வேங்கடம் முதல் குமரி வரை 3/019-033

19. தஞ்சைப்பெரு உடையார்

ஆயிரம் வருஷங்களுக்கு முன் தஞ்சையிலிருந்து அரசாண்ட சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ராஜராஜன் ஒரு நாள் மாலை தஞ்சை நகரின் வெளிப்புறத்திலே உலாவப் புறப்படுகிறான். அவனை வளர்ப்பதில், அவன் ராஜ்யபாரம் செய்வதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டுகின்ற அவன் தமக்கை குந்தவையும் உடன் வருகிறாள். அவன் பட்டம் ஏற்றது கி.பி. 986-ல். பட்டம் ஏற்ற உடனேயே திக்விஜயம் செய்து, வெற்றிக்கு மேல் வெற்றி கண்டு அப்போதுதான் தலைநகர் திரும்பியிருக்கிறான். சேரர், பாண்டியர், பல்லவர், சளுக்கர் எல்லோருமே இவனுக்கு அடிபணிந்திருக்கிறார்கள். அவர்கள் நாடுகள் எல்லாமே சோழ மண்டலத்தின் கீழ் அடங்கியிருக்கின்றன.

காந்தளூரில் கலம் அறுத்து, பாண்டியன் அமர புஜங்கனை முறியடித்து, கங்கபாடியையும் அடிமை கொண்டு, நுளம்பப் பாடியைக் கைப்பற்றி, குடமலை கொல்லம் கலிங்கம் முதலிய நாடுகளின் பேரிலும் படையோடு சென்று வெற்றி கண்டதோடு நிற்கவில்லை அவன். கடல் கடந்து சென்றிருக்கிறான்; ஈழ நாட்டை மும்முடிச் சோழ மண்டலமாக்கியிருக்கிறான்; அலை கடல் நடுவில் பலகலம் செலுத்தி முந்நீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக் கொண்டு ஜயங்கொண்ட சோழனாகவே திரும்பியிருக்கிறான். அவனது போர் அனுபவங்களையும் அவனது வெற்றிப் பிரதாபங்களையும் அவன் வாயிலாகவே கேட்டு மகிழ்கிறாள் அவனது தமக்கையார். இப்படி உரையாடிக் கொண்டே இருவரும் வந்து சேருகிறார்கள் ஒரு சோலைக்கு. அங்குள்ள குளத்தையும் அக்குளத்தின் நடுவிலே லிங்கத் திருவுருவிலே இறைவன் கோயில் கொண்டிருப்பதையும் காண்கிறார்கள். .

‘விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய் எண்ணிறந்து எல்லை இல்லாதானாகப் பரந்து நிற்கும் இறைவனுக்கா இப்பெரிய சாம்ராஜ்யத்தில் இத்தனை சிறிய கோயில்?' என்று நினைக்கிறான் ராஜராஜன். அதே எண்ணம் எழுகிறது தமக்கை குந்தவைக்கும். கேட்கிறாள் அவள் தம்பியிடம் : ‘தம்பி! இந்தத் தஞ்சைத் தலைநகரிலே உனது சிறந்த ஆட்சியிலே இந்தத் தளிக்குளத்து இறைவனுக்கு இத்தனை சிறிய கோயில் இருப்பது உனது புகழுக்கு ஏற்றதாகுமா?' என்று. ஆம். அக்கா! நானும் அப்படியேதான் நினைத்தேன் இப்போது. இனிமேல் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சிந்தித்துக்கொண்டே வந்தேன். சரி. இந்தத் தளிக்குளத்து இறைவனையே பெருஉடையாராக அமைத்து, அந்தப் பெரு உடையாருக்கு ஏற்ற ஒரு பெரிய கோயிலையும் : கட்டிவிட வேண்டியதுதான், என்று தீர்மானித்து விட்டேன்' என்கிறான்.

இந்தச் சிந்தனையில் பிறக்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கிட்டத்தட்ட ஏழு வருஷகாலம் கோயில் கட்டும் திருப்பணி நடக்கிறது. ராஜராஜனது முழுக் கவனமும் கோயில் கட்டுவதிலேயே இருக்கிறது. தன் உடைமை யெல்லாம் கொடுக்கிறான் ராஜராஜன், இந்தக் கோயில் கட்ட. அவனது மனைவியர் எல்லாம் வாரி வழங்குகிறார்கள். அவன் தமக்கை குந்தவையுமே பொன்னும் பொருளும் கொடுத்து உதவுகிறாள்; 'நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' சேர்ந்து இக்கோயில் உருவாகுகிறது என்று பெருமையோடு பொறிக்கிறான் இராஜராஜன். இந்த ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலையே மக்கள் ராஜராஜேச்சுரம் என்று அருமையாக அழைக்கிறார்கள். அங்கு பெரு உடையார் என்னும் பிரஹதீசுவரர் கோவில் கொள்கிறார். இந்த தஞ்சைப் பெருவுடையாரின் பெரிய கோயிலுக்கே செல்கிறோம், நாம் இன்று.

தஞ்சாவூர் எங்கிருக்கிறது? அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லித்தான் வாசக நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் இந்த ஊருக்கு தஞ்சாவூர் என்று ஏன் பெயர் வந்தது?. யாராவது இங்கு வந்து தஞ்சம் புகுந்தார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆதியில் குபேரன் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். மேலும் இந்தத் தலத்தில்தான் பராசர முனிவர் தவம் செய்திருக்கிறார். முனிவர் தவம் செய்கிறார் என்றால் அதைக் கெடுக்கத்தான் அசுரர்கள் புறப்பட்டு விடுவார்களே! தஞ்சன், தாரகன், தாண்டகன் என்னும் அசுரர்கள் பராசரரைத் துன்புறுத்துகிறார்கள்.

அவரோ விஷ்ணுவினிடமும், துர்க்கையிடமும் முறையிடுகிறார். இருவரும் அசுரர்களுடன் போர் ஏற்கிறார் கள்: விஷ்ணு தஞ்சன், தாண்டகனைச் சம்ஹரிக்கிறார். துர்க்கை தாரகனை வெற்றி காண்கிறாள். இறக்கும் தறுவாயில் தஞ்சன் விஷ்ணுவினிடம் அன்று முதல் அந்தத் தலம் தன் பெயரால் அழைக்கப்படவேண்டும் என்று வரம்கேட்கிறான். அதனாலேயே தஞ்சன் ஊர் தஞ்சாவூர் என்று பெயர் பெறலாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது (தஞ்சனைப் போலவே தாண்டகனும் தாரகனும் வேண்டிக் கொண்டிருந்தால் தஞ்சையை அடுத்தே ஒரு தாண்டகபுரி, தாரக நகரும் தோன்றியிருத்தல் கூடும். பைத்தியக்காரர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்!). வெற்றி கொண்ட விஷ்ணுவும், துர்க்கையும் ஊருக்கு வட பக்கத்தில் கோயில்களில் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சையில் வட எல்லையிலே உள்ள திருவுடைக் கோடி அம்மனோ துர்க்கையின் அம்சம். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வெண்ணாற்றங்கரையிலே நீலமேகப் பெருமாள், மணிகுன்னப் பெருமாள், சிங்கப் பெருமாள் எல்லாம் இடம்பிடித்து அமர்ந்து கொள்கின்றனர்.

வம்புலாம் சோலை மாமதிள்
தஞ்சை மாமணிக்
கோயிலே வணங்கி

நம்பிகாள் உய்ய நான்
கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

என்று இந்த மாமணிக் கோயிலில் உள்ள மணிவண்ணனை வாயாரப் பாடி மகிழ்ந்திருக்கிறாரே திருமங்கை மன்னன். திருவையாறு செல்லும் வழியில் இவரைத் தரிசித்து வணங்கிக் கொள்ளலாம்.

இப்படி எல்லாம் பிரசித்தி அடைந்தவர்கள் விஷ்ணுவும் துர்க்கையும் என்றாலும் பிராபல்யம் எல்லாம் பெரு உடையார்க்குத்தான். அவருக்குத்தானே பெரிய கோயில். கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரமும், வைணவர் களுக்கு ஸ்ரீரங்கமுமே ஆகும். ஆனால் தமிழ் நாட்டில் பெரிய கோயில் என்று மட்டும் குறிப்பிட்டால் அது தஞ்சைப் பெரிய கோயிலைத்தான் குறிக்கும். இனி இந்தக் கோயிலைக் காணப் புறப்படலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஐந்து, ஆறு பர்லாங்கு தூரத்தில் கோயில் இருக்கிறது. ஆனால் அந்தக் கோயில் விமானம் ரயிலில் வரும்போதே ஐந்தாறு மைல் தொலைவில் தெரியும். கோயிலைச் சுற்றியிருப்பது ஒரு பெரிய அகழி. தளிக்குளத்தில் இருந்த இறைவன் அல்லவா? அதனால் குளத்தைத் தூர்த்தாலும் அகழி வெட்டி வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது அரசனுக்கு. வடபக்கத்தில் அகழி தூர்ந்தே போய்க் கட்டிடங்கள் கிளம்பி விட்டன. கீழ்ப்பக்கம் தூர்ந்துகொண்டு வருகிறது. மேல்புறம் அகழியில் மீன் வளர்க்கிறார்கள். தென்பக்கத்து அகழியைத்தான் புதிதாக வெட்டிய கிராண்ட் அணைக்கட்டு கால்வாய் செல்லும் பாதையாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள் பொதுத்துறைப் பணியாளர்கள்.

ஆதலால் அகழியைக் கடப்பது என்ற பிரச்னை இன்று இல்லை. இக்கோயிலின் முதல் வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். அடையாத வாயில் அகம் அது. அதற்குக் கதவு கிடையாது. இதனையே கேரளாந்தகன் திருவாசல் என்று அழைத்திருக்கிறான் அரசன். இதனைக் கடந்தே அடுத்த ராஜராஜன் திருவாயிலுக்கு வரவேணும். அந்த வாயிலின் இருபக்கமும் உள்ள கல் சுவர்களில் சிறிய சிறிய சிற்ப வடிவங்கள் இருக்கும். அவை பலப்பல கதைகளை விரிக்கும். அப்படி விரிக்கும் கதைகளில் ஒன்று அன்று இறைவன் கிராத வேடத்தில் வந்து அர்ச்சனனுக்குப் பாசுபதம் வழங்கியது. இந்த வாயிலில் நின்று கோயில் விமானத்தை நிமிர்ந்து நோக்கினால் நமது நெஞ்சு விரியும், நமது சிந்தனை உயர்ந்து ஓங்கும். ராஜராஜன் தன் முழுக்கவனத்தையும் இவ்விமானம் கட்டுவதில் தானே செலவழித்திருக்கிறான், வட இமயத்தினில் ஓர் உத்தரமேரு இருக்கிறது என்றால் தென் தமிழ் நாட்டில் ஒரு தக்ஷிண மேருவை உருவாக்குவேன் என்று சவால் விட்டுக்கொண்டு கட்டிய விமானம் அல்லவா?

கருவறை மேல் 96 அடி சதுரமான அடித்தளத்தின் பேரில் 216 அடி உயரம் விமானம் உயர்ந்திருக்கிறது. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் இந்த விமானம் உபானம் முதல் ஸ்தூபிவரை கல்லாலேயே கட்டப்பட்டிருப்பதுதான், மலையே இல்லாத தஞ்சை ஜில்லாவிலே முழுக்கக் கல்லாலேயே கோயில், விமானம் எல்லாம் கட்டுவதென்றால் அதற்கு எவ்வளவு துணிவு இருந்திருக்கவேண்டும். இந்த விமானத்தின் உச்சியிலே ஏற்றியிருக்கிறார்கள் இருபத்து ஐந்து அடி சதுரம் உள்ள ஒரு பிரமாந்திரத் தளக்கல்லை, அதன் எடை 'எண்பது டன் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கல், அழகி என்ற கிழவி வீட்டுப் பக்கம் இருந்ததாகவும் அதையே சிற்பிகள் நாலு மைல் தூரத்துக்குச் சாரம் கட்டி விமானத்தின் பேரில் ஏற்றினார்கள் என்றும் சொல்கிறார்கள. ஆம். பெருவுடையாரே ஒத்துக் கொண்டிருக்கிறாரே, ராஜராஜன் கட்டிய கோயிலில் இருந்தாலும் கிழவி தந்த நிழலிலே தாம் ஒதுங்கியிருப்பதாக. எந்த ஊரிலிருந்து சாரம் தொடங்கிற்றோ அந்த ஊர் இன்றும் சாரப்பள்ளம் என்று வழங்குகிறதே.

தஞ்சை பெரிய கோயில்

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் பன்னிரண்டு அடி உயரம். 3083 பலம் நிறையுள்ள செம்பினால் ஆயது. இதன் மேல் 2926 கழஞ்சு பொன்பூசிய தகடு, வீரபத்ர ஆச்சாரி கொடுத்த பஞ்ச லோகக் கம்பத்தில் சோழ சிங்காசனாபதி கொடுத்த இந்தக் குடம் இருத்தப்பட்டது என்று அந்தக் குடத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த விமானத்தில் அந்தப் பிரமாந்திரத் தளக்கல்லின் மேலே மூலைக்கு இரண்டு நந்தியாக எட்டு நந்திகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நந்தியின் காத்திரம் என்ன என்று தெரியவேண்டுமானால், கோயிலுக்குத் தென்புறம் உள்ள வெளிப் பிரகாரத்தை அடுத்துள்ள இடத்தில் வைத்திருக்கும் நந்தியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இன்னும் இந்த விமானத்தில் உள்ள சிற்ப வடிவங்களை யெல்லாம் ஜாபிதா போட்டுச் சொல்லி விட முடியாது. நேரிலே சென்றுதான் பார்க்கவேணும். இனி கோயிலின் திறந்த வெளி முற்றத்தைக் கடக்கலாம். அங்குள்ள சரபேந்திர பூபாலக் குறவஞ்சி மேடையையும் பார்க்கலாம்.

அதன் பின் சில படிகள் ஏறிப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய நந்தியைப் பார்க்கலாம். 12 அடி உயரம், 20 அடி நீம், 8 அடி அகலம், 25 டன் நிறை என்று கணக்கிட்டிருக்கிறார்கள் இதனை. எனக்குள்ள ஆச்சரியமெல்லாம் இத்தனை பெரிய நந்தியைச் செய்ய ஒரே கல் எப்படிக் கிடைத்தது இவர்களுக்கு என்பதுதான். இனி ‘விறு விறு' என்று நடந்து படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லலாம். மகா மண்டபத்தின் வாயிலில் பதினெட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் நிற்பார்கள். மகா மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்து கருவறைக்கு வந்தால் இன்னும் பெரிய வியப்பு. 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையார் பேரில் 23 அடி உயரமுள்ள லிங்கத் திருவுரு கம்பீரமாக இருக்கும். அபிஷேகம், ஆடை, மாலை அணிவித்தல் எல்லாம் பக்கத்தில் அமைத்திருக்கும் படிகள் வழியாக ஏறித்தான் செய்யவேண்டும். இந்த லிங்கம் அமைக்கக் கல், நருமதை நதிக்கரையில் இருந்தே வந்திருக்கிறது. பாணத்தை ஆவுடையாரில் பொருத்தக் கருவூரார் வந்திருக்கிறார்.

பெரு உடையார், பிரஹதீசுவரர் என்று இவருக்குப் பெயர் சூட்டியது எல்லாம் பொருத்தமே என்று காண்போம். கருவறையிலேயே போக சக்தி அம்மன் செப்புச் சிலை வடிவில் இருக்கிற அழகையும் காணலாம்.

இனிக் கோயிலை விட்டு வெளியே வரலாம். வெளியே இருக்கும் பைரவர், மேல்புறம் உள்ள விநாயகர், கருவூரார், சுப்பிரமணியர் சந்நிதியில் எல்லாம் சென்று வணங்கலாம். சுப்பிரமணியர் கோயில் ராஜராஜன் கட்டியது அல்ல. பின்னால் நாயக்க மன்னர்கள் கட்டியிருக்கிறார்கள். நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த எண்ணற்ற சிற்ப வடிவங்கள் அங்கு. அதில் களத்தில் விழுந்துவிட்ட படைத்தலைவனைப் பாசறைக்கு எடுத்துச் செல்லும் யானையின் வடிவம் ஒரே சோக சித்திரம். இதைக் காணாது திரும்பி விட்டால் ஒரு பெரிய புதையலையே இழந்தவர்கள் நீங்கள் என்பேன் நான். இப்படியெல்லாம் சுற்றி விட்டே அம்மன் சந்நிதிக்கு வரவேணும். அங்கு தெற்கு நோக்கிக் கம்பீரமாகப் பத்தடி உயரத்தில் பெரியநாயகி நிற்பாள். இந்தச் சந்நிதிகூட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேணும்.

இந்தப் பெரிய நாயகியை வணங்கிய பின், இந்தக் கோயிலுக்குத் தென்பக்க்ததிலுள்ள நடராஜர் சந்நிதிக்கு வரலாம். அங்கு மேடை மீது செப்புச்சிலை வடிவில் நடராஜரும் சிவகாமியும் நின்று கொண்டிருப்பார்கள். நடராஜர் நேரே நம்மைப் பார்த்து அருள் புரியமாட்டார், அவர் முகத்தைத் திருப்பிக் கடைக் கண்ணால் சிவகாமியையே பார்ப்பார். அவரது அருளை நாம் பெறுவது, அன்னை சிவகாமி மூலம்தானே. இவரையே ஆடவல்லான் என்று அழைத்திருக்கிறான் ராஜராஜன். அளக்கும் கருவிகளுக்கும் ஆடவல்லான் என்ற பெயரைச் சூட்டியதிலிருந்தே அவனுக்கு இந்த ஆடவல்லானிடம் எத்தனை ஈடுபாடு என்று தெரியும்.

இத்தனை பார்த்த பின்னும் அவகாசம் இருந்தால் மேல ராஜவீதி சென்று பங்காரு காமாக்ஷி என்னும் தங்கக் காமாக்ஷியம்னைத் தரிசிக்கலாம். வடக்கு வீதி வழியாய் நகரின் உள்ளே சென்று ராஜகோபால சுவாமியையும் காணலாம். இதற்கெல்லாம் அவகாசம் இல்லாதவர்கள் கூட அரண்மனைக் கட்டிடங்களுக்குச் சென்று அங்கு அந்த ரகுநாத நாயக்கன் கட்டிய சங்கீத மகாலையும், சரபோஜி மன்னன் அமைத்த சரஸ்வதி மகாலையும், சில வருஷங்களுக்கு முன் உருவான கலைக் கூடத்தையும் காணாது திரும்பக் கூடாது. கலைக்கூடத்தில் தமிழ் நாட்டுச் சிற்ப வடிவங்கள் நூற்றுக்கு மேல் பார்க்கலாம். தமிழரது சிற்பச் செல்வம் எப்படிப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.