வேங்கடம் முதல் குமரி வரை 2/அதிகை வீரட்டனார்

6

அதிகை வீரட்டனார்

மூன்று அசுரர்கள், வித்துண்மாலி, தாருகாக்ஷன் கமலாக்ஷன் என்று. மூவரும் வர பலம் மிக்கு உடையவர்கள். மூவரும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். பொன், வெள்ளி, இரும்பால் ஆனவை அக்கோட்டைகள். இந்தக் கோட்டைகளோடேயே எவ்விடமும் செல்லக் கூடியவர்கள் அவர்கள், இவர்களது ஆட்சி எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்? மக்கள் தேவர் நரகர் எல்லாம் இந்த ஆட்சியில் துன்புறுகின்றனர். எல்லோருமே சென்று முறையிடுகிறார்கள், சிவபெருமானிடம். அவரும் இந்தத் திரிபுரங்களைத் தகர்த்தெறிய, இந்த அசுரர்களுடன் போர்புரிய சன்னத்தர் ஆகிறார். பூமியையே தட்டாகவும், சூரிய சந்திரர்களையே சக்கரங்களாகவும் கொண்டு அமைத்த தேர்தயாராகிறது. வேதங்களே குதிரைகளாக அமைகின்றன. பிரும்மாவே சாரத்தியம் செய்ய வருகிறார். மேரு மலை வில்லாகிறது. வாசுகி நாணாகிறது. மகாவிஷ்ணுவே பாணம் ஆகிறார். இத்தனை ஏற்பாடு செய்து கொண்டு போருக்குப் புறப்பட்ட பெருமான் தேரில் ஏறியதும் சிரிக்கிறார். அவ்வளவுதான்; திரிபுரங்கள் மூன்றும் வெந்து பொடி சாம்பலாகி விடுகின்றன. நல்ல சிவபூஜை செய்தவர் களானதனாலே, அந்த அசுரர்கள் மூவரில் இருவர், எம்பிரான் கோயிலுக்கு வாயில் காவலராக அமைகிறார்கள். ஒருவர் குடா முழக்கும் பணியாளராக வேலை ஏற்கிறார். இந்தத் திரிபுரி தகனம் நடந்த இடம்தான் திரு அதிகை. அங்கு கோயில் கொண்டிருப்பவர்தான் அதிகை வீரட்டனார்.

அட்ட வீரட்டங்களில் ஒன்றான இந்தத் திரு அதிகை வீரட்டானம் மிக்க புகழ் பெற்ற தலம். ஊருக்கு அதிகை என்று ஏன் பெயர் வந்தது? அதிகப் புகழ் படைத்த ஊரானதனாலே அதிகை என்று ஆகியிருக்குமோ? திரிபுர தகனம் நடந்த இடம் அதிகப் புகழ் பெற்ற இடம் என்று சொல்ல வேறு ஆதாரமா தேட வேண்டும்? அந்தப் பழைய சங்க காலத்திலேயே இந்த அதிகை மன்னன் அதியமான் என்ற பெயரோடு புகழ் நிறுவி இருக்கிறான். ஒளவைக்கு அமரத்துவம் அளிக்கக் கூடிய தெல்லிக்கனியைக் கொடுத்து, அவன் அருளைப் பெற்றிருக்கிறான். பாடலும் பெற்றிருக்கிறான், இவனையே சிறுபாணாற்றுப் படை என்னும் பத்துப்பாட்டில் ஒரு பாட்டு.

மால்வரைக் கமழ் பூஞ்சாரல்
கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி
ஔவைக்கு ஈந்த
உரவுச் சினங் கனலும்
ஒளிதிகழ் நெடுவேள்
அரவக் கற்றானை அதிகன்.

என்று வியந்து கூறுகிறது. ஆம்! அதிகையில் இருந்தவன் அதிகன். இல்லை, அதிகன் இருந்த ஊர் அதிகை என்றே கொள்ளலாம். இந்த அதிகைக்கே செல்லலாம் நாம்.

இத்தலத்துக்குச் செல்ல, விழுப்புரம் கடலூர் ரயில் பாதையில் பண்ணுருட்டி என்ற ஸ்டேஷனில் இறங்க வேண்டும். பண்ணுருட்டி அல்லது பண்ருட்டி. பண்ருட்டி பலாப்பழம் பிரசித்தமானதாயிற்றே. அதனைச் சொன்னாலே நாவில் நீர்ஊறுமே மேலும் பண்ருட்டிப் பொம்மைகள் வேறே அந்த ஊருக்கு அதிகப் புகழைத் தேடித் தந்திருக்கின்றனவே. இந்தப் பண்ணுருட்டி ஸ்டேஷனில் இறங்கி வண்டி பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். திரு அதிகை செல்ல வேண்டும் என்று சொன்னால் வண்டிக்காரர்களுக்குத் தெரியாது. திருவதி என்று சொன்னால் தான் தெரியும். (அவர்கள் என்ன? நெடுஞ்சாலைப் பொறியர்கள்கூட, ரோட்டிலே திருவதி என்று எழுதித்தானே போர்டு நட்டு வைத்திருக்கிறார்கள்!) ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கடலூர் செல்லும் ரோட்டில் ஒரு மைல் சென்றால், தென்புறம் ஒரு பெரிய கோபுரம் தென்படும். அங்கு வண்டியைத் திருப்பிக்கோயில் வாயிலில் வண்டியை விட்டு இறங்கலாம். அங்கு ராஜகோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு மண்டபம் நிற்கும். மண்டபத்துக்கு வடக்கே அப்பர் திருமடம், மண்டபத்தின் முகப்பிலே இறைவனுடைய திருமணக் கோலம். அக்கோலத்திலே, எல்லா இடங்களிலும் இறைவனுக்குப் இடப்பக்கம் இருக்கும் அம்பிகை, இங்கு வலப்பக்கமாக நிற்கிறாள். இந்த வேடம் வேண்டுமென்று கேட்டுத் தவம் செய்து பெற்றாள் என்று தலபுராணம் கூறும். இதற்கேற்பவே கோயில் உள்ளும் திரிபுரசுந்தரி இறைவனுக்கு வலப்புறமே கோயில் கொண்டிருக்கிறாள். சோழ-நடு நாட்டில் உள்ள கோயில்களில் இறைவி, இறைவனுக்கு வலப்புறம் இருப்பது இக்கோயில் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

இன்னும் இந்தத் திருஅதிகை, நாவுக்கரசராம் அப்பரை வாழ்வித்த இடமும்கூட. திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூர் என்ற ஊரிலே மாதினியாரின் தவப்புதல்வியாக, திலகவதியார் பிறக்கிறார். இந்தத் திலகவதியாருக்கு ஒரு தம்பி மருள்நீக்கியார் என்ற பெயரோடு. அப்போது நாடெல்லாம் சமணம் பரவியிருக்கிறது. மன்னன் மகேந்திர வர்மனே ஜைன சமயத்தைச் சார்ந்திருக்கிறான். சைவ மரபிலே பிறந்த மருள் நீக்கியாரும் சமணம் ஆகிறார். சமண மடத்திலே தருமசேனர் என்ற பெயரோடு தங்கி வாழவும் செய்கிறார். இந்தச் சமயத்தில் திலகவதியாரைத் திருமணம் முடிக்க இருந்த சேனாபதி கலிப்பகையார் போர்க்களத்தில் இறந்து விடுகிறார். 'மணம் செய்து கொள்ளா விட்டாலும் மனத்தால் நான் அவருக்கே உரியவள், ஆதலால் அவர் இறந்த பின்னர் வேறு ஒருவரைத் திருமணம் புரியேன்' என்று வைராக்கிய சித்தத்தோடு வாழ்கிறார் அவர். திருமடம் ஒன்று அமைத்து, ஆலயத் திருப்பணி முதலியன செய்து வந்த இவர், தம் தம்பியாம் மருள்நீக்கியார் மருள் நீக்கம் அடையாது வாழ்வது குறித்து வருந்தி நைகிறார். இவர் படும் வருத்தம் தாளாது, இறைவன் தருமசேனரின் மருள் நீக்க முனைகிறார். இறை அருளால் தருமசேனரை சூலை நோய் பற்றுகிறது. எந்த வைத்தியம் செய்தும் தீராத காரணத்தால், தமக்கையிடம் ஓடி வந்து வணங்கி, அவர் அளித்த நீற்றை அணிந்து, நீரை உண்டு, அதிகை வீரட்டனாரை வணங்குகிறார்.

கூற்றயினவாறு விலக்ககலீர்,
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை எம்மானே

என்று துவங்கும் திருப்பதிகமும் பாடுகிறார். சூலை நோயும் அகல்கின்றது. இப்படித்தான் தருமசேனர் மீண்டும் சைவராகி நாவுக்கரசர் என்னும் நல்ல புகழோடு வாழ்கிறார். சமணர்கள் பேச்சைக் கேட்டு அரசனும் இவரை நீற்றறையில் வைக்கிறான்; நஞ்சு கலந்த உணவு ஊட்டுகிறான்; யானைக் காலால் இடற வைக்கிறான்; கல்லில் கட்டிக் கடலில் எறிகிறான். எல்லா இடர்களினின்றும் இறை அருளால் தப்புகிறார். கோயிலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் உழவாரப் பணி செய்தே வாழ்கிறார். மன்னன் மகேந்திர வர்மனும், சைவ சமயமே சமயம் என உணர்ந்து சைவனாகிறான். இந்த நாவுக்கரசராம் நல்லவர் வாழ்க்கை யோடு தொடர்பு கொண்ட நற்பதியே இத்திரு அதிகை.

இனி கோயிலுக்குள் நுழையலாம். வான் நோக்கி உயர்ந்த இந்தக் கோபுர வாயிலின் இரு பக்கமும் பரத சாத்திரத்திலுள்ள நூற்று எட்டுத் தாண்டவ லட்சணங்களை விளக்கிக் கொண்டு பெண்கள் நிற்கிறார்கள், இதை யெல்லாம் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய வெளி முற்றம். அங்கே தென்பக்கம் சங்கர தீர்த்தம். வடபக்கம் ஒரு புத்தர் சிலை. அடே! இந்தத் தலத்தில் ஜைனர்கள் மாத்திரம்தான் இருந்தார்கள் என்று இல்லை. பௌத்தர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் வெல்ல வேண்டியிருக்கிறது அப்பருக்கு.

இந்த முற்றத்தையும், அதன்பின் இடை வரும் இடைவழிக் கோபுரத்தையும் கடந்துதான் பிரதான கோயிலுக்குள் நுழைய வேண்டும். கோயிலினுள் நுழைந்ததும் இடப் பக்கம் திரும்பினால் தனித்ததொரு மாடத்தில் செப்புச் சிலை வடிவில் பெரிய உருவிலே நாவுக்கரசர் நிற்கிறார். சமீப காலத்தில் வடித்த செப்பு விக்கிரகமாகவே இருக்க வேண்டும். வடித்த சிற்பி அவனுக்கு இருந்த ஆர்வத்தில் ஒரு பெரிய தவறு செய்திருக்கிறான். அப்பர் ஏந்தியிருக்கும் உழவாரப் படையின் முகப்பிலே சிவலிங்கத்தையே அமைத்திருக்கிறான். இதை அப்பர் கண்டிருப்பாரானால் கடிவதோடு நின்றிருக்க மாட்டார். எனக்கு மட்டும் ஒன்று தோன்றுகிறது. 'நின்ளாவார் பிறர் இன்றி நீயே ஆனாய்' என்று பாடியவர் தானே அவர். ஆதலால் அவர் ஏந்திய உழவாரத்திலும் சிவபெருமான் இருக்கத்தானே வேண்டும். அதை வடித்துக் காட்டிய சிற்பியைக் கோபித்துக் கொள்வானேன் என்று அவரையே கேட்டிருப்பேன்.

இனி அப்பரைப் பார்த்த கண்ணுடனேயே அப்பரின் தமக்கையார் திலகவதியாரையுமே பார்த்து விடலாம். தெற்குப் பிராகாரத்தின் திருமாளிகைப் பத்தியில்தான் திலகவதியார் சந்நிதி. கற்சிலையில் உருவானவரைவிடச் செப்பு வடிவில் உருவாகியிருப்பவர்தான் நம் உள்ளம் கவர்கிறார். 'தம்பியார் உளர் ஆக வேண்டும் என்ற கருணையோடு, அம்பொன் மணிநூல் தாங்காது அனைத் துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர்மனைத் தவம் புரியும்' திருக்கோலத்திலேயே அவரைப் பார்க்கிறோம்.

இந்தத் தெற்குப் பிராகாரத்திலேயே அம்பிகை கோயிலும் இருக்கிறது. பெரிய நாயகி, திரிபுர சுந்தரி என்ற பெயர் தாங்கி நிற்கிறாள் அவள். தஞ்சைப் பெரிய நாயகியைப் போல் ஆறு, ஏழு அடி உயரம் இல்லையென்றாலும், நான்கு ஐந்து அடிக்குக் குறை வில்லை . திரிபுர சுந்தரியின் கோயில் வாயிலுக்கும் வெளியில் உள்ள முற்றத்திலிருந்து மூலக் கோயிலின் விமான தரிசனம் செய்யலாம். சோழர்கள் பெரு உடையார்க்குக் கல்லால் கட்டிய விமானம் போலவே மிக்க அழகாகச் சுதையில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விமானம் எண் கோணத்தில் அமைந்திருக்கிறது. விமானம் அடித் தளத்திலிருந்து ஸ்தூபி வரை சிற்ப வடிவங்கள்தான். எல்லாம் சுதையால் ஆனவை. நல்ல வர்ணம் தீட்டப் பெற்றவை. இவைகளில் பிரசித்தமான வடிவம்தான் திரிபுராந்தகர் வடிவம், பன்னிரண்டு திருக்கரம். சூலம் ஏந்திய கை ஒன்று, வில்லேந்திய கை ஒன்று. ஒரு காலைத் தேர்த் தட்டிலும் மற்றொரு காலை உயர்த்தியும் வில் வளைத்து நிற்கிறார். கம்பீரமான தோற்றம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தச் சிற்ப வடிவத்தைக் கண்ட பின் கர்ப்பக்கிருஹ விமானத்தையே ஒரு சுற்றுச் சுற்றத் தோன்றும். விநாயகர், அவருடன் நிற்கும் தேவகணங்கள், கைலை மலையானும், அந்த மலையையே அசைக்கும் மன்னன் ராவணனும், இன்னும் கோவர்த்தனதாரி, அக்னி, ஏகபாத மூர்த்தி எல்லாம் நல்ல நல்ல வடிவங்களாகச் சுதையில் உருவாகியிருக்கிறார்கள். இவற்றைப் பார்த்துக் கொண்டே வடக்குப் பிராகாரத்துக்கு வந்தால் அங்கு ஒரு கிணறு. அதனையே சூல தீர்த்தம் என்கின்றனர். தருமசேனரின் சூலைநோய் தீர்த்து அவரை நாவுக் கரசராக்கிய தீர்த்தம் அல்லவா?

இப்படிக் கோயிலை வலம் வந்து, தென் பக்கமாக உள்ள படிகளில் ஏறிக் கோயிலுள் சென்றதும், நம்முன் நிற்பவர் திரிபுராந்தகரும் திரிபுர சுந்தரியுமே. அம்பிகை வடிவமும் அழகானதாக இல்லை. செப்பு வடிவில் சோழ நாட்டுக் கோயில்களில் வடித்து வைத்திருக்கும் திரிபுராந்தகர்களோடு ஒப்பிட இயலாது. வில் அளவுக்கு மிஞ்சிய காத்திரம். இந்தத் திரிபுராந்தகரை வணங்கிவிட்டு, கர்ப்பக் கிருஹம் நோக்கிச் சென்றால் அங்கே மூலவரைத் தரிசிக்கலாம். இவரே வீரட்டானர். சோடசலிங்கம். பதினாறு பட்டைகள் தீட்டிப் பளபளவென்றிருக்கிறார். இவருக்குப் பின்னாலே கர்ப்பக் கிருஹச் சுவரிலே உமையுடன் கூடிய இறைவன்; மணக்கோலம் என்பார்கள். பல்லவர் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தமாகவே இருக்கலாம். கந்தர் தெரியவில்லை. லிங்கத் திருவுரு மறைத்துக் கொண்டிருக்கிறது அந்தப் பகுதியை, இந்த வீரட்டானரை வணங்கிவிட்டு, வெளியே வரலாம்.

இன்னும் இத்தலத்தை ஒட்டிப் பார்க்க வேண்டியவை இரண்டு உண்டு. ஒன்று குணதரவீச்சுரம் மற்றொன்று வேகாக்கொல்லை. குணதரவீச்சுரம் வீரட்டானர் கோயிலுக்குப் பக்கத்திலே இருக்கிறது. சமணனாக இருந்த மகேந்திர வர்மன் நாவுக்கரசரால் சைவனாகிய ஆர்வத்தில் சமணப் பள்ளிப் பாழிகளை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு கட்டியது குணதரவீச்சுரம்.

வேகாக்கொல்லை திருவதிகைக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவில் இருக்கிறது, திரிபுர தகன காலத்தில் இந்த ஓர் இடம் மட்டும் வேகவில்லையாம். அந்த இடத்து மண் வெண்மையாகவே இருக்கிறது. ஆம், திரிபுராந்தகராம் செம்மேனி எம்மான் சுட்ட மண் செம்மண். அவரால் சுடப்படாத மண் வெள்ளை மண். இப்படி வேகாக் கொல்லையின் வெண் மண்ணும், திருஅதிகையின் செம் மண்ணும் திரிபுர தகனத்துக்குச் சான்று பகர்ந்து கொண்டு இன்னும் இருக்கின்றன. இதையெல்லாம் நம்ப மறுக்கிற நம் மனமுமே செம்மைப்பட வேண்டுமே.