வேங்கடம் முதல் குமரி வரை 3/018-033
18. வடுவூர் கோதண்டராமன்
சரயு நதிக் கரையிலே பிறந்து கங்கை நதி தீரத்திலே வளர்ந்தவன் ராமன். ஆனால் இன்று இந்தச் சரயு நதிக்கரையிலோ அல்லது கங்கை நதி தீரத்திலோ ராமனுக்குக் கோயில்கள் அதிகம் இல்லை. இந்திய நாட்டின் தலநகரம் டில்லியிலேயே பெரிய கோயில் லக்ஷ்மி நாராயணனுக்குத் தான். நான் அங்கு சென்றிருந்தபோது, 'ராமனுக்குக் கோயில்கள் உண்டா ?' என்று தேடிந்திரிந்தேன். 'ஓ! உண்டே அந்த ஜந்தர்மந்தர் பக்கம் இறங்கி அங்கிருந்து கிழக்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் ராமன் கோயிலுக்குச் செல்லலாமே' என்று விவரம் அறிந்த நண்பர் ஒருவர் கூறினார். அப்படியே நடந்தேன்.
ஆனால் அங்கு சென்று கண்டது ராமன் கோயில் இல்லை. அங்கே அனுமனுக்கு என்று ஒரு பெரிய கோயிலைக் கட்டி அதில் பெரியதோர் அனுமாரையும் பிரதிஷ்டை செய்து விட்டு, ஓர் ஒதுக்குப் புறமான மாடத்தில் ராமனுக்கும் சீதைக்கும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்தக் கங்கா யமுனை நதி தீரத்தைக் கடந்து, கோதாவரிக் கரைக்கு வந்தால் அங்கு பத்ராஜலத்தில் ஒரு கோயில், ஆம்! அந்தப் பழைய ராம பக்தன் ராம்தாஸ் கட்டிய கோவில் ஒன்றுதான், மேற்கே மராத்திய நாட்டையோ பாண்டுரங்க விட்டல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் வேங்கடத்தைக் கடந்து தெற்கு நோக்கித் தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டாலோ, அதிலும் காவிரிபாயும் சோழநாட்டுக்கு வந்துவிட்டாலோ இந்த ராமனுக்குத் தான் எத்தனை எத்தனை கோயில்கள்? கும்பகோணத்தில் ஒரு கோயில் என்றால், நீடாமங்கலத்தில் ஒரு கோயில், முடி கொண்டானில் ஒரு கோயில், தில்லை விளாகத்தில் ஒரு கோயில், அடம்பரில் ஒரு கோயில், வடுவூரில் ஒரு கோயில் என்று எண்ணற்ற கோயில்கள் இந்த ராமனுக்கு. இவை தவிரப் பெருமாளுக்கு என்று எடுத்த திருப்பதிகள் அத்தனையிலும் ராமனுக்கு என்று ஒரு தனிச் சந்நிதி. இவ்வளவுதானா? அந்த ராமனுக்கு வேங்கடராமன், கோசலராமன், ரகுராமன், சுந்தர ராமன், கல்யாண ராமன், சந்தானராமன், கோதண்ட ராமன் என்னும் எண்ணற்ற திருப்பெயர்கள், இப்படிக் கங்கைக் கரையில் பிறந்து வளர்ந்தவனைக் காவிரிக் கரையில் நிலைத்து நிற்கச் செய்தவன் கலிச்சக்கரவர்த்தி கம்பனே என்றால் மிகையில்லை. கம்பனோ ராமனை அந்தமில் அழகனாகக் காண்கின்றான்; விற்பெருந்தடந்தோள் வீரனாக மதிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலாக அவனது அவதார ரகசியத்தையும் உணர்ந்து, அவனே மூவர்க்கும் மேலான பரம்பொருள் என்று கொண்டாடுகிறான்.
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர்
மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த
காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும், மலரும், வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்
மூவுலகும் ஈர் அடியால்
முறை நிரம்பா வகை மூடிய
தாவிய சேவடி சேப்ப
தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடிய -
தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத
செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத
செவி என்ன செவியே?
என்றுதானே ஆய்ச்சியர் குரவையில் பாடுகிறார் அவர், ஆதலால் அறம்தலை நிறுத்த வந்த தலைமகனான ராமன் தமிழ் நாட்டுக்குள் எவ்வளவோ காலத்துக்கு முன்பே வந்திருக்கிறான். என்றாலும் அவனை வீடும் குடியுமாக இங்கே இருத்தி அவனுக்குக்கோயில்கள் எழுப்பித்து அங்கெல்லாம் அவனை மக்கள் பணிந்து வணங்கி எழுவதற்கெல்லாம் வகை செய்தவன் கம்பன். சோழ நாட்டில் ராமனுக்குக் கோயில்கள் எழுந்ததெல்லாம் கம்பன் காலத்துக்குப் பின்தான். இப்படி எழுந்த கோயில்களில் ஒன்றே வடுவூர் கோதண்டராமன் கோயில். அந்த வடுவூருக்கே செல்கிறோம், நாம் இன்று.
வடுவூர் தஞ்சை ஜில்லாவிலே. தஞ்சைக்குத் தென் கிழக்கே பதினான்கு மைல் தூரத்திலுள்ள சிறிய ஊர். முன்னர் சென்றிருந்த திவ்ய தேசமான ராஜமன்னார் குடிக்கு மேற்கே ஒன்பது மைலில் இருக்கிறது. தஞ்சையில் இறங்கித் தஞ்சைமன்னார்குடி (வடுவூர் வழி) பஸ்ஸில் ஏறி வடுவூர் செல்லலாம். இல்லை, கார் வைத்துக்கொண்டும் அந்தத் தலத்துக்குச் சென்று சேரலாம். இதைத் தண்டகாரண்ய க்ஷேத்திரம் என்று கூறுகிறது தல வரலாறு. நாம் அறிந்த மட்டில் தண்டகாரண்யம் என்பது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசம்தான். 'காவிரி பாயும் சோழவளநாட்டிலா ஒரு தண்டகாரண்யம்?' என்று அதிசயிப்போம். நமக்குத்தான் தெரியுமே, 'ராமன் இருக்குமிடம் அயோத்தி' என்று. அதுபோல் ராமன் சீதா லக்ஷ்மண சமேதனாக இருக்கும் இடம் பஞ்சவடி. அந்தப் பஞ்சவடியை உள்ளடக்கியது தண்டகாரண்யம், ஆதலால் ராமன் சீதா லக்ஷ்மணருடன் தங்கியிருக்கும் இந்த இடத்தையும் தண்டகாரண்யம் என்று சொல்வதில் தவறில்லையல்லவா? ஆதலால் அந்தத் தண்டகாரண்ய க்ஷேத்திரத்துக்கே செல்லலாம்.
இந்த வட்டாரத்தை அங்குள்ள பழங் குடியினரான கள்ளர்குல மக்கள் 'தன்னரசு நாடு' என்கிறார்கள். அவர்களெல்லாம் தத்தமக்குத் தோன்றியபடி அன்று தனி அரசு செய்த நாடாக இருக்கும் போலும். ஆனால் இந்த நாட்டில் இந்த ராமன் வந்து கோயில் கொண்டபின், நல்ல குடியரசு நாடாகவே மாறியிருக்கிறது. ஊரில் ஒரு பஞ்சாய்த்து இருக்கிறது. கோயிலுக்கு ஓர் அறம் காவலர் குழு இருக்கிறது. தன்னரசு எல்லாம் மலை ஏறி நல்ல குடியரசாக ராமராஜ்யமாக மாறியிருக்கிறது.
இந்திர நீலம் ஒத்து
இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும்
தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத்
தோளுமே அல,
முந்தி என் உயிரை
அம் முறுவல் உண்டதே
என்றுதானே அவள் சொல்லுகிறாள். நாமும் அவளைப் போலவே அவனது சந்திரவதனத்தைக் காணலாம். புன்முறுவலை அனுபவிக்கலாம். இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியையோ, தாழ்ந்த கைகளையோ, சுந்தர மணிவரைத் தோள்களையோ காண்பது இயலாது. காரணம் அத்தனையையும் நீண்டுயர்ந்த கிரீடமும், தங்கக் கவசமும் அணிவித்து மறைத்து வைத்திருப்பார்கள்.
சாதாரணமாகக் கவசம் களைதல் என்பது இங்கு இல்லை. வருஷத்துக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் அபிஷேகம் நடத்துகிறார்கள். அன்று கருவறையில் உள்ள இந்தச் செப்புச் சிலை ராமனை, லக்ஷ்மணனை. சீதையை வெளியே கொணர்கிறார்கள்; திருமஞ்சனம் ஆட்டுகிறார்கள். அதன் பின் சந்தனக் காப்புச் செய்கிறார்கள். அந்தச் சந்தனக் காப்போடு காப்பாகக் கவசத்தையுமே போட்டு 'பாக்' பண்ணி வைத்து விடுகிறார்கள். மறுபடியும் கவசம் களைவது அடுத்த அபிஷேகக் காலத்தில்தான்.
இந்த ராமன் இங்கு எழுந்தருளியிருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. இத்தலத்தில் முதன் முதல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தவன். ருக்மிணி சத்யபாமையுடன் கூடிய ராஜகோபாலனே. திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ள தலைஞாயிறு என்ற இடத்திலேயே ஒரு சிறு கோயிலில் ராமர், லக்ஷ்மணர், சீதை வடிவங்கள் இருந்திருக்கின்றன. அப்போது தஞ்சையிலிருந்து அரசாண்ட நாயக்க மன்னர் இந்த ராமனை வடுவூருக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். முதலில் ராமனையும் சீதையையும் எடுத்து இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குள் தலைஞாயிறு மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். லக்ஷ்மணனை எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆதலால் அங்கிருந்து வந்த ராமன் சீதை வடிவங்களோடு லக்ஷ்மணனையும் புதிதாக வடித்துச் சேர்த்திருக்கிறார்கள் இங்கே.
ராஜகோபாலன் அவதாரத்துக்கு முந்திய அவதாரம் அல்லவா ராமாவதாரம்? ஆதலால் முன்னர் அங்கிருந்த ராஜகோபாலன், ராமருக்குக் கருவறையிலேயே இடம் கொடுத்துவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறான். இன்று ராஜகோபாலன் தம்பதிகள், நம்மாழ்வார், உடையவர், தேசிகர், மணவாள மாமுனிகள் எல்லாம் ஓர் இருட்டறைக்குள்ளே ஒதுங்கியிருக்கிறார்கள். அர்ச்சகரைக் கேட்டு அவர்களையுமே தரிசிக்கலாம். தலை ஞாயிற்றிலுள்ள சீதையும் ராமனும் இங்கு வந்து விட்டார்களே, அங்குள்ள இலக்குவன் என்ன ஆனான் என்று கேட்டேன், இந்த வடுவூர் பட்டாச்சாரியரிடம். “ அதுவா? அங்குள்ள லஷ்மணனுக்கு 'பிரமோஷன்' ஆகிவிட்டது. அவனையே ராமனாக்கி வேறு லட்சுமணன், சிதை முதலியவர்களைப் புதிதாகச் செய்து அவர்களுக்கு ஒரு சிறு கோயிலும் கட்டிவைத்திருக்கிறார்கள்” என்றார்.
இதன் உண்மையைத் தலைஞாயிறு செல்லும் காலத்தில் தான் விசாரித்து அறிய வேணும். இப்படித் தலைஞாயிற்றிலிருந்து எழுந்தருளிய ராமனே இன்று வடுவூர் கோதண்டராமன் என்ற பிரசித்தியோடு விளங்குகிறான். இத்தலத்தில் ராமநவமி உற்சவம்தான் பெரிய உற்சவம். இன்னும் இந்த ஊரில் கைலாசநாதர் மேற்கே பார்க்க இருக்கிறார். பிடாரி வடக்கே பார்க்க இருக்கிறாள். இப்படி மூன்று திசைகளிலிருந்தும் இத்தன்னரசு நாட்டு மக்களைப் பரிபாலிக்கிறார்கள் இவர்கள் மூவரும். அவகாசம் உடையவர்கள் எல்லாம் கைலாசநாதர், அழகிய சுந்தரி முதலியவர்களையும் தரிசித்துவிட்டுத் திரும்பலாம்.
திருத்துறைப் பூண்டி - பட்டுக்கோட்டை பாதையில் ரோட்டை விட்டுக் கொஞ்சம் விலகிக் கிழக்கு நோக்கிச் சென்றால் தில்லைவிளாகம் ராமனைக் காணலாம். அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடையில் சர்வாலங்கார பூஷிதனாக லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் அனுமனுடனும் அங்கு நின்று கொண்டிருப்பான். இவர்களை அடுத்த தனிக்கோயிலில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகரும் இருப்பார்கள். எல்லோருமே ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் பூமிக்கடியில் இருந்து வெளிவந்தவர்கள்தானாம். இதற்கு எதிர்த் திசையில் மாயூரம் - திருவாரூர் பாதையில் பூந்தோட்டத்தை அடுத்து முடிகொண்டான் என்று ஒரு சிற்றூர். அங்குள்ள தனிக்கோயிலிலும் ராமன், சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கிறான். இவர்களையெல்லாம் விட அழகனாக நிற்கும் ராமனைக் காண அடம்பர் என்ற ஊருக்கே செல்லவேணும். தஞ்சை ஜில்லாவிலே, திருவாரூருக்கு வடக்கேயுள்ள நன்னிலம் போய், அங்கிருந்து மேற்கு நோக்கி நான்கு மைல்கள் சென்றால் அடம்பர் என்ற ஊருக்கு வருவோம். அந்த ஊரைப் பற்றி ஒரு பாட்டு :
ஆயிரம் வேலி அதம்பார்.
ஆனை கட்டும் தாள்
வானை முட்டும் போர் -- அதில்
ஆறு கொண்டது பாதி
தூறு கொண்டது பாதி - அதனால்
கொட்டாங்கச்சியிலே நெல்லு
கொடுங்கையிலே வைக்கோல்,
இதற்கு மேலும் அந்த ஊரின் பிரபாவத்தைச் சொல்ல வேணுமா? இந்தச் சிறிய ஊரிலே ஒரு கோயில். கள்ளிக் கோட்டை ஓடு போட்டு முன்கூரை வேய்ந்திருக்கும். அங்கு இருப்பவர் கல்யாண ரங்கநாதர் என்பார்கள். அங்குள்ள ராமனோ மிகமிக அழகு வாய்ந்தவன். அவனைப் பார்க்கவே ஒரு நடை போகலாம் அந்த ஊருக்கு.