ரோஜா இதழ்கள்/பகுதி 4

4

"அண்ணி ஏன் சுணக்கமாவே இருக்கு ?”

வெற்றிலை வாயுடன் வடிவு, பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கும் மைத்ரேயியிடம் வருகிறாள்.

அந்தக் கூட்டத்தின் வேடிக்கை விளையாட்டுப் பேச்சுக்களை அவளைப்போல் மைத்ரேயியால் எப்படி ரசிக்க முடியும் ?

அம்மணியம்மாள் பின்கட்டு வேலையெல்லாம் முடிந்து அங்கே வரும்போது மணி மூன்றடித்து விடுகிறது. கூந்தலை அவிழ்த்து உதறிக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்கிறாள்.

“ஏம்மா ராணி, நீ வெத்திலே போடலே?”

“எனக்குப் பழக்கமில்லே. பின்ன சோறு வேண்டியிருக்காது.”

“எங்களுக்கெல்லாம் வெத்திலே போடாட்டி சோறுண் டாப் போலவே இருக்காது.” என்று துளிர் வெற்றிலையைச் சுண்ணாம்பு தடவித் தடவி மடித்துப் போட்டுக்கொண்டு நாவை நீட்டிவேறு பார்த்துக் கொள்கிறாள்.

முப்பத்தைந்து வயசுக் கைம்பெண் வெற்றிலை போட்டுக் கொண்டு நாவைச் சிவந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது,

இவர்களின் குற்றமில்லை என்று மைத்ரேயி நினைத்துக் கொள்கிறாள்.

“அண்ணனுக்கு நாலு படத்துக்குப் பாட்டெழுதச் சான்ஸ் வருதாம். அடுத்தபடி அண்ணி கழுத்துக்கு நட்சத்திர நெக்லெஸ் வாங்கிப் போடச் சொல்லி இருக்கிறேன்” என்று தெரிவிக்கிறாள் வடிவு.

சாப்பிட்டு வெற்றிலை போட்டுக்கொண்ட அலுப்புத்தீர அம்மணியம்மா அப்படியே சிமிட்டித்தரையில் படுத்துக் கொள்கிறாள். மேலே விசிறி சுழல்கிறது.

“நீயும் படுத்துக்கம்மா, இப்ப இங்க யாரும் வரமாட்டாங்க...” என்று மைத்ரேயியை அவள் உபசரிக்கிறாள்.

“எனக்குப் பகலில் படுத்துறங்கி வழக்கமில்ல” என்று உரைக்கிறாள் மைத்ரேயி,

“எல்லாம் பழக்கமில்ல . பின்ன என்ன செய்யிறது?”

"அம்மணியம்மா, நான் பின்ன போயிட்டுவாரேன். காரு அந்தப் பக்கம் போகுதாம். அதைச் சொல்லத்தான் வந்தேன்” என்று நிற்கிறாள் வடிவு.

“என்னா அவ்வளவு பறப்பு?”

“இல்லே அம்மணிம்மா, வீட்ல ஏகப்பட்ட வேலை கெடக்குது, அண்ணன் வண்டியனுப்பிச்சது வந்தேன். நாம இல்லேன்னா மடிமடியா அல்லாம் கொள்ளை போயிடும்.”

“சரி, பின்னென்ன, நாஞ்சொல்றது? போயிட்டுவா...”

“அதான் அண்ணியக் கூட்டிட்டுப் போலான்னு கேக்க வந்தேன்...”

மைத்ரேயி அவசரமாக, “நான்...இங்கேயே இருக்கிறேனே....?” என்று அம்மணியைப் பார்க்கிறாள்.

“ஆமா, அதென்னமோ மெரண்டுவந்தாப்போல இருக்கு. நாலு நாள் போகட்டுமே ? கூட்டிட்டுப்போயி வச்சுக்க...”

அம்மணியம்மாளை நன்றி ததும்ப நோக்குகிறாள் மைத்ரேயி.

மாலை நாலடிக்கும்முன் அந்தப் பெரிய வீடு வந்தவர் களெல்லாம் போய் வெறிச்சென்றாகிறது. அம்மணியம்மா கால்களையும் கைகளையும் பரப்பிக் கொண்டு துரங்குகிறாள்.

பகல்பொழுது நழுவி இருளென்னும் குகையில் தஞ்சமடைகிறது. வீட்டில் பணியாளரின் அரவம் கூடத் தெரியவில்லை. மைத்ரேயி கொல்லைக்கும் வாயிலுக்குமிடையே உள்ள நடைகளில் புகுந்து புறப்பட்டு, உட்கார்ந்தும் எழுந்தும் பொழுதைத் தள்ளுகிறாள். அம்மணியம்மா கவலையின்றி இன்னமும் உறங்குகிறாள். இரவுக்கு யாரும் வரமாட்டார்களா ? சமையல் சாப்பாடென்று ஒன்றும் கிடையாதா? மாலைநேரக் காப்பியைக்கூட மறந்துபோய் விட்டாளா ?

மாடிக்கு ஏறிப்போகலாமா என்று ஒரு ஆவல் அவளை முன்னே தள்ளுகிறது. ஊடே ஒரு இனமறியாத அச்சம். பாதிப்படிகள் ஏறும்போது கீழே அம்மணியம்மாளின் குரல் பெரிதாகக் கடுமையாகக் கேட்கிறது.

“வந்திட்டானா அவன் ?”

சரேலென்ற இறக்கம்

“மாடியில் என்ன இருக்குண்ணு பாக்கப்போற?”

மின்னல்போல் இங்கிதமாக ஒருசிரிப்பு உடனே தோன்றி மறைகிறது. இது வாழ்க்கையில் மலர்ந்திருக்கும் உண்மையோ மருமக் கதைகளில் வரும் காட்சியோ என்று திகைக்கிறாள் மைத்ரேயி.

“ஒரு கூடமும் ரூம்பும்தான். பீடித்துண்டு, காலிப்புட்டி, சீட்டுக்கட்டு, காயிதக்குப்பை எல்லாம் இருக்கும், முனிசாமி போயிச் சுத்தம் பண்ணுவான். நீ இங்கே வா!”

கட்டளைக்குரல் ஓங்கி நிற்கிறது. “மணி ஏழுரையாவுது, பொரியல் கூட்டு எல்லாம் அப்படியே இருக்குது. நேரம்போனா வாசனை வந்திடும். வா...” என்று கூப்பிடுகிறாள்.

“அவங்கல்லாம் வரட்டுமே.”

“அவுங்கல்லாம் இப்ப எங்கே வரப்போறாங்க? நீ வான்னா வா!”

“எனக்குச் சாப்பாடு வேணாம், பசி எடுக்கல.”

அம்மணி அம்மாள் அவளை உறுத்துப் பார்க்கிறாள்.

“ஏன் பசி எடுக்கல? மத்தியானமே நீ சரியாச் சோறு தின்னல. எனக்குத் தெரியும் பசி எல்லாம் எடுக்கும்” சரேலென்று மேற்படி ஏறி அதட்டும் அதட்டலுக்கு அஞ்சிய வளாக அவள் பின்னே செல்கிறாள்.

இடுப்பில் சாவிக்கொத்து குலுங்குகிறது. போலிப்பட்டு விளக்கொளியில் மின்னுகிறது. வாட்டசாட்டமான பிறரை அடக்கியாளக்கூடிய உருவம்; பேச்சு; பார்வை.

பின்கட்டுக்குச் சென்று சமையலறையில் கீழே ஒரு இலையைப் போடுகிறாள். பிறகு தவலைச் சோற்றை ஒரு அலுமினியக்கிண்ணத்தில் போட்டு, மிஞ்சிய காய்குழம்பு எல்லாவற்றையும் போட்டுக் கலக்குகிறாள். ஒரு மொத்தை, உருண்டையாக இவள் இலையில் வைக்கிறாள்.

“மொடாவிலேந்து நீரெடுத்து வச்சிட்டு உக்காருவே. விக்கலெடுக்கப் போவுது!”

பகலில் விருந்து நேரத்தில் இரைபட்டுக் கருக்காத உருக்குத் தம்ளர்களில் ஒன்றைக்கூட அங்கு காணவில்லை. மொட்டையான பித்தளை டம்ளர் ஒன்றை எடுத்து நீர் முகர்ந்து வைத்துக் கொள்கிறாள்.

உண்மையில் மைத்ரேயிக்குக் குடல் காய்கிறது. அந்த கதம்ப உருண்டையைப் பிட்டு மெல்ல உண்ணத் தொடங்குகிறாள்.

அப்போது அம்மணியம்மாளே, கிண்ணத்திலிருந்து உருண்டை உருண்டையாக எடுத்துத் தானும் உண்கிறாள்.

அப்படிக் கிண்ணத்திலிருந்தும், தவலையிலிருந்தும் நேரடியாக எடுத்து உண்பது அவர்களுடைய ஆசாரத்தில் கண்டனத்திற்குரியது. சாப்பிடும் எச்சில் தட்டை, கொல்லைச் சுவர் ஆணையில்தான் மாட்டி வைக்கவேண்டும். அதைச் சாப்பிட வைத்துக் கொண்டால் கையைக் கழுவி விட்டுத்தான் சோற்றையோ குழம்பையோ தொடவேண்டும். அன்றன்று உண்ட கலங்களை வெறுமே கழுவினாலே எச்சில் போகாது என்று ஒரு ஆசாரமா என்று அக்காவின் கட்டுப் பாட்டுக்கு மைத்ரேயிக்கு கோபம் வரும். “நம் சாஸ்திரங்கள் எல்லாம் அப்படியே ஸயின்ஸ். ஒருத்தர் எச்சில் இன்னொருத் தருக்கு ஒட்டக் கூடாது. சாணி ஆண்டி செப்டிக். சாணி போட்டு சிமிட்டித்தரையில் எச்சில் துடைத்துவிட்டுப் பிறகு மறுசுருணை போட்டு சாணி அழுக்கு மாறத் துடைக்க வேண்டும்...” என்று விளக்கம் வேறு கொடுப்பாள். ஒவ்வொரு நோமும் எச்சிற் கலங்களெடுத்துச் சுத்தம் செய்வதற்குள் அவளுடைய பொறுமை கழன்று கழன்று நழுவத் துடிக்கும். இங்கு அம்மணியம்மாவுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

கட்டுப்பாட்டுக்கு அடங்கி அடங்கி அலுத்து ஒருநாள் மீறினால் என்ன என்று மீறி அந்தக் கட்டுப்பாடுகளைப் பொருளற்றுப் போகச் செய்யவேண்டிய அவசியமுமில்லை.

“என்ன பாக்குறே? இன்னும் கொஞ்சம் வய்க்கிட்டுமா? ரசம்... ரசம்கூட நல்லாயிருக்கும்” என்று ரசத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் கூறுகிறாள் அம்மணியம்மாள்.

“ரசம் வேணாம். எனக்கு மோரு போதும்.”

“ஓ மோரா? எனக்கு நெனப்பே இல்ல. எந்திரிச்சி, அங்கே எலபோட்டு மூடியிருக்கிறானே, அந்தப் பானையில தயிரு இருக்கும் பாரு. அலுமினியக் குவளையில மோந்து விட்டுவா...’

“மோரு எனக்கு வேணாம்...”

“ஏன் வாணாம்? தொட்டாச்சுருங்கியா இருப்பே போலிருக்குதே! டே, மாணிக்கம், மாணிக்கம்” என்று குரல் கொடுக்கிறாள். அந்த மீசைக்காரனின் எதிரொலியே கேட்கவில்லை-- இதற்குள் மைத்ரேயியே எழுந்து, ஒரு கையால் பானையில் மூடியிருந்த இலையைத் தள்ளிவிட்டு அடியில் இருக்கும் தயிரை வழித்தெடுக்கிறாள். கொசுக்கள் மொய்க்கின்றன. ஒரே புளிப்பு. நீரை ஊற்றிப் பிசைந்து விழுங்குகிறாள். அம்மணியம்மா ரசம் கலந்து நாலைந்து கவளம் உண்கிறாள். சாப்பாடு முடிகிறது.

மைத்ரேயி கையில் இலையைச் சுருட்டிக் கொள்கிறாள். பின் தோட்டத்துக் குழாயடியில்கைகழுவிக்கொள்கையில் முண்டாசுக் கட்டுடன் மாணிக்கம் அங்கே வருகிறான்.

“எங்கே போயிட்டே? போயி, சோறு குளம்பு எல்லாம் இருக்கு எல்லாம் உண்ணிட்டு, அடுப்பாங்கரையைச் சுத்தமா வையி. அங்கேயே பீடியைக் குடிச்சிட்டுப் போட்டு வைக்காதே. ரூம்பைக் கழுவிவிட்டு காலை நேரத்துக்குச் சுத்தமா வையி....!”

“சரிம்மா!” என்று அவன் உள்ளே செல்கிறான்.

குழாயடியில் வாய்கொப்புளித்துக் கால் கழுவிச் சுத்தம் செய்துகொண்டு உள்ளேவந்து விசிறியடியில் உட்காருகிறாள் அம்மணியம்மாள். வெற்றிலை பாக்குத்தட்டை மைத்ரேயியிடம் நகர்த்தி உடனே, “ஒ, நீ தான் வெத்திலே போட மாட்டியே?” என்று பின்னுக்கு இழுத்துக் கொள்கிறாள்.

வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவித் தடவி வாயில் போட்டு மெல்லுகிறாள். பெரிய தாடைகள் அசைகின்றன.

“என்ன பாக்கிறே? நான் பொகையிலே போடுறது வழக்கமில்ல...”

“இல்லீங்க. அவங்கல்லாம் சாப்பிட்டுட்டே வந்திடுவாங் களோன்னு நினைச்சேன்...”

அம்மணியம்மாள் வாயைத் திறக்கவில்லை.

வெற்றிலை நரம்பைக் கிழிப்பதிலும் சுண்ணாம்பைத் தடவுவதிலுமே கவனமாக இருப்பதுபோல் பாவனை செய்கிறாள். ஏதோ யோசனை செய்கிறாள் போலிருக்கிறது.

“இரு, இந்தப் பய ரூம்பைக் கழுவிவிட்டுக் கதவைப் பூட்டுறானான்னு பாத்துவர்றேன்...” என்று எழுந்து செல்கிறாள்.

ஏதோ ஒரு மரும வலையைப் பின்னி விரித்திருப்பது போலிருக்கிறது. இடுப்புச்சாவி குலுங்க, சற்றைக்கெல்லாம் செம்பில் குடிநீருடன் அவள் வருகிறாள்.

தனக்கும் படுக்கையைப் போட்டுக்கொண்டு, அவளுக் கும் ஒரு பாயும் தலையணையும் கொடுக்கிறாள். “இங்கியே படுத்துக்க” மறுபடியும் அவங்க வரமாட்டாங்களா என்று கேட்க நா எழும்பினாலும் சொற்கள் எழவில்லை. ஆனால் கண்கள் கேட்கின்றன.

“ஏன், சும்மா, அப்டிப் பாக்கிறே?”

“ஒண்ணுமில்ல--”

“ஒண்ணுமில்லேன்னா? ஏம்மா? நல்ல உசந்த குலத்தில் பிறந்து கண்ணுக்கு லட்சணமா இருக்கிறே. ஒரு பெரியவங்க, பெருந்தலைங்கன்னு அடங்காம என்ன இதெல்லாம்?”

வெட்டவெளித்தனிமை என்றஞ்சிய பேதைக்குப் பாம்புக் குட்டி நெளிவதுபோல் நடுக்கம் மேலிடுகிறது.

என்னமோ படிச்சேன்னுறே. இப்படிவந்து கெடுத்துக் கிட்டியே! இவனுங்க வாயில பேசுவானுக, ஒழுக்கம்னும், கற்புன்னும் அதுண்ணும் இதுண்ணும். நான் உனக்கு இதுக்கு மேல விளக்கத் தேவையில்ல. நீ இங்கே இருந்து குடித்தனம் பண்ணிக் குப்பை கொட்டமுடியாது. வெத்து வேட்டு அளப்பானுக. எந்தச் சாக்கடையிலும் போய் விழுவானுக. இருளோடு ஆறுமணிக்குப் பெரிய வீதியிலே பஸ் போகும். ஈரோடு போயி வண்டியேறிக் குடும்பத்திலே போயி ஒட்டிக்க.

ரயில் சார்சு பஸ்சார்செல்லாம் நான் தரேன். குழியிலே இடறி விழுந்திட்டேன்னாலும் இத்தோட எந்திரிச்சு ஒழுங் காப் போய் சேந்துக்க.”

படுகுழியில் விழுந்துவிட்ட திகில் இப்போதுதான் அவளைக் கவ்விக்கொள்கிறது. கண்களில் கரகரவென்று நீர் மல்கி வழிகிறது.

“...எங்க வீட்ல அக்கா சேத்துக்க மாட்டாங்களே—நீங்க அவுங்களைப் பத்திச் சொல்றது நிசந்தாங்களா?”

“நெசமாவா? சரிதாம் போ. நீங்க நல்லபடியாருக்கிறதில் எனக்கு என்னம்மா? இப்ப நீ ஒரு பொண்ணு. நானொரு பொண்ணு. அதனால சொல்கிறேன். ஒரு பொண்ணாப் பிறந்து இப்படிச் சொல்லுறவங்க, வழி காட்டுறவங்க இல்லாம ஆயிட்டமே நாம, அதுபோல யாரும் ஆகக்கூடா துண்ண—”

அம்மணியம்மா முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். “என்னைப்பத்தி நான் நினைக்கவே கேவலமாப் போயிட்டது. அப்படியாக்கிட்டானுவ. உன்னை இந்தக் கும்பல்ல கலியாணம்னு அவங்க சொல்றாப்பல, அதாவது அப்பன் தாயி பார்த்துக் கட்டியிருந்தா, நீ தாய்வீட்டிலோ, எங்கியோ பொழச்சிட்டு, இவனால வர்றபிள்ளை குட்டிங் களைப் பார்த்திட்டு, சமயத்தில மூக்குத் திருகாணியக் கேட் டாலும் குடுத்துத் தலைவருக்கு அவுங்க பிரியாணி வாங்க ஒபசாரம் செய்யற அளவுக்கு உரிமையும் கொண்டாடுவாங்க. இப்ப அப்படில்ல; ஒசந்த சாதின்னு ஒண்ணு இல்லாம இல்ல. அது ஈனத்துக்கு ஆசைப்பட்டுச் சந்தோசம் கொண்டாடாது. நீ உசந்த சாதியிலே பிறந்து இருக்கியேன்னு சொல்றேன், போயிடு”—

மைத்ரேயி தேம்பித் தேம்பி அழுகிறாள். அவளுடைய மனக் கோட்டைகள் ஒருபோதும் உறுதியாக நிலைத்திருக்க வில்லை. எனினும் இப்போது தரைமட்டமாகிவிட்டது. பழுத்துக் காய்ந்த சருகுகளை, ஓவென்றடிக்கும் காற்று நான்கு திசைகளிலும் வாரிச் சிதறுகின்றது. அவள் களங்கத்தைச்

சுமந்து கொண்டு, இடிபாடுகளிடையே, மொட்டை மரங்களி டையே நிற்கிறாள்.

“எங்க வீட்ல என்னைச் சேத்துக்கவே மாட்டாங்களே?” என்றழுகிறாள்.

ஏன் மாட்டாங்க? அவங்க உனக்கு உடம்புறப்புத் தானே? ஒருநா, ரெண்டுநா, மூணுநா, வாசல்ல பட்டினி கிடக்கலாம். குடி முழுகிப் போயிடாது. ஒட்டிக்கிடலாம். திரும்பிப் போயிடு—”

“அவ்வளவு மோசமா அவரு? என்னால அவரைத் திருத்த முடியாதுங்களா?”

அம்மணியம்மாளுக்கு எரிச்சல் வருகிறது.

“நீ இன்னும் புரிஞ்சுக்கல்ல? அவனையும் இன்னெருத் தனையும் நீ திருத்து முன்ன அவங்க உன்னைத் திருத்திடு வாங்க. ஈனக் கும்பல், இங்க ஒரு ராத்திரி நீ தங்கறதைக்கூட நான் ஒப்பமாட்டேன். நாதியில்ல, காப்பு இல்ல. இது இளகும் பிராயம், நெறிகெட்ட பதர்களாயிடுவாங்க. இவனுகளுக்கு அதே கண்ணு, தொழிலு—”

“ஐயோ—”

“அதான் சொல்றேன். மரியாதையாய் போயிடு. சட்டி பானை கழுவிச் சோறு தின்னலாம். பட்டுபவிசெல்லாம் வேணாம். அவன் உண்மையில் ஒழுக்கமா உன்னை வச்சிக் காப்பாத்தறது முக்கியம்னா, உன்னை இங்கே கொண்டாந்து வுடமாட்டான். நேரே, சேலத்தில் அப்பன் ஆயிகிட்டக் கூட்டிப் போயிவிட்டிருப்பான். பட்டினி பரதேசியானாலும் மானத்துக்குக் காப்பிருக்கிற இடத்திலே பொண் சாதிங்கறவ இருக்கணும்னு நினைச்சிருப்பான். நான் சொல்லுவது உனக்கு இப்ப புரியாம இருக்கலாம். பின்ன நீயே ஒரு நாள் நினைச்சிப்பே. பெரியவங்க பாத்து முடிக்காட்டியும், மண வடையில் மஞ்சப் புள்ளையாரைப் பூசை பண்ணி, ஆதியாத் தாய் தகப்பனைக் கும்பிட்டு, நல்லபடியா ஒருத்தனும் ஒருத்தியும் கூடி வாழணும்னிருக்கிற சடங்கெல்லாம் துண் அனுட்டு ஒட்டல் ரூம்பிலோ, எங்கியோ வச்சி ஒரு பொண்

ணைக் குலைக்கிறது. அந்தச் சடங்கு கொடுக்கிற கவுரவத் தைக் கொடுக்குமா?...

இவங்களை எனக்கு நல்லாத் தெரியும். நீ போயிடு.”

மைத்ரேயி தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவிக்கிறாள். எனினும் வாலறு பட்டமாய் மரத்தில் சிக்கிச் சூறாவளிக் காற்றில் விடுபடாமல் தவித்துத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

இரவெல்லாம் மைத்ரேயி உறங்கவில்லை. விடியற்காலையில் தான் அவள் சற்றே அயர்ந்திருக்கவேண்டும். ஏனெனில் அம்மணியம்மா அவளைத் தொட்டு எழுப்புகிறாள். “பல் விளக்கி முகம் கழுவிக் குளிச்சிக்க, மாணிக்கத் திடம் காப்பி வாங்கித் தரச் சொல்கிறேன்!” கனவில் நடப்பது போலிருக்கிறது.

ஒரு பர்சில் பத்துப் பத்து ரூபாயாக ஐந்து நோட்டுக் களை வைத்துக்கொடுக்கிறாள். “வச்சுக்க, மாணிக்கம் குதிரை வண்டி கொண்டாரப் போயிருக்கிறான். பாலத்தடியிலே போயி நில்லு வந்த உடனே ஏறிட்டுப் போயிரு, எப்பன்னா லும் என்னை நினைப்பு வரும். அப்ப உடனே ஆண்டவனை நினைச்சு மன்னிப்புக் கேளு...”

அம்மணியம்மா முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

மைத்ரேயி அவள் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்ளக் குனிகிறாள். அவள் சரேலென்று தடுத்து நிறுத்தி விடுகிறாள்.

“போ...போ... !”

மைத்ரேயி தன் துணிப்பையுடன் அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறாள்.

மொட்டை மொட்டையாக ஆங்காங்கு கற்குன்றுகளும், இடையே கோபுரமுமாகத் தெரியும் மாம்பாக்கம் கிராமத்தை மைத்ரேயி தன் நினைவு தெரிந்த நாளாகப் பார்த்திருக்கிறாள். இவ்வளவு அழகாக அந்த ஊர் இதுவரையிலும் தென்பட்டதில்லை. கொத்துக் கொத்தாகத் தென்னந் தோகைப் பசுமைகள், மாமரங்கள், கடைத்தெருவைப்

பகிர்ந்துகொண்டு செல்லும் சென்னை— விழுப்புரம் சாலையும்கூட. அந்த ஊருக்குள் புழுதி படிந்திருக்காது. தன்னந்தனியாக வீட்டைவிட்டு இறங்கிக் கூடப் பழகியிராத அவள் எந்தெந்த வண்டிகளோ ஏறி, இறங்கி, முன்பின் தெரியாத புதுமைகளை, அச்சங்களை, அவமானங்களைப் பரிச்சய மாக்கிக் கொள்ளத் துணிந்திருக்கிறாள். முதல் நாள் இரவே செங்கற்பட்டை அடைந்த அவள், இரவு ரயில் நிலையத் திலேயே உட்கார்ந்திருந்தாள். காலையில் முதல் பஸ் அவளை ஊர் எல்லையில் இறக்கிவிட்டிருக்கிறது. தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கையில் பையுடன் விரைந்து நடக்கை யில் அவளை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதில்லை. கிராமங்களில் பரிச்சயமான முகங்கள் இனம்புரியாக் கும்பலின் புள்ளிகளாக மறைந்துவிட முடியாது. ஆனால் அவள் யாரையும் பார்க்க விரும்பவில்லை.

அவர்களுடைய வீடு ஊரோடு ஒட்டிய சந்நிதித் தெருவிலோ குளக்கரையைச் சுற்றிய தெருக்களிலோ இல்லாதது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அந்தக் காலத்தில் வெள்ளைத் துரைபோல் வாழ்க்கை நடத்திய அவள் தந்தை, தன் பழக்க வழக்கங்களால் உறவினர், தெரிந்தவர் வாயில் விழுந்து புறப் படக் கூடாதென்று, ஊரைவிட்டுத் தன் ஒய்வு மாளிகையைச் சமைத்துக்கொண்டார். நெல்வயல், தென்னை, மா, பலா மரங்கள் பூஞ்செடிகள் சூழ்ந்திருக்க, அவ்வீடு, கிழக்கிந்தியக் கம்பெனிக் காலத்தில் யாரோ துரைமகன் கட்டிக் கொண்டதுதான். அவளுடைய அப்பா அதை வாங்கிப் புதுப்பித்து வசதிகள் செய்து கொண்டாராம். அந்த நாட்களில் அவளுடைய தாய் அங்கு வந்ததே கிடையாதாம். அவர் காலம் கடந்து ஒரு அழகியைத் தாரமாக்கிக் கொண்டதும் அவளை அந்த வீட்டில் வைக்கக் கருதியிருந்தாராம். ஆனால் அந்த நாகரிக நங்கை அந்தக் கிராமம் பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டதால் கீழ்ப்பாக்கத்திலிருந்த பெரிய பங்களாவை விட்டுத் தாயையும் குழந்தைகளையும் கிராம வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர் அந்தப் பங்களாவிலேயே அவளுடன் வாழ்ந்தாராம். மைத்ரேயி அந்த பங்களாவைக் கண்ணாலும் கண்டதில்லை. ஏனெனில் இந்த மாம்பாக்கம் வீட்டில்தான் அவள் மண்ணிலே விழுந்தாள். அவளுடைய பெரியக்காவுக்கு அப்போது திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியிருந்தன. அத்தை மகனையே கட்டியிருந்ததாலும் அந்த அத்தையே தாய்க்குப் பேறு பார்க்க வந்திருந்ததாலும், அவளும் அந்த வீட்டில்தான் அந்த நாளில் இருந்து உரிமை கொண்டாடியிருக்கிறாள். மைத்ரேயிக்குப் பிறப்பை அளித்த தாய், அவளுடைய அழுகைக் குரலைக் கேட்கக்கூட உயிர் தரித்தி ருக்கவில்லை. முதல் மனைவி, குடும்பத்தையே மறந்துவிட்டாராம் தந்தை. அந்நாளில் அந்த வீடு, இரண்டரை ஏகராபூமி, தோட்டம் இவற்றைப் பாதுகாத்து இக்குழந்தைகளைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அத்தையும் அவள் கணவரும், தங்கள் சொந்த ஊரான தஞ்சைப் பக்கத்தை விட்டு வந்தார்களாம். அவளுக்கு நினைவு தெரிந்து அக்காளின் கணவர் வேலைக்குப் போயிருக்கவில்லை. வயல், தேங்காய், மாங்காய் என்று அந்தச் சிறு பண்ணையை நிர்வகித்து வந்திருக்கிறார். அத்தானுக்கு உடன்பிறந்தவர்கள் என்று ஒரே ஒரு சோதரி தான் இருக்கிறாள். ஆனால், அத்தானின் தந்தை வழி பெரியப்பா பிள்ளைகள் டில்லியிலிருந்து இங்குவந்து போய் உறவு கொண்டாடுவார்கள். அதைத்தான் அன்று மாமா குறிப்பிட்டார்.

பழைய காலத்துச் சுற்றுப்புறச் சுவர் முன்பக்கம் மட்டும் பெரிய வாயிற்கதவைத் தாங்கி நிற்கிறது. அந்த வாயிற் கதவு வெயிலுக்கும் மழைக்கும் ஈடு கொடுத்துக் கொடுத்து, இனி இயலாதென்று ஒற்றைக் கீலுடன் உயிரைவிடத் தயாராக நிற்கிறது. அங்கிருந்து தோட்டப் பாதையாக, வீட்டு வாயில் வரையிலும் செல்ல இருநூறு கஜங்கள் தொலைவிருக்கும். மாவும் பலாவும் விரிக்கும் நிழலின் குளிர்ச்சி. அக்கா அந்நேரத்தில் வாசலில் கோலம் போட வந்திருக்கலாம். காப்பியை அத்திம்பேர்தான் போடுவார். மாடு கறந்து கொடுக்கும் சின்னு வந்திருப்பான்....

காதல் போதையில் மூழ்கியவளாய் அவள் அந்த வீட்டில் அடி வைத்தபோது விரட்டி அடித்தார்கள். அவள் உதறி விட்டு வாயிலைக் கடந்தாள். இப்போது அடிபட்டுச் சிறகொடிந்த பறவையாய்த் தரையில் விழுந்திருக்கிறாள். அவர்கள் கையிலெடுத்துப் புண்ணுக்கு இதமாக எண்ணெய் தடவுவார்களோ?

அறியாத குழந்தை தவறு செய்வது இயல்பு.

அம்மணியம்மா...அம்மணியம்மா அவளுக்கு யார்?

அவளை நினைக்குமுன் கண்களில் நீர்த்திரை படிகிறது.

அந்த, கசிவுடன் மனிதத்துவத்தில் நம்பிக்கை வைத்து அவள் வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறாள்.

சருகைக் குவித்து அள்ளிக் கொண்டிருக்கிறாள் மதுரம் மாமி. எதிர்பாராத ஆள்.

இந்தக் காலை நேரத்தில் எப்படி இங்கே வந்தாள் மதுரம் மாமி?

அவளருகில் மண்டி போட்டுக்கொண்டு சூணாவயிறு தரையில் இடிக்க, குடுக்கை முகம் முழுவதும் வேர்க்குரு அப்ப, அவளுடைய கைக்குழந்தை.

“மாமி?”

மதுரம் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.

“அட...! மைத்தியா?.....”

மைத்ரேயி பரிதாபத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டு அவளைப்பார்க்கிறாள்.

மதுரம் ஓட்டைப்பானையின் தக்கை அடைப்பானை இழுத்து விட்டாற்போன்று பேசத் தொடங்குகிறாள்.

“நீ வந்துட்டியா? நல்லவேளை, போ! அக்காவுக்கு திடீர்னு நேத்து மயக்கம் போட்டு கட்டையோடு கட்டையாப் பேச்சு மூச்சில்ல. நீ போனதுக்கப்புறமே உடம்பும் மனசும் சரியாத்தானில்ல உங்கக்காவுக்கு. கலகலன்னே பேசறதில்ல. தூண் பக்கம் பின்புறம் உக்காந்திண்டிருப்ப, சுமதிகூட பெரிய லீவுன்னு குழந்தைகளை அழைச்சிண்டு வந்து பத்து நாள் இருந்துட்டுப் போனா. அக்கா சாப்பிடறது கூட குறைஞ்சு போச்சு. டாக்டர்ட்ட யானும் காட்டிக்கோன்னு சொல்லிட்டு போனா. நாங்கூட புதிசா ஹெல்த் சென்டர்ல ஒரு லேடி டாக்டர் வந்திருக்கா, உடம்பைக் காட்டிண்டு வாங்கோ மாமி, கண்ணும் முகமும் ரொம்ப பலகீனமாக் காட்டறதுன்னேன். அப்புறந்தான் மாமி எங்கிட்ட காதோடு சொன்னா, இத்தனை வயசுக்கப்புறம் மூணுமாசமாச்சுன்னு..... அதுக்கப்புறம் நான் தினம் வருவேன். ஏதோ வாய்க்கு வேணுங்கறதைப் பண்ணிக் கொடுப்போம், பாவம்னு. நேத்திக்கு எனக்கு வரமுடியலே. பொம்மிய அனுப்பிச்சு மாமி புடவையைத் தோச்சு உணர்த்திட்டு, காப்பிக் கொட்டை அரைச்சு, தோசைமாவுகரைச்சு வச்சிட்டு வாடின்னு. ‘அம்மா, பங்களாவாத்து மாமி மயக்கம் போட்டுக் கிடக்கான்னு’ ஓடி வந்து சொல்லித்து; அவர் இந்தண்டை அந்தண்டை நகர மாட்டார், பாரு. நேத்திக்கு என்னமோ தென்ன மரத்திலே பூச்சி இறங்கியிருக்குன்னு மருந்து வாங்கப் போனாராம். முனியம்மா கீத்துப்பின்னிண்டு உக்காந்திருந்திருக்கா. பேசிண்டே இருக்கறச்சே, அப்படியே சாஞ்சிட்டாளாம். அத்திம்பேருக்குச் சொல்லியனுப்பிச்சு வந்து, கார் வச்சிண்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கா. வீட்டை அப்படியப்படியே போட்டுட்டுப் போயிருக்காளேன்னு வந்தேன்....”

மைத்ரேயி கண்கள் அகல ஊமையாய் நிற்கிறாள்.

இதுதான் இறைவன் கருணையோ? மரத்திலிருந்து ஒடிந்து விழுந்த சிறுகிளை மரத்தில் மீண்டும் ஒட்டிக் கொள்ளுமோ அந்தக் கருணையில்?

“சுமதிக்கு, ரஞ்சிக்கெல்லாம் தந்தி கொடுத்திருக்காளா மாமி”

“நினைக்க எங்கே நாழி?...”

மதுரம் சரசரவென்று சருகுகளை சாக்கில் அள்ளிப் போட்டுத் திணிக்கிறாள்.

ஒரு நெடுமூச்சுடன் வாயிற்படிகளைக் கடக்கிறாள். ஏணிப்படிகள் போல் எட்டுப் படிகள். அவற்றுக்குமேல் உயர்வாக அமைந்த அழிபோட்ட முன் வாயில் ஐயத்துக்கிடமின்றி, பூட்டப் பெற்றிருக்கிறது. அந்த முன் கூடத்தில் பித்தளைக் குழாய்ப் பளபளக்க ஊஞ்சற்பலகை தொங்குகிறது. அவளுடைய தந்தையின் உல்லாச வாழ்வை நினைப்பூட்ட அவர்களுக்கென்று தங்கிய பொருள் அது ஒன்றுதான். தொங்கும் சங்கிலி தெரியாமல் மூடிக்கொண்டிருக்கும், பித்தளைக் குழாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருக்கும். அதற்கு அத்திம்பேரே மெருகு போடுவது வழக்கம். அதில் அக்காவும் அவரும் உட்கார்ந்திருப்பார்கள். மைத்ரேயி அவர்கள் இல்லாத சமயங்களில்தான் அதில் உட்கார்ந்து ஆடியிருக்கிறாள். சுமதியின் குழந்தைகளும், ரஞ்சனியின் குழந்தைகளும் விடுமுறைக்கு வந்தால் அவள் அவர்களை உட்கார்த்தி வைத்து வேகமாக ஆட்டுவாள். அவளுக்கு அதில் உட்கார்ந்தால் சிறிது நேரத்தில் வயிற்றைப் புரட்டும். அந்த வயிற்றுப்புரட்டல் பழகி, ஊஞ்சற்பலகை ஒத்துப்போக அவளுக்குச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

அவள் கண்மூடித்தனமாகப் படி இடறி விழ ஒரு வாழ்க்கைக்குப் போனாளே, அதுவும் சந்தர்ப்பம் இல்லாமலே போக முடிந்து விட்டது.

அக்காவுக்கு இப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயசிருக்கக்கூடும்... அபூர்வமாக மகப்பேறா? அல்லது.....

‘டில்லிக்காரன்’ கொண்டுபோவான் என்று மாமா கூறியது நினைவுக்கு வருகிறது.

ஆண்டவனே, நல்லபடியா அக்கா பிழைத்து எழுந்து...

“ஏம்மா, மலைச்சு நிக்கறியே? அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது. எதானும் தெய்வதோஷம் தானிருக்கும். இந்தத் தடவை அம்மா தெவசத்துக்கு மங்கிலிப் பொண்டுகள் பண்ணலே, மனசே பிடிக்கலேன்னு சொல்லிண்டிருந்தா. நான் வேண்டிண்டிருக்கேன். பிழைச்சு நல்லபடியா வரட்டும் அப்படீன்னு.... இந்தக் கதவை நாந்தான் பூட்டிண்டு போயிடுங்கோன்னேன். பின்பக்கம் சமையல்கட்டு திறந்திருக்கு ...வா.”

பின்பகுதி, ஓடு வேயப்பட்ட தாழ்வரை. அதை ஒட்டி கிடங்கு போன்ற இரு அறைகள். மேல் தளத்தில் ஊஞ்சல் தொங்கும் முகப்பறை. படுக்கையறைகள். மரத்தள வரிசையாகிய நடன கூடமாக உபயோகிக்கப் பெற்ற பெரிய அறையில்தான் இப்போது சுமதி, ரஞ்சனி எல்லாரும் வந்தால் புழங்கிப் படுப்பார்கள்; ஏதேனும் விசேஷம் என்றால் பத்துப் பேர் சேர்ந்தாற்போல் சாப்பிட உட்காரக் கூடிய கூடம் அது. உயர்ந்த, உயர்ந்த ஜன்னல்களின் கதவுகள் வெனிஷியன் திரை முறைப்படி அமைந்திருப்பவை. இந்தத் தளவரிசையிலிருந்து பின்புறம் ஏழு படி இறங்கினால் அடித்தளத்தில் அமைந்த கிடங்கறையில் வந்து சேரலாம். அந்தக் காலத்தில் அதில் மதுபானங்களை வைத்திருந்த அலமாரியும் கூட இருக்கிறது. இப்போது அங்கு நெல் மூட்டைகளும் தேங்காயும் வைத்திருக்கிறார்கள். அந்த அறை எப்போதும் பூட்டியிருக்கும். சமையல் கட்டிடம் என்பது தனியாக அமைந்திருந்தது அந்நாளில். இப்போது அதில் விறகு, எரிமூட்டை, உரி மட்டை அடுக்கியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வைக்கோல் சேமித்திருக்கிறார்கள்.

தாழ்வரையை ஒட்டி அறை திறந்திருக்கிறது. அங்கு மதுரத்தின் பெரிய பிள்ளை சீனு அடுப்படியில் காப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். பெரிய மண்ணடுப்பில் கரிப்பாத்திரம் ஒன்றில் பால் காய்கிறது.

சீனுவின் அப்பா, அந்தக் குடும்பத்துக்கே உரித்தான மரத்தட்டு முகத்துடன், நரைத்துப் பிடரியில் தொங்கும் பாகவதர் கிராப்பு முடியுடன் சம்மணம் போட்டுக்கொண்டு அடுப்படியில் காப்பிக்கு உட்கார்ந்திருக்கிறார். அழுக்கு அரைக்கச்சை, வேர்க்குரு அப்பிய மேனியினராய்ப்பத்து வயசும் ஏழு வயசுமாய்ப் பையன்கள். ஐந்து வயசிலும் கையிலும் பெண்கள். மதுரம் கைக்குழந்தையுடன் அங்கே வரும்போது, பெரிய ஃபில்டரைத் தட்டி டிகாஷனை எடுத்துக் காபியைக் கலக்கிறான் சீனு.

மைத்ரேயி அங்கு நிற்பதை அவன் பார்க்கவில்லை.

“எழுந்திருங்கோ வீட்டுக்கு உடைமைக்காரி வந்துட்டா. காப்பியக் கலந்து இப்பிடி ரெண்டு டம்ளர் வைடா சீனு!” என்றுமதுரம் அறிவிக்கிறாள்.

“ஓ, பேஷா! அவாளுக்கில்லாததா?” என்ற சீனு நிமிர்ந்து பார்த்துவிட்டு, பாலைக் கிளறி ஐஸ் டம்ளரில் ஊற்றி, டிகாஷனை விட்டுக் கலந்து சர்க்கரையைப் போட்டு ஓட்டல் பாணியில் ஆற்றி வைக்கிறான்.

அடுக்கடுக்காய் அவள் சொப்பனம் காண்கிறாளா? இவர்கள் யார்? இந்தக் குடும்பத்துக்கு என்ன ஒட்டு?

இந்த மனிதன் எங்கோ ஓட்டல் வைத்து ஓட்டாண்டியாகப் போனபின் குடும்பமும் குட்டிகளுமாக இங்கே பிழைக்க வழி தேடி வந்திருப்பதாகத்தான் மைத்ரேயி அறிந்திருக்கிறாள்.

குடும்பம் நிலைக்கக்கூடிய வேர்களுக்குப் பொருளாதார பசை இல்லாமல், அவ்வப்போது மதுரம் பின்கட்டில் அக்காவைத் தேடி வந்ததுண்டு. சூணா வயிற்றுக் குழந்தைக்கு அக்கா தினமும் அரை டம்ளர் பால் கொடுப்பாள். “அதை இங்கேயே குடுத்துடேன்? ஏன் ஆத்துக்குத் தூக்கிண்டு போறே?” என்று அதட்டுவாள்.

மடியாக, மாவிடிக்கவும், தோசைக்கு அரைக்கவும் வரும் போதெல்லாம் அவளைத் தொடர்ந்து அந்தப் பையன்களும் வந்து தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

“உங்க மனசுக்கு இப்படிக் கடவுள் வைக்கலாமா? வேண்டாம் வேண்டாம்ங்கறவாளுக்கெல்லாம் சோதனையாக் குடுக்கறார்... நான் முகஸ்துதிக்காகச் சொல்லல. உங்களைப்போல உலகத்திலே யாரிருக்கா? என்னை எல்லாரும் வாயிக்கில்ல, வயத்துக்கில்ல வருஷத்துக்கொன்னாப் பெத்துக்கிறதில குறைச்சலில்லன்னு மூஞ்சிக்கெதுக்கவே கேக்கறா. ஏண்டி எங்கயானும் ஆஸ்பத்திரி போயி இல்லேன்னு பண்ணிண்டு வந்து தொலையறதானேன்னு கேக்கறா.” என்று உரலில் மிளகாய்ப் பொடியை மசித்துக்கொண்டு ஒருநாள் அக்காவிடம் கண்ணீர் வடித்ததை பார்த்திருக்கிறாள்.

அதெல்லாம் அக்காவின் நெஞ்சத்தைத் தொட்டுக் கரைக்கச் செய்யும் சொற்கள் தாமோ?

வீட்டை அவளிடம் விட்டுப் போனாள் என்றால் இப்படி உக்கிராண அறையைக் கைப்பற்றுவதும் குடும்பத்தோடு புகுந்து காப்பி குடிப்பதும் நேர்மையான செயல்களா?

மைத்ரேயி பற்களைத் துலக்கப் போகிறாள். நித்யமல்லிகைப் பந்தலில் வெண்மையான மொட்டுக்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன. திரும்பிவந்துவிட்டாயா? திரும்பி வந்துவிட்டாயா? என்று கேட்பதைப் போல் கொட்டிலிலுள்ள கபிலாவும் நந்தினியும் பார்க்கின்றன. கொட்டிலைச் சுத்தம் செய்ய இன்னும் முனியம்மா வரவில்லை போலிருக்கிறது.

மைத்ரேயி தாழ்வரையில் கால்வைக்கு முன்பே மதுரம் சிரித்துக்கொண்டு காப்பியை அவளிடம் கொடுக்கிறாள்.

சிரிப்பு மனசுக்கு இதமாக இருக்கிறது. சிறு வாகான உடல்தான். ஆனாலும் வறுமை, சிறுமைகளை உள்ளடக்கிக் கொண்டு எழும்பும் சிரிப்பு. மதுரம் மாமியின் அடர்ந்த கைகொள்ளாத முடி எண்ணெய்ப் பசையின்றி ஊட்டமும் பொலிவும் இன்றி அலட்சியமாக முடியப் பெற்றிருந்தாலும் அதன் செறிவே ஒரு அழகாக இருக்கிறது. வீட்டுப்படி ஏறியதும் இப்படிச் சிரித்துக் கொண்டு யாரோ காபி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அவள் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லையே?

“அப்ப, நான் பட்டணம் வரை போறேன். நீ இதுகெளெல்லாம் கூட்டிண்டு ஆத்துக்குப்போ. நீ என்னடா பண்ணப்போறே சீனு?”

அன்றைய ‘நிகழ்ச்சி நிரலை’ப் பற்றி அப்போதுதான் திட்டமிடுவது போல் கேட்கிறான் மதுரத்தின் கணவன்.

சீனுவுக்கு இன்னமும் மீசை முளைக்கவில்லை. ஆனாலும் வெற்றுக் கச்சையுடன் உடம்பைக் காட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அவனை அப்படிப் பார்க்க மைத்ரேயிக்குக் கூச்சமாக இருக்கிறது.

“என்ன பண்ணச் சொல்றேளோ, பண்றேன்!”

உடனே மதுரம், “நீ ஒண்ணும்பண்ணவேண்டாம்! அந்த அய்யாசாமியை கடைத்தெருபக்கம் பார்த்தியானா வர வேண்டிய காசை வாங்க வழிபாரு. டீ பொம்மி, இத்தைத் தூக்கிண்டு போ, நீ ஆத்துக்கு. நான் பின்னாலியே வரேன்...”

வெற்றிலை புகையிலை அடங்கிய பெருங்காயப் பெட்டியுடன் தொப்பை தெரியக் குட்டையாக எழுந்து நிற்கிறான் அந்தக் குடும்பத் தலைவன். தலையில் அழுக்குத்துண்டைப் போட்டுக் கொண்டு அவன் நடக்க முயலும் போதுதான் கால் சரியில்லை என்று புரிகிறது. குட்டையும் நெட்டையுமான கால்கள். உடல் சரிந்து சரிந்து அசைகிறது.

மைத்ரேயி அந்தக் குழந்தைச் செல்வங்களைப் பார்த்துக் கொண்டு நாவெழாமல் நிற்கிறாள்.

சில மாசங்கள் குடித்தனம் செய்த அநுபவம் அவளுக்கு இல்லாமல் இருந்த நாட்களில் தன் சிறுமைகளைத் தவிர வேறு நினைக்கத் தெரிந்திருக்கவில்லை அவளுக்கு. இப்போது அவள் புதிய மலர்ச்சி பெற்றாற்போல் சிந்திக்கிறாள்.

இந்த மதுரமும், சாய்கால் கணவனும் குழந்தைகளும் எப்படி நிரந்தர வருமானமில்லாமல் குடும்ப வண்டியை ஓட்டுவார்கள்? அன்றன்று ஆண்டவன் எங்கேனும் கைகாட்டுவான் என்ற நம்பிக்கையோ?

சீனுவின் தலைமேல் ஒரு சாக்கு மூட்டையை எடுத்து பைக்கிறாள் மதுரம். சாக்கு பளுவாக இருக்கும் போல் தோன்றுகிறது.

மதுரம், மைத்ரேயியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு “சருகெல்லாம் கூட்டினேனில்லையா? அதோடு கொஞ்சம் எரி மூட்டை கொண்டுவந்து இங்கே உணத்தியிருந்தேன். அங்கே வச்சா திருட்டுப் போயிடும். அத்தனையும் பரதைக் கும்பல்...” என்று அறிவித்துவிட்டு, “போங்க, போங்க...” என்று எல்லாரையும் விரட்டுகிறாள்.

சூணாவயிற்றுக் குழந்தை அவள் இடுப்பைவிட்டு இறங்க மாட்டேன் என்று முரண்டுகிறது.

“போம்மா, அக்கா மிட்டாய் வாங்கித்தராடீ! ஆறு பை சாக்குத் தேங்காய்மிட்டாய் வாங்கிக்குடு..”

தேங்காய் மிட்டாய் காசிருந்தால்தான் கிடைக்கும் என்று அந்தப் பிஞ்சுக்கு அறிவு முற்றியிருக்கிறது. மதுரம் இடுப்பிலிருந்து ஓரணாச் சில்லறையை எடுத்துக் கொடுத்த பின்னரே அது அவள் இடுப்பைவிட்டு மாறுகிறது. அவர்கள் எல்லோரும் செல்கின்றனர்.

“மைத்தி உள்ளே வா, ஏன் அப்படியே நிக்கறே? உள்ளே வந்து சாமான் எதானும் எடுத்துக்கொடு. உப்புமா வேணாக் கிளருறேன். உன் கண்ணும் மூஞ்சியும் கெஞ்சறது. ரொம்ப தூரமோ பிரயாணம்?”

“இல்லே...”

“உக்காரேன்? நல்லவேளை, நீ வந்தே. என்னதான் ஆயிரம் மாமி நல்லவளாயிருந்தாலும், நான் பஞ்சம் பனாதை. இன்னிக்குப் பாலும் காப்பித்தூளும் வாங்கிண்டு இங்கேயே வந்துடுங்கோ. சமையல் ரூமைத் திறந்துதான் வச்சிட்டு மாமா சொல்லிட்டுப் போயிருக்கார்.... காப்பியை இங்கியே போட்டு அனுப்பறேன்னு சொல்லிருந்தேன், எல்லாம் ஓடி வந்துடுத்து.....” என்று எதற்கோ அஞ்சினாற்போல் நியாயம் பேசிக் கொள்கிறாள் மதுரம்.

“அதனாலென்ன மாமி, குழந்தைகள் அப்படித்தான் வரும்- அக்கா... உங்ககிட்ட... வேறொண்ணும், என்னைப் பத்திப் பேசினதில்லையா?”

மதுரம் மாமி சிரிக்கிறாள்.

“அப்படித்தானிருக்கும். இப்ப இது மாதிரி எங்கும் நடக்கிறதுதான். அவரும் இப்ப ஊருக்கு வந்திருக்காரா மைத்தி?”

மைத்ரேயியின் கண்கள் நிரம்புகின்றன.

“நான் விவரம் புரியாம குழியிலே விழப் போயிட்டேன் மாமி. நல்லவேளையாப் புரிஞ்சிண்டு ஓடிவந்துட்டேன் -- அக்காவும் அத்திம்பேரும் என்னைத் திரும்ப வீட்ல சேர்ப்பாளா மாமி?...”

மதுரம் மாமி ஒரு நிமிடம் பேசவில்லை.

“சேர்க்காம இருக்க நீ என்ன அவ்வளவு பெரிய தப்புபண்ணிட்டே? நீரடிச்சு நீர்விலகுமா? நீ குழந்தை மாதிரி அவாளுக்கு-மல்லாக்கப் படுத்துண்டு ஆகாசத்திலே துப்புவாளா?”

மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. “நிசமா எம்மேல கோபப்பட மாட்டாளா, மாமி?”

“கோபம் வரத்தான் வரும். ஆனா பாசம் இருக்காதா? என்னடாது இந்தப் பெண் ஜாதிவிட்டு ஜாதின்னு தவறிப் போய் சம்பந்தம் பண்ணிண்டுடுத்தேன்னு இருக்கத்தான் இருக்கும். அது எப்பவும் இருக்குமா?”

“மறுபடியும் என்னை அக்கா- அத்திம்பேர் கோபிச்சு விரட்டினால் வேறு வழியே இல்லே. இப்படியே எங்கயானும் ரயில் தண்டவாளம், குளம் குட்டைன்னு போக வேண்டியது தான்...”

“அசடு இப்படி எல்லாம் பேசாதே. உங்கக்காவுக்கும் அத்திம்பேருக்கும் பொன்னான மனசு. எத்தனை வருஷமாகவோ கூடாத பாக்கியம் கூடி இருக்கு. நல்லபடியாத் திரும்பி வரணும்...”

நல்லபடியாகத் திரும்பி வரவேண்டும். அக்காவை உடலசைக்கவிடாமல் தன் உடலைச் செருப்பாய் தைத்துச் சேவை செய்ய வேண்டும். அக்காவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தையைப் பொன்னின் மலரெனத் தூக்கிச் சீராட்டவேண்டும்...

தோட்டத்துக் கிணற்றில் ‘பம்ப்’ போடும்போது, தண்ணீர், யானை துதிக்கையால் பொழியுமளவுக்கு நீர் கொட்டி மடைவழி ஓடும். அங்கே கல்லில் அவள் துணி துவைத்துக் குளிப்பாள். மைத்ரேயிக்கு இப்போது அப்படிக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு முழுக்கு: அவனுக்கு; அவனோடு வாழ்ந்த வாழ்வுக்கு; அந்த நினைவுகளுக்கு.

மதுரம் மாமியை உப்புமா கிளறச் சொல்லிவிட்டு அவள் தோட்டக் கிணற்றை வந்து எட்டிப் பார்க்கிறாள்.

தண்ணீர் மிகவும் அடியில் இறங்கியிருக்கிறது. இன்னமும் காற்றுக் காலம்வந்தால் வற்றும்.

பம்ப்பை இயக்கும் மின்விசைக்கான பித்தானை அவளால் தட்டிவிடமுடியாது. அறைக்கதவு பூட்டியிருக்கிறது. எனவே குளியலறைக்கருகில் உள்ள சிறிய கிணற்றில் தான் அவள் நீரிழுத்து முழுகவேண்டும்.

துறவுக் கிணற்றில் முன்பு ஏற்றம் இறைக்கும் வசதிதான் இருந்ததாம். அத்திம்பேர்தான் மின்னாற்றலால் இயங்கும் பம்பு வைத்தார். அதை வேறு யார் தொட்டமுக்கினாலும் அவருக்குப் பிடிக்காது.

...ஒரு சிறிய ஒழுங்கீனத்துக்கே பொறுமை இழப்பவர் அவர்.

அவளை, அவளை மன்னிப்பார்களோ?

அவளால் மீண்டும் விட்டபடிப்பைத் தொடர முடியுமோ?

பெண்களெல்லாம் ஓடிப் போனவள், வழுக்கி விழுந்தவள் என்று அவளைக் குத்தி இழுப்பார்களோ?

தலைமையாசிரியர் அத்திம்பேரைப் போலவே சிறிய ஒழுங்கீனத்துக்கும் பொறுமை இழப்பவர்.

அவர் மறுபடியும் அவளுடைய நிழலைக்கூடப் பள்ளிக் கூடத்தில் அநுமதிக்கமாட்டார்.

இந்த உண்மைகளெல்லாம் அவளுக்கு முன்பே நெஞ்சில் பதிந்து இருந்தும், எப்படிச் சென்ற நாலைந்து மாதங்களில் அவற்றை அவள் மறந்து போனாள்?

இப்போது இந்த இடை நாளைய வாழ்வின் சுவடுகளைக்கூட அடியோடு நினைவிலிருந்து கெல்லி எறிந்துவிட முடியுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சை! என்ன இழிவு? ஒருவனுடைய உடலுக்கு ஆசைப்பட்டுத் தன்னைக் குலைத்துக் கொண்டதாகத்தானே ஆயிற்று?

தன்னைக் குதறிக் குதறிப் போட்டுக்கொண்டாலும் மைத்ரேயிக்கு அந்த அருவருப்புத் தொலையாது போலிருக்கிறது.

கிணற்றின் கரையில் நின்று அவள் தண்ணீரை இழுத்து இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். துணிகளை அறைந்து அறைந்து துவைக்கிறாள். தன் ஏமாற்றம், தோல்வி, அச்சம், அருவருப்பு எல்லாவற்றையும் அத்தகைய புறச்செயல்களால் துடைத்துக் கொள்ள முயலுகிறாள்.

பையிலிருந்து வேறொரு பழைய செட் உடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.

ஈர உடைகளை உலர்த்தலாம் என்று வாயிலுக்கு வருகையில் அங்கே அத்தான், அவளுக்கு அத்திம்பேராகவே உரிமையும் பாசமும் எட்டாத தொலைவிலேயே நின்றுவிடும் அக்காளின் கணவர் வந்து கொண்டிருக்கிறார்.

அவளைக் கண்டதும் விழிகள் கூர்மையாகின்றன.

“நீ.எதுக்காக இங்கே வந்தே?” அவள் கை ஈரத்துணிகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறது.

“எதுக்காக நீ இங்கே வந்தேன்னு கேட்டேன்!”

குரல் உச்சத்துக்கு ஏறுகிறது; கனற்பொறிகள் பறக்கின்றன.

துடிக்கும் இதழைப் பல்லால் கடித்துக்கொண்டு காற்பெருவிரலால் நிலத்தில் கோலமிடுகிறாள்.

‘உனக்கு அன்னிக்கே உங்கக்கா ஸ்நானம் பண்ணியாச்சே. இங்கே யார் உறவு உனக்கு ?”

“என்னை மன்னிச்சுக்குங்க. நான் தப்பா நடந்துட்டேன். உங்க குழந்தை மாதிரி நினைச்சு நீங்க மன்னிக்கணும். நான் சத்தியமாச் சொல்றேன். அப்ப எனக்கு மூளை குழம்பி இருந்தது; பைத்தியம் பிடிச்சிருந்தது. நான் மீண்டு வந்துட்டேன் என்னைப் போன்னு சொல்லிடாதேங்கோ அத்திம்பேர்...? அக்காவுக்கும் உங்களுக்கும் என்னைச் செருப்பாத் தச்சாப்பல நான் எண்ணிப்பேன்...”

அது நாடகக் காட்சியல்ல. அவளுக்குத் கீழே விழுந்து காலைத் தொடவேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் எண்சாண் உடலோடு உள்ளத்தையும் குழைத்துக்கொண்டு கெஞ்சுகிறாள்.

அவர் அவளைத்தொட்டு எழுப்பவேண்டாம்; குழந்தே. என்று குரல் கனியக் கூப்பிட்டுத் தேற்றவேண்டாம்.

“உன் அக்கா பிளட்பிரஷர் அதிகமாய் நர்சிங்ஹோமில் படுத்திருக்கா. நீ ஏற்கெனவே இந்த வீட்டுக்கும் அவளுக்கும் தேடிக்கொடுத்ததெல்லாம் போறும். மரியாதையா இப்பவே போயிடு. ஆமாம், போயிடு!”

குரல் இடிபோல் முழங்குகிறது. வாயிலைக் காட்டி அவர் வெருட்டுகிறார்.

“நீங்களே இப்படிச் சொல்லிட்டா நான் எங்கே போவேன்? எனக்குவேற யாரிருக்கா? நான் பழைய மைத்ரேயி இல்லே, அவ செத்துப்போயிட்டா...”

“சினிமாப் பேச்செல்லாம் இங்கே நம்பறதுக்கு யாருமில்ல. நான் இப்ப குளிச்சு சாப்பிட்டுட்டுத் துணிமணி எடுத்துண்டு கதவைப் பூட்டிக்காவலும் வச்சிட்டுப் போகப் போறேன். உன் அக்கா வந்தா வீண் கலவரங்களாகும். நீ இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது, போ...!”

“போ..!”

“போடின்னா, ஏன் அழுதுண்டுநிக்கறே? அன்னிக்கு எந்தத் தைரியத்திலே போனே ?”

“உங்கள் சொந்தப் பெண்ணே இப்படித் தப்புச் செய்தாள்னு பெரிய மனசு பண்ணி நினைச்சுக்குங்கோ அத்திம்பேர், எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கோ...” கல்லும் கரையும் வண்ணம் கதறி அழுகிறாள்.

“என் சொந்தப் பொண்ணானா அன்னிக்கே கிணத்திலே குளத்திலே பிடிச்சுத் தள்ளிட்டு நிம்மதியாயிருப்பேன்! சீ மூஞ்சில முழிக்க வெக்கமாயில்லே உனக்கு?”...

மின் ஊசிகள் பாய்ந்தாற்போல் இருக்கின்றன.

தரையைத் தொட்டுக் குழிபறித்துத் தலையைத் தாழ்த்த இயலாமல் தன்மானம் என்ற ஒன்று தடுக்கிறது.

ஈரத்துணிகளுடன் அவள் நடக்கிறாள். அந்தச் சூழலில் மரங்களும் மண்தறிகளும்கூட அவளை வாஞ்சையோடு பார்ப்பதாகத் தோன்றுகின்றன. ஒற்றைக் கீலில் நிற்கும் வாயிற் கதவு, ‘போய் வருகிறாயாம்மா’ என்று கேட்பதாக நினைத்துக் கொள்கிறாள். நான் எங்கே வரப் போகிறேன்? கோயில் குளத்தில் விழுந்து பிராணனைவிட்டால் ஊரும் உலகமும் இன்னார் வீட்டுப் பெண் என்று சொல்லும். அப்போதுகூட இந்த வாயிற்படி வழியாகக்கொண்டு வரமாட்டார்கள்...’

“நான் போகிறேன்!”

அவள் வாயிலைத் தாண்டிப் பத்தெட்டுக்கூட நடந்திருக்க மாட்டாள்.

மதுரம் அவளுடைய பையையும் துக்கிக்கொண்டு விடு விடென்று வருகிறாள். அவள் தோளைப் பிடித்து நிறுத்து கிறாள்.

“இந்தா பை...”

“பை என்னத்துக்கு மாமி எனக்கு? இந்தாங்கோ இந்த ஈரமும் அதில் இருக்கட்டும்.”

அழுகை வெடித்து வருகிறது. மதுரம் அந்த ஈரத்துணிகளை வாங்கிக் கொள்கிறாள். “எங்கே போறே இப்ப?”

“எனக்கு.போக்கிடம் எங்கே இருக்கு ?...வரமுடியாத இடத்துக்குத்தான் போகணும்.”

“அசடு, என்ன ஆயிட்டுது இப்ப? நம்மாத்துக்கு நட, சொல்றேன்!”

மைத்ரேயி அதிசயமாய் அவளை நோக்குகிறாள்.

‘நம்மாம்’ அப்படி அவளை வரவேற்கும் இடம் ஒன்று இருக்கிறதா? வழி பிறழ்ந்து சென்ற அவளுக்கு அப்படியும் ஒரு இடம் இருக்கிறதா?

“வேண்டாம் மாமி, உங்களுக்கு இருக்கும் கஷ்டம் போதாதா? நானுமாகூட?”

“பரவாயில்லே. கூடம் பெரிசாயிருந்து ஒண்ணே ஒண்ணாய் பழகினாத்தான் இன்னொண்ணு வந்தால் தாள முடியாது. ஆறோடு ஏழாக நெருங்க இடமுண்டு, வா, வா...”

ஊட்டமும் வளமும் காணாத முகத்திலே கண்கள் மட்டும் கனிந்து ஒளிருகின்றன. எண்ணெயில்லாத முடிகூட அழகாக இருக்கிறது. இரந்தும், இச்சகம் பேசியும் தானும் வயிறு வளர்த்துக் குடும்பமும் பெருக்கும் மதுரம் மாமி அவளைக் கூப்பிடுகிறாள்.

இவளுக்கு அவளைக் கூப்பிடுவதனால் மதிப்புக் குறைவு கிடையாதோ?

இவள் உடன் பிறவாததாலோ?

தந்தையின் நிலத்தில் விளைந்துவரும் நெல் மூட்டைகள் அடுக்கியிராததால் அழைக்கிறாளோ?

மைத்ரேயியைவிட மதுரம் மாமி எந்தவிதத்தில் தாழ்ந்தவள் ?

அதே உயர்ந்த குலம். மைத்ரேயியைப் போன்ற நிறமில்லை. தோற்றத்தில் அரசகுமாரியில்லை. எஞ்சியிருப்பது மைத்ரேயியிடம் அந்தக் தோற்றம்தான். இருவரும் நடக்கிறார்கள். மதுரம் மாமி முன்னே வழிகாட்ட, பையுடன் நடக்கிறாள். வெயில் சுட்டெரிக்கிறது.

மதுரம்மாமியின் வீடு எங்கே இருக்கிறது?

அது கோயிலுக்கு நேராக உள்ள தெருவில் இருக்கிறதோ? குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருக்கிறதோ? தெரு வாயிற்படியில் நின்று மேற்குலத்துச் செருக்கெரியும் கண்களுடன் ஆணும் பெண்ணுமாக அவளை விழித்துப் பார்த்துச் சொற்களால் குதறி எறிவார்களோ?

அம்மாடி... சந்நிதித் தெருவுக்குத் திரும்பவில்லை.

நெடுஞ்சாலையுடன் நடக்கிறார்கள். தார்போட்ட சாலையில் திரும்பிக் கிளை பிரியும் கடைத் தெருச் சந்நிதியில் பஸ் ஒன்று நிற்கிறது.

பஸ் நிற்குமிடத்துக்கே உரிய கலவைகள்; ‘பிறாமணாள் காபி ஓட்டல்’ என்று அறிவிக்கும் ஒரு ஓட்டுக்கூரைவிடுதி. அதன் எதிரில் ஒரு முடிதிருத்தகம். அதன் அருகில் நாலைந்து கடைகள்.

உருளைக்கிழங்கு, காய்ந்த பச்சைமிளகாய், வெங்காயம் போன்ற சாதனங்களைத் தட்டில் பரப்பிய ஒரு கறிகாய்ச் கடையை அடுத்து மாமிசக்கறிக் கடை. அவர்கள் கிளைச் சந்தைத் திரும்புகின்றனர். முனையில் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது. தேநீர்க்கடையை அடுத்து ஒரு தட்டிச் சார்ப்புக் கூரைக் கட்டிடத்தில் அண்ணா படம் போட்ட முகப்புடன் ‘அண்ணா படிப்பகம் விளங்குகிறது. அதை அடுத்து ஒரு சலவைச்சாலை. வாசலெல்லாம் அழுக்குத் துணிமூட்டைகளிலிருந்து பிரித்தெடுத்த குவியல்கள்.

அதை அடுத்து ஒரு பூவரச மரத்தடியில் இளைப்பாறும் நோஞ்சான் குதிரை அருகே குடை சாய்ந்தாற்போல் நிற்கும் வண்டியை இழுக்கக் கூடியதென்று விளங்குகிறது.

அதற்குப் பின்னே உள்ளடங்கினாற்போல் சில குடிசைகள் இருக்கின்றன. ஒன்றின் வாயிலில் இருந்து, பொம்மி சூணா வயிற்றுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து வரவேற்கிறாள். வாசலில் கோலி விளையாடும் சிறுவர்கள், “அம்மா வந்துட்டா, அம்மா வந்துட்டா!” என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

அந்தச் சூழல் அவர்களுடைய குலத்தோர்வதியும் இடங்களல்ல. அந்த உயர்குலத்தோர் வேருக்கு நீரின்றி மாய்ந்து சருகுகளாகப் பிழைப்புக்குப் பக்கம் பக்கமாகப் பறக்கத் தொடங்கியபின் தரம் பிரிக்க இயலாமல் வந்து ஒதுங்கிய இடமாகத்தான் கொள்ளலாம். வாயிலில் ஆரவாரம் கேட்டு உள்ளிருந்து முள் பூத்த வாயில் சேலையுடன் பதினெட்டு இருபது வயசு மதிக்கக்கூடிய மங்கையொருத்தி எட்டிப் பார்க்கிறாள். கழுத்தெலும்பு முட்டியிருந்தாலும், ஊட்டமின்றி முடி நுனியில் தேய்ந்து கூழை பாய்ந்திருந்தாலும், கண்களிலும் சிரிப்பிலும் இளமையின் கவர்ச்சி கட்டவிழ்த்துக் கொண்டு பெருமை பாடுகிறது. மூக்குப் பெரிசு; கன்னம் தேய்வு; உடம்பும் தேய்வு. ரிப்பனை நாகரிகமாக அடி மண்டையை வழித்துக் குதிரைவால் நாகரிகமாகக் கட்டி இருக்கிறாள்.

“யாரக்கா இது?...” அவள் மைத்ரேயியைச் சுட்டிக் காட்டிக் கேட்கிறாள்.

“மைத்ரேயி, உள்ளே வாம்மா, உங்காமா நினைச்சுக்கோ ....”

குஞ்சு குழந்தைகளெல்லாம் அவளை ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றன.

அவளுடைய கையிலுள்ள பையை அப்போதே பிடுங்கிச் சோதனை போடத் துடிக்கிறான் எட்டு வயசுப் பையன்.

இந்தக் குழந்தைக்குத் தேங்காமிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள், மைத்ரேயி.

“ஏண்டி, சீனு எங்கே?”

“அவன் வந்து அப்பவே சட்டை போட்டுண்டு வெளியே போயிட்டான் அக்கா!”

“நீ என்ன பண்ணினே? உலையைப் போட்டு ஒரு சாதத்தைக் கொதிக்கவச்சு ஒரு குழம்பு பண்ணறதுக்கென்ன?”

“என்னமோ அஞ்சும் பத்தும் அடுக்கா வச்சிருக்கறாப் பல பேசறியே?” மதுரம் அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டு குரலை இறக்கி, “அவங்கிட்ட அரிசி வாங்கிண்டு போன்னு சொல்லி அனுப்பிச்சேனே? மூட்டை கொண்டு வரல?”

“மூட்டையில் என்ன இருந்தது. நாலஞ்சு எரி மூட்டையும் இலைச் சருகும்தான்”

“அடப்பாவி! நாலுபடி அரிசியையும் அஞ்சு தேங்காயையும் என்னடி பண்ணினான்?”

“என்ன பண்ணியிருப்பான்? நாலுபடி அரிசிக்கு அஞ்சோ ஆறோ கிடைச்சிருக்கும். தேங்காய்க்கு ரெண்டு ரூபா கிடைச்சிருக்கும்...”

“கத்தாதேடி, குரங்கு!” என்று வெறுப்பை உமிழ்ந்து விட்டு மதுரம் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள். மைத்ரேயியை கண்கள் சந்திக்கையில் மின்விளக்கைப் பொருத்தினார் போல் பளிச்சென்று புன்னகை விளங்குகிறது இதழ்களில்.

“வாம்மா, ஏன் வெளியிலேயே நிக்கறே? உள்ளே வா. இவ என் தங்கை சொர்ணந்தான், யாருமில்லை.”

பந்தலாகத் தெரியும் கூரையின் கீழ் ஒரு அறை, பின் தாழ்வரைக்குச் செல்ல ஒரு வாயில். புழுதியைத் தள்ளித் துடைத்த தரை. சிக்குப் பிடித்த தகரங்கள், அலுமினிய வட்டைகள் போன்ற தட்டுமுட்டுக்கள். மூலையில் நாலைந்து கந்தற்பாய்கள். சிக்குப் பிடித்த இரண்டு தலையணைகள். மேலே ஒரு கொடியில் மதுரம் மாமியின் ஒன்பது கஜம் மாற்றுச் சேலையும், அழுக்குப் பற்றிய மக்கள் உடுப்புகளும் தொங்குகின்றன. ஒரு மூலை ஸ்டாண்டில் ஒரு சுவரொட்டி சிம்னி விளக்கு வீற்றிருக்கிறது. மருண்டாற் போல் மைத்ரேயி நிற்கையில் ஈரப்புடவை, பாவாடையை எடுத்து உதறி மதுரம் அந்தக் கொடியில் உள்ள துணிகளை ஒதுக்கி விட்டுப் போடுகிறாள்.

இதற்குள் ஒரு பையன் அவள் கையைப் பற்றிக் கொண்டு உரிமை கொண்டாடுகிறான்.

“நீ அக்காதானே?” என்று உறவு முறை கேட்கிறான்.

மதுரம் பார்த்துவிட்டுச் சிரிக்கிறாள். “அக்காதான். விளையாடிண்டிருங்கோ, இதோ வரேன்...” என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறாள்.

சிறிது நேரம் அவள் அந்தச் சிறு பையனிடம் பேச்சுக் கொடுத்து, அக்காவாக நடிக்க முயலுகிறாள்.

‘ஸ்கூல் போறியா, நீ?”

“ஹூம், ஸ்கூலுக்கு அப்ப போனேன், கப்பலூர்ல இருக்கறச்சே. நீ அந்தப் பங்களாவாத்துப் பொண்ணு தானே?”

மைத்ரேயி பேச்சை மாற்ற முயல்கிறாள்.

அதற்குள் பொம்மி அவளுடைய பர்சை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள். கைக்குழந்தை பெருங்குரலெடுத்து அழுகிறது.

“இது உங்களுடையதா அக்கா? சோக்கு வாசலில் கொண்டு வச்சிண்டு விளையாடிண்டிருக்கு?’

பர்சைச் சட்டென்று வாங்கிக்கொள்கிறாள். பரபரக்கும் விரல்களைப் பர்சுக்குள் விட்டுத் துழாவுகிறாள். அடிவயிற்றி லிருந்து கத்தி எழும்பிப் பாய்ந்தாற் போலிருக்கிறது. ஒரே ஒற்றை ரூபாய் நோட்டு மட்டும் இருக்கிறது. ஐம்பது ரூபாயில் அவள் செலவு செய்தது பதினோரு ரூபாய்தான். மீதி ஒரு ரூபாய் தானா? மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களும் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் வைத்திருந்தாளே? சட்டென்று மூலையிலிருந்த பையை எடுத்து, உள்ளிருக்கும் துணிகளை எடுத்துப் போடுகிறாள். வாயிலில் வந்து நெடுகத் தேடுகிறாள். பணம் இல்லை.

பையில் இருந்த துணிகள், சாந்து, பவுடர் முதலிய பொருள்கள் எல்லாம் வெளியே கிடப்பதை அப்போதுதான் பார்க்கிறாள். பரபரப்பாக எல்லாவற்றையும் பைக்குள் போட்டு வாய் தெரியாமல் இழுத்துக் கட்டுகிறாள். அவன் வாங்கிக் கொடுத்த பை அது. பையின் புதுமை மாறுமுன் வாழ்க்கை வாடிவிட்டது. ‘நம்மாம்’ என்று மதுரம் இணைத்துப் போட்டுக் கொண்டதன் பொருள் மைத்ரேயியின் மூளையில் மின்னலாய் பளிச்சிடுகிறது. அவள் தோப்பு பங்களாவி லிருந்து பையனிடம் மூட்டையில் கட்டி அனுப்பிய அரிசியையும் தேங்காயையும் பையன் கடையில் போட்டுவிட்டான். அவள் பையை மதுரம் மாமிதானே எடுத்து வந்தாள்? ஈரத்தை வேறு உலர்த்தினாள். பணத்தை எப்போது அப்புறப் படுத்தினாளோ? அந்தப் பணம் அவள் சம்பாதித்த தொன்றுமில்லை அம்மணி அம்மா கொடுத்ததுதான். மதுரம் மாமி வா, என்று அழைத்து அன்பு மொழியால் குளிர வைக்கிறாள். அவள் வாயிற்படியில் நிற்கையிலேயே வாயெல்லாம் பல்லாக விரைவு நடையிலேயே திரும்பி வருகிறாள். ஒரு கூடையில் அரிசி, பருப்பு, ஒரு குப்பியில் எண்ணெய், புளி, மிளகாய், மல்லி, ஒரு சிறு கட்டுப்பப்படம், வெங்காயம் எல்லாம் இருக்கின்றன.

சாமான்களைக் கொட்டிவிட்டுக் கூடையைப் பையனிடம் கொடுத்து அனுப்புகிறாள் மதுரம்.

“சோப்பு வாங்கிண்டு வந்தியாக்கா?” என்று கேட்கிறாள் சொர்ணம்.

“சோப்பா? போன வாரம்தானே வாங்கினேன்?” என்று திருப்பிக் கேட்கிறாள் மதுரம்.

“உன் பிள்ளை உடம்பிலே போட்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கறதிலே சோப்பு ஒரு மாசம் இருக்காதோ, பின்ன?”

“அடி கடங்காரி! உன் பிள்ளை உன் பிள்ளைன்னு ஏண்டி கரிக்கறே? அவன் உடம்புழச்சுக் கொண்டு வந்து கொட்டறான் இந்தக் குடும்பத்துக்கு, எல்லாரும் தின்னு உருட்ட நீ இங்கு காலமில்லாம காரணமில்லாம மூஞ்சி தேச்சிக்கறதும் பவுடர் போட்டுக்கறதும் பொட்டிட்டுக் கறதுமா மினுக்கறது தெரியாதாக்கும்!”

“அதெல்லாம் எங்காசு!” என்று கத்துகிறாள் சொர்ணம்.

“என்னடி எங்காசு... உங்காசு? எனக்குத் தெரியாம எங்காசுன்னு எங்கேருந்து வந்திருக்கும்னு கேட்டேன்! இத்தனை நேரத்துக்கு ஒரு உலையப்போட்டுச் சோத்தை வடிக்கத் துப்பில்ல!”

“இங்கே சாமான் உக்கிராணம் கொள்ளாம தட்டுக் கெடறது, நான் வடிச்சு நிமித்த காலமேலேந்து ஒரு டீத் தண்ணிக்கு வழியில்லாம தலைவலி மண்டையை உடைக்கிறது!”

“சரி, சரி, இப்ப ஒப்பாரி வைக்க வேண்டாம். அந்தச்

சருகைப் போட்டு தாழ்வாரத்து அடுப்பை மூட்டு. இப்ப உலையைப் போடறேன்...”

பின்புறச் சார்ப்பில் அடுப்பு எரிகிறது. ஓட்டை உடைசல் கள்ளிப் பெட்டித் துண்டுகளைத்தான் விறகாக மாட்டுகிறாள். ஒரு மண்பானையில்தான் உலை வைக்கிறாள்.

பிறகு மூலையிலிருந்த டின்னிலிருந்து நீரை முகர்ந்து புழுங்கலரிசியைக் கழுவி உலையில் போடுகிறாள்.

மைத்ரேயிக்கு இதே போல் டப்பாவில் நீர் வைத்துக் குடித்தனம் செய்ததும் சட்டியில் குழம்பு வைத்ததும் நினைவுக்கு வருகிறது. அவள் நகரத்தை ஒட்டியிருந்தாலும் கிராமத்து வாழ்க்கையிலேதான் பழகியிருக்கிறாள். எனினும் கூரைக் குடில்களில் உள்ளே காட்சிதரும் வாழ்க்கை வறுமையை அவள் அவனோடு செல்லும் வரையிலும் உணர்ந்ததில்லை. தங்கள் வீட்டோடு தொடர்பு கொண்ட எளியவர்களை, தங்கள் கூலியாட்களை அவள் கண்டிருக்கிறாள். வயலில் நடவு நாட்களில், அறுவடை நாட்களில் அந்த வீட்டுத் தோட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கூடுவார்கள். கன்னங்கரேலென்ற குழந்தைகள், அவிழ்ந்து பிரியும் நூல் முடிச்சுக் கொத்தவரங்காய் பின்னலும், இடுப்பில் சுற்றிய வெற்றுக் கயிறுமாக புழுதியில் குழந்தைகள் விளையாடுவார்கள். கரியேறிய பானையில் புளிச் சோற்றையோ, நீர்ச் சோற்றையோ கொண்டு வந்து மரத் தடியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்களும் உண்டு. அவளுடைய அக்காள் கணவனும் களத்திலிறங்கி வயற் சேற்றில் கால்கள் பதிய வேலை செய்வதுண்டு. அவளுக்குத் தெரிந்து அவர் என்றோ செங்கற்பட்டு பட்டணம் போகும் போதுதான் வண்ணான் மடிப்பு வேட்டி உடுத்தியிருக்கிறார். என்றாலும், வறுமை மலிந்த வாழ்க்கையை அவள் இப்போதே தரிசிப்பதுபோல் தோன்றுகிறது. அன்று லட்சுமி, அவள் விட்டெறிந்த ஜிலேபியை எப்படி எடுத்துத் தின்றாள்.

அற்பமான தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாத பொருள் வறுமை நிலவும்போது, தேவைகள், தேவைகள் என்ற நிலையிலிருந்து வழுவி, ஆசைகளாக வீறு கொண்டு எழுகின்றன. அப்போது பொறுக்கும் திறனும், பண்பாடும் உடைந்து சிதைய, அந்தச் சிதிலங்களிடையே எப்படியேனும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற களைகளும் வளருகின்றன. அவர்களுடைய வயலில் உழவோட்ட வரும் மாரி, அவன் மனைவி குழந்தைகளையும், இந்த மதுரத்தின் குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். காலைப் பனியின் மூட்டத்திலே காட்சிகள் மங்கலாகப் புரிந்தும் புரியாமலும் தோன்றுவது போல் தோன்றுகின்றன.

மாரியின் மகள் மண்ணில் விளையாடுவதிலேயே நிறைவு கண்டு விடும். படியேறி உள்ளே வந்து, எதையும் தொடவேண்டும் என்ற ஆசை அவளை வருத்தியதாகத் தெரியவில்லை.

முகத்தில் ஒரு கை வைத்துக் கொண்டு ஏதேதோ எண்ணங்களிடையே மூழ்கிக் கிடக்கும் அவளை மதுரம் வந்து தொட்டெழுப்புகிறாள்.

“எழுந்திரு, மூஞ்சியெல்லாம் வாடிப் போயிடுத்து, சாம்பாருக்கு அறைக்கிறது பொம்மி. இப்ப சாதத்தை வடிச்சிட்டு, சாம்பாருக்கு வச்சிடுவேன். உப்புமா கிளறி வச்சேன். அத்தைக் கூடத் தின்னல...” என்று பரிவு மேலிடக் கூறுகிறாள் மதுரம்.

“எனக்குப் பசியே இல்ல மாமி...”

“நல்ல குடும்பம் குலம்னு பிறந்ததைத்தான் தெரிஞ்சிண்டு விழாம திரும்பி வந்துட்டியே? இவ்வளவு கண்டிக்கணுமா...?”

“மாமி, மட்றாசில என்னைப்போல அநாதையா இருக்கறவாளுக்கு, ஹோமெல்லாம் இருக்கும்ங்கறாளே, அங்கேபோய் நாஞ்சேந்துட முடியாதா? நான் புத்திக் கெட்டுப் படிப்பையும் விட்டுப் போயிட்டேன்...”

“சே, அழாதே. நீ வந்துட்டியே? அசடுபோல் ஏன் அழறே. இப்ப இப்படித்தான் காலம் கெட்டுக்கிடக்கு. இந்த சொர்ணம் என் தங்கைதான். நான் அவளை வீட்டை விட்டு வெளிவாசலுக்கு ஏன் அனுப்பாம வச்சிருக்கேன்? இந்தப் பயம்தான். அதுவும் நம்ம சாதிக்கு இப்ப ஒரு மதிப்போ கட்டு காப்போ ஒண்ணும் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும், துணி கிழிஞ்சு போச்சுன்னா கிழிஞ்சது தெரியாம தைக்கமாட்டா. தைச்சு வச்சா கிழிஞ்சது கிழிஞ்சதுன்னு குத்தி உருப்படியில்லாம ஆக்கிடுவா. அந்தக் குளத்தங்கரைத் தெருவில் நம்ம சாதி சனம் தான். ஒரு கையகல இடம் கொடுத்துட்டு என்ன பேச்சுப் பேசினா? இப்ப எதிர கசாப்புக் கடைதான். சுத்தி எப்படி எப்படியோ கும்பல்தான். ஆனா எங்களைப் பத்தி வம்பு பேசறவா இங்கே இல்லே. அதனால்தான் தைரியமா கூட்டிண்டு வந்தேன்.”

மதுரம் எழுந்து குழம்பைக் கிளறி மசாலைக் கூட்டி கொதிக்க வைக்கிறாள்.

மைத்ரேயி அந்தத் தாழ்வரையில் வந்து நிற்கிறாள். ஒரு சிறு தட்டி மறைப்பு. சொர்ணம் குளிக்கிறாள். மறைப்புக்கப் பால் பெட்டிக்கடைகள், சாலை.

பொம்மி கையைக் கழுவிவிட்டு கவுனில் துடைத்துக் கொள்கிறாள்.

“ரெண்டு வாளி தண்ணி கொண்டு வந்துடு... என்று மகளை ஏவுகின்றாள் மதுரம்.

“கிணறு எங்கே இருக்கு மாமி? நான் கொண்டு வரனே?” என்று கேட்கும் மைத்ரேயி வாளியை எடுக்கப் போகிறாள்.

“ஐயோ, நீ அங்கே எல்லாம் போக வேண்டாம், நான் சொர்ணத்தையே அனுப்பமாட்டேன், பொம்மி போகும். டேய் ஜிட்டு, சொக்கு? ரெண்டும் எங்கே தொலைஞ்சு போச்சுங்க?”

கோலியும் கையுமாக இரண்டு பையன்களும் ஓடிவருகின்றனர்.

“டப்பாவை எடுத்திண்டு போங்க, அவளுக்குத் தண்ணி இறைச்சுக் குடுங்கோ ... இப்ப தட்டுப் போட்டுடலாம்...” என்று சொல்லிவிட்டு, ஒரு சிறு அலுமினியக் குவளையை எடுத்துக் கொண்டு மதுரம் மாமி வெளியே செல்கிறாள். சொர்ணம் தலைசீவிப் பொட்டுவைத்துக் கொண்டு தாழ்வறையைப் பெருக்குகிறாள். பிறகு எல்லோருடைய பீங்கான், அலுமினிய உண்கலங்களையும் தேய்த்து அலம்புகிறாள்.

டப்பா நீரை இரண்டு பையன்களும் சேர்த்துத் தூக்கி வருகின்றனர். வாளியில் பொம்மி நீர் கொண்டு வருகிறாள். மதுரம் மாமி குவளையில் கறிவேப்பிலை மிதக்கும் மோரும், ஒரு தையல் இலையுமாகத் திரும்பி வருகிறாள். தணல் கருகிச் சாம்பல் பூத்த அடுப்பில் இரண்டு சுள்ளியைச் செருகி விட்டு இரும்புச் சட்டியைப் போட்டுக் குப்பியில் வாங்கிவந்த கடலெண்ணெயை ஊற்றுகிறாள். பப்படங்களைப் பொரிக் கையில் குழந்தைகள் சந்தோஷமாய்க் குதிக்கின்றனர்.

“உக்காரு மைத்தி...” என்று தையல் இலையைத் துடைத்து அவளுக்குப் போடுகிறாள்.

புழுங்கலரிசிச் சோறு. வெங்காய சாம்பாரின் மணம் ஊரைத் தூக்குகிறது. குழந்தைகளுக்கெல்லாம் இரண்டிரண்டகப்பை என்று அளந்தாற்போல்தான் அவள் அன்னமிடுகிறாள். சொக்குவும், ஜிட்டுவும் ஒருவர் கலத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு சமம்தான் என்று அமைதியடைகின்றனர். சூணாவயிற்றுக் குழந்தை தனக்கு இரண்டுகரண்டி வேண்டும் என்று கேட்கும் போலிருக்கிறது. மதுரம் கால் கால் கரண்டியாக இரண்டு தடவை படைக்கிறாள். பிறகு இரண்டு இரண்டு கரண்டி சாம்பாரைச் சோற்றின்மேல் ஊற்றிவிட்டு அடுப்பில் காயும் எண்ணெயில் பொரித்த பப்படங்களை, ஒவ்வொன்றாக எடுத்துப் போடுகிறாள்.

சொக்கு ஆவிபரக்கும் குழம்பைப் பார்த்துக்கொண்டே துளித்துளி விரலில் தொட்டு நாவில் வைத்துக் கொள்கிறான். இன்பத்தை எவ்வளவு நேரம் நீட்டிக்கொண்டு போகமுடியும் என்று பார்க்கிறான். சொர்ணம் தட்டை ஆட்டி ஆட்டி, சோற்றைக் கிளறி விரைவில் பிசையப் பார்க்கிறாள். அதற்கு மூன், “துளி எண்ணெய்விடேண்டி, அக்கா?” என்று கேட்கிறாள்.

அடுப்பில் காயும் எண்ணெயிலிருந்து ஒரு துளி சோற்றில் தெளிக்கும் மதுரம், “நீதான் இந்தக் கலகமெல்லாம் ஆரம்பிப்பே. நீ கேட்டால் இப்ப எல்லாம் கேக்காதா?...” என்று கூறிக் கொண்டு எல்லோர் இலையிலும் இரண்டு சொட்டுக்கள் எண்ணெய் தெளிக்கிறாள். மைத்ரேயியின் கலத்துக்கு முன் வரும்போது அவள் முகத்தில் ஓர் நாணப் புன்னகை விளங்குகிறது. “உனக்கு நெய் சாப்பிட்டுப் பழக்கமாயிருக்கும், பாவம்...விடட்டுமா?” என்று கேட்கையில் மைத்ரேயிக்கு என்ன மறுமொழி சொல்வதென்று புரியவில்லை.

இதற்குள் வாயிற்கதவு இடிபடுகிறது.

“இந்தச் சோறு தின்னும் நேரத்தில்தான் இந்த வீட்டுக்கு யாரேனும் வருவா...” என்று முணுமுணுத்துக் கொண்டே போகிறாள். சொர்ணம் ஆவலே உருவாக, “யாரு? தபாற்காரரா அக்கா?” என்று கத்துகிறாள். பிறகு கையை நக்கிக் கொண்டே வாயிற்படிவரை செல்கிறாள்.

மதுரம் திரும்பி வருகையில், “என்னக்கா? ஏதானும் கிடைச்சுதா?” என்று சொர்ணம் கேட்கையில், மைத்ரேயிக்கு அவள் எங்கிருந்தோ தபாலில் ஏதோ நன்மையை எதிர் பார்த்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. “ஒண்ணுமில்ல, இன்னிக்கு நம்பரைச் சொல்லுன்னான். எழுதிக்க... ஏண்டா, ஜிட்டு? சாப்பிட்டாச்சுன்னா எழுந்து போறதுதானே? எதுக்கு தட்டைப் போட்டு நக்கிண்டிருக்கே? இனிமே அப்பாக்கு அண்ணாக்கு தானிருக்கு, எழுந்திரு!”

அவன்மட்டுமில்லை. பொம்மியும் எழுந்திருக்கவில்லை. எல்லாருடைய கண்களும் அலுமினியக் குவளையில் நிலைக்கின்றன.

பொம்மி நாவால் கேட்கத் துணிவின்றிக் கையைக் காட்டுகிறாள். “இது ஒண்ணும் உனக்கில்ல. எழுந்துபோ, சொல்றேன்!”

மைத்ரேயியின் மென்மையான உணர்வுகளை யாரோ அழுத்திக் கூழாக்குவதுபோல் தோன்றுகிறது.

“எனக்கு மட்டுமா மோர்வாங்கி வச்சிருக்கேள், மாமி? எனக்கு மட்டுமா? எனக்கு மோர் பிடிக்காதே?-”

அன்று அம்மணி அம்மாவிடம் மோர் கேட்டுச் சாப்பிட்ட நினைவும் வர, இந்தப் பொய்யைப் புகல்பவளுக்குக் கண்கள் சுரக்கின்றன. மதுரம் வாளியிலிருந்து ஒருவட்டை நீரை முகர்ந்து ஊற்றி, உப்பையும் அள்ளிப் போட்டு, அந்தச் சம்பாரத்தை எல்லோருக்கும் இன்னொரு காண்டி சோறுபோட்டு வார்க்கிறாள்.

மைத்ரேயிக்கு வறுமையில் இவ்வளவு புனிதமும் நெகிழ்ச்சியும் குலவும் என்று அன்றுவரை தெரிந்திருக்கவில்லை.

வயிறு நிரம்பியதும் குழந்தைகள் பூவரசமரத்தடியில் விளையாடப் போகிறார்கள். மதுரம் எங்கோ வெளியே செல்கிறாள். சொர்ணம் கலங்களைத் தேய்த்துக் கழுவிவிட்டு, சினிமாப் பாட்டுப் புத்தகமொன்றைக் கையில் வைத்துக் கொண்டு, வாயிற்படியில் தலைவைத்துப் படுக்கிறாள்.

மைத்ரேயிக்கு இது புதிய சிறையாக இருக்கிறது. ஒரு நாளை ஓட்டுவதற்கு முக்கி முனகும் பொருளாதார நெருக்கமடைய இந்தக் குடும்பத்தில் அவள் எப்படி ஒட்டிக் கொள்வாள்?

கையில் இருக்கும் சில்லறையுடன் இப்படியே பஸ்ஸில் ஏறலாம். ஏறி எங்கே செல்லலாம்? அவளைப் போன்ற ஒரு இளம் பெண், முள்ளில் சிக்கி ஒரு முறை குத்திக் கிழித்துக் கொண்ட காயத்தோடு எங்கே, எப்படிச் செல்வாள்?

மாமா, அன்று லோகநாயகி சோஷியல் வொர்க்கர் என்று சொன்னது மனசில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அத்திம்பேர் அக்காவுடன் முன்பொருமுறை எப்போதோ சென்னைக் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கே கைம்பெண்கள் விடுதி ஒன்று இருப்பதாகச் சொன்ன நினைவு குப்பத்தில் ‘லோக நாயகி அவர்கள் இந்தி வகுப்புகளைத் துவங்கி வைப்பார்கள்” என்று கொட்டை எழுத்துச் சுவரொட்டி பார்த்திருக்கிறாள். சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறிச் சென்று, தபால் நிலையம் ஏதேனும் ஒன்றில் ‘லோக நாயகி சோஷியல் வொர்க்கர்’ வீடு எது என்று கேட்டால் சொல்லமாட்டார்களா? அங்கே அவள் முன் சென்று காலடியில் விழுவது போலும், அவள் உடனே தட்டிக் கொடுத்து ஆறுதலும் தேறுதலும் கூறி விடுதியில் சேர்த்துக் கொள்வது போலும், தான் கல்லூரி மாணவியாய்ப் புகழுடன் முன்னேறி...

“என்ன ஐயரம்மா, நீ. உங்கிட்டப்போயி பொய் சொல்லி எனக்கு இன்னா லாபம்!” என்ற குரல் அவளுடைய பகற்கனவைக் கலைக்கிறது. மதுரம் மாமி ஒரு பையும் கையுமாக உள்ளே வருகிறாள்.

வெய்யிலில் வந்திருக்கிறாள் என்று நோக்கும்போதே புலனாகிறது. கைப்பையை மூலையில் சாத்திவிட்டுத் தாழ் வாரத்துப் பக்கம் செல்கிறாள். கதவடியில் வந்து, “அப்பாவு, டீக்கடைக்காரரிடம் கேட்டு ஒரு கிளாசு வாங்கிட்டுவாயேன்? நீ சூப்பிக்குடிப்பியேன்னு ஒரு கிளாசு வாங்கிவச்சால் அதை இந்த வானரப்படைகள் போட்டு உடச்சிடறது. டீ சொர்ணம், கடாமாடு போல என்னடீ படுக்கை? பீடை! எழுந்திரு! வழில படுத்துண்டுட்டா!” என்று கத்துகிறாள்.

அப்பாவு என்று அவள் கூப்பிட்ட ஆள், இளைஞன்தான், உள்ளே வந்து தாழ்வாரத்துக்குப் போகிறான்.

“அது யாரு ஐயிரம்மா?” என்று அவன் கேட்கும் குரல் அவள் செவிகளில் விழுகிறது.

“சொந்தக்காரப் பொண்ணு. டீச்சர் வேலைக்குச் சேர்ந்து படிக்கணும்னு பட்டணம் போக வந்திருக்கு.”

“இன்னிக்கு சாம்பாரு ரொம்ப நெல்லா இருக்கு ஐயிரம்மா, இன்னும் கொஞ்சம் போடு...”

மைத்ரேயி, மதுரம் சோற்று விடுதியும் நடத்துகிறாளோ என்று மலைக்கிறாள்.

“திரும்ப என்னிக்கு வருவே?”

“அடுத்த ட்ரிப் கள்ளிக்கோட்டை போகுது ஐயிரம்மா லாரி. ரெண்டுவாரம் கழிச்சுத்தான் இந்தப் பக்கம் வருவேன். ராதா அண்ணன் டிராமா இருக்குது, நம்ம குப்பத்துக் "போலீசா நின்னுது. அன்னிக்குத்தானே?”

“அப்ப ரத்தக்கண்ணீர் போட்டாரு. அது நல்லாயிருக்கும் ஐயிரம்மா. இப்ப அதில்ல. இது வேற டிராமா. முந்தா நா அண்ணா வேசம் கட்டின சந்திரமோகன் பார்த்தேன் ராமாவரத்திலே. அதும் ரொம்ப நெல்லாயிருந்தது ஐயிரம்மா .”

அப்பாவு கையைக் கழுவிக் கொண்டு வாயிலுக்குச் செல்கிறான். அவன் செல்லும்போது சொர்ணத்தின்மீது ஒரு கபடப் பார்வையை வீசிட்டுப் போகத் தவறவில்லை.

வாட்டசாட்டமாக இருக்கிறான்-அரைகால் சராய்க்கு மேல் நீலக்கோடு போட்ட சட்டை; தலையில் முண்டாசு கட்டிக் கொண்டிருந்தான் உள்ளே செல்லும்போது; வரும் போது இல்லை.

இவன் லாரியில் வரும் கிளீனரோ, டிரைவரோ? அல்லது வேறு சிறு தொழில் செய்பவனோ? கிட்டத்தட்ட இவனைப் போன்ற ஒருவனுடன்தான் அவள் உறவு கொண்டாள். தனராஜ் கவிஞன் என்று வைத்துக் கொண்டாலும் நெருங்கலான ஆள். மதுரம் மாமி இவனுக்குச் சோறிடுகிறாள். சொந்தக் குழந்தைகளிடம் இருந்த கண்டிப்புக் கறார் தன்மையை இவனிடம் காட்டவில்லை. வாலிபத்தின் கிளர்ச்சியில் மட்டும் சாதித் தடைகள் அகன்றுவிடுகின்றன என்பதில்லை; வறுமையிலும்கூட வேற்றுமைகள் கரைகின்றன. சட்டியில் பொங்கிய இவளுடைய புழுங்கலரிசிச் சொற்றையும் குழம்பையும் மேற்குலத்தான் உண்ண வரமாட்டான்; இவளைப் போன்று வறுமையில் உழன்றாலும் வரமாட்டான்.

அம்மணியம்மாளின் வீட்டில் நிகழ்ந்த கூட்டத்தில், அவளுடைய மனசில் சுருக்கென்றுதைக்க நிகழ்ந்த பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அவற்றில் நியாயம் காணக்கூடிய ஆர்வத்தை அவளிடம் தோற்றுவித்திருக்கின்றன.

அப்பாவு சென்றபின் மதுரம் கொஞ்சம் சோற்றை வைத்துக் கொண்டு உண்ணுகிறாள். பிறகு சற்றே தலையைச் சாய்க்கப்படுக்கிறாள். “அக்கா, அந்த டிராமா ரொம்ப நன்னாயிருக்காம். கூட்டம் இத்தனை போலீசையும் மீறிண்டு இருக்கணும்னா விசேஷமாத்தானே இருக்கும்? ஏன் போகக் கூடாதுங்கறே? இரத்தக் கண்ணீர் சினிமா கூட வந்திருக்கு, அப்பாவு அன்னிக்கே டிக்கெட் கூட வாங்கித்தந்திருப்பான்...” என்று எந்த சினிமாவுக்கும் நாடகத்துக்கும் போகக்கூடாது என்று தடுக்கும் தமக்கையின் மீது வழக்கம்போல் குறைபாடிப் பொருமுகிறாள்.

“ஆமாண்டி! காங்கிரசையும் பிராமணனையும் சேத்து நாக்கில் நரம்பில்லாம அவன் பேசறானாம். போய் கேட்டு இளிச்சிண்டு நிப்பே!” என்று சாடுகிறாள் தமக்கை.

“அவன் நடக்கிறதைத்தானே சொல்றானாம்? பெரிய காங்கிரஸ். அதைச் சொன்னா உனக்குக் கோபம் வந்துடும்!”

“ஆமாம், எனக்குக் கோபம்தான் வரும். அப்படித்தான் வச்சுக்கோயேன்? காங்கிரஸ் எனக்குப் பெரிசுதான். எனக்கு ஏதானும் ஆபத்து சம்பத்துன்னா லோகநாயகிதான் உதவப் போறாளே ஒழிய, இப்படித் திட்டிக்கொட்டறவா இல்லே!”

“ஆமாம், பெரிய உதவி பண்ணிக் கிழிச்சுட்டா! இப்படி அடிச்சு விரட்டறதுக்கே நாத்தினார் உறவுகொண்டாடு!”

“என்னை ஒருநாளும் லோகா அடிச்சு விரட்ட மாட்டாளாக்கும். இன்னிக்குத் தேதில நான் ராஜாத்திபோல இருந்துப்பேன். எல்லாம் உங்க பந்தங்களாலதான் ஒரு வழியுமில்லாம இருக்கு. அவா பெரிய மனுஷா. வரவா, போறவா நேரு முதல் கொண்டு வந்து போற இடம். இவர் வேணுன்னு அழுக்கு வேஷ்டியைக் கட்டிண்டு வாசல்ல நின்னு வாயில வந்ததைப் பேசலாமா? ஒத்தொத்தன் சொந்தத் தாயாரையே அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு கட்டுப்பாடு பண்றான். அவளுக்கு மதிப்புக் குறைவாக யார் பேசினாலும் தப்புத்தான். அப்படியும் அவ, எப்பவோ தலைமுறை விட்ட! உறவுன்னு இருக்கா? என்னத்துக்குண்ணா இப்படி? ஏன் நீங்க கண்ட கண்ட இடத்திலேயும் வேலை செய்யப் போகணும். வீட்டோடு ரெண்டு பேருமா வந்து இருங்கோன்னு ஜிட்டு பொறக்கறதுக்கு முன்னியே சொன்னா. இப்ப ஒரொரு சமயம் கேட்காத போயிட்டமேன்னுதான் தோண்றது. அப்பவே ‘சேவா ஹோம்’ ஆரம்பிச்சாச்சு. அங்கியே கூட எனக்கு வேலை கிடைச்சிருக்கும். இப்பக்கூடத்தான் ஒவ்வொரு சமயம் இல்லாம திண்டாடறப்ப, கடைசித்தையானும் கொண்டுச் சேர்க்கலாமான்னு தோணறது. அப்புறம் அப்பனும் அம்மையும் கல்லுப்போல இருக்கச்சே, அவா எடுக்கறேன் னாலும் விட மனசு வரல. இருந்தாலும், இவருக்கும் வாய் அதிகம். இன்ன பேசலாம் கூடாதுன்னு கிடையாது...”

“நீ இப்ப சப்பைக்கட்டுக்கட்டி என்ன ஆகப்போறது? நீ வானா லோகநாயகி நாத்தனார் முறைன்னு சொல்லிண்டு திரியறே. அவ ஒண்ணும் சொல்லிக்கமாட்டா...”

“அவ இன்னி வரைக்கும் என்னை வாய் நிறைய மன்னின்னு தான் கூப்பிடுவாளாக்கும். அவ என்ன செய்யலே? மூணுதரம் ஓட்டல் வைக்க முதல் கொடுத்தா. நஷ்டம் வராம என்ன செய்யும்? ஊரில் இருக்கிறவனுக்கெல்லாம் கடனுக்குச் சோறு போட்டுச் சத்திரம் நடத்தினா ஓட்டலாவா இருக்கும்? ஓட்டல் போச்சு, கடை வச்சுப்பிழைன்னா, அதுவும் உருப்படல. தின்னு உருட்டினது போறாம கஞ்சாவும் சேர்ந்ததுதான் மிச்சம். என் தலையெழுத்து. இந்தப் பிள்ளையானும் படிச்சு முன்னுக்கு வருமாக்கும்னு ஆசைப்பட்டேன். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமன்னு ஆயிருக்கு. ஓட்டல்ல காபி ஆத்தினாலும் ஒழுங்கா வேண்டாமா? நம்ம கடமை, பிராமணனாப் பொறந்ததால ஒரு நூல் மாட்டணும். எங்கெங்கெல்லாமோ தர்மப் பூணூல் (போடறா. நமக்கென்னதெரிகிறது? அவ காதிலதான் எல்லாம் போட்டு வைக்கணும். சின்னதை அழைச்சிண்டு ரெண்டு நான் போய் இருந்துட்டு வரலாம்னா, பட்டணம் போயிட்டு வர ரெண்டு மூணு ரூபாயாகும்....” என்று நிறுத்தும் மதுரம் மத்ரேயியைப் பார்க்கிறாள்.

மைத்ரேயிக்குச் செவிகள் தேன் கிண்ணங்களாக மாறினாற் போலிருக்கிறது. “ஆமாம், நீயுந்தான் இந்தக் ‘காட்டன் ஆட்டத்தில்’ ஒருநாள் கூரையப் பொத்துண்டு விழப் போறதுன்னு நம்பர் எழுதி எழுதி எரவாணத்தில் சொருகி வைக்கிறே. போஸ்ட் மாஸ்டர் பெண்டாட்டிக்கு அம்பதும் நூறும் விழறதாம். உனக்கும் விழல, எனக்கும் விழல” என்று குறைபடுகிறாள் சொர்ணம்.

“அவா, அம்பதும் நூறும் கட்டி ஆடறா. நீயும் நானும் ஒண்ணும் ரெண்டும் கட்டினா எப்படி விழும்? எனக்கு ஒரு அம்பது ரூபா விழுந்தா இங்கியே, இட்டிலிக்கடை போட்டுடுவேன். எனக்கு பிழைச்சுக்க முடியும்...” என்று தன் ஆசையை வெளியிடுகிறாள் மதுரம்.

“மஞ்சக்குடியில் சுண்டலும் கைமுறுக்கும் பண்ணிக் குடிக்கும் லோட்டா முதல் தோத்தாச்சு. நீ என் புடவையைக் கொண்டு தொலைச்சதுக்கு இன்னும் பதில் வாங்கித்தரல. அம்மா நினப்பா எனக்குக் குடுத்தது. அது பொறுக்கல உனக்கு. இப்ப இங்கே வந்து மறுபடியும் தொழிலா....?”

“பேசாம இரு. எப்படியும் மைத்ரேயியை அழைச்சிண்டு பட்டணம் போகப் போறேன். பாலாகிட்டக் கேட்டா புடவை எதானும் தருவா” என்று மீண்டும் மைத்ரேயியைப் பார்க்கிறாள் மதுரம்.

“மாமி, லோகநாயகியை உங்களுக்கு நன்னாத் தெரியுமா? என்னை எப்படியேனும் கொண்டு விட்டுடுங்கோ மாமி...”

இப்பவே போகலாம் என்று சொல்லத் துடிக்கிறாள்.

“நான் அப்படி நினைச்சுத்தான் உன்னைக் கூட்டிண்டு வந்திருக்கேன். எங்கியானும் வேலை போட்டுக் குடுப்ப, இந்த சொர்ணத்துக்குப் படிப்பு ஏதானும் இருந்தா எப்பவே போட்டிருப்பேனே? இங்கே ஒண்ணுக்கும் வழியில்ல...”

“உங்களுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருப்பேன் மாமி, தயவுபண்ணி எனக்கு ஒரு வழி காட்டிடுங்கோ ...”

“கட்டாயம். சீனு வரட்டும்..” என்று மதுரம் உறுதி கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_4&oldid=1115340" இலிருந்து மீள்விக்கப்பட்டது