வேங்கடம் முதல் குமரி வரை 2/வேளுர் வைத்தியநாதன்

11

வேளூர் வைத்தியநாதன்

'மூலிகை மர்மம்' என்று ஒரு புத்தகம். அதில் வேம்பு என்று ஓர் அத்தியாயம். அதில் நம் வீட்டுப் புழக்கடையிலும், ஊர் வெளிப்புறங்களிலும் வளரும் வேப்ப மரத்தின் குணங்களைப் பற்றியே விரிவாகக் கூறப்பட்டிருக்கும். 'முறை சுரங்களுக்கும், இரத்த சுத்திக்கும் வேம்பின் வேர், பட்டை முதலியன கைகண்ட மருந்து. வேப்பமரத்து இலையே வீக்கங்களை வற்ற வைப்பதற்கும், விஷக்கிருமிகளைக் கொல்வதற்கும், விஷ வாயுக்களைத் தடுத்துச் சுகாதாரத்தை உண்டு பண்ணுவதற்கும் ஏற்றது. சுவாச ரணங்களுக்கும், மூளைக்குப் பலம் தருவதற்கும் இரத்தத்திலுள்ள விஷங்களை மாற்றுவதற்கும் வேப்பம் பழம் சிறந்தது.

இதைப் போல் வேப்பம் விதை, வேப்பம் எண்ணெய் எல்லாம் கடுமையான நோய் தீர்க்க வல்லவை. வேப்பம் பூ வடகமும், வேப்பம் பூ ரஸமும் உணவோடு உணவாக வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கக் கூடியவை. நிரம்பச் சொல்வானேன்? வேப்ப மரத்துக் காற்றை உட்கொள்பவர்கள் எல்லாம் நோய் நொடி இல்லாமல் வாழ்வார்கள். அவர்களை விஷ வாயுக்களால் உண்டாகும் வாந்தி பேதி, பிளேக், வைசூரி முதலியவை அண்டாது. வேம்பும் அரசும் சேர்ந்து விட்டாலோ அவற்றைச் சுற்றி வலம் வரும் பெண்களின் கருப்பையின் கோளாறுகளையெல்லாம் நீக்க வல்லது. இப்படி இன்னும் என்ன என்ன எல்லாமோ விரிவாக வேப்பமரத்தைப்பற்றியும் அதன் கிளை, தளிர், பழம், பட்டை முதலியவற்றைப் பற்றியும் அந்த மூலிகை மர்மத்தில் எழுதியிருந்தது. இந்த மர்மங்களை நமக்கு அந்த நூலாசிரியரான வைத்தியர் விளக்குவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் தெரிந்து வைத்திருக்கிறார். அது காரணமாக அவர், அந்த வேப்ப மரத்தடியிலேயே கடையை விரித்திருக்கிறார். தம்மை வைத்தியநாதன் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார். தீரா நோய்களைத் தீர்க்கும் வைத்தியராக வாழ்ந்திருக்கிறார். இவரையே, சமயக் குரவர்களில் வயது முதிர்ந்தவரான அப்பர் பெருமான்

பேராயிரம் பரவி வானோர்
ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா
அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை,
மந்திரமும் தந்திரமும்
மருந்தும் ஆகி
தீரா நோய் தீர்த்து அருள
வல்லான் தன்னைத்திரிபுரங்கள்
தீ எழத் திண் சிலை கைக்கொண்ட
போரானை, புள்ளிருக்கு
வேளூரானைப் போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே

என்று பாடியிருக்கிறார். இந்த வைத்தியநாதன் கோயில் கொண்டிருக்கும் புள்ளிருக்கு வேளூருக்கே செல்கிறோம் இன்று.

சாதாரணமாக, புள்ளிருக்கு வேளூர் என்றால் ஒருவருக்கும் ஊர் எங்கிருக்கிறது என்று தெரியாது. ஆனால் வைத்தீசுவரன் கோயில் எங்கிருக்கிறது என்றால் தெரியும். தென் பிராந்திய ரயில்வேயில் மாயூரத்துக்கும் சீகாழிக்கும் இடையில் இருக்கிறது. சீகாழிக்கு அடுத்த தென்பக்கத்து ஸ்டேஷன் என்று ரயில்வே அட்டவணையைப் பார்க்காமலேயே சொல்லி விடுவார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கு நோக்கி நடந்தால் தெற்கு ரதவீதியில் கொண்டு வந்து விடும். அதன்பின் ஒரு பிரச்சினன. கோயிலுக்குக் கிழக்கும் மேற்கும் பெரிய கோபுரங்கள் இருக்கின்றனவே, கோயிலுக்குள் எப்படி நுழைய வேணும் என்ற கேள்வி எழும். மேற்கே பார்த்தவராக வைத்தியநாதர் இருப்பதால் மேலக் கோபுர வாயில் வழியாக நுழைந்து மண்டபங்களைக் கடந்து வரலாம். ஆனால் நாம் இந்தக் கோயிலுக்கு வருவது, நமது பழவினையாம் நோய் தீர்க்க மாத்திரம் அல்லவே. உடலில் உறவாடும் நோயையும் தீர்க்கத்தானே. ஆதலால் அன்று அந்த வேம்படியில் கடைவிரித்த வைத்தியாநாதனை அல்லவா முதலில் சந்தித்து, நம் நோய் விவரங்களைக் கூறி அதற்கு மருந்து தேட வேண்டும். ஆதலால் தெற்கு

புள்ளிருக்கு வேளூர்- கோயில்
ரதவீதியைக் கடந்து கீழை ரதவீதி வழி வந்து கீழைக் கோபுர வாயில் வழியாகவே உள் நுழையலாம்.

ராஜ கோபுரத்தைக் கடந்த உடனே அங்கிருக்கும் வெளி அத்தனையையும் ஆக்கிரமித்துக் கொண்டு பெரியதொரு வேப்ப மரம் நிற்கும். அந்த மரமே இங்கு தலவிருட்சம். அந்த மரத்தடியிலேயே மேற்கே பார்த்தவராக இருக்கிறார் ஆதி வைத்தியநாதர். இந்த இடத்தையே வேம்படி மால் என்று கூறுவார்கள். இந்த ஆதி வைத்தியநாதரிடம் நாம் நம் நோய்க்கு மருந்து பெற முடியாது. வியாபாரம் பெருத்துவிட்ட காரணத்தால் கடை முதலாளி கோயிலுக்கு உள்ளே போய்விட்டார் என்பர். கோயிலுக்குள்ளிருக்கும் புதிய வைத்தியநாதரே, எல்லா நோய்களுக்கு கண்கண்ட மருந்தான திருச்சாத்துருண்டை வியாபாரம் செய்து வருகிறார். இந்த மருந்து பெற விரும்புபவர் சுக்கில பக்ஷத்தில் நல்ல நாழிகையில் அங்குள்ள சந்தான தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள மண்ணை எடுத்துப் புதுப்பாத்திரத்தில் வைத்து, கோயிலுள் வந்து விபூதி குண்டத்தில் உள்ள விபூதி, சித்தாமிர்த தீர்த்தத்திலுள்ள தண்ணீர் இவைகளையும் சேர்த்துப் பிசைந்து முத்துக்குமரர் முன்புள்ள குழி அம்மியில் இட்டு அரைத்துக் கடுகு அளவு உண்டைகள் செய்து, தையல்நாயகி திரு முன்பு வைத்து அருச்சனை செய்து எடுத்துப் போய் உண்ண வேண்டும் என்பர் கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும். இப்படியே சொல்லி யிருப்பார்கள் போலும் அன்று இக்கோயிலுக்கு வந்த காளமேகத்தினிடமும். உடனே அவர்,

மண்டலத்தில் நாளும்
வைத்தியராய்த் தாமிருந்து
கண்டவினை தீர்க்கின்றார்
கண்டீரோ?-தொண்டர்

விருந்தைப் பார்த்து உண்டருளும்
வேளூர் என் நாதர்
மருந்தைப் பார்த்தால்
சுத்த மண்.

என்று ஏளனமாகவே பாடியிருக்கிறார். நான் கூடக் காளமேகம் கட்சிதான். திருச்சாத்துருண்டை உருட்டக் கஷ்டப்பட வேண்டாம் என்பேன். ஆதி வைத்தியநாதரைச் சுற்றி வளர்ந்திருக்கும் வேம்படியில் சும்மா அரை மணி நேரம் அப்படியே தங்கி இருந்து விட்டால், தீராத நோய் எல்லாம் தீர்ந்து போகுமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

இப்படி நம் உடல் நோயைத் தீர்த்துக் கொண்டபின் உள நோயைத் தீர்க்கக் கோயில் உள்ளேயே நுழையலாம். பரந்து கிடக்கும் தெற்கு வெளிப் பிராகாரத்தைக் கடந்து பிரதான கோயில் மண்டபத்துக்கு வந்தால் தென்பக்கம் ஒரு பெரிய வாயில் இருக்கும். அதில் நுழைந்தால் சித்தாமிர்த தீர்த்தத்தினிடம் கொண்டு சேர்க்கும். காமதேனு பால் சொரிந்து இறைவனை அபிஷேகம் செய்ய, அந்தப் பால் பெருகியே இந்தத் தடாகம் நிரம்பி இருக்கிறது என்பர். இல்லை சித்தர் கணத்தர் இறைவன் திரு முடியில் கொட்டிய தேவாமிர்தமே இங்கு நிறைந்திருக்கிறது, அதனாலேயே சித்தாமிர்த தீர்த்தம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். இந்தத் தீர்த்தத்தில் ஒரு விசேஷம். இதில் பாம்பும் தவளையும் எப்போதுமே இருந்ததில்லை. ஏதோ சாதனந்தர் இட்ட சாபத்தால் நேர்ந்தது இது என்பர். இதனால் கொஞ்சம் துணிந்தே இக்குளத்தில் இறங்கலாம், குளிக்கலாம், நீச்சல் அடிக்கலாம். வேம்படி மாலில் தீராத வியாதி மிச்சம் இருந்தால் அது கட்டாயம் இத்தீர்த்தத்தில் குளித்ததும் தீர்ந்து போகும்.

இனி, கோயிலுள் நுழைந்து, கர்ப்பக் கிருஹம் சென்று வைத்தியநாதனைக் கண்டு வணங்கலாம், பின்னர்
ஆதி வைத்திய நாதர்

அவரை வலம் வரலாம். அப்படி வரும்போது 'இந்தத் தலத்துக்கு வைத்தீசுவரன் கோயில் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்க, இதை ஏன் புள்ளிருக்கு வேளூர் என்று அழைக்கிறார்கள் என்று உடன் வரும் நண்பர் கேட்பார். அவருக்கு விடை சொல்லும் இந்தப் பிராகாரம். ஜடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகனாம் வேள், சூரியனாம் ஊர், நால்வரும் பூஜித்த தலம் ஆனதால் இந்த பெயர் வந்தது என்று தல வரலாறு கூறும். இதற்கேற்ப இங்குள்ள தெற்குப் பிராகாரத்தில் சடாயு குண்டம் இருக்கிறது. ராமாயணத்தில் வரும் சடாயு இராவணனோடு போர் ஏற்று விழுந்து மாண்ட இடம் என்றும், அந்த சடாயுவைப் பின்னர் ராம லக்ஷ்மணர்கள் தகனம் செய்த இடமே இது என்றும் அறிவோம். அங்குள்ள ஒரு குண்டத்தில் சடாயுவின் சாம்பல் இன்றும் இருப்பதைக் காணலாம். சடாயுவும் சம்பாதியும் முத்தி பெற்ற இந்தப் புள்ளிருக்கு வேளூரை ஞானசம்பந்தர் பாடுகின்ற போது இரண்டு பறவை அரசினையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டே பாடியிருக்கிறார்.

கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம்
பெருமானார் உறையும் இடம்
தள்ளாய் சம்பாதி சடாயு
என்பார்தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே,

என்பதுதானே அவர் பாடிய தேவாரம். சடாயு குண்டத்தைக் கடந்து வரும் வழியில், செவ்வாய்க் கிரஹம் ஆன அங்காரகனது உற்சவமூர்த்தத்தையுமே கண்டு வணங்கலாம். நீங்கள் கோயிலுக்குப் போன நாள் செவ்வாய்க்கிழமையாக இருந்தால் சிறப்பான அலங்காரத்தைக் காண்பதுடன், விசேஷமான நைவேத்தியங்களும் இங்கு கிடைக்கும். தலத்தில் நவக்கிரஹங்கள் ஒருவரை ஒருவர் வக்கரித்துக் கொண்டிருப்பதில்லை. சூரியனுக்கும் அங்காரகனுக்கும் தனித்தனி சந்நிதி அமைத்து விட்டதால், மற்ற ஏழு பேரும் கைகட்டி வாய் பொத்தி வரிசையாக கீழைத் திருமாளிகைப் பத்தியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்தபின் நடந்தால் தெற்கு நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தையல்நாயகியிடம் வருவோம். தையல் நாயகி நல்ல அழகான வடிவம், கரும்புருவச் சிலை, வரிக்கயல் விழி, வள்ளைவார் காது, முல்லை அரும்பும் இளநகை, செங்கனிவாய், பிறைநுதல் எல்லாம் படைத்தவளாய்ப் புள்ளூர் மேவும் இந்த வாலாம்பிகையை வணங்கிவிட்டு வடக்கு நோக்கிப் போகலாம். அங்கு தானே சண்முகர் சந்நிதி இருக்கிறது. இந்தச் சண்முகரின் உற்சவ மூர்த்தமே செல்வமுத்துக் குமாரர். இவர் உண்மையிலே நல்ல செல்வந்தர். அதிலும் கார்த்திகை தினத்தன்று நடக்கும் சந்தனாபிஷேகம், அலங்காரம் எல்லாம் கண் குளிரக் காண வேண்டியவை, இவரையே அருணகிரியார், குமரகுரபரர் எல்லாம் பாடிப் பரவி யிருக்கிறார்கள். குமரகுருபர் பாடிய முத்துக் குமரன் பிள்ளைத் தமிழ் மிகச் சிறப்பு வாய்ந்தது.

கூன் ஏறு மதிநுதல் தெய்வக்
குறப்பெண் குறிப்பறிந்து
அருகு அணைந்து,
குற்றேவல் செய்ய, கடைக்கண்
பிணிக்கு எனக் குறை இரந்து
அவள் தொண்டைவாய்
தேனூறு கிளவிக்கு வாயூறி
நின்றவன் செங்கீரை
ஆடி அருளே

என்று பாடும் பிள்ளைத் தமிழில், தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

கோயில் நிரம்பப் பெரிய கோயில் ஆனதால் சுற்றிச் சுற்றி வரலாம். அங்கு கோயில் கொண்டிருக்கும் மூர்த்திகளை யெல்லாம் கண்டு கண்டு தொழலாம். இக்கோயிலில் எட்டு கல் வெட்டுக்கள் இருக்கின்றன. அவை கூட முழுவதும் சிதையாமல் இல்லை . திருப் பணி செய்தபோது சிதைந்திருக்கலாம். இக்கல் வெட்டுக்களில் சிறப்பானது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாட்டை ஆண்ட விக்கிரம சோழன் காலத்தியது; இவன் முதற்குலோத்துங்கன் மகன், இவன்றன் மெய்க்கீர்த்தியை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

திருவடி இரண்டும் தன் முடியாகத்
தென்னவர்சூட, முன்னும் மனுவாறு பெருக,
கலியாறு வறப்ப, செங்கோல் திசை
தொறும் செல்ல, வெண்குடை நிலவளாகம்
எங்கணும் தங்க, வெண்ணிலாத் திகழ,
ஒருதனி மேருவில் புவியின் பொன்னேமி யாவும்

தன்னேமி நடப்ப, விளங்கு ஜயமகளை
இளங்கோப் பருவத்து சக்கரக் கோட்டத்து
வீரத் தொழிலால்வது மணந்தான்

என்பது ஒன்று. இதனால் இவன் இக்கோயிலுக்குச் செய்த பணி விளங்கவில்லை என்றாலும் மன்னனது கீர்த்தி மட்டும் பெரிதாகவே இருந்திருக்கிறது என்று அறிகிறோம். வீர ராஜேந்திர பாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் திரு அம்பலமுடையானான தொண்டைமானால் திருப்புள்ளிருக்கு வேளூர் நாயகனுக்கு இறையிலியாக விடப் பெற்ற நிலங்களைக் குறிக்கின்றது. இன்னும் அச்சுதப்ப நாயக்கர், துளஜா மகாராஜா முதலியவர்கள் விட்ட நிபந்தங்களைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் உண்டு.

இக்கோயில் தருமபுர ஆதீனக் கோயில்களில் பெரியது. பொருள் வளம் உடையது; சிறப்பு மிக்கது. 6105 ஏக்கர் நன்செய் நிலமும் 1176 ஏக்கர் புன் செய்யும், லக்ஷத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணமும் இக்கோயிலுக்கு உண்டு என்றால் வேறு அதிகம் சொல்வானேன். இன்றைய ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாச்சர்ய சுவாமிகள், இந்த வைத்தியநாதன் தம்பதிகளிடத்தும் அவர்களைவிட அந்தச் செல்வமுத்துக்குமரனிடமும் அளவிலா பக்தி உடையவர்கள் ஆதலால் கோயில் காரியங்களை யெல்லாம் தம் நேரடிப் பார்வையிலேயே நடத்துகிறார்கள். திருப்பணி செய்து கொண்டே யிருக்கிறார்கள். தங்கக் கவசத்துக்கு மேல் தங்கக் கவசமாக மூர்த்திகளுக்கு அணிந்து அணிந்து பார்த்து மகிழ்கிறார்கள். சென்னையிலேயே 'வேளூர் இறை பணி மன்றம்' ஒன்றை நிறுவி, சைவ சமயப் பற்றை வளர்க்கிறார்கள். இதனால்தானே வைத்தியநாதனையும் செல்வமுத்துக் குமரனையும் ஆர, அமர இருந்து பார்த்து வழிபட்டுத் திரும்ப முடிகிறது நமக்கு.