விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 3

அத்தியாயம்-3

இந்தியாவின் அரசியல் களத்திலே அதிர்ச்சிகளும் தேக்க நிலைகளும் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்த காலம் அது. அடிமைப் பிடியை உணர்ந்து நிமிர்ந்து சற்றே உலுக்கிக் கொடுத்தது இந்தியா. அது நடந்தது 1857-ம் ஆண்டில் 'சிப்பாய்க் கலகம் ' என்று பெயரிடப் பெற்றுவிட்ட அந்நிகழ்ச்சிதான் இந்தியரின் முதல் புரட்சியாகும்.

அதன் பிறகு 1907-ம் ஆண்டு முதல் இந்தியாவிலே குமுறலும் கொந்தளிப்பும், உரிமைக் கிளர்ச்சிகளும் வெடிக்கலாயின. அந்நிய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அடிமை வாழ்வு வாழ்வதை மேலும் சகியோம் என்று உறுதி பூண்டது. இந்தியா, திலகர், அரவிந்த கோஷ் போன்றவர்களின் பெயரும் செயல்களும் உலகின் பல திக்குகளிலும் எதிரொலி எழுப்பின. வங்காளத்திலே துணிகரச் செயல்கள் நிகழ்வது சர்வ சாதாரணமாகி விட்டது. மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இந்திய அரசியலில் சிரத்தை காட்டினர். மோதிலால் நேருவும் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால் அவர் மிதவாதியாகத் தான் இருக்தார்.

ஆண்டுதோறும் காங்கிரஸ் மகாசபை கூடிக் கொண்டு தானிருந்தது. ஆயினும் அரசியல் வட்டாரத் தில் தேக்கம்தான் ஊறி நின்றது. அந்நிலேயிலேயே தான் முதலாவது உலக யுத்தம் தோன்றியது.

இங்குள்ள அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் கவனத்துக்கும் உரிய விஷயமாகத் தான் விளங்கியது 'எங்கோ கடந்த யுத்தம் '. யுத்த பயங்கரம் இந்தியா மீது கவியவில்லை. யுத்தம் இந்தியாவையோ, இந்தி யரையே பாதிக்கவுமில்லை, மோதிலால் நேருவின் ராஜரீகமான வாழ்விலே எவ்விதமான குறையும் ஏற்பட்டுவிடவில்லை.

1916-ம் வருஷம் மோதிலால் தன் செல்வப் புதல்வனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டார். டில்லி மாநகரில் மணமகள் வீட்டில் தான் கல்யாணம். எனினும் 'ஆனந்த பவன'த்தில் பல மாதங்களாக விமரிசையான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆபரணங்கள் செய்வோரும், ஆடைகள் தயாரிப்போரும், வியாபாரிகளும், உறவினருமாகப் பெருங்கூட்டம் கூடியிருந்தது அங்கே. பகல் பூராவும்

2

ஆரவாரமாக உழைத்தார்கள் அவர்கள். எண்ணற்ற குமாஸ்தாக்கள் திட்டமிட்டுத் தீவிரமாகச் செயல் புரிந்து வந்தனர். இந்த ஏற்பாடுகளும் பரபரப்பும் சொரூபாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் ஆனந்தமளிக்கும் புதுமைகளாகத் திகழ்ந்தன.
வசந்த பஞ்சமி தினத்தில்தான் திருமணம் அதற்கு ஒருவாரத்துக்கு முன்னரே மோதிலால் நேருவின் குடும்பத்தினர் அலகாபாத்திலிருந்து கிளம்பினர். நூறு பேருக்கு அதிகமான விருந்தாளிகள் அவர்களைத் தொடர்ந்தனர்.விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட 'ஸ்பெஷல் ட்ரெயின்' மூலம் பிரயாணமானர்கள் மேலும் பல நூறு விருத்தினர் டில்லியில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீடுகள் போதுமானதாக இல்லை. ஆகையினால் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தார் மோதிலால். ஒரு வாரகாலத்தில் ஏகப்பட்ட கூடாரங்கள் முளைத்துவிட்டன. அவை பூராவும் தனியானதோர் ஊர்போலவே விளங்கியது. அப்பகுதி 'நேரு திருமண முகாம்' என்றே அழைக்கப்படலாயிற்று.

சாதாரண வீட்டில் சுமாரான கலியாணம் என்றாலே, அவ்வீட்டிலுள்ள சிறுவ்ர் சிறுமிகளுக்குக் கங்குகரை அற்ற ஆனந்தம் பொங்கிப் பெருகுவது இயல்பு. இத்தகைய ராஜரீகமான மண விழாவின் போது சிறுமிகளான சொரூபாவும் கிருஷ்ணாவும் இன்ப உலகில் திரியும் சிறு பறவைகள் போல் களிப்புற்றதில் வியப்பு எதுவும் இல்லைதான்.  டில்லியில் அப்போது கடுங்குளிர் நிலவியது. என்றாலும் மணவிழாச் சிறப்பு குளிரின் கொடுமையை ஒட்டி விரட்டி விட்டது. விஜயலக்ஷமியும் கிருஷ்ணாவும் அங்கு குழுமிய உறவுமுறைச் சிறுவர் சிறுமியரோடு ஆடிப் பாடி அகமகிழ்ந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் விருந்தும் வைபவமுமாகப் பொழுது பொன்னாகக் கழிந்தது. இப்படிப் பத்து நாட்கள் அவர்கள் அமோகமான அனுபவம் பெற்றனர். பிறகு அலகாபாத் அடைந்தார்கள். அங்கும் பல தினங்கள் வரை விசேஷங்கள் தொடர்ந்தன; அவர்களை மகிழ்வித்தன.

வீட்டுக்கு வந்த புதுமணப் பெண் கமலா அவர்களுக்குப் பிடித்த இனிய தோழியாகி விட்டாள். 1917-ம் வருஷம் ஜவஹர்-கமலா தம்பதியின் ஒற்றைத் தனி மகள் இந்திரா பிறந்தாள்.

அவ் வருஷம் முக்கியமான விசேஷம் வேறு ஒன்றும் நிகழ்ந்தது. நேரு சகோதரிகளின் ஆசிரியையான மிஸ் ஹுப்பர் ஆங்கிலேய நண்பர் ஒருவரைக் காதலித்து, விரைவில் மணந்து கொள்ளத் தீர்மானித்தாள். அவளுடைய உறவினர் அனைவரும் இங்கிலாந்தில் இருந்தனர். ஆகையினால் மோதிலால் நேருவே தந்தை ஸ்தானத்திலிருந்து அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க முன் வந்தார். மாதாகோயிலில் மணவினை நடந்தது. அவளது மாணவிகளே மணப்பெண்ணின் தோழியராக விளங்கினார்கள்.

அக் கலியாணம் நேரு சகோதரிகளுக்கு மகிழ்வூட்டும் சம்பவமாக இருந்த போதிலும், அவர்கள்  உள்ளத்தில் வேதனையும் குடி புகுந்திருந்தது. பன்னிரண்டு வருஷ காலம் நேரு குடும்பத்தில், உறவினரில் ஒருவர் போல, வாழ்ந்து வந்தவள் மிஸ் ஹூப்பர். அனைவரும் அவளிடம் பரிவும் பாசமும் கொண்டிருந்தனர். சொரூபாவும் கிருஷ்ணாவும் அவளிடம் அன்பும் மதிப்பும் அளவிலாப் பற்றுதலும் காட்டி வாழ்ந்தனர். இணையிலாத அந்த ஆசிரியை தங்களை விட்டுப் பிரிந்து போகிறாளே என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இதய வேதனை கொடுத்தது.

ஆசிரியை பிரிந்து சென்ற பின்னர் பல தினங்கள் வரையில் நீடித்திருந்தது அவ் வருத்தம். காலப்போக்கிலே அதுவும் மறந்தது.

ஆசிரியை போன பிறகு, கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் சேர்ந்து கல்வி பயில ஆசைப்பட்டாள்.மோதிலால் நேரு தமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பியதே இல்லை.வீட்டில் தனி ஆசிரியை நியமித்துக் கல்வி புகட்டுவது தான் தனது அந்தஸ்துக்கு ஏற்ற கௌரவம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது, பியானோ வாசிக்கும் பயிற்சி, அல்லது வேறு இசைக்கருவி எதையாவது மீட்டும் திறமை, சமூகத்தில் சம அந்தஸ்து உள்ளவர்களுடன் பழகி நன்றாக சம்பாஷிக்கும் சாமர்த்தியம்-இவையே பெரிய இடத்துப் பெண்களுக்கு இன்றியமையாத பண்புகள் என்ற அபிப்பிராயம் நிலவிய காலம் அது. அவ் யுகதர்மங்களைத் தான் நேருவும் கையாள அவாவினார்.

விஜயலஷ்மி வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெற்று வளர்ந்தாள். அவள் எந்தப் பள்ளிக்கூடத்திலும்  சேர்ந்து கல்வி பயிலவில்லை. பயில ஆசைப் பட்டதுமில்லை、

ஆனால், கிருஷ்ணா பள்ளிக்கூட அனுபவம் பெறத் தவித்தாள். தந்தை பிடிவாதமாக மறுத்தார். மகளோ அவரை விட அதிகமாக அடம் சாதித்தாள். முடிவில் தந்தைதான் விட்டுக் கொடுக்க நேர்ந்தது! கிருஷ்ணா வெற்றி மிடுக்குடன் பள்ளியிற் சேர்ந்தாள். புதுப்புது அனுபவங்களும் புதிய புதிய நண்பர்களேயும் அடைந்தாள்.

மிஸ் ஹுப்பர் சென்றதிலிருந்து தங்கை கிருஷ்ணாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு விஜயலஷ்மிக்கு வந்து சேர்ந்தது. தாயார் நோயின் காரணமாக பலவீன நிலையிலிருந்ததால், அவளால் இளைய மகளைக் கவனித்து வளர்க்க முடியாமல் போயிற்று. சொரூபா தங்கையிடம் கண்டிப்பாகவோ, மூத்தவள் என்ற மிடுக்குடனே நடந்து கொண்டதே இல்லை. கிருஷ்ணாவைத் தனது இஷ்டம் போல் நடந்து கொள்ள விட்டு விட்டாள் அவள். அது தான் அக்காளுக்குச் செளகரியமாக இருந்தது; தங்கைக்கும் மிகவும் பிடித்திருந்தது.

விஜயலஷ்மிக்கு கவிதையில் தனி மோகம் உண்டு கிருஷ்ணாவுக்கும் அது புடிந்திருந்தது. ஆகவே அவர்கள் இருவரும் தினந்தினம் மாலை வேளையில் தோட்டத்தில் மரத்தடியில் அமர்ந்து கவிதைகளை ரசித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டு விட்டனர். சொரூபா உரிய பாவங்களோடு கவிதைகளை வாசிப்பாள். தங்கை ஆழ்ந்து கவனித்து அனுபவிப்பது வழக்கம்.  இருவரிடையேயும் இனிய அன்புப் பிணைப்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. கிருஷ்ணாவின் சிறுபிராயத்திலே விஜயலஷ்மி தான் தங்கையின் தோழியாகவும், நல் வழிகாட்டியாகவும், அன்பு நிறைந்த ஆசிரியையாகவும் விளங்கினாள்.