பிழையு
மெல்லாப்பிழையும் பொறுத்தருள்வா யென்றனாருயிரே”

உங்களுடைய புதிய நட்பில் புதிய மனைவாழ்க்கையில் வருஷத்திற்கு ஒருமுறையேனும் என்னை நினைப்பீர்களா? பாவியாகிய என் பொருட்டு தங்கள் மனம் ஒரு நொடி வருந்துமாயின், நான் கடைத்தேறி விடுவேன். உங்கள் கண் என் பொருட்டு ஒரு துளியளவு கண்ணிர் விடுமாயின் என் ஜென்மம் சாபல்யமாய் விடும். உத்தரவு பெற்றுக்கொள்கிறேன். என் உயிர் நிலையே போய் வருகிறேன். என் தெவிட்டாத தெள்ளமுதே! போய்வருகிறேன். தேவரீர் பொற்பாத கமலங்களில் ஆயிரம் முறை தெண்டம் சமர்ப்பித்தேன். தேவரீர் பாதமே எனக்குத் துணை. தேவரீரது ஆசீர்வாதம் நீங்காமல் என்மீது இருப்பதாக” என்றாள். முத்துமாலை கீழே விழுதலைப்போலக் கண்ணிர் வழிந்து பார்வையை மறைத்தது. அப்படியே நைந்து இளகி உருகி அன்புக் குவியலாய் ஆசைமயமாய்க் கண்களை மூடி ஒரு நிலையிலிருந்து, தன் கணவன் வடிவத்தை அகக்கண்ணிற்கொண்டு அதில் ஈடுபட்டு நெக்கு நெக்குருகிச் சலனமற்ற தெவிட்டாத ஆநந்தவாரியில் தோய்ந்து அசைவின்றி ஒய்ந்து உலகத்தை மறந்து மனோமெய்களை உணராமல் நின்று அசைந்தாடினாள். அவ்வாறு கால்நாழிகை நேரம் சென்றது. அந்த சமாதி நிலை சிறிது சிறியதாய் விலகத் தொடங்கியது. தானிருந்த அறையின் நினைவும், தன் விபத்தின் நினைவும், தான் செய்யவேண்டு வதான காரியத்தின் நினைவும் மனதில் தலைகாட்ட ஆரம்பித்தன. திரும்பவும் தனது கையிலிருந்த வாளை நோக்கினாள். அவளுடைய உரத்தையும் துணிவையும் கொண்டாள். “கத்தியே! வா இப்படி; நான் இந்த உலகத்திலிருந்தது போதும், களங்கத்தைப் பெற்ற நான் இனி அதிக நேரம் இவ்வுலகில் தாமதித்தால், என் கணவனது ஆன்மாவிற்கு அது சகிக்க வொண்ணாக் காட்சியாகும். ஆகையால், உன் வேலையைச் செய்” என்றாள். தான் பெண் என்பதை மறந்தாள். உயிரைத் துரும்பாக மதிக்கும் வீராதி வீரனைப்போல கத்தியைக் கையில் எடுத்தாள். தந்தத் தகட்டைப் போல மின்னி கண்களைப் பறித்து மனதை மயக்கி அழகே வடிவமாய்த் தோன்றிய அவளது மார்பில் அந்த வாள் வலுவாக நுழையும்படி அதற்கு விசையூட்ட நினைத்து தனது கையை நன்றாக நீட்டி இலக்குப் பார்த்தாள். அதற்குள் அவளுக்கு மிகவும் அருகிலிருந்த ஒரு கதவு படீரென்று திறந்தது; மின்னல் தோன்றுதலைப் போலத் திடீரென்று ஒருவருடைய கரம் தோன்றி அந்தக் கத்தியை வெடுக்கென்று அவள் கரத்தினின்று பிடுங்கிவிட்டது. “ஐயோ! மகம்மதியன் கத்தியைப் பிடுங்கிவிட்டானே! இனி என்ன செய்வேன்?” என்று நினைத்துப் பேரச்சம் கொண்டு பதறிக் கீழே வீழ்ந்து மூர்ச்சித்தாள்.

❊ ❊ ❊ ❊ ❊

சற்றுநேரத்திற்கு முன்னர் அவளைத் தனியே விடுத்துப் போன நைனா முகம்மது மரக்காயன் நினைத்தவற்றையும் செய்தவற்றையும் நாம் நன்றாறிய வேண்டுமன்றோ? சாமாவையரின் மூலமாய் அவளை அவளுடைய வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுவதாக அவன் சொன்னது முற்றிலும் வஞ்சகம்; அந்த அழகிய யெளவன மடமாதைத் தனது பெருத்த செல்வமே போயினும், தன் உயிரே அழியினும் தான் அனுப்பக்கூடாதென உறுதி செய்து கொண்டான்; அவளை விடுத்து வெளியிற் சென்றவன் வேறொரு அறைக்குள் நுழைந்து ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்தான்; கோபத்தினாலும் அவமானத்தினாலும் அவனுடைய தேகம் துடிதுடித்து வியர்த்தது; அவனுடைய மோகாவேசம் உச்சநிலையிலிருந்தது;

“துஞ்சா தயர்வோ டுயிர் சோர் தரவென்
நஞ்சார் விழிவே லெறிநன் னுதலாம்

பஞ்சே ரடியா யிழைபா லுறையு
நெஞ்சே யெனை நீயு நினைந்திலையோ?”

என்ன, அவனுடைய மனதும் உயிரும் அறைக்குள்ளிருந்த பொற்பாவையிடத்தில் இருந்தனவன்றி, அவனது வெற்றுடம்பு மாத்திரம் அவனுடன் இருந்தது; வேறு துணையற்று, முற்றிலும் தன் வயத்திலிருந்த கேவலம் மெல்லியவளான ஒரு பெண் தன்னை அன்று ஏமாற்றியதை நினைத்து நெடுமூச்செறிந்தான்; நல்ல தருணத்தில் கத்தியொன்று குறுக்கிட்டு தனது எண்ணத்தில் மண்ணைப் போட்டதை நினைத்து மனமாழ் கினான். எப்படியாயினும் அன்றிரவு கழியுமுன்னம் அவளைத் தன் வயப்படுத்த உறுதி கொண்டான். அவ்வளவு பாடுபட்ட அப்பெண், அன்றிரவு முழுதும் விழித்திருக்கமாட்டா ளென்றும், அவள் நெடுநேரம் விழித்திருக்க முயலினும், இரண்டு மூன்று மணி நேரத்திலாயினும் சோர்வும், துயிலும் அவளை மேற்கொள்ளுமென்றும், அப்போது அவளுக்கருகில் இருக்கும் கதவைத்திறந்து கொண்டு மெல்ல உட்புறம் சென்று அவள்கரத்திலிருந்த கத்தியை பிடுங்கி விட்டால், அவளுடைய செருக்கு ஒழிந்துபோமென்றும், தனது எண்ணம் அப்போது நிறைவேறிப்போ மென்றும் நினைத்து மனப்பால் குடித்தான். உரலில் அகப்பட்ட பொருள் உலக்கைக்குத் தப்புதலுண்டோ? எவரும் கண்டறியக்கூடாத தன் சயன அறையில் வந்து அகப்பட்டுள்ள பெண் இனி தப்பிப்போவதுண்டோ! ஒருநாளும் இல்லையென்று நினைத்தான். அவளுடைய அற்புத வடிவமும் இளமையும் கட்டழகும் காந்தியும் இனிய சொற்களும் அவன் மதியை மயக்கி மையலை மூட்டி அவனை உலைத்து வதைத்து வாட்டின. தனக்குள் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமான முள்ள செல்வமெல்லாம் அவள் பொருட்டு அழிந்தாலும் கவலையில்லை. அத்துடன் தனது உயிர் போவதாயினும் இலட்சியமில்லை. அப்பெண்மணியைத் தனது கைக்கொண்டு தீண்டினால் போதும் என்று பலவாறு நினைத்து மதோன்மத்தனாய்க் காமாதுரனாய் ஜுரநோய் கொண்டு இருக்கை கொள்ளா மெய்யினனாய்த் தத்தளித்து உட்கார்ந்தும் நின்றும் நடந்தும் அயர்ந்தும் சிறிது நேரம் வருந்திப் போக்கினான்.

இரையை விழுங்கின மலைப்பாம்பைப் போல நகரமாட்டாமலிருந்த பொழுதும், கால்களில் புண் பெற்றதோ வென்ன மெல்ல நகர்ந்தது. மணி 11,12,1,2-ஆயிற்று. மெல்ல எழுந்தான். ஒசையின்றித் தனது காலைப் பெயர்த்து வைத்து நடந்து மேனகா கடைசியாக கத்தியோடிருந்த இடத்திற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு கதவை அடைந்தான். அதில் காணப்பட்ட சிறிய இடுக்கில் கண்ணை வைத்து உட்புறம் கூர்ந்து நோக்கினான். கத்தியோடு கடைசியாய் நின்றவிடத்தில் அவள் காணப்படவில்லை. காலடி யோசையேனும் வேறு ஒசையேனும் உண்டாகவில்லை. அந்த இடுக்கின் வழியாக அறையின் மற்றப் பாகத்தை நோக்கக்கூடவில்லை. அவள் எங்கிருக்கிறாளோ, விழித்திருக்கிறாளோ துயிலுகிறாளோ வென்று ஐயமுற்றான். அங்கிருந்து தப்பிப்போக எத்தகைய வழியும் இல்லாமையால் அவள் எப்படியும் உட்புறத்திலேதான் இருத்தல் வேண்டுமென உறுதிகொண்டான். மெல்ல ஒசையின்றி வெளித்தாளை நீக்கிக் கதவைத் திறந்தான். அவனுடைய தேகம் பதறி நடுங்கியது. உட்புறத்தில் தனது சிரத்தை நீட்டினான். கண்ணிமைக்கும் பொழுதில் அவனுடைய விழிகள் அந்த அறை முழுதையும் ஆராய்ந்து, இரத்தின பிம்பம்போலத் தோன்றிய பெண்மணியைக் கண்டுவிட்டன. அவள் எங்கிருந்தாள்? தரையிலிருந்தாளா நாற்காலி சோபாக்களில் இருந்தாளா? இல்லை. அது நம்பக்கூடாத விந்தையா யிருந்தமையால் அவன் பெரிதும் வியப்பையும் திகைப்பையும் அடைந்தான். சற்றுமுன் தன்னைக் கொடிய நாகமென நினைத்து விலகிய பெண்மணி அப்போது அவளது குணத்திற்கு மாறான காரியத்தைச் செய்திருந்த தைக்கான, அவன் தனது கண்களை நம்பாமல் அவற்றைக் கசக்கி விட்டுத் திரும்பவும் நோக்கினான். அது பொய்யோ மெய்யோ காமநோய் கொண்ட தன் மனத்தின் மகவோ என்று திகைத்தான். ஒரே ஜோதியாய்க் காணப்பட்ட மின்சாரவிளக்கின் ஒளியில் பளபளவென்ன மின்னிய அவனுடைய கட்டிலின் மீது, வெண்மேகங்களினிடையில் தவழும் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல, அந்த வடிவழகி படுத்திருந்தாள். இன்னமும் அவளோடு போராடவேண்டுமோ வென்னப் பெரிதும் அச்சங்கொண்டு வந்த தனக்குக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டதைப்போல தன் விருப்பம் எளிதில் நிறைவேறியிருத்தலைக்கண்டு பேருவகை கொண்டான். பொற் பதுமையோ வென்னத் தோன்றிய மேனியும், உயர்ந்த பட்டுப் புடவையும், வைர ஆபரணங்களும் ஒன்று கூடி மின்சார வொளியில் கண்கொள்ளாச் சேவையாய் ஜ்வலித்தன. அது தெய்வலோகக் காட்சிபோலவும் அவள் கந்தருவ ஸ்திரீயைப் போலவும் தோன்றக் கண்ட யெளவனப் புருஷன் காதல் வெறியும் கட்டிலடங்கா மோகாவேசமும் கொண்டான். ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவளை அணைக்க நினைத்தான். அவள் ஒருகால் தன்னைக் கத்தியால் குத்திக்கொண்டு இறந்து கிடக்கிறாளோ வென்று உற்று நோக்கினான். உதிரமும் சவத்தோற்றமும் காணப்படவில்லை. இதழ்களை மூடிச் சாய்ந்திருக்கும் தாமரை மலரைப்போல அவள்துவண்டு கிடந்த தோற்றம் அவளது துயிலைச் சுட்டியது. அவள் தனது முகத்தை அப்புறம் திருப்பி மெத்தையில் மறைத்திருந்தாள். “ஆகா! நாணத்தினால் அல்லவா முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாள். கடலின் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; பெண்களின் மனத்தைக் கண்டு பிடிக்க எவராலும் ஆகாது; இவளும் என்மீது விருப்பத்தைக் கொண்டே என்னிடம் இவ்வளவு நேரம் போராடிப் பகட்டெல்லாம் காட்டியிருக்கிறாள். ஆண் பிள்ளைகளே எளிதில் ஏமாறும் மூடர்கள். என் மனதைச் சோதிப்பதற்கல்லவோ இவள் இந்த நாடகம் நடித்தாள். நான் தன்னிடம் உண்மை அன்பைக் கொண்டிருந்தேனோ, நெடுங்காலம் தன்னை வைத்து ஆள்வேனோ, அன்றி மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளென சிறிது காலத்தில் விலக்கி விடுவேனோ வென்று ஆராய்ந்திருக்கிறாள். ஆகா! என் கண்மணி! உன்னால் நான் எத்தகைய பேரின்ப சுகத்தை அடையப் போகிறேன்! உன்னை நான் விடுவேனா? என் உயிர் உடலிலிருந்து பிரியும்போதே நீயும் என்னிடமிருந்து பிரிவாய், கண்மணியை இமைகள் காப்பதைப்போல உன்னை நான் என் ஆசை யென்னும் கோட்டைக்குள் வைத்து அனுதினமும் பாதுகாப்பேன் அஞ்சாதே” என்றான். மெல்ல அடிமேலடி வைத்துக் கட்டிலிற்கு அருகில் நெருங்கினான். அவனுடைய காமத்தீ மூளையையும், தேகத்தையும் பற்றி எரித்தது. அடக்க வொண்ணாத தவிப்பையும் ஆத்திரத்தையும் கொண்டான். அழகுத் திரளாகிய அந்த அமிர்த சஞ்சீவி கிடந்த தடாகத்தைத் தான் அடுத்த நிமிஷத்தில் அடைந்து தனது ஐம்புலன்களும் மனதும் ஆன்மாவும் களிகொள்ள, அந்த இனிமைப்பிழம்பை அள்ளிப் பருகுவேன் என்னும் உறுதியும் ஆவலும் கொண்டு கட்டிலை அடைந்தான். அப்பெண்மணி தனது புடவையால் கால்கள், கைகள், தலையின் உரோமம் முதலியவற்றை மூடிப் படுத்திருந்தது அதிகரித்த நாணத்தைக் காட்டியது. அவள் உடம்பில் விலாப்பக்கத்தில் சிறிது பாகமும், கன்னத்தில் சிறிது பாகமுமே அவனுடைய கண்ணிற்பட்டன. அண்டைப் பார்வைக்கு அப் பெண்கள் நாயகத்தின் தேகத்தில் அழகு வழிந்தது; ஒரு சிறிது மாசுமற்ற தந்தப்பதுமை போலவும் வாழையின் மெல்லிய வெண்குருத்தைப் போலவும் அவளுடைய மேனி தோன்றியது. கைகால்கள் அச்சில் கடைந்தெடுக்கப் பட்டவைப்போலக் கரணைகரணையாக் காணப்பட்டன. பேரதிசயமாய்த் தோன்றிய அந்த அற்புதக் காட்சியில் அவன் மனது ஈடுபட்டுத் தோய்ந்தது. மெல்ல அருகில் உட்கார்ந்து கையை அவள் மீது வைத்தான். தன்னைக் குத்தும் எண்ணத்துடன் அவள் கத்தியை இன்னம் வைத்திருக்கிறாளோ வென்று கைகளை சோதனை செய்தான். கத்தி காணப்படவில்லை. அவனது பெருங்கவலை யொழிந்தது. துணிவுண்டாயிற்று. தன் முழு ஆத்திரத்தையும் மோகத்தைங்காட்டி அவளைக் கட்டி அணைத்து அவளுடைய சுந்தரவதனத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்ப முயல, அவள் நன்றாய்க் குப்புறப்படுத்துத் தன் முகத்தை அழுத்தமாக மெத்தையில் மறைத்துக் கொண்டாள். “ஆகா! நான் எத்தனையோ உயர்தர மங்கையரின் நாணத்தைக் கண்டிருக்கிறேன்! இவளைப்போன்ற பெண் மானை நான் கண்டதே இல்லை! தொடுவதற்குள் வருதலைவிட இவ்வாறு நாணுதலும் வசீகரமாய்த்தான் இருக்கிறது. இதுவே பத்மினி ஜாதிப்பொண்களின் இயல்பென நான் கொக்கோக சாஸ்திரத்தில் படித்திருக்கிறேன். ஆகா! நானே அதிர்ஷ்டசாலி! என்ன பாக்கியம்! ஆண்டவன் பெரியவன் அல்லா ஹாத் தல்லாவின் அருளே அருள். எவ்வளவு அருமையான இந்த நிதிக்குவியலை எனக்கு அளித்தான்! எவர்க்கும் கிடைக்காத இந்த ஆநந்தபோகத்தை எனக்களிக்கும் ஆண்டவனை நான் எப்படித் துதிப்பேன்? இவள் தூங்காமல் என் வரவை ஆவலோடு எதிர்பார்த்தன்றோ வருந்திக் கிடக்கிறாள். நான் என் மடமையால் இந்நேரம் வராமல் உட்கார்ந்திருந்து விட்டேன்; என் கண்ணே என் இன்பக் களஞ்சியமே! மேனகா! என்னிடம் இன்னமும் வெட்கமா? இப்படித் திரும்பு; ரோஜாப்பூவையும் வெல்லும் உன் முகத்தை எனக்குக் காட்டக் கூடாதா? என் ஆசைக் கண்ணாட்டி; இப்படித் திரும்பு; சோதனை செய்தது போதும். நான் இனி உன் அடிமை; இது சத்தியம். என்னுடைய பொருளையும், என்னையும் உன் பாதத்தடியில் வைத்து விட்டேன். உன் விருப்பப்படி பொருளைப் பயன்படுத்தி என்னை ஏவலாம்; இனி நீயே என் தெய்வம்! நீயே இந்த மாளிகையின் சீமாட்டி. கேவலம் கழுதையிலும் தாழ்ந்தவளான என் மனைவி உன் காலில் ஒட்டிய தூசிக்கும் நிகராக மாட்டாள். அந்த மூட மிருகத்தை நான் இனிமேல் கனவிலும் நினைப்பதில்லை. இது சத்தியம். அவளை நாளைக்கே அவளுடைய தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். அல்லது விஷத்தைக் கொடுத்து அவளைக் கொன்று விடுகிறேன். புருஷனுடைய மனதிற்கிசைந்த விதம் அவனுக்கு சுகம் கொடுத்து அவனை இன்புறுத்த அந்த மிருகத்துக்குத் தெரியாது. நான் வேறு ஸ்திரீயோடு பேசினால் ஆத்திரமும் பொறாமையும் எரிச்சிலும் உண்டாய்விடும். தானும் சுகங் கொடாள்; பிறரிடம் பெறுவதையும் தடுப்பாள். அவளிடம், நான் வேறு பெண் முகத்தையே பார்த்தறியாதவன் என்று ஆயிரம் சத்தியம் செய்து தினம் ஒவ்வொரு புதிய மங்கையை அநுபவித்துவிட்டேன். நீ யாவரினும் மேம்பட்டவளாக இருப்பதால், இனி நீயே எனக்கு நிரந்தரமான பட்டமகிஷி. நான் இனி உன்னை யன்றி பிறர் முகத்தைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. என் மனைவியையும் நாளைக்கே ஒழித்து விடுகிறேன். உன்னுடைய காந்தியல்லவோ காந்தி! நூர்ஜஹான் (ஜெகஜ்ஜோதி) என்று என் பெண்ஜாதிக்கு வைத்திருக்கும் பெயர் உனக்கல்லவோ உண்மையில் பொருந்துகிறது! அந்த எருமைமாட்டை இனி நான் பார்ப்பதே இல்லையென்று அல்லா அறியச் சொல்லுகிறேன்” என்று தனது மனைவியை இகழ்ந்தும், மேனகாவைத் துதித்தும், நினைத்த விதம் பிதற்றி அப்பெண்மணியின் அருகில் தலையணையில் சாய்ந்து முரட்டாட்டமாய் அவளை இறுகக் கட்டி அவளுடைய முகத்தைத் தனது பக்கம் திருப்பி விரைவாகத் தனது ஆத்திரத்தை யெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அவள் முகத்தில் முத்தமிட்டான். அதனால் விலக்க முடியாத இன்பத்தைக் கொண்ட அம் மங்கை அருவருத்த புன்னகை காட்டி நெடுமூச் செறிந்து தனது கண்களை நன்றாகத் திறந்தாள். அத்தனையும் பொறித் தட்டுதலைப் போல ஒரு நொடியில் நிகழ்ந்தன. பசுத்தோலில் மறைந்திருந்த புலியைப் போல, அம் முகம் அவனுடைய மனைவி நூர்ஜஹானின் முகமாய் போய்விட்டது. அவள் மேனகா வன்று; அவனுடைய மனைவி நூர்ஜஹானே அவ்வாறு படுத்திருந்தவள். தின் பண்டம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் கையைவிட, அதிலிருந்து நாகப் பாம்பு புஸ்ஸென்று படமெடுத்துக் கிளம்புதல் எவ்வாறிருக்கும்? அதைப் போல அந்தக் காட்சி தோன்றியது. அவனுடைய வஞ்சகத்தை இன்னொரு வஞ்சகம் வென்றுவிட்டது. அவள் அங்கு எப்படி வந்தாள், மேனகா எப்படி போனாள், மேனகாவின் புடவை, இரவிக்கை, ஆபரணங்கள் முதலியவை அவள்மீது எப்படி வந்தன என்று பல விதமான சந்தேகங் கொண்டு திகைத்தான். இடியோசையைக் கேட்ட நாகம் போலப் பேரச்சம் கொண்டு பேச்சு மூச்சற்று அப்படியே மயங்கித் தலையணையில் சாய்ந்தான். தண்ணீரில் ஆழ்த்தப்பட்ட கொள்ளிக் கட்டையைப் போல, அவனுடம்பைக் கொளுத்திய காமத்தீ தணிந்து இருந்த இடம் தெரியாமல் பறந்தது. அது காறும் தன் மனைவியிடம் தனது விபசாரங்களை மறைத்துத்தான் பரம யோக்கிய னென்று நடித்து அவளை வஞ்சித்தது அப்போது வெட்ட வெளிச்ச மாயிற்று. அவளை நினைத்த விதம் தூற்றியவை யாவும் அவனுடைய நினைவிற்கு வர அவன் நடுநடுங்கி மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்தான்.


❊ ❊ ❊ ❊ ❊

"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/014-022&oldid=1252752" இலிருந்து மீள்விக்கப்பட்டது