விளையாட்டு உலகம்/அது தான் அதிர்ஷ்டம்!

அதுதான்
அதிர்ஷ்டம்!

1960ம் ஆண்டில் ஒரு நாள்!

இந்தியர்கள் இதயமெல்லாம் இன்பமழை. எழுச்சி மிக்கக் களிநடனம். தலைநிமிர்த்தி நடக்கவைக்கும் வீர நிலையின் இசைப் பாட்டு. இருக்காதா என்ன? ஒலிம்பிக் பந்தயத்தில் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ஒன்றில், கடைசி ஆறு ஓட்டக்காரர்களுக்குள் ஒருவராக ஒரு வீரன். அதுவும் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் செல்லுகின்ற தகுதியுடன் இந்திய வீரன் இருக்கிறான் என்றால், இன்ப மழை பொழியாதா என்ன?

யார் அந்த வீரன்? எவ்வாறு அந்த நிலைக்கு உயர்ந்தான் என்று பார்த்தோமானால், உப்பரிகையிலே பிறந்து, ஒய்யாரத்தில் வளர்ந்து, உலகை அனுபவிக்க வந்த சிங்காரக் குடியில் தோன்றிய சீமான் அல்ல அந்த வீரன். பட்டணத்திற்கும் அப்பால் ஒதுங்கிக் கிடக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். தந்தையோ ஏழை. படிப்பறியா விவசாயி. மண்சுவராலான ஒரு சிறு குடில். அந்தக் கிராமத்திலேயே படிப்பு வாசனை இல்லையென்றால், இந்தக் குடும்பத்தில் மட்டும் வந்து கொப்புளிக்குமா என்ன?

தன் வீட்டிலிருந்து 2½ மைலுக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் படிக்கப் போகின்றான் அந்த சிறுவன். நான்கு வகுப்பு முடிப்பதற்குள் வட இந்தியாவில் அடிக்கடி மாறும் வெப்பமும் குளிரும் பனியும் அவனை வாட்டி வதைத்து விட்டன. என்றாலும், துன்பத்தைத் துடைத்து விட்டுக்கொண்டு நான்காம் வகுப்பை முடித்துக்கொண்டு, வேறு ஊருக்குப்படிக்கப்போகிறான். அந்த ஊரின் துாரம் 7½ மைல். தினம் 15 மைல் துாரம் நடந்து, அறிவுதரும் கல்வியை ஆசையுடன் கற்றான்: இதற்கிடையிலே, இந்தியா இரண்டாகப் பிரிகிறது. பிரிவினை. இச்சிறுவனின் கிராமத்தில் பல அலங்கோல நிகழ்ச்சிகள். தலைகீழ் மாற்றம். கிராமம் அழிக்கப்படுகிறது. தப்பித்தோம் பிழைத்தோம் என்ற உணர்வுடன் சிறுவன் வேறு பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறான்.

ஏழைச் சிறுவன் தானே! உணவுக்கு எங்கே போவான்? சிப்பாய்களின் காலணிகளுக்கு பாலிஷ் போடுகிறான் காசு வாங்காமல். ஏன் எனில் பசிக்காக, ரொட்டிக்காக அல்லவா அந்தப் பணியைச் செய்கிறான். ரொட்டியை பதிலாகப் பெற்றுத் தான் வளர்கிறான். இல்லை. தன்னை வளர்த்துக் கொள்கிறான். என்னதான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், காலம் காத்துக் கொண்டா இருக்கும்! காலம் அவனை வாலிபனாக மாற்றி வைக்கிறது

எப்படியும் ராணுவத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறான். சிபாரிசு இல்லாததால், அந்த வாய்ப்பும் அவனுக்கு எட்டாக் கனியாகப் போய் விடுகிறது. அதற்காக சும்மா கிடந்திட முடியுமா? ஆட்டோ மெக்கானிக்காக வேலைபார்க்கிறான். மாதம் 15 ருபாய் சம்பளத்தில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து தன் குடும்பத்தையும் காக்கிறான். காய்ந்த ரொட்டியும் வெங்காயமும் தான் அவன் உணவாகத் தினம் கிடைக்கிறது. அவன் பணியும் வாழ்க்கையும் தொடர்ந்து செல்கிறது. வறுமைச் சுழலில் இருந்து விடுதலை கிடைக்கும் நாளும் வருகிறது.

அந்த இளைஞனின் சகோதரனின் சிபாரிசால் 1952ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சிப்பாயாகப் பணிபுரியும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. லாட்டரிப் போட்டியில் லட்சாதிபதியானவன் போல் அந்த இளைஞன் மகிழ்கிறான். மாதச் சம்பளம் 39 ரூபாய் தான் என்றாலும், மகிழ்ச்சியடைகிறான். 'போதும் என்ற மனமே பொன் செயும் மருந்து' என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறான்.

எப்படியும் புகழ்பெற்று சிறப்படைய வேண்டுமென்ற ஆர்வத்திற்கு, விளையாட்டுத்துறை வழிகாட்டி அழைக்கிறது. ஓடும் களமே உயிர் மூச்சாகக்கொண்டு உண்மை அன்புடன் அடைக்கலம் புகுந்து விட்டான் இளைஞன். ஒட்டமே அவனது வாழ்க்கையின் லட்சியமாக வாழ்வின் ஜீவனாகத் தோன்றிவிட்டது. உலக வெற்றிவீரன் ஆவதையே, இரவும் பகலும் காணுகின்ற கனவாகவும் மாறிவிட்டது.

இடைவிடாப்பயிற்சி. மழை, வெயில், பனி, குளிர் என்று பாராது அவன் தொடர்ந்து செய்த பயிற்சி- இளைப்பிலும் களைப்பிலும் சலித்துக் கொள்ளாமல் சிரமேற்றுச் செய்த பயிற்சி, அவனை இரத்த வாந்தி எடுக்கின்ற நிலைக்கு ஆளாக்கிய பொழுதுங்கூட, அந்த இளைஞன் நிறுத்திவிடவில்லை. ஓடினான். ஓடினான். ஓடிக் கொண்டே இருந்தான்.

1957ம் ஆண்டு வந்தது. இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த அகில இந்தியப் போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 21.5 வினாடியிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 47.2 வினாடியில் ஓடியபோது, இந்திய விளையாட்டுத்துறை வல்லுநர்களின் ஆழ்ந்த கவனம் அந்த இளைஞனை நோக்கிப் பாய்ந்தது. 1958ம் ஆண்டு 46.6 வினாடி என்று 400 மீட்டர் தூரத்தை ஓடியபோது, இந்தியாவில் இந்த வீரனுக்கு இணையான ஓட்டக்காரர் யாரும் இல்லை என்று போற்றிப் பாராட்டி மகிழ்ந்தது.

1953ம் ஆண்டு ஆசியா கண்டத்திற்கான போட்டி வந்தது. டோக்கியோவில் நடந்த போட்டியின் போது, 400 மீட்டர், 200 மீட்டர் இரண்டிலும் தங்கப்பதக்கம் பெற்று, ஆசியாவிலேயே மிக மிகச் சிறந்த விரைவோட்டக்காரர் என்ற சீரிய புகழைப் பெற்றான் அந்த இளைஞன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பார்களே, அந்த நிலையில் இளைஞனின் பயிற்சி மெருகேறியது. வெற்றியும் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. ஜப்பான் தேசத்து சக்கரவர்த்தியின் ஒப்பற்ற பாராட்டும் கிடைத்ததுமில்லாமல், ஆசியாவிலே சிறந்த ஓட்டக்காரர் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டு இந்தியா வந்தபோது பிரதமர் நேரு அவர்களும், ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களும் போற்றி மகிழ்ந்தனர். சிப்பாயாக இராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞனின் சேவையைப் போற்றி Jco என்ற அந்தஸ்துக்கும் உயர்த்திக் கெளரவித்தனர்.

இந்த நிலையில் தான், 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் பந்தயமும் வந்தது. அதற்குள்ளே அந்த மாவீரன் 400 மீட்டர் ஓட்ட சாதனையானது 45.9 வினாடிக்கு வந்து விட்டது. ஒலிம்பிக் பந்தயத்திற்கு முன்னே, பிரான்சு நாட்டில் ஓடிய ஓட்டத்தில் 45.8 வினாடியில் ஓடி உலக சாதனையைப் பொறித்ததைக் கண்டு, உலகமே அந்த இளைஞனை வாழ்த்தி வரவேற்றது. 'ஒலிம்பிக்கிலும் வெற்றிவீரன் இவனே' என்று கட்டியம் கூறியது. பத்திரிக்கைகள் எல்லாம் பலபடப் பாராட்டின. பிற வீரர்களும் ஆமோதித்தனர்.

400 மீட்டர் ஓட்டத்தில் கடைசி 6 பேராக நின்ற பொழுது, இந்த இளைஞனே வெல்லுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா எங்கனும் ஏக்கத்துடனும் உற்சாகத்துடனும் எதிர் நோக்கிக் காத்திருந்தது. ஓட்டம் தொடங்கிவிட்டது. எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிய அந்த வீரன், பிறகு வேகமாக ஓடலாம் என்று எண்ணி, சிறிது வேகத்தைத் தளர்த்தியபோது, அதுவே பெருந்தவறாகப் போய்விட்டது. இவன் பின்னே வந்த மூன்று வீரர்கள், திடீரென்று பாய்ந்து ஓடி முன்னேறத் தொடங்கினர். 300வது மீட்டர் தூரத்தில் இந்த நிலை ஏற்பட்டு விட்டது. பிறகு என்ன முயன்றும், அவர்களைக் கடந்திட முடியவில்லை. வெல்லவும் முடிய வில்லை.

நான்காவது இடத்தையே அந்த வீரனால் பெற முடிந்தது. ஒலிம்பிக் சாதனையை முறியடித்து விரைவாக ஓடியபோதும், ஒரு பதக்கம் கூட வாங்க முடியாத நிலையல்லவா ஏற்பட்டுவிட்டது? தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த பாரதம், தாங்க முடியாதவேதனைக் குள்ளாகியது. அனைத்து வாய்ப்பும் இருந்தும், ஆற்றல் இருந்தும், சூழ்நிலை அமைந்தும், தங்கப் பதக்கம்.

கிடைக்கவில்லையே! அதுதான் நம் அதிர்ஷ்டம்!

காய்ந்த ரொட்டிகூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட நிலையில் வளர்ந்த ஒரு வீரன், இந்த உலகமே பாராட்டும் வண்ணம் உழைப்பால் உயர்ந்தும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதே! யாரை நோக! அந்த அற்புத இளைஞன் தான், உலகத்தாரால் பறக்கும் சீக்கியர் என்று புகழப்பெற்ற மில்காசிங்.

‘எத்தனையோ இன்னலும் இடர்ப்பாடும் இருந்தாலும் எதிர்த்தாலும், இலட்சியத்தை உயிர் மூச்சாகக் கொண்டவர்களை எதுவும் செய்யமுடியாது’ என்று உலகுக்கு உணர்த்திய மாவீரன் மில்காசிங்கின் அதிர்ஷ்டம், அவ்வளவுதான் என்றாலும், நாம் இன்னும் முயல்வோம். ஆயிரமாயிரம் மில்காசிங்குகளை உருவாக்க முயல்வோம். அரிய உழைப்பிற்கு அதிர்ஷ்டம் நிச்சயம் ஒருநாள் தலைதாழ்த்தியே தீரும். அந்தக் காலமும் வரத்தான் போகிறது!