விளையாட்டு உலகம்/இதுவன்றோ இதயம்!
இதுவன்றோ
இதயம்!
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பேரார்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் நடக்கும் 34வது உலக மேசைப் பந்தாட்டப் போட்டியைக் காண் பதற்காகத்தான். மேசைக்கு முன்னே, இறுதி ஆட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் இரண்டு வீரர்களும் போட்டிக்குத் தயாராக இருக்கின்றனர்.
ஒரு புறம் முப்பது வயது நிரம்பிய ஜப்பானிய வீரர். பெயர் மிட்சுரு கோக்னோ. 1967ம் ஆண்டு ஒரு முறை உலக வெற்றி வீரர் பட்டத்தை வென்றிருக்கும் பெருமையும் புகழும் உடையவர். 1975ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த உலக மேசைப் பந்தாட்டத்திலும் பங்குகொண்டு ஆடி, நிறைய அனுபவம் பெற்று விளங்குபவர்.
மறுபுறம் 21 வயதான சீன வீரர். பெயர் யாகுவாகுவா. உடற்கல்விப் பயிற்சிப் பெறும் மாணவ னாகிய அவர், இளமை ததும்பும் உடற்கட்டுக் கொண்டவர்.போட்டி தொடங்கிவிட்டது. கடுமையான போட்டி தான். யார் வெல்வார், யார் தோற்பார் என்பதை யாரும் நிர்ணயித்துக் கூறமுடியாத அளவுக்கு இருவரும் சம ஆற்றல் படைத்தவர்கள்தான்.
முதல் 'முறை ஆட்டத்தில்’ (Game), இளைஞரான யாகுவாகுவா எந்தவித சிரமமும் இன்றி, கோக்னோவை 21-17 என்ற வெற்றி எண் கணக்கில் வென்றார். இரண்டாம் 'முறை ஆட்டம்' தொடங்கியது. கோக்னோ 7-4 என்ற வெற்றி எண் (Point) கொண்டிருந்தபோது, யாகுவாகுவா சர்வீஸ் போடுகிறார். கையில் பந்தை மறைத்து சர்வீஸ் போடுகிறார் என்று குற்றம் சாட்டி இவ்வாறு சர்விஸ் போடுவது தவறு என்று நடுவர் கூறுகிறார். ஒரு முறையல்ல, இவ்வாறாக இரண்டாவது முறையும் குற்றம் சாட்டப்படுகிறது. அதனால் 2 வெற்றி எண்கள் எதிராளிக்குப் போய்ச் சேருகின்றன. இப்பொழுது ஜப்பானிய வீரருக்கு 9—4 என்று வெற்றி எண் ஏறுகிறது.
அதற்குப் பிறகு, சீன வீரரின் ஆட்டத்தில் சிறிது தடுமாற்றம். எதிர்பாராத குழப்பம். முன்பு ஆடியது போல அவர் ஆட்டத்தில் வேகமோ விறுவிறுப்போ இல்லை. எளிதாக ஜப்பானிய வீரரிடம் தோற்றுப் போகிறார். அதற்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை ஆட்டங்களிலும் தோற்று, உலக வெற்றி வீரர் பட்டத்தை இழக்கிறார்.
போட்டி முடிகிறது. வென்ற வீரர் கோக்னோ கூறுகிறார். "நடுவர் இடைபுகுந்து இரண்டு முறை குற்றம் சாட்டிவிட்டதால்தான், தன் எதிராட்டக்காரர் தோற்கக் காரணமாக அமைந்துவிட்டது" என்று தான் நினைப்பதாகத் தெரிவிக்கிறார். தோற்ற வீரர் கூறுகிறார். “அந்த நடுவரின் குறுக்கீடுதான் தன் தோல்விக்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. என் ஆட்டத்தில் ஏதோ சில குறைகள் இருக்கின்றன. அவை என்னவென்று எனக்கே தெரியவில்லை. அவற்றை நான் கண்டுபிடித்து, திருத்திக்கொண்டு, எனது திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.”
அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.
“தனது கடமையை தைரியமாக, பரிபூரணமாக நிறைவேற்றிய நடுவரை நான் வியந்து பாராட்டுகிறேன்.”
தோற்றவர்கள் எல்லோரும், நடுவர்களே தாங்கள் தோற்கக் காரணம் என்று கூறி, கடித்துக் குதறுவதையும், ஓட ஓட விரட்டுவதையும், பொல்லாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதையும் கேட்டுப் புளித்துப் போயிருந்த நமக்கு, சீன வீரரின் செம்மாந்த இதயமும் புரிகிறது. கடமை உணர்வுடன் பொழிந்த பண்பான வார்த்தைகளை கேட்கத் தேனாமிர்தமாக இனிக்கிறது.
நல்ல உடல் நல்ல மனம் என்பது தானே நல்லவர்கள் கொள்கை. இதைப் போன்ற பண்பான இதயத்தைத்தானே விளையாட்டுலகம் உருவாக்கித் தருகிறது என்கிறார்கள்.
அத்தகைய அருமையான இதயத்தை ‘இதுவன்றோ இதயம்’ என்று பாராட்டுகிறோம். விளையாட்டில் பங்கு பெறுகிற அனைவரும் இதுபோன்ற இதயம் பெற வாழ்த்துகிறோம். இறைவனை வணங்குகிறோம்.