வேங்கடம் முதல் குமரி வரை 3/016-033

16. சீரார் பெருந்துறையான்

படிக்கும் திருப்புகழ் போற்றுவன்,

கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல்

என்பாய் பெரும் பாம்பில் நின்று

நடிக்கும் பிரான் மருகா, கொடுஞ்

சூரன் நடுங்க வெற்பை

இடிக்கும் கலாபத் தனிமயில்

ஏறும் இராவுத்தனே.

என்று அருணகிரியார் மயில் ஏறும் மாமுருகனைக் கந்தர் அலங்காரத்திலே பாடுகிறார், அந்தப் பாட்டைப் பற்றி இரண்டு முருக பக்தர்களிடையே ஒரு விவாதம். 'ஏன் ராவுத்தன் என்று பாடியிருக்கிறார்? என்றைக்கு இந்த முருகன் முஸ்லிம் ஆக ‘கன்வெர்ட்' ஆனார்? என்பது ஒருவர் கேள்வி. மற்றவரோ, 'அப்படியெல்லாம் முருகனை முஸ்லீம் ஆக்கிவிடவில்லை அருணகிரியார். சர்வசமய சமரச பாவத்தை வளர்க்கும் தமிழ் மக்கள் முருகனையும் ராவுத்தன் என்று அழைத்துத் தம் சமரச மனோபாவத்தை வெளியிட்டிருக்கிறார் அவ்வளவுதான்' என்று வாதிடுகிறார். இருவரும் இந்த விவாதத்தைத் தீர்க்க என்னிடம் வந்தார்கள் ஒருநாள், அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்ட பின் நான் கேட்டேன் அவர்களிடம்; 'ராவுத்தன் மகனை ராவுத்தன் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று?' இதைக்கேட்டு இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். 'என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?' என்று என்னிடமே முறைத்துக் கொண்டார்கள்,

அவர்களிடம் நான் சொன்னேன் ; 'உங்களுக்குத் தெரியும் யானையை ஓட்டுபவன் மாவுத்தன் என்று. அதுபோலவே குதிரையை ஓட்டுபவனை ராவுத்தன் என்ற அழைத்திருக்கிறார்கள் தமிழர்கள். முதல் முதல் தமிழகத்துக்கு அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் குதிரைகளை ஓட்டிக் கொண்டு வந்தார்கள். குதிரைகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்களை ராவுத்தர் என்று அழைத்த தமிழர்கள் பின்னர் எல்லா முஸ்லிம்களையுமே ராவுத்தர் என்று அழைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் அறிந்த கதை. நமது சிவபெருமான் அன்று திருப்பெருந்துறையிலிருந்து மதுரைக்குக் குதிரை ஓட்டி வந்தார் என்பது. அதுவும் நல்ல கச்சவட முறையில் நரிகளையெல்லாம் பரிகளாக்கி, அந்தப் பரிகளையும் பாண்டியன் மந்திரியாகக் குதிரை வாங்க வந்த மாணிக்கவாசகருக்காக மதுரைக்கு ஓட்டி வந்திருக்கிறார்.

குதிரையை ஓட்டி வந்த ராவுத்தர் சிவபெருமான், அந்த ராவுத்தர் மகன் முருகன். ராவுத்தர் மகன் ராவுத்தனாக இருப்பதில் வியப்பில்லைதானே!' என்று விளக்கம் கூறினேன். ஒத்துக்கொண்டார்கள், அந்தச் சைவ பெருமக்கள், முருக பக்தர்கள். எங்கே, எப்பொழுது, எதற்காக இந்தச் சிவன் ராவுத்தராக மாறினார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் திருப்பெருந்துறை செல்ல வேணும். அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.

திருப்பெருந்துறை தஞ்சை மாவட்டத்தில் அறந்தாங்கி தாலுக்காவில் தென்கிழக்குக் கோடியில் இருக்கிறது. அங்கு செல்ல விரும்புகிறவர்கள் திருப்பெருந்துறைக்குச் செல்லவேண்டுமென்று சொன்னால் பஸ்காரர்களுக்கோ, வண்டிக்காரர்களுக்கோ தெரியாது. அந்தத் தலத்தின் பெயர் இன்று ஆவுடையார் கோயில் என்று தான் வழங்குகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேணும். இந்த ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறை செல்ல, திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையில் ரயில் ஏறவேணும், அறந்தாங்கி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ஒன்பது மைல்போக வேணும். கார் வசதியுள்ளவர்கள் காரைக்குடியிலிருந்தும் போகலாம். எப்படிப் போனாலும் அறந்தாங்கியைக் கடந்தே செல்ல வேணும். ஊர் நிரம்பச் சின்ன ஊரும் அல்ல; பெரிய ஊரும் அல்ல; ஊரின் பெருமை எல்லாம் அங்குள்ள கோயிலை வைத்துத்தான்.

இந்தத்தலத்துக்கு ஆவுடையார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா? மற்ற எல்லாச் சிவன் கோயில்களிலும் இல்லாத விசேஷம் ஒன்று இங்கு உண்டு. மற்றக் கோயில்களில் எல்லாம் கருவறையில் லிங்கத் திருவுரு இருக்கும். அம்பிகை கோயிலுள் அம்பிகை நின்று கொண்டிருப்பாள். இந்த கோயிலில் மட்டும் ஆவுடையார் என்னும் பீடம் இருக்கும், லிங்கத் திரு உரு இருக்காது. அம்பிகை சந்நிதியிலும் அப்படியே. இறைவனுக்கும் இறைவிக்கும் உருவம் என்று ஒன்று இல்லை. கோயில்களில் சமைத்து வைத்திருக்கும் உருவம் எல்லாம் கலைஞன் கற்பனையில் உருவாக்கி நிறுத்தியவையே என்பதை அறிவோம்.

அந்த உண்மையை அழுத்தமாக விளக்குகிறது இந்தக் கோயில். இறைவன் திருப்பெயர், ஆத்மநாதர்; இறைவி பெயர் யோகாம்பிகை. இருவரும் அந்தர்யாமியாகத்தான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இருவருக்கும் இருக்கும் பீடம் இருக்கிறது. அதற்கே அபிஷேக ஆராதனைகள் எல்லாம். அப்படிப் பீடமாகிய ஆவுடையார்க்கே முக்கியத்துவம் கொடுத்து, பூசை நடப்பதினால் தான் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. இப்படி இறைவனும் இறைவியும் அரூபமாக இருப்பதனால்தானோ என்னவோ இங்கு நந்தி கிடையாது, கொடிமரம் கிடையாது, சண்டீசரும் இல்லை.

இந்த கோயிலில் பிரதான்யம் எல்லாம் சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மணிவாசகருக்கே. ஆதலால் அவர் சரிதத்தைத் தெரிந்துகொண்டே கோயிலுக்குள் செல்லலாம். மதுரையை அடுத்த வாதவூரிலே மாணிக்க வாசகர் பிறக்கிறார். பல கலைகளையும் இளவயதிலேயே கற்கிறார். இவருடைய அறிவுடைமையைக் கேட்டு, அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனக்கு அமைச்சராக ஆக்கிக்கொள்கிறான். இவரிடம் நாற்பத்தொன்பது கோடி பொன் கொடுத்து, கீழ்க் கடற்கரைக்குச் சென்று அங்கு அராபியர் கொண்டுவரும் குதிரைகளை வாங்கி வரச் சொல்கிறான். அமைச்சரான வாதவூரரும் திருப்பெருந்துறை வந்து சேருகிறார்.

அங்கு குருந்த மரத்தடியில் ஒரு முனிவர் உட்கார்ந்து தம் சீடர் சிலருக்குச் சிவஞானபோதம் உபதேசித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கிறார் வாதவூரர். அந்தக் குருவினிடம் ஒரு பக்தி உண்டாகிறது. தம்மை மறக்கிறார். பின்னர் தம்மை இப்படித் தடுத்து ஆட்கொள்ள எழுந்த குருமூர்த்தி இறைவனே என்பதை உணர்கிறார். கொண்டு வந்த பணத்தையெல்லாம் அந்த இறைவனுக்குக் கோயில் கட்டுவதிலேயே செலவு செய்கிறார். விஷயம் எட்டுகிறது பாண்டியனுக்கு. அரசன் அவரை மதுரைக்கு அழைக்கிறான். குதிரைகள் என்ன ஆயின என்று கேட்கிறான். இறைவன் அருளியபடி, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று கூறுகிறார். வாதவூரர் சொன்னபடியே இறைவனும், திருப்பெருந்துறைக் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கி அவைகளை ஓட்டிக்கொண்டு மதுரைக்கு வருகிறான் ராவுத்தனாக. பரிகளை எல்லாம் லாயத்தில் கட்டி வைக்கிறார்கள். ஆனால் இரவுக்கிரவே பரிகள் பழையபடி நரிகளாகி மற்றக் குதிரைகளையும் கடித்துக்குதறிவிட்டு ஓடிவிடுகின்றன.

மன்னன் இது அறிந்து வாதவூரரைச் சிறையில் அடைக்கிறான்; துன்புறுத்துகிறான், திரும்பவும் இறைவன் மண் சுமக்கும் கூலியாளாக வந்து மன்னனிடம் அடிபடுகிறான். தனது திருக்கோலத்தையும் காட்டுகிறான். வாதவூரரும் சிறை நீங்கி இறைவன் புகழை மணி மணியான பாடல்களில் பாடி மகிழ்கிறார். தல யாத்திரையையே துவக்குகிறார். இந்த மணிவாசகர் பாடியதே திருவாசகம். அந்தத் திருவாசகம் எழுவதற்குக் காரணமாக இருந்த தலம் தான் இந்தத் திருப்பெருந்துறை.

நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞாலமெல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரையெலாம்
பிச்சதேற்றும் பெருந்துறையாய்!

என்பதுதானே மணிவாசகரது பாடல், இந்த மணிவாசகரையும் அவருக்காகக் குதிரை விற்க வந்த இறைவனையும் காணவே நாம் இந்தத் தொலை தூரத்தில் உள்ள திருப்பெருந்துறைக்கு வந்திருக்கிறோம்.

பெருந்துறைக் கோயில்வாயில்
கோயில் தெற்கே பார்த்த கோயில். கோயிலுக்கு முன் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதை நெல்லியடி தேவதீர்த்தம் என்கிறார்கள். குளம் வெட்டிய காலத்தில் அதன் கரையில் நெல்லி மரங்கள் இருந்திருக்க வேண்டும். இந்த தேவ தீர்த்தத்தின் கரையிலே வல்லப கணபதி கிழக்கு நோக்கியிருக்கிறார். இவர் ஐந்து கரத்தனாக இல்லை பதினோரு கரத்தனாக இருக்கும் இவரை வணங்கிய பின் கோயிலின் பெரிய மண்டபத்துக்கு வந்து சேரலாம். இதனையே கோயில் நிர்வாகிகள் ஆயிரக்கால் மண்டபம் என்கின்றனர். இந்த மண்டபத்தின் முகப்பில் ஏழு தூண்களிலும் ஏழு சிற்ப வடிவங்கள். உக்கிர நரசிம்மர், ஊர்த்துவதாண்டவர், ஆலங்காட்டுக் காளி, பிக்ஷாடனர் முதலியவர்கள். இன்னும் இந்த மண்டபத்தின் உள்ளே வில்லேந்திய வேலன், சங்கரநாராயணர், ரிஷபாந்திகர் எல்லாம். மண்டபம் நாயக்க மன்னர் காலத்தில் உருவாகியிருக்க வேண்டும். அளவிலும் காத்திரத்திலும் கம்பீரத்திலும் சிறந்தவையாகச் சிற்பவடிவங்கள் இருக்கின்றன.

இந்த மண்டபத்தைக் கடந்து உள் நுழைந்தால் இரண்டு வீரபத்திரர் உருவங்களையும் பார்க்கலாம். இத்தலத்தில் உள்ள சிவயோக நாயகி, தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம். அவளது தவத்தைக் காப்பதற்கு இறைவன் வீரபத்திரனை உருவாக்கினார் என்பது புராணக்கதை. இந்த வீரபத்திரன் அம்பிகை கோயிலிலும் இருக்கிறான். என்றாலும் சந்நிதி வாயிலிலுமே ஒருவருக்கு இருவராக இருந்து காவல் புரிகின்றனர். இந்த வீரபத்திரர்களை வணங்கியபின் நாம் வந்து சேருவது மாணிக்கவாசகரது சந்நிதிக்கு. இச் சந்நிதியைக் கடந்துதான் மற்ற இடங்களுக்குச் செல்லவேணும். அப்படிச் கடந்து வெளிப்பிரகாரத்துக்கு வந்தால் அங்கு வெயில் உவந்த விநாயகர் நம்மை வரவேற்பார். அவருக்குக் கோயில் இல்லை. அவர்தான் எப்பொழுதுமே 'சன் பாத்' எடுக்கிறவர் ஆயிற்றே. எப்போதுமே வெயிலிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து நல்ல திட சரீரியாக வாழ்கிறார். இவரையே, 'நிலவு வந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிறு' என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிப் பரவியிருக்கிறார்கள். இவரையும் வணங்கி விட்டே பிரசித்தி பெற்ற தியாகராஜ மண்டபத்துக்குச் செல்ல வேணும்.

இங்குதான் மாணிக்கவாசர் இரண்டு திருக்கோலங்களில் சிலை உருவில் இருக்கிறார். ஒன்று மந்திரியின் கோலம். அந்தக் கோலத்தில்தானே அவர் இங்கு முதல் முதல் வந்திருக்கிறார். மன்னனுக்கு உரிய கிரீடம் கூட அவர் தலையை அலங்கரிக்கிறது. காதிலே குண்டலங்கள், மார்பிலே ஆரம், கைகளிலே அணிகள் எல்லாம் அணிந்து கம்பீரமாக நிற்கிறார். இதற்கு எதிர்ப்புறமோ, அவரது துறவுக்கோலம். எல்லா அணிகளையும் பணிகளையும் உதறி விட்டுக் கூப்பிய கையராய் நிற்கிறார். இந்த வடிவில்தானே இறைவன் திருவடியில் நிலைத்துநின்றிருக்கிறார் அவர்.

இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்ப உலகில் பிரசித்தமானவை. கல்லைத் தகடாக்கி அதில் பல வளைவுகள் கொடுத்துக் கூரை வேய்ந்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலே கோயில் கட்ட 'எக்ரிமெண்டு' எழுதிக் கொடுக்கும் சிற்பிகள், 'தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழிப் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை' ஆகியவற்றைத் தவிர மற்ற வேலைப்பாடுகளுக்குக்குறையாமல் செய்து தருகிறோம்' என்று எழுதிக் கொடுப்பார்களாம். கொடுங்கை வேலை அத்தனை 'அற்புதமானது, அழகானது. இந்த மண்டபத்துக்கு வட மேற்கிலேதான் தல விருட்சமாகிய குருந்த மரம் நிற்கிறது. இந்த மரத்தடியிலேதான் இறைவன் எழுந்தருளி வாதவூரரை ஆட்கொண்டிருக்கிறார் இதனை அந்த மணிவாசகரே சொல்கிறாரே.

நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்த மேவியசீர்

ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே!

என்பதுதானே அவரது திருவாசகம். இரண்டாவது பிரகாரத்தில்தான் பஞ்சாட்சர மண்டபம் என்னும் கனகசபை இருக்கிறது. இந்த மண்டபத்தின் தூண்கள் ஒன்றில்தான் குதிரைச்சாமி இருக்கிறார். ராவுத்தருக்கு உரிய உடையும் அணிந்து நாலுகால் பாய்ச்சலில் செல்லும் குதிரைமேல் ஆரோகணித்து இருக்கிறார். இக்கோயிலில் பல குதிரை வீரர்களது சிலைகள் இருந்தாலும் இந்தக் குதிரைச்சாமிக்கு மட்டுமே பூசை நடக்கிறது. இந்த மண்டபத்தை மாணிக்க வாசகரே கட்டினார் என்பது வரலாறு. மண்டபத்தின் அமைப்பைப் பார்த்தால் மிகவும் பிந்திய காலத்தில்தான் கட்டியிருக்க வேண்டும், என்றாலும் இந்தக் கோயில் முழுவதையுமே மணிவாசகர் கட்டினார் என்று சொல்வதிலே பின்னால் கோயிலை விரிவாக்கியவர்கள் பெருமைப் பட்டிருக்கிறார்கள். இன்று கோயில் திருவாடுதுறை ஆதீனத்தார் ஆளுகையில் இருக்கிறது.

இத்தனையும் பார்த்த பின்னரே தெற்கு நோக்கிய சுவாமி சந்நிதியிலும் கிழக்கு நோக்கிய அம்பிகை சந்நிதியிலும் சென்று வணங்கவேண்டும். மாணிக்கவாசகர் சந்நிதிக்கு எதிரிலேதான் அம்பிகை சந்நிதியிருக்கிறது. அம்மன் சந்நிதியைச் சுற்றிச் சலாகை அடித்த சுவர் இருப்பதால் அந்தச் சுவர்த் துவாரங்களின் வழியாகத் தான் கர்பூர ஹாரத்தியைக் காணவேண்டும். அம்பிகைக்கும் மாணிக்கவாசகருக்கும் ஏககாலத்தில் தீப ஆராதனை நடக்கும். அப்போது மணிவாசகர் பாடிய திருவாசகப் பாடல்கள் எல்லாம் நமது ஞாபகத்து வரும்.

நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனை
சிறுநெறிகள் சேராமே
திரு அருளே சேரும் வண்ணம்

குறி ஒன்றும் இல்லாத
கூத்தன் தன்கூத்தை எனக்கு
அறியும் வண்ணம் அருளியவாறு
ஆர்பெறுவார் அச்சோவே

என்று பாடினார் மாணிக்கவாசகர். நம்மையும் இந்தக் குறி ஒன்றும் இல்லாத கூத்தனது கோயிலுக்கு அழைத்து வந்து, அங்கு இருக்கும் அற்புதங்களையெல்லாம் காண வைத்த இறைவன் திருவருளை வியந்து கொண்டே நாமும் வீடு திரும்பலாம். இனி,

இன்பம் பெருக்கி
இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர் வறுத்து
சோதியாய் - அன்பு அமைத்து
சீரார் பெருந்துறையான்
தன்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான்
உவந்து

என்று திருவாசகப் பாடலே நமது நித்யப் பிரார்த்தனை யாகவும் இருக்கலாம் தானே.

காளி