வேங்கடம் முதல் குமரி வரை 1/006-027

6. வலம் வந்த விநாயகர்

ஒரு சிறு கதை. அதுவும் பிள்ளையாரைப் பற்றிய கதை. பிள்ளைப் பிராயத்திலே கேட்ட கதையானாலும், வயது முதிர்ந்த பின்னும் திரும்பத் திரும்ப அந்தக் கதையைக் கேட்பதில் ஒரு சுவை, கதை இதுதான்.

கைலாயத்திலே ஒரு நாள் பார்வதியும் பரமேசுவரனும் தனித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் கலகப் பிரியரான நாரதர் அங்கு வருகிறார். நல்ல மாங்கனி ஒன்றைக் கொண்டு வந்து, அதை இறைவனிடம் அளிக்கிறார் அவர்.

கனி பெற்ற தந்தையும் தாயும் கனிவோடே தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர். தங்களை விடப் பிள்ளைகள் சுவைத்து உண்பார்களே என்றுதானே தாயும் தந்தையும் கருதுவார்கள். உலகீன்ற அன்னையும் அத்தனும் அப்படி நினைத்ததில் வியப்பில்லையே,

இந்தச் சமயத்தில் பிள்ளைகள் இருவரும், ஆம்! பிள்ளையாரும் முருகனுந்தான் குதித்துக் கொண்டே அங்கு வந்து சேருகின்றனர்.

குழந்தைகளைக் கண்டதும் சிவபெருமானுக்கு இவர்களுக்குள் ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தலாமே என்று தோன்றுகிறது. உடனே அன்னை கையிலிருந்த அரிய கனியைக் காட்டிக் குழந்தைகளிடம், 'உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்கே இந்தக் கனி!' என்று கூறுகின்றார்.

பந்தயம், போட்டி என்றாலே குழந்தைகளுக்கு ஓர் உற்சாகம். ஆதலால் தெய்வக் குழந்தைகளான பிள்ளையாரும் முருகனும் போட்டிக்குத் தயாராகி விடுகின்றனர். முருகன் நினைக்கிறான்: 'அண்ணன் அவரது மூஷிக வாகனத்தில் ஏறி, அவனியைச் சுற்றுவதாவது! அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? நம்மிடபோ லான வீதியலே பறக்கும் மயில் வாகனம் இருக்கிறது. ஆதலால் மாநிலம் மாத்திரம் என்ன, இந்த அண்ட கோளங்கள் அத்தனையுமே அரை நொடியில் சுற்றி வந்து விடலாமே. போட்டியில் வெற்றி நமக்குத்தான்!' என்று.

பிள்ளையாரோ ஒன்றும் பேசாமல் அமுத்தலாக இருக்கிறார்.

போட்டி ஆரம்பமாகி விடுகிறது. உடனே முருகன் தன், 'சீர்திகழ் தோகை மயில்' மீது ஏறி, வான வீதியிலே பறந்து, உலகத்தையே சுற்றப் புறப்பட்டு விடுகிறான். அவன் புறப்படும் வரை பிள்ளையார் இருந்த இடத்தை விட்டு. அசையவே இல்லை. பின்பு சாவதானமாகத் தன்னுடைய வாகனத்தில் ஏறி, ஜம் என்று சவாரி செய்து கொண்டே, அங்கு வீற்றிருந்த தந்தையையும் தாயையும் ஒரு சுற்றுச் சுற்றுகிறார். சுற்றிவிட்டுத் தந்தை முன் வந்து மாங்கனிக்குக் கையை நீட்டுகிறார்.

'என்னடா இது?' என்று கேட்டால், ' உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதெல்லாம் உங்களிடம்தானே. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தையே சுற்றியதாகாதா?'என்று எதிர்க் கேள்வியே போடுகிறார் பிள்ளையார்.

அவ்வளவுதான். தந்தையும் தாயும் வாயடைத்துப் போய் விடுகிறார்கள். போட்டிப் பரிசாகிய மாங்கனியைத் தட்டிக் கொண்டு, நிற்காமல் கொள்ளாமல் தன்னுடைய வாகனத்தில் ஏறிக் கொண்டு, ஓடியே விடுகிறார் அவர். தம்பி வந்து பழத்தில் பங்கு கேட்பானே என்ற பயமோ என்னவோ?

உலகெலாம் சுற்றி அலுத்த முருகன் வந்து விஷயம் அறிந்து , தளர்வடைகிறான், தந்தை தாயிடம் கோபித்துக் கொண்டு, கோவணாண்டியாகப் புறப்படுகிறான். தாயாகிய பார்வதி தன் குழந்தையை எடுத்து மடிமீது இருத்தி, 'அப்பா! நீயே பழமாக இருக்கும் போது உனக்கு நாங்கள் வேறு 'பழம்' தர வேண்டுமா?' என்று கூறி, அவனைச் சமாதானம் செய்து வைக்கிறாள்.

மூப்பழம் நுகரும் மூஷிக வாகனர் மாம்பழம் பெற்ற கதை இதுதான். இது எந்த ஸ்தலத்தில் நடந்தது என்பதற்கு ஆதார பூர்வமான அத்தாட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. அரிய உண்மை ஒன்றை விளக்க எழுந்த அற்புதமான கற்பனைதானே இக்கதை. என்றாலும் இது நடந்தது. திருவலம் என்ற தலத்தில்தான் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். கதையையும் அதற்குரிய படங்களையும் எழுதி, அங்குள்ள வல்லநாத ஈசுவரர் கோயிலில் தொங்கவிட்டும் வைத்திருக்கிறார்கள்.

திருவலம் என்ற இந்தச் சிறிய ஊர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் சென்னை - பங்களூர் ரோட்டில் சென்னையிலிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கிறது. பொன்னை என்று இன்று வழங்கும் நீவா நதிக்கரையில் இருக்கும் தலம் இது.

சென்னையிலிருந்து செல்வோர் இந்த ஊர் சேர்வதற்கு முன் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்றைக் கடக்க வலம் வரும் விநாயகர் வேண்டும். பாலம், மற்றப் பாலங்களைப் போல், செங்கல்லும் சுண்ணாம்பும் வைத்துக் கட்டப்பட்டது அல்ல. எல்லாம் உருக்கிரும்பு மயம். பாலத்தின் மேலே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் இரும்புக் கிராதிகள், உருக்கிய வெள்ளியால் ஆக்கப்பட்டவையோ என்றும் தோன்றும். இன்று சினிமாப் படம் பிடிப்பவர்கள் இப்பாலத்தை, இப்பாலத்தில் கார் ஓட்டிச் செல்லும் கதாநாயக நாயகிகளை யெல்லாம் பலமுறை படம் பிடித்து மக்களுக்குக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பாலத்தைக் கடந்ததும் இடப்பக்கம் திரும்பி, பின்பு கிழக்கு நோக்கி வந்தால் கோயிலின் பிரதான வாயிலுக்கு வந்து சேருவோம். கோயிலின் வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது.. இருந்தாலும் இங்குக் கோயில் கொண்டிருக்கும் வல்லநாதரும் வல்லாம்பிகையும் கிழக்கு நோக்கிய வண்ணமே இருக்கிறார்கள். இந்தக் கோயிலை, இந்த ஊரையெல்லாம் மக்கள் திருவலம் என்று அழைத்தாலும், அந்தப் பழைய தேவார காலத்திலே, இதனைத் திருவல்லம் என்றே அழைத்திருக்கிறார்கள்.

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர், கற்றவர் கண்டு மகிழும் இத்திருவல்லம் என்னும் தலத்துக்கும் வந்திருக்கிறார்.

தாயவன், உலகுக்குத் தன் ஒப்பு இல்லாத்
தூயவன், தூமதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர் கட்கும்
சேயவள் உறைவிடம் திருவல்லமே

என்று வல்லநாதரைப் பாடியிருக்கிறார்.

கோயிலின் குடைவரைவாயிலைக் கடந்து உள்ளே வந்தால் ஓர் அழகிய சிறிய கோபுர வாயிலுக்கு வந்து சேருவோம். இக் கோபுர வாயிலையும் கடந்து உள்ளே வந்தால், அங்குக் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரைக் கண்டு வணங்கலாம். பிள்ளையாருக்கு வலம் வந்த விநாயகர் என்ற பெயர் இல்லை. வரசித்தி விநாயகர் என்றே பெயர் இட்டிருக்கிறார்கள்.

வலம் வந்து மாங்கனி பெற்று வரசித்தி பெற்றவர் அவர். பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களும் வரசித்தி பெறுவதற்கு அருளுவார். இவரை இலக்கியத்தில் காண வேண்டுமானால், பதினோராம் திருமுறையையே ஒரு திருப்புத் திருப்ப வேணும். நம்பியாண்டார் நம்பி பாடியுள்ள நாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலைப் பாடல்களைப் படிக்க வேணும்.

கொம்பளைய வள்ளி
கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை
நாரையூர் நம்பனையே
தன்னவலம் செய்து கொளும்
தாழ்தடக்கையாய், என் நோய்
பின் அவலம் செய்வது
எனோ பேக?

என்ற பாடலைப் படித்தால் வலம் வந்த விநாயகர் பெருமை தெரியும். கலை உலகில் இவரைக் காண, வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் தலை நகரான வேலூருக்கே போக வேண்டும். அங்குள்ள கோட்டையின் உள்ளே மூர்த்தி இல்லாக் கீர்த்தியோடு விளங்கும் ஜலகண்டேசுவரர் கோயிலுக் குள்ளேயே நுழைய வேண்டும். கலை உலகில் பிரசித்தி பெற்ற கல்யாண மண்டபத்துத் தூண் ஒன்றின் அடித்தளத்திலே அவரைக் காணலாம்.

போட்டிப் பந்தயத்தில் மாங்கனியைப் பெற்றபின், அந்த உற்சாகத்தில் அவர் மூஷிக வாகனத்தில் ஏறிச் சவாரி செய்வதே ஒரு ஜோர். இந்த நிலையிலே உற்சாகமாக அவர் வாகனத்தில் சவாரி செய்யும் நிலையை எந்தச் சிற்பியும் தமிழ் நாட்டில் உருவாக்கக் காணோம்.

வலம் வந்த விநாயகரை வணங்கிவிட்டு, வல்லநாதரையும் வல்லாம்பிகையையும் வணங்கலாம். சிலை வடிவிலே அமைந்திருக்கும் அவர்களது! கோலத்தில் சிறப்பான அம்சம் ஒன்றும் இல்லைதான். என்றாலும் செப்புச் சிலை வடிவில் இருக்கும் அவர்களது திரு உருவம் கண்டு மகிழத்தக்கது. சாதாரணமாக எல்லாக் கோயில்களிலும் இருக்கும் சந்திரசேகரைப்போலவே தான் வல்லநாதர் இருக்கிறார். அவர் பக்கலில் எழிலே உருவெடுத்தாலன்ன அழகோடு வல்லாம்பிகை நிற்கிறாள். இருவரையும் நீங்கள் இங்கு உள்ள படத்திலே பார்க்கலாம். நல்ல சோழர் காலத்துச் செப்புச் சிலை போலவே இருக்கின்றன.

இனி, கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி, வெளியே உள்ள மகாமண்டபத்துக்கு வந்தால், அங்கு ஓர் அதிசயம் காத்திருக்கும். எல்லாச் சிவன் கோயிலிலும் தாம் நந்தியைப் பார்த்திருக்கிறோம். பார்த்த பல கோயில்களிலும் நந்தி இறைவனை நோக்கிய வண்ணமா யிருப்பதையே கண்டிருக்கிறோம். ஆண்டவன் கட்டளைக்கு அடிபணிய எக்கணமும் தயாராயிருப்பது போல, அவர் கடைக்கண் சாடைக்குக் காத்திருப்பது போல, மேற்குத் திசையை நோக்கியிருக்கும் நந்தியைத்தான் மற்றத் தலங்களில் கண்டிருக்கிறோம்.

ஆனால், இத்தலத்தில் மட்டும் நந்தி, சிவபிரானுக்குத் தன் பின் பாகத்தைக் காட்டிக் கொண்டு, கிழக்கு நோக்கிய வண்ணமாக இருக்கிறது. இது காணக் கிடைக்காத ஓர் அதிசயம்தானே? விசாரித்தால் பக்கத்தில் உள்ள வல்லாம்பேட்டை என்னும் மலையில் வாழ்ந்து வந்த கஞ்சாரன் என்னும் அசுரன் இங்கு மக்களை வருத்த, அவர் தம் துயர் துடைக்க நந்தியை இறைவன் ஏவ, அன்று அவ்வசுரனைத் துரத்திச் சென்ற நந்தி திரும்பாமலேயே இருக்கிறது என்கிறார்கள்.

பசுவாகிய உயிர்கள் என்றுமே இறைவனை விட்டு ஓடத்தான் செய்கின்றன. ஆனால் இறைவனோ அந்த உயிர்களுக்கு அருள் புரிய, அவ்வுயிர்களைத் துரத்திக் கொண்டே ஓடி வருகிறார் என்பது இறைவனின் அளப்பரிய கருணையை விளக்கும் ஒரு தத்துவம். அந்த தத்துவத்தையே அருள் வேட்டை (Hound of Heaven) என்ற பாட்டிலே பிரான்சிஸ் தாம்ஸன் என்ற மேலை நாட்டுக் கவிஞன் விளக்குகிறான். திருவலத்தில் உள்ள வல்லநாதரும் தம்முடைய நந்தியை, உயிர்கள் ஓடும் பக்கமாக விரட்டுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனக்கு.

வல்லம் என்ற சொல் அரசனுடைய ஊரைக் குறிக்கும். என்பர், ஊரையும் பேரையும் ஆராய்ச்சி செய்தவர்கள். இந்தத் திருவல்லத்தில் வாணர்குல மன்னர்களுக்கு உரிய கோட்டை ஒன்று இருந்தது என்றும், அது ஒரு பெரிய படைவீடாய்ப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கியது என்றும், ஒரு சாஸனம் கூறுகிறது. ஆனால் இந்தக் கோட்டையோ, கோட்டை இருந்த அடையாளமோ ஒன்றும் இன்று நமக்குத் தென்படுவதில்லை.

பரவாயில்லை. சாஸனம் கூறுவதை நம்பலாந்தானே. பொன்னியின் செல்வனாம் ராஜ ராஜனது துணைவனாய்ப் பல போர்க்களங்களில் விழுப்புண் பெற்று, ராஜராஜனது தமக்கை குந்தவையை மணம் புரிந்த வல்லவரையன் வந்தியத் தேவன் இந்த ஊர்க்காரனே என்று அறிகிறபோது, 'ஓ! அவனா? நமக்கு நன்கு அறிமுகம் ஆனவன் ஆயிற்றே!' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?