வேங்கடம் முதல் குமரி வரை 1/019-027

19. அல்லிக்கேணி அழகன்

பார்த்தனுக்கு அன்று கண்ணன் செய்த கீதை உபதேசம், பாரில் உள்ள மக்களுக்கு எல்லாம் இன்று பயன்படுகிறது. பலன் கருதாது உன் கருமத்தைச் செய்யக் கற்றுக்கொள் என்று கீதாசாரியனான கண்ணன் பார்த்தனுக்குக் கூறியிருக்கிறான், அன்று. கீதோபதேசம் செய்ய நேர்ந்த சந்தர்ப்பம் பாரதக் கதையிலேயே ஓர் அழகான கட்டம். அதைக் கீதையிலேயே விரிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், ரத்தினச் சுருக்கமாக அழகான வெண்பாக்களில் கூறுகிறார், பாரதம் பாடிய பெருந்தேவனார்.

குரு க்ஷேத்திரத்திலே பாண்டவர் படையும் கௌரவர் படையும் அணி வகுத்து நிறுத்தப் பட்டிருக்கின்றன. அப்போர்க்களத்துக்கு அர்ச்சுனன் வருகிறான், தேரூர்ந்து. தேரை நடத்துபவன் கண்ணன். பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனன், எதிர்ப் பக்கத்தில் இருக்கும் உறவினர்களையும் படை வீரர்களையும் பார்த்தவுடனே, இத்தனை பேர்களையும் கொன்று குவித்துத் தான் நாடாட்சி செய்ய வேண்டும் என்றால், அந்த அரசு அவசியம் வேண்டியதுதானா என்று எண்ணுகிறான். உள்ளத்தில் ஒரு சோர்வே ஏற்படுகிறது, அவனுக்கு. கையில் உள்ள வில் நழுவுகிறது. தேர்த்தட்டின் மீதே திகைத்து இருக்கிறான்.

உற்றாரை எல்லாம் உடன்கொன்று அரசாளப்
பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம் - சொல்தாழ்ந்து
வாள்தடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்டான்
தேர்த்தட்டின் மீதே திகைத்து

என்று ஆரம்பிக்கிறார், பெருந்தேவனார்.

பூபாரம் தீர்க்கப் பிறந்த புயல் வண்ணனான கண்ணன் இந்த நிலையில் பார்த்தனைப் பார்க்கிறான். அவனுக்குக் கீதோபதேசமே செய்கிறான். 'இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியங்களுக்குத் தானே கர்த்தா என்று எண்ணிக் கொள்வதனால்தானே இத்தனை மனக்கஷ்டம்! ஆக்கி காத்து அழிப்பவன் இறைவன், ஆதலால் செய்யும் காரியங்களை யெல்லாம் அவனே செய்கிறான் என்று மட்டும் எண்ணத் தெரிந்து விட்டால், எவ்வளவு கஷ்டங்கள் மனிதன் மனத்தில் இருந்து நீங்கிவிடும்! மேலும், கருமங்கள் செய்வதும் அப்படிச் செய்யும் கருமங்களின் பலாபலன்களைச் சிந்திப்பதும் மனிதன் செய்ய வேண்டிய செயல் அல்லவே. பலன் கருதாது பணி செய்ய மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் பார்த்தா! நீ உன் கருமத்தைச் செய். பலாபலன்களைச் சிந்தியாதே!' என்று உபதேசிக்கிறான், பார்த்தசாரதியானகண்ணன்.

அப்படி உபதேசம் பண்ணியவன் எல்லா அண்டங்களிலும் அவனே நிறைந்திருக்கிற தன்மையை விளக்கத் தனது விசுவரூபத்தையே காட்டுகிறான். இதையுமே சொல்கிறார், பெருந்தேவனார்.

பிறப்புநிலை கேடு இவையாவன், பாவம்
அறத்தினோடு ஜம்பூதம் ஆவான் - உறற்கரிய
வானாவாள், மண்ணாவான் மன்னுயிர்கள் அத்தனையும்
தான்ஆதல் காட்டினான் தான்.

அந்த உபதேசத்தைக் கேட்டு, அந்த விசுவ ரூபத்தைத் தரிசித்த பின், பார்த்தனது மயக்கம் தெளிகிறது. போர் ஏற்கிறான். போரில் பகைவர்களையெல்லாம் வென்று வாகை சூடுவதற்குக் காரணமா யிருந்தவனும் அவன்தானே. ஆம். அந்தப் பார்த்தசாரதியாம் கண்ணன்தானே. அந்தப் பார்த்தசாரதி கோயில் கொண்டிருக்கும் இடம்தான் சென்னையின் ஒரு பகுதியான திரு அல்லிக்கேணி. அங்கு தான் செல்கிறோம் இன்று.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து. ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் கொண்ட கோலங்கள் பல. அதில் பார்த்தனது சாரதியாய் இருந்து தேரோட்டியது கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணனுக்கு என்று பல கோயில்கள் இருந்தாலும், பார்த்தசாரதிக் கோலத்துக்கு என்று இருப்பது இக் கோயில் ஒன்றே ஒன்றுதான்.

மேலும் ஒரு விசேஷம் இக்கோயிலில். அரங்கநாதனைக் காணக் கோயில் என்னும் ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும். வேங்கடேசனைப் பார்க்கத் திருமலை என்னும் வேங்கட மலை மேல் ஏற வேணும். வரதராஜனைக் காணப் பெருமாள் கோயில் என்னும் காஞ்சிக்கே போக வேணும், இன்னும் நரசிம்மனைக் காண அஹோபலத்துக்கும், ராமனைக் காண அயோத்திக்கும் போக வேணும்.

ஆனால் அந்தப் பஞ்ச மூர்த்திகளையும் இந்தத் திருவல்லிக்கேணிக் கோயில் ஒன்றிலேயே கண்டு விடலாம். இங்குப் பார்த்தசாரதியைத் தொழச் சென்றால் பஞ்சபாண்டவர்க்காகத் தூது சென்ற பார்த்தசாரதி கோயிலிலே பஞ்ச மூர்த்திகளையும் ஒருங்கே வழிபாடு செய்ய வகை செய்திருக்கிறார்களே, அதுவே ஒரு பெரிய விசேஷம்தானே.

இந்தக் கோயிலைப் படத்தில் பார்த்தாலும் சரி, நேரில் சென்று கண்டாலும் சரி, கோயில் முன்னால் சந்நிதிக்கு நேர், எதிரே இருக்கும் புஷ்கரணியைப் பார்க்காமல் இருக்க முடியாது. அதுவே ஆதியில் அல்லி மலரும் சிறிய கேணியாயிருந்து, பின்னர் விரிந்து பரந்த பெரிய தெப்பக் குளமாக ஆகி இருக்க வேணும். இதனையே கைரவணீ புஷ்கரணி என்று நீட்டி முழக்கிச் சொல்கிறது ஸ்தல புராணம். இந்த புஷ்கரணி தீர்த்தம் கங்கையை விடப் புனிதம் என்று கூறும், தல வரலாறு. இத்திருக்குளத்தில் மீன்களே வசிப்பதில்லை.

யாரோ ஒரு முனிவர் இக்குளக்கரையில் தவம் செய்யும்போது, குளத்தில் உள்ள மீன்கள்துள்ளி விளையாடி அவர் தவத்தைக் கலைத்ததென்றும், அதனால் கோபமுற்ற முனிவர் இக்குளத்தில் மீன்களே இல்லாமல் போக என்று சபித்ததாகவும் கதை. (சரி, இச்சாபத்தால் துயர் உறுகிறவர் நாமே. அழுக்கை யெல்லாம் உண்ணும் மீன்கள் இல்லாது போக, எல்லா அழுக்கும் சேர்ந்து திரண்டு, குளத்தையே மிக மிக அசுத்தமாக வைத்திருக்கிறது, முனிவர் சாபம்). இந்தப்

ஆனந்த விமானம்

புஷ்கரணியில் தான் பார்த்தசாரதி தெப்போற்சவம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. சிறப்பான திருவிழா.

இனி, கோயிலுள் நுழையலாம். கோயிலின் முன்புள்ள மண்டபங்களைக் கடந்துதான் மகா மரியாதை வாயிலுக்கு வர வேணும். இந்த வாயிலுக்கு மேல்தான் முகத்துவாரக் கோபுரம் இருக்கிறது.

ஐந்து அடுக்கும் ஏழு ஆனந்த விமானம் கலசமும் கொண்ட கோபுரம் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது சில வருஷங்களுக்கு முன்னமேயே. இதைக் கடந்து, இன்னும் உள்ளேயிருக்கும் தொண்டரடிப் பொடி வாசலையும் கடந்துதான், பார்த்தசாரதியைச் சேவிக்கச் செல்ல வேணும்.

இந்தக் கோயிலில் ஒரு சம்பிரதாயம், பார்த்தசாரதியைச் சேவிக்கும் முன்பே மற்றவர்களை யெல்லாம் தரிசித்துவிட வேணும் என்று. ஆகவே பார்த்தசாரதியை வலமாகச் சுற்றி, வணங்க வேண்டியவர்களை வணங்கி விடலாம். முதலில். -

சந்நிதி வாயிலிலிருந்து தென்பக்கம் திரும்பியதும் நம்மை ஆட்கொள்ள இருப்பவள் வேதவல்லித் தாயார். இவள் சர்வாங்க சுந்தரி, ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனோடு கூடிய மகாலக்ஷ்மி பூலோகத்தில் பிருந்தாரண்யம் என்னும் இந்தத் திரு அல்லிக்கேணிக் கரையிலே பிருகு மகரிஷியின் பர்ணசாலையருகே ஒரு சந்தன மரத்தடியிலே, பெண் மகவாகத் தோன்றுகிறாள். அவளை எடுத்து வேதவல்லியென்று பெயரிட்டு வளர்க்கிறார் பிருகு மகரிஷி.

இவள் மங்கைப் பருவம் அடைந்த பின், இவளைக் கண்டு காதலித்து மணம் புரிந்து கொள்கிறான் மந்நாதன். இவனைக் கண்டு, இவனே என் நாதன் என்று வேதவல்லி மிக்க நாணிக் கோணிக் கூறியதால், இவன் மந்நாதன் என்று பெயர் பெற்று இங்கேயே தங்கிவிடுகிறான். கொஞ்சம் சவுகரியமாகக் காலை நீட்டியே படுத்தும் விடுகிறான்.

இந்த மந்நாதனுக்கு (அரங்கநாதன் கோலத்தில் இருப்பவனுக்கு) ஒரு சந்நிதி, இக்கோயிலின் உள்ளேயே. இந்த 'ஒரு வல்லித்தாமரையாள் ஒன்றிய' சீர்மார்பனையே திருவல்லிக்கேணி வந்து, கண்டு தொழுதிருக்கிறார், பேயாழ்வார்.

இனி நாம் வணங்க வேண்டியவர் தெள்ளிய சிங்கமாம் நரசிங்கப் பெருமானையே. இவர் பார்த்த சாரதியின் கர்ப்ப கிருஹத்துக்குப் பின், மேற்கு நோக்கியவராய் யோக நிலையில் இருக்கிறார். இவர் இந்தப் பிருந்தாரண்யத்திலே அத்திரி மகரிஷிக்கும் பிரத்தியக்ஷம் ஆன அவசரத்திலே இருக்கிறார் என்பது புராண வரலாறு.

புஷ்கரணி

இந்தக் கோயிலுக்குள்ளே ராமன் எப்படிக் குடிபுகுந்தான் என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. கீசிபதர் என்னும் முனிவர் பாண்டாரம் என்னும் மலையில் தவம் பரிகிறார். அவர் தவத்தைக் கலைக்க ஹேலை என்னும் அப்ஸரஸ் வருகிறாள். (பெரிய முனிவர் தவத்தை ஒரு சிறிய மீன் கலைத்தது என்றில்லையே! போகட்டும், அந்த மட்டும்.) -

முனிவர் தவம் கலைகிறது. ஆண்மகவு பிறக்கிறது. அந்த ஆண் மகவை விட்டு விட்டுப் பிரிந்து விடுகின்றனர், முனிவரும், தேவகன்னிகையும். குழந்தை மரத்திலிருந்து சொட்டிய தேனை உண்டே வளர்கிறது. மதுமான்' என்றே பெயர் பெறுகிறது.

இந்த மதுமானுக்குத் தரிசனம் தரவே, அன்று மாயமானை வேட்டுச் சென்ற ராமன் இங்கு எழுந்தருளியிருக்கிறான் - அனுமனோடு சீதா லஷ்மண பரத சத்துருக்கன் சமேதனாக.

இத்தனை பேர்கள் இங்கு வந்திருக்கும் போது, அந்தக் கருட வாகனர் கஜேந்திர வரதராஜனைச் சும்மா இருக்க விடுவார்களா? ஸப்த சோமா என்ற மகரிஷி அவரை வரவழைக்கிறார் இங்கே அவருக்கும் ஒரு தனிச் சந்நிதி. இவ்விதமே மந்நாதன் நரசிம்மர் ராமர் வரதர் எல்லோருமே வந்து சேர்ந்திருக்கிறார்கள், இந்தக் கோயிலுக்கு. இவர்களைத் தவிர, ஆண்டாள் அனுமன் ஆழ்வார்களுக்கு எல்லாம் தனித் தனிச் சந்நிதிகள் உண்டு.

ஆண்டாள் சந்நிதிப் பக்கத்திலிருந்து பார்த்தசாரதியின் கர்ப்ப கிருஹத்தின் மேல் உள்ள விமான சேவை செய்து விட்டுப் பார்த்தசாரதியைத் தரிசிக்க விரையலாம். மூலத் தானத்தில் கம்பீரமாக முறுக்கிய மீசையோடு நீண்டுயர்ந்த தோற்றத்தில் காட்சி அளிப்பவனே வேங்கட கிருஷ்ணன். கர்ப்ப கிருவரத்தில் நிற்கும் மூல மூர்த்தியை வேங்கடகிருஷ்ணன் என்றும், உற்சல மூர்த்தியைப் பார்த்தசாரதி என்றும் அழைக்கிறார்கள்.

திருமலை மேல் நிற்கும் அம்மாதவனைக் கண்டு தொழச் சென்ற சுமதி என்ற தொண்டைமான் சக்கரவர்த்தி உள்ளத்தில் ஓர் ஆசை. 'உன்னை எத்தனையோ கோலங்களில் எல்லாம் காண்கிறேனே, அன்று பார்த்தனுக்குச் சாரதியாய்த் தேர் ஊர்ந்தபோது, எந்தக் கோலத்தில் இருந்திருப்பாய் என்று நான் காண வேண்டாமா?' என்று மிக்க ஆதங்கத்தோடேயே பிரார்த்தித்துக் கொள்கிறான்.

அவனுடைய பிரார்த்தனைக்கு இரங்கிப் பிருந்தாரண்ய க்ஷேத்திரமான இந்தத் திரு அல்லிக்கேணியிலே திருவேங்கட முடையானே, பார்த்தசாரதியின் கோலத்தில் எழுந்தருளுகிள்றான் என்பது கதை. பார்த்தசாரதி தனியே வரவில்லை அண்ணன் பலராமன் தம்பி சாத்தகி மனைவி ருக்மணி மகன் பிரத்தியும்நன் பேரன் அநிருத்தன் - சமேதனாக குடும்பத்தோடேயே இங்கு வந்திருக்கிறான்.

பார்த்தனுக்குத் தேரோட்டியாய் எழுந்த அவசரம் ஆனதால் சக்கர ஆயுதம் இல்லை. இடது கையில் வலது கையில் சங்கு உண்டு. ஆம். வெற்றியை ஊதி அறிவிக்கச் சங்கு அவசியம்தானே. இடது கை வரத முத்திரையோடு இலங்குகிறது. மிக்க அழகோடு ருக்மிணி பக்கத்திலே நிற்கிறாள். சிசுபாலனை மணக்க இருந்த அவளை அவள் விருப்பப்படியே சகோதரர் பலராமன் சாத்தகி முதலியவர்கள் துணைகொண்டு தேரில் தூக்கிக் கொண்டு வந்து மணம் புரிந்து கொண்டவன் அல்லவா, கண்ணன். ஆதலால் இத்தலத்திலே ருக்மிணி கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது.

மூல மூர்த்திக்கு முன்னால் உற்சவ மூர்த்தமாக நிற்பவனையே பார்த்தசாரதி என்கிறார்கள். இவர் ஸ்ரீ தேவி பூதேவி என்ற உபய நாச்சிமார்களோடேயே எழுந்தருளி யிருக்கிறார். கண்ணன் என்னும் கருந் தெய்வம் என்பதற்கேற்ப, நல்ல கரிய திருமுக மண்டலம். நல்ல வசீகரமான திருமேனி. முகத்தில் எல்லாம் போரில் ஏற்பட்ட வடுக்கள். ஆடை அணிகலன்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். எல்லாம் ஒரே வைர மயம். உத்சவர் கரத்தில் தேரோட்டுவதற்கு உரிய சாட்டை உண்டு என்பார்கள். அதை யெல்லாம் நகைகள் மறைத்து விடும்.

மூலவர் இடையிலே யிருந்து ஒரு கத்தி தொங்கும். 'பார்த்தனுக்குத் தேரோட்டும் போது ஆயுதமே எடுப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தானே, அப்படி இருக்கக் கத்தியை இடையில் செருகி இருப்பது சரிதானா?' என்று எண்ணுவோம் நாம்.

இதற்குக் கீதாசாரியனாய் ஞானயோகத்தை விளக்கும் போது, 'அஞ்ஞானம் வேர் ஊன்றிய நெஞ்சில் எழும் ஐயங்களை ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள், பார்த்த! எழுந்து நில்!' என்று பார்த்தசாரதி சொன்னானே, அந்த ஞானவாளே இடையில் இருப்பது என்று கொண்டால், நம் சந்தேகமும் நீங்குந்தானே.

அந்த அல்லிக்கேணி நிற்கும் அமுதனைப் பேயாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை மன்னனும் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். முன்னவர் இருவரும் ஆளுக்கு ஒரு பாட்டே பாட, திருமங்கை ஆழ்வார், 'பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை' மட்டும் பாடவில்லை. சிற்றவை பணியால் முடிதுறந்து இளவண வதம் முடித்த இராவணாந்தகனையுமே பாடுகிறார். இதோடு விடுகிறாரா?

பிள்ளையைக் கீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
திருவல்லிக்கேணி கண்டேனே!

என்று அழகிய சிங்கரையுமே பாடுகிறார். (இத்தெள்ளிய சிங்கமே துளசிங்கராக இன்று மக்கள் நாவில் வழங்குகிறார் ) 'ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து ஆழி தொட்ட கஜேந்திர வரதனே' தென்னன் தொண்டையர்கோன் செய்த நன்மயிலைத் திருவல்லிக்கேணியில் நிற்கிறான் என்றும் அறுதியிட்டுரைப்பார்.

ஆழ்வார் கண்ட அல்லிக்கேணியான் அழகன், அமுதன், ஆதியான் என்பதை யெல்லாம் அறிகின்றபோது, நாமும் அவனைச் சென்று தொழுது, அவனது கீதோபதேசத்தைக் கேட்டு, வீடு பெறலாகும் அல்லவா என்றே நினைக்கத் தோன்றுகிறது, எனக்கு,