விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/விளையாட்டும் அரசியலும்

2. விளையாட்டும் அரசியலும்!

அமெரிக்கநாட்டு ஜனாதிபதியாக ஃபோர்டு இருந்த காலத்தில் ஒருநாள். வாஷிங்டனில் உள்ள ஓரிடத்தில் ஜனாதிபதியை சந்திக்கக் கால்பந்தாட்ட வீரர் பீலி என்பவர் அழைக்கப்பட்டிருந்தார். பிரேசில் நாட்டு வீரரான அவர், அமெரிக்க நாட்டின் நியூயார்க் காஸ்மாஸ் என்னும் குழுவிற்காக ஆடவந்திருந்தார். அவரை சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அழைத்திருந்தார்.

அரசியல் தலைவரும் விளையாட்டு வீரரும் மாளிகையின் முன்புற புல்தரையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களது, முன்னே கால்பந்து ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபடி ஃபோர்டு பேசினார்.

'நமக்கு முன்னே புகைப்படக் காரர்களும் பார்வையாளர்களும் நிற்கின்றார்கள் - நான் பந்தை உதைக்கப் போவதைப் பார்க்கவும், படம் பிடிக்கவும். நான் என்ன தலையாலா செய்யப்போகிறேன். காலால்தான் உதைக்கப் போகிறேன். என்று தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார்.'

மனம் விட்டுப் பேசும் அரசியல் தலைவரின் அன்பு முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் பீலி. விளையாட்டு தன்னை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது பார்வையாளர்களில் ஒரு ரசிகர் தடுப்புக் காவலையும் மீறி, கையெழுத்து வாங்க ஒரு நோட்டுடன் ஓடி, கால்பந்தாட்ட வீரர் பீலியிடம் நீட்ட, எல்லோருமே அயர்ந்து போய்விட்டனர்.


உலகில் தலைசிறந்த நாடு அமெரிக்கா. அமெரிக்க ஜனாதிபதியே முதல் குடிமகன், என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ஃபோர்டிடம் கையெழுத்து வாங்க முயற்சிக்காது. விளையாட்டு வீரரிடம் கையெழுத்து வாங்கவிரும்பியதைப் பார்த்துப் ஃபோர்டு சொன்னார்.

'இங்கே யாருக்குப் புகழ் அதிகம் என்று பார்த்தீர்களா? எங்களுக்குத்தான் என்று பீலியைப் பார்த்து பெருமையாகக் கூறினார் ஃபோர்டு. தான் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டாலும் உண்மையையும் மக்கள் உணர்வையும் மதித்த ஃபோர்டின் பெருந்தன்மைதான் என்னே?

பிரேசில் நாட்டிலே குக்கிராமம் ஒன்றில் அழுக்கடைந்த சந்துகளில் பந்தை உதைத்து ஆடத்தொடங்கிய நீக்ரோவான வீரர் பீலி, அமெரிக்க நாட்டு அரசியல் தலைவரையும் புகழில் மிஞ்சிய புகழ் வாய்ந்த விளையாட்டு வீரனாய் உயர்ந்தார்.

விளையாட்டு யாரையும் வீணாக்கியதில்லை. உண்மைதான்.

விளையாட்டை வீழ்த்திவிட்டு வாழ்ந்த நாடும் இல்லை
விளையாட்டை வாழ்த்திவிட்டு தாழ்ந்த நாடும் இல்லை.