மேனகா 1/015-022
11-வது அதிகாரம்
மேனகாவின் கள்ளப் புருஷன்
“அக்காள்! அடி அக்காள்!” என்று பொங்கி யெழுந்த ஆத்திரத்தோடு பெருந்தேவியைக் கூவி அழைத்தவனாய்க் கையிலேந்திய தந்தியுடன் உட்புறம் நுழைந்த வராகசாமி நேராக சமையலறைக்குள் சென்று, “அவள் தஞ்சாவூரில் இல்லையாமே!” என்று பெரிதும் வியப்பும் திகைப்பும் தோன்றக் கூறினான்; அவனுடைய உடம்பு படபடப்பையும், சொற்கள் பதைபதைப்பையும், முகம் அகத்தின் துன்பத்தையும், கண்கள் புண்படும் மனத்தையும் யாவும் பெருத்த ஆவலையும் ஆத்திரத்தையும் காட்டின. பாம்பைக் கண்டு நாம் அஞ்சி நடுங்குகிறோம். பாம்போ நம்மைக் கண்டு பயந்தோடுகிறது. வராகசாமி தனது சகோதரிமாரிடம் அச்சத்தைக் காட்டியதைப் போல், குற்றமுள்ள மனத்தினரான அவ்விரு பெண்டிரும் அவ்விடத்தில் உள்ளூறப் பெரும் பயத்தைக் கொண்டிருந்தனர் என்றாலும், அதை வெளியிற் காட்டாமல் மிகவும் பாடுபட்டு மறைத்து, முகத்தில் அருவருப்பைக்காட்டி ஏதோ அலுவலைச் செய்தவராய் அவனைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். மேனகாவுக்கு அவன் கொடுத்த செல்லத்தினால் அவர்கள் பெரிதும் தாழ்வும் அவமானமும் அடைந்தவரைப் போலத் தோன்றினர்.
பெருந்தேவி மாத்திரம் மெல்ல முணுமுணுத்த குரலில், “தஞ்சாவூரில் இல்லாவிட்டால் இன்னொரு திருவாரூரில் இருக்கிறாள். வீட்டை விட்டு வெளிப்பட்ட கழுதை எந்தக் குப்பை மேட்டில் கிடந்தா லென்ன? அவளுடைய அப்பன் அவளை எங்கே கொண்டு போனானோ? யாருக்குத் தெரியும்? அந்தப் பீடையின் பேச்சை இனி என் காதில் போடாதே யப்பா; நீயாச்சு உன் மாமனாராச்சு; எப்படியாவது கட்டிக் கொண்டாடுங்கள்” என்று மிக்க நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தாட்சண்யம் பாராமலும் கூறினாள்.
வராகசாமியின் மனோநிலைமை எப்படி இருந்தது? எல்லாம் குழப்ப மென்று ஒரே சொல்லால் குறிப்பதன்றி, விவரமாய் எதைச் சொல்வது? எதை விடுப்பது? உலகமே தலை கீழாக மாறித் தாண்டவமாடுவதாயும், அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் சுழல்வதாயும், தானும் தன் வீட்டுடன், சகோதரிமார் சமேதராய், இறகின்றி ஆகாயத்தில் கிளம்பிக் கரணம் போடுவது போலத் தோன்றியது. தான் செய்வது இன்ன தென்பதும், தனது அக்காள் சொன்னது இன்ன தென்பதும் தோன்றப் பெறானாய்த் தனது தெள்ளிய உணர்வை இழந்து, ஆத்திரமே வடிவாய்த்துயரமே நிறைவாய் நிற்க, அவன் வாயில் மாத்திரம் அவனறியாமல் சொற்கள்தாமாய் வந்தன. முகத்தில் கண்கள், நாசி, உதடு, புருவம், கன்னம் முதலிய ஒவ்வொரிடத்திலும் குழப்பம் குழப்பம் குழப்பம் என்பதே பெருத்த எழுத்தில் எழுதப்பட்ட விளம்பரம் போலக் காணப்பட்டது. “என் மாமனார் பட்டணத்துக்கே வரவில்லையாமே?” என்றான். மழைத் தூறலைக் காற்றானது கலைப்பதைப்போல கோபமும் துக்கமும் பொங்கி மோதி அவனுடைய அஞ்சிய சொல்லைத் தடுத்தன. மலைபோல இருந்த மனையாட்டி எப்படி மறைந்துபோனாள் என்பதை அவளுடன் கூடஇருந்தவர் உள்ளபடி சொல்ல மாட்டாமல் தாறுமாறாய்ப் பேசியதைக் காண, அவனது தேகமும் கட்டிலடங்காமல் துடித்தன.
புதுமையாய்க் காணப்பட்ட அவனுடைய நிலைமையைக் கண்ட பெருந்தேவி உள்ளுற மருண்டு விட்டாள். எனினும், அதிர்ந்த சொல்லால் வாயடியடித்தே தப்பவேண்டு மென்று நினைத்து அவனைச் சிறிதும் சட்டை செய்யாத வனைப் போல இருந்தாள். முதல்தர வாய்பட்டியான பெருந்தேவியே விழிக்கும்போது கோமளத்தைப் பற்றிச் சொல்வது மிகையாகும். தண்ணீரில் மூழ்கும் நிலைமையில் இருப்பவன் வைக்கோலைப் பிடித்துக் கொள்வதைப்போல அவள், கரியேறிய தவலையொன்றைக் குப்புறத்தள்ளி, அது வாய்விட்டு ஒலமிடும்படி தேய்த்துத் திருவாழ்த்தான் கறுப்புநாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப்போல எத்தனை நாளைக்குத் தேய்த்தாலும் அது வெளுக்கும் என்னும் அச்சம் சிறிதும் இல்லாமல், ஆடம்பரம் செய்தவளாய்த் தனது முகத்தைச் சுளித்து, மூக்கை வளைத்து, உதட்டைப் பிதுக்கி, வாயால், “சூ” விட்டு “நன்றாயிருக்கிறது! ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். மாமனாராம் மாமனார்! இந்தமாதிரி ஆயிரம் மாமனாரையும் பெண்டாட்டியையும் சந்தையில் வாங்கலாம். வெளிக்கு மாத்திரம் பெரிய மனிதர்; உள்ளே பார்க்கப் போனால் அற்பபுத்தி, அவ்வளவும் ஊழல்; ஊரில் கழிக்கப்பட்ட பிணங்கள் நமக்கா வந்து வாய்க்க வேண்டும்; பெரிய வீடென்று பிச்சைக்குப் போனாலும், கரியை வழித்து முகத்தில் தடவினானாம் என்ற கதையாய் முடிந்தது” என்று கோமளம் தனது கழுத்தில் சுளுக்குண்டானாலும் கவலை யில்லையென்று நினைத்து அருவருப்போடு தனது கழுத்தை ஒரு திருப்புத் திருப்பினாள்.
ஆரம்ப நடுக்கத்திலிருந்து தேறித் துணிவடைந்த பெருந்தேவி, “என்னடா! முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறாய்? அவன் பெட்டி வண்டியில் வந்து வாசலில் இருந்தான். வெள்ளி வில்லை போட்டிருந்த அவனுடைய சேவகன் உள்ளே வந்து, ‘டிப்டி கலெக்டர் எசமான் வாசலில் இருக்கிறார்; மகளைக் கூப்பிடுகிறார்’ என்று சொன்னான் இவள் உடனே குடுகுடென்று ஓடினாள்; அப்படியிருக்க அவன் வரவில்லையென்று எந்த முண்டையடா உனக்குச் சொன்னவள்?” என்று தனது குரும்பைத் தலையைக் கம்பீரமாக உயர்த்தித் தாழ்த்தி குட்டைக் கைகளை நீட்டி மடக்கி இலங்கணி அவதாரம் காட்டி அதட்டிக் கூறினாள். அதைக் கண்டு ஒருவாறு அச்சம் கொண்ட வராகசாமி, “அவரே இதோ தந்தியனுப்பி யிருக்கிறார். வாசிக்கிறேன் கேள்:- ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லாவிடங்களிலும் நன்றாய்த் தேடிப் பார்க்கவும். போலீசிலும் பதிவு செய்யவும். நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு வருகிறேன். அவசரம். அசட்டையா யிருக்கவேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறுதந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஒய்வுமிராது; ஒரு வேலையிலும் துணிந்து மனது செல்லாது” என்று தந்தியைப் முற்றிலும் படித்துவிட்டான்.
அதைக் கேட்டுப் பெரிதும் ஆத்திரங்கொண்ட அக்காள், “நன்றாயிருந்தது நாயக்கரே நீர் வாலைக்குழைத்து ஊளையிட்டது என்றபடி இருக்கிறதே தந்தி! அவன் மகா யோக்கியன்; அவனுக்கு நீ தந்தியனுப்பினாயோ! அந்த நாறக்கூழுக்குத் தகுந்த அழுகல் மாங்காய்தான் நீ! அவன் நம்மைக் கொஞ்சமும் மதியாமல் தன்னுடைய அதிகாரத்தின் மமதையால் பெண்ணை அழைத்துக்கொண்டு போயிருக்கிறான்; நீ அவனுக்குத் தந்தி அனுப்பினாயோ? இப்படிச் செய்தவன் முகத்தில் எந்த மானங்கெட்டவனாயினும் விழிப்பானா? அல்லது அவனுக்குத்தான் எழுதுவானா? இந்த ஆறுநாளில் உன் புத்தி எப்படியாய்விட்டது! நீ எடுப்பார் கைக் குழந்தைதானே! எட்டும் இரண்டும் இவ்வளவென்பதை அறியாத ஒரு சிறுக்கி, பி.ஏ., பி.எல்., பரிட்சை கொடுத்தவனை, ஒருநாள் போட்ட சொக்குப்பொடியில் குரங்கைப் போல ஆட்டி வைப்பாளானால், அது யாருடைய மூடத்தனத்தைக் காட்டுகிறது! எங்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம்; கட்டின புருஷனிடமாவது மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகவேண்டுமென்று நினைத்தாளா! இப்படிச் செய்தவளை ஆண்மையுள்ள எந்தப் புருஷனாவது மானமில்லாமல் பெண்டாட்டியென்று சொல்லிக்கொள்வானா! உன்னிடம் அடங்கிக் கிடக்க வேண்டியவளுக்கே நீ இலட்சியமில்லாதபோது, அவளைப் பெற்றவனுக்கு நீ ஒரு பொருட்டா? நல்ல இளிச்சவாயன் (இளித்தவாயன்) என்று கண்டான். உன் தலையில் வழவழ வென்று மிளகாய் அறைத்து விட்டான்” என்று சம்பந்தாசம்பந்தமின்றிச் சொற்களையும், கைகளையும், உடம்பின் சதை மடிப்புகளையும் உலுக்கினாள்.
வராகசாமி சிறு வயதிலிருந்தே சகோதரிமாரிடம் ஒருவித அச்சத்தையும் மரியாதையும் கொண்டிருந்தவன். ஆதலின், அவர்களிடம் எதிர்வாதம் செய்தறியான். என்றாலும், கூர்மையான பகுத்தறிவைக் கொண்டவன். ஆதலின், அவர்கள் பொருத்தமற்ற சொற்களைச் சொல்லக் கேட்கும் போதெல்லாம் வெளிப்படையாய் மறுத்துக்கூறும் துணிவின்றித் தன் மனதில் அது தவறெனவே கொண்டு, போனாற் போகிற தென்று விட்டு விடுவான்.
மேனகாவின் மீது அவர்கள் அவன் மனதில் நெடுங் காலமாகப் பகைமையும் வெறுப்பையும் உண்டாக்கி வந்திருந்தனர். ஆயினும், அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும்படி செய்ய அவன் மனதை அவர்களும் சாமாவையரும் கலைத்து அவள் மீது உண்டாக்கிய ஆசை நிரந்தரமாய் அப்படியே அவன் மனதில் வேரூன்றி விட்டது. அவன் மனதை உழுது பண்படுத்தி கற்களை விலக்கி அவர்கள் நட்ட காதல் விதை முளைக்க, அதை அவ்வைந்து நாட்களில் மேனகா தனது ஆழ்ந்த வாத்சல்யமாகிய உரத்தைப் பெய்து, இரமணிய குணமாகிய நீரைப்பாய்ச்சி, இனிய ஒழுக்க மெனும் பாதுகாப்பினால் செடியாக்கி மரமாக்கி விட்டனள். அக்காதல் மரத்தில் ஆசையும், அன்பும், பட்சமும், இரக்கமும், தயையும் பூக்களாய்ப் பூத்தன. ஒவ்வொரு கொத்திலும் பழங்கள் வெளிப்படத் தவித்துக்கொண்டிருந்தன. ஆதலின், அவள் விஷயத்தில் அவன் மனதில் அசைக்கக்கூடாத நம்பிக்கையும் அந்தரங்கமான வாஞ்சையும் உண்டாயிருந்தன. அவள் தன்னுடைய அநுமதியின்றி தந்தையுடன் சென்றிராள் என்று உறுதியாக நினைத்தான். டிப்டி கலெக்டர் அனுப்பிய தந்தி உண்மையானது என்றும், அவர் அவளை அழைத்துப் போகவில்லை யென்றும், அவர் அவளை அழைத்துப் போயிருந்து பொய் சொல்வது அவருக்குக் கேட்டையன்றி நன்மையைத் தராது ஆகையால், அவர் அவ்விதம் சொல்ல வேண்டிய முகாந்தரமில்லையென்றும் நிச்சயமாக நினைத்தான். ஆனால், மேனகாவோ வேறு எவருடனும் தனியே போகிறவளன்று; அக்காளோ பொருத்தமில்லாத சொற்களை அழுத்தமாய்ச் சொல்லி அதட்டுகிறாள். மேனகா காணாமற்போன வகைதான் என்ன என்று பலவாறு நினைத்து மனக்குழப்பம் அடைந்து நின்றவனாய், “அவர் இந்த ஊருக்கே வரவில்லை யென்று சொல்லுகிறாரே! அதை நாம் எப்படி பொய்யென்று நினைக்கிறது? அவர் சாதாரண மனிதரல்ல. சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர். அவர் ரஜா வாங்கினாரா இல்லையா என்பதைப் பற்றி தஞ்சாவூரில் நம்முடைய சிநேகிதர் யாருக்காயினும் எழுதி உண்மையை ஒரு நிமிஷத்தில் அறிந்து விடலாமே. இந்தப் பொய் நிலைக்காதென்பது அவருக்குத்தெரியாதா? அவர் வந்திருக்கமாட்டாரென்றே தோன்றுகிறது” என்றான்.
அதைக்கேட்ட பெண்டீர் இருவரும், சண்டைபோடும் பொருட்டு முள்ளம்பன்றிகள் தமது உடம்பிலுள்ள முட்கள் இலிர்க்கப் பதறி நிற்பதைப்போல இருந்தனர். பெருந்தேவி, “ஓகோ! அவன் பொய் சொல்லாத அரிச்சந்திர மகா ராஜாவோ? அப்படியானால் நாங்கள் சொல்வது பொய்யோ? சரிதான் இப்படிப்பட்டவன் என்பதை அப்பாவி அறிந்து கொண்டுதானே அவனும் அவளும் இப்படிச் செய்து விட்டார்கள். திம்மாஜி பண்டிதரென்பது முகத்திலேயே தெரியவில்லையா? அவன் ரஜா வாங்கினானா இல்லையா வென்பதை நீ அறிந்துவிடமுடியுமோ? அவன் இரகசியமாக ரஜா வாங்க நினைத்தால் தஞ்சாவூர் முழுதிலும் தப்படித்து விட்டுத்தான் வாங்குவானோ? பெரிய கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் அனுப்பினால், அவனும் அதன் பேரிலேயே பதில் எழுதி அனுப்பிவிடுகிறான். இந்த மாதிரி அவன் உன்னுடைய கலியாணத்தில் ரஜா வாங்கினதை நீ மறந்தாலும் நான் மறப்பேனோ? அதெல்லாம் உன்னுடைய குற்றமல்ல. உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் மருந்தின் வேலையாக்கும் இது. அவர்கள் அந்தத் தேவடியா நாரியை இங்கே எதற்காக அனுப்பினார்கள்? மருந்தை உள்ளே செலுத்தத்தானே அனுப்பினார்கள். இனிமேல் உனக்கு அவர்கள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்கும். இஞ்சி தின்ற குரங்கின் முகத்தைப்போல உன் முகமே நிஜத்தைச் சொல்லுகிறதே! மருந்து பேஷான மருந்து! பாட்டியம்மாள் இலேசானவளா! மருமகள் பேத்தி எல்லோர்க்கும் தாய்க்கிழவி யல்லவா அவள்! பொறித் தட்டுவதைப்போல உன்னை ஒரு நிமிஷத்தில் அவளுடைய மாத்திரைக் கோலால் புது மனிதனாக்கி விட்டாளே! கிழவி சாகவும் மாட்டாள்; செத்தாலும் எமனையும் எத்தி விடுவாள்; பற்றி எரியும் நெருப்பையும் மயக்கி விடுவாளே!
கோமளம்:- ஏனடி அக்காள்! அவள் வந்த மறுநாளே நான் சொன்னேன்; அப்போது எருமை மாட்டைப்போலப் பேசாமலிருந்து விட்டு இப்போது,“பப்பட்டி பப்பட்டி” என்று அடித்துக் கொள்ளுகிறாயே! வராகசாமிக்கு நான் கொண்டு போன காப்பியை என் கையிலிருந்து அவள் பிடுங்கிக் கொண்டு போனாளென்று நான் உடனே சொன்னேனே நீ காதில் வாங்கினாயா? அதில் தானே மருந்தைப் போட்டாள். அப்போதே கையும் மெய்யுமாய்ப் பிடித்துக்கொண்டால் காரியம் இவ்வளவுக்கு வருமா? அவளுடைய ஜாலமெல்லாம் பலிக்குகமா? இப்போது படு; உனக்கு வேண்டும்.
பெருந்தேவி :- நானா அதை கவனிக்க வில்லை? நீ அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்! நான் நடந்ததை யெல்லாம் கவனித்தேன். அவள் காப்பியை உன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போனதும் தெரியும். படுக்கையறை யிலிருந்த தன்னுடைய டிரங்குப் பெட்டியைத் திறந்ததும் தெரியும். அதிலிருந்து ஏதோ மருந்தை யெடுத்துக் காப்பியில் போட்டதும் தெரியும். அப்போது புது மோகம் தலைக்கேறி யிருந்தது. நாம் சொன்னால் ஐயங்கார்வாளுக்குப் பொய்யாக இருக்கும். எப்படியாவது இரண்டு பேரும் ஒன்றாயிருந்து சுகப்படட்டும். நான் ஏன் அதைத் தடுக்கவேண்டு மென்று பேசாமலிருந்து விட்டேன்; இந்த மாதிரி அடிமடியில் அவள் கைபோட்டது இப்போது தானே தெரிகிறது.
கோமளம்:- இதுவரையில் வராகசாமி நமக்கெதிரில் அவளிடம் நெருங்கிப் பேசவும் கூச்சங்கொள்வான். இந்த ஐந்து நாளிலும் அவளை ஒரு நிமிஷங்கூட விடாமல் அவளுடைய புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அலைந்தானே சுய புத்தியோடு இருக்கிற ஒரு ஆண்பிள்ளை இப்படித்தானா பெட்டைமோகினி பிடித்தலைவான்? அவள் குளிக்கப் போனால் அங்கே இவன் அவளுடன் இளிக்க வந்துவிடுவான். புடவை உடுத்திக்கொள்ள அவள் மறைவிற்குப் போனால் நான் ஆண்பிள்ளை அல்லவென்று சொல்பவனைப்போல இவனும் அவ்விடத்தில் ஆஜர். மிட்டாயிக் கடையைக் கண்ட பட்டிக்காட்டான் என்பார்கள். அப்படி யல்லவா இவன் தேன் குடித்த நரி மாதிரி ஆய் விட்டான். இந்தத் தடவை எல்லாம் அதிசயமாகவே நடந்தது. முன்னேயிருந்த மேனகா தானே இவள் முன்காணாத எவ்விதப் புதுமையை இவன் இப்போது கண்டு விட்டான்? விதவிதமான சகோதரிகள் நாம் இருக்கிறோமே யென்கிற லஜ்ஜை இவனுக்கும் இல்லை, அவளுக்கும் இல்லாமற் போய்விட்டதே!
பெருந்தேவி:- சீமைச் சரக்கு சீனாம் பரத்துக் கற்கண்டுக் கட்டியது அது! தங்கத்தைக் கூட மாற்றுப் பார்ப்பதற்கு உறைப்பார்கள். இவள் அபரஞ்சித் தங்கத்திலும் உயர்வு; கீழே விடாமல் தலைமேலேயே வைத்திருந்தபடியாலே தான், நன்றாய் ஏமாற்றிவிட்டார்கள். நானும் பார்த்தேன்; புருஷனும் பெண்டாட்டியும் இப்படி மானங்கெட்டு அலைந்ததை நான் பார்த்ததே யில்லை. என்னவோ சின்ன வயசில் வேடிக்கை பார்க்கட்டுமே யென்று ஒரு நாள் வாய் தவறி, “நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு போடா” என்று சொல்லி விட்டேன். அதை ஒரே பிடியாய்ப் பிடித்துக்கொண்டானே! துரை துரைசானிகள் என்றே நினைத்துக் கொண்டு விட்டார்கள். கடற்கரைக்குப் போவதும், நாடகத்திற்குப் போவதும், குடும்ப ஸ்திரீகளுக்குத் தகுமா? இவன் தான் கூப்பிட்டால் அந்தக் கொழுப்பெடுத்த கிடாரிக்கு மானம் வெட்கம் ஒன்றும் இல்லாமலா போக வேண்டும்? இவர்கள் கடற்கரையில் செய்ததை எதிர்வீட்டு ஈசுவரி யம்மாள் நாட்டுப்பெண் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாள். எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல இருந்தது.
கடற்கரையில் இவர்களை எல்லோரும் பார்த்துப் புரளி செய்யும்படி ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வதாம்; முத்த மிடுவதாம். இந்தக் கலிகாலக் கூத்து உண்டா! அடித்தால் கூட அழத் தெரியாத வராகசாமியும் இப்படிச் செய்வானா என்று சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுப் போகிறார்களாம். எனக்கு உயிரே போய்விட்டது.
சிறிது நேரம் சம்பந்தமற்ற அவளுடைய கொடிய சொற்களைக் கேட்க மனமற்றவனாய் நின்ற வராகசாமி, “என்னடியக்காள்! காரியத்தை விட்டு என்னமோ பேசுகிறாயே! அவர் அழைத்துப்போயிருந்தால் அவள் அங்கே இல்லை யென்று எதற்காகச் சொல்லவேண்டும். பெண்ணை மறைத்து வைத்துக்கொள்ள முடியுமா! அப்படி மறைத்து வைத்துக் கொள்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? எவராயினும் தாமே தமது கண்களை அவித்துக் கொள் வார்களா? எவ்விதம் செய்பவரா யிருந்தால் ரூபா.3000 செலவழித்து ஒரு வாரத்திற்கு முன் அவளை இங்கே அழைத்து வருவாரா? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அவர்களுடைய பணத்துக்குத் தான் செலவு செய்ய வழியில்லையா?” என்றான்.
பெரு: இது தெரியவில்லையா உனக்கு? ஆதாய மில்லாத கோமுட்டி ஆற்றோடு போவானா? அல்லது சோழியன் குடுமி சும்மா ஆடுமா? வேறு எதற்காக வந்தான்? உனக்கு சொக்குப்பொடி போடத்தான். அவர்கள் மூடர் களென்று பார்த்தாயோ? நாமே மூடர்களானோம்; உன்னை மயக்கி கைவசமாக்கித் தனிமையில் அழைத்துக் கொண்டால் உன்னையும், பெண்ணையும் எங்காவது தனிக் குடித்தனம் செய்ய அமர்த்தினால் பிறகு தாம் அடித்தது ஆட்டமா யிருக்கலாம் அல்லவா! இந்த இரண்டு மொட்டை முண்டைகளுடைய இடைஞ்சல் இல்லாமல் பெண் தன்னரசாய் வாழலாம் அல்லவா! அதுக்காகத்தான் மருந்து போட அவளை அனுப்பினார்கள். வந்த காரியம் சுலபத்தில் கை கூடிவிட்டது. நீயும் தாசானுதாசனாய் விட்டாய்! திரும்பிப் போய்விட்டாள்; பெண்டாட்டியாத்தே பெரியாத்தே என்று நீ அவளைத் தேடிக்கொண்டு தஞ்சாவூருக்கு ஓடி வருவாய் என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும். நீ அங்கு வந்தால் அவர்கள் சொற்படி தானே செய்கிறாய். அம்மாள், “கரணம் போடு” என்றால் “இதோ போடுகிறேன் எண்ணிக்கொள்” என்று செய்கிறாய். “நான் பட்டணத்திற்கு வரமாட்டேன். நீ இங்கே வக்கீல் பலகையைத் தொங்கவிடு” என்பாள். “சரி” என்கிறாய்; இதெல்லாம் அந்த சூனியக்காரக் கிழவியின் யோசனையடா; உனக்கென்னடா தெரியும்? வெளுத்த தெல்லாம் பால் கறுத்த தெல்லாம் நீர்! அடித்தால் உனக்கு ஒழுங்காக அழக்கூடத் தெரியாதே - என்றாள்.
அதைக்கேட்ட வராகசாமியின் மனோ நிலையை என்ன வென்று சொல்வது? பாம்பு கடிக்கப் பெற்றவன் படிப்படியாய்த் தனது தெளிவான அறிவையும் உணர்வையும் இழந்து மயங்கித் தடுமாறுதலைப்போல அவனுடைய நிலைமை மேன்மேலும் பரிதாபகரமாக மாறியது. அது கனவு நிலையோ அல்லது நினைவு நிலையோ வென்பது சந்தேகமாய்ப் போனது. மேனகா போனது கனவா, அன்றி அக்காள் சொல்வது கனவா என்பது தோன்றவில்லை. மேனகா காணாமற்போனதும் உண்மையாய்த் தோன்றியது. அக்காள் சொன்னதும் நிஜமாய்த் தோன்றியது. அடுத்த நிமிஷம் இரண்டும் பொய்யாகத் தோன்றின. அக்காளுடைய யூகத்திற்கும் தந்திக்கும் சிறிதும் பொறுத்தமில்லை யென்பது அவன் மனதில் நன்றாய்ப் பட்டது. அவனுடைய மனதில் வேறு எத்தனையோ சந்தேகங்கள் உதித்தன. அவனுக்கு இயற்கை யிலேயே அக்காளுடைய சொல்லில் நம்பிக்கையுண்டு. ஆகையால், அப்போதும் அவள் சொன்னதை அசட்டை செய்ய அவனது மனது துணியவில்லை. டிப்டி கலெக்டர் அனுப்பிய செய்தியும் பொய்யல்லவென்று தோன்றியது. அது நிஜமா அல்லது இது நிஜமாவென்பதை நிச்சயமாய் அறிய மாட்டாதவனாய்த் தடுமாறினான். “அதிருக்கட்டும் பெண் தமது வீட்டிலிருந்தால் போலீசில் பதிவு செய்யும்படி நமக்கு எழுதுவாரோ? பின்பு அது அவருக்குத்தானே உபத்திரவமாய் முடியும்” என்றான்.
பெரு: அதெல்லாம் வெளிக்கு ஆடும் நாடகமப்பா; நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவதுபோல அழு என்னும் கதையப்பா; அது எங்களுக்காக எழுதியனுப்பின சங்கதி யல்லவா; நீ போலீசில் பதிவு செய்ய மாட்டா யென்பது அவருக்கு நன்றாய்த் தெரியுமே; நான் நேற்றை மனிதர்; அவர்கள் எவ்வளவு காலத்துப் பழம் பெருச்சாளிகள்! எத்தனை ஊர் சுற்றினவர்கள்! எத்தனை மனிதரை அபக்கென்று வாழைப் பழத்தை முழுங்குவதைப் போல வாயில் போட்டுக்கொண்ட ஜாம்புவந்தர்கள்! “என் பெண்டாட்டியை எவனோ அழைத்துக்கொண்டு போய்விட்டா” னென்று எந்த மானங் கெட்டவன் போலீசில் எழுதி வைப்பான்? உன் மாமனாருக்கு இது தெரியாதா? அவர் எமனைப் பலகாரம் பண்ணுகிறவர் அல்லவா! கனகம்மாளோ கொக்கோ! - என்றாள்.
வராக:- அவர் நாளைக்கு வருகிறேனென்று எழுதியிருக் கிறாரே, எத்தனையோ வேலைகளை விட்டு எதற்காக அவர் ஓடிவருகிறது? நான் தான் அங்கே வருவேனென்று எதிர்பார்த் தார்கள் என்றாயே.
பெரு:- நீ தான் போகாமல் தந்தியனுப்பி விட்டாயே; செய்ததை முழுதும் செய்துவிட வேண்டாமா? அதற்காக அவரே வருகிறார். இங்கே வந்து எங்களோடு கட்டி யழுதுவிட்டு உன்னைத் தனியாக அழைத்துப்போய் உன் காதில் மாத்திரம் ஒதினால் நீ சரிதான் என்கிறாய்.
வராக:- அப்படியானால், அன்றைக்கு வந்தவர் அவரே யென்பது சரிதானா?
பெரு:- தடையென்ன! கிழவியைப் பாட்டி யென்று சொல்ல சந்தேகமென்ன! வெள்ளி வில்லை போட்ட அவருடைய சேவகன் வந்து டிப்டி கலெக்டர் மகளைக் கூப்பிடுகிறாரென்று சொல்லி இவளை அழைத்தான். அது இப்போதுதான் என் கண் முன்னால் நடப்பது போல இருக்கிறது!- என்றாள்.
“நீ அவரை உன் கண்ணால் பார்த்தாயா?” என்ற கேள்வி அப்போது கூடத்திலிருந்து உண்டாற்று. இல்லையாயின், அதே கேள்வி வராகசாமியும் அவளிடம் கேட்டிருப்பான். அந்தக் குரல் யாருடையது? வராகசாமியும், சகோதரிமாரும் சமையலறையில் இருந்தனர் என்று முன்னரே சொல்லப் பட்டதல்லவா! அவன் தந்தியை வீட்டு வாசலில் சேவகனிடத்திலிருந்து வாங்கிக்கொண்டு ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்து சமையலறைக்குட் சென்றபோது அடுத்த வீட்டு சாமாவையரும் ஒசையின்றி உள்ளே வந்து, ஊஞ்சலில் உட்கார்ந்து உட்புறம் நடந்த சம்பாஷணையை ஒரு சிறிதும் விடாமல் கேட்டிருந்தார். அவரே மேற்குறிக்கப்பட்ட கேள்வியைக் கேட்டவர். தனது சார்பாக சாமாவையர் பரிந்து பேசுகிறார் என்பதைக் கண்ட வராகசாமி, உடனே வெளியில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து, “அடே சாமா! நீங்கள் என்னவோ கதை சொன்னீர்களே! இந்த தந்தியைப் பார்” என்று கூறி காகிதத்தை நீட்டினான். “தந்தி இருக்கட்டும். நீங்கள் பேசியதை யெல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். உன் மாமனார் வந்ததை இவர்கள் நேரில் பார்த்தார்களா? அவர்கள் உட்புறத்தில் அல்லவா இருந்தார்கள்?’ என்று சாமாவையர் வக்கீல் பீஸ் (கூலி) இல்லாமல் வராகசாமியின் கட்சியை எடுத்துப் பேசினார்.
பெரு:- சாமா! நீ கோமுட்டி சாட்சியாய்ப் பேச வந்து விட்டாயோ? அவனை நாங்கள் நேரில் பார்க்கவேண்டுமா? வெள்ளிவில்லை போட்ட சேவகன் வந்து சொன்னானே. அவன் பொய் சொல்வானா? அந்த மண்டையிலே புழுத்த மகா பெரியவர் உள்ளே வராமல் அமர்த்தலாய்ப் பெட்டி வண்டியில் இருந்துகொண்டே சேவகனை அனுப்பும்போது நாங்கள் வெளியில் போய் தூபதீபம் காட்டி வெற்றிலை பாக்கு பூரண கும்பம் மேளம் தாளம் முதலிய உபச்சாரத்தோடு அந்த எச்சிற்கல்லைப் பிரபுவை நேரில் பார்க்கவில்லை என்கிறாயோ? அவன் டிப்டி கலெக்டராயிருந்தால் அது அவன் மட்டிலே; அந்த அதிகாரமெல்லாம் அவனுடைய சேவகரிடத் திலே காட்டவேண்டும். நமக்கென்னடா அவனுடைய தயவு? நம்முடைய வராகசாமியின் காலைப் பிடித்துப் பெண்ணைக் கொடுத்தவன் தானே அவன்; அவன் மரியாதை கொடுத்தால், நாமும் அவனை மரியாதைப் படுத்துவோம் . அங்கில்லாவிட்டால் இங்கும் இல்லை. அவன் வாசலில் நின்றால் நான் கொல்லையிற் போய் நிற்போம் - என்றாள்.
வராகசாமியின் கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட வனைப் போல ஒன்றையும் அறிய மாட்டாதவனாய்த்தத்தளித்து நின்றான். அவன் மனதோ மேனகாவைப் பற்றி கவலை கொண்டுதுடித்தது. அக்காள் சொன்னது அவனுக்கு ஒரு சிறிதும் மன அமைதியை உண்டாக்க வில்லை. டிப்டி கலெக்டர் பெண்ணை அழைத்துப் போகவில்லை யென்று எழுதியிருக் கையில், அவரே அழைத்துப் போனவரென்று நினைப்பது பொருத்தமற்ற தென்றும் தவறான விஷயமென்றும் எண்ணினான். அவளை அவர் அப்படி அழைத்துப்போகக் கூடிய மூடன் அல்ல என உறுதியாக நினைத்தான்.
அவன் இயற்கையில் நற்குணம் உடையவன் ஆதலாலும், அவன் தனது சகோதரிமாரின் மீது வைத்த நம்பிக்கையாலும், “பொய்யுடை யொருவன் சொல்வன்மை யினால் மெய்போலும்மே” என்றபடி பெருந்தேவியும், கோமளமும் வாயடியடித்து உடாய்த்தமையாலும் அவனுக்கு அவர்கள் மீது எவ்விதச் சந்தேகமும் தோன்றவில்லை. மேனகா வேறு எவ்விதம் காணமற்போயிருப்பாளோ வென்று நினைத்து நினைத்து பெருங் குழப்பமடைந்து திகைத்துப் பேச்சுமூச்சற்று உட்கார்ந்து விட்டான். அவனைப் போலவே குழப்பங்களைக் கொண்டு ஒன்றையும் அறியாதவரைப் போல நடித்த சாமாவையர், “அவள் மறைந்து போனது சொப்பனமாக வல்லவோ இருக்கிறது! அவர் இப்படியும் அழைத்துப் போவாரோ? நல்ல பெரிய மனிதரான அவருக்குத் தெரியாத காரியம் உண்டா? பெண் இனிமேல் புருஷனுடன் வாழவேண்டாமா? அவர் நல்ல படிப்பாளி; கண்ணியம் பொருந்திய மனிதர்; அவர் இவ்விதம் அழைத்துப் போயிருப்பாரா வென்பதே எனக்குப் பெருத்த சந்தேகத்தைத் தருகிறது” என்றார்.
பெருந்தேவி பெரிதும் ஆத்திரமடைந்து, “போடா; நீ மகா புத்திசாலி! பெரிய மனிதனையும், படித்த மனிதனையும் நீதான் கண்டவன்! பெரிய மனிதரெல்லாம் யோக்கியர்கள்; சின்ன மனிதர்களெல்லாம் அயோக்கியர்களோ? பைத்தியக் காரா போ; மற்றவர்களுக்கு நீதி போதிக்கவும், மற்றவரை இகழவும் பெரிய மனிதர்களுக்கு நன்றாய்த் தெரியும். தம்முடைய சுபகாரியம் மாத்திரம் வழவழத்தான்; அவர்கள் மற்ற எல்லாருக்கும் புத்தி சொல்லுவார்கள். உலகத்தையே மாற்ற முயலுவார்கள். தம்முடைய பெண்டாட்டியை சீராகப் பயன்படுத்தாமல் விட்டு ஊரிலிருக்கும் விதவைகளுக்கு எல்லாம் கலியாணம் செய்யவேண்டுமென்று சொல்லு வார்கள்; தெய்வமே யென்று தம் பாட்டில் ஒழுங்காயிருக்கும் விதவைகள் மனதில் புருஷனுடைய ஆசையையும் விரக வேதனையையும் உண்டாக்கி நல்லவரைக் கெட்டவராக்கி விடுவார்கள். நம்முடைய வராகசாமியினுடைய பெரிய வக்கீல் இருக்கிறாரே; அவரைவிட உயர்ந்த பெரிய மனிதனும் மேதாவியும் சிங்காரமாய்ப் பேசுகிறவனும் வேறே இல்லை. முதலில் அவருடைய காரியத்தைப் பார். விடியற்காலம் ஐந்துமணிக்கு எழுந்து பல்தேய்க்கவும் நேரமின்றி உட்கார்ந் தாரானால், கட்சிக்காரர்களும், தரகுக்காரரும், தபாற்காரனும், நகைக்காரனும். புடவைக்காரனும், பிச்சைக்காரனும், வண்ணானும், அம்பட்டனும், பிள்ளையார் வேஷம், கட்டியக்காரன் வேஷம், இராஜா வேஷம், மந்திரி வேஷம் முதலிய வேஷங்களைப் போல ஒருவன்மேல் ஒருவனாய் அந்த சுவாமியின் தரிசனத்துக்கு வந்து விழுகிறார்கள். பெரியவர் அவர்களுக்கு நடுவில் புதைபட்டு அஷ்டாவதானம் செய்கிறார். மேஜையின் மேல் பரிசாரகன் வைத்த காபியில் அதை கட்சிக் காரர்களான ஈக்கள் மொய்த்துக் கொள்கின்றன. அது அவருடைய வயிற்றை அடையத் தவம் புரிந்து ஆறிப்போய் அப்படியே கிடக்கிறது. பத்து மணிக்கு எழுந்து குடுகுடு வென்று கொட்டுகிறான். இன்னொருவன் அவர் தலையில் ஒரு சவுக்கத்தால் வேடுகட்டி விடுகிறான். பிள்ளையாருக்குப் போட்டு வைப்பதைப் போல வேறொருவன் சந்தனத்தை நெற்றியில் அடிக்கிறான். அப்படியே இலையில் உட்கார்ந்து கை சுட வாய் சுட இரண்டு கவளத்தை வாரி வாயில் அடித்துக் கொள்கிறார். எவ்வளவோ அற்புதங்களை உலகத்தில் சிருஷ்டித்த ஈசுவரன், வயிற்றின்மேல் ஒரு சிறிய வாசலும் கதவும் வைத்திருந்தால், வாயின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அரை நாழிகை வரையில் சாப்பிடும் தொல்லை யில்லாமல் முழு ஆகாரத்தையும் அப்படியே வயிற்றில் வைத்துக் கதவைச் சாத்திவிடலாமே; ஈசுவரனுக்கு புத்தியில்லையே; அவனுக்கு வக்கீலின் அவசரம் தெரியவில்லையே யென்று அவர் அடிக்கடி சொல்லுகிறாராம். எழுந்தவுடன் பரிசாரகன் கை யலம்பி விடுகிறான். அவருடைய பெண்ணோ சட்டை தலப்பாகை முதலியவற்றை ஏந்துகிறாள். தடதடவென்று கச்சேரிக்கு ஒடுகிறார். அங்கே ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு, நாய்க்குலைத்து நரியாய் ஊளையிட்டு, நியாயாதிபதியின் முன் நாட்டிய மாடி, நரியைப்பரியாக்கி பரியை நரியாக்கி, நட்டுவத்திற்குத் தகுந்தபடி பொய்சொல்லக் கூடாதென்னும் உறுதியால் நாடு, நகரம், அரசு பொருள், மனைவி, பிள்ளை முதலியவற்றையும் இழந்த அரிச்சந்திரனை முட்டாளாக்கி அவனுடைய நாடகத்தைத் தழை கீழாக ஆடுகிறார். கட்சிக்காரனுக்கு ஜெயமோ அவஜெயமோ, அவருடைய கட்சி என்றைக்கும் ஜெயம். ஜெயிலுக்குள் போகும் கட்சிக்காரன் அவருடைய பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போகிறான். சாயுங்காலம் அங்கிருந்து, துரைமார் பந்தாடுமிடங்களுக்குப் போய் அவர்களுடைய நட்பை வளர்த்துக்கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்தால் சமாசாரப் பத்திரிகை எதிரில் நிற்கிறது. அதன் பிறகு அடுத்த நாளைக்கு ஆடவேண்டிய நாடகத்தின் ஒத்திகை மனதில் நடக்கிறது. இராத்திரி பன்னிரண்டு மணிக்கு படுக்கை. விடியற்காலையில் எழுந்தது முதல் ராத்திரி கண் மூடும் வரையில் அவருடைய தேகத்திற்கும் மனதிற்கும் ஒயா வேலை ஒழியாக் கவலை. அவருடைய சம்சாரம் கமலாவுக்கு என்ன உத்தியோகம்? இனிமையான கட்டில், வெல்வெட்டு மெத்தை, மேலே கொசுவலை, மின்சார விசிறி, ஊதுவத்தி வாசனை, இந்த வைபவத்திலிருந்து எழுந்திருப்பது காலை ஒன்பது மணிக்கு. பல் தேய்க்க வென்னிர் பற்பொடியுடன் பரிசாரகன் எதிரில் பிரசன்னம். வெள்ளிக் கிண்ணியில் உப்புமாவும் சுடச்சுடக் காப்பியும், தாம்பூலாதிகளும் மேஜையில், “வா! வா!” வென்று அழைக்கின்றன. கால் பிடிக்க வேலைக்காரி, எண்ணெய் தேய்க்க வெள்ளாட்டி, குளிப்பாட்ட இன்னொரு பாட்டி, புடவை தோய்க்க வண்ணாத்தி, குழந்தையெடுக்க குசினிக்காரி, பால்கொடுக்க செவிலித்தாய், காலால் இட்டதைத் தலையால் செய்ய ஒரு பட்டாளம்; சிற்றுண்டியானவுடன் ஹார்மோனியம் வாசித்தல், வீணை தடவுதல், பகலில் முதல்தரமான போஜனம்; பிறகு மஞ்சத்தில் சிறுதுயில்; இரண்டு மணிக்கு மறுபடியும் சுடச்சுடக் காபி, லட்டு ஜிலேபி முதலிய ஏராளமாக திண்பண்டங்கள். பிறகு காதலன் காதலியைக் குறித்த தமிழ்நாவலின் இன்பம். மாலையில் கோச்சுவண்டியில் கடற்கரைக்குப் பவனி போதல். அங்கிருந்து வந்தவுடன் 7 1/2 மணிக்கு மாதுரியமான சாப்பாடு, 9 மணிக்குச் சயன உத்சவம். அவ்வளவே அம்மாளின் உத்தியோகமும், உழைப்பும். இவற்றால் தேகத்திற்கும், மனதிற்கும் ஏதாயினும் உழைப்புண்டா? ஒன்றுமில்லை. அவளுடைய சரீரம் கல்லா, கட்டையா? மனித சரீரந்தானே அவளுடையது! அதைப் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனமே குடிகொள்ள விடுத்து சங்கீதம், இனிய போஜனம், நல்ல காற்று முதலியவற்றால் சுகத்தையும் திமிரையும் ஊட்டி வேலையே இல்லாமல் உட்கார வைப்பது தவறென்று அந்தப் பெரியவர் அறிந்து கொண்டாரா? அறுபது நாழிகையும் நாய்போல அலைந்து பேய்போல உழைத்து ஒய்வே பெறாமல் பாடுபட்டுத் தமது உடம்பையும், மனதையும் வருத்தி வரும் அந்த மனிதரே தாசி வீட்டிற்கும் வேசி வீட்டிற்கும் போக ஆசைப் படுகிறாரே; அவர் கமலாவை எப்படி வைத்திருக் றோம் என்பதை நினைக்கிறாரா? அவளை இப்படி கெடுப்பதுதான் அருமை பாராட்டுவது போலிருக்கிறது. டிப்டி கலெக்டரும் இப்படித் தானே சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாவைப் போலத்தங்கத்தைக் கொழுக்க வைத்திருக்கின்றான்; பெரிய மனிதனாம், நல்ல பெரிய மனிதன்! இனிமேல் பெரிய மனிதனென்றாயானால், நான் பிறகு தாறுமாறாய் ஆரம்பித்து விடுவேன். படிக்கிறது. பகவத்கீதை, குடிக்கிறது குடக் கள்” என்றாள்.
சாமா:- சூ! உளராதே; பெரிய இடத்துச் சங்கதி. உன் நாட்டுப்பெண்ணை வைத்து ஆள உனக்குத் திறமையில்லை; ஊராரை யெல்லாம் தூஷிக்கிறாயே! உன்னோடு கூட இருந்தவளை எங்கேயோ பறி கொடுத்துவிட்டாய். என்ன வென்று கேட்டால், மருந்தாம் மாயமாம்; சொல்லாமல் பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், வராகசாமி தனியாக வந்து விடுவானாம்; கொக்கின் தலையில் வெண்ணெய் வைப்பதா? நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? சென்னப் பட்டணத்தில் கன்னம் வைக்க சீரங்கப் பட்டணத்திலிருந்து குனிந்து வந்த கதையாக இருக்கிறது. வராகசாமியைத் தனியாக அழைத்துக் கொண்டு போக வேண்டுமானால் பெண் இவ்விடத்திலேயே இருந்து இவன் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைத்துத் தன்னுடைய சொற்படி நடக்கச் செய்துகொண்டு தனிமையில் அழைத்துபோவது சுலபமா! நீ சொல்வது சுலபமா! முன் பின் செத்திருந் தாலல்லவா உனக்குச் சுடுகாடு தெரியும். உன் அகமுடை யானுக்கு நீ இப்படித்தான் மருந்து போட்டாய் போலிருக்கிறது. இது மூக்கை நேரில் பிடிக்காமல் தலையைச் சுற்றிப் பிடிப்பதைப்போலிருக்கிறது.
கோமளம்:- சபிண்டி தின்றவன் இருக்கும்போது, செத்தது பொய்யென்பது போலப் பேசுகிறாயே சாமா! மலைபோல இருந்த பெண்டாட்டி வீட்டைவிட்டுப் போனது கண் முன் நன்றாய்த் தெரிகிறதே. அவளுடைய அப்பன் அழைத்துக் கொண்டு போகா விட்டால் அவள் எப்படி மாயமாய் மறைந்தாள்? அவளென்ன சருக்கரைக்கட்டியா? நாங்கள் அவளைக் காப்பியில் போட்டு கரைத்துச் சாப்பிட்டு விட்டோமா? அந்தக் கெட்ட கழுதையும், அவளுடைய அப்பனும் இப்படிச் செய்தால் எங்களை என்ன செய்யச் சொல்லுகிறாய்? காரணத்தை யெல்லாம் அவர்களிடம் போய்க் கேள். அவர்களுடைய சூதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்?
பெருந்தேவி:- அவள் தன்னுடைய டிரங்குப் பெட்டியி லிருந்து எதையோ எடுத்துக் காப்பியிலே போட்டதை நான் கண்ணாரப் பார்த்தேன். அதற்குத் தகுந்தாற்போல, இவனுடைய புத்தியும் மாறிப் போயிருக்கிறதே. இனி குட்டிச் சுவரில் முட்ட வெள்ளெழுத்தா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். அதைப்போல் தனக்குத்தான் அருமையாக ஒரு டிரங்குப்பெட்டி வந்து விட்டதென்று முப்பது நாழிகையில் முன்னூறு தரம் திறந்து பார்ப்பதும் பூட்டுவதுமே வேலை.
கோமளம்: - மகா அற்ப மனிஷி! அந்தத் திறவுகோலை எங்கேயாவது ஆணியில் மாட்டினால் நாங்கள் பெட்டியைத் திறந்து அதிலிருக்கும் அவளுடைய ஆஸ்தியை எடுத்துக் கொள்வோமாம். பெட்டியைத் திறக்கும்போது கூட தாலிச்சரட்டிலிருந்து திறவுகோலை வேறாய் எடுக்கமாட்டாள்; அப்பா! என்ன சாமர்த்தியம்!- என்றாள்.
சகோதரிமார் இருவரும் ஒரே பிடிவாதமாய் மேனகா தனக்கு மருந்து போட்டுவிட்டாள் என்று கூறியதை அவன் சிறிதும் நம்பாவிடினும், அவளுடைய பெட்டியைத் திறந்து, அதற்குள் சந்தேகநிவர்த்திக்குரிய குறி ஏதாயினும் இருக்கிறதா வென்பதைப் பார்க்க அவன் மனதில் ஒருவித ஆசை உதித்தது. அவன் உடனே, “அடிகோமளம் அந்தப்பெட்டியை இங்கே எடுத்துக்கொண்டு வா, அதைத் திறந்து பார்ப்போம். அதில் வசிய மருந்தைக் காட்டுங்கள்” என்றான்.
பெரு:- மருந்துதான் உன் வயிற்றுக்குள் போய்விட்டதே; உன் வயிற்றைத் திறந்து பார். பெட்டியில் மிகுதி இருக்கிறதோ இல்லையோ.
கோமளம்: - திறவுகோல்தான் அவளுடைய தாலிச் சரட்டோடு சவாரி போயிருக்கிறதே, பெட்டியை நாம் எப்படித் திறக்கிறது. பூட்டு உறுதியானது. மறு சாவியால் திறக்கவே முடியாது.
வராக:- திறவுகோலில்லாவிட்டால் பூட்டை உடைத்து விடுவோம்; பெட்டியை எடுத்துக்கொண்டுவா.
சாமாவையர்:- (நயமாக) சேச்சே! அப்படிச் செய்யாதே. நல்ல உயர்ந்த பெட்டி, வீணாய்க் கெட்டுப்போகுமப்பா! உனக்குப் பெட்டி என்ன செய்தது? மேனகா அதற்குள் ஒளிந்துகொண்டிருக்கிறாளா வென்று பார்க்கப்போகிறாயா? பெண்டுகள் குழந்தையைப் போலப் பலவிதமான விளையாட்டுச் சாமான்களையும் ஆடையாபரணங்களையும் பிறந்த வீட்டிலிருந்து ஆசையோடு கொணர்ந்து மறைத்து வைத்திருப் பார்கள். அதை நாம் பார்க்கக்கூடாதப்பா! உனக்குத் தெரியாது; வேண்டாம்; அப்படிச் செய்யாதே.
பெருந்தேவி:- (ஒருவித அச்சத்தோடு) ஆமாப்பா! அவள் பின்னால், அதை வதைத்தேன் இதை வதைத்தேன் என்று பழி போட்டு எங்கள் தலையை உருட்டிவிடுவாள். அதை உடைக்க வேண்டாம். நீ செய்வது எங்கள்பேரில் வந்து சேரும். தானில்லாத காலத்தில் இரண்டு மொட்டை முண்டைகளும் உடன் பிறந்தானிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெட்டியை உடைக்கச் சொன்னார்களென்று மண்ணை வாரித் தூற்றுவாள். கோமளம்! நீ பெட்டியைத் தொடாதே - என்றாள்.
அதே காலத்தில் அப்புறந் திரும்பிக் கோமளத்தைப் பார்த்து கண்சிமிட்டிப் பெட்டியைக் கொண்டுவரும்படி சைகை செய்தாள். அவள் உடனே பெட்டியைக் கொணர்ந்து வைத்து விட்டாள். அதைத் திறப்பதற்குத் தேவையான ஒரு உளி, குண்டுக்கல், ஆணி முதலியவைகளும் வந்து சேர்ந்தன.
மேனகா தனக்கு மருந்திட்டாள் என்பதை அறிவதற்கு அநுகூலமாக ஏதாயினும் குறிகள் அதில் தென்படுமோ வென்று பார்க்க ஆவல் கொண்ட வராகசாமி, உளியால் அதன் பூட்டை உடைத்துப் பெட்டியின் மூடியைத் திறந்தான். தஞ்சையிலிருந்து வந்தபோது வாங்கிய தாழம்பூவின் மணம் குபிரென்று கிளம்பி எங்கும் இனிமையாய் வீசியது. அந்தப் பெட்டி மிகவும் அகன்று நீண்டும் இருந்தது; இடையில் பொருத்தப்பட்ட ஒரு தகட்டினால், அதன் உட்புறம் இரண்டு பாகங்களாய்த் தடுக்கப் பட்டிருந்தது. அவைகளில் பல வகைப்பட்ட சாமான்களும் ஆடையாபரணங்களும் கொலு வைக்கப்பட்டவாறு அலங்காரமாய்க் காணப்பட்டன. அதன் தோற்றத்திலிருந்து அவள் நாகரீகமானவள் என்பதும், மகா புத்திசாலியென்பதும் நன்கு விளங்கின. பெட்டியின் ஒரு பகுதியில் அவளுடைய ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பகுதிக்குள் இருந்த பொருள் என்ன வென்பது தோன்றாவாறு அதன்மேல் ஒரு சிறிய பட்டுத் துணி மறைத்துக்கொண்டிருந்தது. மூடிவைக் கப்படும் பொருளைப் பார்க்க ஆவல் கொள்ளுதலே மனிதரின் இயற்கை. ஆதலால், வராகசாமி, ஒரு பகுதியை மூடிக் கொண்டிருந்த பட்டை விலக்கினான். அதில் ஏதேனும் விசேஷம் இருந்ததா? அப்படியொன்றும் காணப்படவில்லை. பட்டுக் கயிற்றால் அழகாகக் கட்டப்பட்ட ஒரு புஸ்தகக்கட்டு ஒரு புறத்தில் இருந்தது. இன்னொரு புறத்தில் 20,25 அழகான விலை உயர்ந்த பட்டு இரவிக்கைகள் ஒரு கட்டாய்க் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவளுடைய இரவிக்கையைத் தொடவும் ஒருவகையான அருவருப்பைக் கொண்டவராகசாமி அந்தக் கட்டில் என்ன புஸ்தகங்கள் இருக்கின்றன வென்பதையும், அதிலிருந்து அவளுடைய மனப்போக்கு எவ்வாறிருக்கின்றது என்பதையும் அறிய ஆவல்கொண்டு அதன் கட்டை அவிழ்த்தான். அதில் கம்பராமாயணம், திருவாய்மொழி, தாயுமானவர் பாடல், பாரதம், பாகவதம், பதார்த்தகுண சிந்தாமணி, சரீர தத்துவ சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், மருத்துவம், பாகசாஸ்திரமும், சுகாதார விளக்கம் முதலிய புஸ்தகங்களும், ஒரு நாவல் புஸ்தகமும் இருந்தது. நமது புராதனப் பழக்க வழக்கங்களிலேயே பயிற்றப்பட்ட மேனகா நாவலும் வைத்திருந்தாளோ வென்னும் சந்தேகம் சிலருக்கு உதிக்கலாம். ஆனால், தற்காலத்தில் நமக்கு ஒழுக்கம் பயிற்றும் நாவலாசிரியர்களால் எழுதப்படும் நிகரற்ற நாவல்கள் எதையும் அவள் வைத்திருக்க வில்லை. தமது சுயப்புலமையால் பெருத்த பண்டிதர்களால் எழுதப்பட்டு ஏராளமான சாற்றுக்கவிகளுடன் பிழையறத் தோன்றும் நாவல்களில் எதையும் அவள் வைக்கவில்லை. தோன்றாத் துணையாயிருந்து உதவும் கடவுளின் அருள்வாக்காய் அமைந்துள்ள கமலாம்பாள் சரித்திரமே அதில் காணப்பட்டது. வராகசாமி அவ்வாறு அவளுடைய புஸ்தகங்களைப் பரிட்சை செய்ததில் அவனுடைய அருவருப்பு அதிகரிக்கவில்லை. அவன் அவள் மீது எவ்விதமான குற்றமும் கூறுதற்கு இடமில்லாமல் போயிற்று. புஸ்தகங்களை முன்போலக் கட்டி வெளியில் வைத்தான். பெட்டியில் புஸ்தகக்கட்டு முதலில் இருந்ததற்கு அடியில் பெருத்த அற்புதமான தந்தப் பெட்டி யொன்று காணப்பட்டது. அதன் வேலைத் திறமும், அழகும் அவனுடைய கண்ணைப் பறித்தன. அந்தப்பெட்டியை மெல்ல வெளியில் எடுத்தான். அது பூட்டப்பட்டிருந்தாலும் அதன் திறவுகோல் அதன் பக்கங்களிலிருந்த வளையமொன்றில் கட்டப் பட்டிருந்தது. அதையெடுத்துப் பெட்டியைத் திறந்தான்.
அதுகாறும் மற்ற மூவரும் வாய்பேசாமல் அருகில் நின்று கவனித்தனர். அப்போது பெருந்தேவி, “அடே! அதையெல்லாம் திறக்காதே; அதனால் வீண் மனஸ்தாபம் வந்து விளையும்; பணக்காரன் வீட்டுப்பெண்; விலை உயர்ந்த சாமான்கள் இருக்கின்றன. ஏதாவது போகும் குறையும்; அந்த வம்பு நமக்கேன் பேசாமல் வைத்துவிடு!” என்று சொல்லி விட்டு சாமாவையரைப் பார்த்தாள். அவர் சிறிது புன்னகை கொண்டு தம்முடைய இரண்டாவது சதியா லோசனையும் தாம் நினைத்தபடியே நிறைவேறிப்போகும் என்பதை ஒருவாறு காட்டினார்.
அதைக் கவனியாத வராகசாமி தந்தப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து அத்தர், ஜவ்வாது, முதலியவற்றின் மணம் வீசியது. அதற்குள் என்ன இருந்தது? விலை உயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை. தபாற் கார்டளவில் புகைப்பட மொன்று காணப்பட்டது. அந்தப்படம் எந்தப் புண்ணிய புருஷனுடையதோ, அந்த மனிதன் முன் ஜென்மத்தில் என்ன பூஜை பண்ணினவனோ வென்று கண்டோர் நினைக்கும்படி பெட்டியாகிய பஜனை மடத்தில் அந்தப் படம் கோலாகலமாய் நறுமலர்களாலும் துளபத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. வெல் வெட்டினால் தைக்கப்பட்ட சிறிய பஞ்சு மெத்தையின் மேலும் அழகிய திண்டு தலையணை களினிடையிலும் அப்படம் காணப்பட்டது. அதற்குப் பூஜை, தூபம், தீபம், நைவேத்தியம், அலங்காரம், பஜனை முதலியவை பெருத்த உத்சவத்தைப் போல நடத்தப் பட்டிருந்தன வென்பது நன்றாய் விளங்கியது. மேனகா எந்த சுவாமியை அவ்வாறு வைத்து வழிபட்டு வந்தாள் என்பதை அறிய ஆவல்கொண்ட வராகசாமி மேலேயிருந்த புஷ்பங்களை விலக்கி அப்படத்தை எடுத்துப் பார்த்தான். அது தன்னுடைய படம் என்பதைக்கண்டான். ஒரே நொடியில் அவனுடைய உடம்பு பூரித்தது; மயிர் சிலிர்த்தது; இன்பமாய் நிறைந்தான். கண்களில் கண்ணிர்த் துளிகள் ஆநந்தம் ஆநந்தம் பிரம்மா நந்தமென்று நாட்டிய மாடிக்கொண்டு வெளிப் பட்டன. “ஆகா! என்ன மேனகாவின் பைத்தியம்! என்ன இவளுடைய அறியாமை! இவள் ஏதாயினும் தெய்வத்தின் படத்தை வைத்து வணங்காமல் ஒரு மனிதனுடைய வடிவத்தை வைத்துப் பூஜிப்பாளா!” என்று நினைத்தான். “இங்கு இவளிருந்தபோது என்னை நேரில் இவ்விதம் தெய்வமாகத் தானே மதித்து யாவற்றையும் செய்து வந்தாள். ஒருக்கால் இது இவள் தஞ்சையிலிருந்த காலத்தில் செய்து வந்த காரியம் போலிருக்கிறது. ஆகா! இவளைப் போன்ற மனைவி நான் எத்தனை ஜென்மம் எடுத்து என் ஆயுட்காலம் முழுதும் தவம் புரிந்தாலும் கிடைப்பாளோ! என் பாக்கியமே பாக்கியம்!” என்றெண்ணி அன்பு மயமாக இளகி அயர்ந்தான். மற்றவர் முகங்களைப் பார்த்தான். அவர்களும் அதைக்கண்டு ஒரு வித இளக்கமடைந்தவர்களாகத் தோன்றினர். “இத்தகைய கண்மணியைப் பறிகொடுத்தேனே! அவள் எங்கு போயிருப் பாளோ! எப்படி மறைந்திருப்பாளோ!” என்று நினைத்து ஏங்கினான். “அது நிஜமோ? அக்காள் சொல்வது நிஜமோ? அல்லது இரண்டும் உண்மையோ? என்னை அவள் இவ்வாறு தெய்வமாக மதித்திருப்பதனால் என்னைத் தன் வசமாக்க அவள் தனது மடமையாலும் பாட்டி முதலியோரின் துர்ப்போதனையாலும் எனக்கு ஏன் மருந்திட்டிருத்தல் கூடாது? அக்காள் சொல்வது மெய்யாகவே இருக்கலாம். அவள் எனக்கு மருந்திட்டிருந்தாலும் அதை நான் குற்றமாக கொள்வது தவறு. இருக்கட்டும் நாளைக்கு அவர் எப்படியும் வருவார். உண்மையை அறிந்து கொண்டு நானே நேரில் தஞ்சைக்குப் போய், அவளுக்கு நல்ல அறிவூட்டி, அவள் இங்கே இருந்தாலும் அவளைச் செல்வமாகவும் சீராகவும் வைக்கிறே னென்றும், அன்போடும் ஆசையோடும் நடக்கிறேனென்றும் உறுதி செய்து கொடுத்து விட்டு, அழைத்து வந்து விடுகிறேன்” என்று முடிவு செய்து கொண்டு தந்தப் பெட்டியைத் தனக்கருகில் வைத்துக்கொண்டான். மேலே ஆராய்ச்சி செய்தலை நிறுத்தி விட நினைத்தான். அந்த உத்தமியின் மீது எவ்வித ஐயமும் கொள்வதனால் தனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும் என்று அவன் மனது கூறியது. அவள் தன்னைப் பற்றி இன்னும் என்ன புதுமைகளைச் செய்து வைத்திருக்கின்றாளோ என்பதைக் காண ஒருவகை அவா தோன்றி அவனை வதைத்தது. தான் சோதனை செய்த பகுதியின் மற்றொரு புறத்திலிருந்த ரவிக்கைகளின் கட்டையெடுத்து அவிழ்த்தான். ஒவ்வொன்றும், ரூபா 10, 15 பெறுமானமுள்ள 20,25 அழகிய இரவிக்கைகள் (கச்சுகள்) கண்ணைப் பறித்தன. ஒன்றை யெடுத்துப் பிரித்தான். உடனே அவளுடைய எழில்வழிந்த கைகளும், முதுகும், மார்பும், கழுத்தும் அவனுடைய அகக்கண்ணிற்குக் கண்கூடாகத் தோன்றி அவன் மதியை மயக்கின. “ஐயோ! என் இனிமை வடிவை எப்போது நேரில் காணப்போகிறேன்?” என்று நினைத்து ஏங்கினான். அந்தக் கச்சு மூட்டையை அப்படியே வாரிக் கண்களிலே ஒற்றிக்கொண்டு முத்தமிட நினைத்தான். அண்டையில் மனிதர் இருத்தலை யெண்ணித் தன்னை அடக்கிக் கொண்டான்.
கச்சு மூட்டையின் கீழ் வேலைப்பாடுகள் அமைந்த சாயப்பெட்டிகள் பல காணப்பட்டன. வட்ட வடிவமாய்த் தோன்றிய ஒரு பெட்டியை எடுத்துத் திறந்தான். வைரங்களும் சதங்கைகளும் நிறைந்த அவளுடைய தங்க ஒட்டியாணம், “பொய்யோ யெனுமிடையா”ளான தங்கள் செல்வச் சீமாட்டியைக் காணோமே யென்று ஏக்கம் கொண்டு அதில் படுத்திருந்தது. அரைமனதோடு அதைக் கீழே வைத்தான். யாவற்றிலும் பெரியதாய்க் காணப்பட்ட இன்னொரு பெட்டியைத் திறந்தான். வெள்ளை, சிகப்பு, பச்சை முதலிய நிறங்களில் விதைகளைக் கொண்ட மாதுளம் பழத்தைப் பிளந்தவாறு ஏராளமான ஆபரணங்கள் அதில் தோன்றி சுடர்விட்டெரித்தன. அவற்றை அவன் அதுகாறும் பார்த்தவனே யன்று; அவள் அவற்றை ஒரு நாளிலும் அணிந்ததைக் கண்டானில்லை. தமது புதல்வியின் பொருட்டு அவ்வாறு எவ்வளவோ பொருட்செலவு செய்துள்ள அவளுடைய பெற்றோர் அவளது வாழ்க்கையைக் கெடுக்க நினைப்பாரோ? சே! அப்படி நினைப்பது மூடத்தனம் என்று எண்ணினான். ஏராளமான வெள்ளி மைச்சிமிழ்களும், சாந்து வைத்த வெள்ளிக் கிண்ணங்களும், தந்தச் சீப்புகளும், முகம் பார்க்கும் கண்ணாடிகளும் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்து இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன், அவனுடைய அகக்கண்ணிலிருந்த மேனகாவின் காதளவு ஓடிய மை தவழ் கண்களும், நெற்றியினிடையிலிருந்து அழகுபெற்ற கஸ்தூரித் திலகமும், சுருண்ட கருங் கூந்தலின் ஒளியும் அப்படியே தத்ரூபமாய்த் தோன்றி அவனை வதைத்தன. இன்னொரு பெட்டி நிறையப் பவுன்களும், ரூபாய்களும் இருந்தன. அத்துடன் ஒரு பகுதியின் சோதனையை நிறுத்திவிட்டு அடுத்த பகுதியை ஆராய்ச்சி செய்தான். அதில் ஒவ்வொன்றும் 200, 250 ரூபாய் பெறுமான முள்ள 7,8 பெங்களுர் பட்டுப் புடவைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பெட்டியிலிருந்த ஒவ்வொரு பொருளும் அவளுடைய ஒவ்வொரு அங்கத்தை நினைப்பூட்டி அவனைப் பெரிதும் வருத்தி துயரக் கடலில் ஆழ்த்தியது. புடவைகளின் கீழ் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் செய்யப்பட்ட அழகான பலவிளையாட்டுச் சாமான்கள் காணப்பட்டன. யாவற்றையுங் கண்ட வராகசாமி மேனகாவை நினைத்து நெடுமூச் செறிந்து கண்ணிர் விடுத்தான். “என் கிள்ளையே! நீ இவ்வளவு பெருத்த செல்வத்தை அடைந்திருந்தும் நற்குணம், நல்லொழுக்கம், அழகு முதலிய யாவற்றையும் பெற்றிருந்தும் சரியான புருஷனை மணந்து அவனுடன் இன்பம் அநுபவிக்கக் கொடுத்து வைக்காமற் போனாயே! உன் யோக்கியதைக்கும் மேன்மைக்கும் ஒரு சிறிதும் தகாத அதமனிலும் அதமனான என்னை நீ மணந்து தேம்பித்தவிக்கும்படி ஆனதே உன் கதி! இதுவரையில் போனது போகட்டும், இனி உன்னை நான் அன்போடு நடத்தி இன்புறுத்துவேன் என்று உனக்கு உறுதி கூறினேன். அவ்வாறு நடக்க வில்லையா? நீ ஏன் இப்படித் திடீரென்று சொல்லாமல் போய்விட்டனை? நான் உன்னையும் சேலத்திற்கு அழைத்துப் போக வில்லையென்ற கோபமா? ஜட்ஜிதுரையைக் கொலைக் குற்றத்திற்காக ஏன் தண்டிக்கக் கூடா தென்றாயே! அத்தகைய மகா சாமர்த்திய சாலியான உன்னை நான் மனையாட்டியாக அடைந்தது பற்றி அப்போது என் தேகம் எப்படிப் பூரித்தது தெரியுமா! அப்போது நான் கொண்ட பெருமை, நான் பி.எல். பரீட்சையில் தேறி விட்டேன் என்று கேட்டபோது கூட எனக்கில்லையே! இனி நான் சுட்டாலும், அடித்தாலும், வைதாலும் தகப்பன் வீட்டையே நினைப் பதில்லை யென்று உறுதி கூறினாயே! அப்போது சொன்னது பொய்யா? அன்றி இப்போது செய்தது பொய்யா?” என்று பலவாறு நினைத்து நினைத்து ஏங்கினவனாய் அவளுடைய பொருட்களை யெல்லாம் திரும்பவும் முன் போலவே வைக்கத் தொடங்கினான். அவனுடைய துயரத்தைக் கண்ட மற்ற மூவரும் தாமும் அவனைப் போலவே முகத்தை மாற்றிக் கொண்டனர் ஆயினும், “இன்னமும் தன்னுடைய எண்ணம் முற்றிலும் பலிக்கவில்லையே” என்று வருந்தி யிருந்தனர்.
யாவற்றையும் பெட்டிக்குள் வைத்த வராகசாமி தனது படமிருந்த தந்தப் பெட்டியை எடுத்தபோது மிகவும் கலங்கினான். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் அவனுடைய சதை ஆடியது. “பெண் பிறந்தாலும் இப்படியல்லவா பிறக்கவேண்டும் உலகத்தையாளும் மகாராஜாக்களும் எனது பாக்கியத்தைக் கண்டு பொறாமை கொள்ளத் தகுந்த இந்தப் பெண்ணரசி எனக்கு வந்து வாய்த்தும், இவளிடம் சுகமடையக் கொடுத்துவைக்காத மகா பாவியல்லவோ நான். ஆகா கேவலம் என்னுடைய படத்திற்கு இவ்வளவு பெருமையா! பெருமைப்படுத்தட்டும். பூஜை செய்யட்டும். அதற்கு மெத்தை யென்ன? திண்டுகள் தலையணைக ளென்ன? அடி! பேதையிலும் பேதையே! இதற்காக, கண்டிப்பதா அன்றி கட்டியணைத்து முத்தமிடுவதா! நீ இருந்த போது நான் இந்த வேடிக்கையைப் பார்க்காமல் போனேனே! பார்த்திருந்தால், - ஆகா! உன்னை இதைப் போல உட்காரவைத்துப் பூஜை செய்திருப்பேனே! பயப்படாதே; இனி என் ஆயுட்கால மெல்லாம் என் இருதய கமலத்திலேயே உன்னை வைத்துப் பூஜிக்கிறேன். இது முக்காலும் சத்தியம்” என்று தனது உள்ளத் தினின்று மொழிந்த வண்ணம், தனது படத்தைக் கீழே வைத்து விட்டு அதிலிருந்த பூக்கள், திண்டு, தலையணைகள் முதலியவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து வியப்போடு ஆராய்ச்சி செய்தான். பிறகு யாவற்றிற்கும் அடியிலிருந்த சொகுசான மெத்தையைப் பார்க்க ஆசை கொண்டு அதை மெல்லப் பெட்டியை விட்டு வெளியில் எடுத்து அதன் அழகை நெடுநேரம் பார்த்துப் பரவசமடைந்த பின், அதை வகைக்கப்போகையில் அந்தப் பெட்டியின் அடியில் இன்னொரு பொருள் காணப்பட்டது. மெத்தையை மடியில் வைத்துக்கொண்டு அதை எடுத்தான். அவன்.அதை எடுத்த போது மற்ற மூவருடைய தேகங்களும் ஒரே காலத்தில் ஒருவித அச்சத்தினால் நடுங்கின. என்றாலும், ஒன்றையும் அறியாத வரைப்போல முகத்தில் எத்தகைய மாறுபாடும் இன்றி முன்போல இருந்தனர். அது எத்தகைய பொருள்? அது ஒரு பட்டுத்துணியால் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்தது என்ன என்பதை அறிய ஆவல்கொண்ட வராகசாமி அதை ஆத்திரத்தோடு அவிழ்த்தான். பட்டுத்துணிக்குள் ஒரு தடித்த காகிதத்தில் அந்த வஸ்து கட்டப்பட்டிருந்தது; காகிதத்தையும் பிரித்தான். யாவரும் இமைகொட்டாமல் அதையே பார்த்திருந்தனர். அதற்குள் இருகடிதங்களும், ஒரு புகைப்படமும் இருந்தன. பெரிதும் திகைப்பையும் வியப்பையும் அடைந்த வராகசாமி படத்தைப் பார்த்தான். கடிதங்களில் ஒன்றை எடுத்து யாருக்கு யாரால் எழுதப்பட்டது என்பதைப் பார்த்தான். உடனே அவனுக்கு ஒரு பெருத்த சந்தேகம் உண்டாயிற்று. தான் சோதனை செய்தது மேனகாவின் பெட்டியா அன்றி பிறருடையதா என்னும் சந்தேகம் தோன்றியது. தனது கண்களை நம்பாமல் திரும்பவும் ஊன்றி கடிதங்களையும் படத்தையும் மாறிமாறிப் பார்த்தான். அதற்குள் பெருந்தேவி, “என்னடா அது? மறைக்கிறாயே? என்ன இரகசியம் அது? அகமுடையாள் லட்சம் பத்து லட்சத்திற்கு நோட்டுகள் வைத்திருக்கிறாள் போலிருக்கிறது? பாட்டி கொடுத்திருப்பாள். எங்களுக்குச் சொல்லப்படாதோ?” என்று மனத்தாங்கலாகப் பேசினாள். அவளுடைய சொல், பச்சைப்புண்ணில் மிளகாய் விழுதை அப்புதலைப் போல இருந்தது. அவனுடைய முகமும், தேகமும் படபடத்துத் தோன்றின. கண்கள்துடிதுடித்து கோவைப்பழமாய்ச்சிவந்தன. கடிதங்களில் ஒன்றைப் படிக்க முயன்று இரண்டொரு வரிகளை வாய்க்குள்ளாகவே படித்தான். “பெண்மணியும், என்னிரு கண்மணியும், என் மனதைக் கொள்ளைகொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப்பிள்ளை -” என்பது வரையில் படித்தான். அதற்கு மேல் அவனால் படிக்கக்கூடவில்லை. மூளை சுழன்றது. அறிவு மயங்கியது. கையிலிருந்த காகிதங்களும் படமும் கீழே விழுந்தன. அருகில் சுவரோரமாய்ச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் கண்மூடிச் சாய்ந்து விட்டான்.
“என்னடா அது? என்னடா அது?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டுக்கொண்டு பெருந்தேவியம்மாள் பெட்டி யண்டையில் நெருங்கினாள். அதற்குள் கோமளம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து படத்தையும் கடிதங்களையும் கையி லெடுத்டு படத்தைப் பார்த்தாள். சாமாவையர் வராகசாமியின் பக்கத்தில் உட்கார்ந்து ஒன்றையும் அறியாதவரைப் போலத் திகைத்தார். படத்தைப் பார்த்த கோமளம், “மைசூர் மகாராஜாவின் படமல்லவா இது! இந்தப் படம் ஊரில் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! இதற்கு இவ்வளவு ஜாக்கிரதை யென்ன? இரகசியமாய் வைப்பதென்ன? அக்கா இந்தப் படத்தைப் பாரடி என்று கூறிப் பெருந்தேவியிடத்தில்காட்ட, அவள், “அடி உலக்கைக் கொழுந்தே! போ; இதுதான் மைசூர் மகாராஜாவின் படமோ? அதை நான் நன்றாகப் பார்த்திருக் கிறேனே. அது இவ்வளவு அழகாயுமில்லை. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பொட்டையானுக்கு கூடத்தெரியும்” என்றாள். அதற்குள் சாமாவையர், “எங்கே என்னிடத்தில் கொடுங்கள்; பார்க்கலாம்” என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்து, “படம் எவ்வளவு அழகாய் இருக்கிறது பார்த்தாயா பெருந்தேவி? முகவசீகரமும், களையும் எல்லோரையும் மயக்குகின்றனவே! என்ன அலங்காரம்! என்ன ஆடைகள்! இவன் மேலிருக்கும் உடுப்பு மாத்திரம் பதினாயிரம் ரூபாய் பெறும் போலிருக்கிறதே! நகையெல்லாம் வைரம் போலிருக் கிறதே” என்றார். கோமளம்:- கழுத்தில் காசுமாலை இருக்கிறதே! ஆண்பிள்ளை காசுமாலை போட்டுக்கொள்வதுண்டோ?
பெருந்தேவி:- ராஜாக்களும், தெய்வமும் எந்த ஆபரணத்தையும் அணியலாம்.
சாமா:- சேச்சே! காசுமாலையா அது? இல்லை இல்லை. தங்க மெடல்களை மாலையாகப் போட்டிருக்கிறார். இவர் யாரோ மகாராஜாவைப் போலிருக்கிறார். ஏதோ ஒரு விஷயத்தில் மகா நிபுணர் போலிருக்கிறது. மெடல்கள் பெற்றிருக்கிறார். அதிருக்கட்டும். கடிதத்தைப் படி - என்றார்.
உடனே கடிதங்களில் ஒன்றை யெடுத்த கோமளம் அடியிற் கண்டவாறு படித்தாள்:
“பெண்மணியும் என்னிரு கண்மணியும் என் மனதைக்கொள்ளை கொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப் பிள்ளை எழுதும் கடிதம்”
பெருந்தேவி:- (திகைத்து) என்னடா இது கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே! - என்றாள்.
சாமாவையர் அந்த அதிசயச் செய்தியைத் தாங்க மாட்டாமற் குழம்பிப்போன தனது தலையைத் தடவிக் கொடுத்து மெளனம் சாதித்தார்.
கோமளம் மேலும் படிக்கிறாள்:-
இப்படிக்கு உன் அடிமை,
மனமோகன மாயாண்டிப்பிள்ளை”
என்று ஒவ்வொர் எழுத்தும் கணீரென்று தெளிவாக வராகசாமியின் காதில் ஒலிக்கும்படி கோமளம் படித்து முடித்தாள். யாவரும் பேச்சு மூச்சற்ற சித்திரப் பதுமைகளைப் போலத் தோன்றினர். கோமளம் விரைவாக இன்னொரு கடிதத்தையும் எடுத்து அடியில் வருமாறு படித்தாள்.
நாடகத்தில் சேவகர் களுக்குப் போடும் வெள்ளி வில்லை, சட்டை முதலியவற்றை அவனுக்கு மாட்டிவிட்டு அவனை ஒரு சர்க்கார் சேவகனைப்போலச் செய்து உன்னுடைய வீட்டிற்குள் அனுப்புகிறேன். வாசலில் பெட்டி வண்டியில் உன் தகப்பனாரைப் போலத் தலைப்பாகை முதலியவற்றுடன் நானிருக்கிறேன். உன் தகப்பனார் கூப்பிடு கிறாரென்று என் வேலைக்காரன் உன்னை அழைப்பான். நீ உடனே வந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி சிறிது நேரம் பேசி விட்டு உடனே வண்டியில் ஏறிப் போய் விடுவோம். சமயம் சரிப்பட்டால், உன் பெட்டியையும் எடுத்து வா, சரிப்படாமற் போனால் பெட்டி தேவையில்லை. வேண்டிய ஆடையாபரணங்களைப் புதியனவனாய் வாங்கிக்கொள்வோம். இவ்வளவு சாமர்த்தியம் செய்த மகா புத்திசாலியான நீ, இதையும் நிறைவேற்று வாயானால், நாம் இனி என்றைக்கும் நீங்காத நித்தியாநந்த சுகம் அடையலாம். தயங்காதே கண்மணீ!
கடைசியாகப் பட்டாபிஷேகத்தன்று நாம் சந்தித்த அந்த இரவின் நினைவே என்னை ஒவ்வொரு நொடியும் ஓயாமல் வருத்துகிறது; உன் கிள்ளை மொழிகள் என் செவிகளில் இன்னமும் ஒலித்து நிற்கின்றன. உனது நெற்றியிலிருந்த கஸ்தூரி திலகமும், துடையிலுள்ள அழகிய மச்சமும் என் மனதில் அப்படியே பதிந்து நின்று என் உயிரைக் குடிக்கின்றன. என்ன செய்வேன்? காமநோய் பற்றி என்னை எரிக்கிறது. உன்னை இன்றிரவு கண்டு உன்னிடத்தில் ஆலிங்கன சுகம் பெற்றாலன்றி நான் படுத்தபடுக்கையாய் விழுந்து விடுவேன் என்பது நிச்சயம். உன்னுடைய
உன் அடிமை
மனமோகன மாயாண்டிப்பிள்ளை
என்று இரண்டாவது கடிதமும் அழுத்தந் திருத்தமாய் படிக்கப் பட்டது. பெரிதும் கோபங்கொண்ட பெருந்தேவி அங்கும் இங்கும் தாண்டிக் குதித்து, “அடே நாடகக்கார நாயே! பாழாய்ப் போன தேவடியாள் மகனே! உனக்கு வந்த கேடென்னடா! மொட்டை முண்டைகளாமே! நாங்கள் உன் முழியைப் பிடுங்கினோமா! இந்தக் கொளுப்பெடுத்தவளுக்கு வந்த கேடென்ன! அவனுடைய இறுமாப்பென்ன! இப்படியும் நடக்குமோ! அடாடா! வராகசாமி! உன்தலை விதி இப்படியா முடிந்தது! நல்லகாலத்திற்காகவா இந்த சம்பந்தம் நமக்கு வந்து வாய்த்தது! அந்த வக்கீலின் பெண்டாட்டி கூத்தாடியைப் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள், இந்தப் பெரிய மனிதன் பெண் எடுபட்டு ஓடி விட்டாள்” என்று சொல்லக் கேட்டிருந்தேன். அது நமக்கா வந்து சேரவேண்டும்? பாவி வயிற்றில் நல்ல பெண்களும் பிள்ளையும் வந்து பிறந்தோம். நாங்களாயினும் சிறுவயதில் விதவைகளானோம். அது என்னவோ தலைவிதி; அது அவமானமாகாது. இந்த அவமானம் ஏழேழு தலைமுறைக்கும் நீங்காதே; வராகசாமி! நீ வருத்தப்படாதே எருமைச்சாணி ஹோமத்திற்கு ஆகாது. விட்டுத்தொலை கழுதையை” என்று மகா ஆத்திரத்தோடு கூறினாள்.
கோமளம்:- என்ன ஆச்சரியம்! இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்றிருந்தவள் எவ்வளவு பெருத்த காரியம் செய்திருக்கிறாள்! அடே யப்பா என்ன சாகஸம்!! என்ன வேஷம்!!! ஒரு குறையுமறியாத மகா பதிவிரதையைப் போல வல்லவா நடந்து கொண்டாள்! வராகசாமி இவளோடு தனியாக இருந்தால் விஷமிட்டே இவனைக் கொன்றி ருப்பாள். இப்பேர்ப்பட்டவள் முகத்தில் முழித்தாலும் பெரும் பாவம் வந்து சேரும். கபடமே அறியாத குழந்தையைப் போலிருக்கும் நம்முடைய வராகசாமிக்கு இந்த கொடு நீலி, துரோகி, சாகஸி, தட்டுவாணியா வந்து சேரவேண்டும்! அடே சாமா! எப்போதும் அவளுடைய கட்சியை கீழே விடாமல் தாங்கிப் பேசினாயே நீ இப்போது ஏனடா வாயைத் திறவாமல் ஆடு திருடின கள்ளனைப்போல் முழிக்கிறாய்? - என்றாள்.
சாமாவையர் நிரம்பவும் விசனக்குறிகளைக் காட்டினார். ஒன்றையும் சொல்ல மாட்டாதவரைப் போலக் கனைத்தும், எச்சிலை விழுங்கியும், வாயிலிருந்த புகையிலை சாமான்களை ஒருபுறம் ஒதுக்கி வழி செய்து கொண்டும் சிறிது தடுமாறி, “நான் வெளிப்பார்வையிலிருந்து சொன்னேனம்மா! பெண்டுகளாகிய நீங்கள் இரகசியமாய்ச் செய்யுங்காரியங்களை நான் பார்த்துக்கொண்டா இருக்கிறேன். எனக்கு மாத்திரம் இது கனவாய்த் தோன்றுகிறதன்றி இன்னமும் இது உண்மை யென்று என் மனது நம்பவில்லை. டிப்டி கலெக்டருடைய தந்தி நிஜமா யிருக்க வேண்டு மென்று நாங்கள் சொன்னதை மறுத்து ஏதேதோ தாறுமாறாய் உளறினர்களே! இப்போது பார்த் தீர்களா? எப்படி முடிந்தது?” என்றார்.
பெருந்தேவி :- அவள் இப்படி போகாமல் டிப்டி கலெக்டருடன் போயிருக்க கூடாதா வென்று இப்போது தோன்றுகிறது. அப்படியானால் அவளை நான் இன்னமும் நம்முடைய பொருளென்று சொல்லிக்கொள்ளவாகிலும் இடமுண்டு. வேண்டுமானால் கண்டித்தோ தண்டித்தோ அவளை அழைத்துக் கொள்ளலாம். இப்போது முதலுக்கே மோசம் வந்து விட்டதே!
சாமா:- (கனைத்துக்கொண்டு) அவளை இப்படியே விட்டு விடுகிறதென்று நினைத்தாயா? நாம் இதைப்பற்றி உடனே போலீசில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே அந்த நாடகக்காரனைப் பிடித்துச் சிறைப் படுத்துவார்கள். நாம் மேனகாவை உடனே அழைத்துக்கொண்டு வந்து விடலாம்.
பெருந்தேவி:- அப்படியானால் நீ உடனே போய் அந்தக் காரியத்தைப் பார். மேனகாவை அழைத்து வருவதை யாராவது பார்க்கப்போகிறார்கள், வண்டியில் ஒரு திரை கட்டி மறைத்து அழைத்துக்கொண்டு வந்துவிடு- என்றாள்.
சாமாவையர் அருகிலிருந்த வராகசாமியை அன்போடு தடவிக்கொடுத்து, “அப்பா வராகசாமி! விசனப்படாதே! என்னவோ வேளைப்பிசகு இப்படி நடந்து விட்டது; விதி யாரை விட்டது அப்பா! ஒரு காரியம் நடக்கு முன், அது நமக்குத் தெரியாமல், நாம் அது நடவாமல் தடுத்துவிடலாம். இப்போது நடந்து போனதில் நான் என்ன செய்கிறது? அதைத் தடுக்க முடியாவிட்டாலும் அது மேலும் கெடாமல் நாம் அதை நல்ல வழிக்குத் திருப்ப வேண்டும். கவலையை விட்டுவிடு. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எழுதி வைத்து மேல் நடவடிக்கை நடத்தச் செய்து மேனகாவை அழைத்து வந்து விடுகிறேன்” என்றார்.
இரண்டு கடிதங்களையும் படித்தது முதல் தீத்தணலில் புதையுண்டு கிடந்தவனைப்போலிருந்த வராகசாமிக்கு அம்மூவர் பேசியதும் கிணற்றிற்குள்ளிருந்து பேசுதலைப் போலத் தோன்றியது. என்றாலும் அம் மூவரும் பேசிய சொற்களின் கருத்தும் சாமாவையர் செய்த முடிவின் கருத்தும் அவன் மனதில் ஒருவாறு பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டா மென்னும் உறுதி தோன்ற, வராகசாமி சாமாவையரின் கையைப் பிடித்து இழுத்து சைகை செய்தான்.
அதை உணர்ந்த பெருந்தேவி, “ஆமடா சாமா! போலீசில் சொல்ல வேண்டாம். அது அவமானமாய்ப் போகும். நீ ஒரு காரியம் செய்; நீயே நேரில் போய் அந்தப் பயல் எந்த நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து மெல்ல அவனுடைய இருப்பிடத்தை அறிந்துகொள். அவனிடம் போய் போலீஸ்காரனை அழைத்து வந்து சிறையிலடைப்பதாய் மிரட்டி அவளை மாத்திரம் இரகசியமாய் அழைத்து வந்துவிடு. ஒருவருக்கும் தெரியாமற்போகும். இம்மாதிரி ஒடிப்போன பெண்களை எத்தனையோ பேர் அழைத்துவந்து பந்தியில் ஏற்றுக் கொள்ள வில்லையா? வராகசாமியிடம் ஒன்றும் கேட்காதே. அவன் அப்படித்தான் தடுப்பான்; நீ போய் அவளை அழைத்துக்கொண்டு வந்துவிடு.
சாமாவையர்:- போனது வந்தது தெரியாமல் அவளைக்கொண்டு வருவது என் பொறுப்பு; அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் போகிறேன். நீங்கள் யாரிடத்திலும் விஷயத்தைச் சொல்லாதேயுங்கள். கோமளம்! உன்னுடைய ஒட்டை வாய் ஜாக்கிரதை - என்று சொல்லிக் கொண்டு எழுந்தார். வராகசாமி அப்போதும் சாமாவையரை விடாமல் ஒரே உறுதியாய்த் தடுத்தான்.
பெருந்தேவி:- அடே சாமா! வராகசாமிக்குக் கொஞ்சம் கோபம் தணியட்டும். அதற்கு மேல் இவனுடைய யோசனையின் மேல் செய்ய வேண்டுவதைச் செய்வோம். நீ உடனே இவனுடைய பெரிய வக்கீலிடம்போய், இவனுக்கு உடம்பு சரியாக இல்லை. ஆகையால், இன்றைக்கு இவன் கச்சேரிக்கு வர முடியவில்லை யென்று சொல்லிவிட்டு வா - என்றாள்.
உடனே சாமாவையர் எழுந்து வெளியிற் போய் நல்ல மூச்சாய் விட்டுக்கொண்டு தம்முடைய வீடு சேர்ந்தார். வராகசாமி எழுந்து கடிதங்களையும் படத்தையும் எடுத்துக்கொண்டு தன் சயன அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டுத் தன் கட்டிலில் படுத்தான்.