வாழும் வழி/தமிழ்நாட்டு வில்சன்


3. ‘தமிழ்நாட்டு வில்சன்’

உலகம் ஒன்றுபட வேண்டும் என்பது அறிஞர்களின் ஆவல். இது அன்று மட்டுமன்று - இன்று மட்டுமன்று என்றுமே இருக்கும் ஆவல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவினராயிருப்பினும், தமிழர் என்னும் பெயரால் ஒன்றுபடுகிறார்கள். பல மொழியினருக்கு நடுவிலே இவர்கள் தம்மைத் ‘தமிழர்’ என்னும் பெயரால்தானே தெரிவித்துக் கொள்ளவேண்டும்? இது போலவே, தமிழன், தெலுங்கன், வங்காளி, குசராத்தி முதலியேர் ‘இந்தியர்’ என்னும் பெயரால் ஒன்றுபடுவர் பிற நாட்டினர் நடுவிலே. இந்தியன், பர்மியன், சீனன் முதலியோர் ஆசியாக் கண்டத்தினர் என்னும் பெயரால் ஒன்றுபடுவர் பிற கண்டத்தாரின் நடுவிலே. இவ்வொற்றுமை நிலையினை இங்கு நான் கட்சி பற்றியோ, மதம் பற்றியோ வகுக்காமல், அரசியல் பற்றியே வகுத்தேன். ஆசியன், ஐரோப்பியன், அமெரிக்கன் முதலிய எல்லாக் கண்டத்தாரும் ஒன்றுபட்டால் உலகம் ஒன்றுபட்டதாகப் பொருளல்லவா? இந்த ஒற்றுமையை, ஒரே மதமோ, ஆட்சியோ உலக முழுவதும் பரவின் உண்டாக்கக் கூடும். அல்லது, வேறு மண்டலமாகிய ‘செவ்வாய்க் கிரகம்’ போன்ற இடத்திலிருந்து நம் உலகத்திற்கு எதிர்ப்புத் தோன்றுமாயின், எல்லாக் கண்டாத்தார்களும், ‘பூவுலகத்தார்’ (பூமியார்) என்னும் பெயரால் ஒருவேளை ஒன்றுபடலாமோ என்னவோ!

இப்போதும் நம் உலகில் ‘உலக ஒன்றுமைக் கழகம்’ (சர்வதேசச் சங்கம்) இருந்து தொண்டாற்றி வருவதை அரசியல் அறிவுபெற்ற அனைவரும் அறிவார்கள். இந்த ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தமிழில் சுருக்கமாக ஐ.நா. என்று அழைக்கப்படுகிறது.

ஐ.நா.வின் நோக்கங்களுள் முக்கியமானவற்றைக் கீழே சுருக்கித் தருகிறேன்:

1. இனி உலகின் எந்த மூலையிலும் போர் என்ற பேச்சே எழக்கூடாது.
2. ஒவ்வொரு மனிதனின் உரிமையும் மதிப்பும் காப்பாற்ற வேண்டும்.
3. மனித சமுதாயம் துன்பங் காணாத இன்ப வாழ்க்கை வாழ்வதற்கு வேண்டிய வசதிகளை ஆக்கித் தரல் வேண்டும்.
4. மக்களிடையே சகிப்பும், பொறுமையும் நிலவச் செய்து நட்பை வளர்க்கச் செய்யவேண்டும்.
5. உலக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் கேடு தோன்றின் உலகத்தார் அனைவரும் ஒன்றுபட்டுக் காக்க வேண்டும் - முதலியன.

இவற்றுள் மூன்றாவது நோக்கத்துள் மற்றைய நான்கும் அடங்கிவிடும் ஆதலின், அது மிகவும் இன்றியமையாதது. இந் நிறுவனத்தின் சட்ட திட்டங்களைப் பின்பற்ற ஒத்துக்கொள்ளும் எந்த நாடும் இதில் பங்கு கொண்டு தொண்டாற்றலாம். இது ‘பொருளாதார அவை’, ‘சமூக அவை’ என்னும் இரு சபைகளை அமைத்துப் பொருளாதார சமூக திட்டங்களைக் கவனித்து வருகிறது. உலகத்தில் ஏற்படும் குற்றங்குறை சண்டை சச்சரவுகளை மேற்பார்வையிட்டுத் தீர்ப்பு வழங்க, ‘அனைத்துலக நீதிமன்றம்’ ஒன்றையும் இது அமைத்துள்ளது. மற்றும் கொரியப் போர், ஈரான் எண்ணெய்த் தகராறு, காங்கோ சிக்கல் முதலியவற்றில் இந்த ஐ.நா.வின் ஈடுபாடு எத்தகையதென்பதை உலகறியும்? இதில் எல்லா நாட்டினரும் பங்கு கொள்வார்களேயானால், இதுவும் நேர்மையான முறையில் நடக்குமேயானால், கூடிய விரைவில் உலகம் ஒன்றுபடும் என்பது உறுதி ஆனால் அதுதான் ஐயம்! இதற்குத் தக்க காரணமும் கூறுவேன்:

‘ஒரு கண் கெட்ட பின் சூரிய வணக்கம்,!’ ‘திருட்டுப் போனபின் அறைக்குப் பூட்டு’ - என்ற முறையில்தான் இந்த ஐ.நா.வும் தோன்றியது. இரண்டாவது உலகப் பெரும்போரில் எத்தனை உயிர்க்கொலை எத்தனை அழிவு வேலைகள் எத்தனை இழப்புகள் எத்தனை தொல்லைகள்! அப்பப்பா சொல்லுந்தரமன்று! போர் முடிந்தது. சில நாடுகள் தோற்றன; சில நாடுகள் வென்றன. இருவகை நாடுகளுமே மேற்கூறிய துன்பங்களுக்குக் குறியானவைகளே. கிட்டத்தட்ட உலகத்தையே வறுமை சுவைத்துப் பார்த்தது. ஆராய்ந்து பார்த்தார்கள் உலக அறிஞர்கள் சிலர்; ஒரு முடிவுக்கு வந்தார்கள்; ஐ.நா. வைத் தொடங்கினார்கள்; திட்டங்களைத் தீட்டினார்கள். இதைத்தான் யான் முதலில் விவரித்தேன்.

எல்லா நாட்டினரும் இதில் சேரமாட்டார்கள்; சேர்ந்தாலும் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒத்துழைக்க மாட்டார்கள் என்று ஏன் ஐயப்படுகிறேன் என்றால், இப்போது உலகம் தெனாலிராமன் வளர்த்த பூனையாகிவிட்டது. அவன் சூடான பாலை பூனைக்கு வைத்தானாம். குடித்ததும் பூனையின் வாய் வெந்து போயிற்றாம். அதிலிருந்து ஆறிய பாலை வைத்தாலும் அது குடிப்பதில்லையாம். ஆலமரத்தில் தொங்கிய பாம்பை விழுது என்று எண்ணிப்பிடித்துப் பயந்துபோன குரங்கு, மறுபடி உண்மையான விழுதை - ஏன் தன் வாலையே பார்த்துப் பாம்போ என அஞ்சுவது இயற்கைதானே! இவ்வெடுத்துக்காட்டுகளின் பொருத்தத்தைச் சிறிது ஆராய்வோம்.

இந்த ஐ.நா. இரண்டாவது உலகப் போரின் பின்புதானா ஏற்பட்டது? இல்லையில்லை. முதல் உலகப் போர் முடிந்ததுமே ஏற்பட்டுவிட்டது. அப்படியாயின், இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது இது என்ன செய்தது? அப்போர் வராமல் ஏன் நிறுத்தவில்லை? வந்தவுடனேதான் ஏன் நிறுத்தவில்லை? அணுகுண்டு வந்துதானா நிறுத்த வேண்டும்? தன் ஆற்றலை அணுகுண்டுக்கு அளித்துவிட்டதா? என்ற கேள்விகள் எழும். இதனைச் சிறிது விரிவாக நோக்குவோம்:

முதல் உலகப் போர் முடிந்ததும் பாரிசில் ‘சமாதான மகாநாடு’ கூடியது. அதன் பயனாகவே ‘உலக ஒற்றுமைக் கழகம்’ உருவாயிற்று. உலக மக்கள் ஒன்று படுவதற்கும் வசதியாக வாழ்வதற்கும் உரிய சட்ட திட்டங்கள் பலப் பல வகுக்கப்பட்டன. பல நாடுகள் கழகத்தில் சேர்ந்தன. சில நாடுகள் சில்லாண்டுகள் கழித்துச் சேர்ந்தன. இக்கழகம் செய்த ஆக்க வேலைகளுள் ஒரு சில கீழே தரப்படும்.

1. சுவீடனுக்கும் - பின்லாந்திற்கும், செர்மனிக்கும் - போலந்துக்கும், கிரேக்கருக்கும் - பல்கேரியருக்கும், கொலம்பியாவிற்கும் - பெருவிற்கும் ஏற்பட்ட சச்சரவுகளைத் தீர்த்துப் போர் மூளாமல் செய்தது.
2. ஏழ்மை நாடுகளின் தொழில் வளத்தைப் பெருக்கிப் பொருளாதாரத்தை உயர்த்த முயன்றது.
3. அடிமைத்தனம் - அபின் வியாபாரம் முதலிய வற்றைத் தொலைக்கப் பாடுபட்டது.
4. தொத்து நோய்கள் பரவாமல் இருக்கத் தடுப்பு முறைகள் செய்தது.
5. ஏழை நாடுககளுக்குப் பெருந்தொகையைக் கடனாக அளித்துதவியது.
6. போர்க் கைதிகள் தத்தம் நாடடையச் செய்தது.
7. நிற வேற்றுமையை ஒழிக்க முனைந்தது.

இப்படிப் பலவகை நன்மைகளைச் செய்து கொண்டிருந்த சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சிறகிழந்த பறவையாயிற்று! வேலியால் மேயப்பட்ட பயிராயிற்று! எப்படி? குறுகிய தேசப்பற்றுக் கொண்ட செர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் சங்கத்திலிருந்து பிரிந்தன. பிரிந்ததோடு நிற்காமல், உராய்கிற மாடு மேய்கிற மாட்டைக் கெடுத்தாற்போல் பிற நாடுகளின் அமைதியையும் குலைக்கத் தொடங்கின. அன்றியும் சங்கத்தில் சேர்ந்திருந்த பல நாடுகளும் இனிப் படையைப் பெருக்குவதில்லை என்று சங்கத்தில் ஒத்துக்கொண்டு தத்தம் ஊர் சென்றதும், ‘அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு மொந்தை போடு’ என்ற முறையில் ஏராளமாகப் படைகளைப் பிறர் அறியாமல் பெருக்கி வைத்துக்கொண்டு பத்தினிபோல் பாசாங்கு செய்தன. இது எப்படித் தெரிந்தது? படையைப் பெருக்கக்கூடாது என்ற நாடுகளின் ஒழுங்கு, இரண்டாவது உலகப் பெரும் போரில் தெரிந்துவிட்டதே! அம்மம்மா எவ்வளவு ஆயத்தங்கள்! எவ்வளவு பீரங்கிகள்! எவ்வளவு குண்டுகள், எவ்வளவு தரை-நீர்-வான ஊர்திகள்! இந் நிலையில் நாடுகள் நாளாவட்டத்தில் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறின. முதல் முதல் சங்கத்தின் கட்டுப் பாடுகளை ஃஇட்லர் அவர்களே “போனி” பண்ணினார். 1939-இல் போலந்தைத் தாக்கி இரண்டாவது உலகப் பெரும்போருக்குத் திறப்புவிழா செய்தார். கெடுவான் கேடு நினைப்பான் அன்றோ? இந்நிலையில் சங்கம் பங்கம் எய்தி மயங்கியது. சங்கம் ஒன்றிருந்ததையே மறந்து உலகம் போரில் ஈடுபட்டது. அணுகுண்டு வந்தே ஆண்டுவிழா நடத்தியது. இந்தக் கதி இப்போதுள்ள ஐ.நா.வுக்கும் வராது என்று யார் ஆருடம் சொல்லுபவர்? இப்போது தெரிகிறதா ஐயத்தின் காரணம்?

முதல் உலகப் போருக்குப் பின் முதல் முதல் இந்த உலக ஒற்றுமைக் கழகத்தை நிறுவப் பாடுபட்டவர்களுள் முக்கியமானவர், இருபத்தெட்டாவது அமெரிக்கச் சனாதிபதியாயிருந்த ‘வுட்ரோ வில்சனே’ (Woodrow Wilson) யாவார். கழகத்துக்குரிய திட்டங்களைத் தயாரித்தவரும் இவரே! இதனாலேயே உலகம் இன்றும் இவரை, ‘சர்வதேசச் சங்கத்தின் தந்தை’ என்று புகழ்கிறது. தந்தை வில்சன் பெற்றெடுத்த ஒற்றுமைக் குழந்தையை வளர்க்கச் செவிலியர் பலர் பல வகையில் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுள் ‘வெல்ஸ்’ என்பவரும் ஒருவர். இவர் தாம் எழுதிய ‘சரித்திரச் சுருக்கம்’ என்ற நூலுள், உலக ஒற்றுமையை நிலை நாட்டுவதற்கு ஒரு பொதுவான கொள்கையே இருக்க வேண்டும்; எல்லோரும் கல்வி பயில வேண்டும்; எவ்வகைப் படையும் இருக்கக்கூடாது; வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவேண்டும் - என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான் ஏட்டில் எழுதி வைத்து என்ன பயன்? எல்லோரும் பின்பற்ற வேண்டுமே ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதன்றோ?

எல்லா வசதியும் நிறைந்த இந்த நூற்றாண்டில், அதிலும் அரசியல் தலைவர்கள், அதிலும் போரால் நொந்த பின்பு இவ்வுலக ஒற்றுமைப் பேச்சை எழுப்பியதில் என்ன வியப்பு? ஒரு வசதியும் இல்லாதிருந்த காலத்தில், ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பிறந்த ஓர் ஏழைத் தமிழ்ப் புலவர், உலக ஒற்றுமை வேண்டும் என்று தம் கவியில் குறிப்பிட்டுள்ளார். ‘யாதானும் நாடாமல் ஊராமால்' என்னும் திருவள்ளுவரின் திருக்குறளை இங்கு நான் எடுத்துக் கூறவில்லை. அவர், யாதும் ஊரே யாதும் நாடே என்று குறிப்பிட்டிருப்பது கற்றவர்களுக்கு மட்டுமே. யான் குறிப்பிடும் புலவர் பொதுவாக உலகத்தார்க்கே சொல்லியுள்ளார். அதனாலேயே அவர் கவிக்குப் ‘பொதுவியல்’ என்னும் பேர் அளிக்கப்பட்டுள்ளது. அது பழைய தமிழிலக்கியமாகிய புறநானூற்றுள் உள்ளது. அதன் கருத்து வருமாறு:

“எல்லா ஊரும் நமக்கு ஒன்றே. எல்லா மனிதரும் நம் உறவினரே. நமக்கு நன்மையோ, தீமையோ வருவது நம்மாலேயே. துன்பம் வந்தபோது நோவதோ, அதைப் போக்கிக் கொள்வதோ நம்மைப் பொறுத்தேயுள்ளன. இறப்பு என்பது நமக்கு மட்டும் வரும் புதுமையன்று. அதனால், வாழ்வு வந்தபோது துள்ளிக் குதிப்பதோ, தாழ்வு வந்தபோது தாங்காது புலம்புவதோ எம்மிடம் இல்லை. ஒரு சிலரை உயர்த்துவதோ, மற்றொரு சிலரைத் தாழ்த்துவதோ எமக்கு வழக்கம் இல்லை.” என்பதாகும். இதனை,

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே
.........................
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

என்னும் புறநானூற்றுப் (192) பாட்டால் அறியலாம். இக்கருத்துக்களை முக்கியமாக முதல் அடியை உலக மக்கள் பின்பற்றினால் வரும் தீங்கென்ன? உலகம் ஒன்றுபட முடியாதா?

இன்ன இன்ன இடத்தில் இன்னின்ன நாடுகள் இருக்கின்றன என்று அறிய முடியாதபடி, கடலாலும் மலையாலும் உலகம் பிளவுபட்டுக்கிடந்த காலத்திலேயே நம் புலவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முழங்கியிருக்கிறார் என்றால், கப்பல், வானவூர்தி, வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி முதலிய கருவிகள், காலத்தையும் தூரத்தையும் வென்று சுருக்கி, உலகத்தை இணைத்துக் கொண்டிருக்கின்ற இவ்விருபதாம் நூற்றாண்டிலாவது உலகம் ஒன்றுபடக் கூடாதா? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மூல மந்திரத்தினை ஒவ்வொருவரும் பின்பற்றி நடந்தால் ‘ஒரே உலகம்’ உருவாகாதா?

இம் மந்திரத்தை உலகிற்கு வழங்கிய அப்பழைய தமிழ்ப் புலவரின் பெயர் ‘கணியன் பூங்குன்றனார்’ என்பது. இவரை, சர்வதேசச் சங்கத்தின் தந்தை என்று உலக விளம்பரம் பெற்ற அமெரிக்கச் சனாதிபதி வில்சனாக உருவகித்து, தமிழ்நாட்டு வில்சன் என்று அழைத்ததில் என்ன தவறு?