விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/இவரா என் தந்தை
‘எப்பாடு பட்டாவது என் தந்தையை பார்த்தே தீருவேன்' என்று அந்த சிறுவன் வீரசபதம் பூண்டான். தன் தாயை மட்டுமே அவன் அறிவான். தந்தையோ வேறு தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டார் என்ற செய்தி தெரியும். தந்தையின் பெயர் தெரியும். ஆனால் முகம் மட்டும் தெரியாது என்ற நிலையில்தான் அவன் வாழ்ந்தான். ஏக்கமே நிழலாக வாழ்ந்தான்.
ஏனென்றால், அவன் தன்தாய் வயிற்றில் இருக்கும் பொழுதே தந்தை வேறு தேசத்திற்கு விரட்டப்பட்டார். வேறு நாடு சென்ற தந்தையை எப்படி சந்திப்பது? எவ்வாறு சந்திப்பது? அதற்கு யாரை துணைதேடுவது? அதற்குரிய பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று எண்ணி எண்ணி ஒருமுடிவுக்கு வந்தான் அந்த சிறுவன்.
சிறந்த விளையாட்டு வீரனாக மாறிவிட்டால், வெளி நாட்டுக்குப் போய் வர எளிதாக முடியும். செலவும் அதிகம் ஆகாது. மதிப்பும் மரியாதையும் கிடைப்பதுடன், மனதிலுள்ள ஆசையையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தான்.
தனக்குப் பிடித்த விளையாட்டு ஒன்றை தேர்ந் தெடுத்தான். கைப்பந்தாட்டத்தினை பயில ஆரம்பித்தான். அல்லும் பகலும் அதே நினைவாக இருந்தான். நடந்தான். பயின்றான், முயன்றான். இறுதியில் அவன் முயற்சி வென்றது. கனவு பலித்தது. சீனாவின் கைப்பந்தாட்டக் குழுவில் ஒரு வீரனாக சேர்த்துக் கொள்ளப்பட்டான் அந்த வாலிபன்.
தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரத்தில் நடக்கப் போகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சீனாவின் பந்தாட்டக் குழு புறப்பட்டபோது, அவனது மனம் கடலலைபோல் முழங்கிக் கொண்டேயிருந்தது. அந்த முழக்கம் விரட்டியது. தாய்லாந்துக்கும் வந்தாகிவிட்டது.25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடிதம் மூலமாகவே தொடர்பு கொண்டுவந்த தந்தையை காணப் போகிறோம் என்ற நினைவிலேயே வந்த அந்த வாலிபன், தந்தையைக் கண்டதும் தாவிக்குதித்தான். இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். ஆனந்தக் கண்ணிர் அருவியாக வழிந்தது. 'இந்த ஜென்மத்தில் இப்படி ஓர் வாய்ப்பு 'என்று இருவரும் பேசிப்பேசி இன்பத்தை பகிர்ந்து கொண்டனர்.
தன் தந்தை வேறு ஒருத்தியை மணந்து, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையாக ஆனபோதிலும் அவன் வருந்தவே இல்லை.
'இவரா என் தந்தை! என்று இகழவில்லை... எங்கே எப்படி வாழ்ந்தாலும் இவரே என் தந்தை! அதுவே எனக்குப் போதும்' என்று சொல்லி மகிழ்ந்தான் . இப்படி வாய்ப்பளித்த விளையாட்டை வாழ்த்தினான். 'விளையாட்டு உடலை மட்டுமா வளர்த்துக் காப்பாற்றுகிறது? உறவையும் வளர்த்துக் காப்பாற்றும். ஒப்பற்ற புகழையும் வளர்த்துக் காப்பாற்றும் என்ற உண்மையையும் கண்டு கொண்டேன்' என்று வாயினிக்கக் கூறினான் வாங்-காங்-கெங் என்ற அந்த வீரன்.
சீனாவில் இருந்த மகனையும், தாய்லாந்தில் இருந்த தந்தையையும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க வைத்து பேசவைத்த விளையாட்டின் பெருமைக்கு ஈடு இணை ஏது? விளையாட்டு உலகில் வாங்-காங்-கெங் போன்று எத்தனையோ வீரர்களையும், வீராங்கனைகளையும் நாம் இனி சந்திக்க இருக்கிறோம் . உண்மையாகவே விளையாட்டினை விரும்பி, உற்சாகமாக உழைத்தும் உறுதியாக முயற்சி செய்தும் பலர் உயர்ந்தார்கள். உன்னதமான புகழையும் அடைந்தார்கள் . வாழ்க்கையிலும் போட்டிகளின் போதும் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை இனி தொடர்ந்து நாம் காண்போம்.