வேங்கடம் முதல் குமரி வரை 1/003-027

3. தணிகைக் குமரன்

அருணகிரியார் பிறந்து வளர்ந்து முருகன் அருள் பெற்றுப் பாடத் துவங்கியது, அண்ணாமலையிலே. 'எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பிடல் வேண்டும்!' என்று பிரார்த்தித்த வண்ணமாய், அண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, ஊர் ஊராகக் கடந்து, முருகன் கோயில் கொண்டிருக்கும் தலம் தலமாகச் சென்று, குன்று குன்றாக ஏறித் திருப்புகழ் பாடி மகிழ்ந்தவர் அவர்.

இப்படிப் பல - தலங்களுக்கும் சென்றவர், திருவண்ணாமலைக்குப் பக்கத்திலே சுமார் அறுபது மைல் தூரத்திலே உள்ள திருத்தணிகைக்குச் சென்று, அங்குக் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைக் கண்டு, அவன் புகழ் பாடப் பல வருஷ காலமாக வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கிறார். இப்படி இருந்தவர் கடைசியாக ஒரு நாள் தணிகைக்கே வந்திருக்கிறார். மலை மீது ஏறியிருக்கிறார். இந்திர நீலச் சுனையில் மூழ்கியிருக்கிறார். ஆபத்சகாய விநாயகரை வணங்கியிருக்கிறார். அருள் ஞான சக்திதரனாகிய தணிகைக் குமரேசனைக் கண்டு தொழுதிருக்கிறார்.

அந்த நிலையில் உள்ளத்திலே ஒரு தாபம். 'நாம் பிறந்து வளர்ந்த ஊருக்கு இவ்வளவு பக்கத்திலேயுள்ள இந்த முருகன் சந்நிதிக்கு இத்தனை நாட்களாக வர இயலாமற் போனதற்குக் காரணம் என்ன?' என்று தம் உள்ளத்தையே கேட்கிறார். 'இந்தத் தென் தணிகைக் குமரனின் தாள்களைச் சூடாத தலையையும், நாடாத கண்களையும், தொழாத கைகளையும், பாடாத நாவினையும் பிரமன் நமக்குப் படைப்பானேன்? அப்படி அவன் நம்மைப் படைக்கும்படி நாம் அவனுக்குச் செய்த குற்றந்தானென்ன?' என்றெல்லாம் ஏங்கியவர், 'நான் செய்த குற்றம் என்ன?' என்ற கேள்வியை அந்த
தணிகைக் குமரன்
முருகனிடமே கேட்கிறார். இந்தக் கேள்வியே ஒரு நல்ல பாட்ட்டாகப் பிறக்கிறது அவரது நாவிலே.

கோடாத வேதனுக்கு யான் செய்த
குற்றம் என்? குன்றெறிந்த
தாடாளனே! தென் தணிகைக் குமர!
நின் தண்டையந் தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தளனே!

இந்தக் கேள்விக்கு, முருகன் அருணகிரி நாதருக்குப் பதில் சொன்னாரோ என்னவோ, நமக்குச் சொல்கிறான். நாமெல்லாம் வாழ்நாளில் இதே தவறைச் செய்யாது, பிரமனிடமும் - ஏன், குமரனிடமுமே 'நான் செய்த குற்றம் என்?' என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க, வருஷா வருஷம் டிசம்பர் முப்பத்து ஒன்று மாலையிலே நம்மை அங்கே அழைக்கிறான். ஜனவரி முதல் தேதி. ஆம், ஆங்கில வருஷப் பிறப்பன்று; வருஷம் பிறந்தவுடனே நமக்குத் தரிசனம் தருகிறான். நம்மை மகிழ்விக்கிறான்.

தணிகையிலே தடக்கும் உற்சவங்களிலே சிறந்தது. ஆடிக் கிருத்திகை, அன்று பல்லாயிரக் கணக்கான புஷ்பக் காவடிகளைச் சுமந்து கொண்டு மலை ஏறுவது கண் கொள்ளாக் காட்சி. ஆனால் அந்த விழாவினையும் தூக்கி அடிக்கிறது, டிசம்பர் மாதக் கடைசியிலே நடக்கும் திருப்படித் திருவிழா!

இந்த விழாவுக்குச் சென்னையிலிருந்து ஸ்பெஷல் ரயில் புறப்படுகிறது. சென்னை நகரமே திருப்பகழ் மணி அன்பர்கள் தலைமையில் திருத்தணி நோக்கிச் செல்கிறது. 'முருகா முருகா முருகா!' என்னும் நம் பஜனையில் மக்கள் மாத்திரம் அல்ல, ரயிலும், ரயில் தண்டவாளங்களும் சேர்ந்து கொள்கின்றன. இந்த ரயில் வருவதை எதிர்நோக்கி முன்னமேயே லக்ஷக் கணக்கான மக்கள், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் எல்லாம் காரிலும் பஸ்ஸிலும் ஏறித் திருத்தணி வந்து சேர்ந்து விடுகிறார்கள்.

எல்லோருமாகச் சேர்ந்து, பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் தணிகைக் குமரன் கோயில் கொண்டிருக்கும் மலை மீது ஏறுகிறார்கள். அழகாகக் கட்டி வைத்திருக்கும் முந்நூற்று அறுபத்து ஐந்து படிகளையும் ஏறிக் கடந்து, அவன் சந்நிதி சென்று விழுந்து வணங்கி எழுந்து திரும்புகின்றார்கள்.

ஆங்கில ஆட்சி நம் நாட்டில் இருந்த காலத்தில், ஒவ்வொரு வருஷம் ஜனவரி மாதப் பிறப்பன்று அதிகாரிகளான துரைமாரைச் சென்று கண்டு வணக்கம் செலுத்துவது என்பது, நம் மக்களிடையே ஏற்பட்ட ஒரு சம்பிரதாயம். 'வருஷம் பிறந்ததும் இந்தப் பறங்கியர் முகத்திலே முதல் முதல் விழிக்க வேண்டியிருக்கிறதே, இதைத் தடுக்க முடியாதா?' என்று எண்ணியிருக்கிறார், ஒரு பக்தர்.

டிசம்பர் முப்பத்து ஒன்று மாலை திருத்தணிகை சென்று, வருஷம் பிறந்ததும், முருகன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய பின், ஊர் திரும்பி, அதன் பின் துரைமாரையும் சம்பிரதாயம் தவறாமல் தரிசிக்கலாமே என்று தோன்றியிருக்கிறது. அவருக்கு. அதனால்தான் இந்தத் திருத்தணி திருப்படித் திருவிழா ஆரம்பமா யிருக்கிறது.

அதோடு வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் செய்த அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுவது போல், 365 படிகளையும் ஏறிக் கடந்து முருகன் திருவடிகளிலே பாவச் சுமையை இறக்கி வைத்து விட்டு, நல்ல மனத்தோடு வீடு திரும்பும் மன நிறைவும் பெறலாம் அல்லவா என்று தோன்றுகிறது, எனக்கு.

தணிகை என்றால் அமைதி என்று பொருள். சூரபதுமன் முதலியவர்களைத் திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்து,வெற்றிக்குப் ம,இசாக இந்திரன் மகளாகிய தெய்வயானையைப் பெற்றுத் திருப்பரங்குன்றத்தில் அவளை மணம் முடித்துக் கொண்டு, அமைதியாகக் குடும்பம் நடத்த இந்தத் தேவனசேலாபத் தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தணிகைமலை.

சூரனோடு போர் செய்த பின், கோபமெல்லாம் தணிந்து, இந்தத் தணிகையில் வந்து தங்கியிருப்பதால், இத்தலத்தில் நடக்கும் கந்த ஷஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கிடையாது. இப்படி அமைதி தேடி வந்து வணங்கும் பக்தர்களுக்கும் நல்ல மன அமைதியைத் தந்து தணிகாசலத்தின் புகழை நிலை பெறச் செய்து கொள்கிறான்.

திருத்தணி ஊருக்குச் சென்றதும், நம் கண் முன் நிற்பது தணிகைமலையும் அதன் மேல் ஓங்கி நிற்கும் கோயிலும், இம் மலையின் இரு புறத்திலும் மலைத் தொடர்கள் இருக்கின்றன. வடக்கே இருப்பது சற்று வெளுத்திருப்பதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே இருப்பது சற்றுக் கறுத்திருப்பதால் பிண்ணாக்கு மலை என்றும் மக்கள் சொல்கிறார்கள்.

மலை அடிவாரத்தில் உள்ள திருக்குளம் சரவணப் பொய்கை. இந்தப் பொய்கையைச் சுற்றியும், மற்றும் மலை ஏறும் வழிகளிலும் எண்ணிறந்த மடங்கள், சத்திரங்கள், சுனைகள், தடாகங்கள் தான். ஆதலால் இந்தப் பகுதிக்கே சர்க்கார் கணக்கில் 'மடம் கிராமம்' என்று பெயர். சுகாதாரக் கொள்கைகள் இல்லாதவர்கள் சரவணப் பொய்கையில் நீராடி விட்டு மலை ஏறலாம். அதற்குத் துணிச்சல் இல்லாதவர்கள் தலையில் தீர்த்தத்தைப் புரோக்ஷித்துக் கொண்டு புறப்பட்டு விடலாம்.

மலை மேல் ஏறுகிற போது, வழியில் இருக்கும் பிரம சுனை, அங்குள்ள விநாயகர் பிரமலிங்கம் எல்லாவற்றையும் தரிசிக்கலாம். மலை உச்சி சேர்ந்ததும், இரத வீதியில் வலம் வரலாம். அங்குள்ள இந்திர நீலச் சுனையைப் பார்த்துவிட்டு, செங்கழுநீர் விநாயகரை வணங்கிவிட்டு, கோயிலினுள் நுழைந்தால், நாம் முதல் முதல் பார்ப்பது துவஜஸ்தம்ப விநாயகரும் ஐராவதமுமே.

இங்கு ஐராவதம் சந்நிதியை நோக்கி நிற்காமல், கிழக்கு நோக்கி, எங்கேயோ அவசரமாகப் புறப்படத் தயாராக நிற்பது போல் நிற்கிறது. தெய்வயானையின் சீதனப் பொருளாக வந்தது ஐராவதம் என்றும், அப்படித் தேவ லோகத்தை விட்டு ஐராவதம் வந்து விட்டதால், அங்கு செல்வம் குறைய ஆரம்பித்ததென்றும், அந்தக் குறை நீங்க, முருகன் ஆணைப்படி, கிழக்கேயுள்ள தேவலோகம் நோக்கி நிற்கிறது என்றும், ஸ்தல வரலாறு கூறுகிறது. எனக்கென்னவோ இது சரியான வரலாறு என்று தோன்றவில்லை. 'தெய்வயானையை மணந்த பின், இந்தக் குமரன் தம் மயில் வாகனத்தைத் துறந்துவிடுகிறார் (இத்தலத்தில் மூலவர் உத்சவர் பக்கத்தில் எல்லாம் மயில் இல்லை என்பது கூர்ந்து நோக்கிக் கவனிக்கத்தக்கது). ஆதலால் பக்தர்கள் குறை தீர்க்க வெளியே விரைந்து செல்ல வேண்டியிருந்தால் வாகனம் வேண்டாமா? தெய்வயானை கொண்டு வந்த வெள்ளை யானையைத் தயாராக இருக்கும்படி கட்டளை இட்டு இருக்கிறான். அதுவும் 'எவர் ரெடி' என்பது போல் எந்த நேரமும் புறப்படத் தயாராய்க் கோபுர வாயிலை நோக்கியே நிற்கிறது,' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, எனக்கு.

இனி, கோயிலுக்குள்ளேயே நுழையலாம். அருள் ஞான சக்தி தரனின் அடி பணிவதற்கு மூன்னே, அர்ச்சகர் நம்மை அழைத்துச் செல்வது, ஆபத்சகாய விநாயகர் சந்நிதிக்குத்தான். உத்சவ மூர்த்தியும் சண்முகரும் இருக்கும் மண்டபத்திலே, கிழக்கு ஓரத்திலே, பெரிய உருவிலே இவர் இருக்கிறார்.

தணிகையில் வந்து தேவசேனையுடன் அமைதியாக் இருக்க விழைந்த இக் குமரன் வாழ்விலும் காதல் குறுக்கிட்டிருக்கிறது. பக்கத்திலே உள்ள குன்று ஒன்றிலே குறப் பெண்ணாக வளரும் வள்ளியை மணக்க விரும்புகிறார். அதற்காக என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்கிறார். கடைசியில் அந்தப் பொல்லாத வள்ளியை வழிக்குக் கொண்டு வர, அருமை அண்ணாவின் துணையை நாடுகிறார். அவரும் இவருக்கு அந்த ஆபத்தில் உதவுகிறார். அதனால் வள்ளிமலைக் குறத்தி வள்ளியைத் தட்டிக் கொண்டு வந்து விடுகிறார்.

இப்படி வள்ளியை மணம் புரியத் தக்க சமயத்தில் உதவிய அண்ணாவுக்குப் பூஜா நேரத்திலும் உத்சவ காலங்களிலும் அக்ர ஸ்தானமே கொடுத்து விடுகிறார். முருகன் மாத்திரம் என்ன, நாமும் ஆபத்சகாயரது சகாயத்தை எப்போதும் நாடுகிறவர் தாமே. நமக்கு வரும் மலை போன்ற ஆபத்துகளும் பனி போல் நீங்க வேண்டும் அல்லவா!

இனி கர்ப்பகிருஹத்துக்கே சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் அருள் ஞான சக்தி தரனைத் தரிசிக்கலாம். 'பொன்னிறக் காந்தளோடு' செங்குவளை மலர்களும், பொற்பமர் கடம்ப மலரும், பூந்தளிர் குறிஞ்சியும், சேத்த கூடதளமும் புனைந்த திரு மார்பு உடை அழகனாக அவன் அருகே நிற்கிறான்.

இங்குள்ள குமரன் ஆபத்சகாய விநாயகரைஸ்தாபித்த பின், குமரேசுவர் என்னும் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்கிறான். அன்னையோ தன்னுடைய சக்தியை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, ஞானசக்தியை வேல் வடிவிலே அளிக்கிறாள் தன் மைந்தனுக்கு. சூரபத்மனை சம்ஹரிக்கத் தன் அன்னையிடம் வேல் பெற்ற முருகன், மக்களுக்கெல்லாம்ஞானாசிரியனாக இருந்து அருள் செய்ய மற்றொரு வேலைப் பெறுகிறான் தந்தையிடம். அதனால்தான் அருள் ஞான சக்தி தரன் என்ற திருப் பெயரும் தாங்குகிறான்.

இந்த மூர்த்தி இங்கு மயில் தெய்வயானை வள்ளியின்றித் தனித்தே இருக்கிறான், அமைதி நாடிய அண்ணல், அணங்குகள் இருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால், அமைதி பெறுவதேது? நல்ல அழகிய சுந்தர மூர்த்தியாக அவர் நிற்கிறார். தணிகையின் இணையிலியாக அவர் நிற்கும் அழகைக் காணத் துடித்த இராமலிங்க அடிகள் 'தணிகை மலையைச் சாரேனோ! சாமி அழகைப் பாரேனோ?' என்று ஏங்கியிருக்கிறார், தமது அருட்பாவில், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே நிற்கலாம் இந்த மூர்த்தியின் அழகை.

எப்போதும் அலங்காரம் செய்யப்பட்ட வண்ணமாகவே இருக்கும் மூர்த்தியை வணங்குவதை விட, அணிகளையும் பணிகளையும் களைந்து, அபிஷேகத்துக்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில் கண்டு தொழுவதே கலை அன்பர்கள் விரும்புவதொன்று. கோயில் நிர்வாகிகளைக் கலந்து, 'எப்போது வேண்டுமானாலும் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். இல்லை என்றால், கிருத்திகைதோறும் அபிஷேகம் நடக்கும் காலம் அறிந்து சென்று கண் குளிரத் தரிசிக்கலாம்.

அப்படி அபிஷேகம் நடக்கும்போது, கூர்ந்து கவனித்தால், அக்குமரனின் மார்பகத்திலே ஒரு குழி இருப்பதைக் காணலாம். அன்று தாரகாசுரனால் விடப்பட்ட சக்கரத்தைத் தன் மார்பிலே ஏந்தி, அதை அங்கேயே பதித்துக் கொண்டதாகவும், பின்பு இத் தணிகை மலையானைத் திருமால் பூசித்தபோது, தன் மார்பகத்திலிருந்த சக்கரத்தை எடுத்துத் திருமாலுக்கு வழங்கி விட்டதாகவும், புராணம் கூறுகிறது. சக்கரம் பதிந்திருந்த இடந்தான் இன்று குழியாக இருக்கிறது. இம் மார்பகங் குழிந்த திருவடையாளத்தைக் கண்டு தொழுவார் இடர் ஒழித்து இன்ப வீடு அடைவர் என்பது பக்தர்களது நம்பிக்கை. அதனால் இந்த நம்பிக்கை உடையவர்கள் எல்லாம் சென்று தொழ வேண்டியது அபிஷேக காலத்திலேயே.

இந்தப் பெருமானை மும்மூர்த்திகளும் வழிபட்டனர் என்பர். அதனால் அருணகிரியார் திரிமூர்த்திகள் தம்பிரானே என்று பாடுவர். நாமும் இத் திரிமூர்த்திகள் தம்பிரானை வணங்கிய பின், அவனுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமுமாகத் தனிக் கோயில்களிலே இருக்கும் தெய்வயானை - வள்ளி இவர்களைக் கண்டு தொழலாம்.

தேவசேனையின் வலக்கரத்தில் நீலோற்பலமும் வள்ளியின் இடக்கரத்தில் தாமரையும் இருப்பதைத் தவிர, அந்த அம்பிகைகளின் சிலா வடிவங்களில் சிறப்பான அம்சம் ஒன்றும் இல்லை. இதோடு மலராலும் நகையாலும் அலங்கரிக்கப்பட்டு உருத்திராக்கத்தைக் கொண்டே விதானம் அமைக்கப்பட்ட விமானத்தில் வள்ளி தேவசேனா சமேதனாக நின்று கொண்டிருக்கும் உற்சவ மூர்த்தியையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

இக் கோயில் பழம் பெருமை வாய்ந்ததோடு, தமிழ், நாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டும் இருக்கிறது. ஆம்! தமிழைப் பொதிகைக்கு அளித்த பெருமையே இத்தணிகா சலத்துக்குத்தான். அன்று கைலையிலிருந்து தென்பொதிகை நோக்கி வந்த அகத்தியரை இடை நிறுத்தி இலக்கணம் கற்பித்து அனுப்பியவரே இத் தணிகைக்குமரன்தான். என்றுமுள தென் தமிழை அன்று முதல் இயம்பி இசை கொண்டவ'னாகத் தானே அகத்தியன் பொதிகை வந்து சேருகிறான்.