வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/உண்மை வாழ்வின் உதயம்

4
உண்மை வாழ்வின் உதயம்

பயிரின் வாழ்க்கை ஒரு தானிய மணியில் அடங்கிக் கிடக்கின்றது. செடியின் வாழ்க்கை ஒரு வித்தில் அடங்கியிருக்கின்றது. இதே போல உண்மையான வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே மனிதனுள் அடங்கியிருக்கின்றது. ஒரு சமயம் வரும்போது, அது வெளியே தோற்றமாகிறது. தனிப்பட்ட மிருக வாழ்க்கை மனிதன் தன் சொந்த இன்பத்தை நாடும்படி வற்புறுத்துகின்றது ; உண்மையான வாழ்க்கை தனித்த இன்பம் சாத்தியமில்லை என்று வேறோர் இன்பத்தைக் காட்டுகின்றது. அந்த இன்பம் தொலைவிலிருப்பதால், தெளிவாகத் தெரியாமல், இலேசாகத் தென்படுகின்றது. அதை உடனேயே நன்கு தெரிந்துகொள்ள முடியாததால், மனிதன் தான் வழக்கமாகப் போற்றி வந்த தனி வாழ்க்கையை உதறிவிட்டு வெளியேற முடிவதில்லை. ஆயினும், பழைய தனி வாழ்க்கையில் நம்பிக்யை அறவே போய் விடுகிறது. முதலில் தெளிவாகத் தெரியாவிட்டாலும், புதுவாழ்வில் மேலும் மேலும் நம்பிக்கை ஏற்படுகிறது இந் நிலையில் அவன் தன் மிருக வாழ்ககைக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் ஒரு புதிய சம்பந்தத்தை அமைத்துக் கொள்கிறான்.

மனிதன் உண்மையான மானிட வாழ்வில் புக ஆரம்பிக்கிறான். அவன் ஒரு புதுப் பிறவியாகவே தோன்றுகிறான். ஓர் உயிர் உலகிலே தோன்றுவது என்றால், அதற்குக் காரணம் அதன் இச்சையன்று. அது முதிர்ச்சியடைந்து, தன் பழைய நிலையில் தொடர்ந்து இருக்க முடியாததாலேயே பிறப்பு ஏற்படுகின்றது.

மனிதன் அறியாமலே பகுத்தறிவு உணர்ச்சி அவனுள் வளர்ந்து வருகிறது; வளர்ந்து தனித்த வாழ்க்கை இயலாதபடி தடுத்துவிடுகின்றது. இதன் பின்பு ஏற்படும் விளைவு, ஒரு விதை முளை விடுவதைப் போன்றது. வித்து பூமிக்குள் மறைந்து தன்னை அழித்துக்கொண்டு முளை வரக் காரணமாயிருக்கிறது. வித்து அழுகி மறையாவிட்டால், முளை வராது. புதிய முளைக்குப் பழைய வித்தே உணவாகிறது. முளை செடியாகி, மலர் பூத்த பிறகு, கனி உண்டாகிறது. கனிதான் புதிய செடி உண்டாவதற்கு வேண்டிய விதை. இவ்வாறு வித்திலிருந்து மறு வித்து உண்டாவதை- அதாவது உயிரின் ஒரு பரிணாம வளர்ச்சியை - நாம் நம் கண் முன்னாலேயே காண்கிறோம்.

ஆனால், மனிதனிடம் பகுத்தறிவு உணர்ச்சி தோன்றி வளர்வதை நாம் காண முடிவதில்லை. ஏனெனில், நாமே காட்சிப் பொருளாக இருக்கிறோம்; நம்மிடத்திலேயே இந்த வளர்ச்சி ஏற்படுகின்றது. கண்ணுக்குப் புலனாகாத இந்த உணர்வின் பிறப்பே நமது வாழ்க்கை. விதை தானே தன் முளையைப் பார்க்க முடியாதது போல், நம்முள்ளேயே ஏற்படும் பகுத்தறிவு உணர்ச்சியின் தோற்றத்தையும், அதற்கும் மிருக உணர்ச்சிக்கும் உள்ள புதிய சம்பந்தத்தையும் வேற்றுமைப்படுத்தி நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தன் மறை டத்திலிருந்து வெளியே தோன்றும்போது, நமக்குள் ஒரு முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. விதைக்கும் முளைக்கும் முரண்பாடு எதுவும் இல்லாதது போலவே, இதிலும் முரண்பாடு இல்லை; இருப்பதாகத் தோன்றுவது நமது கற்பனையால் தான். விதைக்கும் முளைக்குமுள்ள சம்பந்தத்தைப் போலவே, மிருக வாழ்க்கைக்கும் புதுப் பிறவியான பகுத்தறிவு உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது.

மனிதன், தன்னலமே பேணி, மிருக வாழ்க்கை வாழும் மற்ற மனிதர்களும் தன்னைப் போலவே இருப்பதையும், துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்து செல்வதையும், கொஞ்சம் கொஞ்சமாக மரித்து வருவதே வாழ்வாக இருப்பதையும், பின்னால், பகுத் தறிவு உணர்ச்சியால் ‘நான்’ என்ற அகமாகிய வித்து அழுகிப் போவதையும் காணும்போது, அவனுடைய தனித் தன்மை என்ற மாயை கழன்று விழுந்து விடுகிறது. அவன் தன் வாழ்வு என்பது புதிதாக அரும்பிவரும் வாழ்வுதான் என்று தெரிந்துகொள்கிறான். விதையிலிருந்து யாதொரு முரணுமின்றி இயற்கையாக முளை வருவது போலவே மனிதனின் அகங்காரத்திலிருந்து புது வாழ்வு வருகின்றது.

பகுத்தறிவே மனிதனின் விதி

பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதுதான் மிருக உணர்ச்சி கழிவதற்கு ஆரம்பம். பகுத்தறிவை விளக்கிக் கூறவேண்டியது அவசியமில்லை ; விளக்கவும் முடியாது. ஏனெனில் நாம் அதை அறிவோம்; நமக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

பகுத்தறிவைக் காட்டிலும் உறுதியாக நாம் வேறு எதையும் அறிந்து கொள்ளவில்லை. இந்த அறிவே மற்ற எல்லாவற்றிற்கும் முந்தியது. உலகில் நாம் அறியும் எல்லாப் பொருள்களும், விஷயங்களும் இந்தப் பகுத்தறிவின் விதிகளோடு இயைந்திருப்பதால்தான், அவைகளை அறிய முடிகின்றது. பகுத்தறிவை அலட்சியம் செய்ய முடியாது. பகுத்தறிவாளரான மனிதர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விதியே பகுத்தறிவு. அதுவே வாழ்க்கையைப் பக்குவப்படுத்துகிறது. மிருகம் உணவு அருந்தித் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள விதி இருக்கிறது ; செடி கொடிகள் வளர்ந்து மலர்கள் பூப்பதற்கு விதி இருக்கிறது ; பூமியும் நட்சத்திரங்களும் சுற்றி வருவதற்குக் காரணமான அண்ட கோளங்களின் விதி இருக்கிறது. இந்த விதிகளைப் போலவே, பகுத்தறிவு மனிதனுக்கு விதியாக விளங்குகின்றது.

நாம் நமக்குள்ளயே உணர்ந்து கொள்ளும் சட்டமே நம் வாழ்க்கையின் விதி என்பதை அறிவோம். அதுவே உலகின் வெளித் தோற்றங்களான எல்லாப் பொருள்களுக்கும் விதியாகும். நாம் உணர்வதற்கும், வெளியே அந்த விதி நிறைவேறி வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. வெளியுலக சம்பந்தமாக அந்த விதி நிறைவேறுவதில் நாம் கலந்து கொள்வதில்லை.

நாம் உலகைப் பற்றித் தெரிந்துள்ள அறிவு முழுதும் பகுத்தறிவின் விதிக்கு இயைந்து நடப்பதிலேயே அடங்கியிருக்கிறது. வெளியுலகில் இவ் விதிக்கு இயைந்து நடப்பதைக் கண்ணால் காண்கிறோம்; நமக்குள்ளேயே நாம் இயைந்து நடக்க வேண்டிய சட்டம் இது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்க்கையின் நியதி என்பது பகுத்தறிவின் சட்டமேயாகும். மனிதன் மூன்று நியதிகளுக்கு (அல்லது விதிகளுக்கு) உட்பட்டு நடக்கவேண்டியிருக்கிறது. அவன் உடலில் சேர்ந்துள்ள சடப் பொருள்கள் மற்ற உலகிலுள்ள சடப் பொருள்களுக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். உடல் மற்ற மிருகங்களின் உடல்களைப் போன்றதே ; ஆதலால் இது மிருக இயல்புக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். இந்த இரண்டு விதிகளோடு மூன்றாவதான பகுத்தறிவின் விதியும் இருப்பாத மனிதன் ஏற்றுக் கொள்கிறான். மற்ற இரண்டு விதிகளும் மனிதன் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நிறைவேறக் கூடியவை. ஆனால், பகுத்தறிவின் விதியை அவனாக நிறைவேற்ற வேண்டும். அதாவது, அவன் தனது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்து நடக்கும்படி கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், மற்ற மிருகங்களுக்கும் அவனுக்கும் வேற்றுமை யில்லை. மிருகங்கள் தம் இயல்புப்படியே அலைந்து திரிந்து இன்புறுகின்றன. மனிதன் தானும் விலங்கு போல் தனி இன்பத்தை நாடித் திரிந்து கொண்டிருக்க முடியாது. இன்பமெல்லாம் துன்பமாவே முடிவாக மேலே கண்டோம். மிருக வாழ்க்கை நம் வாழ்க்கையாக இருக்கவே முடியாது.

மிருகப் பான்மையுள்ள நம் உடல்களையே ‘நாம்’ என்று எண்ணி, உடலுக்கு உரிய சட்டத்தையே நமது வாழ்க்கையின் விதியாகக் கருதுவது தவறாகும். மக்கள் தொன்று தொட்டே இந்தத் தவறுதலைச் செய்து வருகிறார்கள். மக்கள் அறிய வேண்டிய முக்கியமான பொருளை அறிய முடியாமல் இந்தத் தவறு மறைத்துவிடுகின்றது. மிருக இயல்புள்ள நமது அகங்காரத்தைப் பகுத்தறிவுக்குப் பணிந்திருக்கச் செய்வதை அறிந்து கொள்வது தான் அந்த முக்கியமான பொருள். அவ்வாறு பணிந்து நடக்காமலிருந்தால், வாழ்க்கையின் நன்மையை அடைய முடியாது. இந்த நன்மையைப் பெறுதலை ஒதுக்கிவிட்டு, மனிதர் உயிரோடிருப்பதை மட்டும் ஆராய்ச்சி செய்வதில் நாம் தவறாக முற்படுகிறோம்.

வாழ்வில் இன்பம் அடைவதற்காக நமது மிருக இயல்பு எந்த விதிக்குப் பணிய வேண்டுமோ அதைப்பற்றி ஆராய்வதே முதன்மையான அவசியம் உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களின் ஆராய்ச்சிகளும் இதற்குப் பின்னால் வரவேண்டியவை. போலி விஞ்ஞானம் இந்த முறையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. இந்த விஞ்ஞானம் மனிதனின் மிருக வாழ்கையையும், சுக வாழ்வையும் பற்றி ஆராய முற்பட்டு, மூலாதாரமான முதல் ஆராய்ச்சியைக் கைவிடுகின்றது. மனிதனை விலங்காகவே கருதி இது ஆராய முற்படுகின்றது.

போலி விஞ்ஞானத்தின் வாதம் இதுதான்: ‘மனிதர்கள் இப்பொழுது வாழ்கிறார்கள் ; நமக்கு முன்னாலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முன்னால் எப்படியிருந்தது என்பதைப் பார்ப்போம் ; காலத்தாலும் இடத்தாலும் அவ் வாழ்க்கை என்னென்ன மாறுதல்களை அடைந்தது என்று கவனிப்போம். சரித்திர பூர்வமான இந்த மாறுதல்களிலிருந்து மானிட வாழ்வின் சட்டத்தைக் கண்டுபிடிப்போம்.’

போலி விஞ்ஞானிகளின் இலட்சியமே- குறிக்கோளே- இத்தகைய ஆராய்ச்சி பயனற்றது என்று தீர்ப்புக் கூறுவதாக இருக்கிறது. ஏனெனில், மனிதன் உண்மையான இன்பத்தை அடைவதற்காக அவனது மிருக இயல்பான அகத்தை ஆண்டு அடக்கவேண்டிய பகுத்தறிவின் விதியை ஆராயாமல், மற்ற ஆராய்ச்சிகளைச் செய்வதால் என்ன பயன் விளையும்? மேலும், மிருக வாழ்க்கைக்கு உரிய பொது விதி ஒன்றினாலேயே மனித வாழ்க்கையும் மாறி வருவதாயிருந்தால், இந்த விதிகளைப் பற்றி ஆராய்வதில் பயனே யில்லை. இந்த விதிகளின்படி மாறியே தீர வேண்டும் என்ற அவசியம் இருந்தால், இவைகளைத் தெரிந்துகொண்டாலும், தெரிந்துகொள்ளாவிட்டாலும் ஒன்றுதான். மண்ணுள் வாழும் எலிகளுக்கும், நீர் நாய் போன்ற மிருகங்களுக்கும் உரிய விதிகளே நம்மையும் ஆட்டிவைக்கின்றனவா !

பகுத்தறிவின் விதியை எங்கே கண்டுபிடிக்க முடியும் ? பகுத்தறிவை மனிதன் எங்கே கண்டுபிடித்தானோ அங்கேயே அதை அறிய முடியும். அதாவது, அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியிலேயே அதை அறியலாம்; வேறு எங்கும் காண முடியாது. மனிதனை மிருகமாக எண்ணி எவ்வளவு தான் ஆரய்ந்து பார்த்தாலும், அந்த அறிவு ஏற்பட முடியாது.

‘சரித்திர ஆராய்ச்சி’ என்றும், ‘அரசியல் ஆராய்ச்சி’ என்றும் பல பெயர்களால் நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலம் வாழ்க்கையைப் பற்றிக் கண்டுபிடித்துள்ள தத்துவங்கள் பயனற்றவை என்பதற்கு வேறு சான்று வேண்டியதில்லை.

மானிட அறிவின் இலட்சியம் ஒன்றுதான். அந்த முக்கியமான குறிக்கோளை மறந்துவிட்டு மற்ற விஷயங்களையே ஆராய்வதில் இன்னொரு பிரிவினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த விஞ்ஞானிகள், கூறுவதைக் கவனிப்போம்: ‘மனிதன் மற்ற விலங்கு களைப் போலவே உணவை உட்கொண்டு வளர்கிறான்; தன் வமிசத்தை விருத்தி செய்கிறான்; பின்னால் வயோதிகமடைந்து மரிக்கிறான். ஆனால், அவனுடைய மனது சம்பந்தமான நிகழ்ச்சிகளை மட்டும் புரிந்து கொள்வது கஷ்டமாயுள்ளது. இவை விடுக்க முடியாத சிக்கலை உண்டாக்கி விடுகின்றன. ஆகவே மானஸீக சக்திகள் இல்லாத விலங்குகளையும் தாவரங்களையும் முதலில் ஆராய்ந்து பார்ப்போம். விலங்குகளுக்கு உரிய விதிகள் மனிதர் விதிகளைவிட எளிதில் புரியக் கூடியவை ; அவைகளைப் பார்க்கிலும் சடப்பொருள்களின் விதிகள் மேலும் எளிதானவை. முதலில் சடப்பொருள்களையும் ஆராய்ந்து, பிறகு தாவரங்களையும் விலங்குகளையும் கவனிக்கலாம். மனிதனின் உடல் சடப்பொருள்களால் ஆக்கப்பட்டிருப்பதால், அவைகளைக் கொண்டே மனிதனையும் அறிந்து கொள்ளலாம். சடப் பொருள்களின் விதிகளே அவன் நடவடிக்கைகளுக்கும் காரணமா யிருப்பவை.

மிருகங்களிடத்திலும், தாவரங்கள், சடப்பொருள்களிடத்திலும் இல்லாத ஒரு பொருள் மனிதனிடம் இருக்கிறதே என்ற விஷயம் இந்த ஆராய்ச்சியாளரைப் பாதிப்பதில்லை. அந்த ஒரு பொருளைப் பற்றி அறிய வேண்டியதே பயனுள்ள ஆராய்ச்சி என்பதும், அது இல்லாமல் மற்ற அறிவெல்லாம் பயனற்றவை என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.

உடலிலுள்ள சடப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் செயல்களைப் பாதிக்கின்றன என்றால், அவன் செயல்களுக்கெல்லாம் பொருளின் இயக்கமே காரணம் என்று கூறிவிட முடியுமா ? வேரடியிலுள்ள மண்ணை எடுத்தால் செடிக்குக் கேடு விளையும். இதனால் மண் ஒன்றினாலேயே செடி உண்டாயிற்று என்று ஆகிவிடாது.

சரித்திரத்தின் மூலம் மனித வாழ்வு வெளித் தோற்றத்தில் எப்படி யெல்லாம் இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வது நல்லதுதான். மனிதனின் மிருக இயல்பு பற்றியும், மற்றைப் பிராணிகள், சடப்பொருள்கள் பற்றியும் தெரிந்துகொள்வதும் நலமே. ஆனல், இவைகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மானிட வாழ்க்கையை அறிந்துவிட முயல்வது, பிரதிபிம்பத்தைப் பார்த்துக் கொண்டே அதற்குக் காரணமான மூலப் பொருளை அறிவது போலாகும்.

பெளதிகப் பொருள்களின் விதிகளை அறிவது நமக்கு நன்மை பயக்கும். எப்போது? நமது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்ட போதுதான் பயனுண்டு ; அந்த விதியையே நாம் முற்றிலும் அலட்சியம் செய்து தள்ளும்போது பயனில்லை.

மேலே கூறிய விதிகளை யெல்லாம் ஒருவன் நன்கு தெரிந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சமயம் அவன் கையில் ஒரு ரொட்டித் துண்டு இருக்கிறது. அதை என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த அறிவு துளியாவது பயன்படுமா? அவன் ரொட்டித் துண்டைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டுமா? அல்லது நாய்க்குப் போடவேண்டுமா? அந்நியன் ஒருவனுக்கு அளிக்க வேண்டுமா? அல்லது அவனே உண்ண வேண்டுமா? அதைச் சேமித்து வைக்க வேண்டுமா? அல்லது வந்து கேட்பவருக்கு அளிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞான அறிவு பயன்படுவதில்லை. ஆயினும், இந்த விஷயத்தையும், இது போன்ற விஷயங்களையும் முடிவு செய்வதில்தானே மனித வாழ்க்கை அடங்கியிருக்கிறது!

மிருகங்கள், தாவரங்கள், மற்றைச் சடப் பொருள்களின் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொல்லவில்லை. மனித வாழ்க்கையை அறிந்து கொள்ள அது மிகவும் இன்றியமையாதது. ஆனால், அந்த ஆராய்ச்சி பகுத்தறிவின் விதியை விளக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். பகுத்தறிவின் விதி என்பது வெறும் பிரமையைத் தவிர வேறில்லையென்று நம்பினால், அந்த ஆராய்ச்சி வீண் வேலைதான். நிழலைப் பார்த்தே பொருளை அறிந்து விடலாம் என்று நம்புதல் உண்மையை நேரில் அறிய முடியாமலே மறைத்துவிடும்.