வாழும் வழி/விருந்தோம்பல்
விருந்தோம்புதல் மனித உள்ளத்தின் உயர்ந்த பண்பாகும். பிள்ளையில்லா வாழ்வினும், விருந்தினரைப் பெறாத விருந்தோம்பாத குடும்ப வாழ்வு மிகவும் வெறிச்சோடிக் காணப்படும். அமிழ்தமானாலும், விருந்தினை வெளியே விட்டுத் தாம் மட்டும் உண்பது மனிதத் தன்மைக்கு அழகேயன்று. 'மருந்தேயாயினும் விருந்தோடு உண்' என்பதை மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? காக்கையும் அன்றோ இனத்தை அழைத்து உண்ணுகிறது. மேலும், வீடென ஒன்று கொண்டு, அதில் கணவன் மனைவியென இருவர் கூடி இல்வாழ்க்கை நடாத்துவது, உலகிற்கு உதவி உழைப்பதற்குத்தானே! ஒருவருக்கொருவர் உதவி ஒப்புரவு செய்துகொண்டாலே எவரும் எங்கும் வாழ முடியும். வாழ்க்கையின் அடிப்படை இதுவாகவே இருக்கவேண்டும். இவற்றையெல்லாம்,
“விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.”
“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”
முதலிய திருக்குறள்களால் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். மேலுமவர், எவ்வளவு பெருஞ்செல்வரா யிருப்பினும், விருந்தோம்பாதவர் ஏழைகளாகவே கருதப்பட்டு இழிக்கப்படுவார்கள் என்னும் கருத்தில்,
“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.”
என்னும் குறளைக் கூற மறந்தாரில்லை. நாமும் அவர் மொழிகளை மறக்கலாமா? இவ்விருந்தோம்பலும் பெண்ணில்லா வீட்டில் நடைபெற வழியில்லை. இத்தொண்டில் பெரும்பங்கு பெண்பாலார்க்கே உரியதாம். அது அவர்களின் தனிக் கலையுங் கூட!
கற்புக்கு அணிகலமாகிய கண்ணகியை, வாழ்க்கையில் இன்பமின்றித் தவிக்கவிட்டான் கணவன் கோவலன். மாதவியை அடுத்திருந்தான். பின் பிழையுணர்ந்து வீடு திரும்பினான். மனைவியை மதுரைக்கு அழைத்துச் சென்றான். மாதரி வீட்டில் தங்கினான். ஆங்கு உணவுண்ட பின் கண்ணகியை அருகில் அமரச் செய்தான். தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பவன் போல் புலம்பத் தொடங்கினான்: “இரவில் கரடுமுரடான வழிகளில் கால் நோவ உடன் வந்த கண்ணகியே! உன் அன்பை என் னென்பேன்! உன் உள்ளம் அறியாமல் வாணாளை வீணாள் ஆக்கினேன். உனக்கு இன்பமே அளித்தே னில்லை. துன்பக் கடலிலேயே தோயச் செய்தேன். அவ்வமயம் உன் மனநிலை எவ்விதம் இருந்ததோ! ஆ கொடியேன், என் செய்தேன்' என்றெல்லாம் பல கூறி அரற்றினான்; பிதற்றினான்; ஏங்கினான்.
கேட்ட கண்ணகி உம்மைப் பிரிந்திருந்த காலத்தில் எனக்கு நல்ல உணவில்லை; உயர்ந்த ஆடை அணிகலன்கள் கிடைக்கவில்லை; உம்மை மணந்து கொண்டதால் துன்பமேயன்றி இன்பம் ஏது என்றெல்லாம் மொழிந்தாள் என்று எண்ணுகிறீர்களா? இல்லையில்லை! “என் அருமைத் தலைவரே! இராவழி நடந்ததால் என்கொன்றும் அலுப்புத் தோன்றவில்லை காரணம் நும்முடன் வந்தமையே! நும்மைப் பிரிந்து தனித்திருந்த காலமே - அதிலும் தனிமைத்துன்பத்தால் இன்பமின்றிக் கழிந்தது. அப்போழ்து பெருங் கவலையொன்று என்னை மிகவும் தாக்கியது. நம் வீட்டிற்கு வந்த அறவோர்கட்கு ஒன்றும் அளித்தேனில்லை; செந்தண்மை பூண்ட அந்தணர்களை மகிழ்வித்தேனில்லை; துறவிகளைக் காத்தேனில்லை; விருந்தினர்களை எதிர்கொண்டு வரவேற்றேனில்லை. பெண்கட்குக் கிடைக்கக்கூடிய இவ் அரும்பெரும் வாய்ப்புக்களையெல்லாம் இழந்ததே எனக்குத் துன்பமாகத் தோன்றியது” என்று அன்பு கனிய இன்மொழி புகன்றாள். என்னே நம் கண்ணகியின் கலங்காத கற்பு நோக்கம்! இதனை,
“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"
என இளங்கோவடிகள் இனிமையாகச் சிலப்பதிகாரம் என்னும் நூலில் பொறித்துக் காட்டியுள்ளார்.
இராமனும் சீதையும் நாட்டை விட்டனர், காட்டையடைந்தனர். அங்கே சீதை இராவணனால் சிறையெடுக்கப்பட்டாள். இலங்கையை அடைந்தாள். இராமன் காட்டில் தனித்து வருந்தினான். இலங்கையில் இருக்கும் சீதையின் கவலைக்கோ ஓர் எல்லையில்லை. அவள் கவலை சென்றது எவ்விதத்தில்? “காட்டில் நாம் இருந்த குடிசைக்குப் பல துறவிகள் விருந்தாக வருவார்களே, அவர்களின் நிலை என்ன? அவர்கட்குச் சமைத்துப் பரிமாறுபவர் யாவர்? அங்கிருந்து அவர்க்குத் தொண்டு செய்வதற்கும் முடியாமற் போனதே. அவ் விருந்தினரைக் கண்டதும் உணவு முதலியவற்றால் மகிழ்வித்தற்கின்றி நம் கணவர் மனம் என்ன பாடுபடுகின்றதோ அங்கு” என்றெல்லாம் பல எண்ணிக் கவன்றாள். இதனை,
“அருந்து மெல்லடகு யாரிடம் அருந்துமோ என்றழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறு மோஎன விம்மும்
மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கென மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித் திடவும்ஆண் டெழாதாள்”
என்னும் கம்பரின் உருக்கமான பாடலால் அறியலாம். தமிழ்ப் பண்பாட்டில் ஊறி வளர்ந்து வாழ்ந்த கம்பர், சீதையின் வாயிலாக விருந்தோம்பியதை வற்புறுத்தியதில் வியப்பொன்றும் இல்லையன்றோ?
கண்ணகியும் சீதையும் விருந்தோம்பாது போயினும் தம்மால் முடியாது போனமைக்கு வருந்தியாவது இருப்பது மிகவும் போற்றிப் புகழ்தற்குரியதாகும். சிறந்த பெண்களின் இலக்கணம் இதுவே. தாங்கள் எவ்வளவு எளிய நிலையில் இருப்பினும், தம்மை நாடி வந்தவர்களை உதறித் தள்ளாமல் மகிழ்விக்கும் மனப்பான்மையும் திறமையும் பெண்டிர்க்கு இருத்தல் இன்றியமையாததாகும்.
வீட்டில் ஒன்றும் இல்லை. உணவு தண்ணீரே! அதுவும் ஒரு நாளைக்கு ஒரு குடத்திற்கு மேல் மறு குடத்திற்கு வழியில்லை; இந்நெருக்கடியான நேரத்தில் சுற்றத்தினர் வந்து சூழ்ந்துவிட்டனர். சுற்றத்தார் என்றால் ஒருவரல்லார்; இருவரல்லார்; கடல் நீரும் போதா அளவில் பலர் கூடிவிட்டனர். அஞ்ஞான்று, பெண் தன் முழுத் திறமையையும் பயன்படுத்த வேண்டும். இது பற்றியன்றோ,
“குடநீர்அட் டுண்ணும் இடுக்கட் பொழுதும்
கடல்நீர் அறஉண்ணும் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்”
என நாலடியாரும் முழங்குகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், இளங் கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ என்னும் இரண்டு மன்னர்கள் ஓரிடத்தில் வீற்றிருந்தனர். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அங்கு சென்றார். அவர், இளங்கண்டீரக்கோவை மட்டுமே வணங்கிப் பாராட்டினார். உடனிருந்த இளவிச்சிக்கோ, “ஏன் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை?” என்று புலவரைக் கேட்டான். அவனுக்கு அவர் கூறிய பதில் வருமாறு:
“இளவிச்சிக்கோவே பண்டைக் காலந்தொட்டே கண்டீரக் கோவினுடைய நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். பாடும் புலவர் வந்துவிட்டால் பாராட்டிப் பரிசு தந்தனுப்புவார்கள். ஆண்கள் மட்டும் அல்லர் - பெண்களும் அத்தகையோரே தன் கணவர் வெளியூருக்குச் சென்றிருக்கும்போது புலவர்கள் வந்துவிடின், கணவர் வரும்வரையும், வந்தவரைக் காக்க வைத்திருக்க மாட்டார்கள். பயனின்றியும் அனுப்பமாட்டார்கள். உணவு படைத்து உளங்குளிரச் செய்வார்கள். அது மட்டுமா? தம் தகுதிக்கேற்பப் பெண் யானைகளை அணிகலன்களால் அலங்கரித்து அவற்றைப் பரிசாக அளிப்பார்கள். அத்தகைய உயர்ந்த மனப்பான்மை நிறைந்த உறவினர்களையும், குடிமக்களையும் உடையவர் கண்டீரக்கோ, ஆதலின் அவரைப் பாராட்டினேன். நீயோ, பெண் கொலை புரிந்த நன்னன் மரபினன். பாடும் புலவர் நின்னைக் காண வரின் நின் கோட்டை அடைத்த கதவோடு அவர்கட்குக் காட்சியளிக்கும். ஒருவரும் உள்ளே புகவே முடியாதென்றால் பயன்பெறுவது எப்படி? அதனாலேயே என் போன்றோர் உன் போன்றோரை எப்போதுமே பாராட்டுவதில்லை” என்று கூறி முடித்தார் புலவர். இவ் வரலாற்றை, அப்புலவர் பாடிய
“பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின் இழையணிந்து
புன்தலை மடப்பிடி பரிசி லாகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீரக் கோன் ஆகலின் நன்றும்
முயங்க லான்றிகின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியுநும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே”
விருந்தோம்புதலின் பெருமையறியாத பேதையர் சிலர், விருந்தினரைக் கண்டதும் ஓடிப் பதுங்குகின்றனர். சில வீடுகளில் கணவன் விருந்தினரை அழைத்துக் கொண்டு உள்ளேநுழைய முடியாது. தவறி நுழைந்தாலோ புடவை கட்டிய புலி பாயும். பாவையெனப் பெயர்பெற்ற பாம்பு சீறும். இந்நிலையில், விருந்தினரைக் கண்டால் தலைமறைவாய்ப் போகாமல் வேறென்ன செய்வான் கணவன். விருந்தினரை அழைத்து வந்தால், மனைவி கணவன் தலையில் சட்டியையிட்டு உடைக்க, அது வளையம்போல் கழுத்தை அலங்கரித்த கதையை, “வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு என் தலையில், இந்தப் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை” என்னும் அடிகள் அறிவிக்கப்படவில்லையா?
ஒரு சமயம், ஒரு வீட்டின் வெளித் திண்ணையில் விருந்தாக அமர்ந்திருந்தார் ஒளவையார். அவரை எப்படியாவது உண்ணச் செய்யவேண்டும் என்பது அவ்வீட்டு ஆடவனின் ஆவல். அவன் மனைவியோ கொடுமைக்கு இருப்பிடம். விருந்து வந்துள்ளதென அவளிடம் விளம்பவும் அச்சம். ஆதலின், அவளைத் தன்வயப் படுத்துவதற்காகச் சில தொண்டுகள் செய்ய முற்பட்டான். அவள் அருகில் சென்றான். தலையிலுள்ள ஈரையும் பேனையும் எடுத்தான். கூந்தலைக் கோதி முடித்தான். தண்ணீரால் முகத்தைத் துடைத்துத் தூய்மை செய்தான். பொட்டிட்டான். மற்றும் பணிவிடைகள் பல புரிந்தான். இனி நம் வேண்டுகோளை மனைவி ஏற்கலாமென அரை குறையாய் நம்பினான். கட்டிக் கொண்டான்கையை. மெதுவாக, விருந்து வந்துள்ளளது என்று விண்ணப்பம் செய்தான். அவ்வளவுதான், அம்மைக்கு வந்தது சினம். எழுந்தாள்; ஆடினாள்; சரமாரியாகப் பாடினாள் சில பாடல்களை; அவன் ஓடினான்; விடவில்லை; தானும் ஓடினாள்; பழ முறத்தாலும் சாடினாள். பார்த்தார் ஒளவையார். அந்த வேகம் தம் பக்கமும் திரும்பிவிடுமோ என்று அஞ்சினார். இவ்வளவு நேரம் உண்ணக் காத்திருந்து ஏமாந்துபோன அவர் வாய், உண்பதற்குப் பதிலாக,
“இருந்து முகந்திருந்தி ஈரொடு பேன்வாங்கி
விருந்துவந்த தென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடிமுன் தான்”
என்று பாடத் தொடங்கிவிட்டது. இத்தகைய கொடிய நிலை குடும்பத்தில் கூடவே கூடாது. குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொள்ளலாமா? இன்பத்திற்கன்றோ குடும்பம்? துன்பத்தைத் தூரத்தில் ஓட்டுவதே அறிவுடைமையாகும். ஆடவர்க்கு மனமில்லாது போயினும், பெண்டிர் விரும்பினால் விருந்தோம்ப முடியும். ஆதலின் அவர்கள் அக் கலையை மறவாமை கடமையாகும்.