வேங்கடம் முதல் குமரி வரை 1/013-027

13. அத்திகிரி அருளாளன்

திருமழிசை ஆழ்வார் திருமழிசையை விட்டுக் காஞ்சீபுரத்துக்கு வருகிறார். அங்கே கணிகண்ணன் என்ற புலவன் அவருக்குச் சிஷ்யனாகவும் நண்பனாகவும் அமைகிறான். இவரது புகழையும் பெருமையையும் கேட்ட பல்லவ அரசன் கணிகண்ணனை அழைத்து, அவரது ஆச்சாரியாரை அரண் மனைக்கு அழைத்து வந்து, தன் மேல் ஒரு பாட்டுப் பாடச் செய்ய வேண்டும் என்கிறான். -

நாக்கொண்டு மானிடம் பாடேன் என்ற வைராக்கியம் உடையவர் ஆயிற்றே, அவரை எப்படிக் கூப்பிட்டு வருவது என்று கணிகண்ணன் சொல்கிறான். அப்போது நீராவது என் மீது ஒரு பாட்டுப் பாடுமே என்கிறான் அரசன். 'குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லையே நான், என்னாலும் அது இயலாதே!' என்று கையை விரித்து விடுகிறான், கணிகண்ணன்.

உடனே கோபமுற்று அரசன் உம்மை நாடு கடத்துவேன் என்கிறான். கணிகண்ணனும் சளைக்கவில்லை. நீயென்ன என்னை நாடு கடத்துவது? நானே போகிறேன் என்று சொல்லித்தன் ஆச்சாரியரானதிருமழிசை ஆழ்வாரிடம் தகவல் கொடுத்துப் புறப்பட்டு விடுகிறான், காஞ்சியை விட்டு.

சிஷ்யனுக்குப் பின்னேயே ஆழ்வாரும் புறப்படுகிறார். புறப் படுவதற்கு முன்கச்சி மணிவண்ணப் பெருமாளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்து விட்டே புறப்படுகிறார். கட்டளை இது தான.

கணிகண்ணன் போகின்றான்காமருபூங் கச்சி மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும்உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

சிஷ்யன் பின்னாலேயே குரு, குருவின் பின்னாலேயே பெருமாள், பெருமாள் பின்னாலேயே ஊரில் உள்ள மக்கள் எல்லோருமே கிளம்பி விடுகிறார்கள், காஞ்சியை விட்டு. பல்லவ மன்னன் தான் அறியாது செய்த பிழைக்காக இரங்கி ஓடிச் சென்று கணிகண்ணன் காலில் விழுந்து அவனைத் திரும்பும்படி அழைக்கிறான். அவனும் பிகு பண்ணாமல் ஊர் திரும்புகிறான். மழிசையாரும் திரும்புகிறார், பெருமாளுக்கு மாற்று உத்தரவு போட்டு விட்டு.

கணிகண்ணன் போக்கொழிந்தான்காமருபூங்கச்சி மணிவண்ணா! நீகிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவனும் செலவுஒழிந்தேன் நீயும்உன்றன் பைந்நாகப் பாய்விரித்துக் கொள்!

என்பதே மாற்று உத்தரவு. உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார் பெருமாள். இந்தப் பெருமாள் அன்று முதல் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெறுகிறார். இந்த யதோத்காரியே கோமளவல்லியுடன் திருவெஃகாவில் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறார்.

இந்தப் 'பைந்தமிழ்ப் பச்சைப் பசுங்கொண்டலின்’ இலக்கியப் பிரசித்தியோடு போட்டி போட்டுக் கொண்டு, காஞ்சியில் மற்றோர் இடத்தில் கொலுவிருப்பவனே வைகுந்தப் பெருமாள். சிற்பக் கலைக்குச் சிவன் அளித்த பரிசு கைலாசநாதர் கோயில் என்றால், விஷ்ணு அளிக்கும் பரிசு இந்தப் பரமேசுவர விண்ணகரம்.

இதில் விசேஷம் என்ன வென்றால், கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் மகனான பரமேசுவரவர்மனே வைகுண்டப் பெருமாளுக்கு இந்தப் பரமேசுவர விண்ணகரத்தைக் கட்டியிருக்கிறான். அத்தனை சமரச மனோபாவம் தந்தைக்கும் மகனுக்கும்.

வைகுண்டநாதன் பரம பதத்தில் வீற்றிருக்கும் திருக்கோலம், பாலாழியில் அறிதுயில் கொள்ளும் நிலை எல்லாவற்றையும் காண வேண்டுமானால் இந்தக் கோயிலுக்குள் நுழைய வேணும். இது தவிர பல்லவ மன்னர் சரித்திரப் பரம்பரையைப் பற்றி ஆராய்ச்சி பண்ண விரும்புபவரும், இக்கோயிலுள்நுழைந்து உள் பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால், கல்லிலே உருவாகியிருக்கும் சரிதையையே தெரிந்து கொள்ளலாம், எளிதாக.

இன்று நாம் காண இருப்பது இந்த இலக்கியப் பிரசித்தி பெற்ற யதோத்காரியையும் அல்ல, சரித்திரப் பிரசித்தி பெற்ற வைகுண்டப்பெருமாளையும் அல்ல. இருவருக்கும் மேலான அருளாளனாக வரப்பிரசித்தியுடைய வரதரைக் காணத்தான் இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறோம். காஞ்சியில் உள்ள விஷ்ணு கோயில்களி லெல்லாம் பெரிய கோயில் இந்த வரதராஜப் பெருமாள் கோயில்தான். ஆம். அவன் அத்திகிரி என்னும் மலை மேலேயல்லவா ஏறிக்கொண்டு நிற்கிறான்.

படைப்புத் தொழில் புரியும் பிரமனுக்கு மறதி ஏற்படுகிறது. ஞாபக சக்தி குறைகிறது (சரிதான். அப்படி அவர் ஞாபக சக்தி இழந்திருந்த காலத்தில் செய்த படைப்புகளே கால் இல்லாமலும், கை இல்லாமலும், தலை இல்லாமலும், ஏன் - மூளை இல்லாமலும் பிறக்கும் பிறவிகள் போலும்). பிரமனே இதைப் போக்கிக் கொள்ள ஒரு யாகம் செய்கிறான். யாக குண்டத்திலிருந்து எழுந்த புண்ணிய கோடி விமானத்தில் தேவராஜனான வரதன் தோன்றிப் பிரமனுக்குள்ள மறதியைப் போக்குகிறான். அன்று பிரமனுக்குக் காட்சி கொடுத்த கோலத்திலேயே தங்கி விடுகிறார், இந்தத் தலத்திலே,

திசை யானைகள் பூஜித்த தலம் ஆனதனால், அத்திகிரி என்று பெயர் பெற்றது என்பர் ஒரு சாரர். இல்லை, ஐராவதம் என்ற தேவேந்திரனது யானையின் மீது ஏறி நின்று தரிசனம் கொடுத்ததால், அத்தியூர் என்று வழங்கப்படுகிறது என்பர் மற்றொரு சாரர். யானை போன்ற உயர்ந்த கட்டு மலையிலே பெருமாள் எழுந்தருளியிருப்பது என்னவோ உண்மை. மலை மேல் நிற்கும் இம்மாதவனைப் பூதத்தாழ்வார்,

அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுஉண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்!

என்று பாடி மகிழ்கிறார்.

இந்த அத்தியூரான் கோயில் 1200 அடி நீளமும் 800 அடி

பல்லவர் தூண்கள்

அகலமும் உடைய பெரிய மதில் சூழ்ந்த கோயிலாக இருக்கிறது. இவனைக் காண மேலக் கோபுரம் வழியாகத் தான் நுழைய வேண்டும். பரந்த மைதானத்தைக் கடந்தால், நல்ல உயரமான தூண்களும் அழகான கோபுரமும் உடைய நாலு கால் மண்டபத்தைக் காண்போம்.

இதன் பின் கோபுரத்தோடு கூடிய மகா மரியாதை வாயிலையும் கடந்தால், திரு மஞ்சன மண்டபத்துக்கு வந்து சேருவோம்.

இனி வட பக்கம் திரும்பிப் பன்னிரண்டு படிக்கட்டுகளில் ஏறினால் ஒரு மகா மண்டபத்தை அடைவோம். அந்த மகா மண்டபத்தையும் அதற்கு மேற்கேயுள்ள முகமண்டபத்தையும் கடந்தால், பெருந்தேவித் தாயார் சந்நிதி வந்து சேருவோம்.

பெருந்தேவி உண்மையிலேயே பெரிய இடத்துத் தேவி என்பதை அவள் உடுத்தியிருக்கும் ஆடையும் அணிந்திருக்கும் நகைகளுமே சொல்லும். நிரம்பச் சொல்வானேன்? ஒரே வைர மயம். உச்சிமுதல் உள்ளங்கால்வரை அப்படியே வைத்து அழுத்தி யிருக்கிறார்கள். கற்சிலையாகவும் செப்பு சிலையாகவும் இருக்கிறாள் அவள் என்பர். என்றாலும் அவளது திருமுக மண்டலத்தைத் தவிர, மற்றவை எல்லாம் நவரத்தினமயமாகவே தோன்றும்.

வரதர் கோயில்

இவளை வணங்கி அருள் பெற்றபின், திரும்பவும் படிகள் இறங்க வேண்டும், கருடாழ்வார் சந்நிதிப் படி கடக்க வேண்டும். கருடாழ்வாரை எதிர் நோக்கி

இருப்பவர் குகா நரசிம்மர். இவர் ஒரு சிறு குகைக்குள்ளேயே இருக்கிறார். இவரைத் தான் 'மன்று மதில் கச்சிவேளுக்கை ஆளரி' என்று திருமங்கை மன்னர் பாடியிருக்கிறார். இவரே இக்கோயிலில் முதல் முதல் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது புராண வரலாறு.

இந்தக் குகை நரசிம்மரை வலம் வந்து கீழ்ப்பிராகாரத்துக்கு வந்து சில படிகள் ஏறினால் ஒரு சிறு மண்டபம் வரும். அதன் பின்னும் இருபத்து நான்கு படிகள் ஏற வேணும். இந்தப் படிகளை ஏறிக் கடந்த பின்தான் அத்திகிரி வந்து சேர்வோம். அதன் பின்னும் ஆறு படிகள் ஏறிக் கடந்தால், அத்திகிரி அருளாளனைக் கண்டு தரிசிப்போம்.

ஆஜானுபாகுவாக நீண்டுயர்ந்து தங்கக் கிரீடமும் தங்கக்

வைகுண்ட பெருமாள் கோயில்

கவசமும் தரித்துக் கம்பீரமாக நிற்கிறார் அவர். இந்த அழகு வாய்ந்த வரதர் அருள் கொழிக்கும் திருமுக விலாசம் உடையவர். இவரைக் கண்டு தானே 'ஐயுறவும், ஆரிருளும் அல்வழியும் வைகுண்ட பெருமாள் கோயில் அடைந்தவர்க்கு மெய்யருள் செய்திடும் திருமால் வேழமலை மேயவனே' என்று மெய்யுருகி நின்றிருக்கிறார் வேதாந்த தேசிகர்.

அவரது முகத்தில் நிறைய வடுக்கள் இருக்கின்றன. அவையெல்லாம் போரில் ஏற்பட்ட காயங்கள் என்பார்கள். மூர்த்தி சற்றுப் பின் சாய்ந்து மிடுக்காகவே இருக்கிறார். இவரைப் பல கோலங்களில் அலங்காரம் பண்ணிப் பார்க்க விரும்புபவர்கள் உத்சவ காலங்களிலே இங்கு செல்ல வேணும்.

முகம்மதியப் படையெடுப்பின் காரணமாக, இவ்வரதர் 1690இல் ஆலயத்தினின்றும் எடுத்துச் செல்லப்பட்டு, உடையார் பாளையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்றும், மறுபடியும் 1710இல் தோடர்மால் என்பவர் மூலம் திரும்பவும் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டார் என்றும் அறிகிறோம். இதை ஞாபகப் படுத்தும் விழா ஒன்று இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

அத்திகிரி அருளாளனை வணங்கியபின், கச்சி வழித்தான் மண்டபம் வழியாக வந்து, மலையை விட்டு இறங்கி வெளியே வரலாம். கோயிலை விட்டு வெளியே வருமுன், திரு முற்றத்தில் உள்ள நாலு கால் மண்டபத்துக்கு வடக்கே இருக்கும் அனந்த புஷ்கரணியையும், அதனை அடுத்து நூற்றுக் கால் மண்டபத்தையும் பார்த்து விடலாம்.

குதிரையையும் யாளியையும் அவற்றின் மீது ஏறிச் சவாரி செய்யும் வீரர்களையும் உடைய கற்றுண்கள் நிறைந்தது. இம் மண்டபம். மன்மதன், ரதி முதலிய சிற்ப வடிவங்களையும் கல் சங்கிலி முதலிய திறன்மிகு வேலைகளையும் அங்கு கண்டு களிக்கலாம். இவை வேலூர் விரிஞ்சிபுரம் முதலிய தலங்களில் உள்ள நாயக்கர் காலத்துச் சிற்ப வடிவங்களோடு ஒப்பிடத்தகுந்தவை அல்ல. காலத்தில் பிற்பட்டதோடு, கலை அழகிலும் பிற்பட்டனவாகத்தான் தெரிகின்றன.

நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே அனந்த புஷ்கரணி. அனந்தனான ஆதிசேஷன் இருந்து தவம் செய்த இடம். இந்த அனந்த சரஸின் நடுவிலே ஒரு நீராழி மண்டபம். அந்த மண்டபத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு மாடத்தில் அத்திவரதர் இருக்கிறார். அத்திவரதர் என்றால் அத்திமரத்திலே உருவானவர்தான். அவர் அந்தத் தண்ணீருக்குள்ளேயே முழுகிச் சயனத் திருக் கோலத்திலேயே இருக்கிறார். நாற்பது வருஷங்களுக்கு ஒரு முறையே குளத்தில் உள்ள நீரையெல்லாம் இறைத்து அவரை வெளியே கொணர்கிறார்கள். ஒரு மண்டல காலம் பூசை புனஸ்காரம் எல்லாம் நடக்கும். அதன் பின் திரும்பவும் யதாஸ்தானத்துக்கே. ஆம், தண்ணீருக் குள்ளேயே முழுகி விடுவார். ஆழ்ந்ததூக்கத்திலும் அமிழ்ந்து விடுவார். (சரிதான், இவர் கும்பகர்ணனையுமே தூக்கி அடிக்கும் நித்ரத்வப் பெருமை உடையவர் போலும்!)

இந்த அத்திரவரதரே ஆதிவரதர் என்பது கர்ண பரம்பரை. இவற்றையெல்லாம் பார்த்த பின்னும், அவகாசம் இருந்தால், இக்கோயிலிலேயே பெரிய கோபுரமாக விளங்கும் கீழக் கோபுரத்தையும் பார்க்கலாம். நந்தவனம் முதலியவைகளையும் கண்டு களிக்கலாம்.

வரதர் கோயிலை விட, அவருக்கு நடக்கும் உத்சவங்கள் பிரசித்தமானவை. வரதரது பிரம்மோற்சவம் பங்குனி சித்திரை மாதங்களில் நடக்கும். பிரம்மோற்சவத்தை விடப் பிரசித்தியுடையது வைகாசி பூர்ணிமையில் நடக்கும் கருடசேவை. அதிகாலையிலேயே வரதராஜர் கருடன் மீது ஆரோகணித்துக் கோயிலை விட்டுப் புறப்படுவார். இந்தக் கருடசேவையைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்துக் கிடப்பார்கள், வீதிகளில்.

'அஞ்சேல்' என்று அருள் புரியும் அத்திகிரி அருளாளன் சங்கு சக்ரதாரியாகக் கருடன் மீது கம்பீரமாக எழுந்தருளும் காட்சிகண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 'கஞ்சி வரதப்பா' என்றால், 'எங்கு வருதப்பா?’ என்று கேட்கும் ஏழை ஏதலர்கள் மலிந்த நாட்டிலே கஞ்சிவரதன் எல்லோருக்கும் அருள்புரியும் அருளாளனாக இருக்கிறான் என்ற நம்பிக்கையே மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

இந்த அத்தி வரதர் அருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் எத்தனையோ பேர். காஞ்சியிலே மனைவியுடன்தங்கியிருந்து குடும்பம் நடத்திப் பின்னர் துறவு மேற்கொண்டவர், ராமானுஜர், காஞ்சியில் இருந்தபோது, அருளாளன் அபிஷேகத்துக்கு இரண்டு மைலுக்கு அப்பால் உள்ள சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சன தீர்த்தத்தைச் சுமந்து கொண்டிருந்தவர் அவர்.

ராமானுஜருக்குப் பின், வைணவக் கோட்டையைக் கட்டிப் பாதுகாத்த பேரறிவாளர் வேதாந்த தேசிகர். அவருமே அத்திகிரியானிடம் அளவிலாப் பக்தி கொண்டவர். 'காசி முதலாய நன்னகர் எல்லாம் கார்மேனி அருளாளன் கச்சிக்கு ஒவ்வா!' என்ற அழுத்தமான கொள்கை உடையவர். ராமானுஜரது ஆசிரியர் என்று சொல்லத்தக்க பெருமை உடைய திருக்கச்சி நம்பியும் வரதராஜனின் நல்லருளுக்கு ஆளானவர். இவரைப் பற்றி ஒரு சுவையான கதை.

வரதனுக்குக் கைங்கர்யம் செய்து, நேருக்கு நேர் பேசும் வாய்ப்பும் பெற்றிருக்கிறவர் அவர். அதனால்தான் எல்லோரினும் சிறந்தவர் என்ற கர்வம் அவருக்கு. இவருடைய அடிப்பொடியைத் தலையில் அணிந்து கொள்கிறான், தாழ்த்தப்பட்ட ஒருவன். இவனைப் பற்றி வரதனிடம் கேட்டபோது, அவனுக்கு முத்தி நிச்சயம் என்கிறார் அவர். அவனோ மோக்ஷ, உலகத்திலும் நம்பியின் அடிப்பொடி கூடுவதையே பாக்கியமாகக் கருதுகின்றான்.

ஆதலால் திரும்பவும் வரதனிடம், தனக்கும் மோக்ஷம் சித்திப்பது உறுதி தானே என்று கேட்கிறார் நம்பி. அது சந்தேகத்துக்குரியது என்று கையை விரித்து விடுகிறார், வரதர். பகவத் பக்தியைக் காட்டிலும் பாகவத அபிமானமே சிறந்தது என்பதை வரதராஜரே திருக்கச்சி நம்பிக்குக் கற்பித்தார் என்று பெறப்படுகிறது, இதனால்.

இராமானுஜர், வேதாந்த தேசிகர், திருக்கச்சி நம்பிகளைப் போலவே, கூரத்தாழ்வானும் இங்கேயே தங்கி, வைணவ மதப் பிரசாரம் செய்த பக்தன். இன்னும் எண்ணிறந்த பக்தர்கள் ஆபரணங்களை வரதருக்கு அளித்து மகிழ்ந்திருக்கிறார்கள். வெங்கடாத்திரி சுவாமிகள் அளித்துள்ள கொண்டை அழகுடையது. அதை விடப் பிரபலமானது கிளைவ் அளித்துள்ள மகாப் பதக்கம். இந்த வரதனை,

நீலமே! காரின் முகிலே!
நெடுங் கடலின்
கோலமே! அத்திகிரிக்
கோமானே! - மூலமென
மாத்தாமரை மடுவில்
மால்யானை ஓலமிடக்
காத்தாய்! கடைபோகக் கா!


என்று நாமும் கூப்பிடலாம் - பெருந்தேவனாரோடு சேர்ந்து. கூப்பிட்டால் அவனும் கருடன் மேல் ஏறிக் கொண்டு பறந்தே வருவான்.