13-வது அதிகாரம்

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

திருவல்லிக்கேணி பெரிய தெருவிலிருந்த ஒரு வீட்டு வாயிலின் சிறிய திண்ணையில் சோம்பர் மகா சபையின் தினப்படிக் கூட்டம் ஒன்று அன்னக்காவடியா பிள்ளை என்னும் ஒரு பெரிய பிரபுவின் அக்கிராசனத்தின் கீழ் நடைபெற்றது. காரியதரிசியாகிய திகம்பரமையர் தமது வலக்கரத்தில் இந்துப் பத்திரிகை யொன்றை வைத்துக்கொண்டிருந்தார். பொக்கிஷ தாரரான சவுண்டியப்ப முதலியார் தம்முடைய கையிலிருந்த சொறி சிரங்குகளைக் கணக்குப் பார்த்துத் தணிக்கை செய்துகொண்டிருந்தார். அங்கத்தினரான சாப்பாட்டு ராமையங்கார் மண் தோண்டியைக் கவிழ்த்தவாறு உருண்டு திரண்டு உடம்பை விட்டு நெடுந்தூரத்தில் தனிமையில் உட்கார்ந்திருந்த செல்லக் குழந்தையாகிய தமது தொந்தியைத் தடவிக் கொடுத்தவண்ணம் நாட்டின் வளப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். சாப்பாட்டு வேளைகள் நிற்க, மற்ற வேளைகளெல்லாம் அவர்கள் நால்வரும் அந்தத் திண்ணையிலேயே காணப்படுவார்கள். ஜெர்மானியரின் சண்டை, இராஜாங்க விஷயங்கள் முதலியவற்றையும், ஊர் வம்புகளையும் பேசி, ஆழ்ந்த யோசனைகளைச் செய்து, “அப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்”, “இப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்” என்று மேலதிகாரிகளின் காரியங்களில் குற்றங் குறைகளைக் கண்டு பிடித்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும், தருக்கம் செய்து கொண்டும், கூக்குரல் செய்து கொண்டிருப்பர். அந்தச் சங்கத்தினரின் காரியம் அம்மட்டோடு நிற்கவில்லை. அவர்கள் அந்தத் தெருவை ஒரு நாடகமேடையாகவும், அதன் வழியாகச் செல்லும் ஆண் பெண் பாலார் யாவரையும் நாடகத்தில் பிரசன்னமாகும் நடிகர், நடிகைகளாகவும், தம்மை, அந்த நாடகத்தைப் பார்க்க வந்துள்ள சபையோராகவும் மதித்து, காலைமுதல் மாலைவரையில் சோர்வின்றி அந்த இன்பகரமான வேலையில் உழைத்து வந்தனர். அப்போதைக் கப்போது வெளியாகும் நாவல்கள் முதலிய நூல்களின் குண தோஷங்களைப்பற்றி பத்திரிகைகள் மதிப்புரை எழுதுதலைப் போல இந்தச் சபையார் தெருவிற் சென்ற ஒவ்வொருவருடைய வடிவம், அழகு நடை உயரம், பருமன், ஒழுக்கம், கற்பு முதலிய யாவற்றையும், நன்றாக ஆராய்ச்சி செய்து தீர்மானங்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். முக்கியமாக பெண் பாலார் விஷயத்திலேயே அவர்கள் தமது புத்தியையும், நாட்டத்தையும் கூர்மையாகச் செலுத்தினர்.

ஒரு நாள் பிற்பகலில், இயற்கையிலேயே பெரிதும் நாணங்கொண்ட ஒரு யெளவன மடந்தை தனது கட்டை விரலைப் பார்த்த வண்ணம் அந்த வீட்டுவாயிலின் வழியாக சென்றவள், திண்ணையிலிருந்த சோம்பர் மகா சபையாரைக் கடைக்கண்ணால் தற்செயலாகப் பார்த்துவிட்டாள். அவர்கள் நால்வரின் கருணாகடாட்சமும் தன் மீது விழ்ந்திருந்ததை அவள் உணர்ந்துவிட்டாள். அவளுடைய வெட்கம் மலைபோலப் பெருகியது. புத்தி குழம்பிவிட்டது. தலை சுழன்றது, தெருவும், வீடுகளும், “விர்” ரென்று ஆகாயத்தில் கிளம்பியதாகத் தோன்றின. அந்தக் குழப்பத்தில் அவளுடைய சேலை ஒருபுறம் நெகிழ்ந்து நெடுந்துாரம் பிரயாணம் சென்றது. தலை இன்னொரு பக்கமாகத் திரும்பித் தனது ஸ்தானத்தை விட்டுப் போனது. கால்கள் பின்னற் கோலாட்டம் போட்டன. கைகளும், விரல்களும் வையாளி பாய்ந்தன. ஏழெட்டு வீடுகளுக்கு அப்பாலிருந்த தன் கூடு ஒரு காத வழியைப் போலத் தோன்றியது. அதை எப்படிச் போய்ச் சேரப்போகிறோமென்று கவலை கொண்டு வேகமாய் நடந்தாள். தலையின் ஆட்டம் அதிகரித்தது. அந்த அவசரக் கோலத்தைக் கண்ட அக்கிராசனர் அன்னக்காவடியா பிள்ளை திகம்பரமையரை பார்த்து பரிகாசமாகக் கண் சிமிட்டி, “அடே அடே பாருடா ஜோக்கே, உடம்பு எப்படி நெளியுதையா! கால் பூமியிலேயே நிக்கல்லியே! அடே செளண்டியப்பா! ஒன் கூத்தியா இவ்வளவு ஜோக்கா நடப்பாளா பாருடா!” என்று அநந்த பரவசம் அடைந்தவராய்க் கூறினார். அதைக் கேட்ட திகம்பரமையர், “அடே யப்பா காக்கா, “கர்” ரென்ற புருஷனை அப்பாடான்னு கட்டிக் கிண்டாளாம்” என்று சாப்பாட்டு ராமையங்காரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, நாவால் நொட்டையிட்டார். அன்னக்காவடியா பிள்ளை, “அடே திகம்பரம்! நீ எப்போதும் ஒன் குறும்பை மாத்திரம் விடமாட்டாயே? சாப்பாட்டு ராமன் தெய்வமென்று குந்தியிருக்கிறான். அவனுக்கும் அவளுக்கும் என்னடா முடிச்சுப் போடறே? ஏண்டா சாப்பாட்டுராமா! ஆசாமி ஆருடா இது? திருட்டுப் பயலே! நெசத்தைச் சொல்லி விடு” என்றார்.

அதைக் கேட்ட ஐயங்கார், “அடே! அடே! திகம்பரம்! ஒங்கவீட்டுப் பக்கத்திலேயே சரக்கை வைச்சிக்கிண்டு, எந்த ஊர்ச் சரக்கென்று என்னெக் கேட்கிறியேடா? அடே என்னையா ஆழம் பாக்கிரே? அடே அன்னக்காவடி! இவன் பெரிய மூட்டக் காரண்டா!” என்றார்.

திகம் பரமையர் புன்சிரிப்புடன், “அடே! சத்தியமா எனக்குத் தெரியாதப்பா! எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டிலே இவ இருக்கா. அதுதான் தெரியும்; பலே ஆசாமியாம்; பார்வையிலேயும் அப்படித்தான் இருக்கிறது” என்றார்.

அப்போது அங்கு வந்ததான துர்ப்பாக்கியத்தைப்பெற்ற அந்த அம்மாள் தன் காலின் வெள்ளி மெட்டி கழன்று பாதையில் விழுந்ததையும் எடுக்காமல் செத்தேன் பிழைத்தேனென்று வீடுபோய்ச் சேர்ந்தாள். மகா சபையோருக்கு முன்னால் அப்போது வேறு ஸ்திரீ தெருவில் நடந்தாள். அன்னக் காவடியாபிள்ளை, “அதுபோனாப்போவுது களுதே; இதைப் பாருடா என்ன குலுக்கு? என்ன தளுக்கு? இந்தத் திருவல்லிக்கேணிப் பசங்களுக்குத்தான் இந்தத் தேவிடியா நாட்டிய மெல்லாம் ஆருடா கத்துக் குடுக்கறாங்க? என்ன கண்ணாடி! என்ன வாய்வெட்டு! அந்தப் புருவ வில்லு எம்.ஆர். சி. ரயில் கைகாட்டி மரம்போல கைகாட்டி அழெக்கிதுடா” என்றார்.

அப்போது சவுண்டியப்ப முதலியார் சிரங்குகளைக் கணக்கிட்ட பிறகு இரண்டு கைகளையும் கொண்டு கணைக்கால் இரத்த வெள்ளமாகும்படி விடாமல் சொறிந்து தச்சன் இழைப்புளி போட்டுமரத்தை இழைப்பதுபோலச் சொறிந்த சுகத்தினால் தானே திறந்து கொண்ட வாயிலிருந்து மேலே வடிந்த இன்பரசத்தைத் துடைக்கவும் மனமற்றுத் தமது வேலையைப் பார்த்தார்.

திகம்பரமையர், “இவள் சரியா ஆறடி உயிரம் இருக்கிறாளே; இவள் புருஷன் இரண்டே முக்கால் அடி உயரந்தானே இருக்கிறான். இவளுடைய காதில் ஏதாவது ரகசியம் சொல்லவேண்டுமானா ஏணி வச்சு ஏறி இவளுடைய தோள்மேலே அவன் உட்கார்ந்துகொள்வானோ?” என்று கூறிக் கலகலவென்று தாமே சிரித்துக்கொண்டார்.

அன்னக்காவடியா பிள்ளை:- “இல்லேடா; இவள் கீழே படுத்துக்குவா; அவன் நின்னுகிட்டே பேசுவான். வீட்டு மச்சுமேலே ஏதாச்சும் சாமான் எடுக்கிறதுக்கு வேறே ஏணி தேவையில்லடா! இவளெக் கட்டிக்கிட்டவனுக்கு அது ஒரு லாபண்டா! ஏணி வாங்க வேண்டியதில்லை"- என்றார்.

அந்த ஸ்திரீக்கு உண்மையிலேயே நீண்ட கால்களிருந்தது அப்போது அநுகூலமாய் முடிந்தது. அவைகளின் உதவியால் அவள் சீக்கிரம் அப்பால் போய்விட்டமையால், அவர்களது மதிப்புரை மேலும் நீளவில்லை.

அதன் பிறகு தெருவில் வந்தவன் ஒரு ஆண்பிள்ளை. சபையோரின் மதிப்புரையைப் பெறும் பாக்கியம் அவனுக்கு வந்தது.

அன்னக்காவடியா பிள்ளை:- அடே! தொந்திப்பையா! இதோ போறானே, இந்தப்பைத்தியத்துக்கும் ஒனக்கும் சொந்தமாடா ? - என்றார். அவர் இல்லையென்றார்; உடனே திகம்பாமையர், “ஏண்டா! இந்த பைத்தியம் எப்படிடா வக்கில் வேலை செய்கிறான்? அதுதான் தெரியல்லே! எலிவாலைப்போல குடிமியும், தோலுரிச்ச கோழி மாதிரி உடம்பும் கோமாளி அழகு வழிகிறதப்பா!” என்றார்.

சாப்பாட்டு ராமையங்கார்:- இவன் பெண்டாட்டியை நீங்க பாத்த தில்லையே! கிளி கிளி தான். நபுன் சகன் கையிலே ரம்பை அகப்பட்ட மாதிரி வந்து வாய்ச்சிருக்க அசட்டுக்கு ஐங்கலம் காமம் என்பதைப்போல, குருட்டு நாய்க்கு முழுத் தேங்காய் அகப்பட்டமாதிரி அகப்பட்டுக்கிண்டா! அவ தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் பொண்ணாம். தங்க விக்கிரக மின்னாலும் தகும்”- என்று இரசம் ஒழுகும் படி கூறினார். உடனே திகம்பரமையர், “ஆமா! தாலி கட்டினத்தினாலேயே அவ இவனுக்குப் பெண்டாட்டியாய் விடுவாளா! அவ பலே கைகாரியாச்சே! அது தஞ்சாவூர் மராட்டியர் வீட்டிலே யெல்லாம் மேஞ்ச மாடாச்சே! அவளுக்கு இவன் மஞ்சள் அரைச்சுக் கொடுக்கத் தான் ஒதவு வான். இவனே மதிச்சுக் கூட அவ பேசறலில்லையே” என்றார்.

அன்னக்காவடியா பிள்ளை:- அடே ஆமாடா, எனக்குத் தெரியாத சங்கதி மாதிரி சொல்லுறீங்களே. தஞ்சாவூருலே ஒரு மராட்டியனை வச்சிருக்கினு ஒரு வருசமா இவன் கிட்ட வரமாட்டேன்னாளாமே! அவதானேடா? அந்த மரக்காயன் ஊட்டுலே கணக்கெளுதற பாப்பாரப் பையன் சாமா இருக்கிறானே; அவந்தானேடா இந்தவராகசாமி அக்காளையும் தங்கச்சியையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறான்- என்றார்.

உடனே திகம்பரமையர், “மொகத்தைப் பாருடா! மூணாம் பேஸ்து மாதிரி. ஆறு மாசம் பட்டினி இருந்தவன் போல இருக்காண்டா! வக்கீல் வேலையிலே சோத்துக்கே தாளம் போலே இருக்குது. மேலே துணி இல்லை. இடுப்புத் துணி சொக்கா ரெண்டோடே வெளியிலே வந்துட்டான் பாருடா எனறார்.

இந்த அன்னக்காவடி சபையினர் தங்களது வழக்கப்படிப்பேசிக்கொண்டே இருக்கட்டும். தனிமையிற் செல்லும் நமது வராகசாமியைப் பின்பற்றி நாமும் செல்வோம். தங்களுடைய அக்காளின் உபத்திரவங்களைச் சகிக்க மாட்டாதவனாய் வீட்டைவிட்டு வெளிப்பட்ட வராகசாமி பரதேசியோ அல்லது பைத்தியக்காரனோ வென்று காண்போர் நினைக்கும் வண்ணம் மெய்ம்மறந்து சோர்வடைந்து எத்தகைய காரிய காரணங்களும் இன்றி தெருத்தெருவாய் அலைந்து திரிந்தான். ஹோட்டலில் காப்பி அருந்தப் போவதாய்க் கூறி வந்தவன் ஹோட்டலையும் மறந்தான்; காப்பியையும் மறந்தான். மனமோகன மாயாண்டிப்பிள்ளையின் கடிதங்களில் இருந்த சொற்களே இன்னமும் அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து உணர்ந்த விஷயங்களை, தன்னுடைய மனத்திலிருந்து விலக்குவதற்கு அவன் எவ்வளவு முயன்றும் அம் முயற்சி பலிதமாகவில்லை. சோம்பர் மகாசபையின் கெளரவ அங்கத்தினர்களான நால்வர் மனதுகளும் எவ்வாறு சுறுசுறுப்பாக வேலைசெய்தனவோ அவைகளிலும் அதிக ஊக்கத்தோடு வராகசாமியின் மனது வேலை செய்தது. புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்புதலைப்போல அவன் மனதில் எழுபத்திரண்டு வெள்ளம் நினைவுகள் இராமபிரானுடைய வானர சைனியங்களைப் போலத்தோன்றி ஆர்ப்பரித்தன. “சே! என்ன கடிதம்! அசங்கயித்திலும் அசங்கியம்; ஆபாசத்திலும் ஆபாசம்! அதை ஏன் என் காதாற் கேட்டேன்? நினைக்கும் போதே என் தேகம் குன்றிப் போகிறதே! மனம் கூசுகிறதே! கேவலம் இழிவிலும் இழிவு! கூத்தாடிப் பயலுடைய கடிதம் என்பது சரியாய்ப் போய்விட்டது. அவன் குணம் எங்கே போகும்? லட்சம் ஜனங்களுக்கெதிரில், மானங்கெட்ட காரியங்களைச் செய்கிற உணர்ச்சியில்லா மிருகப்பயல் கடிதத்தில் எதைத்தான் எழுதமாட்டான்? மானம் வெட்கம் கண்ணியம் முதலியவற்றை உடைய மனிதன் இந்தக் கடிதத்தைக் கையாலும் தொடமாட்டான். பார்த்த கண்ணையும் தண்ணிர் விட்டு அலம்புவான். என்ன என் துர்ப்பாக்கியம் ஈசுவரா! இந்த துஷ்ட முண்டை ஒழிந்துபோன துன்பத்தோடு என்னை விட்டு விடக்கூடாதா? அவள் யாருக்கு என்ன விதத்தில் உபயோகிக்கப்படுகிறாள் என்பதைக் கூட நான் விவரமாக அறிய வேண்டுமா? அடாடா! என்ன என் தலைவிதி! இந்த மாதிரியான என்னென்றைக்கும் அழியாத அவமானம் அடைவதற்கு இந்த உலகத்தில் நான்தானா தகுந்தவனென்று பொறுக்கி யெடுத்தாய் தெய்வமே? என்ன ஜென்மம் எடுத்தேன்! இதைக் காட்டிலும் மனிதனுக்கு உண்டாகக் கூடிய துன்பம் வேறுண்டா? தெரியாத் தனத்தினால் புலவர்கள் தரித்திரக் கொடுமையே எல்லாவற்றிலும் கொடிதென்றனர். எல்லா விஷயங்களையும் நன்றாய்ச் சொன்ன பொய்யா மொழிப் புலவரான திருவள்ளுவர் கூட இந்த விஷயத்தில் தவறிப் போய்விட்டார். அவர், “இனிமையி னின்னாத துயாதெனி னின்மையி னின்மையே யின்னாதது” என்றார். பூலோகத்தில் தரித்திரக் கொடுமையே எல்லாத் துன்பங்களிலும் பெரிதென்றார். அவருடைய மனைவி நல்ல பதிவிரதையா யிருந்து விட்டமையால், தரித்திரக் கொடுமை யொன்றே அவருக்குப் பெரிதாய்ப்போய்விட்டது. அவர் சொற்படி நடக்க வேண்டுமென்று, நீர் விட்ட பழைய சாதத்தை விசிறிக் கொண்டு விசிறினாளல்லவா? பாதிக் கிணறு வரையில் இழுத்த பாத்திரத்தை, அவர் தன்னைக் கூப்பிட்டமையால், அப்படியே விட்டுவந்தாளல்லவா; அவருக்கு அந்த இறு மாப்பு, அவள் சாதாரணமாக இறந்த போதே,

“அடிசிற் கினியாளே! அன்புடையாளே!
படிசொற் றவறாத பாவாய்! அடிவருடிப்
பின்றுங்கி முன்னெழும் பேதையே! போதியோ?
என்றுங்கு மென்கணிரா?”

என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத வராயிற்றே! மனைவி அசாதாரணமாகப் புருஷனை விடுத்துப் பிரிதலைப் போன்ற துன்பம் வேறில்லை யென்பது அவருக்குத் தோன்றவில்லையோ? அவர் மகான். அவருக்குத் தோன்றவில்லையென்பது தகாது. அவர் காலத்தில் மேனகாக்களும், மாயாண்டிப்பிள்ளைகளும் இல்லாமையே காரணமாகலாம். அவருக்கு எத்தனையோ நூற்றாண்டு களுக்குப் பின் வந்த கம்பராவது இதைப் பற்றிச் சொன்னாரா? இல்லை; கம்பர் காலத்திலும் இல்லாமைத் துன்பமே பெருந்துன்பம்.

அப்போது பணமில்லாமையால் கடன் வாங்குதல் வழக்கில் வந்துவிட்டது போலிருக்கிறது! மனிதருக்கு உண்டாகும் அதிகரித்த துன்பத்தைக் கம்பர் எப்படி வருணித்தார், “கடன்கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றார். புலவருக்கு எப்போதும் தரித்திரக் கொடுமையே பெருங் கொடுமை போலும்! இராவணன், சீதையின் மனதிற்கு விரோதமாக, அவளை வற்புறுத்தித்துக்கிச் சென்றதற்கே, இராமனைக் கம்பர் அழ வைத்தாரே! என்னுடைய விஷயத்திலே இந்த இராக்ஷசியே சம்மதித்து அல்லவோ காரியம் நடத்தி இருக்கிறாள். இராமாயணம் இதைப் போல இருந்தால், கம்பர் பாட்டுப்பாடுவதற்கு முன் தாமே விழுந்து புரண்டு அழுதிருப்பார்! அவர்கள் பேரில் குறை சொல்வதேன்? அவர்களுடைய பெண்டுகள் ஒழுங்காயிருந்து விட்டனர்; இப்படி அயலானோடு ஒடவில்லை, ஆகையால், அவர்களுக்கு இந்தத் துன்பமே யாவற்றிலும் பெரிதென்பது தோன்றவில்லை. எவருக்கும் கிடைக்காத இந்தப் பாக்கியம் எனக்கா கிடைக்கவேண்டும்? நான் முன் ஜென்மங்களில் இதற்காகவா தவம் செய்தேன்? என்ன ஜென்மம் எடுத்தேன்! நான் பி.எல்., பரிட்சையில் தேறிவிட்டேன் என்று பொறாமைப் பட்ட பயல்களா! வாருங்களடா வெளியில்; ஏக புத்திரியான டிப்டி கலெக்டருடைய அழகான பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டேன் என்று பெரு மூச்சு விட்டீர்களே? இப்போது பெருமையைக் கண்டு பொறாமைப்பட ஏன் ஒருவரும் வரவில்லை? இந்தப் பெருமையைச் சிறிதும் நான் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே கொடுத்து விடுகிறேன்; யாராயினும் வாங்கிக்கொள்வீர்களா? புல்லென்றால் வாயைத் திறப்பது, கடிவாள மென்றால் வாயை மூடிக் கொள்வது; ஆம்; அதுதான் உலகநீதி. என் ஜென்மம் இப்படியா கேவலம் புழுவிலும் தாழ்ந்ததாய், யாவராலும் காறி உமிழ்ந்து நீசமென்று புறக்கணிக்கத் தக்கதாய்ப் போக வேண்டும்! இந்தப் பகல் வெளிச்சத்தில் என் வீட்டை விட்டு வெளியில் வந்தேன் மனிதரின் முகத்தைப் பார்ப்பதற்கே வெட்கமாயிருக்கிறதே! எல்லோரும் என்னைப் பார்த்துப் புரளி செய்து என்னவோ பேசிக்கொள்கிறார்களே! வீட்டில் ஒரு மூலையில் விழுந்து கிடக்காமல் ஏன் வெளியில் வந்தேன்! ஆந்தை, கோட்டான், சாகுகுருவி முதலியவை இரவில் தானே வெளியில் வருகின்றன. அவைகளுடைய ஜோடிகளும் வேறு அழகான பறவைகளைப் பிடித்துக் கொண்டு போய்விட்ட தனால் வெட்கிப் பகலில் வெளிப்படுகிறதில்லை போலிருக் கிறது” என்று பலவாறு நினைத்துப் பெரிதும் வருந்தித் துயரே வடிவாய் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றான். தன்னுடைய கேவல நிலைமையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவனை அறியாமலே கண்ணிர் வழிந்தது. இடையிலிருந்த வஸ்திரத்தின் தலைப்பால் கண்களைத்துடைத்துக் கொண்டான். “சே! அவமானம் பிடுங்கித் தின்கிறதே! ஐயோ அழுகை வருகிறதே துஷ்டக் கண்களே! ஏன் இப்படிக் கண்ணீரைச் சிந்துகிறீர்கள் பாழுங் கண்களே! என் கட்டில் நில்லாமல் அழுகிறீர்களா? உங்களுக்கு வெட்கமில்லையா? கேவலம் சண்டாளியாக மாறிப்போன ஒரு துஷ்டையின் பொருட்டு நீங்கள் அழலாமா? இனி அழுவீர்களானால் உங்களை என் கையால் திருகி எறிந்துவிடுவேன். போதும் நில்லுங்கள். ஒகோ! அவளுக்காக அழவில்லை, எனக்கு வந்த இந்த இழிவுக்காக அழுகிறீர்களோ? நீங்கள் உயிருடன் இருந்தால் அந்த மகாபாவியை இனி எப்போதாயினும் காணநேருமோ என்று அஞ்சி வெயிலில் கரையும் பனிக்கட்டியைப் போல முற்றிலும் நீராய்க் கரைந்து ஓடிப்போய்விட நினைக்கிறீர்களோ? கண்களே! செய்யுங்கள் செய்யுங்கள்; அழுங்கள் அதுதான் சரி” என்று பித்தனைப் போலப் பிதற்றிக் கொண்டு நுழைந்த தெருக்களிலேயே திரும்பத் திரும்பச் சென்றவனாக நடந்தான். அவனுக்கு ஆகாரமின்மையால் கண்கள் இருண்டன. களைப்பு மூட்டியது, ஆத்திரம் ஒன்றே தணியாமல் அவனை அங்கும் இங்கும் கட்டி இழுத்தது. சூரியனைப்பார்த்த கண்ணுக்கு உலகமெங்கும் கோடானு கோடி சூரியர்களே தோன்றுதலைப்போல, அவனுக்கு உலகத்திய பெண்பாலர் யாவருமே விபச்சாரிகளாய்த் தோன்றினர். அந்த வகுப்பாரே தனக்குப் பெரும் பகைவரென மதித்தான். எதிரில் அவனது கண்ணில் பட்ட ஒவ்வொரு மாதரின் வதனத்திலும் ஒவ்வொரு கள்ள நாயகன் ஒளிந்துகொண்டிருந்ததை வராகசாமி மாத்திரமே கண்டான். நல்ல யெளவனப் பெண்டீர் தமது வீட்டின் வாயிலில் நின்றால், மனிதர் பிளேக் வியாதி கண்ட வீட்டிற்கு நெடுந் தூரத்திற்கு அப்பாற் செல்வதைப் போல, எதிர் வீட்டின் பக்கமாகவும், அவர்களைப் பாராமலும் நடந்தான். அப்போது தெருவிலேயே அவனுக்கு எதிரில் எவராயினும் பெண்டீர் வந்துவிட்டால், அவன் வந்தவழியாகவே திரும்பிச் சென்று வேறொரு தெருவிற்குப் போனான். அங்கு சென்றால் அவ்விடத்தில் வேறொரு மாது ஹார்மோனியம் வாசித்து குயிலைப் போலப் பாடிக் கொண்டிருக்கக் கண்டான். “சே! பீடைகளா! எங்கே போனாலும் கழுத்தை அறுக்கிறீர்களா? சங்கீதம் என்ன வேண்டியிருக்கிறது மானங்கெட்ட ஜென்மமே! நாடகத்திற்குத் தயாராகிறாயோ! மேனகாவுக்கு மாயாண்டிப் பிள்ளை அகப்பட்டான். உனக்கொரு பேயாண்டிப்பிள்ளை அகப்படுவான்; சித்தமாக இரு; நடக்கட்டும்; நான் இந்த ஹார்மோனிய ஓசையைக் கேட்டதே பாவம்” என்று நினைத்து, செவிகளில் கையை வைத்து மூடிக்கொண்டு அடுத்த இன்னொரு பெருத்த தெருவில் நுழைந்து அரைப்பாகம் சென்றான். அவ்விடத்தில் பெண்களின் ஹைஸ்கூல் இருக்கிறது என்பதை மறந்து அவ்விடத்திற்குப் போய் விட்டான். அவன் நெடுந்துரத்தில் வந்தபோதே, பள்ளிக்கூடம் விடுவதற்கு மணியடிக்கப்பட்டது; அவன் அந்த வாயிலுக்கு வந்தபோது ஏராளமான மடந்தையர் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுதலைப்போலதபதபவென்று வெளிப்பட்டு விட்டனர். யாவரும் பத்துமுதல் பதினெட்டு வயதடைந்த பெண்பாவையராகவே இருந்தனர். அவர்கள் அற்புத அலங்காரத்துடன் வெளியில் தோன்றி, -

“மானினம் வருவபோன்றும், மயிலினம் திரிவபோன்றும்,
மீனினம் மிளிர்வபோன்றும், மின்னினம் மிடைவபோன்றும்,
தேனினம் சிலம்பியார்ப்பச் சிலம்பினம் புலம்பவெங்கும்,
பூநனை கூந்தன்மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்”

என்றபடி தெருமுற்றிலும் நிறைந்தனர். திடீரெனத் தோன்றிய அந்தச் சகிக்கலாற்றாத காட்சியைக் கண்ட வராகசாமி மிக்க விரைவாகத் திரும்பி, வந்த வழியே ஒட முயன்றான். அங்கு அடுத்தடுத்திருந்த இரண்டு வீட்டு வாயில்களும் பள்ளிக்கூடத்து வாயில்களாதலால் பின்புறத்திலும் யெளவனப் பெண்டீரால் சூழப்பட்ட வராகசாமியின் மனோ நிலைமையை ஊகித்துக் கொள்வதே தகுதியின்றி அதை விவரிப்பது பலியா முயற்சியாம்.

அந்தத் தெருவே அப்போது மகா அழகுடையதாய் விளங்கியது. கண்கொள்ளா அலங்காரங்களுடன் பிரகாசித்த மங்கையர் யாவரும் புன்னகையும், சிரிப்பும், மிழற்றலும், மழலையுகுத்தலும், குழலையும் யாழையும் பழித்த குரலில் தேன் ததும்ப மொழிதலும் செய்துகொண்டு தாமரைத் தடாகத்திற் செறிந்த அம்புஜ மலர்கள் போலவும், ரோஜா வனத்தின் பூங்கொம்புகளில் அடர்ந்து நின்றசையும் ரோஜா மலர்களைப்போலவும் தோன்ற, முன் ஜென்மத்தில் மகத்தான புண்ணியம் செய்துள்ள அந்தத் தெருவானது உயிர்ப் பதுமைகளால் கொலுவைக்கப் பெற்ற ஒரு பெருத்த தர்பார் மண்டபத்தைப் போல விளங்கியது. ஆனால், வராகசாமியின் தேகம் ஒரு சாணளவாய்க் குன்றியது. நீந்த அறியாதவன் நீர்வெள்ளத்தில் தத்தளிப்பதைப் போலானான். அவனது மனதின் ஆத்திரம் மலையாய்ப்பெருகியது; அவனடைந்த அருவருப்பை என்னவென்று சொல்வது? நாற்றம் நெடுந்துரம் வீசும் மாமிசங்களும், மீன்களும் வைத்து விற்கப்படும் கடைக்குள் தவறுதலாய் நுழைந்த வைதீகர்களைப்போலவும், அந்நியப் புருஷரது கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொண்ட பதிவிரதா ஸ்திரீயைப் போலவும், புலிக்குழாத்தில் அகப்பட்ட மான் கன்றைப்போலவும்; அவன் தடுமாறித் தவித்தான், கண்களை இறுக மூடிக்கொண்டான். ஒன்றையும் செய்யமாட்டாதவனாய் அப்படியே நின்று விட்டான். “தெய்வமே இது என்ன சோதனை அடுத்த தெருவில் வந்த ஒருத்திக்கு பயந்து இங்கு வந்தேன். இங்கே நூறு பேர்கள் வளைத்துக்கொண்டார்களே! நாடகக்காரனோடு ஒடிப்போன விபச்சாரிக்கா இத்தனை பேரும் பரிந்து என்னைத் துரத்துகிறார்களா! என்ன கேடுகாலம்! (பல்லை நறநறவென்று கடித்து) பீடைகளா! நான் எங்குபோனாலும் துரத்துகிறீர்களா? எனக்கென்ன பயித்தியமென்று நினைத்துக்கொண்டீர்களா?

“முட்டற்ற மஞ்சளையெண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை யோலையை
விளக்கியிட்டு
பட்டப் பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மே
லிட்டத்தை நீதவிர்ப்பா யிறைவ கச்சி யேகம்பனே.”

என்று பட்டினத்துப்பிள்ளை ஒரே பாட்டில் உங்களுடைய சாயத்தை இறக்கியிருந்தும் உங்களுடைய ஜாதிக் குறும்பு போகவில்லையா? நீங்கள் நாடகத்தின் வேஷங்களா அல்லது நாட்டியக் குதிரைகளா? இல்லற தருமத்தை நடத்தும் புருஷனுக்கு நீங்கள் அனுசரணையாயிருந்து நல்வழியிற் பயன்படும் பொருட்டு தேகம் எடுத்துள்ள பதிவிரதைகளா? அல்லது இம்மாதிரி வேஷம் போட்டு தெருத்தெருவாய் அலைந்து குலுக்கி மினுக்கிக் காணும் புருஷர் மனதிலெல்லாம் காமத்தீயையும் கபடநினைவையும் உண்டாக்கித் திரிவதே பெருத்த புருஷார்த்தமாகச் செய்வதற்கு ஜென்ம எடுத்தீர்களா? உங்கள்மேல் குற்றமில்லை. உங்களை வெளியில் அனுப்பும் முட்டாள் பயல்கள் அல்லவோ வழி சொல்ல வேண்டும். சங்கீதமாம், பள்ளிக்கூடமாம், ஸ்திரீ சுதந்திரமாம், இதுவரையில் சிறையிலிருந்து வரும் பெண்டீரை மீட்கப் போகிறார்களாம். எல்லாம் வாலறுந்த நரியின் கதைதான். இவர்கள் புஸ்தக மூட்டைகளை மார்பில் அணைத்துப் போவது தாம் பெற்ற குழந்தைகளை அணைத்துப் போவதைப் போல அல்லவோ இருக்கிறது. உங்கள் மார்பும் கைகளும் குழந்தைகளை அணைப்பதற்கே தகுந்தவை என்பது இதனால் நன்றாக விளங்குகிறது. புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப்போல அயல் நாட்டாரைப் பார்த்து நமது பெண்களும் பக்குவகாலம் அடைந்த பிறகு பள்ளிக் கூடங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் போவதாம். அன்னிய புருஷருக்கிடையில் அருவருப்பின்றி பழகுவதாம், புருஷருக்கிடையில் எழுந்து பிரசங்கம் செய்வதாம், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் பெண்களின் ஆபரணங்களைக் காற்றில் தூற்றிவிட்டு, அயல்நாடு மாதரைப்போல துடுக்கு, துணிவு, தான் என்னும் ஆணவம், அடங்காமை, பணியாமை, முதலிய துஷ்ட குணங்களைப் பெறுவதாம். பாலிய புருஷர்கள் அவளுடைய அழகில் ஈடுபட்டுக் கைகொட்டி ஆர்ப்பரிப்பதாம்; அந்நிய நாட்டு மாதரைப்போல இவ்விடத்திலும் ஸ்திரீகளைத் தம் விருப்பின் படி செய்ய விட்டுவிட வேண்டுமாம். இதுவரையில் இருந்திருந்த நமது ஸ்திரீகள் செய்யாத பெரிய காரியங்களை புது நாகரீகப் பெண்கள் சாதித்து விடப்போகிறார்களாம். நினைத்த விதம் விபச்சாரம் செய்யலாம் என்னும் எண்ணத்தைக் கொண்ட காமாதுரப் பயல்களின் கொள்கையல்லவோ இது. இப்படிச் சொல்லுகிறவன் தன் பெண்டாட்டி பெண்களை மாத்திரம் அன்னிய புருஷரோடு பழக விடுவதில்லை, தான் மாத்திரம் உலகத்தில் வேறு எந்த ஸ்திரீயோடும் பழகவேண்டுமாம். எத்தனையோ யுகயுகமாய் அநுபவத்தில் ஆராய்ந்து பார்த்து நம் முன்னோர் கண்டு பிடித்த உண்மைகளை இந்தக் காமாதுர மேதாவிகள் மாற்றப் போகிறார்களோ? பெண் வடிவமோ இயற்கையிலேயே மனிதரை மயக்கும் நோக்கம் உடையது. மகளிர் தாயாகவிருந்து புருஷரை வளர்த்து தாரமாக வந்து உயிர் குடிக்கும் இருவித நடத்தை உள்ளவர்கள். புருஷருக்குப் பெண்டிரே இயற்கைப் பகைவர். உலகப்பற்றை நீக்கிப் பிறவிக்கடலைக் கடந்து மனிதர் மோrத்திற்குச் செல்ல முடியாமல் பிள்ளைகளென்றும், பெண்னென்றும், அவற்றின் பொருட்டு வீடென்றும், பொருளென்றும் பல ஆசைகளையும், பற்றுக்களையும் உண்டாக்கி, அவன் தலையெடுக்காவிதம் செய்யும் மோகினி அவதாரம்; தண்ணிர்க்குள் ஆழ்த்தப்படும் கட்டை வெளியில் வரா வண்ணம் கீழேயே இழுத்துக் கொண்டிருக்கும் பொருட்டு பிணைக்கப்படும் கற்கண்டுகளைப் போல, மனிதன் இறப்பு பிறப்பாகிய கடலிலிருந்து மேலே போகாமல் அதற்குள்ளேயே கிடக்கும்படி பிடித்திழுத்துக் கொண்டிருக்கும் விலங்குகள் அல்லவா பெண்டீர். பட்டினத் தார் நன்றாய்ச் சொன்னார்:-

“காதென்றும் மூக்கென்றும் கண்ணென்றும் காட்டியென்

கண்ணெதிரே

மாதென்று சொல்லிவரு மாயைதனை மறலி விட்ட
தூதென் றெண்ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென் றெடுத் துரைப்பே னிறைவா கச்சி யேகம்பனே!”

என்றார்.

வீட்டிற்குள் இருந்தவண்ணமே எவ்வளவு அநர்த்தங் களைச் செய்யுங் குணமுடைய இவர்களைக் கண்டாலே மனிதன் உருக்குலைந்து போகிறானே! ஊமத்தங்காய்கள் தின்பவனுக்கே பைத்தியத்தை உண்டாக்குகின்றன; ஸ்திரீகளைக் கண்ணால் பார்த்தாலே மனிதன் உன்மத்தனாய் விடுகிறான். காமத்தினால் தனது ஒழுக்கத்தைவிட்டு கொலை களவு முதலியவற்றைப் புரியத் துணிகிறான்; இப்படிப்பட்ட ஊமத்தங்காய்களுக்கு மேல்நாட்டாரைப்போல தேவடியாள் அலங்காரமும் செய்து, சங்கீதம் கல்வி முதலியவற்றையும் கற்பித்து, பக்குவமான பிறகு, அவள் நினைத்த புருஷனோடு அலையும்படி விட்டுவிட்டால் உலகம் அழகாயிருக்கும் அல்லவா? வாலறு பட்ட ஒரு நரியின் பேச்சைக் கேட்டு எல்லா நரிகளும் வாலை அறுத்துக் கொண்டதைப் போலாகும். கேடுகாலம் நெருங்கிவிட்டது. இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னிருந்த கிழவர்கள் யாவரும் நூறு வயது, தொண்ணுறு வயதிற்குக் குறையாமல் திட சரீரங்களோடு இருந்தவர்கள். அதன் காரணம் என்ன? ஸ்திரீகளின் விஷயத்தில் நம்மவர் அனுஷ்டித்த கட்டுப்பாடே காரணம்; முன்னவரில் புருஷர் முப்பது, முப்பத்தைந்து வயதிற்கே மணந்தனர், சிங்கக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளை ஈன்றனர். இப்போது புருஷர் பதினைந்து வயதிற்கே மனதில் பெண்ணாசை கொண்டு உருகி உருக்குலைந்து போகின்றனர். காரணம் என்ன? அன்னிய நாட்டாரின் பழக்கமே இதற்கு முக்கிய காரணமாகிறது, அவர்களுடைய ஸ்திரீகளும் புருஷரும் கலியாணமாகா மடந்தையரும், அவர்களை மணக்க நினைக்கும் காதலரும் ஜோடி ஜோடியாகச் சேர்ந்து தனிமையில் அலைந்து, பிறமனிதர் இருப்பதைப் பற்றி சிறிதும் லஜ்ஜைப் படாமல் கட்டி முத்தமிட்டு அணைத்துச் சரச சல்லாபம் செய்தலை நம் சிறுவர் காணில், அவர் சும்மா இருப்பாரோ? குழந்தைகள், சிறுவர் முதலியோர் எப்போதும் பிறர் செய்வதைப்போலச் செய்ய விரும்புதலே சுபாவமாக உடையவர்; இந்தப் பொல்லா உதாரணம் தொற்று வியாதியைப் போலப் பரவி வருதலே முதற் காரணமாகிறது. பிற பாஷைகளில் உள்ளவையும், நம் பாஷைகளில் மொழி பெயர்த்துள்ளவையுமான காதலர் காதலியரின் கதைகளை நம் சிறுவர் வரம்பின்றிப் படித்தல் இன்னொரு முகாந்திரமாகிறது; நாடக மேடைகளில் கூத்தாடிகள் கேட்பாரின்றி செய்து காட்டும் அசங்கியங்களை நம் சிறுவர் பார்ப்பது மூன்றாவது காரணமாகும். அவற்றால் பிஞ்சுப்பருவத்திலேயே பெண் மோகம் கொண்டு சிறுவர் பழுத்துப் போகின்றனர். தவிர, ஏராளமான சிறுவர் படிப்பின் பொருட்டும், உத்தியோகத்தின் பொருட்டும், பெற்றோர், பெரியோர் துணையின்றித் தன்னரசாக விடப்பட்டு அவ்விடங்களில் இத்தகைய துர்நடத்தைகளைக் கண்டு கெடுதலே பெரும்பாலதாய்ப் பெருகிவிட்டது. இதனால் நம் தேசத்திய மனிதர் இறுகுமுன் கட்டுத் தளர்வடைவோராயும் பல ஹீனராயும், அற்ப ஆயுளைக் கொண்டவராயுமாய் விடுகின்றனர். இத்தகைய நிலைமையில் நம்முடைய பெண்டீரை யெல்லாம் அன்னிய நாட்டாரைப் போல விட்டு விட்டால் அந்த அநர்த்தத்தை என்னவென்று சொல்வது? இந்த விஷயத்தில் மகம்மதியரே யாவரினும் மேலான புத்திசாலிகள்!. அவர்கள் எவ்வளவு பலசாலிகளா யிருக்கின்றனர்! அவர்களில் பத்துவயதுப் பையனுக்குள்ள வீரமும், பலமும் நமது முப்பது வயது ஆண்பிள்ளைக்கு இல்லையே! இதற்கு அவர்களுடைய கோஷா முறையே காரணமாகிறது. அவரவர் தத்தம் பெண்டிரையன்றி அயல் வீட்டுப்பெண்டிரைப் பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் இல்லை ஆகையால் அவர்களுடைய தேகபலமும் தேகக்கட்டும் தளர்வடைவதும் இல்லை; உருக்குலைவதும் இல்லை. அவர்களுடைய முன்னோரே பெண்டீரது அமைப்பின் கருத்தை உள்ளபடி அறிந்து அதற்குத் தகுந்த மருந்தைக் கண்டுபிடித்த மேதாவிகள்; அவர்களில் பெண்டீர் படிக்க வில்லையா ? புத்திசாலிகளாக இருக்க வில்லையா? வீட்டின் காரியங்களை நடத்தவில்லை? வீட்டிற்குள் இருந்து படிப்பதை யாரேனும் தடுக்கிறார்களோ! சே! உலகம் இப்படியும் கெடுமா? எத்தனையோ யுகங்களாக அரங்கத்தைக் காட்டிலும் அந்தரங்கத் விடுதியே சிறந்ததாகவும் பொருள் புகழ் முதலிய செல்வத்தைக் காட்டினும் கற்புச் செல்வத்தையே சிறந்த அழகாகவும் நிதியாகவும் மதித்து உயர்வடைந்துள்ள நட்சத்திரங்களாகிய நமது நாட்டின் பெண்டீர் தமது உன்னத பதவியை இழந்து கீழே செல்ல நினைப்பாரோ? நமது ஆண்பாலர் நாகரீகம் சுதந்திரமென்னும் போர்வையை நம் பெண்டீரின் மீது போர்த்தி அவரை விபச்சாரமாகிய சேற்றிலும் உளையிலும் இழுத்துவிட்டு ஆண் பெண்பாலராகிய இருதிறத்தாருக்கும் துரிதமான அழிவைத் தேடுவாரோ! சீர்த் திருத்தங்கள் செய்ய முயலும் மேதாவிகளே முதலில் நமது பெண்டீரின் தேக பரிசுத்தத்தையும், நடத்தையையும், அழகையும் பாதுகாத்து, அவர்களை வெளியில் விடாமல் மானத்தைக் காப்பாற்றித் கொள்ளுங்கள்; நீங்கள் கெட்டுப்போய் விட்டீர்களென்று நினைத்து உலகத்தையும் கெடுக்க முயலாதீர்கள்!” என்று வராகசாமி பெருத்த ஜனாசாரச்சீர்திருத்த விஷயத்தைப் பற்றி தன் மனதிற்குள் நீண்ட தொரு உபந்நியாசம் செய்து கொண்டு நாலைந்து நிமிஷ நேரங் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தான். பள்ளிக்கூடச் சிறுமியர் யாவரும், அவன் சொல்வது நல்ல நீதி யென்று கருதி அதற்கிணங்கி வீடுசென்றவரைப் போல மாயமாய் மறைந்து தத்தம் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். வராகசாமி நல்ல மூச்சாக விடுத்துக்கொண்டு அந்தத் தெருவை விட்டு விரைந்து சென்று இன்னொரு தெருவை அடைந்தான்.

அங்கு சிறிது தூரம் செல்லுமுன் அவ்விடத்தில் பாண்டு (Band) வாத்தியத்துடன் ஒரு அலங்காரம் தோன்றியது. நல்ல வேளையாக அது பெண்ணலங்காரமல்ல. பலநிறங்களைக் கொண்ட காகிதங்களாற் செய்யப்பட்ட தோரணங்கள் மாலைகள் முதலியவற்றைப் பெற்ற ஒரு குதிரை வண்டி வந்தது. அதற்குள் பாண்டு வாத்தியம் வாசிக்கப்பட்டது. அதிலிருந்த ஒருவன் ஏதோ ஒரு துண்டு விளம்பரக் காகிதங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தான். வண்டி சென்ற வண்ணம் இருந்தது. அதன் பின் புறத்தில், விளம்பரத்திற்காக இருபது முப்பது சிறுவர் சிறுமியர் மோதியடித்துக் கொண்டு வண்டியுடன் ஓடினர். இருபக்கங்களிலும் வீட்டின் திண்ணைகளில் இருந்த பெண்டீர் சிறுவர்களை அனுப்பி விளம்பரக் காகிதங்கள் வாங்கி வரும்படி செய்ததை வராகசாமி கவனித்தான். வண்டிக் கூண்டின் இரு புறங்களிலும் இரண்டு பெருத்த மூங்கில் தட்டிகள் இருந்தன. அவற்றில் காகிதம் ஒட்டப்பட்டு, நாடகத்திரைகளைப் போல சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவை எவ்விதமான சித்திரம் என்பதை வராகசாமி கவனித்தான். அதில் ஒரு புருஷன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ஒரு அழகிய பெண் அவனுக்கு அருகில் நின்று அவன் சிரத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவ்விரு சித்திரப் பதுமைகளுக்கும் மேற் புறத்தில், தாரா சாங்கம், என்ற சொற்கள் பெருத்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. “டங்டிங் மத்தாப்பு சுந்தரி முழு நிருவாணத்தோடு எண்ணெய் தேய்ப்பது யாவரும் கண்டு ஆநந்திக்கக் கூடிய அற்புதக் காட்சி! இந்த அதிர்ஷ்ட சமயத்தை இழக்காதீர். போனால் வராது.”

என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தைப் படித்தவுடன் வராகசாமிக்கு ரெளத்திராகாரமாய்க் கோபம் பொங்கி யெழுந்தது. பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டான். வண்டியில் இருந்த பயல்களை வண்டியோடு துக்கி, விளம்பரத்தை ஆவலோடு வாங்கிப் படித்த மூடப் பெண்டீரின் மண்டை மீது ஒரு அடியாக அடித்து இருதிறத் தாரையும் கொன்றுவிடவல்லமையும், அதிகாரமும் தனக்கு இல்லையே என்று ஏங்கித் துடித்தான். அவனது மனத்திலும் வாயிலும் கோடானு கோடி வசவுகள் ஒரு நிமிஷத்தில் எழுந்தன. மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டு கல்லாய் நின்றான். “பெருத்த கூட்டத்திற்கு முன்னர் ஆடையில்லாமல் ஒரு ஸ்திரீ வருவது ஆநந்தமாம்! அற்புதமாம்! அதிர்ஷ்டமாம்! போனால் வராதாம்!!! இதைக் காட்டிலும் அதிகமான போக்கிரித்தனம் வேறுண்டோ? கேவலம் இழிந்த மிருகங்களின் நிலைமையை அடைவது அவ்வளவு அருமையான மோட்ச பதவி போலிருக்கிறதே ஆடை யில்லாமல் வந்து நடிக்கும் ஸ்திரீயை விட அங்கு கூடும் பிரபுக்களே மானங் கெட்டவர்கள்; யாவற்றையும் துறந்த பேமானிகள் துணிகளின் விலை ஒன்றுக்கு நான்காக உயர்ந்திருக்கும் இந்தப் பஞ்ச காலத்தில் ஏழை ஜனங்கள் தமது உடம்பை மூடுவது பெரிதாக நினைப்பதை விடுத்தும், அதன் பொருட்டு தேகத்தை வருத்திப் பாடுபடாமலிருந்து வஸ்திரங்களை நீக்கிவிட்டு எளிதில் இந்த ஆநந்த நிலைமையை அடைந்து விடலாமே! முட்டாள் ஜனங்களே! நீங்கள் இந்தக் கூத்தாடி நாய்களிடத்தில் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று சரமாரியாகத் தூற்றிக்கொண்டே மேலும் நடந்தான். ஊருக்குள்ளிருந்து இத்தகைய இழிவான காட்சிகளைக் காண்பது அவனுக்கு மிகவும் துன்பகரமாக இருந்தது. மிக்க விரைவாய் நடந்து கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து ஜனங்கள் இல்லாத ஓர் இடத்தில் கிடந்த கட்டு மரங்களின் இடுக்கில் படுத்துக்கொண்டான். கடற்கரையின் மாலைக் காட்சி நிரம்பவும் மனோக்கியமாக இருந்தது. நற்குண நல்லொழுக்கம் உடையோர், தமது இனிய சொற்களாலும், செயல்களாலும், தம்மிடத்தில் நெருங்கு வோரின் மனதைக் கவர்தலைப்போல, கடலின் குளிர் காற்று நல்லவர் என்றும் தீயவர் என்றும் பட்சபாதம் காட்டாமல் ஜிலுஜிலென்று வீசி, யாவரையும் மகிழ்வித்து இன்பமயமாக்கி எத்தகைய தீராத மனோ வேதனை கொண்டோரும் ஒரு சிறிதேனும் தமது துன்பத்தை மறக்கும்படி செய்தது. இராமபிரான் சீதா தேவியாரை இழந்த பின்னர், அவரைக் காண்பேனா வென்று பெரிதும் ஏங்கி, வானர சைனியங்களை நான்கு திக்குகளிலும் விடுத்துத் தேடச் செய்து மனமுடைந்து நம்பிக்கை யற்றிருந்த காலத்தில், “கண்டேன் ஜானகியாரை” என்று ஆஞ்சநேயர் திடீரென்று தோன்றிக் கூறியதைப் போல, “இவ்வளவு தானா இந்த உலகத்தின் இன்பம்! வாழ்க்கை ருசியற்றதாகப் போய்விட்டதே! எத்தனையோ அண்டபிண்ட சராசரங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஈசன் மனிதர் நீடித்து அநுபவிக்கும்படி தெவிட்டாத ஒரு சுகத்தைப் படைக்க வில்லையே!” என்று நினைத்து நம்பிக்கையற்று அருவருப்பான வாழ்க்கை செய்துவரும் விவேகிகளைப் பார்த்து, “சே! பயப்படாதேயுங்கள்; இந்த உலகத்தின் அற்பமான இன்பங்களைத் தவிர உயர்வான இன்பம் ஒன்று இருக்கிறது; நான் அந்த பேரின்ப உலகத்திலிருந்துதான் வருகிறேன்; ஆசாபாசங்களாகிய இராவணனுடனும் அவனுடைய சுற்றத்தாருடனும் போர் செய்துவந்து உங்களுடைய சுகத்தை அடையுங்கள்” என்று மந்தமாருதம் மெல்லிய குரலில் ஒவ்வோருவர் செவியிலும் செய்தி சொல்லியது. காதலிமார், தமது காதலருக்கு அனுப்பும் இரகசியமான கடிதங்களுக்கு வாசனை யூட்டி அனுப்புதல் போல், தூதாய்வந்த கடற்காற்றில் இனிமை கமழ்ந்தது. சிறுவர்கள் பைத்தியங் கொண்டவரைப் போலத் தம்மை மறந்து குதித்தாடினர். சிறியோரும் பெரியோரும் அலைகள் மோதும் இடங்களில் மிகவும் துணிவாக நின்று, அலைகள் வரும்போது பின்னால் ஒடியும், அவைகள் போகும்போது துரத்தியும் சூரப்புலிகளாய் தோள்தட்டி நின்றனர். அப்போது தரைக்குள்ளிருந்து இரதங்களைப்போல அங்கு புறப்பட்ட நண்டுகள் அவர்களைக் கண்டு பரிகாசம் செய்வன போல அலைகள் வரும்போதும் மனிதர் வரும்போதும் மண்ணிற்குள் பதுங்கியும், போன பின் வெளியில் வந்தும் ஏளனம் செய்தன. ஆண்பாலரும் பெண்பாலரும் எங்கும் கும்பல் கும்பலாக நின்று கொண்டு அவரவர்கள் மனதிற்கு உகந்தவற்றில் கவனத்தைச் செலுத்தினர். இளங்காதலன் உலகமெல்லாம் தன் மனைவியிடத்திலேயே இருக்கிறதென்று நினைத்து இறுமாப்படைந்து நடந்தான். அவனது காதலியோ கடைக்கண்ணால் தனது கணவனைப் பார்த்துப் பார்த்து அவனே கற்கண்டு மலையென நினைத்து, அடக்கிய புன்னகை தனது முகத்தில்தவழ பெருவிரலை நோக்கி நடந்தாள். குழந்தைகளின் நாட்டமோ விளையாட்டிலும், அங்கு விற்கப்பட்ட கமலாப்பழத்தின் மீதும் சென்றது. காமாதுரனது நாட்டமோ அயலான் மனைவியின்மீது சென்றது. திருடனது நினைவு மனிதருடைய இடைகளை ஆராய்ந்தது. மீன் தின்பவனது நினைவு, எவ்விடத்தில் வலையன் தனது கட்டு மரத்தோடு கரையேறுகிறான் என்று கவனித்தது. மூக்குப் பொடி போடுகிறவன் ஒரு தடவைக்குத் தேவையான பொடியைப் பெறும்பொருட்டு புதிய மனிதரிடம் நட்புப் பாராட்டி யோக க்ஷேமம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

காமாலை கொண்டவனுக்கு உலகமே மஞ்சள் நிறமுடையதாய்த் தோன்றுதலைப்போல ஒவ்வொரு வனுக்கும், அவனவனுடைய மனதின் அளவே உலகமாய்த் தோன்றியது. மூலையில் படுத்திருந்த வராகசாமிக்கோ கண்ணிற்படும் பெண்பாலர் யாவரும் மேனகாக்களாகவும், புருஷர் யாவரும் மாயாண்டிப் பிள்ளைகளாகவும் தோன்றினர். ஜனங்கள் இருந்த பக்கங்களைப் பார்த்தாலே அவனுக்குத் தலைநோவாய் இருந்தது. கடற்பக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். கடல் மகா கோபத்துடன் அலைகளை வெளியில் தள்ளி விடுதலையும், அலைகள் வெட்கமின்றித் திரும்பித் திரும்பிக் கடலிற்போய்ச் சேருதலையும் கவனித்தான். தாய்மார் குழந்தைகளிடத்தில் மனம் நிறைந்த அன்பையும் ஆசையையும் கொண்டிருந்தும், விரைவில் எழுந்து மறையும் முன்கோபத்தால் குழந்தைகளை அடித்து அப்பால் தள்ளுதல் போலவும், அக் குழந்தைகள் அழுதுகொண்டே ஓடிப்பேர்ய் தமது தாயிடமே சலுகை சொல்லிக்கொள்ளுதல் போலவும், விழுந்ததனால் தம்மீது படிந்த மண்ணோடு தாயை அணைத்துக்கொள்வது போலவும் இருந்தன. “ஆம்! ஆம்! நான் எவ்வளவு வைதாலும், அடித்தாலும் என்னை விடமாட்டே னென்று கட்டிக் கொண்டாள் அல்லவா! அலைகளே! அவள் இரகசியத்தில் செய்ததை வெளியில் காட்டி என்னை அவமானப் படுத்துகிறீர்களோ! செய்யுங்கள் செய்யுங்கள் எனக்குப் புத்தி வந்தது. இனிமேல் நான் அவளை மாத்திரமல்ல; மனிதப் புழுக்களையே என்றைக்கும் நம்பேன். வஞ்சகமும் விபசாரமுமே நிறைந்த மனித சமூகத்திலிருந்து வாழ்தலிலும் நிருமாநுனுஷ்யமான காட்டிற்குச் சென்று, இந்த ஆசையெல்லாம் ஈசன்மீது திருப்புவேனாகினால், என் ஜென்மம் ஈடேறிப்போகும், இனி நான் வீட்டுக்கே திரும்புவதில்லை; அக்காள் முதலியோர் வதைப்பதும் போதும்; நண்பர்களும் அண்டை அயலாரும் பழிப்பதும் போதும். நாளைக்கு இந்த தட்டுவாணி, நாடகத்தில் வேஷம்போட்டு ஆடவும் தொடங்குவாள். அந்த மேன்மையையும் அடைந்து நான் உயிர் வாழவேண்டுமா? சே! இந்த நாட்டிலும் இருத்தல் தகாது! காசிக்குப் போய் சந்நியாசம் வாங்கிக்கொண்டு எவர் முகத்திலும் விழிக்காமல் இமய மலைக்குப் போய்விடுகிறேன். அதுதான் சரியான காரியம்” என்று தனக்குள் ஒருவாறு உறுதி செய்துகொண்டான். அவனது மனதில் ஒருவித ஆழ்ந்த விரக்தி உண்டானது. அவன் தெய்வபக்தி உள்ளவன். ஆதலால், ஈசுவரத் தியானம் செய்யவேண்டும் என்னும் ஆவல் அடங்கா வேட்கையாக அவன் மனதில் உதித்தது. தான் பார்த்த இடமெல்லாம் கடவுள் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அங்கு தோன்றிய ஒவ்வொரு பொருளும் தனக்கு ஒவ்வொரு செய்தி சொல்லுவதாக மதித்தான். அகண்டாதீத பரிபூரண வஸ்துவும் சாந்தநிறைவுமான சச்சிதாநந்தப் பொருளே சலனமற்ற அந்த ஆழ்ந்த கடலில் பிரதி பிம்பித்துத் தோன்றுவதாக நினைத்தான். நுரையின் வெண்மை நிறமும், நீரின் கறுநிறமும் கலந்த தோற்றத்தைக் கொண்ட பெருத்த அலைகள் தரையில் மோதுவதும் அதே நிறத்தைக் கொண்ட பிரமாண்டமான மலைப் பாம்புகள் துவார பாலகர்களைப் போலவழிமறித்து, “மனிதர்களே! நீங்கள் பாவிகள், ஈசுவரனுக்கருகில் வராதீர்கள்” என்று கோபித்து சீறிக் கடிக்க வருதலைப் போல இருந்தது. கடலிலிருந்து உண்டான “ஹோ” என்னும் ஒலி “ஐயோ! நானும் அலைகளும் ஆதியந்தம் இல்லாமல் யுகங்கள் யுகங்களாக இங்கிருந்து உங்களுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவற்றின்படி நடந்து பிழைத்துப் போகாமல் மதிமந்தராகவே இருந்து இறந்து இறந்து பிறந்து பிறந்துகொண்டே இருக்கிறீர்களே! எத்தனையோ தடவைகளில் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் வரும்போ தெல்லாம் என்னை அறிந்து கொள்ளாமல் புது மனிதரைப் போலக் காணப்படுகிறீர்களே! உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் புத்திமதியை இப்படி மறந்து பிறந்து கொண்டிருக்கிறீர்களே!” என்று கடல் ஓலமிட்டு அழும் ஓசையைப்போல இருந்தது. அலைகளில் அகப்பட்ட சிறிய கட்டைகளும், தேங்காய் மட்டைகளும் அலைகளுடன் கரைக்கு வருவதும் திரும்பிச் சிறிது தூரம் வரையில் தண்ணிரில் செல்வதுமாய் அவை அழுகி நாசமாய்ப் போம்வரையில் தவித்தது எவ்விதம் இருந்தது? ஈசனை அடைய விரும்புவோர் வழிதவறி, சைவமென்றும், வைணவ மென்றும், தென்கலை யென்றும், வடகலையென்றும், இந்து வென்றும், முகம்மதிய றென்றும் இன்னம் வேறு பலவிதமாயுள்ள வேறுபாடுகளான இடையூறுகளிலும், குறுகிய கொள்கைகளிலும் அகப்பட்டுக் கொண்டு நெடுந்தூரம் செல்ல மாட்டாமல் இறந்து பிறந்து வாசல்படியிலேயே தத்தளிப்பதைப்போல இருந்தது. அந்த மணல் பரப்பிற்கு அருகில் சென்ற பாதையின் இரண்டு திக்குகளிலும் கண்காணுந்துரம் வரையில் நிறுத்தப்பட்டிருந்த கம்பங்களும், அவற்றில் அழகாய் விளங்கிய மின்சார விளக்குகளும் உலகந்தோன்றிய முதல், அப்போதைக் கப்போது அவதரித்து மற்ற மனிதரிலும் அறிவால் உயர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாய் எப்போதும் அழிவின்றி நிற்கும் ஆழ்வார்களும், நாயன்மார்களும், நபீக்களும், ஏனைய மகான்களும் சாதாரண ஜனங்களால் கண்டுபிடிப்பதற்கு ஏலாத கடவுளைக்கண்ட தமது ஞான மாகிய துரதிருஷ்டிக் கண்ணாடியை முகத்தில் அணிந்து நிற்பதைப் போல இருந்தன. நெடுந்துரத்திற்கு அப்பாலிருந்த ஹை கோர்ட்டின் மீது ஆகாயத்தை அளாவிய கம்பத்தின் உச்சியில் இருந்த திசை காட்டும் விளக்கு மாறிமாறி பிரகாசமாகவும், மங்கியும் தோன்றியது வராகசாமிக்கு எவ்வாறு இருந்தது? ஜோதி ஸ்வரூபமான பரம்பொருள், மாயையென்னும் போர்வையால் மறைந்தும் தோன்றியும் காணப்பட்டு, பிறவிக்கடலைக் கடப்போருக்கு, “இதோ இருக்கிறேன், இதோ இருக்கிறேன்; என்னை எங்கெங்கோ தேடுகிறீர்களே, பூலோகத்திய உயர்ந்த நியாய ஸ்தலத்துக்கு மேலல்லவோ நான் இருக்கிறேன், வாருங்கள்” என்று கைகாட்டி அழைப்பது போலிருந்தது. கடற் கரையோரத்தில் ஏராளமாகக் கிடந்த கட்டுமரக்கட்டைகள், பாவக்கடலை முற்றிலும் கடந்து அக்கரை சென்று கடவுளை அடையும் வல்லமைபெற்ற பொய்யான சமய நூல்களைப் - போல எண்ணிக்கை யற்றுக் கிடந்தன. ஏராளமான அந்தக் கட்டைகள் செம்படவர், கடலில் சிறிதுதுரம் சென்று அதிலுள்ள நீர் வாழைக் காய்களையும், புடலங்காய்களையும் கொய்து பிறருக்கு விற்றுப் பொருள் தேடுதற்குப் பயன்படுதல்போல சமய நூல்கள் கோயிற் பூனை தெய்வத்திற்கு அஞ்சாதென்ன, நம் பாகவதர்களும், ஆசான்களும் பிரசங்கித்து, தம் வயிற்றை நிரப்புதற்கு உபயோகப்படுதல் நினைப்பூட்டப் பட்டது. கடல்முகமாய் நீட்டி வைக்கப் பட்டிருந்த கட்டைகள் ஈசனை அடைய உபயோகப்படும் தோணிகளோ அன்றி, மனிதரைத் தடுத்துப் போர்புரியும் பொருட்டு கோட்டை மதிலின் மீது அணிவகுக்கப்பட்ட பீரங்கிகளோ வென்று ஐயுறும் வண்ணம் காணப்பட்டன.

இவ்வாறு வராகசாமியின் மனதில் விரக்திப் பெருக்கால் விபரீதமான எண்ணங்களும் தோற்றங்களும் உதித்தன. தான் உடனே எழுந்துபோய் ரயிலில் ஏறி காசிக்குப் போவதே முடிவென்று தீர்மானித்துக் கொண்டான், தனது சட்டைப் பையிலிருந்த சிறிய பணப்பையை எடுத்து ஆராய்ந்தான். அதில் ஐந்து, பத்து நோட்டுகளும் சில்லரைகளும் இருந்தன. உற்காசகத்தோடு எழுந்து மணல் பரப்பில் நடந்தான். சோர்வும் களைப்பும் மேலிட்டு அவனைக் கீழே தள்ளப் பார்த்தன. கண்கள் இருண்டன. சிறிது நேரம் நின்று, தன் மனோவுறுதி யால் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு மேலும் நடந்து பாதையை அடைந்தான். மோட்டார் வண்டிகளும், சாரட்டுகளும் போவதும் வருவதுமாய் இருந்தன. மனிதர் பலர் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தனர். வராகசாமியின் தோற்றமோ மிக்க பரிதாபமாக இருந்தது. தனது அலங்கோல நிலைமையைக் கண்டு ஜனங்கள் ஏதாயினும் நினைத்துக் கொள்வார்களோ வென்பதையும் மறந்து பாட்டைப் பக்கம் விரைவாக நடந்து சிறிது நேரத்தில் சென்னை துரைத்தனத்தாரின் கலாசாலைக்கருகில் வந்தான். அவனது நோக்கம் எதிரில் வந்த வண்டிகளிற் சென்றது. அப்போது நெடுந்துரத்திற் கப்பால் மெல்ல வந்த ஒரு மோட்டார் வண்டியைக் கண்டான். அதிலிருந்த மனிதரை அசட்டையாகப் பார்த்தான். அதில் மூவர் இருக்கக் கண்டான். முன்புறத்தில் இருந்த ஒரு மகம்மதியன் அதை ஒட்டினான். உட்புறத்தில் ஒருவர் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரு திரையால் தம்மை மறைத்துக்கொண்டும், முகத்தில் ஒரு முகமூடி அணிந்து கொண்டும் இருந்தனர். அவர் ஆணோ பெண்ணோ என்பது தோன்றாதவாறு உறை நன்றாக மூடிக்கொண்டிருந்தது. இன்னொருவர் யார் என்பதை அவனுடைய கண் ஆராய்ந்தது. அவள் அழகு பொருந்திய ஒரு யெளவனப் பெண்மணி; வெல்லெட்டு திண்டுகள் தலையணைகள் முதலிய வற்றினிடையில் அவள் சாய்ந்திருந்தாள். வாடிக்கிடக்கும் ரோஜா புஷ்பத்தைப்போல அவளது தோற்றம் நோய்கொண்டதோற்றமாக இருந்தது.தூரப் பார்வைக்கே அவளுடைய முகம், அவனுக்கு அறிமுகமானதாய்த் தோன்றியது. வந்தவள் மேனகா வென்னும் நினைவு அவன் மனதில் உண்டாயிற்று. வண்டி அருகில் நெருங்க, நெருங்க, அவனுடைய ஆச்சரியமும், கோபமும் அதிகரித்துக்கொண்டே வந்தன. அவன் தனது கண்களை நம்பாமல் மயங்கி உற்று நோக்கினான்; வண்டி அருகில் வந்து விட்டது. தனது கண்களை மூடிக்கொண்டு திண்டுகளில் சாய்ந்திருந்தவள் தன் மனைவியான மேனகாதான் என்பதை நிச்சயமாகக் கண்டான். திரையால் மூடிக் கொண்டிருந்தது மாயாண்டிப்பிள்ளை யென்றும், அவனும் மேனகாவும் கடற்காற்று வாங்க உல்லாசமாக வந்திருப்ப தாகவும், அவ்வளவு சொகுசாக திண்டுகளில் சாய்ந்து வந்தவள் தன்னைக் கண்டே அவ்வாறு கண்களை மூடிப் பாசாங்கு செய்வதாயும் நினைத்தான். அவனுக்கு உடனே அடங்காக் கோபமும், பதைபதைப்பும் உண்டாயின. தான் அவளது முகத்திலேயே இனி விழித்தல் கூடாதென நினைத்து ஊரைவிட்டு ஒடிப்போக நினைத்துப் போகும் போதும் அவள் கள்ளப்புருஷனோடு சோதனையாக எதிர்ப்பட்டது தனக்கு அபசகுணமாகவும், தான் எங்கு சென்றாலும் அவள் தனது கண்ணில் பட்டுக்கொண்டுதான் இருப்பாள் என்றும் அவன் மனதில் ஒரு எண்ணம் உண்டாயிற்று. அவள் உயிரோடு இருக்கும் வரையில் தனக்கு அவமானமும், கோபமும், துயரமும் இருந்துகொண்டே இருக்குமென்று நினைத்தான். ஆகையால், அவளைக் கொன்றுவிடுவதே யாவற்றிற்கும் மருந்து என நினைத்தான். அவளைக்கொன்றபின் தானும் நியாய ஸ்தலத்திற்குப் போய்க் கொல்லப்பட்டுப் போவதே புகழுடைத் தென்றும், செயலற்ற பேதைபோல அஞ்சி காசிக்குப் போய் சந்நியாசம் பெற்று ஒளிந்து திரிவதிற் பயனில்லையென்றும் ஒரு கடினத்தில் தீர்மானம் செய்து கொண்டான். கீழே குனிந்து அங்கு மிங்கும் நோக்கினான். சற்று துரத்தில் ஒரு தேங்காய்ப் பருமனிருந்த ஒரு கருங்கல்லைக் கையில் எடுத்துக் கொண்டான். அதற்குள் மோட்டார் வண்டி அவனைத் தாண்டித் தென்புறத்தில் பத்துப் பதினைந்து கஜதுரம் போய்விட்டது. கையில் கல்லுடன் அவனும் திரும்பி வண்டியை நோக்கி விசையாக ஒடினான். அந்த மோட்டார் வண்டியின் பின்புறத்திலிருந்த ஒரு தகட்டில் காலை வைத்தேறி, அருகில் காணப்பட்ட மேனகாவின் தலையில் அந்தக் கருங்கல்லை ஓங்கி மோதி மண்டையை உடைத்து அவளைக் கொன்றுவிட்டு இறங்கிவிட நினைத்தவனாய் விரைந்து ஓடினான். வண்டி மெல்லப் போனதாயினும், அது ஒரு ஆளின்வேகம் இருந்ததால், அவன் அதை நெருங்க நெடுந்துாரம் செல்லவேண்டியிருந்தது. களைப்பையும் பாராமல் தன் முழு வலுவையும் செலுத்தி ஓடினான். வண்டியும் சென்றது. அவ்வாறு ஐம்பது கஜதுரம் சென்றான். அடுத்த நிமிஷம் அவன் மோட்டாரை ஒரு கையாற் பிடித்துக்கொண்டு, கீழிருந்த தகட்டில் ஏறியிருப்பான். இன்னொரு நொடியில் மேனகாவின் அழகு வழிந்த முகத்தை இரத்த வெள்ளம் வழிந்து மறைத்திருக்கும் கருங்கல் அவளுடைய சிரத்தை உடைத்துச் சின்னா பின்னமாக்கி இருக்கும். முகமூடி போட்டிருந்த மனிதரும் தென்முகமாய் மேனகா வுடன் இருந்தமையால், பின்னால் ஓடிவந்த வராகசாமியை அவரும் பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில், தெய்வச் செயலாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வீட்டுக்குப் போக நேரமாய் விட்டதாகையால், விரைவாகப் போகவேண்டும் என்னும் நினைவு முகமூடி போட்டிருந்தவர் மனதில் உண்டானது; அவர் வண்டியை வேகமாய் செலுத்தும்படி வண்டிக்காரனிடம் கூறினார். அப்போது எதிரில் மிக்க அருகில் இன்னொரு மோட்டார் வண்டி வந்து கொண்டிருந்தது. இவர்கள் இருந்த வண்டிக்காரன் தனது வண்டியைச் சற்று கிழக்குப்பக்கம் விசையாக ஒதுக்கி வேகமாய் முடுக்கிவிட்டான். அதை எதிர்பாராத வராகசாமி, தனது கைப்பிடி வண்டிக்கு எட்டாமல் தவறிப் போனமையால், படேரென்று கருங்கல்லுடன் பாட்டையில் குப்புற விழுந்தான்; நாற்புறங்களிலும் தூரத்திலிருந்த மனிதர் அதைக் கண்டு,"ஐயோ! ஐயோ!” வென்று பெருத்த கூக்குரல் செய்து ஓடிவந்தனர். எதிரில் வந்த மோட்டார் வண்டி நிற்பதற்கு போதுமான சாவகாச மில்லாமையால் வராகசாமியின் உடம்பில் ஏறிப் போய் விட்டது. ஜனங்கள் பெரிதும் கூக்குரல் செய்து ஓடிவந்து சேருமுன் வண்டிகள் இரண்டும் மாயமாய்ப் பறந்து போய் விட்டன. பெரிதும் அச்சமடைந்தவராய் இரண்டு வண்டிக்காரர்களும் வாயுவேக மனோவேகமாய் வண்டிகளை ஒட்டிக்கொண்டு போயினர். ஓடிவந்து அங்கு கூடிய ஜனங்கள் உணர்வற்றவனாய் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்த வராகசாமியைத் தூக்கி யெடுத்தனர். அந்தக் கூட்டத்திலிருந்த சாமாவையர் பதைபதைத்தவராய், அப்போது வந்த இன்னொரு மோட்டார் வண்டியை நிறுத்தச் செய்து, அதில் வந்த மனிதரை நயந்து வேண்டி அதில் வராகசாமியை வைத்து, இராயப்பேட்டை சர்க்கார் வைத்தியசாலைக்கு ஒட்டச் செய்தார்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/017-022&oldid=1252755" இலிருந்து மீள்விக்கப்பட்டது