விவேகசிந்தாமணி

விவேகசிந்தாமணி

தொகு
விவேகசிந்தாமணி 21-40
விவேகசிந்தாமணி 21-40
விவேகசிந்தாமணி 41-60
விவேகசிந்தாமணி 61-80
விவேகசிந்தாமணி 81-100

பாடல்கள்

தொகு
பாடல்: 1 (அல்லல்போம்)
தொகு
அல்லல்போம் வல்வினைபோம் மன்னைவயிற்றிற் பிறந்த
<<>> அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
<<>> தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
<<>> குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
<<>>கணபதியைக் கை தொழுதக் கால்.
அருஞ்சொற்பொருள்
அல்லல்- துன்பம்; வல்வினை- வலிமைபொருந்திய வினைகள் (கர்மா);அன்னை- தாய், அம்மா; அருணை- திருவண்ணாமலை; தொழுதக்கால்- வணங்கியபோது, வணங்கினால்.
கருத்துரை
கணபதியைக் கையால் கும்பிட்டால் நம் துன்பங்கள்(அல்லல்) மறைந்துபோகும். வலிமைமிக்க வினைகள் (கர்மவினை) அழிந்து போகும். தாய்வயிற்றிற் பிறந்த பிறப்பு எனும் துன்பம் அழிந்துபோகும் (மீண்டும் மீண்டும் பிறந்து துன்புறும் பிறவாநெறி கிடைக்கும் என்றுபொருள்). என்றும் மறைந்துபோகாத துயரங்கள் நீங்கும். நல்ல குணம்(நற்பண்புகள்) ஓங்கிவளரும், அருணாசலத்தின் கோபுரத்தில் எழுந்தருளியுள்ள செல்வக்கணபதியை-செல்லபபிள்ளையாரை- கையெடுத்துக்கும்பிட்டால்.
விளக்கம்
இங்கு நூலின்முதலில் வழக்கமாகச் சொல்லும் கடவுள் வாழ்த்தில் பிள்ளையாரைக் கும்பிட்டால் என்னென்ன பலன்கள் நமக்குக் கிட்டும் என்கின்றார். ஒரு செயலைச் செய்யப் புகுமுன் கடவுளைக் கும்பிட்டுத் தொடங்குவது நம் தமிழ்மரபு. எனவே, முதல் தெய்வமாகிய கணபதியை- ஐந்துகரத்தனைத் தொழுகின்றார்.நம்மையும் தொழும்படி கூறுகின்றார்.

பாடல்: 2 (ஆபத்துக்குதவாப்)

தொகு
ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.
அருஞ்சொற்பொருள்
அன்னம்- உணவு; தாபத்தை- தாகத்தை; தீரா- தீர்க்காத; வேந்தன்- அரசன்; சீடன்- மாணாக்கன்; பயனிலை-பயன்+இல்லை.
கருத்துரை
ஆபத்தில் உதவிசெய்யாத பிள்ளையால் பயனில்லை. மிகுந்த பசியில் தவிக்கும்போது உதவாத உணவினால் ஒருபயனுமில்லை. தாகமுற்று இருக்கும்போது அதனைத் தவிர்க்க உதவாத தண்ணீரால் என்னபயன்? ஒருபயனுமில்லை. வறுமையை அறியாத, அறிந்து அதற்கேற்றபடி ஒழுகாத - நடக்காத- பெண்களால் பயன் இல்லை. கோபத்தை அடக்காத அரசனாலும் பயனில்லை. குருவின்மொழியை -ஆசிரியரின் சொல்லை- கேளாத மாணாக்கனாலும் ஒருபயனுமில்லை. அதுபோலத் தன்னுள் முழுகுவாரின் பாவத்தைப்போக்காத தீர்த்தத்தினாலும் பயனில்லை. இவ்வாறாக இந்த ஏழும் பயனில்லை என்கின்றார்.
விளக்கம்
ஆபத்துக்காலத்தில் தன்பிள்ளையே தனக்கு உதவாவிட்டால் பின் யார் உதவுவார்கள், எனவே ஆபத்துக்காலத்தில் உதவாத பிள்ளையால் ஒருபயனும் இல்லை என்பதாம். பசியைத் தீர்த்துக்கொள்ளத்தான் உணவு உண்கின்றோம் ஆனால், அப்பசியைப் போக்காத உணவால் என்னபயன்? தாகத்தைப் போக்காத தண்ணீரால் என்னபயன்? வீட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக மனைவி, குடும்பத்தின் வறுமையை அறிந்து அதற்கேற்பச் செலவு செய்யவேண்டும். குடும்பத்தின் நிலை அறியாது ஆடம்பரமான வீண்செலவுகளைச் செய்பவளாக இருந்தால் அப்படிப்பட்ட பெண்களால் அந்தக் குடும்பத்திற்கு என்ன பயன்? அரசன் எல்லா அதிகாரங்களைப்பெற்றிருந்தாலும், அவன் கோபத்தை அடக்கக் கற்றிருக்கவேண்டும். அவன் கோபத்தை அடக்காவிட்டால் அவன் கீழ் துன்பந்தான். எனவே கோபத்தை அடக்காத வேந்தனும் வீணே. குருவின் உபதேசத்தின்படி சீடன் -மாணாக்கன்- நடந்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லையெனில், அச்சீடன் வீணானவன்தான். தீர்த்தம் ஆடுவது பாவத்தைப் போக்கிக்கொள்ளத்தான், ஆனால் அந்தத் தீர்த்தத்தில் ஆடியும் பாவம் தீரவில்லையென்றால், தீர்த்தமே வீண்தான். இவ்வாறு பிள்ளைமுதல் தீர்த்தம் ஈறாக உள்ள ஏழுபொருள்கள் இருந்தும் பயனில்லை என்கின்றார்.

பாடல்:3 (பிள்ளைதான்)

தொகு
“பிள்ளைதான். வயதில் மூத்தால் பிதாவின் சொற்புத்திக் கேளான்;

கள்ளின்நற் சொல்லாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்; தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்; உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர்பண் டிதரைத் தேடார்.

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் கள்ளின் நல்சொல்லாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள் தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான் உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்.

அருஞ்சொற்பொருள்
பிதா= தந்தை; கள்= தேன்; தெள்= தெளிவாக; வித்தை- கல்வி; சீடன்- மாணவன்; பண்டிதர்= மருத்துவர்.
கருத்துரை
குடும்பத்தில் பிள்ளைக்கு வயது அதிகமாகிவிட்டால், அவன் தந்தையின் சொல்லையும் அவர்கூறும் புத்திமதியையும் கேட்கமாட்டான். 'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்பது பழமொழி. தேன்போன்ற இனிமைமிகுந்த சொல்லாளாகிய மனைவி, அதாவது கணவனிடம் இதுநாள்வரை இனிமையாகப் பேசிய மனைவியும், அவனுக்கு வயது முதிர்ந்தால் அவனைக் கருதியும் பார்க்கமாட்டாள். குருவிடம் தெளிவாக அனைத்தையும் கற்றுக்கொண்டுவிட்டான் என்றால், அந்த மாணவனும் குருவைத் தேடமாட்டான். தமக்குள்ள நோய்கள் எல்லாம் தீர்ந்து போனால் உலகத்திலுள்ளார் மருத்துவரைத் தேடமாட்டார்கள்.
விளக்கம்
உலகில் நாம் பார்ப்பதுதான், பிள்ளையின் வயது அதிகமாகிவிட்டால் அவன் தாய் தந்தையர் பேச்சை, புத்திமதியைக்கேட்பதில்லை. கணவனுக்கு வயது முதிர்ந்துவிட்டால் மனைவியும் கணவனைக் கருத்திற் கொள்வதில்லை, பேரன்பேத்திகள்மேல்தான் அவளின் முழுக்கவனமும். அதுபோல் தெளிவாக எல்லா வித்தைகளையும் -கல்வியையும்- கற்றுவிட்டால் அந்த மாணவன் குருவைத்தேடுவதில்லை. உலகில் இருப்போர், தம் நோய்நொடி தீர்ந்துபோனால் அவர்கள் மருத்துவரை ஏறிட்டும் பார்ப்பதில்லை. இதுதான் உலகஇயல்பு என்கின்றார்.

பாடல்:4 (குக்கலைப்)

தொகு
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து வைத்து
மிக்கவே மஞ்சள் பூசி மிகுமணம் செய்தா லுந்தான்
அக்குலம் வேற தாமோ அதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்கல் அல்லாற் குலந்தனிற் சிறந்த தாமோ
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கவே மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலம் தனில் சிறந்ததாமோ.
அருஞ்சொற்பொருள்
குக்கல்- தெருநாய்; நாவி- புனுகுப்பூனை
கருத்துரை
தெருநாயைப் பிடித்துப் புனுகுப்பூனையை அடைக்கவேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து அதற்குத் தினந்தோறும் அதிகமான மஞ்சளைப்பூசி மிக்க மணமுடையதாக அதனை ஆக்கினாலும், அந்நாயானது வேறாக ஆகிடுமோ? அதாவது புனுகுப்பூனையாக ஆகுமோ? அதனிடத்தில் மணம்மிகுந்த வாசனைப்பொருளான 'புனுகு' உண்டாகுமா? நாய் என்றும் நாய்தான், அது என்றும் உயர்ந்த புனுகுப்பூனை ஆகாது என்று அறியவும். அததற்கு உள்ள இயல்புதான் வரும் என்பதாம்.
விளக்கம்
இங்கு ஒன்றன் இயல்பை மாற்றுதல் என்பது இயலாது என்கின்றார். உதாரணமாகப் புனுகுப்பூனைக்குப்பதிலாக தெருநாயைக் கூண்டினில் அடைத்து வைத்து அதற்கு மணப்பொருள் எல்லாம் பூசிப்பேணினாலும் அது வாசனைநிறைந்த புனுகினைத் தருமா? தராது. அதன் இயல்பு அதுதான். இங்குக் குலம் என்பது அந்த இனவிலங்கு என்ற பொருளி்ல் வந்தது. சாதி எனப்பொருள் கொள்ளல்தவறு.
புனுகு என்பது வாசனைப்பொருள், மக்கள் விரும்பிப் போற்றுவது. அது புனுகுப்பூனையிடமிருந்து கிடைப்பது. அதனைப்பெற வேண்டி அதனை இரும்புக்கூண்டினுள் அடைத்து வைத்து அதனைப்பெறுவர்.

பாடல்:5 (ஒப்புடன்முகமலர்ந்தே)

தொகு
ஒப்புடன் முகம லர்ந்தே வுபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழிட் டாலு முண்பதே யமிழ்த மாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவா ராயின்
கப்பிய பசியி னோடு கடும்பசி ஆகுந் தானே.
ஒப்பொடு முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பு இலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவார் ஆயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே.
அருஞ்சொற்பொருள்
ஒப்பொடு- மனம் ஒப்பி; கூழ்- கம்பு, கேழ்வரகுக் கூழ்; அமிழ்தம்- அமிர்தம்; அன்னம்- சோறு; கடுத்து- கடுகடு வென்று; கப்பிய- பிடித்த
கருத்துரை
மனம் நன்கு ஒப்பி முகமலர்ச்சியுடன் உபசரித்து உண்மையாகமனம் பொருந்தி இனிமையாகப்பேசி, உப்புக்கூட இல்லாத கூழ் உணவைப்பரிமாறினாலும் அதுதான் அமிழ்தம் ஆகத்தோன்றும். அதற்குமாறாக, வாழை மா பலா முதிலிய இனிய கனிகளோடு, பாற் சோறு முதலியவற்றைக் கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு உணவு இட்டால், முன்பே பிடித்த பசியோடு மேலும் அதுகடுமையான பசியினையே கொடுக்கும். பசி அதிகமாகும் என்பதாம்.
விளக்கம்
இங்கு, விருந்து ஓம்பும் முறையினைக்கூறுகின்றார். கொடுப்பது கூழாக இருந்தாலும், ஏன்...? அது உப்புக்கூட இல்லாத கூழாயிரு்ந்தாலும், மனமொப்பி முகமலர்ச்சி பொங்க உண்மையான அன்போடும் நல்ல மனதோடும் அக்கூழ் உணவைஇட்டால் அதுவே அமுதம். அதற்குமாறாக மூன்று வகையான பழங்களோடு, பாற்சோற்றை விருந்தாகப் படைத்தாலும் கடுகடுத்த முகததோடு விருப்பமின்றிக் கொடுப்பின் அது பசியை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, விருந்துஓம்பலில் உணவுப்பொருளைவிட அதைப்பரிமாறுவோரின் மனமே முக்கியம்.

பாடல்:6 (கதிர்பெறுசெந்நெல்)

தொகு

கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலம் கண்டும் சென்று, கொதிதிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல், குவல யத்தே மதிதனம் படைத்த பேர்கள் மறுகுவோர் முகத்தைப் பாரார், நிதிமிகப் படைத்தோர்க் கீவார், நிலையிலார்க் கீய மாட்டார்.

மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள்.

பாடல்: 7 (ஆலிலைபூவும்)

தொகு
ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தம்மிலம் என்றே வாழும்
வாலிபம் வயோதி கம்பல் விலங்கினம் கூடச் சேரும்
ஆலிலை ஆதி போனால் அதனடி இருப்பார் உண்டோ.

பாடல்: 8 (பொருட்பாலை)

தொகு
பொருட்பாலை விரும்புவர் காமப்பாலில் மூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்ப அறிவொன் றி்ல்லார்
குருப்பால் கடவுளர்பால் வேதியர்பால் இரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்ககே விருப்பமுடன் கோடிப்பொன் கும்பிட் டீவாரே.

:பாடல்: 9 (தண்டாமரையுடனே)

தொகு
தண்டா மரையி னுடன்பிறந்தும் தண்டேன் நுகரா மண்டூகம்
வண்டே கானத் திடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் புல்லர் அறியார் நல்லோரை
கண்டுங் களித்து முறவாடிக் கலப்பர் தம்முள் கற்றோரே.

இந்தச்செய்யுள் பொருள்: தாமரை குளத்தில் விதை விழுந்து முளைக்கிறது அதே போன்று ஒரு தவளையும் வளர்கிறது தினமும் அந்த தாமரையின் மேல் ஏறி விளையாடும் தூங்கும் அந்தத் தவளையும் பெரிதாகிவிட்டது தாமரையும் பெரிதாகி பூத்து விட்டது ஆனால் அந்தத் தவளைக்குத் தாமரைப்பூவில் தேன் இருக்கும் ஈன்று தெரியாது ஆனால் எங்கேயோ தூரத்தில் உள்ள வண்டுக்குத் தெரியும் தாமரைப் பூவில் தேன் இருக்கும் என்று. அதுவந்து தேன் குடித்துவிட்டுச் செல்லும். அதுபோலக் கற்றவர்கள் கூடவே இருப்பார்கள்; ஆனால் மூடர்கள் அவர்களைப்பற்றி அறியாமல் அவர்கள் உடைய அறிவைப் பெறாமல் இருப்பார்கள். ஆனால், கற்றவர்கள் எங்கு இருந்தோ அறிவுள்ளவர்களை அறிந்து வந்து அறிவைப்பெற்றுச் செல்வார்கள்.

(கருத்து: தவளையும் தாமரையும் ஒரே நீர்நிலையில் தோன்றி வளர்ந்தாலும் தேனின் சுவையறியாத தவளை தாமரையின் தேனை உண்டு மகிழ்வதில்லை. தேனின் சுவையறிந்த வண்டுகள் தொலைதூரக் காடுகளிலிருந்து தாமரையைத்தேடிவந்து தேனையுண்டு மகிழும். அதுபோலக் கல்வி கேள்விகளின் சுவையறியாத மூடர்கள், கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் வாழும் ஊரிலேயே இருப்பினும் கல்வியருமையறியாமையால் அவ்வறிஞர்களை நாடிச்சென்று கல்வியைப் பெறமாட்டார்கள். கல்வியருமை தெரிந்தவர்களோ தொலைதூரங்களிலிருந்தும் அறிஞர்களை நாடிவந்து அறிவைப் பெற்றுமகிழ்வர் என்பதாம்)

மண்டூகம் = தவளை கமலம் = தாமரை நுகரா = தெரியாமல் (அறியாமல்)(சுவைத்து மகிழமாட்டா)

பாடல்: 10 (வானரம் மழைதனில்)

தொகு
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.

பாடல்: 11 (கற்பகத்)

தொகு
கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுத முண்ணும்
விற்பன விவேக முள்ள வேந்தனைச் சேர்ந்தோர் வாழ்வர்
இப்புவி தன்னி லென்று மிலவு காத்திடும் கிளிபோ
லற்பரைச் சேர்ந்தோர் வாழ்தல் அரிதரி தாகு மம்மா.
கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தனைச் சேர்ந்தோர் வாழ்வர்
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்தல் அரிது அரிது ஆகும் அம்மா.

பாடல்: 12 (ஆலகால)

தொகு
ஆல கால விடத்தையும் நம்பலாம் ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
கால னார்விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை அகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.


பாடல் 13 (சங்குவெண்தாமரைக்கு)

தொகு
சங்குவெண் டாம ரைக்குத் தந்தைதா யிரவி தண்ணீர்
அங்கதைக் கொய்து விட்டா லழுகிட வந்நீர் கொல்லும்
துங்கவெண் கரையிற் போட்டாற் சூரியன் சுட்டுக் கொல்வான்
தங்களி னிலைமை கெட்டாற் றவிப்பரே, திணறு வாரே.


பாடல்: 14 (நாய்வாலை)

தொகு
நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டி நற்றமிழை எழுதஎழுத் தாணி யாமோ
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரியவிளக் கேற்றிட்டால் வீட தாமோ
தாய்வார்த்தை கேளாத சகசண் டிக்கென் சாற்றிடினு முலுத்தகுணம் உதிர்ந்து போமோ
ஈவாரை ஈயவிடான் இவனும் ஈயான் எழுபிறப் பினும்கடை யாமிவன் பிறப்பே.


பாடல்: 15 (வெம்புவாள்)

தொகு
வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல்விழுந் தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பினும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையா வாரே.


பாடல்: 16 (கர்ப்பத்தால்)

தொகு
கர்ப்பத்தால் மங்கையர்க் கழகு குன்றும் கேள்வியிலா அரசனெனில் ஆட்சி குன்றும்
துர்ப்புத்தி மந்திரியால் அரசுக் கீனம் துடிப்பில்லாப் பிள்ளைகளால் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மைசெயத் தீமையினை நயந்து செய்வார்
அற்பரோ டிணங்கிவிடின் பெருமை தாழும் அரியதவம் கோபத்தா லழிந்து போகும்.


பாடல்: 17 (தன்னுடன்)

தொகு
தன்னுடன் பிறவாத் தம்பி தனைப்பெறாத் தாயார் தந்தை
அன்னிய ரிடத்துச் செல்வம் அருபொருள் வேசி நேசம்
எண்ணிடா ஏட்டின் கல்வி எதிருரை மனையாள் வாழ்க்கை
இன்னவாம் எட்டும் சாரும் இடுக்கத்துக் குதவா தன்றே.

பாடல்: 18 (கருதியநூல்)

தொகு
கருதியநூல் கல்லாதான் மூட னாவான் கணக்கறிந்து பேசாதான் கசட னாவான்
ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாவான் ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாவான்
பெரியோர்கள் முன்நின்று மரத்தைப் போலப் பணியாமல் இருப்பவனோ பேய னாவான்
பரிவேபோல் தழுவுபவன் பசப்ப னாவான் பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவி யாமே.

பாடல்: 19 (தாங்கொணா)

தொகு
தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் சொல்ல நாணும்
வேங்கைபோல் வீரம் குன்றும் விருந்தினர் காணக் கூசும்
பூங்கொடி மனையாட் கஞ்சும் புல்லருக் கிணங்கச்செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்குந் தானே

பாடல்: 20 (அரும்புகோணிடில்)

தொகு
அரும்பு கோணிடில் அதுமணம் குன்றிடா
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை அடக்கலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வாம்.
பார்க்க
விவேக சிந்தாமணி 21-40

மேலும்

தொகு
"https://ta.wikisource.org/w/index.php?title=விவேகசிந்தாமணி&oldid=1526505" இலிருந்து மீள்விக்கப்பட்டது