வேங்கடம் முதல் குமரி வரை 1/018-027

18. ஒற்றியூர் உறை உத்தமன்

ம்சாரம் ஒரு பெரிய சாகரம். என்றாலும் அந்தச்சாகரத்தில் புகுந்து குளிக்காதவர்கள் இல்லை. அப்படிப் புகுபவர்களில் அலைகளால் மோதுண்டு, சாகரத்திலேயே அமிழ்ந்து விடுகிறவர்கள்தான்.அனந்தம். ஏதோ ஒரு சிலரே இச்சாகரத்தில் நீந்தவும் முக்குளித்து வெளியே வரவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி யிருக்க, இச்சாகரத்தைக் கடத்தலோ அருமையினும் அருமை. அதற்குத் தக்கதொரு தோணி வேண்டும். தோணியை வலிக்க நல்ல வலுவான துடுப்பு வேண்டும். இப்படி யெல்லாம் சென்றாலும், சாகரத்திலே பாறைகள் வேறே மறைந்திருக்கும். கடும் புயல் வேறே அடிக்கும்.

இதையெல்லாம் வெற்றி கண்டு வாழ்வின் பேறு பெறுவதற்குத் துணையாயிருப்பது இறை உணர்வு. அந்த இறை உணர்வில் லயித்து, இறை வழிபாட்டில் திளைப்பவர்களே மனிதரில் தலையாய மனிதர்!’

இப்படியெல்லாம் விரித்துச் சொல்வது நானல்ல. சமயக் குரவரில் நல்ல பழுத்த அனுபவம் உடையவரான அப்பர் அடிகளே சொல்கிறார். அதுவும் கடற்கரையில் உள்ள திருவொற்றியூர் சென்று, அங்குள்ள ஆதிமூர்த்தியைக் கண்டு வணங்கிய பொழுது சொல்கிறார். ஒற்றியூரை ஒட்டியுள்ள கடலைக் கண்டதும், கடற்கரையில் நின்ற அப்பர் பாடுகிறார்.

மனம் எனும் தோணிபற்றி
மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றிச்
செறி கடல் ஓடும்போது

மதன் எனும் பாறை தாக்கி
மறியும் போது அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே!

என்று. ஆம். இறை உணர்வு மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறார் அவர். ஆனால் அந்த உணர்வைப் பெறுவதற்கும் அவன் அருளையே நாடுகிறார்.

இறைவனை உன்னுதற்கு அப்பர் அவன் அருள் வேண்டி நின்றால், இறைவனையே உண்டு சுவைத்து ருசிகண்டவராக நிற்கிறார் பட்டினத்தடிகள். திருவெண்காட்டிலே செல்வச் சீமானாகப் பிறந்து வளர்ந்து இறைவனாம் மருதவாணனையே மகனாகப் பெற்று, அம்மகன் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே என்று உணர்த்த, அதனால் மாடு மனை மக்கள் சுற்றம் எல்லாம் துறந்து பல இடங்களில் அலைந்து கடைசியில் ஒற்றியூர்க் கடற்கரை வந்து சேருகிறார்.

அங்கு முளைத்திருந்த பேய்க்கரும்பும் இனிப்பதை உணர்கிறார். கானும் பொருளில் எல்லாம் இறைவனைக் காணும் பேறு பெற்ற அவர் அந்தக் கரும்பிலும் இறைவனையே காணுகிறார். கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனியனாக இருப்பவன் இடைமருதன் என்பதை விடக் கரும்பையே கடவுளாகக் காணவும், அந்தக் கரும்பையே சுவைக்கவும் பேறு பெறுகிறார். தாம் பெற்ற அனுபவத்தையே எடுத்துச் சொல்கிறார்.

கண்டம் கரியதாய் கண்மூன்று உடையதாய்
அண்டத்தைப் போல அழகியதாய் - தொண்டர் உடல்உருகித் தித்திக்கும் ஓங்கும் புகழ்ஒற்றிக்
கடல்அருகே நிற்கும் கரும்பு

என்பது பட்டினத்தார் அனுபவம். அந்தக் கரும்பைச்சுவைக்க விரும்புபவர் எல்லோரும் சென்று தொழ வேண்டிய தலமே திரு ஒற்றியூர்.

இந்தத் திரு ஒற்றியூர் சென்னைக்கு வடக்கே ஆறு ஏழு மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய ஊர். கடற்கரையை அடுத்திருக்கிறது. சென்னையின் ஒரு பகுதியான வண்ணாரப் பேட்டையைக் கடந்து காரில் சென்றால் இங்குள்ள கோயில் வாயில் வந்து சேரலாம்.

கோயிலுக்கு வடபுறம் பெரியதொரு தெப்பக்குளம் இருக்கிறது. குளம் இருக்கிறதே ஒழிய, அதில் தண்ணீர் இருப்பது அருமை. குளக்கரையில் தெற்கு நோக்கிய ஒரு பெட்டிக் கடை. அந்தக் கடையை அடுத்து ஒரு சின்னஞ்சிறு சிலை. அதைக் கரும்பேந்திய பட்டினத்தாரோ என்று எண்ணத் தோன்றும். இல்லை. அது காந்திஜியின் சிலை யென்பார்கள் (ஐயகோ! காந்திஜியின் ஜாதக விசேஷமே அப்படி எவ்வளவு பிரபல சிற்பி உருவாக்கினாலும், அவர் சரியாக உருவாவதே இல்லை. காரணம் அவர்களால் அவரது உள்ளத்தில் வீசிய உண்மை ஒளியை உணர முடிவதில்லை. அவ்வளவுதான். சிற்பியின் திறமைக்குப் பழுது சொல்லுதல் கூடாது).

காந்திஜியானாலும் பட்டினத்தடிகளானாலும் இருவரும் வணக்கத்துக்கு உரியவர்கள்தாமே. ஆதலால் அவரை வணங்கிவிட்டு இனிக் கோயிலுக்குள் போகலாம். கோயிலினுள் சென்றதும், நமக்கு முன் எதிர் நிற்பது துவஜ ஸ்தம்பமும் நந்தி மண்டபமும் அல்ல. அவையெல்லாம் ஒரு மகிழ மரத்துக்குப் பிரதான இடம் கொடுத்துவிட்டு தென்புறமாக ஒதுங்கி நிற்கும்.

இது என்ன இந்த இடத்தில் இந்த மகிழடிக்கு இவ்வளவு மகத்துவம் என்று எண்ணுவோம் நாம். அதற்கு விளக்கம் பெறுவோம், அங்குள்ள அர்ச்சகரிடம். உங்களுக்குத் தெரியாதா? இங்கு மாசி மகத்தில் நடக்கும் மகிழடி சேவையைப் பற்றி என்று விவரிப்பார். அங்கு விவரிக்கும் சரிதத்தின் முழு விவரமும் தெரிவிக்கப் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் விரைந்து வருவார்.

வன் தொண்டராம் சுந்தரரை இறைவன் திருவெண்ணெய் நல்லூரிலே தடுத்து ஆட்கொள்கிறார். அதன் பின் அவர் திருவாரூர் சென்று, அங்குள்ள பரவையாரை மனக்கிறார். பின்னர் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வணங்கி விட்டுத் திரு ஒற்றியூர் வருகிறார்.

அங்கு இவருக்காகவே பிறந்து வளர்கிறாள், ஒரு பெண், சங்கிலி என்ற பெயரோடு. கோயிலில் அவளைக் கண்டு காதலிக்கிறார் சுந்தரர். இவர் அப்படி ஒன்றும் பிரமாத ஏக பத்தினி விரதர் அல்ல. இது அவரது திரிபாத மூர்த்தி தோழராம் இறைவனுக்குமே தெரியும். ஆதலால், தம் தோழராம் ஆதிமூர்த்தியின் அருளை நாடுகிறார். சங்கிலியை மணக்க.

அவரும் சங்கிலியிடம் சென்று, ‘சால என்பால் அன்புடையவனான சுந்தரன் உன்னை இரக்கின்றான். நீ அவனை மணந்தால் அணைவாய் மகிழ்ந்து’ என்கிறார்.

அவளும் சம்மதிக்கிறாள். ஆனால் நிபந்தனை விதிக்கின்றாள். தன்னை ஒருக்காலும் பிரியேன் என்று சுந்தரர் சத்தியம் செய்ய வேண்டும் என்று.

காரிய சித்தியிலேயே கண்ணாய் இருக்கும் சுந்தரரோ அதற்கும் சரி என்கிறார். இறைவனோடு மிக்க உரிமை கொண்டாடும் சுந்தரர் இதற்கும் ஒரு வழி கண்டு பிடிக்கின்றார்.

இறைவனிடமே, 'ஐயனே! நான் இந்தச் சத்தியத்தில் நிலைத்து நிற்கப் போவதில்லை. ஆதலால் நான் சங்கிலியுடன் உன்சந்நிதிக்குச்சத்தியம் செய்ய வரும்போது, நீ கோயிலினுள் இராதே. கோயில் பிராகாரத்தில் உள்ள மகிழ மரத்தடிக்குச் சென்று விடு. அப்படிச் சென்றுவிட்டால் என் சத்தியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இராதல்லவா? என்கிறார்.

இழுத்த இழுப்புக்கெல்லாம் இறங்கும் இறைவனும் சரி என்கிறார். ஆனால் ஒரு சிறு குறும்பு மாத்திரம் செய்கிறார். அன்றிரவே சங்கிலியின் கனவில் தோன்றி, நங்கையே! நாளை ஆரூரன் சூள் உரைக்க உன்னையும் அழைத்துக் கொண்டு, என் சந்நிதிக்கு வருவான். நீ சந்நிதியில் சத்தியம் செய்யவேண்டாம். பக்கத்தில் உள்ள கொங்கலர் பூ மகிழின் கீழ்ச் சத்தியம் செய்தால் போதும் என்று சொல்லு!’ என்று கூறி மறைகிறார்.

அவளும் மறுநாட் காலை அப்படியே சொல்கிறாள். என்ன செய்வார், இந்த முனைப்பாடிப் புரவலனாம் சுந்தரர்? இறைவன் செய்யும் திருவிளையாட்டை நினைந்து, 'மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து மேவாது இங்கு யான் அகலேன்!' என்று சத்தியம் செய்து கொடுக்கிறார் சங்கிலிக்கு.

அன்று மகிழடிக்கு வந்த ஆதிபுரீசுவரர் அங்கேயே நிலைத்து விடுகிறார், அன்று முதல். அதனால் இந்த மகிழ மரத்துக்கே ஒரு சாந்நித்யம், அதனையே இறைவன் திருவுரு என்று வழிபாடு நடக்கிறது. மகிழடி சேவை இன்றும் பெரியதொரு திருநாளாகவே கொண்டாடப்படுகிறது. எவ்வளவு அரிய உண்மையை அழகான ஒரு கற்பனை விளக்குகிறது. கல்லிலும் புல்லிலும் மண்ணிலும் மரத்திலும் இறைவன் என்றுமே நிலைத்திருக்கிறான் என்ற அரிய உண்மையை விளக்க எழுந்த கதையாக இந்த மகிழடி சேவையைக் கொண்டால், எத்தனை இன்பம் நமது உள்ளத்துக்கு. சத்தியம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஒன்றும் நமக்கு இல்லாவிட்டாலும், நாமும் இந்த மகிழ மரத்தை மூன்று சுற்றுச் சுற்றி வணங்கிவிட்டு மேல் நடக்கலாம்.

இந்த மகிழ மரத்தை ஒரு சுற்றுச்சுற்று முன்பே நம் கண் முன் ஓர் அழகிய வடிவம் தோன்றும். அழகிய சிற்பம் என்பதை விட, அபூர்வம் என்பதிலேயே அதில் ஒரு கவர்ச்சி. பிரதான கோயிலின் கோஷ்ட விக்கிரகமாக வடக்கு நோக்கி இருப்பவர் திரிபாத திரிமூர்த்தி. தமிழ்நாட்டிலே இச்சிற்ப வடிவம் இரண்டே இரண்டு இடத்தில்தான். ஒன்று திருவானைக்காவில். மற்றொன்று திருவொற்றியூரில்.

திருவானைக்காவில் உள்ளதை விடப் பெரியவராக அழகுடையவராக இருப்பவரே திருவொற்றியூரில் உள்ள திரிபாத திரிமூர்த்தி. பிரமனும் விஷ்ணுவும் சிவனிடத்தே அடக்கம் என்னும் சிவபரத்துவத்தை விளக்க எழுந்த திரு உருவே இது. மான் மழுவேந்தி நிற்கும் சிவனுக்கு ஒரே திருப்பாதம். அவர் உருவில் இருந்து கிளைத்து எழும் பிரமன், விஷ்ணுவுக்குமே ஒவ்வொரு திருப்பாதமே. யோக நிலையில் சிவன் நின்றால், கூப்பிய கையராய் மற்றவர் இருவரும் நிற்கிறார்கள். எல்லாம் ஒரே கல்லில் மூன்றடி உயரத்தில் சிற்ப உலகிலேயே ஓர் அதிசய உருவாக இருக்கிறது. இந்த அபூர்வ வடிவைக் காண்பது உங்களுக்கு எளிதாகலாம், இங்கு உள்ள படத்தின் மூலம்.

மகிழடியில் உள்ள ஆதி மூர்த்தியையும் அதனை அடுத்த கோஷ்ட விக்கிரகமாக எழுந்தருளியிருக்கும் திரிபாத திரு மூர்த்தியையும் வணங்கிவிட்டு இனிப் பிரதான கோயிலினுள் நுழையலாம். இக் கோயிலில் உள்ள லிங்கம் புற்று வடிவமாக இருக்கிறது. இவரையே படம் பக்க நாதர் என்கிறார்கள். பழைய பெயர் ஆதிபுரீசுவரர். அவர்தான் இன்று மகிழடிக்கு வந்து கோயில் கொண்டுவிட்டாரே!

இந்த ஆதிமூர்த்தியாம் படம்பக்க நாதரையே தேவாரம் பாடிய மூவரும் பாடித் துதித்திருக்கிறார்கள். 'விழிதரும் நீரும் மண்ணும் விசும்பொடு அனல் காலும் ஆகி, அளிதரு பேரருளாளர் அரனாகிய ஆதிமூர்த்தி' என்று சம்பந்தரும், 'உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றி ஊர் உடையகோ, என்று அப்பரும் பாடியவரையே, 'பந்தும் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தி வண்ணர் என்று சுந்தரர் பாடுகிறார்.

இந்த ஆதிமூர்த்தியின் அருமைத் துணைவியாம் வடிவுடை அம்மைக்குத் தனிச் சந்நிதி. அது கோயில் வடகிழக்கு மூலையில் இருக்கிறது. இது தவிரப் புதுப்பிக்கப்பட்ட கோயில் (ஆம்! அழகற்ற திருவுருவங்களாலும் இரும்புக் கம்பியும் கிராதிகளாலும் உருவானது) ஒன்று கோயிலின் மேலப் பிராகாரத்தில் இருக்கிறது.

கோயிலுக்குள்ளேயே வடக்கு நோக்கிய காளியம்மையும் அவள் முன் ஒரு பலிபீடமும் இருக்கின்றன. பலி கொடுப்பதெல்லாம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம். அங்குதரும் குங்குமப் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்பலாம், வந்த வழி நோக்கி.

இத் தலம் சம்பந்தர் காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே பிரசித்தியடைந்திருக்கிறது. கோவிலில் திருவிளக்குத் தொண்டு செய்த கலிய நாயனாரது அவதார ஸ்தலம் இது. பல சோழ மன்னர்கள் இக்கோயிலைக் கட்டவும், இக் கோயிலில் வழிபாடுகள் நடக்கவும், போதிய நிலபுலன்களை மான்யமாக விட்டிருக்கிறார்கள்.

கோயிலில் பல உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. அவைகளை யெல்லாம் நடத்தி வைக்கச் சோழ மன்னர்களே இவ்வூருக்கு வந்திருக்கிறார்கள். இரண்டாம் ராஜராஜன் தான் பட்டத்துக்கு வந்த ஒன்பதாம் ஆண்டிலே இக் கோயிலில் நடந்த பங்குனி உத்தர உத்சவத்துக்கு நேரில் வந்திருந்தான் என்று கோயிலின் இரண்டாவது பிராகாரத்தின் கிழக்குச்சுவரில் உள்ளகல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இவனுக்குப் பின்னால் பட்டத்துக்கு வந்த மூன்றாம் குலோத்துங்கனும் இங்கு வந்து ராஜ ராஜன் திரு மண்டபத்திலிருந்து ஆனி உற்சவம் பார்த்தான் என்றும், அங்கு ஒரு தர்பாரே நடத்தினான் என்றும் வரலாறு.

இப்படியெல்லாம் சோழ மன்னர்களால் பாராட்டப்பட்ட இக்கோயில் ஒரு பெரிய கலைக் கழகமாகவே விளங்கி யிருக்கிறது, அந்நாளில். இலக்கணம், தர்க்கம், கலை ஞானம் எல்லாம் இங்கே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ராஜேந்திர சோழன் பெயராலும், குலோத்துங்க சோழன் பெயராலும் ஏற்பட்ட மடங்களில் எல்லாம் நல்ல உணவு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தமிழ் பரப்பவும் கலை வளர்க்கவு ஒரு நல்ல கலைப் பள்ளியாகவே இருந்திருக்கிறது இத்தலம்.

இத்தனை விஷயங்கள் தெரிந்தாலும், இன்னும் ஒரு குறை வாசகர்களுக்கு இருக்கவே செய்யும். திரு ஒற்றியூர் என்றால் பட்டினத்தார் ஞாபகத்துக்கு வருகிறாரே. அவருடைய ஞாபகச் சின்னம் ஒன்றும் இல்லையா இங்கே என்று கேட்கத் தோன்றும்.

ஒ, அதுவா! பட்டினத்தார் சமாதியையா கேட்கிறீர்கள் என்று சொல்லி, ஊரில் உள்ளவர்கள் கடற்கரைப் பக்கம் கையைக் காட்டுவார்கள். நாம் அங்குச் சென்றால் செல்லும் வழியிலே வலக் கைப் பக்கம் ஒரே சமாதிக் கூட்டங்கள் தென்படும். அங்குச் சென்றால் தகரக் கொட்டகையும் கள்ளிக்கோட்டை ஓடும் வேய்ந்த ஒரு சிறு கட்டடம் தெரியும். அங்குதான் பட்டினத்தார் மாடு மேய்க்கும் பையன்களுடன் விளையாடி, சாலுக்குள் மறைந்து, சமாதியடைந்தா ரென்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கடல் அருகே கரும்பைச் சுவைத்த அவரது திரு உருவம் செப்புச் சிலை வடிவில் இருக்கும். கரும்பேந்திய கையராய் அவர் நிற்பார், அங்கே. அவரைத் தொழுதுவிட்டு வெளியே வந்து, வலது பக்கம் நோக்கினால் அங்கு ஒரு கட்டடம். கட்டட வாயிலில் உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தால் அதிசயிப்போம். காரணம், அது வட்டார அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் அமைந்த, மகப்பேறு மருத்துவ இல்லம் ஆகும்.

'பார் அனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் யாரும் துறத்தல் அரிது அரிது!’ என்று பறை சாற்றும் பட்டினத்தார் சமாதியின் பக்கத்திலா மகப்பேறு மருத்துவ இல்லம் என்று வியப்போம். அதை அங்கு நிறுவிய அன்பர்களின் கலா ரசனையைக் கண்டு சிரிப்போம்.

ஒரே ஒரு சமாதானம். பிறந்த பின்தானே துறக்கும் எண்ணம். ஆதலால் பிறவியும் துறவும் அடுத்தடுத்து வருவது வாழ்வில் சகஜந்தான் என்று தேற்றிக் கொள்ளலாம்.