வேங்கடம் முதல் குமரி வரை 1/012-027

12. காஞ்சி காமாட்சி

றை வழிபாடு தமிழ் மக்கள் உள்ளத்திலே எப்படித் தோன்றிற்று, எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியந்தானே? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தவர்கள் தமிழ் மக்கள். அந்தப் பழங்குடி மக்கள் உண்ணத் தெரிந்திருக்கிறார்கள். உறங்கத் தெரிந்திருக்கிறார்கள். உடுக்கத் தெரிந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் ஒர் அமைதி நிலவியிருக்கிறது.

காமாட்சி கோயில் கோபுரம்

ஆனால் இந்த அமைதியைக் குலைத்திருக்கிறது, இயற்கையில் எழுந்த இடியும் மின்னலும், ஆற்றில் புரண்ட வெள்ளமும் காற்றில் தோன்றிய கடுமையும். அவர்கள் வாழ்க்கைப் படகே ஆட்டம் கொடுத்திருக்கிறது. சுழற் காற்றையும் சூறாவளியையும் குமுறும் நிலத்தையும் கண்டு பயந்திருக்கிறார்கள். இந்தப் பயத்திலே பிறந்திருக்கிறது இறை உணர்ச்சி. இந்த உலகிலே காணும் நிலம், நீர், அனல், காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் பயங்கரநிலையைக் கண்டு அஞ்சி அஞ்சியே இறைவனை நினைத்திருக்கிறார்கள். முதலில் அஞ்சி வழிபட்ட ஐம்பூதத்தின் சாந்த நிலையைக் கண்ட பின்தான், அன்பு பிறந்திருக்கிறது, அவர்கள் உள்ளத்தில்.

உலகின் நன்மைக் கெல்லாம் காரணமாக இருக்கும் ஆதவன், அவன் ஒளியிலே பங்கு பெற்று, அவன் வெம்மையைக் குறைத்து, தண்மையையே அளிக்கும் இந்திரன், இரண்டுக்கும் அடுத்தபடியாக ஆக்கவும் அழிக்கவும் உதவும் அனல், இவற்றையே கொடி நிலை கந்தழி வள்ளி என்றெல்லாம் பெயரிட்டு வணங்கியிருக்கிறார்கள்.

இப்படி உருவான இறை உணர்ச்சியிலேயும் ஒரு குறை என்றுமே இருந்து வந்திருக்கிறது. உண்ணத் தெரிந்ததோடு, உடுக்கத் தெரிந்ததோடு, வாழ்வு பூரணமாகவில்லை என்பதை உணரத் தொடங்கி யிருக்கிறார்கள். அப்போது அவர்கள் நீண்டுயர்ந்த மலையைக் கண்டு, அங்குச் செடிகளில் மலரும் மலர்களைக் கண்டு, அந்த மலர்களில் எழும் மனத்தினை முகர்ந்து இன்பம் பெற்றிருக்கிறார்கள். அப்படியே அகன்று பரந்த கடலிலே, அந்தக் கடல் அலைகளின் ஒலியிலே, அந்த ஒலி எழுப்பும் இன்னிசையிலே உள்ளம் பறி கொடுத்திருக்கிறார்கள். அஞ்சி வழிபட்ட உள்ளத்திலே அன்பு கலந்த இன்பம் பிறந்திருக்கிறது. இந்த இன்பத்தை உருவாக்க அழகுணர்ச்சி தோன்றியிருக்கிறது.

அப்படித்தான் மலை மூலமாக, அலை மூலமாக, கலை மூலமாக இறைவழிபாடு ஆரம்பித்து வளர்ந்திருக்கிறது. அந்த மலையையும், அலையையும், கலையையும் உருவகப்படுத்தியே மலைமகள், அலைமகள், கலைமகள் என்று கற்பனை பண்ணி இருக்கிறார்கள். நின்று தொழுதிருக்கிறார்கள். விழுந்து வணங்கியிருக்கிறார்கள்.

இடையிடையே பழைய பயமும் விட்டபாடாக இல்லை. அந்தப் பயத்தை யெல்லாம் எண்ணியபோது கலைமகள், அலைமகள், மலைமகள் மூன்று பேரையும் சேர்த்தே கினைத்திருக்கிறார்கள். அந்த மூன்று உருவமும் சேர்த்தே அன்னையைத்தான் பழையோள், பராசக்தி என்று போற்றியிருக்கிறார்கள். ஆதியில் தோன்றிய அன்னை பராசக்தி, பின்னர் தோன்றிய தேவர் மூவரினும் ஆற்றல் மிகுந்தவள் என்று நம்பியிருக்கிறார்கள். இந்தப் பராசக்தியே காஞ்சி காமாக்ஷியாகத் தமிழர்கள் உள்ளத்தில் உருவாகி இருக்கிறாள், எத்தனையோ வருஷங்களுக்கு முன்பாகவே.

காஞ்சிகாமாக்ஷி, மதுரைமீனாக்ஷி, காசிவிசாலாக்ஷி மூவரும் அவர்தம் அருள் நோக்காலேயே மக்கள் வேண்டுவன எல்லாம் தரவல்லவர்கள். மதுரை மீனாக்ஷி, பாண்டியன் மகளாகப் பிறந்து, மானிடப் பெண்ணாக வளர்ந்து, அரசியாக அரியனை ஏறியவள். ஆகவே அவளுக்கு இரண்டே கைகள். செண்டேந்திய திருக்கரம் ஒன்று, ஒயிலாகத் தொங்கவிடப்பட்ட கரம் மற்றொன்று.

ஆனால் அன்னை காமாக்ஷிக்கோ கரங்கள் நான்கு, அவள் தன் தெய்வத்தன்மையை விளக்க. சாதாரணமாகக் கோயிலில் உள்ள அம்பிகைகளுக்கு நான்கு கரங்கள் இருந்தால், அவற்றில் ஒன்று வரத முத்திரையோடும், ஒன்று அபய முத்திரையோடும் அமைந்திருக்கும். ஆம். அபயம் அருளுவதோடு, வாரி வழங்கும் வரதம் உடையவள் அல்லவா அவள்? ஆனால் காஞ்சி காமாக்ஷியோ கரங்கள் நான்கிருந்தும், அதில் வரதமும் காணோம், அபயமும் கானோம். அவளோ பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சதாசிவன் முதலிய பஞ்ச பிரமாக்களையே தனக்கு ஆசனமாகக் கொண்டு, அவ்வாசனத்தில் பத்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறாள் என்பர். நான்கு கைகளிலும் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலியவற்றையே தாங்கி இருக்கிறாள். ஆம். அவள் அருள் புரிவதெல்லாம் மீனாக்ஷியைப் போலக் கண்களின் மூலமாகத்தான். மூன்று கண்களுடன் காமேசுவரி, லலிதை, ராஜேசுவரி, திரிபுரை, ஸ்ரீ சக்ரநாயகி என்னும் பல திருப்பெயர்கள் பெற்று விளங்குகிறாள்.

காஞ்சியில் இவள் அவதரிப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் பந்தகாசுரன், பண்டாசுரன் என்பவர்களே. அவர்கள் செய்யும் இடுக்கண்களைத் தாங்க இயலாது தேவர்கள் தேவியிடம் முறையிடுகிறார்கள். தேவி காஞ்சியில் கிளி வடிவுடன் செண்பக மரத்தில் வாசம் செய்ய வருகிறாள். அப்படி வந்தவளே, அங்குள்ள ஒரு பிலாகாசத்தில் தோன்றித் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்கிறாள். அன்னை காமாக்ஷி பிலாகாசத்திலிருந்து சுயம்புவாகவே தோன்றியவள் என்று கூறுகிறது. தல வரலாறு.

ஸ்ரீ காமாட்சி

இந்த அம்பிகை மூன்று வடிவத்தில் இருக்கிறாள். கர்ப்ப கிருஹத்தில் மூலத் திருவாக இருப்பவளே அன்னை காமாக்ஷி. அவளையே அங்கே தவக்கோலத்திலும் காண்கிறோம். அன்னை பார்வதிக்கும் ஒரு காலத்தில் முனிவர்களது சாபம் ஏற்பட்டிருக்கிறது. சாபவிமோசனம் பெற, அவள் காசியில் பன்னிரண்டு வருஷங்கள் தவம் செய்கிறாள். அங்குன்ளவர்களின் பசியை எல்லாம் அகற்றி அன்னபூரணி என்று பெயர் பெறுகிறாள். அப்படியும் சாப விமோசனம் பெற முடியாமல், காசியிலும் சிறந்த காஞ்சிக்கு வந்து, அங்கு ஏகாம்பரமாக இருக்கும் மாமரத்தடியில் தவம் புரிகிறாள். அறம் வளர்க்கிறாள்.

எண்ணரும் பெருவரங்கள் முன் பெற்று
அங்கு எம்பிராட்டி தம்பிரான் மகிழ்ந்தருள,
மண்ணில்மேல் வழிபாடு செய்தருளி
மனையறம் பெருக்கும் கருணையினால்,
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்கு நாடு
காதலின் நீடிய வாழ்க்கை
புண்ணியத் திருக்காமக் கோட்டத்துப் பொலிய
முப்பதொடு இரண்டு அறம் பெருக்கும்

அவளது பான்மை பாராட்டப் படுகிறது.

இந்த அறம் வளர்த்தாள் மாமரத்தடியில் மணலினால் லிங்கம் அமைத்துப் பூஜை செய்து வரும்பொழுதுதான், இறைவன் அவளது தவத்தைக் கண்டு மகிழ்ந்து, அந்த மாவடியில் காட்சி தந்து ஆட்கொள்கிறார் என்று புராணங்கள் கூறும். இவளை நினைந்தே, 'அருட்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவள் காண்’ என்று இறைவனைப் பாடி மகிழ்கிறார், அப்பர்.

கர்ப்பகிருஹத்தை அடுத்த அந்தராளத்திலே அவளே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகிறாள். சாதாரணமாக, சக்கர ஸ்தாபனம் செய்து, அதன் பேரிலேயே மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வதே வழக்கம். இங்கு மாத்திரம் சக்கர பீடம் மூல விக்கிரஹத்துக்கு முன்னாலே தனியே இருக்கிறது. வட்ட வடிவமாக அம்பிகையின் எதிரிலே ஒரு தொட்டி போன்றிருக்கும் இடமே அச் சக்கர பீடம். அஷ்ட லக்ஷ்மியையும் அந்தப் பீடத்திலே உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் பீடத்தையே ஆதிசங்கரர் பூஜித்துப் பேறுகள் பெற்றார் என்றும், அதனாலேயே காஞ்சிகாமகோடி பீடாதிபதி என்று ஆச்சார்ய சுவாமிகள் அழைக்கப்படுகின்றனர் என்றும் சொல்கிறார்கள். மூலத் திரு உருவை விட, அம்பிகை தோன்றிய பிலாகாசமும், ஸ்ரீப சக்கரமாக அமைந்த இந்தப் பீடமும் நிறைந்த சாந்நித்யம் உடையவை என்பது மக்கள் நம்பிக்கை.

இந்தக் காமாக்ஷியைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை அம்பிகைகள். அருபலக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாக்ஷி இடப்புறத்தில் வடக்கு நோக்கித் தவம் புரிகிறாள். மகா லசக்ஷ்மிக்குத் தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம், அதனால் ஒரு நாள் தன்நாயகன் மகாவிஷ்ணுவின் அழகையே பரிகசிக்கிறாள். அதனால் அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்கக் காம கோட்டத்தை அடைந்து தேவியை நோக்கித்தவம் புரிகிறாள். காமாக்ஷியின் குங்கும நிர்மால்ய பிரசாத ஸ்பரிசத்தால் தன் சுயரூபம் பெறுகிறாள் என்பது கதை.

ஆம்! வலப்பக்கத்தில் இப்படிச் செய்த தவத்தால் பூரண அழகை மீண்டும் பெற்ற செளந்தர்ய லக்ஷ்மியும், அவள் சௌந்தர்யம் பெற்றதைக் கண்டு, அவளைத் திரும்பவும் தன்னுடனேயே அழைத்துச் செல்ல ஆவலோடு ஓடி வந்திருக்கும் கள்ளப் பெருமானுமே இருக்கிறார்கள், நல்ல சிலை உருவிலே (கணவனது அழகை எள்ளி நகையாடும் நங்கையர்களுக்கு எல்லாம் இந்த அரூப லக்ஷ்மியின் கதை ஓர் எச்சரிக்கையே).

இன்னும் வராஹீ அர்த்தநாரி, அன்னபூரணி, ராஜசியாமளா என்னும் அஷ்ட புஜங்களோடு கூடிய சரஸ்வதி எல்லோருமே இந்தக் காமாக்ஷியின் கோயிலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அன்னை பராசக்தியின் அம்சம் அத்தனையையும் ஒருங்கே காண இந்தக் கோயில் ஒன்றே போதும். மூல மூர்த்தியாம் காமாக்ஷியைப் பற்றியும், அவளைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் ஒரு வார்த்தை.

இன்று உற்சவ மூர்த்தியாக இருப்பவள் சமீப காலத்தில் உருவானவளே. புராதனமான உற்சவ மூர்த்தி தனித் தங்கத்தால் ஆனவள். ஆகவே பங்காரு காமாக்ஷி என்று பெயர் பெற்றிருந்தாள். அந்தச்சொர்ண காமாக்ஷியை மைசூரிலிருந்து ஆண்ட ஹைதர்அலி கைப்பற்றிச் செல்ல முயன்றிருக்கிறான். இதைத் தடுக்கத் தஞ்சையிலிருந்த நாயக்க மன்னர்கள் இந்தப் பங்காரு காமாக்ஷியைத் தஞ்சைக்கே பத்திரமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு இன்னும் கோயில் கொண்டிருக்கிறாள், இந்த அழகானதங்கக் காமாக்ஷி-புனுகுச் சட்டத்துக்குள் புதைந்து கொண்டு.

இந்தக் காமாக்ஷியின் பிரதிநிதியாகக் காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் 1941ஆம் வருஷம் பங்காரு காமாக்ஷியின் பாதங்களை மட்டும் உருவாக்கிப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆம். 'பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ?' என்று கற்பனை பண்ணத் தெரிந்தவன்தானே தமிழன்.

இதுவரை சொன்ன மூர்த்தங்களைத் தவிர, இக் கோயிலில் ருத்ரமூர்த்தியான துர்வாஸர் இருக்கிறார். உத்ஸவமூர்த்தியின் எதிரில் உள்ள மௌன மண்டபத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டதுண்டீரராஜர் கூப்பிய கையுடன்நின்று கொண்டிருக்கிறார். காசி கால பைரவர், மஹிஷமர்த்தனி, அகஸ்தியர், ஹயக்கிரீவர் முதலிய விக்கிரகங்களும் இக்கோயிலில் உண்டு.

கோயிலுக்கு வடமேற்கே உலகாணிதீர்த்தம் என்னும் பஞ்ச கங்கைக் குளம் இருக்கிறது. அக்குளக்கரையிலே மூன்று நிலைகள் உள்ள மாடம், அந்த மாடங்களில் நின்றான், இருந்தான், கிடந்தான் கோலங்களில் விஷ்ணு சேவை சாதிக்கிறார். இச்சிற்ப வடிவங்கள் எல்லாம் சிமெண்டால் சமீப காலத்தில் உருவானவை.

பராசக்தியாம் காமாக்ஷி கோயிலிலே இவர்களுக்கு இடம் கொடுப்பானேன் என்று கேட்கலாம் நீங்கள். காமாக்ஷி அம்மை அறம் வளர்க்கப் புறப்பட்டதை நாம் அறிவோம். அதற்கென்று வந்த பண்டங்களை அப்புறப்படுத்தியும், புசித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தது ஒரு பூதம் அப்பூதத்தின் வலியடக்க அம்மை மாதவனையே கேட்டுக் கொள்கிறாள். அவரும் பூதத்தைப் பிடித்தடக்கி அதன் மீது ஏறி நிற்கிறார். அதனால் அடங்கவில்லை பூதம் என்று கண்டு, அதன் மீது உட்கார்ந்து பார்க்கிறார். அதனாலும் அடங்காதது கண்டு, பூதத்தின் மீதே நன்றாகக் காலை நீட்டிப் படுத்துக் கொள்கிறார். ஒரு வழியாய் பூதம் திருமாலின் பலம் தாங்காது நசுங்குண்டு நலிகிறது.

இப்படி ஒரு கதை, இக்கதையின் ஞாபகார்த்தமாக இப்பஞ்ச கங்கைக் குளக் கரையிலே உருவாக்கி யிருக்கிறார்கள். இவர்களை முறையே ஊரகம் (உலகளந்த பெருமாள்) பாடகம் (பாண்டவப் பெருமாள்) வெஃகா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்) கோயில்களிலே காணலாம் காஞ்சியிலே.

இக்கோயில் ஆதியில் பௌத்தர்களுடைய தாரா தேவியின் கோயில் என்றும், பௌத்தர்கள் தமிழ் நாட்டை விட்டு ஓடிய பின், இது காம கோட்டமாக மாற்றப்பட்டது என்றும் கூறுவர். கோயிலுக்குள் மொழு மொழு என்று ஏழடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்று இருப்பதைக் காட்டி இதற்கு ஆதாரம் தேடுவர். இச்சிலையே சாத்தான் என்றும் சொல்லுவர்.

இது தவிர, இக்கோயிலில் ஆராய்ச்சிக்கு உரிய ஸ்தம்பம் ஒன்றும் உண்டு. காமாக்ஷியம்மையின் சந்நிதிக்குள் நுழையும் வழியில் மேல்தளத்தில் ஒரு ஸ்தம்பம். ஜெயஸ்தம்பம் என்று கோயில் நிர்வாகிகள் கூறுவர். ஸ்தம்பத்தின் மேல் தளத்திலே சாரநாத் சிங்கங்கள் போல் நான்கு பூதகணங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

சரித்திர ஆராய்ச்சியாளர் சமண சமயத் தூண் என்றும், கி.பி. 15ஆம் நூற்றாண்டிலே நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவர். காஞ்சியில் ஓடும் வேகவதிக்கு அக்கரையிலே திருப்பருத்திக் குன்றத்திலே ஜைனர்கள் கோயில் இருப்பது இதற்குச்சான்று என்பர்.

ஆனால் தூண், தூணில் உள்ள கமலம், தட்டு எல்லாவற்றையும் நோக்கினால், பல்லவர் காலத்துத் தூணாக இருக்கலாமோ என்றும் தோன்றும்.

ஜெயஸ்தம்பம்

இப்படிச் சைவம், வைணவம், பெளத்தம், ஜைனம் எல்லாம் உரிமை கொண்டாடும் கோயில் இது. இந்தக் கோயிலுக்குள் சென்றாலே திக்குத் திசை தெரியாதபடி உட் கோயில்களும் சந்நிதிகளும் அமைந்திருக்கும். சமய மார்க்கத்தோடு திசை மயக்கமும் உடைய கோயிலாக இருப்பதால் தானோ என்னவோ 'திசை மயக்கம் ஒன்று என்றும் உளது, அஃது இன்றும் அங்குளதால்,' என்று சேக்கிழார் ஆராய்ச்சியாளர்களுக்குப் பிடிகொடாமல் பேசுகிறார்.

காஞ்சி காமாக்ஷியைக் கண்டு தொழுது திரும்பும் பக்தர்கள் உள்ளத்தில் எவ்வித மயக்கமும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.