வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/உண்மை அறிவும் போலி அறிவும்

5
உண்மை அறிவும் போலி அறிவும்

‘நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு. அறியாததை அறிந்துள்ளதாயும், அறிந்ததை அறியாதிருப்பதாயும் எண்ணுவதே போலி அறிவு’ என்று கன்பூஷியஸ் கூறினார். நம்மிடையேயுள்ள போலி அறிவுக்கு இதைப் பார்க்கிலும் சிறந்த விளக்கம் கூறமுடியாது. இக்காலத்துப் போலி விஞ்ஞானம், நாம் அறிய முடியாததை அறிந்துவிட்டதாயும், உண்மையில் நாம் அறிந்துள்ள ஒரே விஷயத்தை அறிய முடியாததாயும் கற்பித்துக் கொள்கிறது. இதனால், மனிதன், காலத்தாலும் இடத்தாலும் தன் முன்பு காணும் எல்லாப் பொருள்களையும் அறிந்திருப்பதாயும், தனது பகுத்தறிவு உணர்ச்சி கூறுவதை மட்டும் அறியாதிருப்பதாயும் கற்பித்துக் கொள்கிறான்.

நன்மையான விஷயங்களை அவன் அறிந்து கொள்ள முடியவில்லை ; முக்கியமாகத் தனக்கு நன்மையானவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது என்று கருதுகிறான் ; தனக்குள்ளேயே இருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியையும் அறிய முடியாது என்பது அவன் எண்ணம். ஆயினும், தன் மிருக இயல்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பொதுவாக மிருகங்களையும் தாவரங்களையும் பற்றி மேலும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும், சடப் பொருள்களையும் பலதிறப்பட்ட சேர்க்கைகளாயுள்ள பொருள்களையும் இன்னும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது.

மனிதனுடைய கண் பார்வையே ஒரு மாதிரியானதுதான். அவன் பக்கத்திலுள்ள பொருள்களை விட்டுவிட்டுத் தன்னை அறியாமலே வெகு தூரத்திலுள்ள பொருள்களிலே பார்வையைச் செலுத்துவது வழக்கம். அவைகளின் உருவங்களும், நிறங்களும் தெளிவாய்த் தெரிவதாக எண்ணுவான். ஆகாயம், அடிவானம், தூரத்திலுள்ள நிலங்கள், காடுகள் முதலியவைகளைப் பார்த்து, அவன் இவ்வாறு கருதுவது வழக்கம். உண்மை என்னவென்றால், தூரத்துப் பொருள்களின் உருவ அமைப்புக்கள் தெளிவாய்த் தெரிவதில்லை. அவைகளின் நிற வித்தியாசங்களும் புலப்படாமல் ஒரே வர்ணமாகத் தெரியும். ஆயினும், மனிதன், அவைகளைப் பார்ப்பது எளிது என்றும், அருகேயுள்ள பொருள்களைவிட அவைகள் தெளிவாய்த் தெரிகின்றன என்றும் எண்ணுகிறான். ஆகாயத்தையும் அடிவானத்தையும் பார்க்கிலும் அருகிலுள்ள வீடுகளும் மரங்களும் அவனுக்குத் தெளிவு குறைந்து தோன்றுகின்றன. அவனுடைய உள்ளங்கையைக் கண் முன்பு ஆட்டிப் பார்த்தால், அது இன்னும் தெளிவில் குறைந்து தோன்றும். எங்கும் பரந்துள்ள ஒளியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை ; பார்ப்பதற்கே அது மிகவும் கஷ்டமான பொருளாகிவிடும்!

மனிதனுடைய போலி அறிவும் இப்படித்தேனே இருக்கிறது! சந்தேகமில்லாமல் அவனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பகுத்தறிவு உணர்ச்சியை அறிய முடியாத ஒன்று என்று அவன் கருதுகிறான். அதே சமயத்தில், எதை அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாதோ, அதை ஆராய்ந்து பார்த்துவிடலாம் என்று முனைந்துவிடுகிறான். சடப்பொருள்-பிரகிருதி-எல்லையற்றது ; என்றும் உள்ளது. அதைக்கூட அறிந்துவிடலாம் என்று அவன் துணிவடைகிறான். இந்த விஷயங்களிலும் தூரத்திலுள்ளது எளிதாகவும், அருகிலுள்ளது கடினமானதாகவும் தோன்றுகின்றன.

இந்தத் தோற்றம் தவறானது. உண்மை இதற்கு நேர்மாறானது. ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் நன்மை எது என்பதை நன்றாக அறிவான். மற்ற விஷயங்கள் எல்லாவற்றிற்கும் முன்னதாகவும், மற்றவைகளைப் பார்க்கிலும் நிச்சயமாகவும் அவன் தெரிந்துள்ளது இதுதான். இந்த நன்மையை அவனுக்கு அறிவுறுத்துவது பகுத்தறிவு என்பதும் தெரியும். பகுத்தறிவுக்கு அடங்கியுள்ள மிருக இயல்பைப் பற்றி அடுத்தபடியாக அவன் அறிவான். இதற்குப் பிறகுதான் அவன் காலத்திலும் இடத்திலும் தோன்றும் மற்றைப் பொருள்களை யெல்லாம் காண்கிறான்- காண்கிறானே தவிர, அறிந்துகொள்வதில்லை.

மனிதன் தன்னை- தன் மிருக இயல்பை- உணர்ந்து கொள்வதோடு அவனுடைய உண்மையான அறிவு பூர்த்தியாகிறது. அவனுடைய மிருக இயல்பு நன்மையை நாடிச் செல்கின்றது. அது பகுத்தறிவின் விதிக்கு உட்பட்டிருக்கிறது. மிருக இயல்புள்ள உடலில் அவன் தன்னை அறிந்து கொள்கிறான். காலத்திலும் இடத்திலும் அவன் சம்பந்தமுள்ளவன் என்பதால் இந்த அறிவு ஏற்படுவதில்லை. (காலத்திலும் இடத்திலும் தான் பரிணமித்து வந்தவன் என்பதை அவன் கண்டு கொள்ளவே முடியாது.) பகுத்தறிவின் விதிக்கு அடங்கி நன்மையை நாட வேண்டும் என்று அவன் கட்டாயப் படுத்தப்படுகிறான். அதனால் தான் அவன் உண்மையை உணர முடிகின்றது. உடலாகிய மிருகத்தினுள் தான் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்பதை அவன் உணர்கிறான். காலத்திலும் இடத்திலும் தனக்குரிய ஸ்தானம் எது என்பதைப் பற்றி அவன் சிந்திக்கும் போது, அவன் இருக்கும் காலத்திலிருந்து இரண்டு பக்கங்களிலும் விரிந்து செல்லும் எல்லையற்ற காலமே அவனுடைய காலமாகத் தோன்றுகிறது ; அவன் இருக்கும் இடத்தை ஒரு மையப் புள்ளியாகக் கொண்டு, அதிலிருந்து எல்லையற்ற வெளியில் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து பரவும் எல்லையில்லாத பெரிய வட்டமே அவன் இடமாகத் தோன்றுகிறது. அந்த வட்டத்தின் விஸ்தீரணம் எங்கும் இருக்கிறது ; ஓரிடத்திலும் இல்லை. எனவே, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் தன்னையே மனிதன் உண்மையாக அறிகிறான். ‘நான்’ என்ற தன் தன்மையை அறிவதோடு அவனுடைய உண்மையான அறிவு முற்றுப் பெறுகின்றது. இந்த அகங்கார சம்பந்தமில்லாமல் அவன் எதையும் அறிவதில்லை. வெளியுலகப் பொருள்களை மேலெழுந்தவாரியாக ஓரளவுதான் அவன் காண முடியும் ; கண்டு விளக்க முடியும்.

மனிதன் மற்ற மனிதர்களைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், மக்கள் கோடிக்கணக்காக இருக்கின்றனர். அவன் கண்டும் கேட்டும் இராத எத்தனையோ மக்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள் ; இனியும் இருப்பார்கள். எனவே, அவன் தன்னைப் பற்றித் தெரிந்துள்ள அளவுக்கு மற்றையோர்களை அறிந்துகொள்ள இயலாது.

விலங்குகளை எடுத்துக் கொண்டாலோ, அவைகளில் எத்தனையோ ஆயிரம் வகைகள் இருக்கின்றன. மனிதன் மற்ற மனிதர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டதிலிருந்து, பகுத்தறிவு ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு, மிருகங்களின் இயல்பு இப்படித்தான் இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறான். மிருகங்களைப் பார்க்கிலும் குறைவாகவே அவன் தாவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். உலகம் எங்கும் நிறைந்துள்ள உயிரற்ற சடப் பொருள்களைப் பற்றிய அறிவை மேலும் குறைந்த அளவிலேயே பெற முடிகிறது. சடப் பொருள்கள் பற்பல விதமான உருவங்களில், காலத்திலும் இடத்திலும் எல்லையற்றனவாக இருப்பதால், மளிதன் அவைகளையெல்லாம் தான் கண்டுகொள்ள முடியாதென்று மனக்கண்ணாலே கற்பனை மட்டும் செய்துகொள்கிறான்.

மனிதனும் பிற பொருள்களும்

நமக்குத் தெளிவாகப் பொருள் விளங்கக் கூடிய சில வார்த்தைகளைப் பார்ப்போம்: “நாய் வேதனைப்படுகிறது; கன்று என்னிடம் பிரியமாயிருக்கிறது; பறவை இன்பமா யிருக்கிறது ; குதிரை வெருவி ஓடுகிறது; நல்ல மனிதன்; தீய மிருகம்.-” இவைகளைப் பார்க்கிலும் நமக்குத் தெளிவாக விளங்கக் கூடிய சொற்கள் என்ன இருக்கின்றன? ஆயினும், இந்தச் சொற்களைக் காலத்தையோ, இடத்தையோ துணையாகக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாகக் காலத்தையும் இடத்தையும் கொண்டு மிகவும் துல்லியமாக ஒரு பொருளை விளக்கினால், அதுதான் நமக்குப் புரிவதில்லை; எவ்வளவுக் கெவ்வளவு துல்லியமாக விளக்கப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு புரியாமற் போகிறது. பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோணங்களைக் கட்டுப்படுத்தும் பூமியின் ஆகர்ஷண சக்தியின் விதியைப் புரிந்து கொண்டு விட்டதாக யாரேனும் சொல்ல முடியுமா? இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், காலத்தையும் இடத்தையும் ஆதாரமாகக் கொண்டு சூரிய கிரகணம் வருவதை முன்னதாக நிர்ணயித்துச் சொல்லிவிட முடிகின்றது.

நமது சொந்த வாழ்க்கை, நன்மையை அடைவதில் நமக்குள்ள ஆர்வம், அந்த நன்மையை எடுத்துக் காட்டும் அறிவு ஆகியவைகளைத் தவிர நாம் வேறு எதையுமே பூரணமாய்த் தெரிந்து கொள்ளவில்லை. இவைகளுக்கு அடுத்தபடியாக நமது மிருக உடலைப் பற்றியும், அது தன் நலத்தை நாடுவதையும், அறிவின் விதிக்கு அது அடங்கிச் செல்வதையும், நாம் ஓரளவு அறிகிறோம். இது இரண்டாம் படி.

நமது மிருகத் தோற்றத்தைக் காலத்தையும் இடத்தையும் கொண்டு கண்ணால் பார்த்தும், கவனித்தும், ஓரளவுதான் தெரிந்துகொள்கிறோம்; ஆனால், நமது புத்திக்கு அதன் விவரங்கள் அனைத்தும் விளங்கிவிடுவதில்லை. இதற்கு அடுத்தபடியாக மற்ற மனிதர்களைப் பற்றி அறிகிறோம். அவர்களுடைய இயற்கை நம் இயற்கையைப் போல் இருக்கிறது; அவர்களும் நம் உடல்களைப் போன்ற உடல்களைத் தாங்கி நிற்கின்றனர். ஆயினும், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையின் விதிகளை அநுசரித்து வருகின்றனவோ, அதோ அளவுக்குத்தான் அதைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம். காலத்திலும் இடத்திலும் அதிகமாக வெளிப்படும் வாழ்க்கையைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும். (அவருடைய பெருமை வெளியே காலத்தையோ, இடத்தையோ சார்ந்ததாக இல்லை.) அறிவின் விதிகளோடு அவர் இயைந்து நடப்பதாலே, அவர் நமக்கு மிகவும் நெருங்கியவராக ஆகிவிடுகிறார்.

மற்ற மக்களைப் பற்றித் தெரிந்கொள்வதற்கு அடுத்தபடியாக மிருகங்களைப் பற்றி அறிகிறோம். நாம் நம் உடல் நலத்தை நாடுவதுபோல், அவைகளும் தத்தம் நலத்தையே நாடுகின்றன. ஆயினும், நம் அறிவுக்கு நிகரான புத்தி அவைகளுக்கு இல்லை. எனவே, அவைகளோடு நம் பகுத்தறிவு உணர்ச்சி மூலம் சம்பந்தம் வைத்துக்கொள்ள வழியில்லை.

மிருகங்களுக்கு அடுத்தபடியாகத் தாவரங்களைப் பற்றி நம் அறிகிறோம். இவைகளைக் காலத்தையும் இடத்தையும் கொண்டே அறிய முடியும். நம் அறிவுக்குரிய பொருள்களில் இவைகள் மேலும் அதிகத் தூரத்தில் ஒதுங்கியிருக்கின்றன.

தாவரங்களைப் பார்க்கிலும் தொலைவிலுள்ளவை மற்றைச் சடப் பொருள்கள். நமக்கு உள்ளதுபோல் அவைகளுக்கு அகம் ஒன்றுமில்லை. அவை நன்மை எதையும் நாடுவதில்லை. அவைகளையும் காலத்தையும் இடத்தையும் கொண்டே நாம் அறிந்துகொள்ள முடியும்.

நம்மைக் கொண்டுதான் நாம் பிற பொருள்களை அறிகிறோம். நம்மைப் பற்றி நாம் பெற்றுள்ள அறிவே மற்றவைகளை அறிய உதவுகிறது. மிருகங்களுக்கு உரிய விதிகளைக் கொண்டு தான் அவைகளை அறிய வேண்டும். சடப்பொருள்கள் சம்பந்தமாகவும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

மனிதன் தன்னை அறிகிறான். அதனாலேயே உலகை அறிய முடிகிறது. அவனுக்கும் உலகத்திற்கும் மூன்றுவித சம்பந்தங்கள் இருக்கிறன: அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியின் சம்பந்தம், அவனுடைய மிருக உடலின் சம்பந்தம், அந்த மிருக உடலில் அமைந்துள்ள சடப்பொருளின் சம்பந்தம் இந்த மூன்று சம்பந்தங்களையும் அவன் தன்னிடத்திலே காண்கிறான். இதைக் கொண்டு உலகிலே அவன் பார்க்கின்ற பொருள்கள் அனைத்தையும் கீழ்க் கண்ட மூன்று பிரிவுகளில் அவை எதைச் சேர்ந்தவை என்று பகுத்து அறிகிறான் : (1) அறிவுள்ள பிராணிகள், (2) மிருகங்களும் தாவரங்களும், (3) சடப்பொருள்.

சடப்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் உயிர்ப் பிராணிகளைப் பற்றியும், உயிர்ப் பிராணிகளிலிருந்து மனிதர்களைப் பற்றியும் மனிதன் தெரிந்து கொள்வதில்லை. இதற்கு மாறாகத் தன்னிலிருந்து மற்ற மனிதர்களையும், மனிதர்களிலிருந்து விலங்கினங்கள் தாவரங்களையும், அவைகளிலிருந்து சடப் பொருளையும் அறிகிறான்.

நாம் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நமக்கு நம்மைப் பற்றித்தான் தெரியும். நம்மைப் பற்றிய அறிவின் பிரதிபிம்பமே மிருகங்கள் தாவரங்களைப் பற்றிய அறிவு. சடப்பொருள்களைப் பற்றிய அறிவு பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பமே.

நமக்கும் நாம் பார்க்கும் பொருள்களுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொண்டே நாம் அவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது ; காலத்தையும் இடத்தையும் ஆதரவாய்க் கொள்வதால் மட்டும் அறிய முடியாது. நமக்கு உரிய விதிக்கும், பிற பொருள்களை ஆட்சிபுரிந்து வரும் விதிக்கும் ஒற்றுமை யிருப்பதைக் கொண்டே நாம் பொருள்களை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

தூரத்திலுள்ள பொருள்களைப் பார்ப்பது எளிதாகத் தோன்றும் என்பதை மேலே கண்டோம். சடப் பொருள்கள் நம்மிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், அவைகளை அறிந்து கொள்வது எளிதாகத் தோன்றலாம். அவைகளுக்கு உரிய விதிகள் நம் பார்வைக்கு ஒரே மாதிரியாய்த் தோன்றுவதால், அவைகளை அறிவதில் கஷ்டமே யில்லை என்று எண்ணுகிறோம். மிருகங்களைப் பற்றியும் நாம் இவ்வாறே தவறாக எண்ணுகிறோம். மிருகங்கள் அடங்கி வாழவேண்டிய விதிகள் இருக்கின்றன என்று நாம் பார்க்கிறோமேயன்றி, அந்த விதிகளை உணர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது.[1]

நமது பகுத்தறிவு உணர்ச்சி மிருக இயல்பின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது. மிருக இயல்பு சடப்பொருளின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது மிருக இயல்புக்கும், சடப்பொருளுக்கும் மேலாகப் பகுத்தறிவு உணர்ச்சி விளங்குவதால், அதைக் கொண்டு மற்ற இரண்டையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுபோல் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் மேலான அறிவைப் பெற்றவர்கள் உலகில் இருந்தால், அவர்களே நமது பகுத்தறிவு உணர்ச்சியைப் பற்றி விவரமாகக் கண்டுகொள்ள முடியும்.

மனிதன் மிருக உடலைப் பெற்றிருக்கிறான். அதில் சடப்பொருளும் இருக்கின்றது. இதனால், மனிதனுடைய வாழ்க்கையில் அவை இரண்டின் சம்பந்தங்களும் இருப்பதுபோல் தோன்றுகிறது. இந்தச் சம்பந்தங்களை மிருக வாழ்க்கை, சடவாழ்க்கை என்று சொல்வது தவறு. வாழ்க்கை ஒன்றேதான்-மானிட வாழ்க்கை என்பதிலேயே இவ்விரண்டும் அடங்கியவை. வாழ்க்கை என்ற சொல்லைக் கண்டபடி உபயோகித்தல் ஆகாது. நம் உடலிலேயே எத்தனையோ உயிருள்ள அணுக் கூட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வோர் அணுவும் வாழ்க்கை நடத்துவதாகக் கூறுவது பொருந்தாது. பகுத்தறிவு உணர்ச்சிக்கு நம் மிருக இயல்பைப் பணிய வைத்து நாம் வாழ்வதே வாழ்க்கை எனத் தக்கது.

மனிதன் தன் உண்மையான வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்கிறான். அவனே அதை வாழ்ந்தாக வேன்டும். மற்றும் அவனோடு சம்பந்தப்பட்டுள்ள உடலும் சடமும் இயங்குவதில் அவன் பங்கெடுத்துக் கொள்வதில்லை. அவை தாமாகவே இயங்கக் கூடியவை. அவைகளுக்குத் தனியான விதிகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் மனிதன் அவைகளும் தான் தான் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் பகுத்தறிவுச் சுடர் ஒளிவிட ஆரம்பித்ததும், அவன் அவைகளைத் தன்னிடமிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு, உடல் வாழ்க்கை, சட வாழ்க்கை என்று முன்பு தவறாக எண்ணி வந்தது முடிந்து, புது மானிட வாழ்க்கை ஏற்படுகிறது. அந்த உண்மை வாழ்க்கையில் அவன் வேலைக்கு உடலும் சடமும் உபகரணமாயும் கருவியாயும் பயன்படுகின்றன. [2]

இடத்திலும் காலத்திலும் நிகழ்வது
உண்மை வாழ்க்கை அன்று

சடப் பொருள் தனக்குரிய விதிகளின்படி அடங்கிக் கிடக்கும். ஆனால், அதே சடப் பொருள் ஒரு மிருகத்தின் உடலில் சேர்ந்திருக்கும் போது, அது தன் விதிகளோடு, அந்தப் பிராணியின் மேலான விதிகளுக்கும் உட்பட்டிருக்கும். இவ்வாறு இருந்தால்தான் அந்தப் பிராணி உயிரோடிருப்பதாகக் கருதப்படும். உயிரின் மேலான விதிகளுக்கு உட்படாமல் இருக்கும் எதையும் வாழ்வதாகச் சொல்ல முடியாது ; சடப் பொருளுக்கு உரிய பூத, பௌதிக, ரசாயன மாற்றங்களையே அதில் காணலாம். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடக்கவேண்டும் என்ற உணர்ச்சியே யில்லாமல், சடம்போல் கிடக்கிறது என்றால், அந்த இடத்தில் உயிரின் மேலான விதிகளின் அமல் ஆரம்பமாகவில்லை என்று கருத வேண்டும். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடந்து வந்து, திடீரென்று அவைகளுக்கு உட்படாமல் சடத்தைப் போல் இருந்த இடத்திலேயே கிடந்தாலும், அல்லது மாண்டு போனாலும், அந்த இடத்தில் மிருகத்திற்கு உரிய விதிகளின் அமல் முற்றுப் பெற்றதாகக் கருத வேண்டும். அதன் உடல் வெறும் சடப் பொருளாகி, சடத்திற்குரிய விதிகளின்படியே நடந்து கொள்ளும்.

இதுபோலவேதான் நம் வாழ்க்கையும். நாம் பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு உட்பட்டு நடக்கும் போதுதான் வாழ்க்கை உண்டு. அவ்வாறு அடங்கி நடக்காதபோது வாழ்க்கையும் இல்லை. அதாவது, வெறும் உடலின் மிருக விதிகளின்படியே நடத்தல் மனித வாழ்க்கை ஆகாது. சடத்தில் மிருக வாழ்வு இல்லாதது போலவும், மிருகத்தின் பகுத்தறிவு வாழ்வு இல்லாதது போலவும், பகுத்தறிவின் விதியைப் புறக்கணிக்கும் மனிதனிடம் மனித வாழ்க்கை இல்லாது போகிறது.

மரண அவஸ்தையிலுள்ள ஒரு மனிதனிடம் வாழ்க்கை இல்லை. அவன் கை கால்களை எவ்வளவு பலமாக அசைத்தாலும், அந்த நிலையை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதுபோலவே, பைத்தியத்திலும், மயக்கத்திலும், உணர்ச்சி - வெறியால் ஏற்படும் நடுக்கத்திலும் உள்ள ஒருவனுடைய நிலையை வாழ்க்கை என்று கருத முடியாது. அவனுக்கு உயிர் இருக்கிறது என்று மட்டுமே ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் எவ்வளவு மெலிந்திருந்த போதிலும், எவ்வளவு அசைவற்றுக் கிடந்த போதிலும், அவனுடைய மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடந்தால், அந்த நிலையை வாழ்க்கை என்றே கருத வேண்டும். மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடப்பதே வாழ்க்கை என்ற முறையைத் தவிர, வேறு எந்த முறையிலும் நாம் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது.

இந்த வாழ்க்கை, காலத்திலும் இடத்திலும் வெளித் தோற்றம் கொண்டதாயிருப்பினும், அவைகளின் விதிகளுக்கு அது கட்டுப்பட்டதன்று. வாழ்க்கைக்கு ஒரே விதிதான் உண்டு; அறிவுக்கு ஆணவம் அடங்கி நடத்தலே அவ் விதி. ஆகவே, காலத்தையும் இடத்தையும் கணக்கிட்டு வாழ்க்கையை விவரிக்க முயலுதல், ஒரு பொருளின் அகலத்தையும் நீளத்தையும் வைத்து உயரத்தை விளக்குதலைப் போன்றது. ஆணவம் அறிவின் விதிக்கு அடங்கி நடக்க நடக்க, மனிதன் வெறும் உயிரோடிருத்தல் என்ற நிலைமை மாறி, உண்மையான வாழ்க்கை நன்றாக மலர்ந்து பரிமளிக்கும்.

காலத்திற்கும் இடத்திற்கும் எல்லை உண்டு அவற்றைக் குறிப்பிட்டுக் காட்ட முடியும். ஆனால், நன்மையை லட்சியமாய்க் கொண்டு, ஆணவம் அறிவுக்குப் பணிந்து நடக்கும்போது, காலம் இடம் ஆகியவற்றிற்கும் எல்லை யில்லாமற் போகிறது.

ஒரு மனிதன் மிருக வாழ்க்கையைவிட்டு மேலேறி உண்மையான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். முன்னால் பள்ளத்தில் கிடந்தது மாறி, இப்போது உயர்ந்த இடத்திலிருந்து அவன் தன்னைச் சுற்றிலும் பார்க்க முடிகிறது. உயரத்திலிருந்து பார்க்கும்போது, அவன் வாழ்வு மரணத்தோடு தீர்ந்துபோகும் என்பதைப் பார்க்கிறான். காலத்தோடும் இடத்தோடும் பொருந்திய வாழ்வு மலைகளும் மடுக்களும் நிறைந்த அபாய வாழ்வு என்பதையும் காண்கிறான். இவைகளை யெல்லாம் கண்டு அவன் நடுக்கமடைந்து, மீண்டும் தரைக்கு வந்து தன் பழைய மிருக வாழ்க்கையிலேயே இருந்துவிட எண்ணுகிறான். ஆனால், அப்படியும் நிலைத்திருக்க முடிவதில்லை. அடிக்கடி அறிவின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அவைகளை அவன் எப்போதுமே அலட்சியம் செய்ய முடிவதில்லை. மறுபடி உயரிய வாழ்க்கையை விரும்புகிறான். உறுதியுடனும் தைரியத்துடனும் அவன் மேல் நிலையை அடைந்து அதிலிருந்து இறங்கி வராமலே நிற்றல் வேண்டும். நன்மைக்கும் வாழ்க்கைக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை. உண்மை வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி மேலே எழுவதற்கு மனிதனுக்குப் பகுத்தறிவு அளித்துள்ள சிறகுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இவன் மேலும் மேலும் பறந்து மேல் நிலைக்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது உடலின் வாழ்வுதான் என்று எண்ணிக்கொண்டிருப்பவனுக்கும் இடையிடையே அறிவு உணர்ச்சியின் தூண்டுதல்கள் ஏற்படும். அவன் அவற்றை அசட்டை செய்கிறான். சில சமயங்களில் அத் தூண்டுதல்கள் நினைவுக்கு வரும்போது, அவை எந்த நேரங்களில் ஏற்பட்டன என்பது விளங்காது. அறிவு உணர்ச்சி தனக்கு எப்பொழுது முதல் இருந்து வருகிறது என்று அவன் ஆலோசித்துப் பார்ப்பான். தொன்றுதொட்டே தனக்கு அந்த இயல்பு உண்டு என்பதை அறிந்து, இடையிடையே அவன் பெறும் தூண்டுதல்களோடு நில்லாது, எப்போதுமே அறிவு உணர்ச்சியைப் பின்பற்றினால் தான் அவனுக்கு வாழ்க்கை உண்டு.

பகுத்தறிவு உணர்ச்சி இருப்பது உண்மை. உண்மையில் இருக்கிறது என்று சொல்லத் தக்கது அது ஒன்று தான். அது எப்போது தோன்றிற்று, எப்போது மறைந்திருந்தது என்று காலத்தைக் கொண்டு அதை ஆராய்தல் தவறு. அதற்கு ஒரு நிமிஷமும் ஐம்பதினாயிரம் ஆண்டுகளும் ஒன்றுதான். அதற்குக் காலக் கணக்குக் கிடையாது. பகுத்தறிவு உணர்ச்சியோ, அதற்கு மனிதன் அடங்கி வாழ்தலோ, காலத்தாலோ, இடத்தாலோ ஏற்படுபவை அல்ல. காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிறைவேறி வருவதே மனிதனின் உண்மையான வாழ்க்கை.


  1. பார்ப்பது வேறு; உணர்வது வேறு. பார்ப்பதை யெல்லாம் உணர முடிவதில்லை. மிருகங்களும் சடப் பொருள்களும் ஏதோ விதிகளின்படி நடப்பதைப் பார்க்கிறோம். ஆனால், நம் பகுத்தறிவு உணர்ச்சியை நாம் பார்ப்பதில்லை, ஆயினும். உணர்கிறோம். நாம் ஏன் பார்ப்பதில்லை என்றால், நாமே நமக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்து கொண்டு நம்மைப் பார்த்துக்கொள்ள இயலாது.
  2. குயவனுக்குத் திகிரியும் மண்ணும் போல, மனிதனுக்கு அவனுடைய உடலும் சடப் பொருளும் பயன்படுவதாகக் கொள்ளலாம். -ப. ரா.