வெற்றிக்கு எட்டு வழிகள்/001-010
அற ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே ஆக்கம் அமைந்து கிடக்கின்றது. சூது, அடாவடி, ஏமாற்றல், பேராசை ஆகிய ஒழுங்கீனத்தின் அடிப்படையில் அது அமைந்து விடுவதாகப் பொதுவழக்காகக் கருதப்படுகின்றது. வாணிபச் செழிப்பு எனும் நன்மை நாணயக் குறைவு என்னும் தீமையின் விளைவுதான். பிறவகைகளில் அறிவுக் கூர்மையுடையவனாயிருக்கின்ற மனிதனுங் கூட “ஒருவன் நாணயக் குறைவுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் அம் மனிதன் வாணிபத்தில் செழிப்புடையவனாக இருக்க முடியாது” என்று அறுதியிட்டுக் கூறுவதை நாம் சாதாரணமாகக் கேள்விப்படுகின்றோம். அத்தகைய கூற்று மேலெழுந்த வாரியான சிந்தனையற்றதாகும்; அற ஒழுக்கத்தைக் குறித்த காரணகாரியத் தொடர்பு பற்றிய அறிவு சிறிதும் இல்லாததையும், அளவில் புரிந்து கொண்டிருப்பதையுமே அது எடுத்துக் காட்டுகின்றது. இது, கள்ளிச் செடியை விதைத்துவிட்டுத் தேமாங்கனியை அறுத்தெடுக்க வேண்டும் என்று காரண காரியத் தொடர்பின் இயற்கையமைப்பில் கைகூடாத செயல்களைக் கூறுவதற்கு ஒப்பாகும்;
ஆகவே, அது முயற்சி செய்யப்படக் கூடாத ஒன்று. ஒழுக்கநெறி சார்ந்த காரண காரியத் தொடர்பமைப்பு கொள்கையளவில் வேறுபட்டதன்றி அடிப்படையில் மாறுபட்டதன்று. இயற்கைப் பொருள்களின் படிமுறைகளை மனிதன் காணுகின்றான்; அவற்றிற்குத் தக்கச் செயலில் ஈடுபடுகின்றான். ஆனால் ஆன்மீகப் படிமுறைகளை மனிதன் காணப்பெறாததால் அவை இயங்கவே இல்லையெனக் கருதி அவற்றுடன் இசைவற்றுச் செயலில் ஈடுபடுகின்றான்.
நீதிக்கதைகள், அறமொழிகள் அனைத்தும், மேதகு ஆசிரியர்களின் பழமொழி பலவும் இவ் உண்மையினை விளக்கிக் காட்டுதற்கெனத் திட்டம் செய்யப்பட்டனவே. மன உலகம் காட்சிக்குரியதாய் ஆக்கப் பெற்றதே இயற்கையுலகம். காணப்படாததின் கண்ணாடியே காணப்படுவது. ஒரு வட்டத்தின் மேற்பாகத்தை விடக் கீழ்ப்பாகம் எவ்வகையிலும் மாறுபட்டதன்று; ஆனால் அதன் உருண்டை வடிவம் தலைகீழாக இருக்கின்றது. அவை ஒரு முழுவட்டத்தின் இருநேர் பாதிகளேயாகும். இயற்கை சார்ந்தனவும், ஆன்மீகம் சார்ந்தனவும் நிலையான பகைமை கொண்டனவல்ல; ஆனால் உலகத்தின் உண்மையான ஒழுங்க மைப்பின்கண் அவை ஒன்றெனவே நிலையாக உறைகின்றன. கடமையையும், செயல் திறனையும் தவறாகப் பயன்படுத்துவதான இயற்கைக்கு மாறுபட்ட நிலையிலேயே பிரிவு பிறக்கின்றது; அந் நிலையிலேயே, அவன் பிரிந்துவிட வேண்டி முயன்ற நிறை வட்டத்தினின்றும் அடுத்தடுத்து வருந் துன்பங்களுடன் மனிதன் வல்லந்தமாகப் பின்னொதுக்கப் படுகின்றான்.
இயற்கைப் பொருள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நாம் ஆராய்ந்தால் அதன் அடிப்படைப் படிமுறைகள் மன மண்டலத்திலேயும் இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, ஒரு விதை முளைவிட்டு, வளர்ச்சியாகிய மலர் அலரும் செடியாக வளர்ந்து மறுபடியும் விதையாகிற முறையை எடுத்துக் கொள்வோம். இதுவும் ஒரு மனப் படிமுறையேயாகும். எண்ணங்கள் விதைகளே. அவை மனமென்னும் நிலத்தில் வீழ்ந்து முறைவிட்டு அவற்றின் முழுமையான நிலையை அடைவதுவரையில் வளர்ந்து அவற்றின் இயல்புக்கேற்ப நற்செயல்கள், தீச் செயல்கள், அறிவு சான்ற செயல்கள் மடைமை மிக்க செயல்களாக மறுபடியும் பிறர் மனங்களில் தூவப்படவேண்டிய எண்ண விதைகளாக முடிவு பெறுகின்றன. ஆசிரியர் விதை விதைப்பவர், ஆன்மீகச் சொல்லோ உழவர்; அதேபோது தமக்குத் தாமே கற்பித்துக் கொள்ளுபவர், தமது மனநிலத்தின் சிறந்த வேளாண்மைக்காரர், ஓர் எண்ணத்தின் வளர்ச்சி ஒரு செடியின் வளர்ச்சியை ஒத்ததேயாகும்; பருவக் காலத்திற்கேற்ப விதை தூவப்பட வேண்டும்; அது அறிவுச் செடியாகவும், மெய்யுணர்வு மலராகவும் தனது முழுவளர்ச்சியைப் பெறக் காலம் தேவைப் படுகின்றது.
நான் இதை எழுதும் போது என் படிப்பறையின் பலகணிவழியே பார்வையைத் திருப்புகின்றேன்; அங்கு முந்நூறு அடிக்கு அப்பால் உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் உளது. அருகிலுள்ள புதர்க் காட்டினின்றும் வந்த காகமொன்று அம்மர உச்சியில் தனது கூட்டை முதல்முறையாகக் கட்டி முடித்திருக்கின்றது. ஒரு கடுமையான வடகிழக்குக் காற்று வீசுகின்றது. கடுங்காற்று தொடங்கிவிட்டதன் காரணமாக மரத்தின் உச்சி முன்னும், பின்னுமாய் வேகமாக அசைகின்றது; எனினும், மரச்சுள்ளிகளாலும் பன்னாடையாலும் அமையப் பெற்ற வலுவற்ற அக் கூட்டிற்கு எவ்வித இடரும் இல்லை; அதோடு, தன் முட்டைகளின் மீதமர்ந்து கொண்டிருக்கும் அத் தாய்ப்பறவைக்குப் புயலைக் குறித்த அச்சம் இல்லை. எதனால்? மிகுந்த அளவு வலிமையையும், பாதுகாப்பையும் அளிக்கின்ற முறைகளுடன் கூடிய வகையில் தனது கூட்டை அப்பறவை இயல்பாகவே கட்டியிருப்பதே இதற்குக் காரணம். மரவுச்சி எத்துணைதான் அசைந்தாடுவதாயிருப்பினும், கூட்டின் அமைப்பு மாறுபடுவதோ அதன் கட்டுமானம் உலைவு படுவதோ இல்லை; மேலும், எந்த வெளிப்புற ஆட்டத்திற்கும் ஒரு பெருந்தடையாகப் பயன்படும் முறையிலும், தேவைக்கேற்ப உட்புறத்தில் நிறைவான நெருக்கம் மிகுதியாகப் பெறும் முறையிலும் கூடு அமைப்புத் திட்டத்தில் கட்டப்பட்டிருக்கின்றது; ஆகவே, காற்று எத்துணைதான் சீற்றம் கொண்டாலும் பறவைகள், பாதுகாப்புடன் வாழ்கின்றன. இது பழக்கப்பட்ட ஒரு காட்சி. எனினும், அதன் அமைப்பு கண்டிப்பான கணித விதிக்குட் பட்டதாயிருப்பதைக் காணும்போது, ஒருவன் தன் செயல்களை நிலைபெற்ற முறைகளுடன் ஒழுங்குபடுத்திக் கொள்வது மூலமாகவே நிகழ்ச்சிகளின் உறுதியற்ற நிலை, வாழ்வின் கீழ்ப்படியாத கொந்தளிப்புகள் ஆகியவற்றின் இடையிலேயும் நிறைவான உறுதிப்பாடு, நிறைவான பாதுகாப்பு, நிறைவான அமைதி ஆகியவற்றைப் பெற முடியுமென்பதைக் கற்பித்து அறிவொளியூட்டும் ஒரு அறநெறி கதையாகவே அறிவுடையோர்க்குத் தென்படுகின்றது.
மனிதன் கட்டுகின்ற வீடோ தூக்கணாங்குருவிக் கூட்டைக் காட்டிலும் மிகவும் அதிகமான சிக்கலுடைய கட்டுமானமாகும்; எனினும், அது இயற்கையில் எங்கணும் தெளிவுபடக் காணக்கிடக்கின்ற கணிதப் படியான முறைகளுடன் கட்டப்படுகின்றது. வடிவ இயல் விழுக்காடுகளுக்கு எதிராக ஒரு கட்டிடத்தை எழுப்ப அவன் என்றுமே முயலுவதில்லை; ஏனெனின், அத்தகைய கட்டிடம் நிலையற்றது என்பதும், கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கையிலேயே அவன் காதுகளில் ஒலிக்கும் வண்ணம் அது இடிந்து விழவில்லை என்றாலும், முதன் முதலாக வீசும் பெருங்காற்று பெரும்பாலும் அதைத் தரைமட்டமாக்கி விடுமென்பதும் அவனுக்குத் தெரியும். கட்டிடத்தை எழுப்புவதில் வட்டம், சதுரம், கோணம் ஆகியவற்றை மனிதன் சிற்றிழையும் தவறாது பின்பற்றுகின்றான்; அதோடு, கடுமையான புயற்காற்றுகளையும் தடுத்துத் தனக்குக் கவலையற்ற புகலிடத்தையும், தொல்லையற்ற பாதுகாப்பையும் தரும் கட்டுமானத்தை வரைகோல், நேரறித்தூக்கு நூல், சாரங்கள் ஆகியவற்றின் உதவி கொண்டு அவன் எழுப்புகின்றான்.
இவையனைத்தும் மிக எளிது என கற்பவர் கூறலாம். ஆமாம், எளிதுதான், ஏனெனின், இது உண்மையானது, முழுமையானது. இடை நிலைப்பாடு எதையும் ஒத்துக் கொள்ளவியலாத அத்துணை உண்மையானது, எந்த ஒரு மாந்தனும் மேற்கொண்டு செம்மைப் படுத்தவியலாத அத்துணை முழுமையானது. பொருளுலகத்தில் உள்ள இந்த முறைகளை மனிதன் கற்றுக் கொண்டதுடன் அவற்றைப் பின்பற்றி யொழுகுவதில் அறிவு மேம்பாட்டையும் காணுகின்றான்; நிலைபெற்ற அதே விதிகளை மன உலகிலும் கடைப்பிடித்தொழுகும் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டே அவை இங்கு குறிப்பிடப் படலாயின; அவை எளிதானதும், என்றென்றும் உண்மையானதும், முழுமையானதுமாகும். எனினும். அவற்றின் இயல்புணராத அறியாமையாலும் காலமெல்லாம் தன்மீது தானே சுமத்திக் கொண்டிருக்கும் கேட்டினை உணராமையாலும், இன்றைய நிலையில் மனிதன் அவற்றை மீறியே நடக்கின்றான் என்பது மிகச் சிறிதளவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது.
தன்னறிவிற்குத் தெரிந்தோ தெரியாமையாலோ அது புறக்கணிக்கப் பட்டுவிட்டால் அழிவிற்கும் தோல்விக்கும் நம்மை அழைத்துச் சென்றுவிடும். உண்மையில் உலகில் உள்ள நோக்காட்டுக்கும், துன்பத்திற்கும் காரணம் இந்த விதியை அறியாமையால் மீறுவதேயாகும். மனத்தைப் பொறுத்தவரை அற ஒழுக்கப்படி உணர்ந்தறியப்படுகின்றது. கணிதப்படி முறையும், ஒழுக்கப்படிமுறையும் தனித்தனியானதில்லை, எதிர்மறையானதுமில்லை. அவை ஒன்று பட்ட முழுமையின் இரு கூறுகளேயாகும். சடப்பொருள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற கணக்கியலின் நிலைப் பெறு நியதிகளை உடலென்று கொண்டால் நன்னெறியே அதன் உயிர்நிலை; அதேபோது, ஒழுக்கநெறியின் நிலையான முறைகள் மனமென்னும் உலகத்தில் இயங்குகின்ற கணிதப்படியான பொதுவுண்மைகளாகும். ஒழுக்க முறைகளிலிருந்து நீங்கி வெற்றிகரமாக வாழ்வது என்பது கணிதப்படியான முறைகளைப் புறக்கணித்து விட்டு வெற்றியுறக் கட்டுமானத்தை முடித்தல், இயலாத கூற்றேயாகும். குணவியல்புகளும் ஒழுக்கம் எனும் விதியின் அடிப்படையில் கட்டப்படுவதால் மட்டுமே வீடுகளைப் போன்று உறுதியாய் நிற்கின்றன; ஏனெனின், குணவியல்புக் கட்டுமானத்தில் செயல்பாடுகளே செங்கல்களாகும். தொழில்களும், மனிதமுயற்சிகள் அனைத்தும் இந்த நிலையான முறைமையிலிருந்து விதிவிலக்கப்டவில்லை; ஆனால் நிலைபெறு விதிகளைப் பின்பற்றுவதால் மட்டுமே அவை பாதுகாப்புடன் நிலைக்கமுடியும்.
எந்த ஒரு சமூகத்திலும் நிலையாக ஆக்கஞ் சேர் மக்களாக இருப்போர் அச் சமூகத்திலுள்ள எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களுமல்லர். ஆனால், நம்பிக்கைக்கு உரியவராயிருப்போரும் நேர்மைக் குணம் படைத்த மக்களுமேயாவர். இந்திய சமூகத்தின் தமிழர்களே மிகவும் நேர்மை படைத்த மக்களாகக் கூறப்படுவர்; அவர்களின் மக்கள் தொகுதி சிறிதேயாயினும் அவர்களே அதிகமான பண்பாட்டுச் செழிப்புள்ளவர்கள்.
“வாணிபக் கட்டுமானம்” குறித்து மக்கள் பேசுகின்றனர்; செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு வீடு போன்றோ கருங்கல்லால் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் போன்றோ வாணிபமும் ஒரு கட்டிடமே; அவ்வாறிருப்பினும், அக் கட்டுமானப் படிமுறை மனம் சார்ந்ததாகும். வீட்டின் மேலுள்ள கூரைபோன்று ஆக்கம் மனிதனின் தலைக்குமேல் அமைந்து அவனுக்கு பாதுகாப்பும், ஆறுதலும் அளிக்கும் ஒரு கூரையாகும்; ஆதாரத்திற்கு ஓர் அடிநிலை இன்றியமையாததாகி விடுகின்றது. ஆகவே, ஆக்கம் எனும் கூரை கீழ்க்காணும் எட்டு ஆதாரங்களால் நிலைப்படுகின்றன; இவை ஒழுக்கத்திண்மை எனும் அடிநியிைல் பொருத்தப் பெற்றிருக்கின்றன.
1. ஆற்றல் | 5. இரக்கம் |
2. சிக்கனம் | 6. இயல்பார்வம் |
3. சால்பு | 7. நடுவு நிலைமை |
4. முறைமை 8. தற்சார்பு
இந்த முறை அனைத்தையும் தவறாது கடைப்பிடித்தொழுகும் அளவிற்கு அத்துணை உறுதியானதாகவும், நீடித்து நிலைபெறுவதாகவும் அமைந்துவிடும். அதனின் ஆக்கத்தை எதுவும் நிலைகுலையச் செய்ய முடியாது; அதனின் வெற்றியை எதுவும் குறுக்கிட்டுத் தடுக்கவோ தரைமட்டத்திற்குக் கொண்டுவரவோ முடியாது. அதற்கு மாறாக, இந்தமுறைகளைப் பின்பற்றாத நிலை எங்குளதோ அங்கு எவ்விதமான வெற்றியும் ஏற்படுவதில்லை அங்குத் தொழிலேனும் இருக்க ஏதில்லை; எப்பொருளாயினும் அதற்கு உயிரூட்டி உடலும், உருவமும் கொடுக்கின்ற இயல்பும், திண்மையும் இல்லாத நிலையிருக்கும். இந்த முறைகளைத் தன் மனத்தே கொள்ளாதவனாய் ஒரு மனிதனைப் படம் பிடித்துப் பார்க்கும்போது, குறைகளைக் குறித்த நமது அறிவு சிறிதளவாயினும், நிறைவுநிலை பெறாதாயினும் எவ்வித வெற்றிகரமான பணியைச் செய்பவனாகவும் அம்மனிதனை நாம் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.
மிகுதியான அளவிலோ குறைந்த அளவிலோ இந்த முறைகளே எவ்வகையான வெற்றியாயினும், அவையனைத்திற்குமான காரணக் கூறுகளாகும். ஆக்கம் அனைத்துடையவும் அடித்தளத்தில் இவையே வலுவுள்ள ஆதாரங்களாய் இருக்கின்றன; அத்தகைய ஒரு முடிவிற்கு வருவதற்குத் தோற்றங்கள் எத்துணைதான் எதிராயிருப்பினும், மக்கள் வெற்றியென அழைக்கும் சிறப்பை முடி சூடுகின்ற ஒவ்வொரு முயற்சியையும் அவையே உருவமைத்து நிலைப்படுத்துகின்றன.
ஒப்பிட்டுப்பார்க்கும்போது இந்த எட்டு அறங்கள் அனைத்தையும் அவற்றின் முழுமையான, நிறைவான நிலையில் வெற்றிவாய்ப்புள்ள ஒருசில மக்களே கைக்கொண்டொழுகுகின்றனர் என்பது உண்மையே. அவ்வாறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்; அவர்களே தலைவர்கள், ஆசிரியர்கள், மனித வழிகாட்டிகள், மனிதச் சமூக ஊன்றுகோல்கள், மனித இன வளர்ச்சி அணியின் வலிமைவாய்ந்த முன்னோடிகள்.
ஒரு மனிதனுடைய ஒழுக்கவரம்புகள் அவனடையும் வெற்றியின் வரம்புகளைக் குறித்து விடுகின்றன. எனவே, ஒருவனுடைய ஒழுக்கத் தகுதியைத் தெரிந்து கொள்வதே, அதைக் கணிதப்படி மதிப்பீடு செய்வதே, அவனுடைய இறுதியான வெற்றியையோ தோல்வியையோ தெரிந்து கொள்வதாகும். ஒழுக்கத்தூண்களால் தாங்கப்படுவது வரையில்தான் ஆக்கமெனும் கோயில் நிலைபேறு கொள்ள முடியும்; அவை வலுவிழந்துவிடின், அது இடர் சூழ்ந்ததாகி விடுகின்றது. அவை பின்னிழுக்கப்பட்டு விட்டால் அது அழிந்து மடியும்படி அசைந்தாடிச் சாம்பலாகிவிடுகின்றது.
ஒழுக்க முறைகளைப் புறக்கணிக்கவோ மீறவோ செய்யின், அங்கு இறுதியில் இயற்கையமைப்பின் காரணகாரியத் தொடர்பு முறையிலேயே தோல்வியும், ஏமாற்றமும் இன்றியமையாத விளைவுகளாகி விடுகின்றன; மேல்நோக்கி எறியப்படுகின்ற கல் நிலத்துக்குத் திரும்பி வருதல் போன்று, நல்லதோ கெட்டதோ ஏவி விடப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மீதே திரும்பி வருகின்றது. தீய நெறியானதோ நெறியற்றதோவான ஒவ்வொரு செயலும் அது குறிக்கொள்கின்ற முடிவையே முறியடித்துவிடுகின்றது. அதற்கு மாறாக, ஒழுக்கநெறி சார்ந்த ஒவ்வொரு செயலும் ஆக்கமெனும் ஆலய அமைப்பின் பிறிதொரு திண்மையான கல்லாகும்; அதைத் தாங்கி நிற்கும் தூண்களுக்குப் பிறிதொரு வலிமையும், செதுக்கப்பட்ட சிற்ப அழகும் அதுவே.
ஒழுக்க வலிமையிலும், அறிவிலும் தமக்குள்ள வளர்ச்சியுடன் இசைந்தே தனிமனிதர்களோடு, குடும்பங்களும், நாடுகளும் வளர்ந்து வளம் பெறுகின்றன; அம்மக்களின் ஒழுக்கச் சிதைவுக்கேற்ப அவர்கள் வீழ்ந்து தோல்வியடைகின்றனர்.
உலகப் பொருளில் அமைந்திருப்பது போலவே மனவியலிலும் உருவமும், திண்மையும் உடையதாயிருப்பது மட்டுமே நின்று நிலைபெற முடியும். தீயநெறி என்பது வெறுமை; அதனின்று எதையுமே உருவமைக்க முடியாது. அது அடிப்படையின் எதிர்மறை, நெறியின்மை என்பது அழிவு. அது உருவத்தின் எதிர்மறை. அது உள்ளக வெறுமை உண்டுபண்ணும் படிமுறையேயாகும். ஒழுக்க நெறியே அந்த அறிவுள்ள சிற்பி. ஒருவனிடம் அமைந்துள்ள ஒழுக்கமே அடிப்படை உருவம், கட்டமைக்கும் ஆற்றல் அனைத்தும் ஆகும். எப்போதும் தோல்வியடைந்து அழிவையும் உண்டு பண்ணுகின்ற நெறியின்மைக்கு எதிர்மறையாக இருப்பதால், ஒழுக்கநெறி எப்போதும் கட்டமைத்துக் காக்கின்றது; ஏனெனின், அதுவே அதன் இயல்பு. தனிமனிதர்களிடையேயும் சரி நாடுகளிடையேயும் சரி ஒழுக்க நெறியே எங்கணும் சிறந்த சொத்தாகும்.
ஒழுக்கநெறி தோற்கடிக்கப்பட முடியாதது; இறுதிவரை அதில் உறுதியாக நிற்பவன் கைப்பற்ற முடியாத ஓர் அரணில் இருப்பவனாகின்றான்; எனவே அவனுடைய வெற்றி உறுதியாக்கப்பட்டு விடுகின்றது. அவனுக்குத் துன்பங்கள், மிகக் கூடுதலான அளவில் ஏற்பட்டே தீரும்; ஏனெனின் போரின்றி வெற்றியிருக்க முடியாது. மேலும், நேர்த்தியாகவும், நிறைவுற்றதாகவும் கைவினைப் பட்டிருக்கும் பிற ஒவ்வொன்றைப் போலவும், அவைகளின் வலிமையை ஆய்வுசெய்து உண்மையெனக் காட்டுவது நிலைபெறு அற முறையில் நடப்பதாகும். உலகில் வலுவுடைய, இணையற்ற தேவைகளை நிறைவேற்ற வேண்டிய உருக்குக் கம்பிகள் வார்ப்படைத் தொழிற்சாலையினின்றும் வெளியே அனுப்படு முன்பு அவற்றின் உரத்தையும், தகுதியையும் ஆராயும் பொருட்டு இரும்பு பதப்படுத்துவோரால் அவை ஆய்வுக் குட்படுத்தப்பட்டேயாக வேண்டும்.
கடுமையான வெப்பத்தால் உடைந்து விடுகின்ற செங்கல்களைச் செங்கல் செய்பவர் ஒதுக்கி எறிந்து விடுகின்றார், எனவே, மிகப் பெரிய அளவிலும் நீடித்து நிலைபெறும் வகையிலும் வெற்றியடைய வேண்டிய ஒருவன் தீங்கான சூழ்நிலைகளின் கடினப்பாடுகளைத் தாண்டிவிடுவான்; மேலும், அவாவெழுச்சியெனும் நெருப்பு அவனுடைய ஒழுக்க இயல்பிலிருந்து வெறுமனே வேரறுக்கப்படுவதில்லை; அது வலிமையூட்டப் பெற்று அழகு மேற்றப் படுகின்றது. உயர்ந்த தேவைக்குத் தகுதியாயிருக்கின்ற நிலையில் நன்கு கைவினைப்பட்ட உருக்குக் கம்பியைப் போன்று அவனிருப்பான்; இரும்மைப் பதனிடுவோர் நன்கு கைவினைப்பட்ட கம்பிகளைக் கவனித்துக் கொள்வது போன்று, அவனைப் பயன் நழுவிவிடாதபடி உலகம் கவனித்துக் கொள்ளும்.
நெறியற்ற மனிதன் தனது தீய வழிப்பலன்களைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே அவனுடைய சட்டைப் பையில் இருக்கின்ற ஓட்டையின் வழியே அவனுடைய பொன் விழுந்து கொண்டேயிருக்கின்றது. ஒழுக்க நெறியுடன் வாழ்வு தொடங்குபவனும் ஆய்வுநிலையின் வேளையின்போது பலன் கருதி அதைக் கைவிடுவானேயாகில், அவன் முதன் முதலில் சூடேற்றப்பட்டதும் உடைந்து விடுகின்ற செங்கல்லைப் போன்றவனே ஆவான்; அவன் உதவிக்கு உகந்தவனன்று; உலகம் அவனை உதறியெடுத்து விடுகின்றது; முடிந்த முடிவாகவே அவ்வாறு உதறப்பட்டு விடுவதில்லை. ஏனெனின், அவன் உயிருள்ள மனிதன், செங்கல்லன்று; அவன் வாழமுடியும், கற்றுக் கொள்ள முடியும், இரங்கிச் சீர்திருந்த முடியும், இழந்ததைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வெற்றியைத் தருவதும், உயிரோட்டமும், ஆக்கம் அனைத்திற்கும் வலிமையூட்டும் கருப்பொருளும் ஒழுக்க ஆற்றலேயாகும்; ஆனால், வெற்றியில் பல்வேறு நிலைகள் உள்ளன. எனவே, பேரளவானதும் நீடு நிலைப்பதுமான வெற்றியை அடையும் பொருட்டு மனிதன் ஒவ்வொரு திசையில் தோல்வியுற்று விடுதல் அடிக்கடி இழிவானதாகி விடுகின்றது. ஆனால் இந் நூலில் விளக்கப்படுகின்ற பொருள், ஓர் அறிவனோ, ஓர் ஆன்மீக மேதையோ பெறுகின்ற வெற்றியைப் பொறுத்ததன்று; ஆனால், சாதாரண ஆண், பெண்ணுடைய சேமம், நல்வாழ்வு, மகிழ்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொள்ளும் வெற்றியைப் பொறுத்ததே யாகும்; ஒரே சொல்லில் கூறுவதென்றால் மனித இனத்திரளின் ஆக்கத்தைப் பொறுத்ததாகும்; அதாவது, முன்னிலைப்படுவதாலும், இம்மைக்குரியதாயிருப்பதாலும் அது ஏறத்தாழ செல்வத்தைப் பொறுத்ததாயிருப்பினும் அதனிடத்தே அடைப்பட்டுவிடாமல், மனிதச் செயல்கள் அனைத்தையும், குறிப்பாக மகிழ்ச்சி என்றழைக்கப்படுகின்ற மனநிறைவையும் ஆக்கம் என்றழைக்கப்படுகின்ற ஆறுதலையும் உண்டு பண்ணுகின்ற சூழ்நிலைகளுடன் தனி மனிதன் கொண்டிருக்கின்ற பிணைப்பைச் சார்ந்த செயல்வினைகளைப் பரந்து தழுவிக் கொள்கின்ற வெற்றியும், ஆக்கமுமாகும். மனித இனத்திற்கு அத்துணை விருப்பம் ஊட்டுகின்ற இப்பயனை எய்தற்கு எட்டு அறமுறை எவ்வாறு இயங்குகின்றன. ஆக்கம் எனும் கூரை அதனைத் தாங்கி நிற்கும் அடிநிலைகளால் எவ்வாறு மேலெழுப்பப்பட்டுப் பாதுகாப்புப் பெறுகின்றது என்பதை நாம் இனிக் காண்போம்.