விளையாட்டு உலகம்/இனிக்காத இன்பம்!

இனிக்காத
இன்பம்!

வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்கள் எல்லோரும் விவரிக்க இயலாத ஒருவித மனோநிலையில் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக் பந்தய அரங்கிலே கூச்சலுக்குப் பஞ்சமா என்ன? அவர்களுக்கும் பொழுது போயாக வேண்டுமே!

ஆனால், அங்கு கத்தியவர்கள் காரணத்தோடுதான் அதைச் செய்துகொண்டிருந்தார்கள். உலக நாடுகளிலேயே சிறந்த வீரர்கள் கலந்துகொள்ளும் உக்கிரமமான போட்டிகள் நடைபெறுகின்ற இடம் அல்லவா அது! அவர்களை உற்சாகப்படுத்தவா அந்தச் சத்தம் என்றால், அதுவும் அல்ல! அநியாயத்தை எதிர்த்தே அந்த ஆர்ப்பாட்டமான சத்தம் சமுத்திரம்போல் எழும்பிக் கொண்டிருந்தது. அப்படி என்ன அநியாயம் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நடக்க, என்று கேட்க வேண்டும்போல் தோன்றுகிறதல்லவா? இப்படி ஒரு அநியாயம் எந்தப் போட்டியிலும் நடக்கவே இல்லை. என்று அவர்கள் பேசிக்கொள்வதுபோல் உங்களுக்கும் கேட்குமே!

ஆமாம்! அவர்கள் தங்களுக்குள்ளேயும் பக்கத்தில் உள்ளவர்களுக்கிடையிலும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

5000 மீட்டர் தூரம் ஓடுகின்ற ஓட்டப் போட்டி அது. சிறந்த வீரர்கள் பலர் ஓட்டத் தொடக்கத்திலே கலந்து கொண்டார்கள். 12 1/2, ரவுண்டுக்குமேல் ஓடக் கூடிய துாரம் அல்லவா! அத்தனை சுற்றுக்களையும் சுற்றிவிட்டு ஓட்டத்தை முடிக்கவேண்டிய துாரமும் குறைந்து, வெற்றி பெறவேண்டியவர்கள் யார் என்று கண்டுகொள்ள வேண்டிய நிலையில் இரண்டு வீரர்கள் ஒடி வந்து கொண்டிருக்கும் பொழுதுதான், அந்த சூழ் நிலை அனலாகக் காய்ந்தது.

யார் வெல்லப் போகிறார் என்று யாராலும் உறுதி யாகச் சொல்ல முடியாத அளவில் இருவரும் ஓடி வந்தார்கள். முதலாவதாக ஓடிவருகின்ற வீரனின் பெயர் லாரி லெட்டினன் (Lauri Lehtinen) எனும் பின்லாந்து வீரன். அவனது பின்னால் ஓரடி இடை வெளியில் ஓடிவரும் வீரன் பெயர் ரால்ப் கில்(Ralph Hill) என்பதாகும்.

அமெரிக்க நாட்டிலே லாஸ்ஏஞ்செல்ஸ் எனும் நகரத்திலே 1932-ம் ஆண்டு நடைபெறுகிற ஒலிம்பிக் பந்தயம் அது. தன் நாட்டு வீரன் தங்கப்பதக்கம் பெறும் நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட பார்வையாளர் கூட்டம், படு பயங்கரமாகக் கத்திக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், பின்லாந்து வீரனுக்கும் அமெரிக்க வீரனுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எல்லைக் கோட்டைக் கடக்க இன்னும் ஒருசில கெஜ தூரம்தான். பின்லாந்து வீரன் முன்னே ஓட ஓரடி இடைவெளியில் அமெரிக்க வீரன் பின்னே வர, ஆதரவாளர் கூட்டம் ஆரவாரம் எழுப்பியவுடன், அமெரிக்க வீரன் உற்சாகம் பெற்று முன்னே ஓட முனைந்து விட்டான்.

லாரி லெட்டினனைக் கடந்துவிட்டால் முதலாவதாக வந்துவிடலாம் என்ற நினைவுடன், லாரியின் இடது புறமாகக் கடந்து ஓட முயன்றான் ரால்ப், ஆனால் லாரியோ, ‘நம் ஊர் லாரிக்காரன்போல’ வழி தரவில்லை. முன்னே போகாமல் அந்தப்புறம் ஒடினான். அதனால் வழி கிடைக்காமற் போகவே, லாரியின் இடது புறமாகக் கடந்து ஓட முயன்றான்.

இப்பொழுது இடதுபுறமாக குறுக்கே சென்று, முன்னால் ஓட முடியாதவாறு மறைத்துக் கொண்டான் லாரி. இந்த இரு முயற்சிகளையும் கெடுத்துவிட்ட நிலையில் ஓட்டமும் முடிவடைந்துவிட்டது. பின்லாந்து வீரனான லாரி லெட்டினன் முதலாவதாக வந்தான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. லாரியும் தான்தான் முதலாவதாக வந்திருக்கிறோம் என்று அறிந்து மகிழ்ச்சியடைகின்ற வேளையில்தான், ஒலிம்பிக் பந்தய அரங்கம் முழுவதும் ஓங்காரக் கூச்சல் விண்ணைப் பிளக்கும் வண்ணம் வந்து கொண்டிருந்தது.

‘விதியை மீறிய வீரனுக்கா முதல் பரிசு?’ அடுத்த வரை தடைசெய்து ஓடியது அநியாயம் அல்லவா?

சட்டப்படி அந்த வீரனை ஓட்டப்போட்டியிலிருந்து நீக்கி விட வேண்டாமா? என்பதுதான் பார்வையாளர்களின் குரல்களாக ஒலித்தன. அப்பொழுது ஓர் அறிவிப்பு ஆங்கே எழுந்தது. மகுடி கேட்ட நாகமென மக்கள் கூட்டம் அமர்ந்தது. அப்படியென்ன ஆட்களை மடக்கும், அடக்கும் அறிவிப்பு அது!

‘வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் வீரன் நமது விருந்தினன்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. விருந்தினரை மதிக்கும் நாட்டினர், விருந்தினர் என்றதும் வெறுப்பை உதறி விட்டுவிட்டு, அவன் பெற்ற சிறப்புக்காகப் பாராட்டிக் கை தட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கிடையில் லாரியும், ரால்ப்கில்லும் ஓடிய நிகழ்ச்சியைப் படம்போட்டுக் காட்ட, அதை லாரிபார்க்க வேண்டிய வாய்ப்பும் கிட்டியது. அதில், தான் ரால்ப்கில்லை எவ்வாறு முன்னே ஓடவிடாமல் தடுத்திருக்கிறோம் என்பதைப் பார்த்தவுடன், லாரிக்கும் வெட்கம் மேலிட வேதனை மிகுதியாயிற்று. தவறாக நடந்துகொண்டது பற்றி வேதனை மீறிட, தனக்கு அவ்வாறு பெற்ற தங்கப்பதக்கம் வேண்டாமென்று கூறும் நிலைமையில் லாரி வந்துவிடவே, தன்னை மீறிய களைப்பில் நேர்ந்த தவறை நினைத்து மிகவும் வருந்தினான். ‘வேறு எங்கிருந்தும் அதற்கான எதிர்ப்பு வரவில்லை’ என்றதால் லாரியின் கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

பிறகு, பதக்கம் பரிசளிக்கும் விழா நடைபெற்ற போது, முதலாவது இடத்தில் நின்ற லாரி, இரண்டாம் இடத்தில் கின்ற ரால்ப்கில்லை அழைத்துத் தன்னுடன் வந்து மேலே நிற்குமாறு அழைத்தபோது, ரால்ப் ஏறி வராமல், லாரியே வெற்றி வீரன் என்று வற்புறுத்தினான். மன உறுத்தலில் இனிக்காத இன்பமுடன் லாரி தங்கப் பதக்கம் பெற்றபோது, மன மகிழ்ச்சியுடன் எந்தவித வேதனையும் இல்லாமல் ரால்ப் வெள்ளிப் பதக்கம் பெற்றபோது, அவனது பெருந்தன்மையைப் போற்றி, அரங்கமே கைதட்டி வரவேற்று வாழ்த்தியது.

ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாகப் புறப்பட்டு, தவறுக்கு இடையே தகுதிபெற்று, மனமாற்றம் நிகழவேண்டிய நேரத்தில் மாறிவிட்டு, களைப்பும் இளைப்பும் தாக்கும்போது ஏற்பட்டது தவறு அல்ல என்று மன்னித்து மறந்த ரால்ப்கில்லும், தவறுக்கு வருந்திய லாரி லெட்டினனும் அன்றிலிருந்து ஆருயிர் நண்பர்களாக மாறிவிட்டனர்.

சிறிய தவறுக்கே சீறிப் பாயும் நாம், சரித்திரம் படைக்கவிருந்த பாதையை மறைத்துப் பெருங்குற்றம் செய்தவரை மன்னித்த மனத்தின் மாண்பினை எண்ணுவோம். விளையாட்டு உலகம் வழங்கும் இன்பச் செய்தியான பண்புச் செய்திகளைப் படித்தும் கேட்டும் பின்பற்றி பெருவாழ்வு வாழ்வோமாக!