வேங்கடம் முதல் குமரி வரை 2/கடவூர் கால சம்ஹாரர்
கடவூர் கால சம்ஹாரர்
மார்கண்டன் கதை சிரஞ்சீவித் தன்மை பெற்றதொன்று. மிருகண்டு முனிவனுக்குப் புத்திரப்பேறு இல்லை. அதற்காக அவன் தவம் புரிகிறான். அவன் தவத்துக்கு இரங்கிய இறைவன் 'நீண்ட ஆயுளும் குறைந்த அறிவுமுடைய புத்திரன் வேண்டுமா? இல்லை, குறைந்த ஆயுளும் நிறைந்த அறிவும் உள்ள புத்திரன் வேண்டுமா?' என்று கேட்கிறான். முனிவனோ 'புத்திரன் குறைந்த ஆயுள் உள்ளவனாக இருந்தாலும் பரவாயில்லை. நிறைந்த அறிவுடையவனாகவே இருத்தல் வேண்டும்' என்கிறான்.
மிருகண்டுவின் புத்திரனாய் மார்க்கண்டன் பிறக்கிறான். பதினாறு வயது வரையே அவன் இந்நில உலகில் வாழுதல் கூடும் என்று இறைவன் திட்டமாக உரைத்து விடுகிறான். பதினாறு வயது நிறைவெய்தும் காலம் வருகிறது. அன்னை தந்தையர் அனுமதியோடு, கடவூருக்கு வருகிறான். அங்கு கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரைப் பூசை செய்கிறான். அவன் பூசை செய்து கொண்டிருக்கும் பொழுதே அவனுக்குக் குறித்த பதினாறு வயது நிரம்பி விடுகிறது. வருகிறான் காலன். மார்கண்டன். மீது பாசக் கயிற்றையே வீசுகிறான். அவனோ பூசை செய்யும் லிங்கத் திருவுருவையே கட்டிப் பிடித்துக் கொள்கிறான். அப்போதும் விடுகிறானில்லை காலன், இறைவனுக்கோ காலன் பேரிலேயே கடுங்கோபம். 'எந்த நியதிக்கும் விதி விலக்கு என்பது கிடையாதா? என்னையே கட்டிப் பிடித்திருக்கிற நேரத்திலுமா இவன் தன் கடமை தவறாது அவன் உயிர் கவர வரவேணும்?' என்று எண்ணுகிறான். லிங்கத்திலிருந்தே கிளம்பி எழுந்து காலனை எட்டி உதைத்து விலக்குகிறான்; சூலத்தையே பாய்ச்சுகிறான். மார்கண்டன் என்றும் பதினாறு வயதுடன் நித்யத்வம் பெற்றுச் சிரஞ்சீவியாய் வாழ்கிறான். இப்படி இறைவன் காலனைக் காய்ந்த வரலாற்றைச் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாத்திரம் அல்ல, திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதியுமே பாடியிருக்கிறார்.
கொன்றாய் காலனை, உயிர்கொடுத்தாய்
மறையோனுக்கு, மான்
கன்றாருங் காவாக் கடவூர்
திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான்
எனக்கு யார்துணை நீயலதே?
என்பதுதான் சுந்தரர் பாடிய பாட்டு. இப்படி மார்கண்டனுக்கு அருள் செய்யக் காலனைக் காய்ந்த கால சம்ஹாரர் பிரதான மூர்த்தியாக விளங்கும் தலம் தான் திருக்கடவூர். இன்றும் நீண்ட வாழ்வைப் பெற விரும்புபவர்கள் சென்று ஆயுஷ் ஹோமம் எல்லாம் செய்யும் இடமும் இதுதான். இந்தத் திருக்கடவூருக்கே செல்கிறோம் நாம் இன்று.
இந்தத் திருக்கடவூர் தஞ்சை ஜில்லாவிலே மாயூரம் தாலூகாவிலே இருக்கிறது. மாயூரம் தரங்கம்பாடி ரயில்ப் பாதையிலே சென்று 'திருக்கடையூர்' என்னும் ஸ்டேஷனில் இறங்கி இரண்டு பர்லாங்கு கிழக்கு நோக்கி நடந்தால் போதும். இல்லை, இன்னும் கொஞ்சம் விரைவாகவே செல்ல விரும்பினால் மாயூரம் ஜங்ஷனில் இறங்கி, காரில் ஏறிக் கண்ணை மூடிக்கொண்டு நேர்கிழக்கே பதின்மூன்று மைல் சென்றாலும் இத்தலம் வந்து சேரலாம். (திருக்கடவூர் என்பதையே திருக்கடையூர் ஆக்கியிருக்கிறார்கள் மக்களும் ரயில்வே நிர்வாகத்தாரும். இதற்குத் தக்க ஆதாரம் இல்லாமலும் இல்லை. அந்தப் பழைய சங்கீதக் கோவலன் நாடகத்திலே 'திருக்கடையூர்' என்பதும் இது தானோ? தேரோடு வீதி என்பதும் இது தானோ?' என்று பாடிக் கொண்டே கோவலன் மாதவியைத் தேடிக்கொண்டு இங்கு வந்திருக்கிறான், அது போதாதா?) அட்டவீரட்டத் தலங்களில் இந்தத் திருக்கடவூர் ஒன்று.
இந்தத் தலத்துக்குத் திருக்கடவூர் என்று ஏன் பெயர் வந்தது? அன்று பாற்கடலையே தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து அமுதம் எடுத்திருக்கின்றனர். இந்த அமுதத்தை அசுரர்களுக்குக் கொடுக்காமல் தாங்களே உண்டு அமரத்வம் பெற தேவர்கள் எண்ணி அதை அசுரர்கள் அறியாமல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படிக் குடத்திலே நிரப்பிக்கொண்டு வந்த அமுதத்தை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றிருக்கின்றனர். நீராடிவிட்டு வந்து குடத்தை எடுக்க முயன்றால் அது பூமியிலே வேர் ஊன்றி நின்று எடுக்கவே இயலாதிருந்திருக்கிறது. அப்படி அமுதக்குடம் லிங்கத் திருவுருவில் நிலைத்து நின்ற இடமே கடவூர். அப்படி நிலைத்து நின்றவரே அமுதகடேசுவரர். இந்த அமுதகடேசுவரர் சந்நிதி மேற்கு நோக்கியே இருக்கிறது. கோயில் மிகப்பெரிய கோயில். கோயில் வாயிலில் இருக்கும் ராஜகோபுரம் மிகவும் கம்பீரமாக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் புதுப்பிக்கப் பெற்றிருக்கிறது. வழக்கமாக வாரிக்கொட்டும் வர்ண விஸ்தாரங்கள் இல்லாமல் கண்ணுக்கு இனிமையாய் இயற்கையான 'செமண்ட்' வர்ணத்திலேயே இருக்கிறது. கோயில் பஞ்ச பிரகாரத்துடன் இருக்கிறது. மூன்று பிராகாரத்தைக் கடந்தே மகாமண்டபம் வரவேணும், அந்த மண்டபத்தின் இடப்பகக்கத்திலே இருப்பவர்தான் கள்ளவாரணப் பிள்ளையார். தேவர்கள் கொண்டு வந்த அமுத கலசத்தைக் களவாடி எடுத்து ஒளித்து வைத்து, பின்னர் அவர்கள் வீழ்ந்து வணங்கிய பின்னரே கொடுத்தார் என்பது தல வரலாறு. ஆம் திரிபுர சம்ஹார காலத்திலேயே, தன்னை நினையாது தன் தந்தை புறப்பட்டார் என்பதற்காக அவருடைய தேரின் அச்சையே முறித்தவராயிற்றே. அவர் சும்மா விட்டு விடுவாரா இந்தத் தேவர்களை? நாமும் அவரை முதலிலேயே வணங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் எதையாவது நம்மிடமிருந்தும் திருடி ஒளித்து வைத்து விடுவார்.
இந்த மண்டபத்தின் வலப்பக்கத்திலேதான் தாலசம்ஹாரர் அழகிய சபை ஒன்றில் கோயில் கொண்டிருக்கிறார். கடிந்த காலனை நிக்கிரஹ அனுக்கிரகம் பண்ணின அவசரத்தில் தெற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். வலது கரங்களில் சூலமும் மழுவும், இடது தரங்களில் பாசமும் தர்சனி முத்திரையும் ஏந்தியவராய் நிற்கிறார். வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி உதைக்கும் நிலை. யமனோ காலசம்ஹாரர் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கின்றான், கூப்பிய கையராய் மார்க்கண்டேயரும் நிற்கிறார் அங்கே. இந்தக் காலசம்ஹார மூர்த்தி செப்புச்சிலை வடிவில் அமைந்த கம்பீரமான திருவுரு என்றாலும் இந்த மூர்த்தியை அவன் இருக்கும் வண்ணத்திலே நாம் காண முடியாது. வெள்ளி மஞ்சத்தில் ஏறி நின்று தங்கக் கலசமும் பட்டுப் பீதாம்பரங்களும் அணிந்தவராய்த்தான் காட்சி கொடுப்பார். இவருக்கு வருஷத்துக்குப் பதினொரு தடவைதானே அபிஷேகம், அபிஷேக காலத்துக்குக்கூட ஆடை அணிகளைப் பூரணமாகக் களையமாட்டார்களே. இந்தக் காலசம்ஹாரர் எப்படி லிங்கத் திருவுருவிலிருந்து எழுந்தார் என்பதைக் காண, கோயில் முதல் பிராகாரத்தில் இருக்கும் பிச்சக் கட்டளை ஆபீசுக்கே போகவேணும். அங்கே சின்னஞ்சிறு உருவில் இருப்பவரைப் பார்த்தே திருப்தி அடைய வேணும். மகா மண்டபத்திலிருக்கும் காலசம்ஹாரர் சந்நிதிக்கு எதிரே யமனார் அவருடைய எருமை ஊர்தியுடன் கூப்பிய கையராய் நிற்கிறார். இறைவன் திருவடியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பக்கம் போகக்கூடாது என்ற ஞான உதயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா?
காலசம்ஹாரரை வணங்கி எழுந்தபின் நாம் அமுதகடேசுவரர் சந்நிதிக்குச் செல்லலாம். இந்தச் சந்நிதி முன்புதான் சங்கு மண்டபம் இருக்கிறது. கார்த்திகை மாதம் சோமவாரங்களில் எல்லாம், வலம்புரிச் சங்குடன் கூடிய ஆயிரத்தெட்டு சங்குகளில் தீர்த்தம் நிறைத்து, பூசை முதலியன செய்து அந்தச் சங்கு தீர்த்தத்தைக் கொண்டே அமுதகடேசுவரருக்கு அபிஷேகம் நடக்கும். மார்க் கண்டேயர் இந்த மூர்த்தியைச் சங்காபிஷேகம் செய்தே வழிபட்டார் என்று ஐதீகம். இந்தச் சங்காபிஷேகம் நடக்கும் போது அமுதகடேசுவரரைத் தரிசிக்கும் பேறு கிடைத்தால் லிங்கத் திருவுருவில் அன்று யமன் மார்க்கண்டேயனைச் சுற்றி வீசிய பாசக்கயிற்றின் தழும்பு இருப்பது தெரியும். இந்த அமுதகடேசுவரரை வணங்கிய பின் வெளியே வரலாம். வெளியே வந்த பின் அந்த வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவராய் இருக்கும் அன்னை அபிராமியைக் கண்டு தொழ அவரது கோயிலுள் நுழையலாம்.
இந்த அபிராமிதான் காலசம்ஹாரரையும் அமுதகடேசுவரரையும் விடப் பிரசித்திபெற்றவள். ஆயுள் விருத்தியை விரும்புபவர் காலனைக் காய்ந்த கடவூர் உறை உத்தமனை வழிபட்டால், வாழ்க்கையில் இடர் உற்று இன்னல் அடைபவர்கள் எல்லாம் அன்னை அபிராமியையே வழிபடுகிறார்கள். சரஸ்வதி தேவியே அபிராமியைப் பூஜித்து அருள் பெற்றாள் என்றால் அதிகம் சொல்வானேன். இந்த அபிராமியினிடத்திலே அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிறார் ஒரு பட்டர். பக்திமுற்ற முற்ற உன்மத்தராகவே ஆகிவிடுகிறார். இதைக் கண்டு அர்ச்சகர்கள் அவரை வெறுக்கிறார்கள், பொறாமையே அடைகிறார்கள். ஒரு நாள் தஞ்சை மன்னன் வந்தபோது, அமாவாசையைப் பௌர்ணமி என்றே இவர் கூற, அதை வைத்தே அர்ச்சகர்கள் கயிறு திரிக்க தம் தவறை உணர்ந்த பட்டர் பாட ஆரம்பிக்கிறார். 'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்' என்று துவக்கி எழுபத்து எட்டுப்பாட்டுக்கள் பாடி விடுகிறார். இனி எழுபத்து ஒன்பதாவது பாட்டு வருகிறது.
விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு, அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்
பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்
தம்மோடு என்னகூட்டு இனியே?
'தம்மோடு என்னகூட்டு இனியே?' என்று அவர் பாடி முடித்தாரே இல்லையோ, அபிராமி தன் காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்திலே வீசி எறிகிறாள். அந்தத் தாடாங்கமே வான வீதியிலே பூரண சந்திர வடிவமாகக் காட்சி அளிக்கிறது. ஆம்! அமாவாசை அன்றே பௌர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு அரசன் அர்ச்சகர்கள் எல்லாரும் வியந்து நிற்கின்றனர். பட்டரின் திருவடியில் விழுந்து வணங்கி அவரது மன்னிப்பை வேண்டுகின்றனர். இப்படி அவர் பாடிய நூறு பாட்டுக்கள்தான் அபிராமி அந்தாதி. இந்தப் பட்டரே அபிராமி பட்டர் என்றும் பெயர் பெறுகிறார். அந்தாதிப் பாடல்கள் எல்லாம் அருமை யானவை. தேவியைத் தொழுவதற்கேற்ற பாசுரங்களாக அமைந்தவை. இன்னலுற்று இடர்ப்படுவார் இந்தப் பாடல்களைப்பாடி அன்னை அபிராமியை வழிபட்டால் எல்லா நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. அபிராமியின் கடைக்கண் நோக்கினால் மக்கள் பெறும் பேறுகள்தான் எத்தனை எத்தனை; அதையுமே சொல்கிறார் அபிராமி பட்ட ர்.
தனந்தரும், கல்விதரும்,
ஒருநாளும் தளர்வு அறியா
மனந்தரும், தெய்வ வடிவும்தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே,
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே
என்பதுதான் பாட்டு.
இத்தனையும் தெரிந்து கொண்டே அபிராமி சந்நிதி முன் சென்று அவளை வணங்கலாம். அன்னை அபிராமியின் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்தது. மூன்றடி உயரத்திலே அழகானதொரு பீடத்திலே நான்கு கரங்களோடு நின்று கொண்டிருக்கிறாள். அபய வரத முத்திரைகள் தாங்கிய இரண்டு கைகள் போக மற்றைய இரண்டு கரங்களிலும் மாலையும் மலரும் தாங்கி அழகொழுக நிற்கிறாள். என்றைக்குமே அவள் அலங்காரம் பிரமாதம்தான். அதிலும் சோமவாரத்திலும் சுக்கிர வாரத்திலும் அவள் திருக்கோலம் பன்மடங்கு பல்கிப் பெருக அலங்கரித்து மகிழ்கின்றனர். சின்னஞ் சிறு பெண்ணாய், வழிபடும் அடியவர் துயர்துடைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அன்னையாய் அவள் காட்சி கொடுக்கிறாள் பக்தர்களுக்கு எல்லாம். இப்படியெல்லாம் அருளாட்சி செய்து அன்பர் துயர் துடைக்கும் தேவியாக இருப்பதனாலேதான் ‘கரும்பினில் கட்டி போன்ற கடவூர் வீரட்டானரை' விடப் புகழ் பெற்றவளாக விளங்குகிறாள். ஆம்! இந்தக் காலத்தில் யார் நீண்ட நாள் வாழவேண்டும் என்று விரும்புகின்றார்கள்? இருக்கின்ற நாட்களில் நோய் நொடி இல்லாது இன்னல் இடர் இல்லாது, வாழ்வதைத்தானே விரும்புவார்கள். அதை அருளுபவள்தானே அபிராமி.
இத்தலத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஏழு கன்னிகைகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றிருக்கிறார்கள். தன் மனைவியின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்த குங்கிலியக் கலையரும், அரசனிடம் பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் செய்த காரிநாயனாரும் அவதரித்து முத்தி பெற்றிருக்கிறார்கள். தேவாரம் பாடிய மூவரும் இத் தலத்துக்கு எழுந்தருளிக் கடவூர் வீரட்டனாரைக் கசிந்து பாடி இருக்கிறார்கள். இம்மட்டோடு இக்கோயில் சரித்திரப் பிரசித்தியும் பெற்றிருக்கிறது. ஐம்பத்து நாலு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருக்கின்றன. சோழ மன்னர்களில் ராஜராஜனும் ராஜேந்திரனும் இன்னும் முதற் குலோத்துங்கன் விக்கிரமன் முதலியவர்களும், பாண்டிய மன்னர்களில் மாறவர்மன், கோனேரின்மை கொண்டான், விஜயநகர மன்னர்களில் கிருஷ்ண தேவராயர், வீர விருப்பண்ண உடையார் முதலியவர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கோயிலைக் கட்டவும் நிபந்தங்கள் ஏற்படுத்தவும் செய்திருக்கிறார்கள் என்று இக்கல் வெட்டுக்களால் அறிகிறோம். இக்கோயில் இன்று தருமபுர ஆதீனத்தலைவர் ஆளுகையில் இருக்கிறது; மிக்க சிறப்போடு பரிபாலிக்கிறார்கள். அபிராமியை அழகு செய்து பார்ப்பதிலே மகா சந்நிதானம் அவர்களுக்கு மிக மிக ஆர்வம்; அதை அங்கு சென்றால் நேரிலேயே பார்க்கலாமே.இக்கோயிலுக்குப் போனதுதான் போனோம், இந்த வீரட்டானர் கோயிலுக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்திலேயுள்ள கடவூர் மயானம் என்னும் தலத்துக்கும் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமான் அடிகள், மலர்க்குழல் மின்னம்மை இவர்களையும் வணங்கிவிட்டே திரும்பலாம். சிவபெருமான் ஒரு கல்பத்தில் பிரமதேவரை நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்து படைப்புத் தொழிலை நிகழ்த்திய இடம் ஆனதால் மயானம் என்று பெயர் பெற்றது என்பர். இறப்பும் பிறப்பும் மயானத்திலேயே நடந்திருக்கிறது. நமது பழவினைகளை எரித்து நம்மையும் உய்யக் கொள்ளும் இறைவன் திருவிளையாடல்கள் புரிய எந்த இடம் என்று உண்டா ?