விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 2

அத்தியாயம்-2.

விஜயலக்ஷ்மி பண்டிட் 1900-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 18-ம் தேதியன்று அலகாபாத்தில் ‘ஆனந்த பவனம்’ எனும் மாளிகையில் பிறந்தாள். அப்போது ஜவாஹர்லால் நேருவுக்குப் பதினோரு வயது. அதற்கு முந்தைய ஆண்டில் தான் மோதிலால் நேரு அந்தப் புதிய பெரிய பவனத்தைக் கட்டிக் குடிபுகுந்தார். வக்கீல் தொழிலில் பிரமாத வெற்றியோடு திகழ்ந்த மோதிலால் ராஜவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மேல்நாட்டு நாகரிக முறையில் வாழ்க்கை நடத்த ஆசைப்பட்ட மோதிலால், அதற்கேற்ற பெரிய மாளிகையை நிர்மாணித்துக் கொண்டார்.

‘ஆனந்த பவனம்’ அமைக்கப்பட்ட இடம் புராதனப் பெருமையும் புனிதப் புகழும் பெற்றதாம், ராம பிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து விட்டு நாடு திரும்புகிற போது அந்த இடத்தில்தான் பரதன் அவரை சந்தித்தாராம் இப்படி ஒரு இதிகாசப் புகழ் இருந்தது அந்த இடத்துக்கு.

பெரிய முற்றங்கள் சொந்த மாளிகை 'ஆனந்த பவனம்' நாலாபுறமும் குளுமையான தோட்டங்கள், கனி வகைகள் தருகின்ற மரங்கள் அடர்ந்த தோப்பு பின்புறத்திலே, புஷ்பச் செடி கொடிகள் அணிசெய்யும் அழகுத் தோட்டம் முன்புறத்திலே. அதிலொரு 'வசந்த கிரகம்' அருகில் ஓர் அழகுக் குளம். டென்னிஸ் விளையாட விசால மைதானம் ஒரு பக்கத்தில் 'வசந்த கிரக'த்தில் சிறுமலை போல் தோற்றமளிக்கும் செய்குன்று ஒன்று அதன் உச்சியில் சிங்காரக் கொலுவிருக்கும் சிவபெருமான் சிலை, சிவனின் தலைமுடியிலிருந்து சிதறித் தெறிக்கும் நீரூற்று, வழிந்து பெருகும் அந்நீரூற்று கீழே உள்ள குளத்தில் கலக்கும். கண் திருப்பினால் எங்கும் வண்ண மலர்களை தென்படும். அம்மாளிகை சதா 'கல்யான வீடு மாதிரியே' திகழ்ந்தது. குதிரைகள் பூட்டிய சாரட்டுகளிலே வந்து வந்து போனார்கள் செல்வர்கள். ஐரோப்பியச் சீமான்கள் அங்கு தங்கிப் பொழுது போக்கிச் சென்றார்கள். விருந்து உண்டு களித்தார்கள். ரத்தமெனச் சிவந்த மது அங்கே தண்ணிர் பட்டபாடு பட்டது! மோதிலாலின் சிரிப்பு வெண்கல நாதம் போல் எழுந்து எங்கும் மோதி எதிரொலிக்கும்.

வலிவும் வனப்பும் நிறைந்த கம்பீர புருஷர் மோதி லால். அறிவின் கூர்மை அவர் கண்களில் ஒளி வீசியது. அவரது தோற்றம் மதிப்பும் அச்சமும் எழுப்புவதாயிருந்தது ஆதி நாட்களிலே. அவரை முதன் முறையாகக் காண நேரிட்டவர்கள் 'கடுமையான சுபாவம் உள்ளவர். வணங்காமுடி மன்னன். யாரையும் பொருட்படுத்தாதவர்' என்றே எண்ணத் துணிந்தனர். மோதிலால் சில சமயங்களில் அவ்விதம் தான் நடந்து கொண்டார். எனினும் அன்பும் ஆதரவும் ஈகையும் அவரது பண்புகள் என்பதை விரைவிலேயே பிறர் புரிந்து கொண்டனர். எவர் மத்தியிலிருந்தாலும் சரி. எக்கூட்டத்தில் இருப்பினும் சரி, அவரே நடுநாயகமாக விளங்கினார், எல்லோரையும் வசீகரிக்கும் காம்பீர்யக் கவர்ச்சி அவரிடம் நிறைந்திருந்தது.

ஆனந்த பவனத்தில் மோதிலால் நேருவின் ஆதரவில் வாழ்ந்த உறவினர்கள் பலர். அங்கு வந்து போகும் உறவினர்கள் மிகப்பலர், கும்பமேளா போன்ற விழா விசேஷங்களுக்காக வந்து மாளிகையில் தங்கிச் செல்கிறவர்கள் எவ்வளவோ பேர். ஆகவே, அந்த 'பவனம்' எப்போதும் 'ஜே ஜே' என்று தான் விளங்கியது. ஆயினும் அங்கே 'தான் தனியன்' என்று குமைந்த ஆத்மா ஒன்று உண்டு. சிறுவன் ஜவாஹர்லால் நேரு தான் அது. தனக்குத் தம்பியோ தங்கையோ இல்லையே என்று பெரிதும் குறைப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவருடைய உள்ளம் குளிரும்படி, நேரு குடும்பத்தின் செல்வ மகளாகப் பிறந்தாள் விஜயலக்ஷ்மி.

மோதிலால் கேருவின் மனைவி சொரூபராணி, ராணி நேரு என்றே குறிப்பிடப்பட்டாள் அவள். அவள் இனிய குணமுடைய எழிலி.

"அவள் அழகைப் போற்றினேன் கான், அதிசயங்கள் போன்ற அவளது சின்னஞ்சிறு கைகளையும் பாதங்களையும் நான் ஆசையுடன் விரும்பினேன்' என்று ஜவாஹர்லால் தனது அன்னையின் அழகு பற்றி வியந்திருக்கிறார்.

"என் தாய் மிகவும் இனிய மாது. ஐந்தடி உயர முள்ள அழகுச் சிறு உருவம் தான் அவள். மிகவும் நேர்த்தியான ஒரு பொம்மை மாதிரி, பூரண உருவமும் அழகு அம்சங்களும் பொருந்தியவள். சரியான காஷ்மீரிப் பெண். ஆனாலும் பண்பினால் அவள் பொம்மை அல்லள் என்பதைக் காலம் பின்னர் உணர வைத்தது." விஜயலக்ஷ்மியின் தங்கை கிருஷ்ணு இப்படி எழுதியிருக்கிறாள் ராணி நேருவைப் பற்றி.

பண்டித நேருவின் குடும்பத்தினர் காஷ்மீர பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். மோதிலால் நேருவின் முன்னேர் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காஷ்மீரிலிருந்து இறங்கி டில்லிக்கு வந்து விட்டார்கள். ராணி நேருவின் பெற்றோரும் பாட்டன் மாரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் காஷ்மீரிலிருந்து வந்திருந்தனர். ஆகவே காஷ்மீரிகளின் பண்பும் நலனும் வனப்பும் ராணி நேருவிடம் நிறைந்து விளங்கின.

அவள் பெற்றெடுத்த திருமகள் அழகு விக்கிரகம் போல் இருந்தது அதிசயம் அல்லவே!

நேரு குடும்பத்தினரின் குழந்தைகள் சில தந்தப் பதுமைகள் போல் விளங்கியது உண்டு. மோதிலால் நேரு பிறந்திராத காலத்திலேயே, அவர் குடும்பத்துச் சிறுமிகளைப் பார்த்து வெள்ளைக்காரக் குழந்தைகளோ, என்று வியந்தனர் பலர்.

1857-ம் ஆண்டில் முதல் இந்தியப் புரட்சி நிகழ்ந்த காலத்தில், நேருவின் முன்னோர் டில்லி நகரை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாயிற்று. அப்போது மோதிலால் பிறந்திருக்கவில்லே. அவருடைய சகோதரர்கள் ஆங்கிலம் கற்றவர்கள். மோதிலாலின் இரண்டாவது அண்ணா, நேரு குடும்பத்தினர் சிலரோடு, டில்லியிலிருந்து வெளியேறிச் சென்றபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவருடைய தங்கையும் அக்கூட்டத்தில் இருந்தாள். எதிரே இங்கிலீஷ் பட்டாளத்து வீரர்கள் சிலர் அச்சிறுமியைக் கண்டதும் சந்தேகம் கொண்டனர். வெள்ளைக்காரப் பெண்ணேத் திருடிச் செல்கிறார்கள் என்று நம்பி அவர்களை வளைத்து மிரட்டினார்கள். நேரு சகோதரரின் ஆங்கில அறிவு அவரைக் காப்பாற்றியது. குற்றம் சாட்டவேண்டியது, விசாரணை என்று ஏதோ பெயர் பண்ணி, தண்டனை கொடுக்க வேண்டியது உடனடியாக அதை அமுல் நடத்தி விடுவது-இதுதான் அந்நாளைய ஆங்கிலேயர் ஆட்சி முறையாக இருந்தது. மோதிலாலின் பண்ணனும், பிறரும் பாதை ஓரத்தில் நின்ற மரங்களில் தொங்கி மரணமடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். பெரிய நேரு ஆங்கிலேயருடன் பேசிக் காலதாமதம்ஏற்படுத்தி நின்றார். நல்லவளையாக, அவரை நன்கு அறிந்திருந்த பிரமுகர் ஒருவர் அவ்வழியாக வந்தார். அவர் உண்மையை எடுத்துச்சொல்லி எல்லாரையும் காப்பாற்றினார்.

ஜவஹர்லால் நேருவின் அத்தைதான் வெள்ளைக்காரப் பெண்போல் காட்சியளித்த சிறுமி. மோதிலால் நேரு ஐரோப்பிய முறைப்படியே ஆடைகள் அணிந்தார். அவரது பழக்கவழக்கங்களும் மேல்நாட்டு நாகரீகத்தை ஒட்டியே அமைந்தன. அவர் தனது குழந்தைகளையும் அந்த முறைப்படியே வளர்த்து வந்தார்.

ஜவஹர்லாலுக்குக் கல்வி புகட்ட ஆங்கிலேயர்களை ஆசிரியர்களாக நியமித்தது போலவே, விஜயலட்சுமிக்கு ஆசிரியையாக பிரிட்டிஷ் மங்கை ஒருத்தியை அமர்த்தினார்.

விஜயலட்சுமியை, 'சொரூபா' என்றே அழைத்து வந்தார்கள். அழகிய சிறுமியாக விளங்கிய அவளிடம் எல்லோரும் அன்பும் ஆசையும் காட்டி வந்தார்கள். செல்வர்கள்வீட்டுக் குழந்தைகள் அளவுக்கு அதிகமான பாராட்டுகளையும் பெறுவது சகஜம்.அதிலும் ராஜா மாதிரி வாழ்ந்த மோதிலாலுக்கு வெகுகாலம் கழித்துப் பிறந்த பெண் சொரூபா. ஆகையினால் அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து அவளை வளர்த்து விட்டனர்.

மோதிலால் ஏகப்பட்ட குதிரைகளையும் காய்களையும் போஷித்து வளர்த்தார். பல கார்களும் வண்டிகளும் அவரிடமிருந்தன. குதிரை ஏற்றம், வேட்டை ஆடுதல் முதலியவற்றில் அவருக்கு அதிகப் பிரியம் உண்டு. தனது குழந்தைகளும் தன்னைப் போல் சகல கலைகளிலும் பயிற்சி பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். அதனால் ஜவஹர்லாலுக்குத் தனியாக ஒரு குதிரை அளித்திருந்தது போலவே, சொரூபாவுக்கும் சிறு குதிரை ஒன்று கொடுத்திருந்தார்.

ஜவஹர்லால் கல்வி கற்பதற்காக இங்கிலாந்து செல்ல வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. அவரை ஹாரோ சர்வகலா சாலையில் சேர்ப்பதற்காக, 1905-ம் ஆண்டு மே மாதம் மோதிலால் நேரு, தன் மனைவியுடனும் குழந்தை சொரூபாவோடும் இங்கிலாந்து சென்றார். அப்போது விஜயலக்ஷ்மிக்கு ஐந்து வயதுதான்.

தன் மகளைக் கவனித்து வளர்த்து, தக்க பயிற்சி அளிப்பதற்கு ஒரு ஆசிரியை தேவை என்ற எண்ணம் மோதிலாலுக்கு நெடுநாட்களாகவே இருந்து வந்தது. அவர் இங்கிலாந்து சேர்ந்ததும் மிஸ் ஹூப்பர் எனும் பெண்மணியை ஆசிரியையாக அமர்த்திக் கொண்டார்.

இங்கிலாந்திலிருந்து ஐரோப்பிய யாத்திரையை மேற்கொண்டார் மோதிலால். தனது ஐந்தாவது வயதிலேயே ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய தேசங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு விஜயலட்சுமிக்கு கிடைத்துவிட்டது.

சொரூபாவுக்கு ஆசிரியையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்த மிஸ் ஹுப்பர் பழங்காலத்துக் கல்வி முறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தாள். உயர்ந்த குலத்தில் தோன்றிய அம்மாது உத்தம குணங்களின் உறைவிடமாகவும் போற்ற தகுந்த திறமைகள், பயிற்சிகளின் உருவமாகவும் விளங்கினாள். அவள் பழகுவதற்கு இனியவள். ஆனால் கடமையில் கண்டிப்பானவள். தனது மனைவியிடம் அடக்கம், ஒடுக்கம், கீழ்ப்படிந்து செயல்படவும் கட்டுப்பாடான சுபாவம் முதலியவைகளை அவள் எதிர்பார்ப்பது வழக்கம். விஜயலட்சுமி தனது ஆசிரியைக்கு அதிகமாக தொந்தரவு அளித்தது கிடையாது.

விஜயலட்சுமியின் பெற்றோர் ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு அவளுக்கு ஒரு தம்பி பிறந்தான். ஆனால், அக்குழந்தை அதிகநாள் ஜீவிக்கவில்லை. ராணி நேருவுக்கு அது மகத்தான இதய வேதனை அளித்துவிட்டது. அவள் அடிக்கடி நோய் வாய்ப்படலானாள்.

அந்நிலையில், 1907-ம் வருஷம் நவம்பர் மாதம் சொரூபாவின் தங்கையாகிய கிருஷ்ணாவைப் பெற்றெத்தாள் ராணி நேரு,மிகுதியும் கஷ்டப்பட நேர்ந்தது. அவள் பிரசவத்துக்குப் பிறகு பல வாரங்கள் வரை அத்தாய் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே ஊசலிட்ட வாறு படுக்கையில் கிடந்தாள். அப்போது விஜயலட்சுமிக்கு ஏழு வயது, தனக்கு ஒரு 'சின்னப் பாப்பா' தங்கையாகப் பிறந்ததில் அவள் மகிழ்ச்சி அடைந்தாள். ஆயினும், அன்னையின் நிலைமை அவளுக்குத் துயரம் அளிக்காமல் இல்லை.

ராணி நேருவின் உடல்நிலை தேறுவதற்கு நீண்ட நாட்கள் பிடித்தன. அதற்குப் பிறகும் நெடுங்காலம் வரை அவள் நோயாளி அந்தஸ்துடன்தான் வாழ்ந்து வந்தாள். அவள் உடல் பரிபூரணமான சுகங்கில எய்த வில்லை.

கிருஷ்ணாவுக்கு மூன்று வயதானதுமே அக்காளின் ஆசிரியையான மிஸ் ஹூப்பர் தங்கையையும் கவனித் துப் பயிற்றுவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். கிருஷ்ணாவிடம் நேரு குடும்பத்தினரின் பிறவிக்குணங்களாகிய பிடிவாதம், முன்கோபம், அடங்காத்தனம் முதலியன தொட்டிற் பண்புகளாகப் படிந்து போயிருந்தன. ஆகவே அவள் ஆசிரியைக்கு அதிகத் தொல்லை கொடுத்து வந்தாள்.

மோதிலால் நேரு கிருஷ்ணாவுக்கும் ஒரு குதிரை வாங்கிக் கொடுத்திருந்தார். பனிவெண்நிற ஆகுப்புரவி அது. அதை அவள் அன்புடன் நடத்தி வந்தாள். ஆனால் ஒருநாள் அக்குதிரையைப் பாம்பு கடித்துவிட் டது. குதிரை இறந்து போனதும் குமாரி மிகவும் துயருற்று வருந்தினாள்.

விஜயலக்ஷ்மியின் சிறு பருவ நாட்கள் இனியன வாய், மனோகரமானவையாக, கோலாகலமும் செல்வச் சிறப்பும் விழா விமரிசைகளும் நிறைந்தனவாகக் கழிந்தன. ரக்ஷாபந்தன், நவ்ரோஸ் பண்டிகை, தீபாவளி, ஹோலி, ஜன்மாஷ்டமி, தஸரா, ராமலீலா போன்ற பண்டிகைகள் 'ஆனந்த பவனத்'தில் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விசேஷ தினங்கள் சகோதரிகளுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தன என்று சொல்லவும் வேண்டுமோ?

அக் காலத்தில் இன்று போல் சினிமா முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துவரத் தன் புதல்வியருக்கு அனுமதி அளிப்பது மோதிலாலின் வழக்கமாக அமைந்தது. ஆனால் அடிக்கடி சர்க்கஸ் வேடிக்கை சென்று வர அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜவஹர்லால் நேருவுக்கு அற்புதமாகக் கதைகள் சொல்லி உணர்வும் மகிழ்வும் ஊட்டிய முன்ஷி முபாரக் அலி எனும் பெரியார் சொரூபாவுக்கும் கதைகள் சொல்லிக் களிப்பித்தார். குமாரி கிருஷ்ணாவுக்கும் இனிய கதைகள் கூறிஅவள் மதிப்பைச் சம்பாதித்தார். ஆறடிஉயரம் வளர்க்கிருந்த ஆஜானுபாகு அவர். கம்பீரமானதோற்றமும், வசீகர் முகத்துக்குத் தனி வனப்பு தந்த நீள் தாடியும் கொண்ட பெரியார் அவர். அவரை எல்லோரும் 'முன்ஷிஜி' என்றே அன்பாக அழைத்துப் போற்றி வந்தனர். குழந்தைகளுக்கு வீரக் கதைகளும் சரித்திரக் கதைகளும் சொல்வதில் அவர் அதிக உற்சாகம் காட்டி வந்தார். ஜவாஹரிடம் அவருக்கு அளவற்ற அன்பு உண்டு. நம் நேருவுக்கு அவர் மீது எல்லையற்ற பிரியமும் மதிப்பும் உண்டு 1917-ல் புற்றுநோய் கண்டு பல மாத காலம் கஷ்டப்பட்டார். முன்ஷிஜீ ஆயினும் ஜவாஹருக்குத் குழந்தை பிறந்து, அதைக் கண்டு மகிழ்ந்த பிறகே சாவேன்' என்று உறுதி கொண்டிருந் தார் அவர் மரணத்தோடு போராடி உயிரைப்பிடித்து வைத்திருந்தார். நம் நேருவுக்கு இந்திரா பிறந்ததும், அக் குழந்தையைக் கண்டு களிபேருவகை அடைந்தார் அப் பெரியார். அதன் பின் சில நாட்களிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. அவர் பிரிவைத் தனக்கு வந்த பெரு கஷ்டமாகவே கருதினர் நேரு குடும்பத்தினர் ஒவ் வொருவரும்.

ராணி நேருவுக்குத் தன் அருமை மகன் ஜவாஹர் பேரில் தான் பாசம் அதிகமிருந்தது. அது அவளது பேச்சில் சதா புலப்பட்டது. ஜவாஹர் இங்கிலாந்தில் வசித்து வந்த போதிலும், அவருடைய தாய் தன் மகனைப் பற்றிய நினைப்பில் அதிக இன்பம் கண்டு வந்தாள். அது 'கடைக்குட்டி’யான கிருஷ்ணாவுக்கு ஆத்திரம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றையே வளர்த்தது.

உறவினர்களும் பெரியவர்களும் நிறைந்திருந்த அந்த மாளிகையில் அக்காளும் தங்கையும் தான் தோழி கள் போல் பழகிப் பொழுது போக்கி வந்தனர். தந்தையை அவர்கள் எப்பொழுதாவது தான் கண்டு பேசிப் பழக முடிந்தது. தாயுடனும் அடிக்கடி குலவி மகிழ முடிந்ததில்லை. ஆசிரியை மிஸ் ஹூப்பர்தான் சகோதரிகளுக்குத் தாய் போலவும் கண்காணிப்பாளாரா கவும் இருந்தாள்.

இங்கிலாந்தில் சட்டக்கல்வி பயின்று தேர்ந்த ஜவாஹர்லால் நேரு, ஏழு வருஷங்களுக்குப் பிறகு 1912-ம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அவர் வருகிறார். என்ற செய்தி கிடைத்ததுமே ஆனந்த பவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பல வாரங்களாக வரவேற்புக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. ஒரு இளவரசனை எதிர்கோக்கி விசேஷ ஏற்பாடுகள் செய்வது போலவே அம்மாளிகையிலும் காரியங்கள் நடைபெற்றன. ராணி நேரு ஈடு இணையில்லா ஆனந்தத்திலேதான் மிதந்தாள். பெற்றோரின் உற்சாகமும் மகிழ்ச்சியும் சகோதரிகளுக்கு வருத்தம் அளிக்கத்தான் செய்தன. கிருஷ்ணாவுக்கு தான் அதிகமான இதய வேதனை இருந்தது. அண்ணனைக் கண்ட பிறகு, நேருவின் அழகிய முகத்தையும், மோகன முறுவலையும், பழகிய விதத்தையும் அனுபவித்த பின்னர் அவளால் வெறுப்பையும் பொறுமையையும் வளர்க்க முடியவில்லை!