வேங்கடம் முதல் குமரி வரை 2/திருப்புன்கூர் சிவலோகன்

12

திருப்புன்கூர் சிவலோகன்

தீண்டாமை ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம் எல்லாம், நம் சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க எழுந்த சமீப கால முயற்சிகள். 'எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓரினம்' என்ற அடிப்படையில் சமுதாய வாழ்வில் எல்லோரும் பங்கு பெறவேணும் என்பதற்காக எழுந்த இயக்கம் அவை. நாடு சுதந்திரம் பெற்று மக்கள் சுபிட்சமாக வாழ, சமுதாயத்தில் உள்ள உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது; நடக்கிறது. இந்த இயக்கத்துக்கு முழு ஆக்கம் தந்தவர் மகாத்மா காந்திஜி.

எந்தக் கோயிலில் ஓர் இனத்தவரைத் தீண்டத்தகாதவர் என ஒதுக்கி உள்ளே விட மறுக்கிறார்களோ, அந்தக் கோயிலினுள் நுழைய காந்திஜி மறுத்திருக்கிறார். தமிழ் நாட்டிலே மீனாக்ஷி சந்நிதியிலே, அரங்கத்து அரவணையான் கோயிலிலே, பழனி ஆண்டவன் முன்பெல்லாம், ஹரிஜனங்களை அழைத்துக் கொண்டு காந்திஜி சென்று ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை விழாக்களாகவே நடத்தியது எல்லாம் சரித்திரப் பிரசித்தம். இன்று தமிழ் நாட்டில் ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்படாத கோயில்களே இல்லை என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் இந்த இயக்கத்தை எண்ணற்ற வருஷங்களுக்கு முன்னாலேயே முன்னின்று நடத்தியிருக்கிறார் ஒரு சிவலோகநாதர். கோயிலுள் விட வேண்டாம், தேரடியில் நின்று தரிசிப்பதற்காவது வழி செய்ய வேண்டும் என்ற ஹரிஜன பக்தனான நந்தனுக்காக வழிமறைத்திருக்கும் நந்தியை 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று உத்தரவு போட்டார் அவர். அந்தச் சிவலோக நாதரைக் காணவே இன்று செல்கிறோம் திருப்புன்கூருக்கு.

திருப்புன்கூர், வைத்தீசுவரன் கோயிலுக்கு, நேர் மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வைத்தீசுவரன் கோயில் ஸ்டேஷனில் இறங்கி பஸ்ஸில் ஏறியோ இல்லை, கார், வண்டி ஏதாவது வைத்துக் கொண்டோ செல்லலாம். போகிற வழியெல்லாம் செந்நெல் வயல்கள், பங்கயங்கள் மலரும் பழனங்கள், எங்கு பார்த்தாலும் ஒரே தென்னஞ் சோலைகள். ரோட்டை விட்டுத் தெற்கே திரும்பி ஒன்றிரண்டு பர்லாங் தூரம் வளைந்து வளைந்து சென்றால், கோயிலை அடுத்த குளக்கரை வந்து சேருவோம். குளக்கரையிலிருந்து கோயிலைக் காண்பதே ஓர் அழகான காட்சி.

திருப்புன்கூர் கோயில்
விலகிய நந்தி

கோயில் சந்நிதித் தெருவின் கீழ்க் கோடியில், தேரடியில் ஒரு சிறு கோயில் புதிதாகக் கட்டி அதில் நந்தனைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்தத் தேரடியில் நின்றுதானே நந்தன் கதறி இருக்கிறான். 'வழி மறைத்திருக்கிறதே, ஐயே! மலை போல ஒரு மாடு படுத்திருக்குதே' என்று. நாமும் நம் வண்டியை விட்டு அங்கேயே இறங்கி விடலாம். அங்கிருந்தே நந்தன் தரிசித்த சிவலோக நாதனைக் கண்டு தரிசித்து விடலாம். அன்று நந்தனுக்கு வழி மறைத்த நந்திதான், பின்னர் வழியைவிட்டு வடபக்கமாக விலகி எல்லோரும் தேரடியில் நின்று தரிசிக்க இடம் தந்திருக்கிறதே. இந்த இடத்தில் நின்றே நந்தன் சரித்திரம் முழுதையும் கேட்டு விடலாம், தெரிந்தவர்கள் மூலம். அப்படித் தெரிந்தவர்கள் அகப்படாவிட்டால், பெரிய புராணம் எழுதிய சேக்கிழாரும், நந்தன் சரித்திரக் கீர்த்தனம் பாடிய கோபால கிருஷ்ண பாரதியும் நமக்கு துணை வரத் தயாராயிருக்கிறார்கள். கதை இதுதான்.

சோழவள நாட்டிலே ஆதனூர் என்ற ஒரு சிறிய ஊர். (இன்று மேல ஆதனூர் என்று வழங்குகிறது. திருப்புன் கூருக்கும் மேற்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது) அங்கு ஒரு புலைப்பாடி. அதில் நந்தன் பிறக்கிறான். ஓர் அந்தணரிடம் பண்ணையாளாக வேலை பார்க்கிறான். அவனுக்கு எப்படியோ ஒர் ஆசை பிறந்து விடுகிறது தில்லையில் நடம் ஆடும் கூத்தனைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்று. அதற்குத் தன் சேரியில் ஆள் திரட்டுகிறான். சேரியிலுள்ளவர்களைத் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலுள் விடமாட்டார்களே என்று அவர்கள் எண்ணுகிறார்கள். 'இது எல்லாம் நமது ஜாதிக்கு அடுக்காத காரியம்' என்று நாட்டாண்மைக் கிழவன் வேறே தடுக்கிறான். இருந்தாலும் ஒரு சிலரைக் கூட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் திருப்புன்கூரில் உள்ள சிவலோக நாதனைத் தரிசிக்கப் புறப்பட்டு வருகிறான்.

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்!
பாவமயங்களைப்போக்கி-அவர் பரமபதத்தைக்கொடுப்பார் அந்த
சிவலோகநாதனைக் கண்டு
சேவித்திடுவோம் வாரீர்!

என்று பாடிக்கொண்டே வந்துவிட்டான் திருப்புன்கூர் தேரடிக்கு. அதன் பின்தான், சிவலோக நாதனைக் கண்டு தரிசிப்பது எளிதல்ல என்று தெரிகிறது. முதலில் சந்நிதித் தெருவிலே நுழையவே அனுமதி கிடையாது. அதன் பின் கோயில் வாயிலில் பெரிய நந்தி வேறே படுத்துக் கிடக்கிறது. எப்படி எட்டி நின்று தரிசிப்பது? அவனது ஏக்கம் எல்லாம் தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும் என்பதுதான். 'உற்றுப் பார்க்கச் சற்றே இந்த நந்தி விலகாதா' என்று எண்ணியிருக்கிறான். அவ்வளவுதான், சிவலோக நாதன் தன் நந்தியைப் பார்த்து, சற்றே விலகியிரும் பிள்ளாய், நம் சந்நிதானம் மறைக்குதாம் என்று வேண்டிக் கொள்கிறான். நந்தியும் அப்படியே விலகிக் கொள்கிறது. நந்தன் குதுகலித்து ஆடிப்பாடுகிறான். இப்படி நந்தி விலக அருள் செய்கான் சிவலோகநாதன் என்பதைச் சேக்கிழார்,

சீர் ஏறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரே கும்பிடவேண்டும்
எனநினைந்தார்க்கு, அதுநேர்வார்
கார் ஏறும் எயில் புன்கூர்
கண்ணுதலார்திருமுன்பு
பேர் ஏற்றை விலங்க அருள்
புரிந்து அருளிப்புலப்படுத்தார்

என்று பாடுகிறார் அவரது திருத்தொண்டர் புராணத்தில். நந்தி விலகி தரிசனத்துக்கு வழிசெய்த காரணத்தால், தில்லைச் சிற்றம்பலவனுமே அருள் புரிவான் என்ற நம்பிக்கை வலுக்கிறது நந்தன் சகாக்களிடத்தே. நாளையே போக வேணும் என்று துடிக்கிறான் நந்தன். ஆனால் ஆண்டானான அந்தணர் எளிதாக இடங் கொடுத்து விடுவாரோ? நாற்பது வேலி நிலத்துக்கு நடவு நட்டு விட்டுத்தான் போகவேனும் என்கிறார். எப்படி இதனை முடிப்பது என்று நந்தன் மயங்கி நின்றபோது இறைவனே இந்த வேலையையும் முடித்துக் கொடுக்கிறார். அந்தணரோ நந்தன் பக்தியின் பெருமையை உணர்ந்து அவன்காலிலேயே விழுந்து வணங்கி எழுந்து விடை கொடுக்கிறார். பின்னர் ஆறாத பெருங்காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க, உள்ளுருகிக் கைதொழுத கோலத்தோடு தில்லை சென்று இறைவன் அருளியபடி எரி மூழ்கி, உலகுய்ய நடம் ஆடும் நடராஜனை வழிபட்டு முத்தி பெற்றார் என்பது வரலாறு. இந்த நந்தி விலகிக் கிடக்கும் நேர்த்தி யொன்றைக் காண்பதற்கே இக்கோயிலுக்குப் போகலாம். வெளியில் நின்று பார்த்தாலும் சிவலோகன் தரிசனம் கிட்டும்.

சிவலோகநாதன் சந்நிதிக்கே போய்விட்டாலும் அங்கிருந்து பார்த்தால் நந்தி எவ்வளவு தூரம் வடபக்கம் விலகி வழி மறையாதிருக்கிறது என்றும் தெரியும். இதைவிட எல்லாம் அழகு, அவசரத்தில் விலகிய நந்தி கொஞ்சம் ஒருக்களித்துச் சாய்ந்து கிடப்பது. நந்தி விலகிய வரலாற்றை நம்ப மறுக்கும் அன்பர்கள்கூட இதைக் கண்டு, வாய்மூடி மௌனியாக நிற்க வேண்டியதுதான். கோபுர வாயிலைக் கடந்து நந்தி மண்டபம் வந்து, இறை அருளிலே நம்பிக்கை அதிகம் பிறக்கச் செய்யும் நந்தியெம்பெருமானையும் வணங்கிய பின் கோயிலுள் நுழையலாம். கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் இல்லை, சின்னஞ் சிறிய கோயிலும் இல்லை. மகா மண்டபத்திலே தெற்கு நோக்கி அந்தச் சிவகாமிநாதன் சிவகாமியோடு நடம் ஆடிய கோலத்தில் நிற்கிறான். அந்தத் திருவுருவைப் பார்க்கும் போது, அவரது திருவடியில் குடமுழாவையும், பஞ்சமுக வாத்தியத்தையும் முழக்கும் பூதகணங்களையும் பார்க்கத் தவறி விடாதீர்கள். நீங்கள் தவறினாலும் இத்தலத்துக்கு வந்த சுந்தரர் ஞாபகமூட்டத் தவறமாட்டார்.

மானை நோக்கியோர்
மாநடம் மகிழ மணிமுழா
முழக்க அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி
அடைந்தேன் செழும்பொழில்
திருப்புன்கூர் உளானே.

என்பதைப் பாடிக் காட்டியே நமக்கு அறிவுறுத்துவார். நடராஜ தரிசனம் செய்தபின் இங்கே கோயில் கொண்டிருக்கும் சௌந்திரநாயகியாம் அம்மையையும் கண்டு வணங்கலாம். இத்தலத்துக்குச் சிவலோக நாதனை விடப் பெருமை தேடித்தந்த அந்தத் திருநாளைப் போவாராம் நந்தனையும் செப்புச் சிலை வடிவில் கண்டு மகிழலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார், அப்பர் வந்திருக்கிறார். ஆளுக்கு ஒரு பதிகம் பாடிப் பரவி இருக்கிறார்கள்.

கலைஞானம் கல்லாமே
கற்பித்தானை, கடுநரகம் சாராமே
காப்பான் தன்னை
பலவாய வேடங்கள் தானே
ஆகிப் பணிவார்கட்கு
அங்கங்கே பற்றா னானை
சிலையால் புரம் எரித்த
தீ ஆடியை, திருப்புன்கூர்
மேவிய சிவலோகனை

நினைந்து நினைந்து பாடிய நாவுக்கரசர் பாட்டு எவ்வளவோ அரிய உண்மைகளையெல்லாம் வெளியிடுவதாக இருக்கிறது. அப்பரும் சம்பந்தரும் சும்மாப் பாடிப் பரவுவதோடு நிறுத்தினால் இங்கு எழுந்தருளிய சுந்தரர் சிவலோகனுக்கு நிலம் சேர்த்து வைக்கவே முனைந்திருக்கிறார். சோழ நாட்டிலே ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மழையே பெய்யாமல் வறண்டிருக்கிறது. கோன்நோக்கி வாழும் குடிகள் வான் நோக்கி வருந்தி இருக்கிறார்கள். சோழ மன்னன் வேறே தைந்து உருகியிருக்கிறான். அவன் திருபுன்கூருக்கு வந்திருந்த அன்றே சுந்தரரும் தனது சுற்றுப் பிரயாணத்தில் அங்கு வந்து சேர்ந்திருக்கிறார். அரசனும் குடிகளும் மழை வளம் இல்லாது நாடு வறண்டிருப்பதைக் கூறுகிறார்கள். 'சரி பன்னிரண்டு வேலி நிலத்தைக் கோயிலுக்கு எழுதித் தருகிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுத்திருக்கிறான் மன்னன். உடனே பாடியிருக்கிறார் சுந்தரர். அவ்வளவுதான்; மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. மக்களும் மன்னனும் குதூகலத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால் பெய்ய ஆரம்பித்த மழை பெய்து கொண்டேயிருக்கிறது. நாள் ஒன்று இரண்டு என வளர்ந்து பத்து நாட்களாகியும் நிற்கக் காணோம். மழை போதும் போதும் என்ற பின்னும் நிற்காவிட்டால் கஷ்டந்தானே. 'ஐயனே! மழையை நிறுத்தும்' என்று சுந்தரரிடமே குறை இரந்திருக்கிறார்கள். 'சரி, பெய்யும் மாரியையும் பெருகும் வெள்ளத்தையும் நிறுத்துகிறேன். என்ன தருகிறீர்கள்? இன்னுமொரு பன்னிரண்டு வேலி நிலம் சிவலோகனுக்குத் தருகிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார். சரி, என்று தலையசைத் திருக்கிறார்கள் மக்களும் மன்னனும். பாடியிருக்கிறார் சுந்தரர். மழை நின்றிருக்கிறது. மீட்டும் பன்னிருவேலி கிடைத்திருக்கிறது கோயிலுக்கு. இவ்வளவும் சும்மா கற்பனைக் கதையல்ல, சுந்தரரே சொல்கிறார்:

வையகம் முற்றும் மாமழை
மறந்து, வயலில் நீர்இலை
மாநிலம் தருகோம்
உய்யக்கொள் மற்று எங்களை
என்ன, ஒளிகொள் வெண்முகிலாய்
பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப்பெருவெள்ளம்
தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு
வேலிகொண்டு அருளும்
செய்கைகண்டு நின் திருவடி
அடைந்தேன், செழும் பொழில்
திருப்புன்கூர் உளானே

என்ற பாட்டை விட இந்த நிகழ்ச்சிக்கு வேறு என்ன சான்று வேண்டும்.

இன்னுமொரு வரலாறு, இக்கோயிலுக்கு இன்னும் நிலம் சேர்ந்ததற்கு. வீரவிக்ரம சோழன் மகனான சிற்சபேச நடேசன் பிறக்கிறான், வளர்கிறான். (இவனை எல்லாம் சரித்திரத்தில் தேடக்கூடாது) அவன் திருப்புன்கூரிலுள்ள தேவதாசி சௌந்தரத்தைத் தன் காதல் கிழத்தியாகக் கொண்டு அவளுடன் வாழ்ந்திருக்கிறான். திருப்புன்கூரை விட்டுத் திருவாரூர் போக அவன் விரும்பியபோது தாசி சௌந்தரம் உடன் செல்ல மறுத்திருக்கிறாள். அதனால் மன்னன் தான். அவளுக்குக் கொடுத்த பொருளையெல்லாம் அவள் அறியாமல் கைப்பற்றியிருக்கிறான். கேட்டால் தனக்கு ஒன்றுமே தெரியாதே என்றும் சொல்லியிருக்கிறான். அவள் அப்படியே சத்தியம் செய்து தரச் சொல்லி திருக்குளத்துக்கு இழுத்திருக்கிறாள். பொய்ச் சத்தியம் பண்ண முனைந்த மன்னனைப் பாம்பைக் காட்டிப் பயமுறுத்தியிருக்கிறார் சிவலோகன், அதனால் சிற்சபேசன் வேண்டிய நிலபுலங்களைக் கோயிலுக்கு எழுதிவைத்து, தன்னை அண்டிய பழியினின்றும் நீங்கியிருக்கிறான் என்று கதை,

இந்தச் சிவலோகநாதர் இப்படி நிலங்களைச் சேர்த்தாரே தவிர, அவைகளை வைத்துக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை. எப்படியோ கோட்டை விட்டுவிட்டார். அன்று சுந்தரர் தேடிக் கொடுத்ததும் பின்னர் சிற்சபேசன் எழுதிக் கொடுத்ததுமான நிலங்களெல்லாம் இன்று தேவஸ்தானத்தின் சொத்தாக இல்லை. ஏதோதனக்கு வேண்டிய கொஞ்ச நிலங்களையும் புலன்களையும் மாத்திரமே வைத்துக் கொண்டிருக்கிறார். (பின்னால் நில உடைமைக்கு உச்ச வரம்பு வரும், அது கஷ்டம் தரும் என்பதை யெல்லாம் தெரியாமலா இருந்திருப்பார்!)

திருப்புன்கூர் இறைவனை வழிபட்டு முத்தி பெற்றவர்கள் ஜாபிதா நிரம்பவும் நீளம். சூரியசந்திரர், இந்திரன், பிரம்மா, அகஸ்தியர், அக்கினி, பதஞ்சலி வியாக்கிரபாதர், சப்த கன்னியர் எல்லாம் வழிபட்டு முத்தியடைந்தனர் என்று தலபுராணம் கூறும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் விறல்மிண்டர், ஏயர்கோன் கலிக்காமர் எல்லாம் இங்குதான் முத்தி பெற்றார்கள் என்றும் அறிவோம். இத்தனை தெரிந்தபின் இத்தலம் ஏன் புன்கூர் என்று பெயர் பெற்றது என்று தெரிய வேண்டாமா? வேறு ஒன்றும் இல்லை. புங்கம் செடிகள் நிறைந்த ஊர் இது, கரிஞ்சாரண்யம் என்றே ஒரு பெயர் இவ்வூருக்கு. இந்த ஊரின் நிலவளம் ஏன் செழிப்பாயிருக்கிறது என்று எனக்கு இப்போது விளங்குகிறது. பசுந்தழை உரத்தில் புங்கன் தழைக்குமேல் நல்ல உரம் கிடையாதே. புங்கமரமே இங்கு தல விருட்சம். உரம் இருந்தது, உழத் தெரிந்தது. ஆனால் கிடைத்த நிலங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லையே இந்தச் சிவலோகநாதருக்கு என்பதே நமது வருத்தம்.