வேங்கடம் முதல் குமரி வரை 1/002-027
2. காளத்தி அப்பர்
'இறைவனிடத்து இடையறா அன்பு செலுத்திய நாயன்மார்கள் அறுபத்து மூவரில் செயற்கரிய செயல் செய்தார் யார்?' என்பது ஒரு பட்டி மண்டபத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள். அறுபத்து மூன்று அன்பர்களது செயலையும் அலசி ஆராய்வது சிரமம் என்று கருதிப் பட்டினத்தார். குறிப்பிடும் மூன்று. திருத்தொண்டர்களை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர்.
வாளால் மகவு அரிந்து ஊட்ட
வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமைதுறக்க வல்லேன்
அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடந்து அப்ப
வல்லேன் அல்லன்; நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்
காளத்தி அப்பருக்கே?
என்று சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் மூவரையும் போல, அரிய செயல் செய்து இறைவன் அருளைப் பெறத் தம்மால் இயல வில்லையே என்று ஏங்கி இருக்கிறார் பட்டினத்தார்.
இம்மூவர் செயலையுமே அன்று அறிஞர்கள் விவாதித்தார்கள். கடைசியில் தலைவரது தீர்ப்பு கண்ணப்பர் பக்கமே இருந்தது. திருநீலகண்டர் தம் உறுதியில் நிலைத்து நிற்பதற்கு அவர் மனைவி இறைவன் பேரிலேயே ஆணை இட வேண்டியிருந்தது. சிறுத்தொண்டர் பெற்ற மகனையே அரிந்து கறி சமைத்த செயலில் 'எதுவும் எனக்கு அரியது அன்று' என்று சொல்லும் ஆணவம் சிறிது கலந்து விடுகிறது. கண்ணப்பர் ஒருவர்தான் பிறருடைய தூண்டுதல் ஒன்றுமே இல்லாமல், 'அயல் அறியா அன்பை' இறைவனி டம் செலுத்துகிறார். ஆதலால் அவர் அன்பே சிறந்தது. அவர் செய்ததே அரிய செயல் என்று முடிவு கட்டினார் பட்டி மண்டபத் தலைவர்.
இப்படி அறுபத்து மூன்று அன்பர்களில் இறைவனிடம் அன்பு செலுத்தியவர்களில் தலை நிற்கிறார் கண்ணப்பர். அத்தகைய கண்ணப்பராலே பெருமை பெற்றவர்தான் காளத்தி அப்பர். கொலைத் தொழிலே புரியும் வேட்டுவக் குலத்திலே பிறந்த திண்ணனார், வேட்டையாடச் சென்ற இடத்திலே, அங்குள்ள குடுமித் தேவருக்கு ஆட்பட்டு, அவருக்கு இயல்பான முறையில் வழிபட்டு நின்றவர். இறைவனது வலக் கண்ணில் உதிரம் ஒழுகியபோது, தம் வலக் கண்ணையே தோண்டி எடுத்து அப்பி, வழியும் இரத்தத்தைத் துடைத்தவர்.
திரும்பவும் இறைவனது இடக் கண்ணிலும் இரத்தம் வடிந்தபோது, தக்க மருந்து தம்மிடம் உண்டு என்பதால், குதூகலித்துத் தம் இடக் கண்ணையும் தோண்டி எடுக்க முனைந்தவர். திண்ணனாரது திண்மையான அன்பைக் கண்ட இறைவனும், 'நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!' என்று அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தும் பாக்கியம் பெற்றவர்.
இத்தகைய 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' தம்மிடம் இல்லையே என்றுதான் மாணிக்கவாசகரும். அகங்கரைந்து உருகுகிறார். “வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன், மலராகு நயனம் காய்கணையால் கிடந்து ஈசன் அடி கூடினான்“ என்று ஞானசம்பந்தர் வியந்து வியந்து பாடுகின்றார்.
ஒரே ஒரு ரகசியம். இன்று காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் காளத்தி அப்பருக்குச் சொந்தமாக ஒரு கண் கூட இல்லை. இடக் கண்ணோ அம்மையின் கண், வலக்கண்ணோ , கண்ணப்பரது கண். ஆதலால் இரு கண்ணும் இழந்து நிற்கும் ஏழையாக வாழ்கிறார் அவர்.
காளத்தி வாழ் கண்டனை நினைத்தால், கண்ணப்பனை நினைக்கிறோம். நாம் மாத்திரம் என்ன? 'மனத்தகத்தான் தலைமேலான், வாக்கில் உள்ளான், வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான், இமையவர் தம் சிரத்தின் மேலான்' என்றெல்லாம் இறைவன் இருக்கும் இடங்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே போன அப்பரும், கடைசியில், 'காளத்தியான் அவன் என் கண்ணுளானே' என்றுதானே முடிக்கிறார். இறைவனது அருள் பொழியும் கண்ணை நினைத்தால் கண்ணப்பனை நினைக்கிறோம். கண்ணப்பனை நினைத்தால் காளத்தியானை நினைக்கிறோம்.
இந்தக் காளத்தியான் இருக்கும் கோயிலைத் தன்னகத்தடக்கிய ஊர்தான் இன்று காளாஸ்தி என்றும் காளஹஸ்தி என்றும் சீகாளத்தி என்றும் வழங்கும் காளத்தி, சீ, காளம், அத்தி (சிலந்தி, பாம்பு, யானை) மூன்றும் வழிபட்ட காரணத்தால் சீகாளத்தி என்று இத்தலம் பெயர் பெற்றது என்று ஸ்தல புராணம் கூறும்.
சிலந்தி தன் வாயால் நூல் இழைத்து, அந்நூலாலேயே இறைவனுக்குப் பந்தல் இடுகிறது. அப்பந்தல் தீபச் சுடரால் அழிந்தது கண்டு, அத் தீபத்திலேயே தானும் விழுந்து மடிந்து இறைவன் திருவடி அடைகிறது,
காளன் என்னும் பாம்போ தன்னிடமிருந்த அருமையான ரத்தினத்தை இறைவன் திருமுடியில் சாத்தி அலங்கரிக்கின்றது.
அத்தி என்னும் கணத் தலைவன் யானையாக அவதரித்து தன் துதிக்கையாலேயே நீர் முகந்து, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கின்றது.
யானை செய்யும் திருமஞ்சனம் புஷ்ப அலங்காரம் எல்லாம் சுத்தமாக இல்லை என்று பாம்பு நினைக்கிறது. அதனால் யானையின் துதிக்கையில் பாம்பு நுழைந்து யானைக்கு வேதனை தருகிறது. யானையும் தும்பிக்கையை ஓங்கி அறைந்து, பாம்பைக் கொல்கிறது. பாம்பின் விஷம் ஏறிய காரணத்தால் யானையுமே மாண்டு மடிகிறது.
இப்படியே சிலந்தி பாம்பு யானை மூன்றும் இத்தலத்திலேயே முத்தி பெறுகின்றன. அதனால் தலமும் சீகாளத்தி என்றே பெயர் பெறுகிறது.
இந்தக் காளத்தி அப்பரது கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று. இதை வாயுத் தலம் என்பார்கள். அதற்கேற்ப கர்ப்ப
கிருஹத்தில் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் விளக்குகளில் இறைவன் திரு முடிக்கு அணித்தே உள்ள ஒரு விளக்கின் சுடர் மட்டும் காற்றிலே அசைவுற்று எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விளக்குக்கு மட்டும் காற்று எங்கிருந்து வருகிறது என்பது கண்டறியாத அதிசயமாகவே இருக்கிறது.
இது வாயுத்தலம் என்பதற்கும் ஒரு சிறு கதை. ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு பலப் பரீக்ஷை, மேருமலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடிக்க, வாயு தன் பலங்கொண்ட மட்டும் காற்றை எழுப்பி, மலையை அசைக்கக், கடைசியில் அம்மலையின் பிஞ்சுகள் மூன்று பறித்து எறியப்பட, அப்படி எறியப்பட்ட மலைப் பிஞ்சு ஒன்றே இங்கு விழுந்து, காளத்தி மலையாக உருவாகி இருக்கிறது என்பது கர்ண பரம்பரை.
இக் காளத்தி அப்பர் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் ரயிலிலே செல்வதானால், சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்று, கூடூர் செல்லும் ரயிலில் மாறி, ரேணிகுண்டாவிலிருந்து பன்னிரண்டு மைல் செல்ல வேணும். இல்லை, காரிலோ பஸ்ஸிலோ சென்னையிலிருந்து நேரடியாக எண்பது மைல் சென்று, இத்தலத்தை அடையலாம். மேற்கே இருந்து வருகிறவர்கள் திருப்பதி சென்று, திருமலை ஏறி வேங்கடவனைத் தரிசித்து விட்டுப் பின்னர் காளத்தி வந்து சேரலாம்.
ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றங் கரையிலே அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று தொழலாம். கோயில் வாசலிலே ஒரு பெரிய கோபுரம்; காளிகோபுரம் என்று பெயர். ஆனால், இந்தக் கோபுரத்துக்கும் கோயிலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தனித்து நிற்கிறது.
பக்கத்தில் உள்ள சிறிய கோபுர வாயிலில் நுழைந்து வளைந்து வளைந்து சென்றால் தென்பக்கம் உள்ள கோயிலின் பிரதான வாயிலுக்கு வந்து சேருவோம். அதன்பின் கோயிலில் நுழைந்து, வலமாக வந்தால், மேற்கு நோக்கியவராய் இருக்கும் காளத்தியப்பரைத் தரிசிக்கலாம்.
இவர் சிவலிங்கத்தில் ஒரு புதிய உருவை ஏற்றிருக்கிறார். மூன்று நான்கடி உயரம். அடியில் பெருத்து முடியில் கூர்மையாக ஒடுங்கிய மூர்த்தி. மாலை போட்டு அலங்கரிப்பதற்கு என்று ஒரு தனிச் சட்டம். அதை விலக்கிவிட்டு அர்ச்சகர் ஹாரத்தி பண்ணினால், சிலந்தி, நாகம், யானைக் கொம்புகளோடு கண்ணப்பரது ஒரு கண்ணும் லிங்கத் திருஉருவில் தெரியும். அந்தராளத்திலே கூப்பிய கையனாய் வில்லைத் தாங்கிக் கொண்டு, கண்ணப்பரும் சிலை உருவிலே நிற்கிறார் அங்கே.
காளத்தி அப்பரை வணங்கித் திரும்பவும் வலமாகச் சுற்றினால், கிழக்கே பார்த்த திருக்கோயிலில் ஞானப் பூங்கோதை நிற்கிறாள், கம்பீரமான திரு உரு. இந்த "வண்டாடும் குழல் உமையைப் பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனே கண்டார்கள் காதலிக்கும் கணநாதனாம் காளத்தியான்' என்பர் சுந்தரர். இன்னும் கோயிலுக்குள் எண்ணற்ற பிராகாரங்கள்.
வெளியேயும் ஒரு மண்டபத்தில் கண்ணப்பர் சுமார் ஐந்தடி உயரத்தில், நல்ல கற்சிலை வடிவில், இது தவிரச் செப்புச் சிலை வடிவிலும் அவர் உண்டு .
இவைகளையெல்லாம் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி இல்லை. கோயிலுக்குள் நுழையும் போதேதான் காமிராவைக் கைப்பற்றிக் கொள்கிறார்களே, கோயில் நிர்வாகிகள். ஆனால், இங்குள்ள கண்ணப்பரைக் காட்டிலும் அழகான கண்ணப்பர் ஒருவரைச் சோழ நாட்டுச் சிற்பி கல்லில் உருவாக்கித் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் நிறுத்தி இருக்கிறான். கண்ணப்பர் தமிழ் மக்களின் பொது உடைமைப் பொருளாயிற்றே. அவரைத் தமிழ் நாட்டுப் புராணங்கள் எல்லாம் பாராட்டிப் புகழ்வது போலவே, சோழநாட்டுச் சிற்பியும் வடித்தெடுத்து நிறுத்தி இருக்கிறான்.
இந்தக் காளத்தியப்பர் கோயில் பழுதுற்றிருந்ததைத் தேவ கோட்டைமே. அருநா. ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் பத்து லக்ஷம் செலவில் புதுப்பித்திருக்கின்றனர். இவ்வளவு செலவு செய்தும் உட்கோயில்களையே புதுப்பிக்க முடிந்திருக்கிறது. மற்றவை எல்லாம் பழைய கோயிலாகவே இருக்கின்றன, இன்றும். புதுப்பித்த ராமநாதன் செட்டியார், கோயிலுக்கு வெளியே பொன் முகலி ஆற்றுக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கத்திலே ஒரு சிறு மண்டபத்திலே சிலை உருவில் நின்று கொண்டிருக்கிறார். அவரது பக்திச் சிரத்தையைப் பற்றி எவ்வளவோ சொல்கிறார்கள், மக்கள்.
கோயிலின் பின் புறத்தில் இரண்டு குன்றுகள்; ஒன்றின் பேரிலே கண்ணப்பர் தொழுத குடுமித் தேவர், இன்று கண்ணப்ப ஈசுவரர் என்ற பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். மற்றொரு குன்றின் பேரிலே துர்க்கை.
இரண்டு கோயில்களுக்கும் செல்வது கொஞ்சம் சிரமம். உயரம் என்பதினால் அல்ல. சரியான பாதை இல்லாத காரணம்தான். கண்ணப்பர் மலை ஏறும் மலைச் சரிவிலே மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில். அதை அடுத்து மலையைக் குடைந்து உண்டாக்கிய மண்டபம். இதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர்.
இங்குதான் பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலது காதில் ஓதி அருளினார் என்று கதை, காசி மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியது போல.
இன்றும் மக்களிடத்து ஒரு நம்பிக்கை. அந்திம தசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்துக்குக் கொண்டு வந்து, வலப்பக்கமாக ஒருக்கச் சாய்த்துக் கிடத்தினால், சாகிற பொழுது உடல் திரும்பி, வலது காது வழியாகவே உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் என்கிறார்கள்.
இந்த மணிகண்டீசுவரர் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் வீர ராஜேந்திர சோழன் கட்டியது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆதலால் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பே, காளத்தியப்பர் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். கோயிலின் நூற்றுக்கால் மண்டபம், காளி கோபுரம் முதலியன பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், விஜயநகர மன்னர்கள் கட்டினார்கள் என்று திருவண்ணாமலையில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
இத்தகைய சரித்திரப் பிரசித்தியோடு இலக்கியப் பிரசித்தியுமே பெற்றிருக்கிறது இவ்வூர். மதுரை சொக்கலிங்கப் பெருமானிடத்திலேயே குற்றம் குற்றமே என்று வாதாடிய சங்கப் புலவன் நக்கீரன், சாப விமோசனம் அடைந்து, கயிலாய தரிசனம் பெற்ற இடம் இதுவே. அதனாலேயே இத் தலத்தை தக்ஷிண கயிலாயம் என்கிறார்கள்.
'கயிலை பாதி காளத்தி பாதி' என்று அந்தாதி பாடிய நக்கீரதேவ நாயனார் இத்தலத்தைப் போற்றியிருக்கிறார். காளத்தியைத் தரிசித்தால் கயிலையைத் தரிசித்த பலன். ஆம், நமக்கும் கிடைத்து விடுகிறது, கயிலையைத் தரிசித்த பலன், காளத்தியைப் பற்றி, காளத்தி வாழ் கண்ணப்பரைப் பற்றி, இவ்வளவு தெரிந்து கொள்கிற காரணத்தால்.