விவேகசிந்தாமணி 81-100
விவேகசிந்தாமணி
தொகுபாடல்: 81 (தன்மானங்)
தொகு- தன்மானங் குலமானந் தனைவேண்டி யடைந்தோர் தங்கள் மானம்
- என்மான முடன்சமமா மென்றெண்ணி யெவரிடத்து மினிமை யான
- நன்மானம் வைத்தென்று மார்வமுட னவர்களுக்கு நலஞ்செய் வோனை
- மண்மாண வடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வாழ்த்த லாமே.
பாடல்: 82 (மங்கைகைகேசி)
தொகு- மங்கை கைகேசி சொற்கேட்டுத் தசரதன் மரண மானான்
- செங்கம லச்சீதை சொற்கேட்டுச் சீராமன் சென்றான் மான்பின்
- தங்கை சூர்ப்பணகை சொற்கேட் டிராவண னிறந்து போனான்
- நங்கை சொற்கேட்டாற் கேடுவரு நகைப்ப ருலகோர் தானே.
பாடல்: 83 (தடாரிதண்ணுமை)
தொகு- தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி யிடக்கை
- படாது கூடியே யொலித்திடல் போலவிப் பாரில்
- விடாது நாணகன் றன்னிய புருடனை விரும்பி
- யடாது செய்தமங் கையின்வசை யொலித்திடு மன்றே.
பாடல்: 84 (புத்திமான்)
தொகு- புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
- எத்தனை விதத்தி லேனு மிடரது வந்தே தீரும்
- மற்றொரு சிங்கந் தன்னைக் குறுமுயல் கூட்டிச் சென்றே
- உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போலே.
பாடல்: 85 (அன்னையே)
தொகு- அன்னையே யனைய தோழி வன்புட னிருக்கு மாதே
- உன்னையோ ருண்மை கேட்பே னுணர்ந்திட வுரைத்தல் வேண்டும்
- என்னையே புணரு வோர்க ளெனக்கு மோரின்ப நல்கிப்
- பொன்னையுங் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வ தேனோ.
பாடல்: 86 (பொம்மெனப்)
தொகு- பொம்மெனப் பணைத்து விம்மிப் போர்மதன் மயங்கி வீழும்
- கொம்மைசேர் முலையி னாளே கூறுவேன் நன்கு கேண்மோ
- செம்மையி லறஞ்செய் யாதார் செல்வந்தான் சிதற வேண்டி
- நம்மையுங் கள்ளுஞ் சூதும் நான்முகன் படைத்தா னன்றோ.
பாடல்: 87 (ஒருநான்கீரரை)
தொகு- ஒருநான் கீரரரையு மொன்றே கேளாய் உண்மையாய் ஐயரையு மரையுங் கேட்டேன்
- இருநான்கு மூன்றுடனே வொன்றுஞ் சொல்லாய் யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
- பெருநான்கு மறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
- சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினி யென்சகியே மானே.
பாடல்: 88 (தேனுகர்வண்டு)
தொகு- தேனுகர் வண்டு மதுதனை யுண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
- தானதைச் சம்பு வின்கனி யென்று தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்
- வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரங் குவியு மென்றஞ்சிப்
- போனது வண்டோ, பறந்ததோ பழந்தான் புதுமையோ விதுவெனப் புகன்றாள்.
பாடல்: 89 (கானலைநீரென்)
தொகு- கானலை நீரென் றெண்ணிக் காடுவெளி திரியு மான்போல்
- வானுறு யிலவு காத்த மதியிலாக் கிள்ளை யேபோல்
- தேனினை யுண்டு தும்பி தியங்கிய தகைமை யேபோல்
- நானுனை யன்ப னென்று நாளையும் போக்கி னேனே.
பாடல்: 90 (தங்குமன்பின்)
தொகு- தங்கு மன்பின் மணவாளன் றன்னை நினைக்கும் போதெல்லாம்
- பொங்குங் கடலு முறங்காது, பொழுதோ நாளும் விடியாது
- திங்க ளுறங்கும் புள்ளுறங்குந் தென்றலுறங்கும் சிலகாலம்
- எங்கு முறங்கு மிராக்கால மென்கண் ணிரண்டு முறங்காவே.
பாடல்: 91 (சொல்லுவார்)
தொகு- சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழைமை யிகழ்வார் புல்லர்
- நல்லவர் விசாரி யாமல் செய்வரோ நரிசொற் கேட்டு
- வல்லரி யெருதுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
- புல்லிய ரொருவ ராலே போகுமே யனைத்து நாசம்.
பாடல்: 92 (அன்னம்பழித்த)
தொகு- அன்னம் பழித்தநடை யாலம் பழித்தவிழி யமுதம் பழித்த மொழிகள்
- பென்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல் சின்னஞ் சிறுத்த விடைப்பெண்
- என்னெஞ் சுறுத்த வவடனெஞ்சு கற்றகலை யென்னென் றுரைப்ப தினிநான்
- சின்னஞ் சிறுக்கி யவள்வில் லங்க மத்தனையுந் தெய்வங் களுக்கபயமே.
பாடல்: 93 (உண்ணல்)
தொகு- உண்ணற் பூச்சூட னெஞ்சுவத் தலொப்பனை
- பண்ணலெல் லாமவர் பார்க்கவே யன்றோ
- அண்ணலின் பிரிவினை யறிந்துந் தோழினீ
- மண்ண வந்தனை யிதுமடமை யாகுமால்.
பாடல்: 94 (பூதலத்தில்)
தொகு- பூதலத்தில் மானிடராய்ப் பிறப்ப தரிதெனப் புகல்வர் பிறந்தோர் தாமும்
- ஆதிமறை நூலின் முறையருள் கீர்த்தியாந் தலங்கள் பண்பாய்ச் சென்று
- நீதிவழு வாத வகைவழக் குரைத்து நல்லோரை நேசங் கொண்டு
- காதவழி பேரில்லார் கழுதை யென்றே கருதிடுவர் பாரில் தானே.
பாடல்: 95 (வல்லியந்தனைக்)
தொகு- வல்லியந் தனைக்கண் டஞ்சி மரந்தனி லேறும் வேடன்
- கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
- நல்லவன் றனக்குச் செய்த நலமது மிக்க தாகும்
- புல்லர்க்கு நன்மை செய்தாற் போக்குவ ருயிரைத் தானே.
பாடல்: 96 (மாகமாமேடை)=
தொகு- மாகமா மேடை மீதில் மங்கைநின் றுலாவக் கண்டு
- ஏகமா மதியென் றெண்ணி யிராகுவந் துற்ற போது
- பாகுசேர் மொழியி னாளும் பதறியே பாதம் வாங்கத்
- தோகைமா மயிலென் றெண்ணித் தொடர்ந்தரா மீண்ட தன்றே.
பாடல்: 97 (அருகில்வர)
தொகு- அருகில்வர வருகில்வர வருகில்வர வுருகும்
- கரியகுழல் மேனியிவள் சாயல்மயில் மறுகும்
- பெரிதுதனம் சிறிதுயிடை பேதையிவ ளையோ
- தெருவிலிவள் செல்லுகையிற் றுள்ளுமுளந் தானே.
பாடல்: 98 (குரங்குநின்)
தொகு- குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே
- அரங்கு முன்புநா யாடிக்கொண் டாடியது போல
- கரங்கள் நீட்டியே பேசிடும் கசடரைக் கண்டு
- சிரங்க ளாட்டியே மெச்சுத லறிவிலார் செய்கை.
பாடல்: 99 (இந்திரன்பெருமை)
தொகு- இந்திரன் பெருமை குன்று மிறையவர் மகிமை குன்றும்
- மந்தர மலைக ளாடு மறுகயல் வறுமை யாகும்
- சந்திர சூரியன் சாயும் சகத்தினிற் றேசு மாறும்
- அந்தணர் கருமங் குன்றி லவனியில் வாழ்வார் யாரே.
பாடல்: 100 (பண்புளருக்)
தொகு- பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
- நண்பிலரைக் கண்டக்கால் நல்லிருக்கை- திண்புவியை
- யாள்வா ரழகிய சொக்கர்க் கரவம்
- நாடோ றுமேநன் னிலம்.
விவேகசிந்தாமணி முற்றும்
தொகு- பார்க்க