வெற்றிக்கு எட்டு வழிகள்/004-010
காலையில் கடைசி நொடி வரையில் படுக்கையிலேயே புரண்டுவிட்டுக் காலையுணவைத் தொடங்கும் நேரத்திற்குக் கண்விழிக்கும் மனிதனைக் காட்டிலும், சீர்தூக்கி ஆராய்ந்து வருமுன்னறியும் பொருட்டுச் சிந்திக்கவும், திட்டமிடவும் அதிகாலையில் துயிலெழும் மனிதனிடம், அவனது குறிப்பிட்ட முயற்சியில், மிக்க திறமையும், வெற்றியும் காணக் கிடக்கும். காலையுணவிற்கு முன்பு இவ்வகையில் செலவிடப்படுகின்ற ஒரு மணி நேரம், ஒருவனுடைய முயற்சிகளைப் பயனுடையதாக்குவதில் மிகுந்த உதவியாயிருக்கும்.
மனத்தை அமைதியாக தெளிவுடையதாக்கி ஒருவனின் ஆற்றல்களை மிகுந்த சக்தியும், பயனும் உடையனவாக்குதற்கு இது ஒரு கருவியாகும். காலையில் எட்டுமணிக்கு முன்பு பெறுகின்ற வெற்றியே சிறந்ததும், மிகுந்த நிலைபேறுடையதுமாகும். பிற சூழ்நிலைகள் அனைத்தும் சமமாயிருக்கின்ற நிலையில் ஆறு மணிக்குத் தனது உழைப்பில் ஈடுபடுகின்றவன் எட்டு மணிவரை படுக்கையிலே இருக்கின்ற மனிதனை விட எப்போதும் நீண்ட தூரம் முன்னேறிவிடுவான். படுக்கை விரும்பி வாழ்வுப் பந்தயத்தில் தனக்குத் தான் பெரும் முட்டுக்கட்டை போட்டுக் கொள்பவனாகி விடுகின்றான். அதிகாலையில் துயிலெழுகின்ற போட்டியாளன் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்றுமணி நேரங்கள் முன்னரே உழைப்பைத் தொடங்குவதற்கு இடந் தந்துவிடுகின்றான். தனது பொழுதைப் பொறுத்துத் தனக்குத் தானே விதித்துக் கொண்ட அத்தகைய இடர்ப்பாட்டை வைத்துக் கொண்டு எவ்வாறு அவன் வெற்றியடைந்துவிடலாம் என நம்ப முடியும்? ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்றுமணி நேரங்கள் முன்னரே தொடங்கியதன் பயன் ஓராண்டு முடிவில் படிப்படியாகச் சேகரிக்கப்பட்ட விளைவுகளின் தொகுப்பாகிய வெற்றியின்பால் காணக்கிடைக்கும்.
படுக்கைப் பிரியனுங் கூடக் கண் விழித்தெழுந்த பின்பு இழந்த பொழுதை ஈடு செய்தற் பொருட்டு எப்போதும் பரபரப்படைகின்றான். அது மேலும் பொழுதை இழக்கும் நிலையிலேயே முடிகின்றது. ஏனெனின், பரபரப்பு எப்போதும் தான் குறிக்கொண்டதையே தோற்கடித்து விடும். அதிகாலை துயிலெழுவதனால் தனது பொழுதைச் சிக்கனப் படுத்திக் கொள்பவன் பரபரப்படைய வேண்டிய தேவையேயில்லை. ஏனெனில், எப்போதும் அவன் குறித்த நேரத்திற்கு முன்பே ஆயத்தமாகி விடுகின்றான். எப்போதும் அவன் தன் வேலையை நன்கு செய்து முடிக்கின்றான்; அவன் கைக் கொண்ட பணி எதுவாயினும் அதை அமைதியுடன் ஆழ்ந்து எண்ணி, கவனமுடன் நன் முறையில் செய்யவியலும். அவனுடைய நற் பழக்கம் நாள் முடிவில் மகிழ்ச்சி நிரம்பிய மனமெனுந் தோற்றத்திலும், திறமையுடன் வெற்றிகரமாகவும் செய்து முடிக்கப்பட்ட உழைப்பின் உருவமெனும் பெரும் விளைவுகளிலும் தன்னை வெளிப்படுத்திவிடும்.
காலத்தைச் சிக்கனப் படுத்துவதிலுங்கூட ஒரு மனிதன் தன் வாழ்வினின்றும் நீக்க வேண்டிய காரியங்கள் பல இருக்கும். அவன் ஆசை கொண்டு தான் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகின்ற சில காரியங்களையும், நாட்டங்களையும் கூட வாழ்வின் சிறப்புக் குறிக்கோளிற்காகத் தியாகம் செய்தாக வேண்டும். ஒருவனின் அன்றாட வாழ்வினின்றும் சிறப்பற்றவற்றை உற்றறிந்து ஒதுக்குதல் பெரும் ஆக்கங்கள் அனைத்தினிடத்தும் உயிர்நிலையான கூறாகும். மேன்மையான மனிதர் அனைவரும் சிக்கனத்தின் இப்பிரிவில் திறமைசாலிகளாக இருக்கின்றனர். அவர்களது மேன்மையைப் பெருக்குவதில் இது முக்கிய பங்கு கொள்கின்றது. மேலும், உள்ளம், உரை, செயல் ஆகியவற்றுள்ளும் புகுந்து அவற்றினின்றும் தேவையற்றவை, தடைவிதிப்பவை, குறிக்கொண்ட முடிவை எய்த உடனிருந்து உதவாதவை இவற்றை நீக்குவது ஒருவகைச் சிக்கனமாகும்.
உண்மையான செட்டுக்காரனின் மனம், வாழ்வெனும் வாணிபத்திற்குப் பயன்படுவன தவிர, பிற ஒவ்வொன்றும் நழுவிச் செல்ல விட்டுவிடுகின்ற சல்லடையாகும். மேலும், தேய்வையும், ஆற்றல் பாழ்படுதலையும் வெகுவாகக் குறைக்கும் வண்ணம் அவன் தேவையான சொற்களை மட்டுமே கையாளுகின்றான். தேவையான செயல்களை மட்டுமே செய்கின்றான்.
பொழுதோடு படுக்கச் சென்று பொழுதோடு விழித்தெழுந்து உழைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் நிறைந்த எண்ணத்தாலும், செயல் முற்றிய செயலாலும் நிரப்புவது, இதுவே நேரத்தைப் பொறுத்த உண்மையான சிக்கனம்.
நற்பழக்கங்களை மேற்கொள்வதால் ஆற்றல் சிக்கனப் படுத்தப் படுகின்றது. பழிச்செயல்கள் அனைத்தும் ஆற்றலைக் கவனமின்றிச் செலவிடுவதேயாகும். பேணிக் காத்துச் சரியான திசைகளில் பயன்படுத்தினால் மனிதர் மாபெரும் வெற்றியைப் பெறுவதை இயலுவதாக்கப் போதுமான ஆற்றல் சிந்னையின்றித் தீய பழக்கங்களில் பாழ்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்ட ஆறு முக்கிய காரியங்களில் சிக்கனம் கடைப்பிடிக்கப் பெற்றால், ஒருவனின் ஆற்றலைப் பேணிக் காப்பதில் பெருமளவு வேலை முடிந்துவிடும்; ஆனால், மனிதன் பின்னும் முன்னேற வேண்டும்; தீயநெறி வகைகள் அனைத்தையும் தவிர்ப்பதின் மூலம் தனது உயிர்ப்பாற்றலைக் கவனமுடன் செட்டாக நடத்த வேண்டும்; இங்குத் தீயநெறி என்பது உடல் சார்ந்த இன்ப நுகர்ச்சிகள், தூய்மையின்மைகள் இவற்றின் வகைகள் அனைத்தையும் மட்டுமே குறிப்பதாகாது. ஆனால் மனத்தை வெறுமையாக்கி, அதை எந்தச் சிறப்பான பணிக்கோ பாராட்டத் தக்க செயலாக்கத்துக்கோ தகுதியற்றதாக்கிவிடுகின்ற பரபரப்பு, கவலை, கிளர்ச்சி, சோர்வு, சினம், குறைகூறல், பொறாமை ஆகிய மனத் தீயநெறிகள் அனைத்தையுங் கூடக் குறிப்பதாகும். அவை மனச் சிதறலின் சாதாரணத் தோற்றங்களாகும். சிறப்புள்ள மனத்தின் அவற்றைத் தவிர்த்து வெற்றி காணுவது எவ்வாறு என்பதைக் கற்றுணர வேண்டும்.
இழிவான மனநிலை அடிக்கடி வந்துற்று வெளிகொள்வதால் பாழ்படுத்தப்படுகின்ற ஆற்றலை அடக்கியாண்டு நேர்பட இயக்கினால், அது மனிதனுக்கு மனவலிமையும், குணவியல்புத் திட்பமும், சாதனைக்கான பெரும் ஆற்றலைத் தரும். சினமிக்க மனிதன் தனது மனவாற்றல் சிதறியதால் வலுவிழந்தவனாக்கப்பட்ட வலிமையுடைய மனிதனேயாவான். தனது வலிமையை வெளிக்காட்ட அவனுக்குத் தன்னடக்கம் தேவைப்படுகின்றது. வாழ்வின் எத் துறையிலாயினும் சரி, அமைதியான மனிதன் அவனை விட எப்போதும் மேம்பட்டவனேயாவான். வெற்றி, பிறரைக் குறித்த மதிப்பீடு இரண்டிலும் அவன் எப்போதும் முன்னவனை மிஞ்சிவிடுவான். எம் மனிதனாயினும் சரி, மனத்தின் தீய பழக்கங்களையும், தீய இயல்புகளையும் ஊட்டி வளர்க்கத் தன் ஆற்றல்களைச் சிதறடிக்க இடங் கொடுப்பவனாக இருக்கவியலாது.
கேடுதரும் இன்ப நுகர்வு ஒவ்வொன்றும் ஏதேனும் ஒருவகைத் துன்பமாகவோ குறைபாடாகவோ அவனிடமே திரும்பி வந்துவிடும். கலவரப்படவோ கீழ்த்தரச் சார்புகளுக்குப் பரிந்து உதவவோ செய்கின்ற ஒவ்வொரு கணப்பொழுதும் அவனுடைய முன்னேற்றத்தை மேலும் கடினப் பாடுடையதாக்கி விடும்; அவன் அடையவேண்டுமென்று விரும்பிய உயர்ந்த வானுலகை எய்துவதினின்றும் அவனைப் பின்னிழுத்துப் பிடித்துக் கொள்ளும்; நேர்மாறாக, தனது ஆற்றல்களை ஒழுங்குறுத்தித் தன் வாழ்வின் சிறப்புக் கடமையை நோக்கி அவற்றைத் திருப்பிவிடுபவன் விரைவான முன்னேற்றமடைவான்; அவன் வெற்றியெனும் பொன்னகரத்தை அடைவதிலிருந்து அவனை எதுவும் தடுத்து நிறுத்த இயலாது.
சிக்கனம் என்பது வெறும் பணச் சேமிப்பு மட்டுமின்றி ஆழ்ந்த கருத்துடையதும் நெடுந் தொலைவு எட்டக் கூடியதுமான ஒன்றாகும் என்பதை நாம் காணலாம். நமது இயல்பின் ஒவ்வொரு பருவத்தையும் அது தொடுகின்றது. “சிறு நாணயங்களைக் கவனித்துக் கொண்டால் போதும், பெரு நாணயங்கள் தம்மைத்தான் கவனித்துக் கொள்ளும்” என்னும் முதுமொழியை ஒரு நீதிக் கதையாகக் கொள்ளலாம்; ஏனெனின், மனிதரின் கீழ்த்தர இச்சைகளை இயற்கை அன்று என்று கருதினால், அவை தம்மளவில் தீயனவன்று; அந்த ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவதே தீயதாகும்; ஆனால், இச்சைப்போக்கான இந்த ஆற்றலைக் கவனித்துச் சேகரித்து உருமாற்றிவிட்டால் அது குணயியல்பின் ஆற்றலாகத் திரும்பத் தோன்றிவிடும். ஆனால் நன்முறையில் பயன்படுத்துவதற்காக அதைக் கவனித்துக் கொள்வதென்பது இச்சைகளென்னும் சிறு நாணயத்தைச் சேகரித்து வைத்து நன்மையெனும் தங்கப் பெரு நாணயங்களைப் பெறுவதற்கேயாகும். எனவே, கீழ்நிலை ஆற்றல்களைக் கவனித்துக் கொண்டால் போதுமானது. மிக உயர்ந்த பேறுகள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளும்.
சிக்கனம் எனும் தூண் உறுதியகாகக் கட்டப் பெற்றிருப்பின், அது பெருமளவும் இந்த நான்கு பண்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
1. மட்டு | 3. வளப்பம் |
2. திறப்பாடு | 4. உற்பவம் |
மட்டு சிக்கனத்தின் வலுமிக்க உட்கருவாகும். அது செயல்கள் அனைத்திலும் மையப் பாதையைக் கண்டு கொள்வதன் மூலம் புறக் கோடிகளைத் தவிர்த்து விடுகின்றது. தேவையற்றதிலும், கேடு பயப்பதிலுமிருந்து விலகி நிற்பதிலும் அதனியல்பு அமைந்து கிடக்கின்றது. தீயனவாய் இருப்பவற்றில் அளவு என்ற ஒரு காரியம் இருக்கவே முடியாது. ஏனெனில், அது மட்டு மீறியதாகவே இருக்கும். உண்மையான மிதம் தீயவையினின்றும் விலகி நிற்கின்றது. நம் கைகளை நெருப்பினுள் காட்டுவது நெருப்பை நாம் மட்டாகப் பயன்படுத்துவதாகாது. பாதுகாப்பான தொலைவிற்கு அப்பாலிருந்து கொண்டு சூடேற்றிக் கொள்வதே அதை மட்டாகப் பயன்படுத்துவதாகும். மனிதன் அதைத் தொடுவதாயிருப்பினும் தீமை அவனை எரித்துவிடக் கூடிய ஒரு தீயே ஆகும்.
புகை பிடித்தல், பொடிபோடுதல், மதுவருந்தல், சூதாடல் போன்ற தீயநெறிகள் ஆயிரக் கணக்கானவர்களை நலக்குறைவு, துன்பம், தோல்வி இவற்றிற்கு இழுத்துக் தள்ளியிருப்பினும், நலம், இன்பம், வெற்றி இவற்றை அடைய எவருக்கும் என்றும் உதவி செய்ததில்லை. திறமைகளும் வாய்ப்புகளும் சமமாயிருக்கின்ற இருவரிடையே, அவற்றைத் தவிர்த்து நடக்கும் மனிதன் அவற்றை நாடியோடும் மனிதனை விட எப்போதும் முன்னேறியே இருப்பான். நலமுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழ்ந்த மக்கள் தம் பழக்கங்களில் எப்போதும் மட்டாகவும், செட்டாகவுமே இருந்து வந்துள்ளனர். வாழ்வு ஆற்றல்கள் மட்டால் பாதுகாக்கப்படுகின்றன; மிதமிஞ்சுதலால் அவை அழிக்கப்படுகின்றன. மட்டு மீறியவர்கள் தம் மடமையால் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் தம் ஆற்றல்களை வலுவிழக்கச் செய்து, தம் திறமைகளைக் குன்றச் செய்துவிடுகின்றனர். நிலைபேறு கொள்ளும் வெற்றியைப் பெறுதற்கு மாற்றாகக் கூடிய அளவில் நிலைபேறற்ற, உறுதியற்ற ஆக்கத்தையே அடைகின்றனர்.
ஒருவனின் வலிமைகளையும், ஆற்றல்களையும் சரிவரப் பேணிக் காப்பதினின்றுமே திறமைப்பாடு தோன்றுகின்றது. திறமை அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்துவதேயாகும். சிறப்புத் திறமையாகவும், தனித் திறமையாகவும் இருக்கின்ற மேம்பட்ட திறமை ஒருமுகப்படுத்திய வலிமையின் உயர்ந்த நிலையாகும். மனிதர் தாம் நாட்டங் கொள்கின்ற ஒன்றினிடம் எப்போதும் திறமை உடையவராகவே இருக்கின்றனர்; ஏனெனில், மனம் ஏறத்தாழ இடையறாது அதைச் சுற்றிய வண்ணமாகவே இருக்கின்றது. எண்ணத்தைப் புதுப்புனைவாகவும், செயலாகவும் உருமாற்றுகின்ற அந்த மனச்சிக்கனத்தின் விளைவே, திறமைப்பாடாகும். திறமைப்பாடின்றி ஆக்கம் இருக்கவே முடியாது.
ஒருவனின் ஆக்கம் அவனுடைய திறமையின் அளவைப் பொறுத்தே அமைந்திருக்கும். திறமைப்பாடில்லாதோர், இயற்கையான தேர்வு முறையின் மூலம், குறைந்த ஊதியம் பெறுவோர் அன்றி வேலையற்றோர் இவர்களின் வரிசையில் தமக்கொத்த இடங்களில் அமைவுற்று விடுகின்றனர். ஏனெனின், தன்னுடைய வேலையைச் சரிவரச் செய்யவியலாத – செய்யத் தலைப்படாத ஒரு மனிதனை யார் வேலைக்கமர்த்துவர்? அத்தகு மனிதனை இரக்கச் சிந்தையால் எவரேனும் பணிமுதல்வர் சிற்சில சமயங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மிகவும் அரிதானது. ஏனெனின், வாணிப நிலையங்கள், அலுவலகங்கள், குடும்பங்கள் ஒழுங்கமைந்த செயல்முறையுடைய இடங்கள் ஆகிய அனைத்தும் ஈகைக்கான நிலையங்களல்ல. ஆனால், அவற்றின் தனித்தனி உறுப்பினர்களின் தகுதி, திறப்பாடு இவற்றால் நிலைத்து நிற்கவோ மடியவோ செய்கின்ற தொழில் நிறுவனங்களாகும்.
ஒருவன் தன் கூட்டாளிகளின் இடையில் வகிக்கின்ற இடத்தைத் திறமைப்பாடே பெரிதும் முடிவு செய்கின்றது; மிகுதியான ஆற்றல்கள் வளர வளர, அதுவே அவனைப் படிப்படியாக உயர்ந்த நிலைகளை எய்த வழி காட்டுகின்றது. நல்ல தொழிலாளி தன் கருவிகளைக் கொண்டு திறமையுடையவனாக இருக்கின்றான்; அதேபோது, நல்ல மனிதன் தன் சிந்தனையைக் கொண்டு திறமையுடையவனாக இருக்கின்றான். நல்லறிவே திறமையின் மேன்மையான வடிவம். உளச்சார்பு தொடக்க நன்மை, மிகச்சிறிய காரியமுட்பட ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்க ஒரே நேர்வழியும், ஆயிரம் தவறான வழிகளும் உண்டு. இந்த ஒரே நேர் வழியைக் கண்டுபிடித்து அதன் வழி ஒழுகுவதிலேயே திறமை அடங்கியிருக்கின்றது. அந்த ஆயிரம் தவறான வழிகளின் நடுவே திறப்பாடற்றவன் குழப்பமுற்றுக் குளறுபடி செய்வதோடு நேரான வழியைச் சுட்டிக் காட்டியும் கூட