விளையாட்டு உலகம்/அஞ்சாத அஞ்சல் காரன்
அஞ்சாத
அஞசல்காரன்!
கடிதங்களைக் கைகள் சுமந்து கொண்டிருந்தாலும்: கற்பனைக் கனவுகளை சுமந்து கொண்டு அவன் மனம் எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எதிரே யார் இருந்தாலும், அவன் இயம்பும் மொழிகள் ஒன்றைக் குறித்தே இருக்கும். ஒன்றையே குறிக்கும்.
‘எப்படியாவது ஒரு நாள் நான் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றே தீருவேன். உலகப் புகழ் அடைந்தே தீருவேன்' என்பதே அவனது பேச்சாக இருக்கும். அதுவே அவன் உயிர் மூச்சாகவும் இருந்தது.
அஞ்சல்காரனுகத் (Post-man) தனது தொழிலைச் செய்து கொண்டிருந்தாலும், அவனது ஆசை கொஞ்சமும் குறையவில்லை. கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது. ஆசை வெட்கமறியுமா என்பார்களே, அந்த நிலையில்தான் அந்த அஞ்சல்காரன் நிலையும் இருந்தது. செயலும் இருந்தது.
முன்னே பின்னே ஓட்டப் பந்தயங்களில் ஓடியபழக்கமோ பயிற்சியோ அவனுக்கு கிடையாது. வாழ்க்கையில் வசதியான நிலையிலும் இல்லை. அன்றாடம் உழைத்தால் தான் அரை வயிறு நிரம்பும் என்ற பொருளாதார நிலை. என்றாலும், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ளும் உறுதியில் உறுதியாகவே அஞ்சல்காரனின் நாட்கள் ஆரவாரமாகத் தொடர்ந்தன.
கியூபா நாட்டில் ஹவாரா என்ற இடத்தில் வாழ்ந்த இந்த அஞ்சல்காரனின்பெயர் பெலிக்ஸ்கர்வஜால் என்பதாகும்.இப்படியே பணியாற்றிக் கொண்டிருந்தால் தன் முயற்சி பலிக்காது என்று புரிந்து கொண்டான் பெலிக்ஸ். அதனால், முதல் வேலையாகத் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டான். மிகவும் தைரியமானவன் தான்.
வேலையிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. அதனால் வருமானம் மிகுதியாகுமா! 1904ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயம் செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் நடக்க இருந்தது என்று அறிந்தவுடன் அங்கு போக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அங்குப் போக வேண்டும் என்றால் பயணத்திற்குப் பணம் வேண்டுமே! துணிவு கொண்ட நெஞ்சம் துரிதமாக சிந்திக்கத் தொடங்கியது.
ஒரு நாள்-ஹவாராவிலுள்ள ஒரு புல்வெளி நிறைந்த மைதானத்தைச் சுற்றிச் சுற்றி பெலிக்ஸ் ஓடத் தொடங்கிவிட்டான். நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்ததைக் கண்டு, சிலர் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அதுவே பெருங் கூட்டமாகக் கூடத் தொடங்கிவிட்டது. கூட்டத்தின் முன்னே தன் கொள்கையான ஒலிம்பிக் பந்தயம் போவதைக் கூறி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.கேட்டவர்கள் அவனது கொள்கையைப் போற்றிப் பண உதவி செய்தனர். பணம் சேர்வதைக் கண்டு இவ்வாறாக அடிக்கடி பல இடங்களில் ஓடி ஓடிக் கூட்டம் சேர்த்து, காசு சேர்க்கும் கலையை விரிவுப்படுத்தினான். பெருமளவு இல்லாவிட்டாலும் போதிய அளவு கைக்குக் கிடைத்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, பயணத்தைத் தொடங்கிவிட்டான் பெலிக்ஸ்.
நியூ ஆர்லின்ஸ் என்ற இடத்தில் ஒரு நாள் தங்க நேரிட்டது. அங்கே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த உடன், பெலிக்சுக்கும் ஒரு அற்ப ஆசை வந்துவிட்டது. பணம் வைத்துத் தானும் ஆடினால் நிறைய பணம் வரும்.செலவுக்கும் அதிகம் கிடைக்கும் என்று எண்ணி ஆடினான். ‘உருட்டி விழிக்கப் போய் உள்ள விழியும் போச்சு’ என்ற பழமொழி போல, பணத்தை எல்லாம் இழந்து வீதியில் நிற்கும் நிலைக்கு ஆளானான் பெலிக்ஸ்.
கையிலே காசு இல்லையென்றாலும், கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் ஏறத்தாழ 700 மைல் துாரத்தை எப்படியும் ஒடிச் சென்று விடுவது என்று ஓட்டமாகவே ஓடினான். செயின்ட் லூயிஸ் என்ற நகரத்தை அடையும்போது, பெலிக்ஸ் பாதியளவு நலிந்தே போய்விட்டான்.மெலிந்தும் போய்விட்டான்.
அமெரிக்க ஓட்ட வீரர்கள் சிலர் இவனது பரிதாப நிலைக்கு இரங்கி, உணவும் உடையும் அளித்ததோடு, ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளவும் உதவி செய்தனர்.
ஓட்டப் பந்தய நாளும் வந்துவிட்டது. அவனும் ஓட வந்து விட்டான். பசியால் களைத்துப்போன உடல். பிய்ந்தும் நைந்தும் போன முழங்கால் வரை நீண்ட கால்சட்டை. முழங்கை வரை தொங்கும் சட்டை. கனத்த காலணி. ஒட்டப் பந்தயத்தில் முதல் முறையாகக் கலந்துகொள்ளும் பயம். கொடுமையான வெயில். இவற்றிற்கிடையே பெலிக்சின் பந்தயம் தொடங்கியது. நன்கு பயிற்சி பெற்ற உலகப்புகழ்பெற்ற 31 வீரர்களுடன் பெலிக்ஸ் ஓடத்தொடங்கினான். அது 26 மைல் கெஜ தூரம் ஒடுகின்ற மாரதான் போட்டியாகும்.
முன்பின் ஓடிபழக்கமில்லாத ஓட்டம். இருந்தாலும், அஞ்சா நெஞ்சுடன் ஒடிக் கொண்டேயிருந்தான். ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அரை குறை பாஷையோடு வேடிக்கை பார்ப்பவர்களிடம் பேசிக் கொண்டும் கேலி செய்து கொண்டும் ஓடினான். இடையிலே பசி வந்துவிட்டது. என்ன செய்வது! கைக்கெட்டும் உயரத்தில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பச்சை ஆப்பிள் காய்கள் சிலவற்றைப் பறித்துத் தின்று கொண்டே ஓடினான். பசி மறைந்து விடவில்லை. கொஞ்சம் குறைந்ததுபோல் தோன்றியது.
வெயிலின் வெம்மையைத் தாங்காமல், பாதிக்கு மேற்பட்ட வீரர்கள் பாதியிலே படுத்துவிட்டனர். என்றாலும் பெலிக்ஸ் ஓடிக்கொண்டே இருந்தான். வெயில் கொடுமையும், மற்ற காரணங்களும் அவனுக்கு வயிற்று வலியை உண்டாக்கிவிட்டாலும்ஓட்டத்தை விடவில்லை. கீழே விழவில்லை. பயிற்சி பெற்ற ஒட்டக்காரர்களில் பதினேழுபேர் விழுந்ததும் அன்றி, பந்தயத்திலிருந்தும் விலகிக் கொண்டனர்.
அஞ்சாத அஞ்சல்காரன் அழகாக ஓடிவந்து, அரங்கத்துள் நுழைந்து முடித்தபோது, நான்காவதாக வந்ததை அறிந்து, கைதட்டி வரவேற்றனர் பார்வையாளர்கள். அவனுக்கு வெற்றிப் பதக்கம் இல்லைதான். என்றாலும், பெலிக்சின் அஞ்சாத நெஞ்சத்தை அகிலமே வியந்து பாராட்டியது.
26 மைலுக்கு மேல் உள்ள ஓட்டத்தைத் தொடங்க 700 மைல் துாரம் ஓடி வந்து கலந்து கொண்ட வீரனின் வரலாறு, மறக்க இயலாத காவியமாக அல்லவா மாறிவிட்டது!
கியூபா நாட்டின் ஒரே பிரதிநிதியாக கலந்து கொண்ட பெலிக்ஸ், மாரதான் பந்தயத்தின் மறக்க முடியாத வீரனாகிவிட்டான். ‘ஆண்மை மிகு பந்தயங்களுக்கு ஊக்கமும், உண்மையான உழைப்பும் இருந்தால்போதும், உலகப்புகழ் பெறலாம்’ என்ற உயர்ந்த தத்துவத்தை உலகத்திற்கு வழங்கும் அஞ்சாத அஞ்சல்காரன் ஆனான்.
நாம் அந்த அரிய தத்துவத்தை ஏற்று வாழ்வில் மகிழ்வோமாக!