வேங்கடம் முதல் குமரி வரை 1/020-027

20. கடல் மயிலைக் கபாலி

நான் சிறு பையனாகப் படித்துக் கொண்டிருந்தபோது, மாஜிக் என்றால் எனக்கு நிரம்பப் பிடிக்கும். சர்க்கஸ் விளையாட்டுகளிலும் மோகம் உண்டு. அதில் எல்லாம் ஏதோ சில அபூர்வமான பார் விளையாட்டுகளும் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆகாயத்திலேயே அந்தர் அடிப்பதும் தானே,

காட்டு மிருகங்களான சிங்கம் புலிகளை யெல்லாம் பிடித்து, அவைகளின் பற்களையெல்லாம் பிடுங்கி, அவைகளைப் பட்டினி போட்டு வைத்திருப்பார்கள், அவைகளைக் கூண்டிற்குள் வைத்துச் சில விளையாட்டுகளும் காட்டுவார்கள். அபூர்வமான விளையாட்டுகளாகவே இருக்கும். ஆனால் அதிசயப்படுவதற்கு என்ன இருக்கிறது, சர்க்கஸில்?

ஆனால் மாஜிக் என்னும் கண் கட்டி வித்தையில் என்ன அற்புதமான வேலைகள்! கண் மூடிக் கண் திறப்பதற்குள் என்ன என்ன ஜாலங்கள்! கண்ணைத்தான் மூடுவானேன்? விழித்த கண் விழித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நாம் நடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பதை அல்லவா நடத்திக் காட்டுவார்கள் இந்த மந்திரவாதிகள்.

கூட்டத்தில் முன் வரிசையில் இருப்பவரிடம் பத்திரமாய் வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்த தங்க மோதிரத்தைக் கூட்டத்தின் கடைசியில் இருப்பவர் ஒருவர் ஜேபியில் இருந்து எடுத்துக் காட்டுவார்கள். காலியான பெட்டி ஒன்றிலிருந்து விதம் விதமான பூக்கள் சுவையான பழங்கள் எல்லாம் தருவிப்பார்கள் காசு ஒன்றும் கொடாமலேயே. இது எல்லாம் நாகரிக மந்திரவாதியின் வேலை.

ஆனால் அந்தப் பழைய கழைக் கூத்தாடியின் வேலையோ, இவற்றை யெல்லாம் தூக்கி அடிக்கும். கூட்டம் கூடியிருக்கும் போதே, ஒரு சிறு மாங்கொட்டையைப் பூமியில் நட்டு, மண்ணைப் போட்டு மூடி, அதன் மேலே ஒரு கூடையைப் போட்டு மூடுவான். 'ஜல் மந்திரக்காளி! சூ மந்திரக்காளி?' என்று மந்திர உச்சாடனம் வேறே செய்வான், பின்னர் கூடையைத் தூக்கிக் தூக்கிக் காட்டுவான். மாங்கொட்டை நட்ட சில நிமிஷ நேரங்களுக்குள்ளே, அது செடியாக வளர்ந்து மரமாக உயர்ந்து பூத்துக் காய்த்துப் பழங்களையும் கொடுக்கிறது. என்ன அற்புதமான வேலை! (இந்த அற்புத வேலை நமது சர்க்காருக்குத் தெரிந்திருந்தால், உணவுப் பிரச்சனையை எவ்வளவு எளிதாகத் தீர்த்து விடலாம். ஆனால் ஒன்றே ஒன்று. மரம் வளர்ந்து பூத்துக் காய்த்தது போலவே, மாய்மாய் மறைந்தும் போய்விடுமே என்ற கவலைதான்).

கழைக் கூத்தாடியின் கடைசி வேலை: தன் சொந்தப் பெண்ணை உட்காரவைத்துக் கூடையால் மூடுவான். பின்னர் கூடடைக்குள் பல தடவைகள் நீண்ட கத்தியால் குத்துவான். நமக்கோ உடல் பதறும். பின்னர் கூடையைத் திறந்தால், அதனுள் பெண்ணிருக்க மாட்டாள். மறைந்து போயிருப்பாள். அதன் பின், 'ஏ பொண்ணு! ஏ கண்ணு!' என்று கூவவான். தெருக் கோடியிலிருந்து ஓடி வருவாள் பெண். இதுதான் அதி அற்புதமான வேலை, கழைக் கூத்தாடியிடத்திலே. இதைக் காட்டி விட்டால் பணம் காசு எல்லாம் நிறையப் பெயரும், அவனுக்கு.

இப்படி நடப்பது கண்கட்டி வித்தை, இதை ஒரு வித்தையாகச் செய்யாமல், வாழ்விலே ஒரு நிகழ்ச்சியாகவே நடத்திக் காட்டினார் ஒருவர். அவர்தான் சைவ சமயக் குரவர்களில் முதல்வர் ஆகிய திருஞானசம்பந்தர். கழைக் கூத்தாடிக்காவது சுடைக்குள் சென்று மறைய, உயிரோடு கூடிய, எலும்புத்தோலும் சதையும் இரத்தமும் உள்ள ஒரு பெண்ணே அவனிடமிருக்கிறது. ஆனால் ஞானசம்பந்தரோ, எலும்புக் குவியலுக்குள்ளிருந்தல்லவா ஒரு பூம்பாவையை வரவழைக்கிறார்.

அப்படி அவர் எலும்பைப் பெண்ணுரு வாக்கிய தலம் தான் மயிலையிலுள்ள கபாலீச்சுரம் என்னும் கோயில்.

கதை இதுதான். கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் மயிலாப்பூரிலே சிவநேசர் என்று ஒரு வைசியர் இருந்தார். அவர் ஆளுடையப் பிள்ளை அத்தனை சிறு வயதிலேயே தலம் தலமாகச் சென்று இறைவனைப் பாடுவதும் சமணர்களை வாதிட்டு வெல்வதும் ஆகிய காரியங்களைச் செய்து வருகிறார் என்பதை அறிந்து அவரிடம் அளப்பரிய பக்தி செலுத்துகிறார். தம் ஒரே மகளான பூம்பாவையை அவருக்கே மணம் முடித்துக் கொடுக்க எண்ணி, மிகக் கவனத்தோடு வளர்க்கிறார். ஆனால் பூந்தோட்டத்துக்குப் போன இடத்திலே பூம்பாவையைப் பாம்பு தீண்டி விடுகிறது. மரணம் அடைந்த அவளது உடலைத் தகனம் பண்ணி, அந்த எலும்பையும் சாம்பரையும் ஒரு குடத்துள் இட்டுப் பத்திரமாகப் பாதுகாக்கிறார் சிவநேசர்.

சில வருஷங்கள் கழிகின்றன. சிவத் தலங்களைத் தரிசித்து வரும் சம்பந்தர் ஒற்றியூர் வருகிறார். அங்குச் சென்று, சிவநேசர் நடந்ததைச் சொல்லிச் சம்பந்தரை மயிலாப்பூருக்கு அழைக்கிறார். அவரும் வருகிறார். பூம்பாவையின் எலும்புகள் இருந்த பாண்டமும் கோயில் மதில் புறத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. கபாலி கோயிலுக்கு வந்த சம்பந்தர் பாடுகிறார்:

மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்
கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

என்று தொடங்கிப் பதினோரு பாடல் 'தேனமர் பூம்பாவை'ப் பாட்டாகவே பாடுகிறார்.

அவ்வளவதான். குடத்துக் குள்ளிருந்து பூம்பாவை அழகிய கன்னிப் பெண்ணாக வெளியே வருகிறாள். வணங்குகிறாள். உயிர் அற்ற உடலுக்கு உயிர் அளித்தவர் ஆனதால், தனக்கு அவள் மகள் முறை என்று சொல்லி அவளை மணக்க மறுக்கிறார், சம்பந்தர். பூம்பாவையும் கன்னி மாடத்திலிருந்து, சிவத் தியானம் பண்ணி, முத்தி அடைகிறாள்.

சாதாரணமாக எலும்பைப் பெண்ணுருவாக்கிய

மயிலைக் கபாலி கோயில்

இச்செயலைக் "கன்னித் தண்தமிழ்' செய்த காரியம் என்று போற்றிப் புகழ்வர் புலவர், தமிழ் மொழியை விடத் தமிழ்ப் பாடல் செய்த அற்புதமே இது என நினைவு கூர்வார் அருணகிரியார்.

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்றவரே

ஞானசம்பந்தர் என்பர், அவர் பாடிய திருப்புகழில்.

சமயக் குரவரில் ஒருவர் இப்படி எலும்பைப் பெண்ணுரு வாக்கியிருக்கிறார். இன்னுமொருவர் (சுந்தரர்) முதலையுண்ட பாலனையே அழைத்திருக்கிறார். 'கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே!' என்று சுந்தரர் இறைவனுக்கே உத்தரவு போடுகிறார். ஆனால் சம்பந்தர் இறைவனிடம் விண்ணப்பம் கூடச் செய்து கொள்ளவில்லை. 'கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்?' 'தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்?' என்று பூம்பாவையிடமே (எலும்புருவாக இருப்பவளிடத்திலேதான்) கேட்கிறார்.

கபாலீச்சரத்தில் இருக்கும் இறைவன் என்ன அவ்வளவு விதரணை தெரியாதவனா? பூம்பாவை பூத உடலோடே விளக்கீடு காணவும், ஆதிரை நாள் காணவும், தைப்பூசம் காணவும் வகை செய்து, எலும்புக்கே உயிர் கொடுத்து விடுகிறான். உயிர் கொடுத்தவர் கபாலீச்சார்தான் என்றாலும், பேரும் புகழும் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தருக்கே.

இந்தக் கபாலீச்சரம் இருப்பது பிரசித்தி பெற்ற மயிலாப்பூரிலே. மயிலாப்பூர் என்றாலே, அங்குள்ள சாந்தோம் கடற்கரை, குளிர்ந்த தென்னஞ் சோலை யெல்லாம் நம் கண்முன் வரும்.

இந்த 'ஆழிசூழ் மயிலாபுரித் திருநகர்' தொல் புகழ் உடையது. 'மடல் ஆர்ந்த தெங்கின் மயிலை' என்றெல்லாம் பாடிய ஞானசம்பந்தரே, மயிலையையும் கபாலியையும் இணைத்துக் கான் அமர் சோலைக் கபாலீச்சரம், என்று பாடியிருக்கிறார்.

கபாலீச்சரத்தான் கோயில் அழகுக்கு அழகு செய்வது அக்கோயிலுக்கு மேல் புறத்தில் உள்ள தெப்பக் குளம். குளத்தின் நடுவிலே நீராழி மண்டபம். குளத்தின் பகைப்புலத்திலே கோயில் கோபுரம், கண்ணுக்கு இனிய காட்சியாய் இருக்கும். கோபுரமோ ஏழு மாடங்களுடன் இருக்கிறது.

இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்ததே அங்குக் கோயில் கொண்டிருக்கும் கற்பகவல்லி அம்பிகையால்தான். உமை மயிலாக உருவெடுத்துச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்திருக்கிறாள். அவள் மயிலாக இருந்து தவம் புரிந்தமையால், இக்கோயிலுக்கு மயிலை என்றும் மயிலாப்பூர் என்றும் பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இவ் வரலாற்றை விளக்குகின்ற சிற்பவடிவம் ஒன்று கோயில் வடக்குப் பிராகாரத்தில் இன்றும் இருக்கிறது. மயிலாக விளங்கிய அம்மைக்குக் கபாலம் ஏந்திய கையனாய்க் காட்சி கொடுத்து ஆட்கொண்ட மயில் வழிபாடு பெருமான் ஆனதினாலே, கபாலி என்று பெயர் நிலைத்திருக்கிறது, இறைவனுக்கு.

இக்கோயிலின் பெரிய திருவிழா அறுபத்து மூவர் உற்சவம். எல்லாச் சிவன் கோயிலிலும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் இருந்தாலும், இந்தக் கோயில் ஒன்றிலேதான் அவர்கள் எல்லோரையும் சேர்த்து எடுத்துத் திருவீதி உலா நடத்ததுகிறார்கள்.

இந்த அறுபத்து மூவரில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த தலமும் இதுவே. இவரும் பூசலார் நாயனார் போலவே 'இறைவனை மனத்தகத்தான்' என்று கொண்டாடியவர். இறைவனைப் பகட்டான பூசை புனஸ்காரங்களால் கொண்டாடுவதை விட, மானசீகமாக வணங்கி உய்வதே சிறந்தது எனக் கொண்டவர். இவரும் சொர்ணத்தால் சமைத்த மனக்கோயில் உள்ளே இறைவனை எழுந்தருளப் பண்ணி, ஒழியாத ஆனந்தமென்னும் திருமஞ்சனம் ஆட்டுவித்து, அறிவாகிய திருவிளக்கு ஏற்றி, அன்பை நிவேதித்து, நியதி தவறாது அருச்சனை செய்து, இறைவன் திருவடி அடைகிறார். இவரையே,

மறவாமையால் அமைத்த
மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனை உணரும்
ஒளிவிளக்கு சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும்
திருமஞ்சனம் ஆட்டி
அறவாளர்க்கு அன்பென்னும்
அமுதமைத்து அர்ச்சனைசெய்வார்

என்று சேக்கிழார் வியந்து பாடுகிறார். எல்லாக் காரியங்களும் மனத்தில் நிகழ்வதால், வாயினால் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை, வாயிலாராம் வாய் இல்லார்க்கு.

கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கியிருந்தாலும், மக்கள் எல்லாம் அதிகமாக உபயோகப்படுத்துவது மேற்குக் கோபுர வாயிலையே. கபாலீச்சரத்தானே மேற்கு நோக்கியவராகத்தானே இருக்கிறார். கோயில் கற்பகவல்லி சந்நிதி சிறப்பானதொன்று. கோயிலுக்குள்ளே பூம்பாலை, சம்பந்தர், வாயிலார் முதலியவர்களுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதிகள் உண்டு.

இன்னும் வைணவ முதல் ஆழ்வார் மூவரில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலமும் இதுவே. இவர் இங்கும், திருவல்லிக்கேணியிலுமாக இருந்து, தமிழ் வளர்த்திருக்கிறார். பெருமாளை நூறு பாடல்களால் பாடிப் பரவி இருக்கிறார்.

இவருக்கும் வாயிலாருக்கும் ஒரு அரிய ஒற்றுமை. இறைவனை மனக் கோயில் உள்ளிருத்தி வழிபட்டவர் வாயிலார் என்றால், இவருமே 'மாகடல் நீர் உள்ளான் மனத்து உள்ளவனே!' என்றும், 'உளன் கண்டாய்' 'உத்தமன் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்!' என்றுமே பாடிக் குருந்தொசித்த கோபாலனைக் குறிப்பார்.

இந்தப் பேயாழ்வாரையும் வாயிலாரையும் விடப் பிரசித்தி பெற்ற திருவள்ளுவர் வாசுகியோடு இருத்து இல்லறம் நடத்திய இடமும் இம் மயிலாப்பூரேயாம். வள்ளுவர் பெருமையோ அளவிட்டு உரைக்கும் தரத்தது அன்று.

இன்னும் சமண சமயத்தைச் சேர்ந்த பண்டிதர் சிலர் மயிலாப்பூரிலே இருந்துதான் தமிழ் வளர்த்திருக்கிறார்கள். நேமிநாதம் எழுதிய நேமிநாதர் இங்கே இருந்திருக்கிறார். அவருக்கு என்று ஒரு சிறு கோயில் இவ்வூரில் இருந்ததாகவும், அந்தக் கோயிலில் இருந்த நேமிநாதர் சிலையைப் பெயர்த்து எடுத்துத் தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தாமூர் ஜைன ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்றும் கதை. இப்படியே சைவ வைணவ ஜைன சமரச பீடமாக மயிலாப்பூர் விளங்கி இருக்கிறது, அந்நாளிலே.

இன்னும் வேதாந்த சாரமான பாடல்களைத் தாயுமானவர் அடிச் சுவட்டிலே நின்று பாடிய மஸ்தான் சாகிபு இந்த மயிலாப்பூரிலே வாழ்ந்தவர்தானாம்.

மேலும் ஸெயின்ட்தாமஸ் என்னும் கிறிஸ்துவஞானி வந்து சமாதி ஆன இடமும் இதுவே. அவர் கல்லறையைச் சுற்றி உருவான ஊரையே சாந்தோம் என்று குறுக்கிச் சொல்கிறார்கள். மயிலாப்பூர் வக்கீல் பரம்பரை மிகவும் பிரசித்தமானதாயிற்றே. பேரும் புகழும் படைப்பது இத்தல விசேஷத்தினால்தானோ என்னவோ, யார் கண்டார்கள்? வாசகர் மயிலையில் இடம் தேடிக் கற்றவர் ஏத்தும் கபாலீச்சரம்' ஓடினால் அதிசயமில்லை.