விநோதரசமஞ்சரி/1.தெய்வங் கொள்கை

1. தெய்வம் கொள்கை

[இஃது “ஆஸ்திக நாஸ்திக” சம்வாதமாகச் செய்யப்பட்டது]
ஆத்திகன்

 
“அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.”

என்னும் குறள்வெண்பாவினால் ‘எழுத்துக்களெல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல, உலகு ஆதிபகவனாகிய முதலையுடைத்து’ என்னும் கருத்தைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் வெளியிட்டருளியபடி, இம்மலை நெருப்புடைத்து புகையினால் என்பது போலவும், குட முதலிய காரியம் உண்டாவதற்குக் குயவனாகிய நிமித்த காரணன் ஒருவன் உண்டாயிருத்தல் போலவும், இந்தப் பிரபஞ்சம் சிருஷ்டி, திதி, சங்காரம் என்கிற முத்தொழில் படுதலால், அக்காரியம் உண்டாவதற்கு நிமித்தகாரணன் ஆகிய ஈசுவரன் ஒருவன் உண்டு என்றும், மண்போல மாயையாகிய முதற்காரணம் உண்டென்றும், தண்ட சக்கரம் போல நல்வினை தீவினைகளாகிய துணைக்காரணம் உண்டு என்றும், ஆன்மாக்கள் பந்த மோட்சத்தை அடையும்படி, இவ்வாறு காரியப் படும் என்றும், அனுமானப் பிரமாணத்தாற் கொள்ளவேண்டும்.

நாத்திகன்
அப்படியாயின் மூலப்பிரகிருதியாகிய மாயையினாலும் பரமாணுக்களினாலும் இவ்வுலகம் காரியப்பட மாட்டாதா? சற்றே விவரமாகச் சொல்லவேண்டும்.
ஆத்திகன்
மாயையும், பரமாணுக்களும் அறிவில்லாத சடமாகையால் அறிவுடையவனாலே அல்லாமல், அவைகளால் உலகம் காரியப்பட மாட்டாது என்பது நிச்சயம்.
நாத்திகன்
ஆனால் அறிவுடைய சீவர்களால் (சீவர்/ஜீவர்-உயிர்கள்) உலகம் உண்டாகலாமே, அதற்கென்ன தடை?
ஆத்திகன்
ஒரு தேரைச் செய்வதற்குப் பற்பல வேலைக்காரர் வேண்டியிருப்பினும் ரதாசாரியனாகிய ஒருவனாலேயே அந்த ரதம் உண்டாகிறதினாலும், உலகத்தை உண்டாக்குகையாகிய காரியம் மிகவும் பெரிய காரியமாகையாலும், அச்சீவர்களிடத்தில் கிஞ்சிஞ்ஞத்துவம் (கிஞ்சிஞ்ஞித்துவம்=சிற்றறிவுடைமை) முதலிய தோஷம் உண்டாகியிருக்கையாலும், அச் சீவர்களால் உலகம் காரியப்பட மாட்டாது. ஆகையால், பிரபஞ்சத்திற்குச் சர்வஞ்ஞனாகிய ஈசுவரன் ஒருவனே கர்த்தாவாகின்றான் என்பது நிச்சயம் என அறியக்கடவாய். மேலும் சூரியனால் அன்றி, மலர்கின்ற மலரவும், குவிகின்றவை குவியவும், உருகின்றவை உருகவும், இறுகுகின்றவை இறுகவும் கூடுமோ? கூடாதே; அதுபோல, அகில லோகங்களுக்கும் தாமே காரணமாகித் தமக்கொரு காரணமும் இல்லாது விளங்கிய கடவுளாலன்றி, எல்லா உயிர்களும் அபிவிர்த்திப்பதற்கு உபயுக்தமாக மழைபெய்யும் பருவத்திற் பெய்யவும், வெயில்காயும் பருவத்திற் காயவும், காற்று வீசும் பருவத்திற் வீசவும், பொழுதுவிடியும் பருவத்தில் விடியவும், அஸ்தமிக்கும் பருவத்தில் அஸ்தமிக்கவும் கூடுமோ? ஏரி, குளம் முதலானவைகளை மனிதர்கள் உண்டாக்குகின்றார்களே; அளவிடப்படாத அகலமும், நீளமும், ஆழமும் உடைய கடலை அவர்கள் உண்டாக்க முடியுமா? அதை யார்உண்டாக்கினார்கள்? ஏரி முதலானவைகளுக்குக் கரை யிருக்கின்றதே, கடலுக்குக் கரையுண்டா? அது எப்படித் தடைப்பட்டிருக்கின்றது? ஏரி முதலானவைகள் வற்றிப்போகின்றனவே, கடல் ஏன் வற்றவில்லை? சாமானியமாகிய ஓரேரி உடைந்தால், அநேக கிராமங்கள் முழுகிப் போகின்றனவே, பெரிய கடல் பொங்கிவந்தால் உலகம் நிலை நிற்குமா? அதை அப்படிவராமல் தடுக்கின்றவர்களார்? ஒரு காலத்தில்காற்று விசையா வீசினால் குன்றுகள், கோபுரங்கள், கோட்டைகள், கொத்தளங்களெல்லாம் நிர்த்தூளியாக அண்ட பிண்டமுங் கலங்குகின்றனவே; அது பின்னும் உக்கிரமாய் வீசுமானால் எது எப்படி யாகாது? சித்திரை வைகாசி மாதங்களில் சூரியனுடைய கிரணத்தின் வெப்பம் சிறிது அதிகப்படுவதினால், அநேக கிருக கிராமங்கள் வெந்துநீறாய்ப் போகின்றனவே; அந்து அந்த மிதத்திற்குச் சிறிது மேற்படுமானால், எவராலே சகிக்கக் கூடும்? அவைகளை அவ்வாறு அதிக்கிரமிக்க வொட்டாமல் அடக்குகின்றவர்கார்? மழைக்கு அதிவிருஷ்டி, அநாவிருஷ்டி என்று இரண்டு தோஷமுண்டு. அவைகளில் அதிவிருஷ்டி- அதிக மழை; அநாவிருஷ்டி-மழையின்மை; அதிகமழை பெய்தால் உலகம் நாசமாய்ப் போம்; மழையில்லாவிட்டாலும் பயன்படாது. அப்படிப்பட்ட தோஷம் சம்பவியாமல் சம விருஷ்டியாய் மழை பெய்விக்கின்றதார்?

 
“.... மாரி
வறப்பிற் றருவாரு மில்லை யதனைச்
சிறப்பிற் றணிப்பாரு மில்லை.”

-என நாலடி நானூற்றில் (நாலடி நானூறு- நாலடியார்)முனிவரருங்(முனிவரர்=முனிவர்கள், இங்குச் சமணமுனிவர்களைக் குறித்தது) கூறினார்.

சூரியனும் சந்திரனும், பகலும் இரவும், வெயிலும் மழையும், உஷ்ணமும் சீதமும், கோபமும் பொறுமையும், ஜனமும் மரணமும், நரகமும் மோக்ஷமும் ஒன்றற்கொன்று எதிரிடையாக அமைக்கப்பட்டது யாராலே? பிணிகளை உண்டாக்கி அவைகளைத் தணிக்கும்பொருட்டு ஔஷதங்களைக் கற்பித்ததார்? அறுகம்புல் நுனியில் தங்கிய பனித்துளி யளவாகிய சுக்கிலமானது, கரசரணாதி அவயவங்களாக உருப்பட்டு உயிர்பெற்று எண்சாணுடம்பில் ஒரு சாணளவாகிய தாய் வயிற்றில் இரப்பை, சலப்பை, மலப்பை முதலியவைகளுக்குரிய பலவிடங்களுந் தவிர, மிகவும் சிறியதாகிய கருப்பாசயப் பையினிடத்திற் கட்டுண்டிருந்து, அதனால் உறுத்தப்பட்டு, உதராக்கினியில் வெந்து, அவ்விடத்தில் பூரிக்கும் ஜலத்தில் அமிழ்ந்து, பிரசூதவாயு முறித்துத்தள்ள, அதோமுகமாய்த் திரும்பி நெருக்குண்டு சிசு உற்பவிக்கின்ற அதிசயத்தை என்னென்று சொல்லுகிறது? இப்படிச் செய்கின்றதார்? மனிதர் முகம் ஒன்றுபோல மற்றொன்று இருக்கலாகாதா? அதது வெவ்வேறு சாயலாயிருக்கின்றதே! அன்றியும் அனைவரும் ஒருவர்க்கொருவர் உருவம், குணம், ஓசை, செய்கை முதலியவைகளாலும் பல்வேறு வகைப்பட்டிருக்கின்றார்களே! அல்லாமலும், ஒரு உதரத்தில் தோன்றிய பலபிள்ளைகளில் ஒருவரேனும் உருவம், குணம், தொனி, செய்கை முதலியவைகளால் ஒன்றுபட்டிருக்கக் காணோமே. இதெப்படிப்பட்ட ஆச்சரியம்! விலங்கு, பறவை, ஊர்வன நீர்வாழ்வன வாகிய ஜாதிகளிலும், மரங்கள் செடிகள் கொடிகளிலும், அவைகளிலுள்ள மலர் காய் கனிகளிலும், மண் கல் முதலியவைகளிலும் எத்தனையோ பேதங்களும் குணரூப விசித்திரங்களும் இருக்கின்றனவே, இவை எவ்வாறு தோன்றின? மண்ணானது இறுகவும், நீரானது பரவவும், தீயானது சுடவும், காற்றானது சஞ்சரிக்கவும், ஆகாயமானது இவைகளுக்கெல்லாம் இடந்தரவும் செய்ததார்? உய்த்துணருமிடத்தில் மேற்கூறியவை கடவுளின் செயலென்றே தோன்றுகின்றன அல்லவா?
நாத்திகன்
விளங்காய் திரண்டிருப்பதுவும், களம்பழம் கறுத்திருப்பதுவும், பால் வெளுத்திருப்பதும் இயல்புதானே! மீன்குஞ்சுக்கு நீச்சும், மான்குட்டிக்கு வேகமும் பயிற்றினவர்களார்? ஒருவரும் இல்லையே. அந்தப்படி அனைத்தும் சுபாவம் என்கிறதுதானே, இதைவிட்டு “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது”போலக் கடவுள் செயலென்பது என்னை?
ஆத்திகன்
காரணத்திலிருந்து காரியம் தோன்றுவது அல்லது நிஷ்காரணமாய்த் தோன்றாமையால், சுபாவமென்பது சரியன்று. குலாலன் நிமித்தத்தாலன்றிக் குடம் உதிக்கின்றதா? சூத்திரியில்லாமற் பிரதிமை ஆடுகின்றதா? மீகாமன் இல்லாமல் மரக்கலன் ஓடுகின்றதா? சாரதியில்லாமல் தேர் நடக்கின்றதா? எங்கேயாவது சுக்கில சுரோணித சம்பந்தமில்லாமல் கரு உற்பத்தியாகின்றதா? எந்தக் காலத்தினாலும் வித்தில்லாமல் விளைவுண்டாகுமா? ‘வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை’ என்று சொல்லக் கேட்டதில்லையோ? மேலும் ‘அவனன்றி யோரணுவு மசையாது’ எனவு மிருக்கின்றதே! ஆதலால், தெய்வச் செயலென்பதே சரியென்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
நாத்திகன்
ஆ! ஆ! ‘வலியான் எடுத்ததே வாய்க்கால், வல்லவனாடியிதே பம்பரம்’ என்பது போல,சூட்சும புத்தியுடையவர்கள் அசுவதாட்டியான தங்கள் வாக்குவல்லமையால் வேண்டியபடி யெல்லாம் பேசுவார்கள்.

“சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”

- என்பது போலச் சொல்கின்றீர்; அஃதிருக்கட்டும், தெய்வமிருப்பது மெய்யானால் கண்ணுக்குப் புலப்பட மாட்டாதா? புலப்படாமையால் பொய்யென்றுதானே நினைக்கவேண்டியது.

ஆத்திகன்
ஒருபோதும் பொய்யாக மாட்டாது. கண், அகக்கண் புறக்கண் என இரண்டாகும். அகக்கண்- அறிவாகிய கண்; புறக்கண்- முகத்திலிருக்குங்கண். புறக்கண்ணினாற் கடவுளை நிஜஸ்வரூபமாய்க் காணவே கூடாது; அகக்கண்ணினால் ஒருவாறு காணலாம். அநேகர் அஞ்ஞானவிருள் சூழ்ந்து அகங் குருடாயிருப்பதனால், அவர்களுக்கு அகக்கண்ணிலும் புலப்படுகிறதில்லை என்றாலும், அவர்கள் தத்தமது உள்ளமாகிய தகளியில், அன்பாகிய நெய்யைப் பெய்து, அருளாகிய திரியையிட்டு, அறிவாகிய விளக்கையேற்றினால் அவர்களுக்குக் கடவுள் புலப்படலாம்.

 முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே யானந்தம்”

- எனவுஞ் சொல்லப்படுகின்றதே. அது மெய்யாயிராவிட்டால், வேத சாஸ்திரங்கள் பயில்வதும், ஆலயங்களுக்குச் செல்வதும், தெய்வத்தை வணங்குவதும், தீவினைக்கஞ்சுவதும், தாய் தந்தையைப் பேணுவதும், குருவின் உபதேசத்தை நம்புவதும், செங்கோணைக்கு அடங்குவதும், சத்தியந் தவறாதிருப்பதுவும், மற்றும் பற்பல நற்கருமங்களைச் செய்வதும் எதற்கு? யாதோர் அடங்கமும் இல்லாமல் நிர்ப்பயமாய் அவரவர்கள் நினைத்த வண்ணமெல்லாம் நடக்கலாமே.

❖அப்படியா!

தொகு
நாத்திகன்
அப்படியா! இது ‘திண்ணைக்குத் தேள் கொட்ட மிடாவுக்கு நெறிகட்டினதாகவும்’ இருக்கிறது. தெய்வ பயத்தைக் காண்பிக்கிற கருத்து வேறே; அது நீவிர் அறிந்தீரில்லை. அப்படிக் காட்டாவிட்டால், ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரிப்பான்; ஒருவன் பெண்டிரை மற்றொருவன் இச்சிப்பான்; மாதா பிதா சொற்படிப் புத்திரர் நடவார்கள்; கணவன் இஷ்டப்படி மனைவி இணங்காள்; அரசர்க்கு அதிகாரஞ் செல்லாது; பகைவர் மேலிடுவார்கள்; சண்டை, வழக்கு, சூது, வாது, கொலை முதலானவைகளை விலைகொடுத்து வாங்குவார்கள்; பெரியோர் சிறியோரென்னும் வரம்பு தவறிப்போம்;அப்புறம் உலகம் ஒருவழிப்படாது. தன்னரசு அச்சுக்கெட்டுத் தச்சு மாறிப்போம்; துக்கமன்றிச் சுகஞ்செனிக்கமாட்டாது; ஆனதுகொண்டு, விவேகிகள் உலகம் கட்டுப்படுகிற நிமித்தமே ‘கௌபீன சம்ரட்சணார்த்தம் அபயம் படாடோபம்’ என்பது போல, இந்த ஆடம்பரங்களையெல்லாம் உண்டாக்கி வைத்தார்களென்று வெட்டவெளிச்சம் பட்டம்பகலாய்க் காண்கின்றதே; இதைவிட்டு, ‘அப்பம் எப்படிச் சுட்டாளோ, அதற்குள் தித்திப்பை எப்படிநுழைத்தாளோ’ என்பது போல எல்லாம் தெய்வச்செயல் என்று பிரமிப்பானேன்? இதைவிட மனிதர் செயலென்று சந்தேகமில்லாமற் சொல்லலாமே.
ஆத்திகன்
இவ்வாறு பேசுகின்றவர்களுக்கும், போகமே மோட்சம் துன்பமுமே நரகம் என்கிற உலோகாயதனுக்கும் என்ன பேதம்? ஆயினும் இதென்ன விபரீதம்? ‘உள்ளக் கருத்து வள்ளலுக்கல்லவோ தெரியும்’. வாய் கூசாமல் மனிதர் செயலென்றால் ஒக்குமா? மனிதர் கிணறு தோண்டுவார்கள்; தண்ணீர் சுரக்கச் செய்வார்களா? பயிர் செய்வார்கள்; மழை பெய்விப்பார்களா? அவை தெய்வச் செயலாற்றானே ஆகின்றன. ஆதலால், தெய்வ பலமே பலம்; மனுஷ பலமென்ன துர்ப்பலந்தானே? கல்லுக்குள் இருக்கின்ற தேரையையும், முட்டைக்குள் இருக்கின்ற பறவைக் குஞ்சையும் ஊட்டி வளர்க்கின்றதார்? பாலிற் சுவைபோலவும், நீருட் குளிர்ச்சி போலவும், தீயிற் சூடுபோலவும், பூவில் மணம்போலவும், மணியுள் ஒளிபோலவும் சகல ஆத்மாக்களுக்குள்ளும் கடவுள் அந்தரியாமியா யிருந்து பரிபாலிக்கின்றதை அறியாதவராய், ‘தெய்வந்தொழு’ என்று ஔவையார் சொன்னதையும் மறந்து, கேவலம் நிரீசுரவாதியாய் வாது செய்வது என்னை?
நாத்திகன்: வாது செய்தால் தெய்வம் கண்ணைக் குத்துமோ? நாவெழ வொட்டாதோ? இதெல்லாம் வீண் மனோராச்சியமே.
ஆத்திகன்: ஐயோ, கர்த்தாவே! ‘தெய்வமிகழேல்’ என்பதையும், ‘தெய்வஞ் சீறிற் கைதவமாளும்’ என்பதையும் ஓராமல், அகங்காரத்தாற் கெடுமதி கண்ணுக்குத் தோற்றாமல், அஞ்சாத நெஞ்சு படைத்து, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ?’ என்று எளிதாக வாய்மதம் பேசலாமா? அபசாரமல்லவா? ‘அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்’ என்று பழமொழியும் இருக்கின்றதே.
நாத்திகன்: ஏன் சும்மா பூச்சி காட்டுகிறீரே? இந்த வீண்பட்டி மிரட்டி ஏதுக்கு?' 'பனங்காட்டு நரி சலசலப்புக்கஞ்சுமா?' என்ன செப்பிடுவித்தையும் காரடவித்தையும் ஆடவருகிறீர்? 'உள்ளங்கை நெல்லிக்கனிபோல்' உண்மையாகக் கண்ணிலே கண்டதைவிட்டு என்றும் காணாததும் ஆரோ வேலையற்ற பைத்தியக்காரர் சொல்லக் கேட்டதுமாய், சொப்பனம் போலவும், இந்திரசாலம் போலவும் இருக்கிற உண்மையல்லாத பேய்ச் சமாசாரத்தையா நம்புகிறது?
ஆத்திகன்: அடடா! இதேதுழ தொண்டையும் மண்டையும் போம்படிப் போராட வேண்டி வந்ததே! கண்டதைத் தானா மெய்யென்று கொள்ளுகிறது? கண்டதைக் கொண்டு காணாததையும் உண்டென்று நிச்சயிக்கிறதில்லையா? அப்படியானால் தர்க்கம் மீமாஞ்சை முதலாகிய சாஸ்திரங்களில் அனுமானம் அர்த்தாபத்தி முதலிய சில பிரமாணங்களை முக்கியமா யெடுத்துரைப்பதென்ன? தாய் தந்தையர்களை யறியாத மைந்தனொருவன், தன்னைப் பெற்றவர்களைத் தான் அறியாததனால் நான் அந்தரத்தில் முளைத்து வந்து குதித்தேன் என்பானோ? காட்சிப்பொருள், கருத்துப் பொருள் என இருவகையாய்ச் சொல்வதுதானென்ன? மலை இலக்காயிருக்க இல்லை யென்னலாமே? கடவுள் அருவாகியும், உருவாகியும், அணுவாகியும், மேருவாகியும், அணுவுக்கணுவாகியும், மேருவுக்கு மேருவாகியும் ஒரு சிறிய புல் நுனியையும் விட்டொழியாமல் மாதர், புருஷர், பாலர், விருத்தர், மூடர், விவேகிகள், பாதகர், புண்ணியர்களும், மற்றைப் பசுபட்சி மிருகங்களும், விருட்ச பாஷாணாதிகளும், யானைமுதல் எறும்பீறாகச் சொல்லப்பட்டனவும் ஆகிய ஸ்தாவர சங்கமங்கள் எல்லாவற்றிற்குள்ளும் பரிபூரணமாயிருக்கின்றார். அவரில்லாத இடம் ஒன்றும் இல்லை.
நாத்திகன்: நீர் சொல்லுகிறபடி கடவுள் எங்கும் பரிபூரணமாயிருக்கின்றது மெய்யாகுமானால், அவர் பாவிகளுக்குள்ளும் இருக்கின்றார் என்பது சரியல்லவே.
ஆத்திகன்: அவர் எங்கும் இருக்கிறார் என்பது சத்தியம். ஆனால் அவர் நல்லோர் இருதயத்தில் மெல்லிய பூவின் மேல் இருக்கிறது போலவும், தீயோர் மனத்திற் கடூரமாகிய முள்ளின்மேல் இருக்கிறது போலவும் இருக்கிறார் என்பதே அதன் கருத்து. இப்படாயாகக் கொள்ளாவிடின் அவரைப் பூரணர் என்பது பொய்யாய் முடியும். அன்றியும் கடவுளின் அகடிதகடனா சத்தியை யாரறிவார்? அவர் அண்டத்தை அணுவாகவும், அணுவை அண்டமாகவும், பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும், ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவார். ஒரு சிறிய கடுகுக்குள் பெரிய மலையை அடக்குவார். புலியைப் பசுப்போலச் சாதுவாக்குவார். ஆகாயத்தை ஒரு சுண்டுவிரலால் மறைப்பார். பூமிமுழுதும் அவருக்கொரு சிறுதுளி. கடல்நீரெல்லாம் அவருக்கொரு சிறுதுளி. ஊழித்தீயோ அவருக்கொரு சிறுபொறி. சண்டமாருதமோ அவருக்கொரு சிறிய சுவாசம். அவர் ஆணாய் பெண்ணாய் அலியாய், அவையன்றாய், ஒன்றாய், பலவாய், சத்து சித்து ஆனந்தமாய், நித்திய நிரஞ்சன நிர்த்தொந்த நிஷ்களமாய் இருப்பவர். அவருக்குப் பிறப்பு இறப்பு, விருப்பு வெறுப்பு, ஒப்பு உயர்வு, இன்பம் துன்பம், பந்தம் மோட்சம் இல்லை. அவர் மகிமையைச் சொல்ல ஆர் தரம்? அவர் மனத்திற்கும் வாக்குக்கும் காயத்திற்கும் அதீதமானவர். இப்படியெல்லாமிருக்க, இன்னமும் நம்பிக்கை அடையாதிருக்கலாமா?
நாத்திகன்: 'எல்லாமிருக்கிறது பெட்டியிலே, இலைக் கறி கடையச் சட்டியில்லை' எனபதுபோலக் கடவுளித்திற் சகல அற்புதங்களும் உண்டாகியிருந்தும், அவர் காட்சிக்கு அன்னியமாய் இருப்பதனால், அவரைக் குறித்துச் சந்தகப்பட வேண்டியதாய்த்தானே யிருக்கிறது. அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத் தகுதியாகிய சாதனமும், சாட்சியும், ஆட்சியும் வேண்டாமா?

❖❖அவசியம்...

தொகு
ஆத்திகன்: அவசியம் வேண்டியதுதான்.
நாத்திகன்: கடவுளைக்குறித்து உண்டான சாதனம் யாது?
ஆத்திகன்: வேதமே; அதாவது, தத்துவங்களை அறிவிப்பது என்பதாம்.
நாத்திகன்: வேதம் எத்தன்மைத்து?
ஆத்திகன்: வேதம் ஒருவராலும் உண்டாக்கப்படாமல் அனாதியாய் இருந்து கடவுளால் பிரமனுக்கு உபதேசிக்கப்பட்டு வழிவழியாய் உலகத்திற் பரவினது என்பதனால், அபௌரஷேயம் எனவுஞ் சொல்லப்பட்டுச் சகலமான பொருளையும் தனக்குள் மறைத்துவைத்திருப்பதனால் மறை என்றும், பல தர்மங்களையும் அறிதற்குக் கருவியாய் இருப்பதனால் வேதம் என்றும், ஓதப்படுவதால் ஓத்து என்றும், கேட்கப்படுதலாற் சுருதி என்றும், எல்லா நூல்களுக்கும் ஆதி ஆதலால் ஆதிநூல் என்றும், மெய்ப்பட்டிருத்தலால் மெய்ந்நூல் என்றும், இன்னும் பற்பல காரணங்களால் ஆரணம் என்றும், எழுதாக்கிளவி என்றும், நிகமம் என்றும் பெயர்பெற்றதும் அல்லாமல் இராஜகட்டளைக்கு ஒப்பானதுமாய் இருக்கின்றது.
நாத்திகன்: வேதத்தை யாது காரணத்தால் இராஜகட்டளைக்கு ஒப்பிடுவது?
ஆத்திகன்: ஓர் ராஜாவின் கட்டளைப் பத்திரம் வரக்கண்ட மாத்திரத்தில் அவனது செங்கோலின் கீழ் வாழும் குடிகள், அந்நிருபத்தை இரு கையிலும் ஏந்திச் சிரசில் தாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, மனம் நடுங்கி, அதிற்குறித்த வண்ணம் அக்கணமே ஆய்ந்தறிந்து, தாமதியாமல் அம்முறையே செய்வது போல, எப்பொருட்கும் இறைவனாகிய கடவுள் அருளிய கட்டளைப் பத்திரம் என்னும் வேதத்தை அக்கடவுளாகவே பாவித்து, அதிற்சொல்லியபடி யாவருந் தடையின்றிச் செய்யவேண்டியிருப்பதனால், இராஜகட்டளைக்கு ஒப்பிடலாயிற்று.
நாத்திகன்: வேதம் என்ன சொல்லுகின்றது?
ஆத்திகன்: அது சீவாத்தும பரமாத்தும ஸ்வரூப லக்ஷணம் இப்படிப்பட்டதென்றும், அவ்விரண்டிற்கும் அனாதியாயுள்ள சம்பந்தம் இப்படிப்பட்டதென்றும், அச்சம்பந்தத்திற்கு இடையே சம்பவித்த விரோதம் இன்னதென்றும், அந்த விரோதத்தை நிவர்த்திப்பதற்கு உபாயம் இன்னதென்றும், அவ்வுபாயத்தைச் செய்தவழி அடையும் புருஷார்த்தம் இதுவென்றும் சொல்வதுமன்றி, சகலபுவன சராசரங்களின் உற்பத்தி ஸ்திதி நாசங்களைக் குறித்தும் சாங்கோபாங்கமாகச் சொல்லுகின்றது. அவை விரிக்கிற் பெருகும். மேலும், சகலரும் கடவுளைத் தேடியடைந்து அவருக்கடிமை பூண்டு அவரைத் தொழுவது அவராணையை அதிக்கிரமிக்காமல் நம்பிக்கை கொண்டு அவர் சொன்னவண்ணம் அகப்பற்றுப் புறப்பற்றுக்களை ஒழித்துப் பக்தி வைராக்கியத்தோடு நடக்கவேண்டுமென்றும், அவ்வாறு நடந்தவர்கள், நோயாளியானவன் நல்ல மருத்துவனைத் தேடியடைந்து, அவன் சொல்லினிடத்தில் நம்பிக்கை வைத்து, அவன் கொடுத்த மருந்தையுண்டு, அவன் வைத்த பத்தியபாகந் தவறாதிருந்தால், நோய் நீங்கிச் சரீரம் சொஸ்தமாய் ஆரோக்கியம் பெறுவது போல, பிறவித்துன்பம் அற்றுச் சுகமுற்றுப் பெரும்பேறு பெறுவார்கள் என்றும், ஆணவத்தால் தெய்வக் கட்டளையை மீறி, அந்தத் தெய்வத்தையே நிந்தித்து, அங்குசமில்லாத யானையும், கடிவாளமில்லாத குதிரையும் போல, ஒருவரையு மதியாமல் நினைத்தபடியெல்லாம் தன்னிஷ்டமாய் நடப்பவர்கள் யுக்தாயுக்தந் தெரியாமல், பாவச் செய்கையே பயின்று, யாவராலும் இகழப்பட்டு, இகபரார்த்தங்களை யிழந்து, பற்றுக்கோடின்றி, எரிவாய் நரகத்தில் வீழ்ந்து காலதத்துவமுள்ளவரைக்கும் மாறாத கொடிய வேதனையையே அனுபவிப்பார்களென்றும் சொல்லுகின்றது.
நாத்திகன்: சாட்சி யார்?
ஆத்திகன்: சான்றோரே.
நாத்திகன்: சான்றோரைச் சாட்சி குறித்தீரே, அவர்கள் எத்தன்மையோர்?
ஆத்திகன்: அவர்கள் காமமாகிய காட்டை அழித்து, வஞ்சனையாகிய வேரை அகழ்ந்து, பொய்யாகிய புதரை யெரித்து, கடினமாகிய கரம்பு திருத்தி, உண்மையாகிய எருவிட்டு, நெஞ்சமாகிய வயலில் தெய்வபக்தியாகிய விதை விதைத்து, பக்குவமாகிய நீர்பாய்ச்சி, விடயமாகிய பட்டிமாடு முதலியன மேயாமல், சாந்தமாகிய வேலிகோலிக் காத்து, பரமஞானமாகிய பயிர் தழைத்து, கருணையாகிய கதிர் தோன்றி, முத்தியாகிய முழுப்பலன் வாய்க்கப் பெற்றவர்கள்.
நாத்திகன்: சான்றோர் கடவுளைப்பற்றி என்ன சொல்லுகின்றார்கள்?
ஆத்திகன்:அவர்கள் 'அவர் சர்வஞ்ஞர், சர்வேச்வரர், சர்வநியந்தரர், சர்வாந்தர்யாமி, சர்வகற்பிதர்' என்றும், 'கோடைகாலத்தில், கானலில் வருந்தி இளைத்து வெயர்த்துத் தாகித்துச் சோகித்து வந்தவர்களுக்குக் குளிர்ந்த தாமரை ஓடையும், அதனருகில் வடநிழலும் போலத் தன்னால் பிறரால் தெய்வத்தால் வருவனவாகிய மூவகைத் தாபாக்கினியால் தகிக்கப்பட்டு, சனனவிடாய்கொண்டு மூர்ச்சித்து, வேறு கதியின்றித் திருவுளமே தஞ்சமென்று உண்மையாய் நம்பிவந்து ஆசரித்தவர்களுக்குத் தாமே ரட்சகராய், கருணாநிதியாய், ஆபத்பாந்தவராய், தீனசகாயராய், இளங்கன்றுக்கிரங்கும் பசுப்போலவும், அருங்குழந்தைக் குருகும் அன்னைபோலவும் திருவுளமிரங்கி, அவர்கள் பாவித்தவண்ணம் அப்பொழுதே தோன்றி, அவர்களைக் கைநழுவ விடாது அஞ்சேலென்று ஆதரித்து, இம்மையிற் சகல பாக்கியமுந் தந்து, மறுமையில் ஈடும் எடுப்பும் இல்லாத மோட்சசாம்பிராச்சியத்தையும் அருளிச் செய்வார்' என்றும் சொல்லுகிறார்கள்.
நாத்திகன்: ஆட்சி என்ன?
ஆத்திகன்: தொன்றுதொட்டு நெடுங்காலமாக எவ்வகையோரும் கடவுளின் கட்டளைக்கு உடன்பட்டு, அவரையாசரித்து ஆராதித்து வருவதே.
நாத்திகன்: 'குத்தாத காதுக்கு ஊனமில்லையே'; அதுபோலப் பரமாத்மாவானவர், சீவாத்மாவுக்கு விதிவிலக்குகளைக் கற்பிக்காமலிருந்தால், அவ்வாத்துமா துக்கமின்றித் தன்னிஷ்டமாயிருக்குமே. 'சும்மா கிடக்கிற தாரையை ஊதிக்கெடுத்தான் தாதன்' என்பதுபோல, அதற்கு அவைகளைக் கற்பித்ததனாலல்லவோ 'கொப்பத்தில் வீழ்ந்த யானையும் வலையிற் சிக்கிய மானும் போல' வினை வசப்பட்டுச் சங்கடப்பட வேண்டி வந்தது.
ஆத்திகன்:ஒரு மண்டலாதிபதி தன் இராச்சியதார் தனது ஆணைக்கு அமைந்து நடக்கவிரும்புபவனே அல்லாமல், அவர்களை அவர்களிஷ்டப்படி விடமாட்டான் அல்லவா? அதுபோலக் கர்த்தாவும் சீவாத்துமாக்கள் தமது கட்டளைக் கமைந்து நடக்கவேண்டுமெனத் திருவுளங்கொண்டு அவைகளுக்கு விதிவிலக்குகளை ஏற்படுத்தி, மேற்கூறிய அரசனைப் போல விதிப்படி நடந்த ஆத்துமாக்களை இரட்சித்தும் நடவாதவைகளைத் தண்டித்தும் வருகின்றார்.
நாத்திகன்: 'சுமப்பவனல்லவோ அறிவான் காவடிப் பாரம்?' எது எப்படியானாலும் கடவுளுக்கென்ன? அவர் முகவுல்லாசமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது ஆத்துமாக்களுக்கல்லவோ பெரிய தலைச்சுமையா யிருக்கிறது? இதனால் அவருக்குத் தோஷம் சம்பவியாதா?
ஆத்திகன்: அரசன் தீங்கு செய்வாரைத் தண்டிப்பதனால் அவனுக்குத் தோஷமுண்டா? இல்லையே; அதுபோலக் கடவுளுக்குத் தோஷமில்லை. துஷ்டநிக்கிரகஞ் செய்வது பயிர்க்குக் களையெடுப்பது போலல்லவா? நல்லது, ஒருவனுக்குப் பால் பழங்களுடனே அறுசுவை யுணவும் அமைத்து உண்ணென்றால், அதை உண்டு பசி தணித்துக் கொள்வது தகுதியாயிருக்க, அவனுண்ணாமற் பசியால் வயிறெரிந்து வருந்தவேண்டிய தென்னை? புதுக்குடத்திற் பூரித்து வாசனையூட்டிக் குளிரவைத்து இளநீர் போல மதுரமாய்த் தெளிந்த நன்னீரைப் பருகக்கொடுத்தால், அதனைப் பருகித் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளாமல் நாவறழ்ந்து நெஞ்சுலர்ந்து உழலவேண்டியதென்னை? பூந்தேனொழுகிப் புதுமணங்கமழ, வண்டின மொய்த்து மகிழ்ந்திசைபாட, நாண்மலர் பூப்பப் பால்நிலாக் காய, அதுபோல, வெண்மணலார்ந்து தண்ணிழல் வாய்ந்து, தென்றல்வீசுஞ் செழும்பூஞ் சோலை இருக்க, அதன்கட் சேர்ந்து, தாபத்தை நீக்கிக் கொள்ள நினையாமல், 'உள்ளடிசிவக்க வெள்ளிடை வெயிலில், விதிர்விதிர்த்துடலம் வெயர்த்து வெதும்ப' ஓயாது நடந்து நாய்போல அலைய வேண்டியதென்னை? பரம காருண்யராகிய கடவுள், சீவாத்மாவானது மோக்ஷமாகிய பரமலாபத்தைப் பெற்றுச் சுகிக்கும் பொருட்டு அதற்கு உபயுக்தமாக எல்லாப் பிறப்பிலுஞ் சிறந்த மானிடப் பிறப்பையும், தியானிக்க மனதையும், தரிசிக்கக் கண்ணையும், அஞ்சலிக்கக் கையையும், வணங்கத் தலையையும் துதிக்க வாக்கையும் கொடுத்ததுமல்லாமல், விதிவிலக்குகளைத் தெரிந்துகொள்வதற்குக் கருவியாக வேதத்தையும், அவ்வேதத்தை ஆராய்ந்துணர்வதற்கு உணர்வையும், உணர்ந்தபடி ஒழுகத்தக்க சக்தியையும் கடாக்ஷித்தும் இருப்பதனால், அந்தப்படி நடந்து அப்புருஷார்த்தத்தைப் பெறுவது யுக்தமாயிருக்க, அவ்வாறு நடவாமல், ஆற்றைக் கடக்க ஓடத்தைக் கொடுத்தால் முகத்துவாரத்துக்கு நேரே அவ்வோடத்தை ஓட்டிக்கொண்டுபோய், ஆழமாகிய நடுக்கடலிற் பாய்ந்து, அவமே கவிழ்ந்து மாய்வாரைப் போல, கடவுளாணையை மீறிப் பேராசையாகிய பேய் பிடித்தாட்ட, துக்கத்துக் கிடமாகிய மண், பெண், பொன் முதலியவைகளைப் பெரும் பொருளாகக் கருதி, தனக்குக் கடவுளருளிய அகக்கரணம் புறக்கரணங்களையெல்லாம் வியர்த்தமாய் அவ்விஷயத்திற்கே அனுகூலமாம்படி உபயோகப்படுத்தி, கடவுள் விஷயத்தில் மிகவும் அபசாரப்பட்டு மகா அபராதியாகி, 'அடாது செய்தவர் படாது படுவர்' என்றபடி அதோகதியில் ஆழ்ந்து கெட்டொழிந்தால், அது அந்த ஆத்மாவின் குற்றமேயல்லாமல் கடவுளுக்கென்னை? குற்றமாமோ? அவரோ, இயல்பாகவே தோஷமில்லாதவர். அவர்மேல் தோஷஞ் சாட்டுவது பெருந்தோஷமே.

❖❖❖ஐயோ!நான்...

தொகு
நாத்திகன்: ஐயோ! நான் இடும்பைக் கீன்ற தாய்போன்ற குடும்பச் சேற்றிலாழ்ந்து, பெண்டு பிள்ளை பண்ட பதார்த்தங்களையே சதமென்றெண்ணி, விழலுக்கிறைப்பது போல, அவற்றிற்கே உள்ளநாளெல்லாம் உழைத்து, வைதிகத்தைப் பகைத்து, லௌகிக லோலனாய்த் தினையளவாவது தெய்வசிந்தை யில்லாமல் வியர்த்த னானேனே! பள்ளமிறைத்தவர்களுக்கல்லவோ பங்குண்டு? உழுகிற காலத்தில் ஊர்திரிந்து அறுக்கிற காலத்தில் அரிவாளையெடுத்துக் கொண்டு புறப்பட்டலா என்ன கிடைக்கும்? ஆயினும், இனிச் செய்வது என்னை?
ஆத்திகன்: உனக்கிதுவரையிலும் இல்லாத அனுதாபம் இப்பொழுதுதான் உண்டாயிற்று; அதனால் கடவுளுக்குச் சித்தந் திரும்பிற்றென்று விளங்குகின்றது; உனக்கு அனுகூலகாலம் பிறந்தது; நீ ஒன்றுசெய்; நீர்க்குமிழி போலவும் மின்னல் போலவும் அநித்தியமாகிய சரீர ஸ்திதியை நினைத்து,

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ

கழப்பின் வாரா கையுற வுளவோ -என்பதையும் உணர்ந்து, வறிதிராமல் இயன்ற அளவும் விரைந்து முயன்று, சற்குருவைக் கண்டடைந்து, அவர் சந்நிதியில் உனது குறைகளையெல்லாம் விண்ணப்பஞ் செய்து, அவரனுக்கிரகிக்கும்படி நடந்துகொண்டு, நல்லுபதேசம் பெற்று,

சிறுவரையே யாயினுஞ் செய்த நன்றல்லால்
உறுபயனோ வில்லை யுயிர்க்கு

-என்பதனையும் ஓர்ந்து, ஆசாரியர் நியமனப்படி தர்மந் தவறாது நடப்பதே நன்மையைப் பெறும் வழியாகும்' என்று ஆத்திகன் சொல்ல, அது நாத்திகனுக்குப் பசுமரத்திலறைந்த ஆணிபோல மனதில் தைத்துறுத்த, பள்ளமடையில் திருப்பிப் பாய்ச்சிய நீர்போல அக்கணமே அவன் அதற்குடன்பட்டு, மனந்திரும்பி, அவ்வண்ணமே செவ்வையாய் ஒழுகிக் கிருதார்த்தனாகி, சிலநாட் சென்ற பின்பு ஒருநாள் ஆத்திகனை வந்து கண்டான்.

அவன், இவனை உன்னுடைய க்ஷேமம் என்ன? என்று கேட்க,
ஐயா, ஆத்திகரே! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றது போலவும், பரிசவேதியைச் சேர்ந்த சகலமான பொருளும் பொன்னானாற் போலவும், உமது சேர்க்கையினால் எனது துர்க்குணமெல்லாம் நீங்கிச் சுகப்பட்டேன். நீர் என்னளவிற் செய்த உதவியோ மேகம்போலக் கைம்மாறு கருதாது செய்த உதவியாயிருக்கின்றது. இதைக்குறித்து உமக்கு நானென்ன செய்யப்போகிறேன் என்று சொல்ல,
ஆத்திகன், 'நீர் எனக்கொன்றும் செய்யவேண்டியதில்லை. மேகமானது உப்புக்கடல் நீரையுண்டு உவரை மாற்றி அதனை நன்னீராக்கிப் பெய்ய, அந்நீர் மறுபடியும் கடலிற்போய் விழுந்து பழையபடி உவர்நீராய் விடுவதுபோல, ஏதோ தெய்வகடாக்ஷத்தினால் நீர் இப்பொழுது அனுசரித்திருக்கிற நன்மார்க்கத்தை விட்டுக் குணப்பேதப்பட்டுப் பூர்வமிருந்த பாழ்ங்குழிக்கொப்பாகிய துன்மார்க்கத்திற்றானே பின்னும் பிரவேசித்துப் பதிதராய் விடாமல், வைராக்கிய சித்தத்தோடிருப்பீரானால், அதுவே எனக்கு லட்சாந்தரம்' என்ன, நாத்திகன் நல்லதென்று அந்தப்படியே மர்க்கட முஷ்டியாய்ப் பிடித்த பிடி விடாதிருந்து நெறிதவறாது வாழ்ந்தான்.

முதல் கட்டுரைதெய்வங் கொள்கை முற்றுப்பெற்றது.