வேங்கடம் முதல் குமரி வரை 1/007-027

7. பாலாற்றில் பள்ளி கொண்டான்

ஒரு சிறு சம்பவம், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில், அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. அது ஒரு பெரிய உண்மையையே விளக்குகிறது. விவேகானந்தர் என்னும் நரேந்திரன் பத்துப் பன்னிரண்டு வயதில் ஒரு சிறு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பூகோளப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நரேந்திரன் அப்போது கண்களை மூடித் தியானத்தில் இருப்பவன் போல் இருந்தான். இதை ஆசிரியர் பார்த்து விட்டார். 'அடே.! பாடம் நடக்கும் போது தூங்கவா செய்கிறாய்?' என்று சொல்லிப் பையன் நரேந்திரனைக் கோபித்துப் பிரம்பால் இரண்டு அடியும் கொடுத்து விட்டார்.

பாடம் முடியும் தறுவாயில் ஆசிரியர் பையன்களிடம் கேள்விகள் கேட்டார். விழித்த கண் விழித்தபடியே இருந்து பாடங் கேட்ட பையன்கள் எல்லாம் கேள்விக்கு விடை சொல்ல இயலாமல் திரு திரு என்று விழித்தார்கள். நரேந்திரனிடம் கேள்விகள் கேட்டபோது, அவன் ஒவ்வொரு கேள்விக்கும் டக் டக் என்று பதில் சொன்னான்.

'ஐயோ! இந்தப் பையன் பாடம் கேட்கும் போது தூங்குகிறான் என்று அடித்து விட்டோமே!' என்று வருந்தினார், ஆசிரியர். அவருக்கும் அன்று ஒரு பெரிய உண்மை விளங்கிற்று. மனத்தை ஒரு நிலைப்படுத்திப் பிறர் சொல்லும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளக் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. கண்களை மூடி, அறிவைச் செலுத்திக் கூர்மையாக விஷயங்களைக் கிரஹித்தல் வேண்டும் என்று அறிந்தார்.

நரேந்திரர் பின்னர் எவ்வளவு சுடர்ந்த மதியுடையவராக வளர்ந்தார் என்பதும், அரிய தத்துவங்களை யெல்லாம் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்று, விவேகானந்தர் என்னும் பெயருக்கு ஏற்ப விளங்கினார் என்பதும், நாம் அறிந்ததே.

இந்தச் சம்பலம் ஒரு பெரிய தத்துவத்தையே விளக்குகிறது, எனக்கு. 'பாற்கடலிலே பரந்தாமன் படுத்துக் கிடக்கிறான், அரவணையிலே அறிதுயில் கொள்ளுகிறான் என்றெல்லாம் காத்தற் கடவுளான விஷ்ணுவைக் கலைஞர்கள் கற்பனை பண்ணி யிருக்கிறார்களே, அது சரிதானா?' என்று எண்ணினேன் நான்.

எண்ணிறந்த ஜீவராசிகளையெல்லாம் காத்தளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பரந்தாமன், சும்மா கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு, பூலோகத்திலும் வைகுண்டத்திலும் நடக்கும் காரியங்களை யெல்லாம் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தால் காரியம் உருப்படுமா என்ன? ஆதலால் கண்களை மூடி அறிதுயிலில் அமர்ந்து மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் என்ன என்ன என்று அறிவதிலே தன் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறான். இப்பொழுது விளங்குகிறது, அரவணை கிடந்து அவன் ஏன் அறிதுயில் கொள்ளுகிறான் என்று.

இவனையே 'குன்றினில் நின்று வானில் இருந்து நீள் கடல் கிடந்த ஆதிதேவன்' என்று திருமழிசையாழ்வார் பாடுகிறார். இவன் பள்ளி கொள்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கடல், ஆறு, அரங்கம் {ஆற்றின் நடுவிலே உள்ள தீவு).

தமிழ் நாட்டிலே இந்த அரங்கன் துயில் கொள்கின்ற இடங்கள் கிட்டத்தட்ட முப்பதுக்கு மேல் இருக்கும். அவைகளில் அதிமுக்கியமானவை இரண்டே. ஒன்று உத்தர ரங்கம் என்னும் பள்ளிகொண்டான். மற்றொன்று தென்னரங்கம் என்னும் திரு ரங்கம் (ஸ்ரீரங்கம்) ஆம். அவன் 'தென் சொல் கடந்தான் என்றாலும் வட சொற் கலைக்கு எல்லை தேர்ந்தவன்' ஆயிற்றே. சமீபத்தில் மகா சம்ப்ரோக்ஷணம் செய்து பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்க நாதனை எல்லோரும் அறிவோம். இன்று நாம் காலாப் போயேதும் அவனை அல்ல. உத்தர ரங்கநாதனை. எல்லா இடத்திலும் அவன் பள்ளிகொண்ட பரந்தாமனாகவே இருந்தாலும், இந்தத் தலம் ஒன்றிலேதான் அவன் பள்ளி கொண்டான் என்ற பெயரோடு விளங்குகின்றான். இந்தப் பள்ளி கொண்டான் கோயில் கொண்டிருக்கும் தலமே பள்ளி கொண்டான் (பள்ளி கொண்டை என்று மக்கள் அழைத்தாலும்) என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்தப் பள்ளி கொண்டான் வட ஆர்க்காடு மாவட்டத்திலே பாலாற்றின் கரையிலே உள்ள ஒரு சிறிய ஊர். இங்கு வந்து இவன் பாயை விரித்துப் பள்ளி கொள்வானேன்?

இதைத் தெரிந்துகொள்ள உத்தர ரங்க மகாத்மியத்தையே ஒரு புரட்டுப் புரட்ட வேண்டியதுதான். புரட்டினால் கிடைக்கும் ஒரு கதை.

மாமியார் - மருமகள் சண்டை உலகம் தோன்றுவதற்கு முன்னமேயே தோன்றியிருக்கிறது. செல்வம் கொழிக்கும் மாமியான லக்ஷ்மிக்கும், கல்வி நிரம்பிய மருமகளான சரஸ்வதிக்கும் ஒரு விவாதம். தங்களில் யார் பெரியவர் என்று. இந்தப் பிரச்னைக்கு முடிவு காணும் பொறுப்பு பாவம், அந்த அப்பாவி பிரமன் தலையில் விழுந்திருக்கிறது.

அவர் எவ்வளவுதான் மனைவிக்கு அடங்கி நடப்பவர் என்றாலும், உண்மையை ஒளிக்கவில்லை. இந்த நில உலகில், கல்வியை லிடச் செல்லத்துக்குத்தானே மதிப்பு. ஆதலால் லக்ஷ்மியே பெரியவள் என்று தீர்ப்புக் கூறுகிறார். கோபம் பிறக்கிறது. சரஸ்வதிக்கு. புருஷனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கே வந்து விடுகிறாள். சஹய பர்வதத்தில் வசிக்கிறாள்.

பிரம்மாவுக்கோ தனிமை. சத்யவிரத க்ஷேத்திரத்தில் ஓர் அசுவமேத யாகம் செய்ய முனைகிறார். சரஸ்வதி அந்த யாகத்தை அழிக்க விரைகிறாள். நதி உருவில் பெருக்கெடுத்து யாகசாலைக்குள் புக எண்ணுகிறாள்.

பிரம்மா தம் தந்தை மகா விஷ்ணுவிடம் சரண் அடைகிறார். முன்னமேயே அம்பரீஷ முனிவர் தவத்துக்கு இரங்கிப் பூலோகத்தில் அவருக்குக் காட்சி தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆகவே, முனிவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும், பிரமனது வேண்டு கோளைப் பூர்த்தி பண்ணவும், விரைந்து இப்பூமிக்கு இறங்கி, பெருக்கெடுத்து வரும் ஆற்றுக்குக் குறுக்கே சங்கு சக்ரதாரியாய், ஆதிசே சயனனாகத் தெற்கே தலையும் வடக்கே காலுமாகப் பள்ளிகொண்டு விடுகிறார், பாலாறாய்ப் பெருகி வந்த சரஸ்வதியை மேற்கொண்டு போக விடாமல் தடுத்து விடுகிறார். அம்பரீஷருக்கும் சேவை சாதிக்கிறார். கல்வியறிவால் ஏற்படும் அகங்காரத்திற்கு அணை போட்டு, அறிவை வளரச் செய்யும் பெருமாளாக, இப்பள்ளி கொண்டான் உத்தர ரங்கத்திலே பள்ளி கொள்கிறார்.

இந்த ஊர் சென்று இந்தப் பெருமாளைத் தரிசிக்கச் சென்னையிலிருந்து பங்களுர் அல்லது கோவை செல்லும் ரயிலில் ஏறலாம். குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித் தெற்கு நோக்கி இரண்டு மூன்று மைல் வந்து, பாலாற்றையும் கடந்தால், இந்த ஆற்றின் தென் கரையிலுள்ள கோயிலுக்கு வந்து சேரலாம்.

காரிலேயே செல்லக் கூடியவர்கள் வேலூருக்கு மேற்கே பதினான்காவது மைலில் ஊருக்குள் திரும்பி, வடக்கே பார்த்துச் சென்றாலும் கோயிலுக்குப் போய்ச் சேரலாம். சந்நிதித் தெருவில் உள்ள தேரடியில் இருக்கும் சிறிய திருவடி கோயிலில் அஞ்சலி ஹஸ்தராக இருக்கும் ஆஞ்சநேயரை வணங்கி விட்டு, மேலும் மேற்கே நடந்து திருவந்திக் காப்பு மண்டபம் கோபுர வாசல் எல்லாம் கடந்தால், கோயிலை அடையலாம்.

கோபுரம், கோயில், மண்டபம். சந்நிதி எல்லாவற்றையும் பார்த்தால், இந்த வடவரங்கர், தென்னரங்கரைப் போல், அவ்வளவு செல்வந்தர் இல்லை என்று தெரியும். இவருடைய வருஷ வருமானம் சர்க்கார் கொடுக்கும் தஸ்திக் பணம் ரூ.1103-15 பைதான். ஏதோ கொஞ்சம் தோப்பும் பன்னிரண்டு செண்டு நன்செய் நிலமுமே இவருடைய ஸ்தாவர சொத்து.

ஆதலால் இங்கு அர்ச்சகர்கள் கெடுபிடியெல்லாம் இருக்காது. அர்ச்சகர்களை ஆள் அனுப்பித்தான் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர் வந்தபின், பள்ளிகொண்டான் சந்நிதிக்குப் போகுமுன், ஒரு சிறு மாடத்தில் மேற்கே தலையும், கிழக்கே காலும் நீட்டிக் கொண்டு, ஒரு சிறு ரங்கநாதர் இருப்பார். கஸ்தூரி ரங்கர் என்ற இவரை அங்குள்ளவர்கள் சோட்டா ரங்கநாதர் என்று நமக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள். விஷயம் என்ன என்று விசாரித்தால், முகம்மதியர்கள் படையெடுத்துக் கோயில்களை இடித்துக் கொண்டு வந்த போது, இந்தத் தலத்தில் உள்ளவர்கள் பள்ளி கொண்டானைக் காப்பாற்றக் கர்ப்பகிருஹத்துக்கு முன் ஒரு பெரிய சுவர் எழுப்பி, அவருக்குப் பதிலாக இந்தச் சிறிய ரங்கநாதரை உருவாக்கி, வெளியே கிடத்தியிருக்கிறார்கள்.

கோயிலுக்குள் நுழைந்த முகமதியர், இவர்தானா உங்கள் சாமி? இது என்ன சோட்டா சாமி?’ என்று சொல்லிவிட்டுத் திரும்பி விட்டார்களாம். ஆம், மோட்டா ரங்கநாதரைக் காப்பாற்றிய சோட்டா ரங்கநாதர் தம்மையுமே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ஆதலால் இன்றும் இங்கு இவருக்கே அக்ர ஸ்தானம.

கர்ப்பகிருஹத்தில் இருக்கும் பள்ளி கொண்டான் (மோட்டா ரங்கநாதன் தான்) நல்ல ஆஜானுபாகு. கிரீடம், குண்டலம், திருமண்காப்பு, வேட்டி, உத்தரீயம் எல்லாம் சாத்திக் கொண்டு, திருவனந்தாழ்வான் என்னும் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி அவரது கையைத் தாங்கப், பூதேவி திருவடிகளை வருடிக் கொண்டிருக்கிறாள். நாபிக் கமலத்தில் நான்முகன். எல்லாம் நல்ல சிலை உருவில்.

அரவணையில் அறிதுயில் கொள்ளும் இந்த அரங்கனைத் தொழுதுவிட்டு, வெளியே வந்து கோயிலை ஒரு சுற்றுச் சுற்றலாம். தாயார் சந்நிதியில் விசேஷம் ஒன்றும் இல்லை. ரங்கநாதனுக்கு ஏற்ற ரங்கநாயகி அங்கிருந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்.

இந்தக் கோயிலுக்கு வரும் கலை அன்பர்கள் எல்லாம் கண்டு தொழ வேண்டிய சந்நிதி மூன்றும் கோயிலின் மேலப்பிராகாரத்திலே தான் இருக்கிறது. அவைதாம் ராமன், கண்ணன், ஆண்டாள் முதலிய மூவருக்கும் ஏற்பட்ட தனித்தனிக் கோயில்களாகும்.

கோயில் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் முன் மண்டபத்தோடு கூடிய ஒரு சிறிய கோயிலில் சீதாலக்ஷ்மண சமேதனாக ராமன் நல்ல சிலை வடிவில் நின்று கொண்டிருக்கிறான். சுமார் நான்கடி உயரமுள்ள அச் சிலாவடிவங்கள் மிகவும் அழகு வாய்ந் தவை. 'அல்லையாண்டு அமைந்த மேனி அழகனாய்' அமைந்த ராமன், லகஷ்மணன், சீதை மூவரையுமே சேர்த்துப் பார்க்கலாம்.

இங்கே ராமாயணப் பாராயணம் செய்து, கௌசலையாய் ராமனைத் தாலாட்டி, தசரதனாய் ராமன் வனம் புகப் புலம்பி, கரதூஷண யுத்தத்தில் ராமனுக்கு உதவி புரியத் தண்டெடுத்து அனவரதமும் ராம கதை யருளும் குலசேகர ஆழ்வாரையும் இந்தச் சந்நிதியிலேயே காணலாம் - செப்புச் சிலை உருவில்.

ராமர் சந்நிதியை விட்டுக் கொஞ்சம் வடக்கே நகர்ந்தால், அங்கொரு சிறு கோயில். அங்கே வெண்ணெய் உண்ணும் கண்ணன். 'கண்ணன் என்னும் கருந் தெய்வ'க் காட்சிக்கு ஏங்கி நிற்பவர்கள் எல்லாம் இங்கு கல்லிலும் செம்பிலும் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் கண்ணனைக் கண்டு வணங்கலாம். கண்ணன் உதடுகளிலே தவழும் குறுநகை நம்மைப் பரவசப்படுத்தும்.

வெண்நெய் உண்ட வாயனாக ரங்கநாதனைக் கண்டு வேறொன்றையும் காணாதவர்அல்லவா திருப்பாணாழ்வார்? அவரையுமே பார்க்கலாம், இந்தச் சந்நிதியிலே.

குழந்தை கண்ணனைப் பிரிந்து இன்னும் கொஞ்சம் வடக்கே நகர்ந்தால், ஆண்டாள் சந்நிதி. கல்லுருவிலும், செப்புப் படிமத்திலும் உருவாகியிருக்கும் ஆண்டாள் வடிவத்தில், அவள் வடிவழகு அத்தனையையும் கண்டுவிட முடியாது. அதற்கு இன்னும் கொஞ்சதுரம் நடக்க வேண்டும். திரும்பவும் பள்ளி கொண்டான் சந்நிதியில் நுழைந்து, திருவுண்ணாழிப் பிராகாரத்தையே ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும்.

அங்கு செல்லும்போது, அர்ச்சகர், 'இங்கு கர்ப்ப கிருஹம் பிரணவ வடிவத்திலே அமைந்திருக்கிறது. இந்தப் பிரணவ வடிவமான கர்ப்ப கிருஹம், இந்த உத்தர ரங்கத்திலும் அந்தத் திருவரங்கத்திலும் தவிர, வேறு இடங்களில் இல்லை!' என்றெல்லாம் சொல்லுவார். அதற்கெல்லாம் செவி சாய்க்காது, இருட்டில் கொஞ்சம் உற்று நோக்கினால், இரண்டு சிலா உருவங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆண்டாள், மற்றொன்று கண்ணன். திறமையான சிற்பி செதுக்கிய பொற்சிலைகள் அவை. இந்தச் சிலைகளைக் காண்பதற்கென்றே ஒரு நடை போகலாம் இந்தக்கோயிலுக்கு. அத்தனை அழகு வாய்ந்தவை. -

கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்த விக்ரம சோழன் காலத்துக்கு முன்னாகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. விக்ரம சோழன் கீழ்ச்சிற்றரசனாக இருந்த குலசேகர சாம்புவராயன் செய்துள்ள தானங்களைப் பற்றியும், பல்லவ மன்னன் நந்திவர்மன் மகன் கம்ப வர்மன் செய்துள்ள தானங்களைப் பற்றியும், கல்வெட்டுகள் அங்கே உண்டு. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இந்த ஊருக்கே நந்திவர்ம சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் வழங்கியதாகவும் அறிகிறோம்.

இவை யெல்லாம் இக் கோயில் நிரம்பப் புராதனமானது என்பதைக் காட்டும். இந்தக் கோயில் ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்படவில்லை என்பர். அரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளைப் பற்றிய பாடல்கள் திவ்ய பிரபந்தத்தில் எவ்வளவோ உண்டு. என்றாலும் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறும் பாடல் ஒன்றே ஒன்று தான.

உடுத்துக் களைந்த நின்
பீதக ஆடை உடுத்துக்
கலத்தது உண்டு

தொடுத்த துழாய் மலர்
சூடிக் களைந்தன குடும்
இத் தொண்டர்களோம்,

விடுத்த திசைக் கருமம்
திருத்தித் திருவோனத்
திருவிழவில்

படுத்த பைந்நாகணைப்
பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே!

என்று பாடியவர் பெரியாழ்வார். நாமும் பள்ளி கொண்டானுக்குச் சென்று, பள்ளிகொண்ட பெருமானுக்குப் பல்லாண்டு பாடிக் கொண்டே திரும்பலாம்தானே!