வேங்கடம் முதல் குமரி வரை 2/வெண்ணெய்நல்லூர் அருள்துறையார்

5

வெண்ணெய் நல்லூர்
அருள்துறையார்

விச் சக்கரவர்த்தி கம்பர் வீட்டிலே ஒரு விசேஷம். அதற்கு ஊரே திரண்டு வந்திருக்கிறது. கம்பரது அத்தியந்த நண்பரானசடையப்ப முதலியாரும் வந்திருக்கிறார். வந்தவர் கூட்டத்தில் ஒரு பக்கத்தில் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து கொள்கிறார். இதைக் கம்பர் கவனிக்கவில்லை . கம்பரது மனைவி பார்த்து விடுகிறாள். உடனே தன் கணவனை அணுகி, 'அண்ணா வந்து, ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருக்கிறார்; அவரை அழைத்து வைக்க வேண்டிய இடத்திலே உட்கார வையுங்கள்' என்று சொல்கிறாள். இதற்குக் கம்பர் சொல்கிறார், 'இப்படி இவரை இன்று சபைக்கு நடுவே வீற்றிருக்க வைத்து விட்டால் போதுமா? அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க மறக்க மாட்டேன்' என்கிறார். இதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தானோ என்னவோ, பின்னர் தாம் ராமாவதாரம் பாடும்போது தன்னை ஆதரித்த அந்த வள்ளல் சடையப்பரைக் காவியத்திலே பத்து இடங்களிலே கொலு வீற்றிருக்கச் செய்துவிடுகிறார் கம்பர். ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரரோடு மிதிலை சென்று தங்குகிறார்கள். அன்று பௌர்ணமி, இரவில் நிலவொளி பரந்து வீசுகிறது. எப்படி நிலவொளி பரந்திருக்கிறது? சடையன் புகழ்போல் எங்கும் பரந்திருக்கிறது என்பதே அவருடைய உவமை. இதைச் சொல்கிறார் அழகான ஒரு சொல்லோவியத்தி வாயிலாக,

வண்ணமாலை கைபரப்பி, உலகை
வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி, தண்மதியத்து
உதயத்து எழுந்த நிலாக்கற்றை
விண்ணும் மண்ணும் திசைஅனைத்தும்
விழுங்கிக் கொண்ட விரிதல் நீர்ப்
பண்ணைவெண்ணெய்ச் சடையன்
புகழ்போல் எங்கும் பரந்துளதால்

என்பதுதானே கம்பர் பாட்டு. இந்த வள்ளல் சடையப்பர் பிறந்த பதியே வெண்ணெய் நல்லூர். சடையப்பர் பிறந்த பதியைப் பற்றியும் ஒரு விவாதம். தென் பெண்ணைக் கரையிலுள்ள திருவெண்ணெய்நல்லூரா? இல்லை, காவிரிக் கரையில் குத்தாலம் பக்கத்திலுள்ள கதிர்வேய் மங்கலமா என்று (கதிராமங்கலம் என்று பெயர் நிலவுகிறது). கதிர்வேய் மங்கலத்தையும் அங்குள்ளவர்கள் வெண்ணெய் நல்லூர் என்றே அழைக்கிறார்கள். இந்த விவாதத்துக்கு விடை கூற முயல்கிறது. சோழ மண்டல சதகப் பாட்டு ஒன்று.

எட்டுத்திசையும் பரத்தநிலா

எறிக்கும் கீர்த்தி ஏருழவர்

சட்டப்படுஞ்சீர்வெண்ணெய் நல்லூர்

சடையன், கெடிலன் சரிதம்எலாம்

ஒட்டிப்புகழ, ஆயிரம் நாவு

உடையார்க்கு அன்றி, ஒருநாவால்

மட்டுப்படுமோ? அவன் காணி வளஞ்சேர் சோழ மண்டலமே.

வெண்ணெய் நல்லூர்ச் சடையனைக் கெடிலன் என்றும் போற்றுவதால், கெடில நதி ஓடுகின்ற நடுநாடே. அவன் நாடு என்றும், ஆனால் அவனுக்குக் காணி வளம், சில காலம் சோழ நாட்டில் இருந்திருத்தல் கூடும் என்றும் தெரிகிறது. விவாதம் எப்படியும் இருக்கட்டும். கம்பனால் புகழ் பெற்றிருக்கிறார் சடையப்பர். அந்தச் சடையப்பரால் புகழ் பெற்றிருக்கிறது வெண்ணெய் நல்லூர். அந்த வெண்ணெய் நல்லூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவெண்ணெய் நல்லூர் விழுப்புரத்துக்குத் தெற்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில் சென்றால் திருவெண்ணெய் நல்லூர் ரோட் ஸ்டேஷனில் இறங்கலாம். அப்படி இறங்கினாலும் அங்கிருந்து நான்கு மைல் மேற்கே போகவேணும். இல்லை, திருக்கோவலூர் உலகளந்தார், வீரட்டர் முதலியவர்களைத் தரிசித்து விட்டு வருபவர்கள் திருக்கோவலூருக்கு நேர் கிழக்கே பதினான்கு மைல் ரோட்டில் வரவேணும். அப்படிச் சென்றால் இத்தலத்தை அடையலாம். எங்கு எல்லாமோ சுற்றிக் கொண்டு செல்லும் பாதை, முதலில் ஒரு தெப்பக் குளக்கரையில் கொண்டு சேர்க்கும். அக்குளத்துக்கு இரண்டு பக்கமும் இரண்டு கோயில்கள். குளத்துக்குத் தென்புறம் இருப்பது விஷ்ணு கோயில், வடபுறம் இருப்பது சிவன் கோயில். இருவரும் இப்படி ஒற்றுமையாக அடுத்தடுத்து இருந்தாலும் மக்கள் என்னவோ பிராதான்யம் கொடுப்பது சிவன் கோயிலுக்குத் தான்; அங்குள்ள கிருபாபுரி ஈசுவரருக்குத் தான். இந்தக் கிருபாபுரி ஈசுவரரின் பெயர் இன்று மங்கி மறைந்து போய்விட்டது. இன்று அவர் தடுத்து ஆட்கொண்ட நாதர் என்ற பெயரிலேயே பிரபலமாக இருக்கிறார். இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று ஏன் பெயர் வந்தது, இவர் ஏன் தடுத்தாட் கொண்ட நாதர் என்று பெயர் பெற்றார் என்று தெரிந்து கொண்ட பின்னர் கோயிலுக்குள் போகலாம். உமாதேவிக்குப் பசுக்களாகிய உயிர்களின் பேரில் அடிக்கடி இரக்கம் பிறந்து விடும். அதனால் கைலையை விட்டுத்தவம் செய்யப் பூலோகத்துக்கே வந்து விடுவாள். அப்படி வந்தவள் பசு வெண்ணெய்யினால் கோட்டை கட்டிக் கொண்டு அதனிடையே பஞ்ச அக்கினியை வளர்த்துத் தவம் புரிகிறாள். (அடே இந்த வெண்ணெய் உருகியே பெண்ணை பெருகிற்று போலும்!) அப்படித் தவம் புரிந்து பேறு பெற்ற தலம் ஆனதனாலேதான் இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று பெயர். அம்மை அருள் பெற்ற கோயில் ஆனதனாலே கோயிலுக்கே அருள்துறை என்று பெயர் அமைகிறது.

இந்த வெண்ணெய் நல்லூருக்குத் தென் கிழக்கே ஏழு எட்டு மைல் தூரத்தில் நாவலூர் என்று ஒரு ஊர். அந்த நாவலூர்தான், சைவ சமயாச்சாரியார்களில் ஒருவரான சுந்தரர் பிறந்த ஊர். கைலையில் இறைவனுக்கு உகந்த தொண்டராக இருந்த ஆலால சுந்தரரே திருநாவலூரில் சடையனார், இசை ஞானியர் என்னும் நல்ல சைவத் தம்பதிகளின் தவப் புதல்வராக வந்து பிறக்கிறார். நம்பி ஆரூரர் என்று நாமகரணம் செய்யப்படுகிறார். அந்த நாட்டு மன்னர் நரசிங்க முனையரையரால் வளர்க்கப்படுகிறார். வளர்ந்து வாலிபப் பருவம் எய்திய இவருக்கு, நாவலூரை அடுத்த புத்தூரில் திருமணம் நடக்க ஏற்பாடு ஆகிறது. திருமணம் நடக்க இருக்கிற நேரத்திலே, ஒரு வயோதிக அந்தணர் 'இம் மணமகன் எனக்கு அடிமை, இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமைச் சீட்டு என்னிடம் இருக்கிறது. இவன் என் பணியாளனாக வேலை செய்தல் வேண்டும். மணம் முடித்தல் கூடாது' என்று இடை புகுந்து தடுக்கிறார். நம்பி ஆரூரர், 'இது என்ன பித்துக்குளித் தனம்? எங்காவது அந்தணன் வேறொரு அந்தணனுக்கு அடிமையாவதுண்டா ?' என்று மறுக்கிறார். ஆத்திரத்தில் கிழ வேதியர் நீட்டிய ஓலையையும் பிடித்து இழுத்துக் கிழித்து எறிந்து விடுகிறார். வலுத்த கிழவரும் சளைக்கவில்லை . 'இந்த நம்பி ஆரூரன் கிழித்தது நகல்தான், மூல ஓலை என்னிடம் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறது' என்று அங்கு இழுத்தே செல்கிறார். பேரவையைக் கூட்டித் தம் வாதினை உரைக்கிறார். மூல ஓலையையே காட்டித் தம் கட்சியை நிலைநிறுத்துகிறார். வேறு வழியில்லை. நம்பியாரூரர் கிழவர் பின்னாலேயே செல்கிறார். முன் சென்ற கிழவர் அங்குள்ள அருள்துறை என்னும் கிருபாபுரி ஈசுவரர் கோயிலுள் நுழைந்து 'இதுவே என் 'வீடு' என்று சொல்லி மறைகிறார். அப்போதுதான் உணர்கிறார். இறைவனே தம்மைத் தடுத்து ஆட்கொள்ளக் கிழவேதியராக வந்திருக்கிறார் என்பதை. இறைவனும், நீ நம்மோடு வன்மை பேசி வாதிட்டாய், ஆதலால் நீ வன் தொண்டனாகவே விளங்குவாய், எம்மேல் சொல் தமிழ் பாடல்கள் பாடு' என்று ஏவுகிறார். 'எபடிப் பாடுவது' என்று வன்தொண்டர் மயங்கியபோது, 'நீ நம்மைப் பித்தன் என்றெல்லாம் பேசி ஏசினாய் அல்லவா, பித்தன் பித்தன் என்றே பாடு' என்று வேறே அடியெடுத்துக் கொடுக்கிறார். பாடுகிறார் வன்தொண்டர்.

பித்தா பிறைசூடி!
பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே!
நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத்தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி
அல்லேன் எனலாமே.

என்றே பாடிப் பரவுகிறார்.

அருள் துறை கோயில் வாயிலுக்கு வந்ததும் இந்தப் பாடல் எனக்கு ஞாபகம் வந்தது. பெண்ணைக்குத் தென் பக்கம் இக்கோயில் இருக்கிறது. என்கிறாரே இவர். நாம் வந்த வழியில் இந்த ஊருக்கு வடக்கே நான்கு மைல் தொலைவில் அல்லவா தென்பெண்ணை இருந்தது என்று எண்ணினேன், உடன் வந்த அன்பர்களையும் விசாரித்தேன். ஆம் நம்பி ஆரூரர் காலத்தில் பெண்ணை இவ்வூரை அடுத்து ஓடியிருக்கிறது. பின்னர்தான் திசை திரும்பி வடக்கே ஒதுங்கியிருக்கிறது என்றார்கள். மேலும் பெண்ணையாற்றின் கிளையான ஒரு மலட்டாறு, ஊரை அடுத்து ஓடுகிறது என்கிறார்கள். நீரே இல்லாததால் மலட்டாறு என்று பெயர் பெற்றதோ, இல்லை, மலாடர் நாட்டில் ஓடுவதால் மலட்டாறு என்று பெயர் பெற்றதோ தெரிய வில்லை. ஆனால் இந்த மலட்டாற்றின் கரையிலேயே வெண்ணெய் நல்லூர் இருக்கிறது. அருள்துறை கோயிலும் இருக்கிறது.

இனி கோயிலுள் நுழையலாம். கோயிலுள் நுழைந்ததும் தலவிநாயகரான பொள்ளாப் பிள்ளையாரை வணங்கி விட வேண்டும். (பொள்ளா என்றால் உளியால் பொளியாத சுயம்பு என்று பொருள்) அப்படி வணங்கா விட்டால் அவர் பொல்லாதவராகவே மாறலாம். அப்பனைப் போல் பிள்ளையும், 'அற்புதப்பழ ஆவணங் காட்டி நம்மை ஆட்கொள்ளவே' முனையலாம் அல்லவா? இனி தடுத்து ஆட்கொண்ட தேவரையும் அவரது துணைவி வேற்கண்நங்கையையும் கண்டு தொழலாம். இவர்களைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தக் கோயிலுக்கு உள்ளேயே சிவஞான போதம் அருளிய மெய்கண்டாருக்கு ஒரு தனிச் சந்நிதி இருக்கிறது. அவர் வெண்காடர் அருளினாலே பெண்ணாகடத்திலே அச்சுதக் களப்பாளர் மகனாகப் பிறந்தவர். வெண்ணெய் நல்லூரிலே மாமனார் வீட்டிலே வளர்ந்தவர். பரஞ்சோதி முனிவர் அருளினாலே ஞானோபதேசம் பெற்று மெய்கண்டார் என்ற தீக்ஷாநாமம் பெற்றவர். சிவஞான போதம் என்னும் சாத்திரத்தை எழுதி, சித்தாந்த சைவத்தை நிலை நிறுத்தியவர். இவருக்குக் கோயிலுள் முக்கியத்துவம் அளித்தது போல், கோயிலுக்கு வெளியேயும் திருவாவடுதுறை மடத்தார் மடம் நிறுவி அதனைப் பரிபாலித்து வருகிறார்கள்.

இத்தனையும் பார்த்தாலும் அந்த வன் தொண்டரைக் காணவில்லையே என்று எண்ணுவோம். அவருக்கு இந்தக் கோயிலில் முக்கிய இடம் உண்டு. கோயிலின் தெற்குப் பிராகாரத்திலே மேற்கே பார்த்த சிறுகோயிலில் செப்பு வடிவிலே இவரைச் சமைத்து வைத்திருக்கிறார்கள். மற்றக் கோயில்களில் எல்லாம் கோலாகலமாக இருக்கும் இந்த ஆலாலசுந்தரர், இங்கு அடக்க ஒடுக்கமாக அடிமை ஓலை ஏந்திய கையராய் நிற்கிறார். நிரம்பவும் பிற்பட்ட காலத்திலேதான் செய்து வைத்திருக்க வேணும். அவரைப் பார்த்து விட்டே திரும்பலாம். இந்தக் கோயிலிலே கல்வெட்டுக்கள் பிரசித்தம். எல்லாம் பன்னிரண்டாம் - பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுந்தவை. அவைகளில் இரண்டு முக்கிய மானவை. ஒன்று கோப்பெருஞ்சிங்கன் காலத்தியது. 1268-ல் வெட்டப்பட்டது. செஞ்சியைச் சேர்ந்த உடையான் ஸ்ரீ கைலாயமுடையான், திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்ட தேவருக்குப் பிச்சன் பாடச் சொன்னான் என்றும், பெயருடைய இரண்டு வெள்ளிமுரசும் ஒரு பொன் கல்காறையும் தானம் செய்ததைப் பற்றியும். மற்றொன்று குலோத்துங்க சோழன் காலத்தியது, வழக்கு வென்ற திருவம்பலம் என்ற கல்மண்டபம் கட்டச் சில குடிகளுடைய வீடுகளை எடுத்துக் கொண்டு வேறு இடம் தந்ததைக் குறிக்கும். இம்மண்டபமே கோயில் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இருக்கிறது. இவை தவிர, தடுத்து ஆட்கொண்ட தேவர், ஆவணம் காட்டி ஆட்கொண்டான் என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்புகள் இருக்கின்றன. இன்னும் திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவில் தடுத்து ஆட்கொண்ட ஊர் என்று ஒரு கிராமமும் அதற்கும் கிழக்கே பண்ணுருட்டி ரோட்டில், பண்ணுருட்டிக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் மணம் தவிர்த்த புத்தூர் என்று ஒரு கிராமமும் இருக்கின்றன. இவையெல்லாம் சுந்தரனை இறைவன் தடுத்து ஆட்கொண்டது, ஏதோ கர்ண பரம்பரைக் கதை என்றல்லாமல் உண்மையாய் நடந்த வரலாறு என்பதை வலியுறுத்தும்.

இத்தனையும் தெரிந்து கொண்ட இந்த மூச்சிலேயே சுந்தரர் பிறந்த நாவலூருக்குச் சென்று, அங்குள்ள பக்தஜனேசுவரையும் மனோன்மணியையும் வணங்கி விட்டே திரும்பலாமே. சென்னை திருச்சி டிரங்க் ரோட்டில் விழுப்புரத்துக்குத் தெற்கே பதினாறு மைல் சென்றதும், ரோட்டடியிலேயே திரு நாமநல்லூர் சமுதாய வளர்ச்சித் திட்ட ஆபீஸ் கட்டிடங்கள் தென்படும். அன்றைய திருநாவலூரே இன்று திருநாமநல்லூர் என்று விரிந்திருக்கிறது. அந்த மெயின் ரோட்டிலிருந்து இடப்பக்கம் திரும்பி ஒரு மைல் சென்று வடபக்கம் திரும்பினால் நாவலேசுவரர்கோயில் வாயில் வந்து சேரலாம், இறைவன், இறைவி சுந்தர நாயகியை எல்லாம் கண்டு தொழலாம்.

இந்தக் கோயிலுக்குள் ஒரு கோயிலிலே வரதராஜப் பெருமாள் வேறே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். வெண்ணெய் நல்லூரில் சுந்தரரை ஆட்கொண்டு அவர் முடிக்க இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இறைவனே, பின்னர் ஒன்றுக்கு இரண்டாக, திருவாரூர் பரவையையும் திரு ஒற்றியூர் சங்கிலியையும் இவருக்கு மணம் முடித்து வைத்திருக்கிறார். இந்த இரண்டு மனைவியரோடு ஒருங்கிருந்து இவர் குடித்தனம் பண்ணினார் என்று அவர் சரித்திரம் கூறவில்லை . என்றாலும் பிறந்த இடத்துப் பெரியவர்கள், சுந்தரருடன் பரவை, சங்கிலி இருவரையுமே செப்புச் சிலையாக வடித்து, இரு பக்கங்களிலும் நிறுத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். நல்ல அழகான வடிவங்கள். சுந்தரரே இந்தத் தலத்தைத்தானே மிகவும் விரும்பியிருக்கிறார். 'வேயாடியார் வெண்ணெய் நல்லூரில் வைத்து என்னை நா யாடியார்க்கு இடமாவது திருநாவலூரே' என்பதுதானே அவரது தேவாரம். எவ்வளவுதான் பற்று அற்றவர்கள் ஆனாலும் பிறந்த இடத்துப் பாசம் போகுமா, என்ன?