மேனகா 1/016-022
12-வது அதிகாரம்
பிச்சையெடுத்தது பெருமாள்;
பிடுங்கித்தின்றது அனுமார்.
அவன் மனதில் அப்போதைய நிலைமையை அற்ப வல்லமையுடைய மிக்க பயனுடைய சொற்களால் கேட்டறிதலினும் அதை மனதால் பாவித்தலே மிக்க பயனுடைத்தாம். அன்று அவன் சேலத்திலிருந்து வந்து வீட்டில் நுழைந்த முதல் அதுவரையில் தான் அயர்ந்த துயிலிலிருப் பதையும் அதில் மகா பயங்கரமான கனவைக் கண்டு கொண்டிருப்பதாயும் நினைத்தானேயன்றி எதிர்பார்க்கத் தகாத அத்தனை புதிய விஷயங்களும் தனக்கு அவ்வளவு சொற்ப காலத்தில் உண்மையில் நிகழக் கூடியவை அன்று என மதித்தான். அவன் உலகத்தையும் அதன் சூதுகளையும் வஞ்சனைகளையும் தீமைகளையும், ஒரு சிறிதும் அறியாதவன். ஆதலின், அவன் மனதில் உண்டான புதிய உணர்ச்சிகளும் அநுபவங்களும் மிக்க உரமாய் எழுந்து அவன் தேகத்தையும் மனதையும் கட்டிற்குக் கட்டிற்கு அடங்காமல் செய்துவிட்டன. கன்றைப் பிரிந்த தாயெனப் பெரிதும் கனிந்து இரங்கிய மனதோடு மேனகாவைக் காண ஆவல் கொண்டு ஓடி வந்தவனுக்கு அவளைக் காணாத ஏக்கம் முதலாவது இடியாக அவன் மனதைத் தாக்கியது; அந்நிலைமையில் தத்தளித்திருந்தவனுக்கு அவள் சொல்லாமல் தந்தையோடு போய்விட்டாள் என்ற செய்தி கேட்டது இரண்டாவது இடியானது. பிறகு அவள் தனக்கு மருந்திட்டாள் என்றதும் மூன்றாவது விந்தையாய் இருந்தது. அவளுடைய பெட்டியைத் திறந்தபோது தன் படம் வைக்கப்பட்டிருந்த நிலைமையைக் கண்டது நான்காவது அதிர்ச்சியாக முடிந்தது. கடைசியாக வெளியான கூத்தாடியின் விஷயம் மற்ற யாவற்றிலும் கொடிய பேரிடியாகத் தோன்றி அவன் நல்லுணர்வைச் சிதற அடித்துவிட்டது. காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டவன் மலையுச்சியிலிருந்து பாதாளத்தில் வீழ்த்தப்படுவதும், மடுகளிலும் சுழல்களிலும் புறட்டப் படுவதும், கற்பாறைகளில் இளநீரைப்போல மோதப் படுவதும், முட்களிலும், புதற்களிலும் சொருகப்படுவதும், வெள்ளத்துடன் வரும் கறுவேல மரங்களின் கிளைகளுக்குள் அகப்பட்டு அதனுடன் மாறிமாறி உட்புறம் ஆழ்த்தப்படுவதும், வெளியில் எறியப்படுவதுமாய்த் தத்தளித்துச் சித்தரவதையாகச் சிறுகச் சிறுக உயிரையும், உணர்வையும் இழப்பதைப் போல வராகசாமிக்கு உண்டான அத்தனை மனோபாவ அதிர்ச்சி களினால் அவன் நிலைமை பரிதாபத்தினும் பரிதாபகரமாக இருந்தது. அவள் நாடகக்காரனோடு நட்புக்கொண்டு ஒடிவிட்டாள் என்பதை நிச்சயமென்று அவன் மனது ஏற்றுக்கொண்டுவிட்டதாயினும், உண்மையும், அன்பும், நன்னடத்தையுமே ஒன்றாய்த் திரண்டு உருப்பெற்று வந்ததுபோல இருந்த அவள் அத்தகைய பெருத்த இழிவிற்கு இணங்கினாள் என்ற முரணான செய்தியே அவன் மனதில் இரண்டு மதங்கொண்ட யானைகள் ஒன்றோடொன்று மோதிப் போர் செய்ததை யொத்தது. அன்னிய மனிதன் மீது தன் ஆசை முழுதையும், காதல் முழுதையும் வைத்துள்ள ஒரு பெண் தன் கணவனுடன் கொஞ்சிக் குலாவிச் சிரித்து விளையாடிக் குழந்தையைப்போலக் கபடமேயின்றி இருத்தல் எப்படிக் கூடும்? உலகத்திலுள்ள எல்லா விந்தைகளிலும் இது மேலான அற்புதமாக அன்றோ இருந்தது! காதலும் கோபமும் கரைபுரண்டு எழுந்து, “நானே பெரியவன் நானே பெரியவன்” என்று ஒவ்வொன்றும் தன் தன் புகழைப் பாடி ஆதாரங்களைக் காட்டி தன் தன் கட்சியே உண்மையானது என்று வாதாடியது; வராகசாமியின் மனது ஒரு நியாய ஸ்தலத்தை யொத்திருந்தது. அதில் மேனகாவின் வக்கீலாகிய அன்பு அவளுடைய உண்மைக் காதலையும், மாசற்ற குணத்தையும் உறுதிப் படுத்தும் பொருட்டு மிக்க பாடுபட்டு அப்போதைக்கப்போது அவள் செய்த அரிய செய்கைகளையும், சொன்ன இனிய சொற்களையும் ஒவ்வொன்றாய் விரித்துப் பேசி, அவர் களுக்குள் நடந்த எண்ணிக்கையற்ற அந்தப்புர ரகசியங்களை யெல்லாம் அவன் மனதிற்குக் கொணர்ந்து, “அடே! வராகசாமி!, இவள் தங்கமான பெண்ணடா! இவளைப் போன்ற உத்தமி உனக்குக் கிடைக்க மாட்டாளடா ? உன்னையே உயிராய் மதித்தவளடா! இவள் உனக்கு இரண்டகம் செய்வாள் என்று எப்படியடா நினைப்பது?” என்று உருக்கமாகப் பேசி அவன் மனதைக் கலக்கி, அவனது கோபத்தைத் தணித்துவிட்டது. எதிர்கட்சி வக்கீலான கோபம் இரக்கமற்ற பயங்கரமான முகத்தோடு கனைத்தெழுந்து, “அடே வராகசாமி! நீ பெருத்த முட்டாளடா! அன்பெனும் இந்தப் பைத்தியக்கார வக்கீல் உளறியதைக் கேட்டு நீ ஏன் இப்படித் தடுமாறுகிறாய்? குற்றவாளி இதற்கு முன் யோக்கியமானவள் என்பதைப்பற்றி இவர் சொன்னாரேயன்றி இப்பொழுது எழுத்து மூலமாக உறுதிப்பட்டுள்ள குற்றத்தை அவள் செய்யவில்லை யென்பதற்கு என்ன ஆதாரம் கட்டினார்? இப்போது அகப்பட்டுள்ள கடிதங்களால் அவளுடைய முந்திய நடத்தைகள் பொய்யென்பது நிச்சயமாகிறது அன்றி முந்திய நடத்தைகளால் இக்கடிதங்கள் பொய்யாகப்படவில்லை. மனிதருடைய மனதும் குணமும் என்றைக்கும் மாறாத பொருட்களா? இன்றைக்கு நல்லவராய் இருப்பவர் நாளைக்குக் கெட்டவராய்ப் போகின்றனர். ஒருநாள் குற்றம் செய்கிறவன், பிறந்த முதலே குற்றஞ் செய்து கொண்டிருப்பவனாக அவசியம் இருக்க வேண்டும் என்பதில்லை அல்லவா? மோகம் பொல்லாதது. நாடகத்திலோ காணப்படுவதெல்லாம் வேஷமும் வெளி மயக்கமுமாம். படித்த மேதாவிகளும், உறுதியான மனதைக் கொண்டவர்களுமான எத்தனையோ புருஷர் நாடகம் பார்ப்பதனால் மதிமயக்கங்கொண்டு அதில் நடிக்கும் பரத்தையர் வலையிற்பட வில்லையா? சில வருஷங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்த சப்ஜட்ஜி ஒருவர், நாடகத்தில் பெண்வேஷம் தரித்து நடித்துவந்த ஒரு ஆண்பிள்ளையின் மீது மோகங்கொண்டு ரூபாய் ஆயிரம் கொடுத்து அவனைப் பெண்வேஷத்தோடு தமது வீட்டிற்கு வரவழைத்து ஒருதரம் கட்டி ஆலிங்கனம் செய்தனுப்பினாராம்; அவருடைய பாக்கியம் எவருக்கேனும் கிட்டுமா?
கூத்தாடிகள் காமத்தை உண்டாக்கும் இனிய பாடல்களைப் பாடி ஸ்திரீ புருஷர் இரகசியமாக நடத்தும் காரியங்களை எல்லாம் நாடக மேடையின் மீதே நடித்துக் காட்டினால், எவர் மனதுதான் திரும்பாது? ஆணும் பெண்ணுமல்லாத அலி நபுஞ்சகன் முதலியோரும் அந்தக் கவர்ச்சியை விலக்கக்கூடுமோ என்பதும் சந்தேகம். அப்படியிருக்க, மேனகா கூத்தாடியின் மீது ஆசை கொண்டது ஒரு விந்தையா! அவன் மீது ஆசை கொள்ளாவிடில் அவள் உன்மீது ஆசைகொள்ள ஒரு சிறிதும் நியாயமில்லை. என்னிடம் இருப்பதையும் என்னைக் காதலிப்பதையுமே அவள் பேராநந்த சுகமாய் நினைத்தவளாயிற்றே, என்று நீ சொல்லுகிறாய். அடித்தும், திட்டியும், கடிந்தும், சுட்டும், வருத்தும் மனிதனாகிய உன்னிடத்தில் சிற்றின்பம் அநுபவிப்பதே அவளுக்கு அவ்வளவு இன்பமாய்த் தோன்றினால், “கண்ணே” என்றும் “முத்தே” என்றும் காலடியில் மண்டியிட்டுக் கெஞ்சியும் கொஞ்சியும், பாடியும், பகட்டியும், துதித்தும் உருகியும், ஒய்ந்தும் தனது தயவை நாடக்கூடிய ஒரு மனிதன் - இராஜாவைப் போலப் பளபளப்பான ஆடைகள் அணிந்து அழகே வடிவாய்த் தோன்றும்- ஒரு மனிதன் அவள் மனதிற்கு உன்னைக் காட்டிலும் எத்தனை கோடி மடங்கு உயர்வானவனாய்த் தோன்றுவான்; உன்னிடம் பெறும் இன்பத்தைவிட அவனிடம் பெறும் இன்பம் சுவர்க்கபோகமாக அல்லவோ அவள் மனதிற்குத் தோன்றும். ஆகையால், மேனகாவின் வக்கீலி னுடைய வாதம் உபயோகமற்றது. செல்லத்தக்கதும் அல்ல. கடைசியாக எழுத்து மூலமாய் வெளியானதே உண்மை; அதை எவரும் அசைக்கமுடியாது. ஆகையால் தீர்ப்பு என் பக்கம் சொல்லப்படவேண்டும்” என்று கூறியது. அவ்வாறே இந்த வக்கீலின் பக்கம் தீர்மானம் செய்யப்பட்டது; அது மேனகாவுக்குப் பிரதிகூலமாயிற்று. என்ன செய்வாள் அதற்கு மேல் அப்பீல் செய்ய வழியில்லை; தீர்மானமும் நிறை வேற்றப்பட்டு வராகசாமியின் மனதிலிருந்த மேனகாவின் பொருளான காதல் முற்றிலும் ஜப்தி (பறிமுதல்) செய்யப்பட்டுப் போனது. அத்தகைய நிலைமையில் வராகசாமியின் மனதில் அடக்கவொண்ணாப் பெருங் கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. மலைகளைப் பெயர்த்துக் கடலில் வீட்டி, கடலை வாரி ஆகாயத்தில் எறிந்து, உலக மண்டலங்களை யெல்லாம் அம்மானைக் காய்களாக வீசி, அண்டத்தையும், பகிரண்டத்தையும், நிலத்தையும், நீரையும், மலையையும், மரங்களையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கதம்பம் செய்யத்தக்க சண்டமாருதம் ஒரு சிறிய வீசம் படி உழக்கிற்குள் தனது முழுவல்லமையையும் காட்டுதலைப் போல அவன் மனதில் பெருங் கோபம் மூண்டெழுந்து விவரித்தற்கு ஏலாத் துன்பம் செய்தது. தன் மனதைவிட்டு ஒரு நொடியேனும் அகலாமல் பிடிவாதமாய் எதிரில் வந்து நின்ற மேனகாவின் கபடமற்ற கலியான குணம் ஒளிர்ந்த இனிய சுந்தரவதனத்தைக் காணக்கான அவனுடைய ஆத்திரம் பெருகிக் கட்டிலடங்கா நிலையை அடைந்தது. அந்த வடிவத்தை நோக்கில் பல்லை நறநற வென்று கடித்து உருட்டி விழித்து ஒரே அடியில் அவளுடைய தேகமாகிய வஞ்சகப் பாண்டத்தை உடைத்துப் பொடியாக்கிக் காற்றில் ஊதிவிட நினைத்தான். தாயின் மடிமீதிருக்கும் குழந்தை, அவள்பார்க்கும் முகக்கண்ணாடியை நோக்கி அதற்குள் தன் தாயிருத்தலையறிந்து கண்ணாடியின் பின் புறத்தைத் தடவிப் பார்த்தலைப் போல அவனுடைய அகக்கண்ணில் தோன்றிய வடிவமே அவனுக்கு உண்மை மேனகாவைத் தோன்றியது.
“அடி வஞ்சகி! பரம சண்டாளி! துரோகி” என்ன காரியம் செய்தாய்; உன் புத்தி இப்படியா போனது! சே! என்முன் வராதே; போ அப்பால் பீடையே! முகத்தைப் பார். சிரிப்பென்ன? கொஞ்சலென்ன? யாரிடத்தில் இந்தப் பகட்டெல்லாம்? உன்னுடைய மோசத்தைக் கண்டுகொள்ளக் கூடாத என்னுடைய முட்டாள் தனத்தைத் கண்டு சிரிக்கிறாயோ? பல்லைக் காட்டாதே. பல்லைக் காட்டிக் காட்டி என் உயிரைக் கொள்ளை கொண்டது போதும். கூத்தாடியைக் கட்டிக் கொண்டு அழ நினைத்தால், தஞ்சாவூரிலேயே அவனுடன் தொலைந்து போகாமல் இங்கே வந்து உன் வஞ்சக வலையை வீசி என் மதியை மயக்கி என்னைப் பித்தனாக்கிவிட்டுத்தான் போக வேண்டுமோ? அது என்னுடைய மூடத்தனத்திற்காக உன்னால் கொடுக்கப்பட்ட சன்மானமோ ? ‘ராஜா வேஷக்காரனைப் பிடித்தோமே, அவனுக்கு சரியாக ஸ்திரீ வேஷம் போட நமக்குத் திறமை இருக்கிறதா’ என்பதை என்னிடம் பரீட்சை பார்த்தாயோ? அடி கொலை பாதகி! என்ன ஜாலம்! என்ன சாகஸம்! உயிரைக் கொடு என்றால் கொடுத்துவிடுவேன் என்றல்லவோ என்னிடம் பாசாங்கு செய்தாய்! அப்பப்பா! நீ பெண்ணா அல்லது பேயா? உன் தேகம் தசையாலானதா? அல்லது விஷத்தாலானதா? இந்தத் தடவை தஞ்சாவூரிலிருந்து நீ வந்த பின்பே புது மாதிரியாகவல்லவோ நடந்துகொண்டாய். இதற்கு முன் நீ இப்படியா வந்தாய்? இப்படியா நடித்தாய்? இவ்வளவு சாகஸமா செய்தாய்? இதில் ஏதோ சூதிருக்கிறது என்பதை அறியாமல் ஏமாறிப் போனேனே; நீ செய்த இவ்வளவும் என் மூடத்தனத்திற்கு வேண்டியதே; தஞ்சாவூரிலிருந்து வந்த தினத்தன்று இரவில் ஆகா நீ செய்து கொண்டிருந்த அலங்காரமும், நீ காட்டிய தளுக்கும் எப்படி இருந்தன தெரியுமா?
“ பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடி யளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”
என்றபடி யல்லவா இருந்தது. எல்லாம் என்னை மயக்கும் பொருட்டு ஆடிய நாடகம் என்பது இப்போதே நன்றாய்த் தெரிகிறது. கழுதைச் சாதியைச் சேர்ந்த உன்னை நான் பதுமினிஜாதிப் பெண்ணென்று நினைத்தேனல்லவா, அதன் பொருட்டு என் புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்; காலையா பிடித்து விடுகிறாய்? அப்படியே மார்பு வரையில் தடவிப் பார்க்கிறாயோ? கழுத்தைப் பிடிப்பதற்கு இன்னம் கொஞ்சந்தான் இருக்கிற தென்று காட்டினாயோ? உனக்கு என் உடம்பு இளைத்துப் போய்விட்டதென்று எவ்வளவு வருத்தம்! முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங்கூட இல்லையாம்! அடடா! எவ்வளவு விசனம்!! எதற்காக விசனம்? கொழுத்த கடாவைப் போலிருக்கும் கூத்தாடிக்குக் கால் பிடித்துவிடாமல் இவனுக்குப் பிடிக்கிறோமே என்ற விசனமல்லவா அது! தெரிந்தது. இப்போது தெரிந்தது. நீ உடம்பின் முழுதும் வஞ்சகத்தைக் கொண்ட பரம்பரையென் பதை அறியாமல் நான் சேலத்திற்குப் புறப்படு முன் உன்னை ஆலிங்கனம் செய்தேனே, அதை இப்போது நினைத்தாலும் என் மனதில் அருவருப்பு உண்டாகிறது. உன்னைத் தீண்டிய என் தேகத்தை அப்படியே நெருப்பில் போட்டுக் கரியாக்கினாலும் என் அசுத்தம் விலகாது. அணைத்துக்கொண்ட என்னை விடமாட்டேன் என்று சொல்லுகிறாய்! இன்னம் அரை நாழிகையில் உன்னை விட்டு என் ராஜதுரையின் ஆலிங்கனத்திற்குப் போய் விடுவேனே, அதையறியாமல் என்னை அணைத்துக் கொள்கிறாயே என்று சுட்டிக் காட்டினாயோ? அல்லது மனதில் அவனுடைய உருவத்தை வைத்துக்கொண்டு அவனை நினைத்துக் கட்டிக் கொண்டாயோ என் படத்தை வைத்துப் பூஜை செய்பவள் போல வெளிக்குக் காட்டி உண்மையில் கூத்தாடியின் படத்தை வைத்துப் பூஜை செய்தவளல்லவா நீ! நீ எதைத்தான் செய்யமாட்டாய்; மையைப் பூசிய திருட்டுக் கண்களால் என்னை மயக்குகிறாயோ எதிரில் நில்லாதே! நின்றால் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன். இனி நான் ஒரு நாளும் இப்படி ஏமாறுவேன் என்று நினைக்காதே! இரும்பு முள்ளால் குரவளையில் குத்தி இழுக்க முயலும் தூண்டிற்காரன் மாதுரியமான மாமிசத்தைக் காட்டி மீனை வஞ்சிப்பதைப்போல ஒவ்வொன்றுக்கும் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொஞ்சியல்லவோ ஏமாற்றினாய்! அம்மம்மா! யாரை நம்பினாலும் நம்பலாம், புருஷனிடம் சாதாரணமாய் நடவாமல், அநாவசியமான பாசாங்கு செய்து கொஞ்சிப் பேசி ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளும் கொடு நீலியரை மாத்திரம் நம்பவே கூடாதப்பா! நீ எதையும் செய்யத் துணிவாய். நான் நீண்ட காலம் ஊரை விட்டு எங்கும் போகாமலிருந்தால் இந்தக் கூத்தாடியின் வெறியால் என்னைக் கொன்றுவிடவும் நீ துணிவாய். சே! என்ன உலகம்! என்ன வாழ்க்கை! எல்லாம் மோசம்! எல்லாம் நாசம்! எங்கும் விபசாரம்! ஈசுவரன் முதற்கொண்டு புழுப் பூச்சிகளிலும் விபச்சாரம்! ஆயிரம் ஸ்திரீகளில் ஒருத்தி சுத்தமானவள் என்பதும் சந்தேகம். எவரும் கொஞ்சமும் சந்தேகப்படாத விதத்தில் எவ்வளவு அபாரமான காரியங்களைச் செய்திருக்கிறாய்! உன்னுடைய சாமர்த்தியம் அல்லவா சாமர்த்தியம்! தாசி வேசிகளெல்லாம் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறதே! கூத்தாடிகள் எல்லாம் உன் சாகலத்தைக் கற்க உன் காலடியில் தவம் புரியவேண்டுமே! பெட்டியில் சாமான்களை நாடகக் காட்சிபோல அல்லவோ கொலு வைத்திருந்தாய்! உன் பெட்டியே அதைக் கண்டு சகியாமல் உன் இரண்டகத்தை வெளிப்படுத்திவிட்டதே! அது எனக்கும் நல்லதாகவே முடிந்தது. இல்லையானால் உன்னுடைய திருட்டை அறியாதவனாய் நான் பரத்தையாகிய உன்னை இன்னமும் தேடும்படியான வீண் இழிவு உண்டாயிருக்கும் அல்லவா! இப்போது அது இல்லாமற் போனது. டிப்டி கலெக்டராம்! கையாலாகாத முண்டம். புருஷன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டு வந்த பெண்ணை எந்த முட்டாளாயினும் வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவானா? தன் வீட்டில் நடக்கும் இந்தப் பெருந்திருட்டை அடக்க அறியாத மூடன், ஊராரின் உரிமைகளைக் காப்பாற்றப் போகிறானோ! தலைமுறை தலைமுறையா யில்லாமல், இந்தத் துணிவும் நினைவும் உண்டாகுமோ? தாயின் குணமே பெண்ணிடம் இருக்கும் என்று சொல்வது பொய்யாகாது. இவள் ஒரு கூத்தாடியைப் பிடித்துக் கொண்டால், இவளுடைய தாய் ஒரு குரங்காட்டியை வைத்துக்கொண்டிருப்பாள். ஈசுவரா! கர்மம்! கர்மம்! நமக்கு வாய்த்த சம்பந்தம் இப்படியா இருக்க வேண்டும்? இந்தக் கூட்டிக் கொடுக்கும் பயலுக்கு கெளரதை என்ன வேண்டியிருக்கிறது? அதிகாரமென்ன வேண்டியிருக் கிறது? எல்லாச் செல்வத்திலும் மேலான மனைவியின் கற்புச் செல்வம் தனக்கில்லாத மனிதன் மனிதனா? அவன் உயிரை வைத்துக்கொண்டு நடைபிணமாய் உலகத்தில் ஏன் திரிய வேண்டும்! இந்தக் கும்பலே பட்டிக் கும்பல் போலிருக்கிறது! குலம் கோத்திரம் முதலியவற்றை விசாரிக்காமல் பணத்தையும் உத்தியோகத்தையும் மாத்திரம் கண்டு ஆத்திரப்பட்டுச் செய்த கலியாணம் அல்லவா! நமக்கு வேண்டும்; சே! இனி எனக்கு ஆயுட்காலம் முழுவதும் பெண்டாட்டியே வேண்டாம். போதும் நான் பெண்டாட்டியை அடைந்து திண்டாடித் தெருவில் நின்றது. பெண் என்பதே பேய் வடிவம்! நாணம் என்னும் ஒரு வஞ்சகப் போர்வையணிந்து கொண்டு ஆண்பிள்ளைகளை யெல்லாம் ஏமாற்றும் விபசார வடிவம். இதனாலே தான் பெட்டியை அவ்வளவு ஜாக்கிரதையாகப் பூட்டியும் திறவுகோலைக் கழுத்தைவிட்டு நீங்காமலும் வைத்திருந்தாயோ! ஆகா! நீ இங்கே இருந்த காலத்தில் இந்தக் கடிதங்கள் அகப்பட்டிருந்தால், உன்னை உயிரோடு பூமியில் புதைத்திருப்பேன். தப்பித்துக்கொண்டல்லவா போய் விட்டாய்!” என்று அன்று பகல் நெடுநேரம் வரையில் ஆத்திரத்தோடு பிதற்றிக் கொண்டும் வெற்று வெளியை நோக்கி நறநற வென்று பல்லைக் கடித்துக் கொண்டும் புரண்டு புரண்டு வெயிலிற் புழுத் துடிப்பதைப்போல வருந்தினான். அவன் எவ்வளவு அதட்டியும், வைதும், இகழ்ந்தும், வெறுத்தும் பேசினான். ஆயினும் மேனகாவின் வடிவம் இனிமையான புன்னகை தவழ்ந்த முகத்தோடு அவனது அகக் கண்ணை விட்டு அகலாமல் நின்று கொண்டிருந்தது. அந்த வடிவத்தை விலக்க அவன் செய்த முயற்சியால், அது முன்னிலும் அதிகமாக மனதில் ஊன்றி நின்றது. அவள் வஞ்சகி, விபசாரி யென்பதும், கூத்தாடியோடு ஓடி விட்டாள் என்பதும் அவனுடைய பகுத்தறிவால் உண்மையென்று ஒப்புக்கொள்ளப்பட்டுப் போயிருந்தும், “அவள் அப்படியும் செய்வாளோ” என்னும் ஒரு வியப்பு மாத்திரம் இன்னமும் அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. குழலினும் யாழினும் மிக்க இனிமையாய் மழலை மிழற்றிக் கொஞ்சி விளையாடித் தளர்நடை நடந்து வீட்டிற்கோர் இளஞ்சூரியனைப் போல விளங்கி, மகிழ்ச்சியாகிய கிரணங்களைப் பரப்பித் தானும் இன்பமயமாய் இருந்து தன்னைக் காண்போர்க்கும் இன்பம் பயத்து மனோகர வடிவமாய் விளங்கி மேன்மேலும் வளர்ந்து வாழக்கூடியதாய்த் தோன்றிய நோயற்ற மூன்று வயதுக் குழந்தை, திடீரென்று ஜன்னி கொண்டு ஒரே இழுப்பில் உயிரை விடுமாயின், அதன் பெற்றோர் அது இறந்ததை நம்புவாரோ! அது பேச்சு மூச்சற்றுக் கண்ணிற்கு எதிரில் கிடக்கினும் அது துயில்வதாய் நினைப்பர் அன்றோ அது பேசும், அது எழுந்திருக்கும், அது உடம்பை அசைக்கும் என்று பேதமையால் எண்ணிக் கடைசி வரையில், அது இறந்தது என்பதை நம்பார் அன்றோ! அவ்வாறே வராகசாமியின் நிலைமையும் இருந்தது. யாவும் கனவாய்ப் போகக் கூடாதா, மேனகா சமையலறை யிலிருந்து வந்துவிடக்கூடாதா என்று நினைத்தான்; சுவரில் மாட்டப் பட்டிருந்த படம் காற்றில் அசைந்தால் மேனகா தான் வந்து விட்டாளோ என்ற எண்ணம் அவன் மனதில் உதிக்கும். இவ்வாறு மேனகாவின் உயிரற்ற வடிவத்துடன் அவன் போராடி மாறி மாறி அவள் மீது ஆத்திரமும், பெரும் கோபமும், இரக்கமும் கொண்டவனாய்ச்சித்தக் கலக்கமடைந்து பிதற்றிக் கிடந்தான்.
பெருந்தேவி, கோமளம் ஆகிய இருவரும் துக்கமும் வெட்கமும் அடைந்தவர் போல நடித்து அன்று பகற் பொழுதிற்குள் மூன்றே முறை போஜனம் செய்து விட்டு, முதல்நாள் தயாரித்த சீடையில் தலைக்கு ஒரு மூட்டை மடியிற் கட்டிக்கொண்டு, துக்கத்தின் சுமையைத் தாங்கமாட்டாமலோ, தமது வயிற்றின் சுமையைத் தாங்க மாட்டாமலோ, அன்றி சீடைமூட்டையின் சுமையைத் தாங்க மாட்டாமலோ சோர் வடைந்தவராய் சாவகாசமாய் அந்த சீடைகளுக்கு வழி சொல்லவேண்டும் என்னும் கருத்தோடு இரண்டு மூலைகளில் உட்கார்ந்து விட்டனர். ஆகா! அவர்கள் அடைந்த விசனத்தை என்ன வென்று சொல்வது! அவர்கள் வாயில் போட்டுக் கொண்ட சீடைகளெல்லாம் கரைந்து உருகித் தாமாய், உள்ளே போய்க்கொண்டிருந்தன வென்றால், அவர்களுடைய துயரத்திற்கு வேறு குறியும் தேவையா? மேனகாவின் பொருட்டு சீடைகளும் மண்டையை உடைத்துக்கொண்டு விழுந்து நெகிழ்தலை உணர்ந்த அவர்களுடைய கண்கள் ஆநந்தக் கண்ணிர் விடுத்தன. மேனகா மோசம் செய்து விட்டு ஒடிப்போனதைக்குறித்து வராகசாமியின் செவிகளில் படும் வண்ணம் அவர்கள் அடிக்கடி வாயில் வந்த விதம் பிதற்றினர். பிரம்மாண்டமான ஒரு தேர் கீழே கவிழ்ந்து போகக் கூடியதாய் விரைந்து ஒடுதலைப் போல அவர்களுடைய கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்து நெடுந்துரம் செல்லும்; உடனே சீடைகளாகிய முட்டுக்கட்டைகளைக் கொடுத்து அந்தத் தேரை நிறுத்துவார்கள். விசனத்தைக் குறித்த சொற்களை வாரிவாரி விசுவார்கள். சீடைகள் இடை இடையில் முற்றுப் புள்ளிகளாகவும், கேள்விக் குறிகளாகவும் , நிறுத்தல் குறிகளாகவும் இலக்கணப் பிழையின்றித் தோன்றி அழகுப் படுத்தும். அவமானத்தினாலும், வெட்கத்தினாலும், மடியிலிருந்த சீடை மூட்டைகளின் தேகம் அடிக்கடி குன்றிக் குறுகிப்போனது. என்ன செய்வார்கள்! பொறுமைப் பொறுத்தவர்கள்; அலுப்பைப் பாராமல் ஒவ்வொரு தடவையும் சீடை பாத்திரம் இருந்த இடத்திற்குப் போய் மடியை நிரப்பிக் கொண்டு வருவார்கள். சாப்பாட்டுக்கு வரும்படி நெடுநேரமாகப் பெருந்தேவி வராகசாமியை அழைத்தும், அவன் அதைக் கவனியாமல் இருந்து விட்டான்.
பெருந்தேவியம்மாள், “அந்தக் கொழுப் பெடுத்த லண்டி ஒரு தடிப்பயலைத் தேடிக்கொண்டு ஓடினால் அதற்காக நீ ஏனடா பட்டினியாய்க் கிடந்து சாகிறாய்? இப்பேர்ப்பட்ட பெண்டாட்டி போனதைப் பற்றி விசனப்படுவது கூடப்பாவமடா? எழுந்து வா!” என்று கடுமையாக அழுத்தி நூறாம் முறை கூறினாள்.
வராகசாமி அதைக் கேட்கப் பொறாமல், “எனக்குப் பசியில்லை, நீங்கள் சாப்பிடுங்கள். பசி உண்டாகும்போது வருகிறேன்” என்று அருவருப்பாக மறுமொழி கூறினான்.
பெருந்தேவியா அவனை உயிரோடு விடுகிறவள்? “காலை முதல் காப்பி கூட சாப்பிட வில்லை; மணி இரண்டாகிறது. இதென்ன பெருத்த வதையாயிருக்கிறதே! பசிக்க வில்லையாமே! இவ்வளவு நாழிகை பசியாமலிருக்க நீ எதைச் சாப்பிட்டாய்? சேலத்திலிருந்து பசியா வரம் வாங்கிக்கொண்டு வந்தாயா? கிடக்கிறது எழுந்து வா; கொஞ்சமாக சாப்பிட்டு விட்டுப் போய் படுத்துக்கொள்கிறது தானே? உன்னை யார் விசனப்பட வேண்டாம் என்று சொல்கிறார்கள்?” என்று அன்போடு அதட்டி மொழிந்தாள்.
வராக:- அக்காள் என்னை வீணாக ஏன் உபத்திர விக்கிறாய்? எனக்கு இப்போது சாப்பாட்டில் மனம் நாட வில்லை. இராத்திரி வேண்டுமானால் பார்த்துக்கொள்வோம்.
கோமளம்:- இராத்திரி வரையில் உபவாசமிருந்தால் போனவள் வந்துவிடுவாளா? அல்லது இந்த ஒரு வேளைப் பட்டினியோடு இந்த அவமானம் நீங்கிப் போகுமா?
பெருந்தேவி:- இனிமேல் அவள் ஏன் வருகிறாள்? அவள் வந்தாலும் நாம் அவளைச் சேர்த்துக்கொண்டால் நம்முடைய வீட்டில் நாய் கூடத் தண்ணிர் குடிக்காதே (கையை மோவா யோடு சேர்த்து வியப்புக்குறி காட்டி) அடி என்ன சாகஸமடி! என்ன சாமர்த்தியமடி! அந்தத் தடியனை டிப்டி கலெக்டரைப் போல வரச்சொல்லி இந்தப்பட்டி முண்டை மகா தந்திரமாய்ப் போய்ச் சேர்ந்துவிட்டாளே! எனக்கு இப்போது நன்றாய் ஞாபகம் உண்டாகிறது; இந்த ஒரு வாரமாக நான் கவனித்தேன். கொள்ளு கொள்ளென்று இருமிக்கொண்டு ஒரு கிழட்டுமுண்டை நம்முடைய வாசல் திண்ணையில் அடிக்கடி உட்கார்ந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். இந்த இருமல் இவளை வெளியில் வரும்படி அழைத்த ஜாடை போலிருக்கிறது.
கோமளம்:- ஆமாம்! எனக்குக் கூட இப்போது ஞாபகம் உண்டாகிறது. வராகசாமி சேலத்திற்குப் போன அன்றைக்கு மத்தியானம் எச்சிலை எடுத்துப் போய் வாசலில் எறியப்போன மேனகா அவளுடன் என்னவோ மெதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் உள்ளே வந்துவிட்டாள். நான் போய், “நீ யாரடி?” என்று கேட்டேன். “நான் கூலி வேலை செய்கிறவள். களைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். தாகத்துக்கு ஜலங் கேட்டேன்; இப்போது உள்ளே போன அம்மாள் ஜலங் கொடுத்தால் சேஷமாய்ப் போய் விடும்” என்று சொல்லி விட்டார்கள். “உயிர் போகிறது; நீங்கள்தான் கொஞ்சம் ஜலம் கையில் வாருங்கள்” என்றாள். “நாங்கள் கொடுக்கக் கூடாது” என்று சொல்லி வந்து விட்டேன். அவள் தான் தூதுவளாயிருக்கவேண்டும்; பகல் வேளையிலேதான் அவள் வருகிற வழக்கம். அவள் நாளைக்கு வந்தால் பிடித்துப் போலீசில் அடைத்து உள்ளதைச் சொல்லும்படி நசுக்கினால் உடனே எல்லாம் வெளியாகிறது.
பெரு:- அடி பைத்தியக்காரி! போ; அவளுக்கு இனி இங்கே என்ன வேலை இருக்கிறது? அவள் வந்த காரியம் முடிந்துபோய் விட்டது. (வருத்தமாக) அடே வராகசாமி! உடம்பு கெட்டுப் போகுமடா: இதில் உனக்கு மட்டுந்தானா விசனம் ? எங்களுக்கு விசனமில்லையா? எவ்வளவோ அருமையான மனிதர் ஐந்து நிமிஷத்தில் வாந்தி பேதியில் போகிறதில்லையா? அந்த மாதிரி நினைத்துக் கொள்; எழுந்து வா; இல்லாவிட்டால் நான் சாதத்தை வெள்ளிப் பாத்திரத்தில் பிசைந்து உள்ளே கொண்டு வரட்டுமா?
வராக:- (ஆத்திரத்தோடு) அக்காள் ஏன் என்னை வீணாய்க் கொல்லுகிறாய்? எனக்கு இப்போது சாதம் வேண்டாம்; சாப்பிடாததனால் நான் செத்துப்போயிட மாட்டேன். பேசாமலிரு - என்றான்.
அவள் ஓயாமற் சொன்ன உபசார வார்த்தைகள் அவனுக்குப் பெருந்தொல்லையாய் இருந்தன. மேனகாவும் தானும் நிகரற்ற இன்பம் அநுபவித்திருந்த சயனத்தில் இருந்ததும் நரக வேதனையாய்த் தோன்றியது. அந்த இடத்தைவிட்டு எங்கேயாயினும் போனால் தன் மனத்தின் குழப்பமும் கொதிப்பும் வேதனையும் தணிவடையலாம் என்று நினைத்து எழுந்து கூடத்திற்கு வந்து, “நான் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வெளியிற் போய்விட்டான்.
பெரு:- (கோமளத்தை நோக்கி) இன்றைக்கு இப்படித்தான் இருக்கும்; எல்லாம் இன்னம் நாலைந்து நாளில் சரியாய்ப் போகிறது. பழைய பெண்டாட்டி போனால் புதுப் பெண்டாட்டி வரப் போகிறாள். விசனமென்ன? புதியவளால் பெரிய ஆஸ்தி கிடைக்கப் போகிறது. நாளைக்கே வீடு வாங்கப் போகிறோம். அந்த நன்மை யெல்லாம் இவனுக்கு இப்போது தெரியாது; பின்னால் சுகப்படும் போது மேனகா போனது நல்லது என்பது விளங்கும்.
கோமளம்:- அப்போது நிஜத்தை நாம் இவனிடம் சொன்னாற் கூட, இவன் கோபித்துக் கொள்ள மாட்டான்.
பெரு:- சேச்சே! நிஜத்தை நாம் ஒருநாளும் இவனிடம் வெளியிடக் கூடாது. குடி கெட்டுப்போம்; இவன் இப்போது முன்மாதிரி இருக்க வில்லை. சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை யல்லவா! நாம் ஏதோ ஒரு பெருத்த நன்மையை உத்தேசித்து அவளை விற்றுவிட்டோம். இனிமேலும் இவனிடம் அயோக்கியத் தனமாய் நடந்து கொண்டால் நம்மை ஓட்டி விடுவான்; சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் ஒழுங்காக நடந்து வரவேண்டும்- என்றாள்.
அப்போது அவளுடைய சீடைமூட்டையும் குறைந்து போயிற்று. அடிக்கடி அதை நிரப்புவதற்கு எழுந்து போவதும் தொல்லையாயிருந்தது. வராகசாமிக்கு அடிக்கடி வாய் உபசாரம் சொல்லும் துன்பமும் தீர்ந்தது. ஆகையால், சீடைப் பாத்திரத்தையே எடுத்து வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
அப்போது சாமாவையர் கனைத்துக்கொண்டு ஆடி அசைந்து மதயானையைப் போல நடந்து உள்ளே வந்தார். மூவரும் புன் சிரிப்பால் தமது வெற்றியையும் மகிழ்ச்சியையும் காட்டிக் கொண்டனர்.
பெரு:- அடே சாமா! சீடை கொஞ்சம் எடுத்துக் கொள்ளடா! நன்றாயிருக்கிறது. வாயில் போடுமுன் கரைந்து போகிறது.
சாமாவையர்:- (சந்தோஷ நகை நகைத்து) உன் காரியத்திற்குச் சொல்ல வேண்டுமா அம்மா! எனக்குப் பத்து எட்டு கொடுப்பது போதாது; ஒருபடி நிறைய கொடுக்க வேண்டும்.
பெரு:- தேவையானது இருக்கிறது. இரண்டு படி வேண்டுமானாலும் சாப்பிடு - என்றாள்.
அதற்குள் கோமளம் ஒரு வெள்ளிக் கிண்ணியில் சீடையை நிரப்பி அவரிடம் நீட்ட, அவர் அதை வைத்துக்கொண்டு ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து அதை உள்ளே உருட்டிவிடத் தொடங்கினார்.
சாமா:- வராகசாமி எங்கேயோ போகிறானே! எங்கே போகிறான்?
பெரு:- சாப்பிடவே மாட்டே னென்கிறான். காப்பி சாப்பிட ஹோட்டலுக்குப் போகிறான்.
சாமா:- எல்லாம் இரண்டு மூன்று நாளில் சரியாப் போகிறது. அவள் மருந்து போட்டாளென்று நீ ஆயிரம் உறுதி சொன்னாயே; இவன் நம்பினானா பார்த்தாயா! கடிதங்களைக் கண்டவுடனே நம்பி விட்டானே. என்னுடைய யோசனை எப்படி வேலை செய்தது பார்த்தாயா?
பெரு:- ஆமாம்; நல்ல யோசனைதான்.
சாமா:- (இறுமாப்பாக) இதனால்தான் எல்லாவற்றிற்கும் என் யோசனையைக் கேட்டுச் செய்யுங்கள் என்று சொல்வது. இன்னொரு முக்கியமான விஷயம். அநேக வீடுகள் பார்த்தேன். சிறிய பன்றி குடிசைகளுக் கெல்லாம் நாலாயிரம் ஐயாயிரம் கேட்கிறார்கள். ஒன்றும் சரிப்படவில்லை. மைலாப்பூரில் ஒரு பங்களா இருக்கிறது. கரையோரம், பலே சொகுசான இடம், இருந்தாலும் அந்த இடத்தில் இருக்க வேண்டும். ஓயாமல் கடல்காற்று. ஒருபக்கம் புஷ்பத் தோட்டம், இன்னொரு பக்கத்தில் வாழை, பாக்கு, தென்னை, மா, மாதுளை, எலுமிச்சை, பலா, கமலா முதலிய மரங்களின் பழங்கள் குலுங்குகின்றன. அவற்றில் கிளிகள் கொஞ்சுகின்றன. ஒரு பக்கத்தில் தடாகம்; மரங்களிலெல்லாம் ஊஞ்சல்; உட்கார எங்கு பார்த்தாலும் சலவைக்கல் மேடைகள்; எங்கும் மணல் தரை; பெருத்த பங்களா; அதன் மணல் கரையைக் காணும்போது வயதான கிழவர்களுக்குக்கூட அதில் ஒடி விளையாடவேண்டு மென்னும் ஆசை உண்டாகும். குருடன் கூட இருபதினாயிரம் கொடுத்து விடுவான். தோதாக வந்திருக்கிறது. நம்முடைய நைனா முகம்மது இருக்கிறா னல்லவா; அவன் சிற்றப்பனுடைய பங்களா இது. அவன் நாகைப்பட்டினத்தில் கப்பல் வியாபாரி; இது அவனுக்கு இலட்சியமே இல்லை. இதை வந்த விலைக்கு விற்று விடும்படி எழுதியிருக்கிறான். சுலபத்தில் தட்டிவிடலாம். இது கிடைத்துவிடுமானால் நல்ல அதிர்ஷ்டந்தான்.
கோமளம்:- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரிதான்.
பெரு:- இருபதினாயிரம் ரூபாய்க்கு நாமெங்கடா போகிறது? விற்பதற்கு இன்னம் மூன்று மேனகாக்கள் வேண்டுமே?
சாமா:- அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவனுக்கு இந்த ஊரின் விலையேற்றம் தெரியாது. இது பன்னிரெண் டாயிரத்துக்கு மேல் போகாதென்று நான் அவனுக்கு முன்னொரு கடிதம் எழுதினேன். வேறு யாருக்காயினும் வேண்டுமானாலும் அந்த விலைக்கு வாங்கிக் கொடுத்து விடலாம். நான் எனக்கே வேண்டுமென்று சொன்னால், அவன் எனக்கு இரண்டாயிரத் தைந்நூறு ரூபாய் குறைத்து விடுவான். என்ன செய்கிறது? நம்முடைய தரித்திரம் கையில் பணமில்லை. நைனாமுகம்மது கொடுத்த ஐயாயிரமும் என்னிடம் பவுன்களாக இருக்கிறது. இன்னும் நாலாயிரத் தைந்நூறு ரூபாய் வேண்டும். அதாவது இன்னம் 300-பவுன்கள் சேர்த்து எல்லாவற்றையும் பவுன்களாகக் கலகலவென்று கொட்டினால் மரக்காயன் மஞ்சள் காசுகளைக் கண்டு வாயைப் பிளப்பான். நாம் பங்களாவை உடனே அடித்துவிடலாம்.
பெரு:- அப்படியானால் பங்களா இருபதினாயிரம் பெறுமா? அவ்வளவு உயர்வானதா?.
சாமா:- நீ அங்கு வந்து அதற்குள் நுழைவாயானால், அப்புறம் இந்த வீட்டிற்கே வரமாட்டாய்! ரிஷி ஆசிரமம் போல இருக்கிறது. பாக்கியலட்சுமி தாண்டவ மாடுகிறாள். நீ கொடுத்த பணத்திற்கு அதில் உண்டாகும் ஒட்டு மாம்பழம் மாத்திரம் இரண்டு வட்டிக்குக் கட்டிக்கொள்ளும். மற்றப் பழங்கள், தேங்காய் முதலியவை இருக்கின்றன. குடியிருக்கும் இடம் வேறு இருக்கிறது. நாம் போடும் முதல் பணமே நாலு வருஷத்தில் வந்துவிடும்.
கோமளம்:- கோடாலிக் கறுப் பூரான் பங்களாவைப் பார்ப்பானானால் தேன் குடித்த நரியைப்போல மயங்கிவிட மாட்டானா?
பெரு:- உன்பேரில்தான் வீட்டை வாங்கவேண்டுமா?
சாமா:- ரூபாய் பன்னிரண்டாயிரம் கொடுப்பதானால் உன் பேரில் வாங்கத் தடையில்லை. என்பேரில் வாங்கினால் இரண்டாயிரத்தைந்நூறு குறையும்.
பெரு:- அதுவும் நமக்கு இப்போது அநுகூலமான காரியந்தான். இப்போது திடீரென்று என் பேரில் இவ்வளவு பெரிய பங்களா வை வாங்கினால் வராகசாமி சந்தேகப் படுவான். நீயே வாங்கினதாக இருக்கட்டும். அதில் நீ எங்களை இனாமாக குடிவைப்பதாக இருக்கட்டும். வேறு கலியாணம் ஆகும் வரையில் அங்கு நாமிருக்க வேண்டும் என்றும், அது எங்களுடையது என்று சொல்லிக் கொள்ளும் படிக்கும் வராகசாமியிடம் தெரிவித்தால், அவன் சந்தேகப்பட மாட்டான். நடக்க நடக்க மேலே யோசனை செய்து கொள்வோம்.
கோமளம்:- (சிரித்துக் கொண்டு) தோட்டம் நிலைத்தல்லவா தென்னம் பிள்ளைவைக்க வேண்டும். முதலில் பணம் வேண்டுமே. இன்னும் முன்னூறு மஞ்சள் காசு வேண்டாமா? அதற்கு யார் வீட்டில் கன்னம் வைக்கிறது?
சாமா:- வெள்ளையப்பன் இருந்தால்தான் எல்லாம். இல்லாவிட்டால் சருக்கரை சருக்கரையென்று சொல்லி வெறும் வாயைச்சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
பெரு:- (சிறிது யோசனை செய்கிறாள்) சரி. அதையே முடித்துவிடு. மிகுதிப்பணம் நான் தருகிறேன். உனக்கு 300 பவுன்களாகவே தருகிறேன். இன்றைக்கே தந்தியடித்து மரக்காயனை வரவழைத்து நாளைக்குப் பத்திரத்தை முடித்து அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடு.
சாமா:- சரி, பணமிருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறேன். அவன் கோடீசுவரன்; இங்கே வரமாட்டான். நான் நேரில் போய் அங்கேயே பத்திரத்தை முடித்துக்கொண்டு வரவேண்டும். நீ இப்போது பணத்தைக் கொடுத்தாலும், நான் இன்று ராத்திரி மெயிலில் போய் நாளைக்கே காரியத்தை முடித்துக்கொண்டு நாளை மறுதினம் பத்திரத்துடன் வந்து விடுகிறேன் - என்றார்.
அதைக் கவனியாதவள் போலத் தோன்றிய பெருந்தேவி எழுந்து உள்ளே போய்த் தனது இடையில் சேலைக்குள் மறைத்துக் கட்டித் தொங்கவிட்டிருந்த பவுன் மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். “இதோ இருக்கிறது முன்னூறு பவுன் எடுத்துக்கொள். உடனே காரியத்தை முடி” என்றாள்.
சாமா:- (ஆச்சரிய மடைந்து) பெருந்தேவியின் சமர்த்து யாருக்கு வரும் இத்தனை வருஷமாக நான் சினேகமா யிருக்கிறேன்; தான் பணக்காரியென்பதைக் கொஞ்சமும் இவள் காட்டிக் கொள்ளவே இல்லையே! .
கோமளம்:- (பெருத்த ஆச்சரியத்தோடு) நான் இராத்திரிப் பகல் இவளுடன் கூடவே இருக்கிறேன். இதை எனக்கே காட்டவில்லையே! அக்காள் மகா கெட்டிக் காரியடா சாமா!
சாமா:- அடி பெருந்தேவி! இதென்ன பீதாம்பரையர் ஜாலமா? இல்லாவிட்டால் நிஜமான சங்கதியா? கோமளம்! இவள் இவ்வளவு இரகசியமாக மறைத்து வைத்திருந்ததை வெளியில் கொண்டுவரும்படி நான் செய்தேன் பார்த்தாயா? இவளைவிட நான் கெட்டிக்காரனில்லையா?-என்று சந்தோஷ நகை நகைத்தார்.
அவ்விரு பெண்டீரும் பெருமகிழ்ச்சி கொண்டு அவருடன்கூட நகைத்தனர்.
சாமா:- பங்களாவிற்குப் போனவுடன் கலியாணத்தையும் முடித்துவிடவேண்டும். பெண்ணின் அம்மான் முன்பு வந்தாரே, அவர் இன்னும் ஒரு வாரத்தில் வருகிறார். வந்தவுடன் காரியத்தை முடித்துவிடுவோம். அதற்குள் வராகசாமியைச் சமாதானப்படுத்தி அவன் மனதைத் திருப்ப வேண்டும். பெரு:- போதுமப்பா! முன்பு மேனகாவை அழைத்து வருகிறதற்காக அவன் மனதில் ஆசையை உண்டாக்கினோம், அது இப்போது ஆபத்தாய் முடிந்தது. தலைவலி போகத் திருகுவலி வந்தது. அவனுக்கு இப்போது அவளுடைய பைத்தியமே பெருத்த பைத்தியமாய்ப் பிடித்துக்கொண்டது. இப்போது அதை மாற்றுவது கடினமாய் இருக்குமென்று தோன்றுகிறது.
சாமா:- நாம் புதுப்பங்களாவிற்குப் போனால் கூடிய சீக்கிரம் அவனைச் சரிப்படுத்திவிடலாம். நான் இன்று ராத்திரியே போய்க் காரியத்தை முடித்து விடுகிறேன். வராகசாமியை நாம் இப்போது வெளியில் அதிகமாக விடக்கூடாது. நான் போய்த் தேடி அவனை அழைத்து வருகிறேன் - என்று சொல்லிவிட்டு பவுனை எடுத்துப் பையிற் போட்டுக் கொண்டு வெள்ளிப்பாத்திரத்தில் இருந்த சீடைகளை வயிற்றில் போட்டு நிறைத்துக்கொண்டு ஒய்யார நடைநடந்து தாம் அத்தனை வருஷங்கள் பாடுபட்டதற்குக் கூலி அந்த மூன்று நாட்களிலேதான் கிடைத்ததென்று நினைத்துப் பேருவகை கொண்டு தம்மை மறந்து தமது வீடு சென்றார்.
திடீரென்று தமக்குப் பெருத்த தொகைகள் கிடைக்கத் தாம் பணக்காரராய் விட்டதை தமது மனைவி மீனாட்சியிடம் சொல்லவும், பவுனையே கண்டறியாத அவளுக்கு அத்தனை பவுன்களையும் காட்டவும் பெரிதும் ஆவல் கொண்டார். அவருடைய கட்டுக்கடங்கா ஆத்திரத்தில் அவளிடம் விஷயத்தைச் சொல்லவும் அவளைத் தனிமையில் வா என்று கூப்பிடவும் மனம் பொறுக்க வில்லை; தாழ்வாரத்தில் நின்ற பெண்டாட்டியை குழந்தையைத் தூக்குவதைப் போல சுலபமாய்த் தூக்கிக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.